சகவாசம் – சிறுகதை
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “அழ நாடு” – பிரியா ஜெயகாந்த்
பெண்(பேராண்)மை கவிதை – பிரியா ஜெயகாந்த்
நிஜத்தினில் சாதித்தேன்
நீ என்
கனவினைக் கலைத்ததால் !
கலைகளில் தேர்ந்தேன்
நீ எனைக்
காலடியில் கிடத்தியதால் !
உரிமைக்குரல் எழுப்பினேன்
நீ என்
உணர்வை உதாசீனப் படுத்தியதால் !
நிமிர்ந்து நின்றேன்
நீ எனை
நிலம் பார்க்கச் சொன்னதால் !
பேச்சாளரானேன்
நீ எனை
மௌனிக்கச் செய்ததால் !
உயர்கல்வி பயின்றேன்
நீ எனை
அடுக்களையில் அடைத்ததால் !
மேடை ஏறினேன்
நீ எனைப்
படியேற விடாததால் !
முன்னேற்றம் அடைந்தேன்
நீ எனைப்
பின்னுக்குத் தள்ளியதால் !
தன்னம்பிக்கை கொண்டேன்
நீ எனைத்
தனித்து விட்டதால் !
தைரியம் கொண்டேன்
நீ எனைத்
தாழ்த்த நினைத்ததால் !
பன்முகத்தன்மை கொண்டேன்
நீ என்
முகவரியை மறைத்ததால் !
சிகரம் தொட துணிந்தேன்
நீ என்
சிறகை ஒடித்ததால் !
சரித்திரம் படைத்தேன்
நீ எனைச்
சதி ஏற்ற துணிந்ததால் !
பேராண்மை கொண்டேன்
நீ என்
பெண்மையைப் பழித்ததால் !
நீ எனை
வார்த்தை உளிகளால்
சிதைக்கச் சிதைக்கச்
சிற்பமானேன்.
பிரியா ஜெயகாந்த்,
சென்னை,
மின்னஞ்சல்: [email protected]
தாய்மைக்குள் கவிதை – பிரியா ஜெயகாந்த்
முதல் முறை நீ..
தரித்த தருணம் என் கருவறைக்குள்
சுவாசித்த காற்று என் மூச்சுக்குள்
அழுத அழுகை என் வலிக்குள்
பார்த்த பிம்பம் என் இமைக்குள்
சிரித்த சிரிப்பு என் புன்னகைக்குள்
தீண்டிய ஸ்பரிசம் என் உணர்வுக்குள்
உண்ட உணவு என் சுவைக்குள்
கண்ட கனவு என் உறக்கத்திற்குள்
ஊடுத்திய ஆடை என் அலமாரிக்குள்
படுத்த படுக்கை என் மடிக்குள்
உதிர்த்த வார்த்தை என் மொழிக்குள்
கேட்ட கேள்வி என் சிந்தனைக்குள்
நடந்த நடை என் தடத்துக்குள்
எழுதிய எழுத்து என் வாசிப்புக்குள்
கொண்ட கோபம் என் சினத்திற்குள்
பயந்த நிமிடம் என் அச்சத்திற்குள்
செய்த குறும்பு என் ரசனைக்குள்
விழுந்த காயம் என் ரணத்திற்குள்
கற்ற பாடம் என் அறிவுக்குள்
மகிழ்ந்த பண்டிகை என் கொண்டாட்டத்திற்குள்
வரைந்த ஓவியம் என் பார்வைக்குள்
சேமித்த பணம் என் வரவுக்குள்
வாங்கிய விருது என் வெற்றிக்குள்
கொடுத்த பரிசு என் விருதுக்குள்
ரசித்த இசை என் செவிக்குள்
பாடிய பாடல் என் மெட்டுக்குள்
அணிந்த சலங்கை என் ஓசைக்குள்
ஆடிய நடனம் என் பாவத்திற்குள்
கேட்ட பொருள் என் பரிசுக்குள்
சமைத்த உணவு என் ருசிக்குள்
அளித்த அறிவுரை என் கற்பிதத்திற்குள்
அணைத்த அரவணைப்பு என் தாய்மைக்குள் !!!
’நியதி’ கவிதை – பிரியா ஜெயகாந்த்
நியதி
துயரங்கள் அனைத்தும் காலச் சுவடாய்
விருப்பங்கள் அனைத்தும் கானல் நீராய்
கனவுகள் அனைத்தும் கலைந்திட்ட மேகமாய்
நினைவுகள் அனைத்தும் நெஞ்சினில் பாரமாய்
விடைபெற நினைத்தும் வழித்தடம் இருளாய்
தொடர்ந்திட நினைத்தும் முடிவற்ற தொலைவாய்
மறந்திட நினைத்தும் மாறாத உணர்வாய்
மருத்திட நினைத்தும் மலர்ந்திட்ட உறவாய்
உணர்வுகள் துளிர்த்தும் உருப்பெறா வடிவாய்
உண்மைகள் துளிர்த்தும் உணராத வடுவாய்
வார்த்தைகள் துளிர்த்தும் மௌனத்தின் பதிலாய்
வாய்ப்புகள் துளிர்த்தும் வாய்த்திடா நிலையாய்
புசித்திட பணித்தும் பசியாத வயிறாய்
புரிந்திட பணித்தும் பொருள்படா வரியாய்
துயிலுற பணித்தும் துவளாத விழியாய்
விழித்திட பணித்தும் விடியாத பொழுதாய் !!!!!
பிரியா ஜெயகாந்த்
சென்னை
மின்னஞ்சல்: [email protected]