‘லேட் ஆச்சே ஆபிஸ் போகணுமே…’ என்று அவசர அவசரமாகப் படுக்கையில் இருந்து எழுந்தான் ராம்.
அலாரம் வைத்த கைபேசியைத் தேடினான். படுக்கையில் இல்லை. அதைத் தேடுவதற்கும் அவனுக்கு நேரம் இல்லை. பல் துலக்கிக் கொண்டே பாத்ரூமிற்குள் ஓடினான்.
.” பிரியா…டவல் எடுத்துட்டு வா” என்று குரல் கொடுக்க, “வருகிறேன்…வருகிறேன்” என்று மெதுவாக வந்தாள்.
“லேட்…லேட்….எல்லாம் லேட்…ஏன்டி இப்படி பண்ற, சீக்கிரம் எழுப்பியிருந்தா நான் இப்படி ஓட வேண்டியிருக்குமா?” என்றான்.
“உங்களுக்குத் தான் உங்க கைப்பேசி இருக்கே அப்புறம் என்ன நான் ? அது தான் எப்போதும் உங்களோட பேசிக்கிட்டே இருக்கும்”.
“அதைத் தான்டி காணோம்…ரவிக்கு போன் பண்ணி கார் கொண்டு வரச் சொல்லணும். அப்போ தான் ஆபிஸ்க்கு போக முடியும்…மீட்டிங் வேற கரெக்ட் ஆ ஆரம்பிச்சுருவாங்க” என்றபடி தேடத் துவங்கினான்.
“எங்கு தேடியும் கைப்பேசி காணவில்லை. கார் ஸ்டாண்ட்ல போய் பார்த்துக்கிறேன் கார் இருக்குதானு…ம்ம்..” என்று ஓட ஆரம்பித்தான்.
சுட்டெரிக்கும் வெயிலில் வேகமாக ஓடினான். வியர்வை சட்டையை நனைத்தது. எதையும் பொருட்படுத்தவில்லை. காரில் ஏறி, ‘அம்பத்தூர் செல்ல வேண்டும்’ என்றான்.
டிரைவரும், ‘சரி சார்!’ என்று புறப்பட்டார். கொஞ்ச தூரம் பயணித்ததுமே போக்குவரத்து நெரிசலில் கார் புகுந்தது.
“என்ன சார்… இப்படி நெரிசல்ல போறீங்க. வேற வழி இல்லையா…நான் சீக்கிரமா போகணும்” என்றான்.
“எல்லா பாதையும் இப்படி தான் சார் இருக்கு. இருங்க சார்… சீக்கிரம் போய்டலாம்” என்றார் அவர்.
கோபத்தின் உச்சியில் இருந்தாலும் மனதின் படபடப்பு அடங்கவே இல்லை… ‘போக்குவரத்து நெரிசலும் குறையவில்லை. கையில் போன் இல்லையே… எந்த தகவலும் சொல்லவும் முடியல. என்ன நடக்குனு தெரிஞ்சுக்கவும் முடியல…’ என முணுமுணுத்துக்கொண்டே அமர்ந்திருந்தான்.
ஓரளவு நெரிசல் குறைய…ஆபிஸ் வந்தடைந்தான். காருக்குப் பணம் கொடுத்துவிட்டு வேக வேகமாக ஓடினான். அவன் கதவைத் திறக்கும் நேரம் மீட்டிங் முடிந்திருந்தது.
‘ஐயோ…’ எனத் தலையில் கை வைத்தவனாய் தரையில் அமர்ந்தான்…மிகுந்த கோபத்துடன் அலுவலக உரிமையாளர் “அப்படியே…வீட்டிற்கு போய்விடு.. ஒரு வேலை கொடுத்தா அதைப் பண்ண வழியில்லை” என்று கடிந்து கொண்டார்.
எவ்வளவோ மன்னிப்பு கேட்டும் உரிமையாளர் மனம் கொஞ்சமும் இறங்கவில்லை…மனம் நொந்தவனாய் வெளியில் வருகிறான்.
கைப்பேசி இல்லாமல் எவ்வளவு நஷ்டம் என நினைத்துக்கொண்டே நடக்க ஆரம்பிக்கிறான். கஷ்டம்…அவமானம் மனதிற்குள் இருந்தாலும் தனிமையில் அவனை உணர அவனுக்கே நேரம் கிடைத்தது போல் உணர்கிறான்.
லேசான புன்னகை…அருகேயிருக்கும் டீ கடையில் அமர்ந்து டீ குடிக்கிறான்…அங்குள்ள தொலைக்காட்சியில் கிரிக்கெட் ஒளிபரப்பப்பட்டிருக்கிறது.
தோனியின் இரசிகனாய் சிறுவயதில் பார்ப்பது போல் உணர்வுப் பூர்வமாய் பார்க்கத் துவங்குகிறான்.
கைப்பேசியில் அலுவல் நேரங்களில் மறைத்து மறைத்து ஸ்கோர் மட்டும் தான் பார்த்தோம் நேத்து வரை…இன்னைக்கு இப்படி பார்க்கமுடியுது என்று எண்ணியவாறே புன்னகைத்தான்.
மேட்ச் முழுவதும் பார்த்துவிட்டு சிறுவன் போல துள்ளிக்குதித்து வீட்டிற்கு வந்தான்.
“என்னங்க அதுக்குள்ள ஆபிஸ் முடிஞ்சா…?” என்று மனைவி கேட்க நடந்ததைக் கூறுகிறான்.
நம்மை எதுவும் குற்றம் சொல்வாரோ என்ற எண்ணத்தில் பிரியா அவனைப் பார்க்க… அதைப் புரிந்து கொண்டவனாய்… வா.. நாம சேர்ந்து சமைக்கலாம். காய்கறிலாம் நானே கட் பண்றேன் என்று செய்ய ஆரம்பித்தான்…
ஆச்சர்யமாய்ப் பார்த்த பிரியா, “நீங்களா இது…முகம் கொடுத்து பேசுறதுக்கே நேரம் இல்லைன்னு சொல்வீங்க. இப்ப என்னனா , எனக்கு உதவிலாம் செய்றீங்க!” எனக் கேட்டாள்.
“எல்லாம் அப்படித்தான்” என்றான்.
இருவரும் புன்னகையும், உரையாடலுமாய் சமைத்துக் கொண்டிருக்கும் போது கைப்பேசியின் சிணுங்கல் எங்கிருந்தோ கேட்க வேகமாய்த் தேடி ஓடினான்.
உரிமையாளரின் அழைப்பு, மீண்டும் உடனே அலுவலகம் வா என்றழைக்க, “கிடைத்து விட்டது கைபேசி. என் புன்னகை தொலைந்து விட்டது” என புறப்பட்டான்.
– சக்தி ராணி