ஆட்டிசம்: சில புரிதல்கள்- நூல் அறிமுகம் : முனைவர் சு.பலராமன்
யெஸ்.பாலபாரதி எழுதிய ஆட்டிசம் : சில புரிதல்கள் என்னும் அபுனைவு பிரதி தொன்னூற்று ஐந்து பக்கங்களுடன் 2013ஆம் ஆண்டு கனி புக்ஸ் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து வெளியிட்டுள்ளது.
யெஸ்.பாலபாரதி இதயத்தில் இன்னும் (கவிதை), அவன் – அது அவள் (நாவல்), துலக்கம், சந்துருவுக்கு என்ன ஆச்சு? (குறுநாவல்), சாமியாட்டம் (சிறுகதை), ஆட்டிசம் சில புரிதல்கள், அன்பான பெற்றோரே!, பிள்ளைத்தமிழ் (கட்டுரை) ஆமை காட்டிய அற்புத உலகம், சுண்டைக்காய் இளவரன், புதையல் டைரி, மரப்பாச்சி சொன்ன ரகசியம், சிங்கம் பல்தேய்க்குமா?, சேர்ந்து விளையாடலாம்!, யானை ஏன் முட்டை இடுவதில்லை?, உட்கார்ந்தே ஊர் சுற்ற…, தலைகீழ் புஸ்வாணம், பூமிக்கு அடியில் ஒரு மர்மம், மந்திரச் சந்திப்பு (சிறார் நூல்கள்), நான்காவது நண்பன், என்னதான் நடந்தது, எல்லைகள், ஆறு (மொழிபெயர்ப்பு) போன்ற பல படைப்புகளைப் படைத்துள்ளார்.
நாளிதழ், சிற்றிதழ், சிறுபத்திரிக்கைகளிலும் தனது பங்களிப்பையும் தொடர்ந்து அளித்து வருகிறார். சிறார்களுக்கான படைப்புகளை வழங்குவதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை எதிர்கொள்வது குறித்து குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருண்மையில் இவர் எழுதிய ’மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்னும் சிறார் நூலுக்கு 2020ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமியின் ‘பால சாகித்ய புரஸ்கார் விருது’ பெற்றுள்ளார்.
எழுத்தாளர் யெஸ்.பாலபாரதியின் குழந்தைக்கு பி.டி.டி வகைப்பட்ட ஆட்டிசக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன் பின்பு அவரது தேடலில் விளைந்ததுதான் ஆட்டிசம் சில புரிதல்கள் என்னும் பிரதி. ஆட்டிசக் குழந்தைகளைப் பெற்றெடுத்து வளர்த்துவரும் அத்துணை பெற்றோர்களுக்கு இப்பிரதியைச் சமர்ப்பித்துள்ளார். ஆட்டிசம் : சில புரிதல்கள் பிரதியின் பொருளடக்கத்தில் ஆட்டிசம் எளிமையாக உணர வழிகள், ஆட்டிசம் வரலாறு, ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர் (Autism Spectrum Disorder), சரியும் தவறும், சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems), சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) II, சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) III, சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) IV, சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) V, சிகிச்சை முறைகள், சிகிச்சை முறைகளில் பெற்றோர் / கவனிப்பாளரின் பங்கு, பத்தியமும் ஒவ்வாமையும், பத்துக் கட்டளைகள், நம்பிக்கை தரும் மனிதர்கள், பெற்றோர்களுக்கான 10 யோசனைகள், நிப்மெட் என்னும் தோழன், ஆட்டிசம் என்னும் பளிங்கு அறை, வீட்டில் செய்ய சில பயிற்சிகள் என்னும் பதினெட்டு உட்தலைப்புகளில் பேசுகிறது.
ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர் (Autism Spectrum Disorder), என்னும் ஆங்கிலப் பதத்திற்கு மனயிறுக்கம், மதியிறுக்கம், தன்முனைப்புக் குறைபாடு என்பதான சொல்லாடலைக் குறிப்பிடுகின்றனர். இதில் தன்முனைப்புக் குறைபாடு சரியான சொல்லென்று தோன்றுகிறது என்று பதிவு செய்கிறார் பாலபாரதி. இச்சொல்லாடலையே தேவைப்படும் இடங்களில் இப்பிரதியில் பயன்படுத்தியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. ஆட்டிசக் குழந்தைகளை வளர்த்து வரும் பெற்றோர்களுக்குப் புரிதல், ஆலோசனை, வழிகாட்டி, நெறிமுறை, விழிப்புணர்வு போன்றவற்றை அளிக்கக்கூடியதாக விளங்குகிறது இப்பிரதி. குறிப்பாகப் பெற்றோர்களுக்குத் தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது. தங்களது குழந்தைக்கு ஆட்டிசக் குறைப்பாடு உள்ளதை ஏற்க மறுக்கும் பெற்றோர்களுக்கும் சேர்த்தே பேசியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டிசக் குறைபாடு உள்ளவர்களுக்குக் கேட்டல், பார்த்தல், சுவைத்தல், தொடுதல், நுகர்தல், சமநிலை, உடலை உணரும் திறன் (கண், காது, மூக்கு, வாய், சருமம்) ஆகிய ஏழு புலனுணர்ச்சிகளும் தேவைக்கு அதிகமாகவோ அல்லது தேவைக்குக் குறைவாகவோ எதிர்வினையாற்றுபவராக இருப்பார்கள். ஆட்டிசம் பாதிப்பாளர்களின் பொதுப்பிரச்சினை கேட்டல்திறன் என்பது இவர்களிடம் உள்ள ஒத்த தன்மையுள்ள பிரச்சினையாகக் கண்டறியபட்டுள்ளது. அதேசமயத்தில் பெரும்பாலும் ஆட்டிசப் பாதிப்பாளர்களுக்குப் பாதிப்பு, சிகிச்சை, பயிற்சி, உணவு போன்றவை வெவ்வேறாக உள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார் பாலபாரதி.
ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர் (Autism Spectrum Disorder) என்பது குழந்தையின் மூளை வளர்ச்சியில் ஏற்படும் பல்வேறு சிக்கல் தொடர்பான குறைபாடுகளை வகைப்படுத்தப்படும் அல்லது உள்ளடக்கும் ஒரு குடைப்பெயர். ஆட்டிசம் என்பது இந்தக் குடைக் குறைபாட்டின் ஓர் உட்பிரிவாகும். இதன் கீழ்வரும் குறைபாடுகள் ஆட்டிசம், அஸ்பெர்ஜர் ஸிண்ட்ரோம், பரவலான வளர்ச்சிக் குறைபாடுகள், பரவலான வளர்ச்சிக் குறைபாடுகள் என்று வரையறுக்க முடியாதவை, ரெட் ஸிண்ட்ரோம், குழந்தைப் பருவ ஒத்திசைவின்மைக் குறைபாடு.
ஆட்டிசம் எளிமையாக உணர்வதற்கு இருபது வழிகளை வரைபடங்களுடன் அளிக்கப்பட்டுள்ளது. மூன்று முதல் ஐந்து வயதிற்குள்ளேயே ஆட்டிசம் குணாதிசயம் உச்ச நிலையை அடையும். இதில், அஸ்பெர்ஜர் ஸிண்ட்ரோம் ஆட்டிசக் குறைபாடு மட்டும் பதின்ம வயதில் கண்டறியப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது. ஆட்டிசப் பாதிப்பாளர்களுக்கு முறையான பயிற்சிகள் மற்றும் உணவுக் கட்டுப்பாடுகள் சிகிச்சை முறைகளாக உள்ளன. சிகிச்சை முறையில் நடத்தை, கல்வி, பேச்சு, வளர்ச்சி ஆகிய நான்கு வகைப் பயிற்சிகள் அவசியமாகும். கோதுமை, பார்லி, பால் போன்றவை தவிர்க்க வேண்டிய உணவு முறையாகும். சினெஸ்தீசியா என்பது ஆட்டிசம் பாதிப்புக்குள்ளானவர்களில் வெகுசிலருக்கே வரக்கூடிய சிக்கலான ஒன்று என்ற பதிவும் உள்ளது. இவ்விடத்தில் சினெஸ்தீசியா பற்றி விரிவான விளக்கத்தை வாசகர்கள் கோர வாய்ப்புண்டு.
ஆட்டிசக் குழந்தைகளுக்கு வழக்கமான பள்ளியில் மாணவர்களுடன் பயில்வதை வலியுறுத்துகிறார் பாலபாரதி. தமிழ்நாட்டில் இதுபோன்ற ஆரோக்கியமான சூழல் இல்லை என்பதை வருத்ததோடு பதிவு செய்கிறார். ஆட்டிசம் குறித்து அமெரிக்கா போன்ற மேலை நாட்டில் ஏற்பட்டுள்ள புரிதல் (குறிப்பாகப் பள்ளிச் சிறுமி), தமிழ்ச்சூழலில் இல்லை என்பதை வருந்துவதற்குரிய பதிவாகவே முன்வைக்கிறார். மேலும், ஆட்டிசக் குறைபாடு கொண்ட குழந்தைகளைப் பற்றி ஆசிரியர்களுக்கான புரிதல் மற்றும் பங்களிப்பு போன்ற உரையாடலை வாசகர்கள் எதிர்பார்க்கக்கூடும். ஆட்டிசக் குறைபாடு கொண்டவர்கள் சாதனையாளர்களாக உள்ளதைப் பற்றியும் அவர்களது செயல்பாடுகள் பற்றியும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சார்லஸ் டார்வின், நியூட்டன், ஆல்பிரட் ஐன்ஸ்டீன், மைக்கேல், ஃபிட்ஸ்ஜெரால்ட் போன்ற உலகப்பெரும் ஆளுமைகளுக்கு ஆட்டிசக் குறைபாடு இருந்திருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது என்னும் வியப்புக்குரிய பதிவும் இடம்பெற்றுள்ளது.
குழந்தையின் வளர்ச்சியில் ஏதேனும் குறையிருப்பதாக நினைக்கும் பெற்றோர்களுக்குச் சென்னையில் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள ’நிப்மெட்’ செயல்படும் விதத்தைப் பற்றிப் பிரதியில் பேசப்பட்டுள்ளது. ஆட்டிசம் குறைபாடுகளோடு குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?, எந்தப் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்டிசத்தால் அதிகம் பாதிக்கின்றனர்?, ஆட்டிசம் குறித்து தமிழ்நாட்டில் எப்போது பேசப்பட்டது?, ஆட்டிசக் குறைபாடு – மூளை வளர்ச்சிக் குறைபாடு இரண்டையும் எப்படிப் பகுத்தறிவது, ஆட்டிசம் பாதிப்பு பெருகி வருவதற்கான அறிவியல் காரணம் என்ன? என்பதான வினாக்கள் ஆட்டிசம் பிரதியின் வாசிப்பில் வாசகர்களுக்கு எழ வாய்ப்புண்டு. ஆட்டிசம் : சில புரிதல்கள் பிரதி வெளியாகி 10 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் ஆட்டிசம் குறித்த உரையாடலுக்குத் தொடக்கப் புள்ளியாக இப்பிரதி உள்ளது என்பதே நிதர்சனம்.