நூல் அறிமுகம்: விஜிலா தேரிராஜனின் ’இறுதிச் சொட்டு ’ – ஜனநேசன்
நூல் : இறுதிச் சொட்டு
ஆசிரியர் : விஜிலா தேரிராஜன்
விலை : ரூ.₹150/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
எனது சிறுவயதில் கடுங்காய்ச்சல் உற்ற பொழுதில் அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு , நோய்மையை மறக்க அம்மாவிடம் கதை கேட்டு நச்சரிப்பேன். அம்மா தனக்குத் தெரிந்த கதைகளை, பார்த்த சினிமாக்களை சொல்லுவாள். நலம் எய்தும்வரை ஒவ்வொரு நாளும் தொடரும் இந்த உறவாடலில் தன்னிடமுள்ள கதைகள் தீர்ந்ததும் மறுபடியும் சொன்னதைச் சொல்லுவாள். இதைத்தான் முந்தியே சொல்லிட்டல வேற சொல்லும்மா என்று அடம்பிடிப்பேன்.
அம்மா, “வேறெந்த கதையச் சொல்ல? பிறந்த கதையையா, வளர்ந்த கதையையா, வாக்கப்பட்ட கதையையா “ என்று கேட்கும்; அறியா பருவமது, “எதாவது சொல்லுமா “ என்பேன். அம்மா தன் கதையை உருக்கமாக மெல்லிய குரலில் சொல்லிக்கிட்டே நெஞ்சில் தட்ட உறங்கிப்போவேன். இப்படி அம்மாவிடமும், பாட்டி, தாத்தாவிடமும் கேட்ட கதைகள் சொல்லும் முறையே என்னை படைப்பாளியாக்கியது. பெண்களின் சிரமங்களை, மாண்புகளை எழுதவைத்தது. இவ்வாறே தனது சித்திமார்களிடம் கதைகள் கேட்டதும், வாசித்ததும் கொண்டு எழுத்தாளராகப் பரிணமித்திருக்கிறார் விஜிலா தேரிராஜன்.
அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி தற்போது அருப்புக்கோட்டையில் குடும்பத்தினரோடு வசிக்கும் விஜிலா எழுதிய முதல் கதைத்தொகுப்பு “இறுதிச்சொட்டு “ . இத்தொகுப்பில் 21 கதைகளில் ஆறு கதைகளில் பள்ளிக்கூடங்களில் நிலவும் சூழல்களைக் கதைகளாக்கியுள்ளார். பள்ளிகளின் நிர்வாகச்சூழல்கள், பெண் ஆசிரியர்களின் சிரமப்பாடுகள், ஆண் ஆசிரியர்களின் அகம்பாவப் போக்குகள், பலம், பலவீனனங்கள்; பள்ளி மாணவ,மாணவிகளின் இயல்புகள், அவர்களின் வயசுக்கேற்ற உளவியல் பாங்குகள், பெற்றோரின் நிலைப்பாடுகள் இவை அனைத்தையும் எதார்த்தம் பிறழாமல் உணர்வோட்டத்தோடு விஜிலா கதைகளாக்கியுள்ளார். இக்கதைகளில் “மண்குதிரை”,
“அமுதா ஒரு…” ”தீதும் நன்றும் “ “வண்ணக்கனவு ” போன்றவை குறிப்பிடத்தக்கவை.”ஏலம்” கதை அரசு உதவிபெறும் தனியார்ப்பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர் பணியிடத்தை ஏலம் விட்டு சம்பாதிப்பதைச் சொல்கிறது.
இன்னும் சிலகதைகள் குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகள் பற்றி சொல்பவை. இவற்றில் தாய்மையின் மாண்பைப் பற்றி சொல்லும் “பட்டுமனம்” அருமையானது. மனதை நெகிழ்விப்பது. இதேபோல் “மாதவம் “ பெண்களுக்கு வரும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வைக் கச்சிதமாக உணர்த்துவது. ஆண் மைய்ய சமூகத்தில் குடிகார கணவன்களிடம் சிக்கி உழலும் பெண்கள் படும் பாடுகளை “சவால்” “ரத்தத்தின் ரத்தம் “ போன்ற கதைகளில் மனதில் தைக்கும் வகையில் பகிர்கிறார் ஆசிரியர். பணியிடத்தில் அத்துமீறும் ஆண்களை நேருக்கு நேராக எதிர்கொள்ளும் “ரௌத்திரம் பழகு “கதை குறிப்பிடத்தக்கது. சிறுநீர் கழிக்கக் கூட பெண் படும் அல்லல்களை உணர்த்தும் “இறுதிச்சொட்டு “ கதை மனதை உறுத்துவது. “இலவச மின்சாரம் விவசாயத்துக்குக் கிடைக்கும் என்று கைவசமுள்ள பொருளை இழக்கும் சிறுவிவசாயியின் அவலம் .! இப்படி இன்றைய வாழ்வியல் சூழலில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எதார்த்தம் பிறழாமல், பனையும், பதனியும், தேரிமண்ணும் மணக்க, வாசிக்க ஏதுவான சரளமான நடையில் தூத்துக்குடி மாவட்ட புழங்கு மொழியில் விஜிலா எழுதியுள்ளார். இக்கதைகளை வாசிப்பவர் எவரும் , விஜிலாவின் முதல் தொகுப்புக்கான கதையா என்று வியக்கும் வண்ணம் சிறப்பாக அமைந்துள்ளன. இவை தமிழ்ச்சிறுகதை உலகிற்கு நல்லதோர் வரவாக வரவேற்று வாசிக்கவும் தூண்டுகிறது. இத்தொகுப்பிற்குத் தோழர் தமிழ்ச்செல்வன் வழங்கிய அணிந்துரையும்,, தோழர் உதயசங்கரின் பின்னுரையும் மேற்கூறியவற்றை உறுதிப்படுத்துகின்றன. இத்தொகுப்பை பாரதி புத்தகாலயம் சிறப்பாக வடிவமைத்து நமக்கு விருந்தாக்கியுள்ளது.
– ஜனநேசன்