பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்ற புரட்சிகரச் சிந்தனையாளர்கள் பல்வேறு வடிவங்களில் பிற்போக்கு சக்திகளின் தாக்குதல்களுக்கு ஆட்பட்டவர்களாகவே இருக்க நேர்வது தவிர்க்க இயலாத ஒன்று. எனினும் காலம் அவர்களைச் சரியாகவே மதிப்பிடுகிறது. மார்க்சியம் தோற்றுவிட்டது எனச் சொன்னவர்கள் எல்லாம் தலைகுனியும் அளவிற்கு இன்று அவரது 200ம் பிறந்தநாள் உலக அளவில் கொண்டாடப்படுவது ஒரு சான்று. பெரியாரும் அதே போல அவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமின்றி இன்றும் தாக்குதலுக்கு உள்ளாகிறார். பார்ப்பனர்களும் வருணாசிரம சக்திகளும் பெரியாரைத் தாக்குவதைப் புரிந்து கொள்ள முடியும். சாதிப் படிநிலையில் எந்த அடுக்கில் இருந்தாலும் தமக்குக் கீழாக ஒரு பிரிவு இருக்க வேண்டும் என எண்ணுபவர்கள் அவர்கள். ஆனால் தமிழ்த் தேசியம் பேசுபவர்களும், தலித் அறிவுஜீவிகளில் ஒரு சாரரும் பெரியாரை எதிர்க்க நேர்ந்ததுதான் கொடுமை. அப்படியான ஒரு எதிர்ப்பு 1990 களில் மேலெழுந்த போது உடனுக்குடன் அவர்களுக்குப் பேராசிரியர் அ. மார்க்ஸ் பதில் அளித்து எழுதிய ஆழமான ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இது. இவை எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை பெரியார் எதிர்ப்பாளர்களால் பதிலளிக்க இயலவில்லை என்பதை இந்நூலை வாசிக்கும்போது நீங்கள் உணரலாம். இந்த நூலின் இரண்டாம் பகுதியாக அமைந்துள்ள பெரியாருக்கும் முஸ்லிம்களுக்குமான உறவு குறித்த கட்டுரைகள் இதுகாறும் தமிழில் வெளிவராத பல புதிய செய்திகளை உள்ளடக்கியுள்ளன. மூன்றாம் பகுதியாக அமைந்துள்ள கட்டுரைகள் பெரியார் ஒரு வறட்டுச் சித்தாந்தி அல்ல, அவர் ஒரு மாபெரும் மனிதநேயர் என்பதைப் பறைசாற்றுகின்றன. பெரியாரை முற்றிலும் புதியதொரு கோணத்தில் இருந்து எழுதிவரும் அ. மார்க்ஸ் பெரியாரியலுக்கு அளித்துள்ள இன்னொரு முக்கிய பங்களிப்பு இந்த நூல்.
சுதந்திரத்துக்கு பிந்தைய இந்தியாவில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பது அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியானதாக இல்லை. சில மாநிலங்களின் வளர்ச்சி மேலை நாடுகளோடு ஒப்பிடும் அளவிற்கும் சில மாநிலங்களின் வளர்ச்சி மிகவும் பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்பிடும் அளவிற்கும் இருந்துள்ளன. 90 களில் நடைமுறைப் படுத்தப்பட்ட தாராளமயம், தனியார் மயம், உலகமயம் கொள்கைகள் மாநிலங்களுக்கு இடையிலான இந்த வேறுபாட்டை மேலும் கூர்மைபடுத்தியுள்ளது. புதிய பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைக்கு வந்ததற்குப் பிந்தைய சூழலில் மாநிலங்கள் / பிராந்தியங்களின் வளர்ச்சி உலகின் வளர்ச்சிப் போக்கால் பெரிதும் தாக்கம் பெறுகிறது. ஆகையால் மாநிலங்கள் / பிராந்தியங்களின் வளர்ச்சிபற்றி ஆய்வுகள் சமீபகாலங்களில் அதிகரித்துள்ளன. இந்த பின்னணியில் பகவதி மற்றும் சென் இடையிலான இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் வேறுபாடுகள் குறித்த விவாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மேலும் 2014ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது இங்கு குஜராத்தின் வளர்ச்சி பற்றி ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டன. அதே போன்று ‘கேரள மாதிரி’ யின் வளர்ச்சி குறித்தும் இங்கு பல்வேறு உரையாடல்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. இதில் குஜராத் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி அடைந்திருந்தாலும் சமூக வளர்ச்சியிலும் மானுட மேம்பாட்டுப் புள்ளிகளிலும் போதுமான வளர்ச்சி பெறவில்லை. அதே போல் கேரளா சமூக வளர்ச்சியிலும் மானுட மேம்பாட்டுப் புள்ளிகளிலும் பெரும் முன்னேற்றங்களை அடைந்து இருந்தாலும் பொருளாதார வளர்ச்சியில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை என்பதை பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் உள்ள முன்னணி மாநிங்களில் ஒன்றாக திகழ்கின்றது. அதேவேளையில் சமூக வளர்ச்சியில், மானுட மேம்பாட்டுப் புள்ளிகளிலும் பெரும் முன்னேற்றங்களை அடைந்த முன்னணி மாநிலமாக உள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சியின் காரணங்களை ஆராய்ந்து புள்ளி விவரங்களுடன் இந்திய அளவிலும் மேலும் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டும் எப்படி தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்துவம் வாய்ந்தது என்பதை விளக்குகிறது. பேராசிரியர் கலையரசன் மற்றும் பேராசிரியர் விஜயபாஸ்கர் இணைந்து எழுதிய “தி திராவிடியன் மாடல்” (The Dravidian Model) என்கிற ஆங்கில புத்தகம்.
இந்தப் புத்தகம் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், கிராம மற்றும் நகர்ப்புறங்களில் ஏற்பட்ட மாற்றங்களை எடுத்துக்காட்டுகிறது. பாரதிய ஜனதா மற்றும் அதன் துணை அமைப்புகளுடன் செயல்படுகின்ற பல வலது சாரிகளும் ஏதோ தமிழகம் இந்தியாவில் பின்தங்கிய மாநிலம் போன்றும் 50 ஆண்டுகால திராவிட இயக்கக் கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் பெரிதும் பின்னடைவை சந்தித்திருக்கிறது போன்றதுமான ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். இத்தகைய சூழலில் இந்த புத்தகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படவேண்டும். அதேபோல் அவர்கள் பெரிதும் கொண்டாடுகின்ற குஜராத்தைவிட கல்வி சுகாதரம் போன்ற காரணிகளில் தமிழகம் முன்னேறி உள்ளதை புள்ளிவிவரங்களுடன் விவரித்துள்ளது, மேலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
பார்ப்பன எதிர்ப்பும் சனாதன இந்து மதத்திற்கு எதிரான செயல்பாடுகளும் தமிழக வரலாற்றில் தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளன. கிறித்துவ மிஷினரிகளின் பங்களிப்பின் காரணமாக கல்வி பெற்ற பார்ப்பனர் அல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பார்ப்பன ஆதிக்கத்திற்கெதிரான செயல்பாடுகள் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இருந்ததை பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். அதன் நீட்சியாக உருவான நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் போன்ற அமைப்புகள் தமிழகத்தில் பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு கருத்தாக்கத்தை உருவாக்கியதில் முக்கியமான பங்கு வகித்துள்ளன. இடதுசாரிகள் நில சீர்திருத்தத்தை மறுபங்கீட்டிற்கும் சமத்துவத்திற்கும் முக்கியமாக கருதிய பொழுது திராவிட இயக்கங்கள் அதில் இருந்து சற்று வேறுபட்டு நவீன கல்வியை விரிவாக்கி அதில் பார்ப்பனரல்லாத மற்ற சமூகத்தினர் அதிகம் பயன் பெற வேண்டும் என்றும் மேலும் நவீன தொழில் துறைகளை வளர்த்து அதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி அதில் பார்ப்பனரல்லாத மற்ற சமுகத்தினர் அதிகம் பயன் அடைய வேண்டும் என்பதை பிரதான கொள்கையாகக் கொண்டு செயல்பட்டனர். இங்கு நிலவிய பார்ப்பனிய ஆதிக்கத்தையும் சாதிய வேறுபாடுகளை களைவதற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பார்ப்பனர்கள் அல்லாத மற்ற சமூகத்தினர் பங்கு பெறுவதே சமூக மாற்றத்திற்கான ஒரு முக்கியமான ஆயுதமாக திராவிட இயக்கம் கருதியது. இதுவே சாதியைக் கடந்து தமிழ் தேசியம் என்கிற ஒரு குடையின்கீழ் பரந்துபட்ட மக்கள் திரளை திராவிட இயக்கங்கள் திரட்டும் வாய்ப்பை வழங்கியது. இந்த அணிதிரட்டலை தமிழகத்தில் ஏற்பட்ட ஒரு தனித்துவமான வளர்ச்சி போக்கிற்கு முக்கியமான காரணியாக பார்க்கின்றனர் புத்தகத்தின் ஆசிரியர்கள்.
இந்த மாற்றத்திற்கான ஆரம்ப விதைகள் 1920களில் நீதிக் கட்சியின் ஆட்சியில் தூவப்பட்டன. 1922ஆம் ஆண்டு பனகல் ராஜா அவர்களின் தலைமையில் இருந்த அரசு முதல் முதலில் சென்னையில் உள்ள சில பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தது. நீதிக்கட்சிக்குப் பிறகு 1937இல் ஆட்சிக்கு வந்த ராஜகோபாலாச்சாரி அவர்களின் தலைமையில் ஆன காங்கிரஸ் அரசு இந்த முயற்சிகளை கைவிட்டது. அதுபோல இவருடைய ஆட்சி காலத்தில் 600 பள்ளிகள் நிதியைக் காரணம் காட்டி இழுத்து மூடப்பட்டன. அவருக்குப் பிறகு 1954இல் ஆட்சிக்கு வந்த காமராஜரின் தலைமையிலான அரசு இந்த பள்ளிகளை மீண்டும் திறந்ததோடல்லாமல் மேலும் சில பள்ளிக்கூடங்களையும் திறந்து வைத்தது. அத்துடன் 1956ஆம் ஆண்டு மீண்டும் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தையும் அமல்படுத்தியது. 1967இல் ஆட்சிக்கு வந்த திமுக அரசாங்கம் மையப்படுத்தப்பட்ட உணவுக்கூடங்களை உருவாக்கி சமைப்பதற்கென்று தனி பணியாளர்களை நியமித்து இத்திட்டத்தை மேலும் செழுமைப்படுத்தியது. இதை 1982 ஆம் ஆண்டு எம்.ஜி.யாரின் தலைமையில் இருந்த அதிமுக அரசு மேலும் இத்திட்டத்தை விரிவு படுத்தி மேல் வகுப்பு மாணவர்கள் மற்றும் நகர்ப்புற மாணவர்களும் பயன் பெறச் செய்தது. இந்த மதிய உணவுத் திட்டம் ஏழை எளிய மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கும் தொடர்ந்து படிப்பதற்கும் பெரும் உந்து சக்தியாக இருந்ததை எடுத்துக் காட்டுகிறது இந்தப் புத்தகம்.
நீதிக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான நடேச முதலியார் அவர்கள் சென்னையில் பார்ப்பனர்கள் அல்லாத மாணவர்கள் தங்கி படிப்பதற்கு திராவிடியன் ஹோம் என்ற பெயரில் விடுதி ஒன்றை நடத்தி வந்தார். இது போன்ற நீதிக் கட்சியின் ஆட்சி காலத்தில் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் படிப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1967 இல் ஆட்சிக்கு வந்த திமுக அரசாங்கம் ஏழை எளிய மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ரத்து செய்ததுடன் மேலும் தலித்துகள் மற்றும் பின் தங்கிய சாதியைச் சார்ந்த மாணவர்களுக்கு தங்கும் விடுதிகளை திறந்து வைத்தது. இதோடு மட்டுமல்லாமல் நீதிக் கட்சி காலம் தொடங்கி பின்னால் ஆட்சிக்கு வந்த இரண்டு திராவிட கட்சிகளும் மாணவர்களுக்கு நிதி உதவி, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கியது.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினி வழங்குவது போன்ற பல்வேறு புதுமையான திட்டங்களின் மூலம் தமிழ்நாட்டில் கல்வி பயின்ற மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தின. பொதுவாக அகில இந்திய அளவில் சுதந்திரத்திற்குப் பிறகான காலங்களில் அரசு கல்விக்கு ஒதுக்கிய நிதியில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பெறும் வண்ணம் பள்ளிக்கல்விக்கு பயன்பட்டதை விட மேல் தட்டு வர்க்கம் பயன் படும் வண்ணம் உயர்கல்விக்கு மடை மாற்றப்பட்டதாக மைரோன் வெய்னர் போன்ற ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இதில் இருந்து வேறுபட்டு தமிழ்நாடு தொடர்ச்சியாக பள்ளிக்கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வந்துள்ளதை இந்தப் புத்தகம் எடுத்துக்காட்டுகிறது. இதுவே 2017-18 ஆம் ஆண்டின் நிலவரப்படி கல்விகற்றோர் எண்ணிக்கையில் தமிழ்நாடு இந்தியாவில் நான்காம் இடத்தில் உள்ளதற்குக் காரணம் ஆகும் என்பதையும் நூல் கூறுகின்றது.
அதே போல் உயர்கல்விக்கும் உரிய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது தமிழ்நாடு. 1954ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 54 கல்லூரிகளும் 2 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தன. உயர்கல்வித்துறை அபார வளர்ச்சி அடைந்து 2020 யின் நிலவரப்படி தமிழ்நாட்டில் 2608 கல்லூரிகளும் 59 பல்கலைக்கழகங்களும் உள்ளன. 1967க்கும் 1977க்கும் இடையில் தி.மு.க.வின் ஆட்சி காலத்தில் வருடத்திற்கு சராசரியாக 9 கல்லூரிகள் தொடங்கப்பட்டு அதற்கு முன்னர் 105 ஆக இருந்த கல்லூரிகளின் எண்ணிக்கை 194 ஆக இரட்டிப்பு அடைந்தன. அதற்கு பிறகும் தொடர்ச்சியாக கல்லுரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. 1980 களுக்கு பிறகு தொழில் நுட்ப கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தன.
1922ஆம் ஆண்டு நீதிக் கட்சியின் ஆட்சியில் கொண்டு வந்த அரசு பணிகளில் பார்ப்பனர் அல்லாத மற்ற சாதியைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவம் உயர்கல்வியில் மற்ற சாதியைச் சேர்ந்தவர்களின் பங்கேற்பை ஊக்குவித்ததில் முக்கியமான தொடக்கமாகும். அதனைத் தொடர்ந்து பெரியாரின் தலைமையில் திராவிட இயக்கமும் அண்ணா தலைமையிலான தி.மு.க.வும் தொடர்ச்சியாக நடத்திய போராட்டங்களின் காரணமாக1952 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவில் முதல் அரசியலமைப்புச் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு தமிழ்நாட்டில் கல்வியில் இடைநிலை சாதிகளுக்கு 25% மற்றும் தலித்துகளுக்கு 15% இடஒதுக்கீடும் அறிமுகப் படுத்தப்பட்டன. இந்த சட்ட திருத்தமே மற்ற மாநிலங்களிலும் சாதிரீதியான இடஒதுக்கீட்டை வழங்குவதற்கான முன்மாதிரியாக இருந்ததாக எடுத்துக்காட்டுகின்றனர் ஆசிரியர்கள். அதோடு இந்த இடஒதுக்கீடு இடைநிலை சாதிகளை சேர்ந்தவர்களும் தலித்துகளும் உயர்கல்வியில் பங்கேற்பதை அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
மேலும் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது போன்ற ஆக்கபூர்வமான தலையீட்டின் காரணமாகவே 2017-18யின் கணக்கீட்டின்படி தமிழ்நாட்டில்18-23 வயதுக்கு உட்பட்டவர்களில் 50% பேர் உயர்கல்வி பயிலுகின்றனர். இது கேரளா போன்று கல்வியில் பெரும் முன்னேற்றங்களை அடைந்த மாநிலங்களை விட அதிகமாகும். தமிழ்நாட்டின் கல்வி ஜனநாயகப் படுத்தப்பட்டு அனைத்து சாதியினரும் கல்வியில் பங்கேற்கும் வண்ணம் சுதந்திரத்திற்கு பின்னான மாற்றங்களை சுட்டிக்காட்டுகின்ற அதேவேளையில் 1980களுக்குப் பிறகு தமிழகத்தில் பெரிதும் கல்வி குறிப்பாக உயர்கல்வி தனியார் மயமாக்கப்பட்டதன் விளைவாக அதிக எண்ணிக்கையிலானவர்கள் கல்விபெற நேர்ந்திருந்தாலும் கல்வியின் தரம் போன்று பல்வேறு நெருக்கடிகள் உருவாகி உள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது இந்த நூல். கல்விக் கட்டணம் வரையறை இட ஒதுக்கீடு போன்ற சில தலையீடுகளை தனியார் கல்வி நிறுவனங்களில் திராவிட இயக்க அரசுகளால் செய்ய முடிந்தாலும் கூட அதைத்தாண்டி கல்வி தளத்தில் ஏற்பட்டுள்ள வேறு பல நெருக்கடிகளை சரிசெய்யப்படாமல் இருப்பதையும் கவனப்படுத்துகிறது இந்த நூல்.
நீதிக்கட்சி ஆட்சியின் காலத்தில் பார்ப்பனர் அல்லாத மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அதிக எண்ணிக்கையில் மருத்துவ படிப்புகளை படிப்பதற்கான வாய்ப்பை நீதிக்கட்சி உருவாக்கிக் கொடுத்தது. மருத்துவக் கல்வியில் 1950ஆம் ஆண்டுகளுக்கு பிறகு நடைமுறைப்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டின் காரணமாக பார்ப்பனர் அல்லாத சாதியைச் சேர்ந்தவர்களும் கிராமப்புற மாணவர்களும் மருத்துவத்துறையில் பெரிதும் பங்கு பெறுவதற்கான வாய்ப்பை தொடர்ச்சியாக திராவிட இயக்கங்கள் உருவாக்கிக் கொடுத்தன. இதன் மூலம் உருவான பெருவாரியான மருத்துவர்களையும் மருத்துவப் பணியாளர்களையும் தக்க வைத்துக் கொள்வதற்கு பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளையும் இந்த அரசுகள் தொடர்ந்து மேற்கொள்கின்றன. பொதுவாக மருத்துவத்திற்கான அரசின் நிதி ஒதுக்கீடு மற்ற மாநிலங்களைவிட பெரிதும் வேறுபடாவிட்டாலும் கூட தமிழகம் மருத்துவத் துறையில் மிகச் சிறந்த மாநிலமாக விளங்குவதில் பல காரணிகள் உள்ளன. அதில் மருத்துவப்படிப்பில் இடஒதுக்கீடும் முக்கிய பங்காற்றுகிறது.
குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைத்து ஐக்கிய நாடுகள் சபை (united Nations) நிர்ணையித்த மிலினியும் வளர்ச்சிக்கான இலக்கை (Milenium Development Goals) அடைந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது. அதேபோல் நீட் போன்ற தேர்வுகளுக்கு தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பின் நியாத்தையும் அது எப்படி நம்முடைய மருத்துவத்துறையில் பெற்ற முன்னேற்றங்களுக்கு தடையாக இருக்கப்போகிறது என்பதையும் எடுத்து கூறுகிறது இந்நூல். மகப்பேறு காலத்தில் 99% தலித் பெண்கள் மருத்துவமனைகளை தமிழ்நாட்டில் அணுகுகின்றார்கள். இது உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உயர் சாதியைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையை விட மிக அதிகம். பல மருத்துவ குறியீட்டில் தமிழ்நாடு எந்தளவிற்கு முன்னேறியுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிற அதேநேரம் கல்வியை போலவே மருத்துவமும் பெரிதும் 90 களுக்குப் பிறகு தனியார் மயமாகியுள்ளதுடன் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இதில் ஆதிக்கம் செலுத்துவதையும் சுட்டிக்காட்டுகின்றது இந்நூல்.
நீதிக்கட்சி ஆட்சியின் காலத்தில் பல முக்கியமான முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 1923 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு அரசு உதவும் சட்டமும் ஒன்றாகும். இது இங்கு புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு அரசு உதவி வழங்கி இங்கு தொழில் துறையை வளர்த்தெடுப்பதற்கான முக்கியமான முயற்சியாகும். சுதந்திரத்துக்கு முந்திய தமிழகத்தில் ஒரு அளவுக்கு தொழில் துறை வளர்ச்சி அடைந்திருந்தாலும் அன்றைய பாம்பே, வங்காளம் போன்ற மாகாணங்களை ஒப்பிடும் பொழுது சற்று பின்தங்கியே இருந்தது. 1950களில் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது, என்கிற கோஷம் வலுவாக திராவிட இயக்கங்கள் முன்வைத்தது. தமிழகம் தொடர்ந்து தொழில் துறையில் புறக்கணிக்க படுகிறது என்று அந்த நேரத்தில் இங்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசுக்கு திராவிட இயக்கங்கள் நெருக்கடி கொடுத்ததின் விளைவாக திருச்சியில் பெல், ஆவடியில் ராணுவ பாதுகாப்பு வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கங்கள் தொடங்கப்பட்டன. அதோடு தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் போன்றவை உருவாக்கப்பட்டன. 1967 இல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அதை மேலும் வளர்த்தெடுத்தது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் மூலமாக ஸ்பிக் நிறுவனம் தொடங்கப்பட்டது.
இதுபோல் 1990 கள் வரை இரண்டு திராவிட கட்சிகளும் பல்வேறு தொழில் துறை நிறுவனங்கள் தொடங்கப்பட காரணமாக இருந்தனர்.1990 களுக்குப் பிறகு உலக மயமாக்கலால் ஏற்பட்ட மாற்றங்களை தமிழகம் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டு சாப்ட்வேர், ஆட்டோமொபைல் போன்ற துறைகளில் அபார வளர்ச்சி அடைந்தன. இந்த வளர்ச்சி போக்கில் உருவான தமிழக நிறுவனங்களில் 68% தனியார் நிறுவனங்கள் இடை நிலை சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் 14% தனியார் நிறுவனங்கள் தலித்துகளுக்கும் வெறும் 18% தனியார் நிறுவனங்கள் மட்டுமே உயர் சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் சொந்தமானதாக உள்ளன என்கிற புள்ளிவிவரத்தின் வாயிலாக இங்கு மூலதனம் எவ்வாறு ஜனநாயகப் படுத்தப்பட்டுள்ளது என்பதை ஆசிரியர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள். இது போன்ற பல புள்ளிவிவரங்கள் வாயிலாக கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்துறை போன்றவற்றில் ஒப்பீட்டளவில் தலித்துகள் பெற்றுள்ள முன்னேற்றங்களை சுட்டிக்காட்டுவதின் மூலமாக திராவிட இயக்கங்கள் மேல் உள்ள விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ளனர்
கேரளா, மேற்குவங்கம் போன்று இங்கு நிலச்சீர்த்திருத்தம் நடைமுறைப் படுத்தப்படாவிட்டாலும் கூட வேறு பல அரசுத் தலையீட்டின் மூலமாகவும் போராட்டங்களின் மூலமாகவும் இங்கு நிலம் பார்ப்பனர் மற்றும் வேளாளர்கள் போன்ற நில உடமையாளர்களிடம் இருந்து மற்ற சாதியைச் சேர்ந்த சிறு குறு விவசாயிகளிடம் நிலங்கள் கைமாறியுள்ளதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 1970 களில் 70% மாக இருந்த சிறு குறு விவசாயிகள் 2016ஆம் ஆண்டின் கணக்குப் படி 94% மாக உள்ளனர். அதே போல் விவசாயத்தில் இருந்து வெளியேறி வேறு தொழில்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை மற்ற எந்த மாநிலத்தையும் விட தமிழகத்தில் மிகவும் அதிகமாகும். 1993-2017 காலகட்டத்தில் விவசாயத்தில் இருந்து தமிழ்நாட்டில் மட்டும் 65 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளியேறியுள்ளனர். மார்க்ஸ் கூறுவது போல் தொழிலாளர்களின் சேமப்படை (Reserve Army of Labour) என்பது முதலாளித்துவ வளர்ச்சியில் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகும். எனவே விவசாயத்தில் இருந்து வெளியேறிய அனைவருக்கும் நிரந்தரமான தரமான வேலை வாய்ப்பு என்பது கடினமான ஒன்றாகும். 2017-18 கணக்குப்படி ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் வேலை செய்பவர்களில் வெறும் 46% தொழிலாளர்கள் மட்டுமே மாத வருமானம் பெறும் நிரந்தர பணிகளில் உள்ளனர். திராவிட இயக்கங்கள் பல ஆக்கபூர்வமான முயற்சிகளை தொடர்ச்சியாக செய்து வந்தாலும் 90 களுக்கு பிறகு தனியார் துறைகளை சார்ந்த வளர்ச்சி என்பது இவர்களுக்குப் பெரும் சவாலாக உள்ளது.
2008க்குப் பிறகு உலகப் பொருளாதாரம் தொடர்ச்சியாக நெருக்கடியில் இருந்து வரும் நிலையில் கொரோனாவின் காரணமாக அது மேலும் கூர்மை அடைந்துள்ளது. இதன் தாக்கம் தமிழகத்திலும் பிரதிபலிப்பதை நாம் கடந்த பல ஆண்டுகளாக காண முடிகிறது. 2014இல் இருந்து ஆட்சி செய்கிற பா.ஜ.க அரசு மாநிலங்களுக்கு இருந்த பல உரிமையை பறித்து வருகிறது. ஜி.எஸ்.டி. போன்றவற்றால் மாநிலங்களுக்கு இருந்த நிதி ஆதாரங்களை பறித்துவிட்டன.
இது போன்ற சவால்களை எதிர்கொண்டு நிலைப்புரு வளர்ச்சியை உத்திரவாதம் செய்யவும், சமூக நீதியைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நிலைபெறச் செய்யவும் எவ்வாறு திராவிட இயக்கங்கள் செயல்பட போகின்றன என்பதை வரலாறுதான் பதில் சொல்லும். தமிழ் நாட்டின் தனித்துவமான வளர்ச்சி போக்கிற்கு திராவிட இயக்கத்தின் பங்கு முக்கியமானது. அதேபோல் தமிழகத்தில் முகலாயர்களின் ஆட்சியில் தொடங்கி அதன் பிறகு வந்த காலனிய ஆட்சியாளர்கள் மற்றும் கிருத்துவ மிஷினரிகள் இதற்கான அடித்தளம் அமைத்து கொடுத்ததையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு நூற்றாண்டு கால தமிழகத்தின் சமூக பொருளாதார வரலாற்றை ஒரு சேர படிப்பதற்கான வாய்ப்பை நமக்கு இந்தப் புத்தகம் வழங்கியுள்ளது.
– பேரா. அருண்கண்ணன் இயக்குநர்- தொழில் கல்விக்கான லயோலா கல்விக்கழகம், லயோலா கல்லூரி, சென்னை