நூல் அறிமுகம்: சக.முத்துக்கண்ணனின் “புது றெக்கை” – து.பா.பரமேஸ்வரி

நூல் அறிமுகம்: சக.முத்துக்கண்ணனின் “புது றெக்கை” – து.பா.பரமேஸ்வரி




நூல் : புது றெக்கை
ஆசிரியர் : சக.முத்துக்கண்ணனின்
விலை : ரூ.₹40
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

இலக்கியமும் தமிழும் சுவையும் சுவாரஸ்யமும் போல. எப்போதும் சுவைத்தும் சுருதி கூட்டியும் தித்திக்கும். நமது தமிழிலக்கிய பேரண்டத்தில் கதை கட்டுரை கவிதை என ஒவ்வொரு மாகாணமும் மாபெரும் கண்டத்தைப் போல விஸ்தரித்தும் வியாபித்தும் விசேஷமாய் நிற்கும் விளைச்சல் நிலங்கள்.‌ அதிலும் பிள்ளைகளுக்காக பிரத்யேகமாக எதை நாம் செதுக்கினாலும் அதில் மழலைத்தனம் மருவியே கிடக்கும் . பாடலோ படக்கதையோ ஓவியமோ ஒய்யார இசையோ பிள்ளை மனிதர்களுக்கான எழுத்தும் மொழியும் கூடுதல் பொலிவில் துய்த்து நிற்கும் என்பதே இலக்கியத்தின் தனித்த எழில். முன்பெல்லாம் இலக்கியப் படைப்புகளில் பிள்ளைகளுக்காக பிரத்தியேகமான வடிவங்கள் பல ஆளுமைகளின் கரங்களினூடே உதயமாகியுள்ளன. சமீபமாக சிறார் இலக்கியங்கள் பல படைப்புப்பாதையை பவித்திரமாக்கியுள்ளது. கவிமணி தேசிய விநாயகம் தொடங்கி சக்தி வை.கோவிந்தன், அழவள்ளியப்பா என நீளும் சிறுவர் இலக்கியவாதிகளில், சமீபமாக பிள்ளை இலக்கியச் சிற்பியாக எழுத்தாளர் உதயசங்கர் சிறார் இலக்கியத்திற்குக் கூடுதல் வலு சேர்த்துள்ளார். நூறு இலக்கியப் படைப்புகளை வெளியிட்டு பிள்ளைகளின் பிரியமான ஆளுமையாக உயர்ந்துள்ளார். அவரைத் தொடர்ந்து பல ஆளுமைகளும் ஆங்காங்கே தமது படைப்புகளில் பிள்ளைகளுக்காக ஒதுக்கிய பக்கங்களும் விதைத்த விதைகளும் இன்று இலக்கியவுலகில் முப்போக விளைச்சலைத் தருகின்றன.

சமீபமாக அரசு பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் எழுத்தாளர் சக.முத்துக்கண்ணன் அவர்கள் பிள்ளைகளின் கல்விப் புலத்தை மேம்படுத்தவும் பிள்ளைகளின் தனித்துவத்தை மெருகேற்றவும் இலக்கியமே ஆக்கப்பூர்வமான ஒன்று என்பதை உணர்ந்து தொடர்ந்து எழுத்து வழியாகவும் செயல் வடிவாகவும் தமது மேத்தகு ஆசிரியர் பணி ஊடாகவும் செயல்பட்டு வருகிறார். அவரது “சிலேட்டு குச்சி”, “ரெட்இங்க்” போன்ற நூல்கள் கல்வித் தரப்பில் பேசும் பொருளாகவும் விவாதங்களாகவும் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் வளம் கண்டுள்ளது. அவரது படைப்புகளில் “சிலேட்டுக் குச்சி” எனை வெகுவாக ஈர்த்த ஒரு பிள்ளைக்காவியம். தொடர்ந்து பிள்ளைகளுக்கான அர்ப்பணிப்பில் அடுத்தக் கட்டமாக சிறார் இலக்கியத்தை நாடியுள்ளார். மழலைகளின் மனதை மகிழ்விக்க பிராயமொழியில் பிள்ளைப்போல கொஞ்சியுள்ளார்.

Pudhu Rekkai

“புது றெக்கை” எழுத்தாளர் சக.முத்துக்கண்ணன் அவர்களின் சிறுவர்களுக்கான கதைத்தொகுப்பு.தொகுப்பு முழுவதும் மழலை நாயகர்களின் வெவ்வேறு ரூபங்கள் காணக் கிடைக்கின்றன. கதைகள் ஒவ்வொன்றிலும் பிள்ளைகள் நடக்கின்றார்கள் அவர்களே பேசுகிறார்கள் கொஞ்சமுமாகக் கதைக்கிறார்கள் கேள்விகளாக வடிவெடுக்கிறார்கள் பின்பு அவர்களே விடைகளாக உருமாறுகிறார்கள். வாசிக்க வைத்து வசியப்படுத்துகிறது கதை ஒவ்வொன்றும். ஆசிரியர் பிள்ளையாகத் தோன்றி வாசகரை மழலை உலகத்திற்கு கரம் பற்றி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பெரியவர் உலகின் கணம் விழுந்திடாத அளவிற்குப் பக்குவமாய் ஒவ்வொரு கதையையும் பாங்குடன் நகர்த்தியுள்ளார். அசலில் இந்நூல் கொண்டு வாசகரை குழந்தைகளின் அற்புத உலகில் திளைக்கச் செய்துள்ளார். எத்தனை எத்தனை கேள்விகள் தான் உதயமாகின்றன பிள்ளைகளின் சிறிய மூளைக்குள் .அத்தனையும் ஆச்சரியங்களின் அதீதங்கள்….. இத்தனையும் பிள்ளைகளின் சுடரும் அறிவொளியின் வெளிப்பாடுகள்… இவை ஒவ்வொன்றும் புனைவாக இருப்பதாகத் தோன்றவில்லை. ஆசிரியரின் குழந்தைகளுடனான இணக்கமும் பிணைப்பும் ஒவ்வொரு கதையிலும் ஜீவித்திருப்பதை உணர முடிகிறது.

“ஆலமரம்” கதையில் வசந்தி பாப்பா தனது தாத்தாவிடம் கேட்க எழுதி வைத்திருக்கும் கேள்விப் பட்டியல் மெத்த மேதாவிகளின் மேட்டிமை அறிவைத் தூளாக்குகிறது. எப்படி பூச்சிகளும் பறவைகளும் ஒரே மரத்தில் இருக்கின்றன? பூச்சி பறவைகளைக் கடிக்காதா? பறவைகளுக்கு சளி பிடிக்குமா? குட்டி பறவைக்குக் காய்ச்சல் வந்தால் அம்மா பறவை என்ன மருந்து தரும்? கல்யாணம் வைத்தால் அந்த மரத்திலேயே ஸ்பீக்கர் கட்டுகிறார்கள். பறவைகள் பாவம் இல்லையா… எப்படி காதை மூடும், அதுக்கு தான் கை இல்லையே.. இப்படி ஏராளமான அறிவுஜீவி ஐயங்கள்.. யாரேனும் யோசித்தது உண்டா….இதற்கு நம்மிடம் தான் பதில் உண்டா…

இதைத்தான் திறந்தவெளிப் பல்லறிவுக்கழகம் என்பார்கள். இப்படியாக பிள்ளைகளை நாம் சிந்திக்க விடுவோமேயானால் அவர்களின் அறிவுக்கிடங்கில் புதைந்திருக்கும் ஏராளமான கேள்விக்குவியலுக்கான விடைகளைத் தேட நாம் நம்மை அறிவூக்கப்படுத்த வேண்டும். பேராசிரியர்களிடம் கூட பிள்ளைகளின் தேர்ந்த சிந்தனைகளை அத்துனை எளிதாக அனுமானித்திட இயலாது. குழந்தைகளின் கற்பனை உலகிற்கு உருவம் தரும் மாயாலோக கதைகளாக “ஞாயிற்றுக்கிழமை” கதையும் “புது றெக்கை” கதையும். அடக்குமுறை ஆதிக்க வாதிகளான பெற்றோர் என்கின்ற பூதங்களின் பொருள்வாத வாழ்க்கை, பிள்ளைகளை எப்போதும் நான்கு சுவற்றுக்குள் முடக்கிப் போட்டு அவர்களின் கொண்டாட்ட வெளியை மறைப்பொருளாக்கும். சிறைச்சாலைகள் போன்ற எண்ணற்ற இல்லங்களில் பிள்ளைகள் கைதிகளாக கல்வி என்கின்ற விலங்கிட்டு வார்டன் போல மிரட்டியாள்கின்றனர் பெற்றோர்.இப்படியான இன்றைய பிள்ளை வளர்ப்புப் போக்கை அம்பலப்படுத்துகிறது “புதுறெக்கை” கதைப் பெட்டகத்தின் உவப்பானதொரு கதை.

யாழினி பாப்பாவின் ஏக்கம் பூக்கும் மொழிகள் வெவ்வேறு தளங்களில் வெளிச்சப்படுகிறது. பூதத்தைப் பார்த்துக் கூட பிள்ளை மனம் பரிதவிக்கவில்லை துளியும் அசரவில்லை என்றால் பெற்றோர் எத்தனை பெரிய பூதகணங்களாகத் தினம் வற்புறுத்தியும் பயமுறுத்தியும் அடக்கி ஆளுகின்றனர் பிள்ளையை என்பதே கதையில் ஆசிரியர் சமகால பெற்றோர்களை பிள்ளைச் சுதந்திரத்தின் மீதான ஆதிக்க மனோபாவத்தைத் துடைத்தெறிந்து பத்தம் புதுறெக்கை ஒன்றை முளைக்கச் செய்து யாழினி பாப்பா வழியாக தமது விண்ணப்பத்தை அந்த றெக்கையில் கட்டித் தூது அனுப்புகிறார் முத்துக்கண்ணன் அவர்கள்.

கதையில் ஒரு கட்டத்தில் பூதத்திடம் யாழினி பாப்பா இப்படி கேட்கிறாள்.. “அம்மாவும் அப்பாவும் உன்னைப் போலவே இருந்தால் நல்லா ஜாலியா இருக்குமே..” பலமுறை விழி வழியே செறிவூட்டியும் ஆற்றவியலா பிள்ளை மன ஏக்கங்கள் தான் அங்கலாய்த்துக் கிடக்கின்றன மொழியில். யாழினி பாப்பா, தம்போல் வீட்டிற்குள் மருட்சியாய் கிடக்கும் பிள்ளைகளின் சார்பாக வேண்டி நிற்கிறாள். “அப்பாவின் ஸ்கூட்டர் போல இல்லை பூதம் யாழினி எங்கே நிற்கச் சொன்னாலும் நின்றது.” பெரும்பாலான குடும்பங்களில் பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளையும் அபிலாஷைகளையும் புறக்கணிக்கின்றனர் பெற்றோர். சிறு பிள்ளை என்ற போக்கில் அவர்களின் எந்த ஒரு விருப்பங்களுக்கும் கொண்டாட்டங்களுக்கும் பிரியத்தின் கட்டளைகளுக்கும் மதிப்பளிக்க தவறுகின்றனர். என்பதே இக்கதையின் வழியாக ஆசிரியர் நமக்கு வலியுறுத்துகிறார். பிள்ளைகளின் முடிவுகளையும் தாங்களே எடுக்கின்றனர் தங்களின் விழைகளைத் திணிக்கின்றனர் அவர்களின் வாழ்க்கையையும் தாங்களே சேர்த்து வாழ்கின்றனர் பெற்றோர். “ஞாயிற்றுக்கிழமை” கதையில் பேசும் பென்சிலுக்கு டின் டின் என பெயர் சூட்டிய சுகந்தி பாப்பா, A B C யை பாட்டு போல ராகமாய் பாடும் அபிராமி குட்டி, உன்னிப்பழத்தை உண்டு நாவின் வையலட் நிறம் பரிமாறி அப்பிக் கிடப்பதில் விழிகளும் இதழ்களும் பூத்து நிற்கும் பிரியா குட்டி, கிளிகளை எப்படியாவது உண்ணவும் பருகவும் செய்திட வேண்டும் என்பதில் பெரும் முனைப்புக் காட்டி மெனக்கிடும் வெண்பா பாப்பாவும் பாபு செல்லமும் என மழலைப் பட்டாளங்களின் அலைவரிசை அலையலையாய்த் தவழ்ந்து நூலைக் களைக்கட்டுகின்றன. “இனிக்கும் Q” கதையில் வரும் ஈஸ்வரி அக்கா பாத்திரம் தொகுப்பில் என்னை வெகுவாக பற்றிக் கொண்ட பாத்திரப்படைப்பு. கற்றலில் தடுமாறும் பிள்ளைகளைக் கல்வியிலிருந்துத் தடம் மாறிடாது கற்பித்தலின் மாறுபட்ட கோணங்களில் பிள்ளைகளின் கற்றல் மனம் மசிந்திடாது எளிமைக் கூட்டியும் ஆர்வம் தூண்டியும் மனதில் அடாது பதிந்து நிற்கும் மாதிரியான கற்பித்தல் செயல்முறைகளில் அபிராமி பாப்பாவைக் கையாடல் செய்த ஈஸ்வரி அக்காவின் கற்றல் அர்ப்பணிப்பும் பிள்ளைகளைத் தன்வயப்படுத்தும் பக்குவமும் பாத தூரமாகப் பதிவு செய்கிறது கதை.

கல்வி என்பது போர்க்களம் அல்ல கற்றல் என்பது போராட்டமும் அல்ல இரண்டும் கற்பிப்பவர் கரங்களின் கனிந்துக் கிடக்கும்‌ என்பதை நிதர்சனப்படுத்துகிறது ஈஸ்வரி அக்காவின் செயல்முறைக் கல்வியார்வம் ஒவ்வொன்றும். வெகு நாட்களாக “Q” கற்கத் தலைப்படும் அபிராமி பாப்பாவின் முயற்சி அதற்கான ஈஸ்வரி அக்காவின் தொடர் செயலெடுப்புகளும் இறுதியில் அபிராமி பாப்பா Q மொழிந்து வெற்றிக் கண்டதில் எனக்கு அப்பாடா… என்றாகி பெருமூச்சொன்று ஆசுவாசப்படுத்தியது. ஜீனித்தண்ணியில் அபிராமிக்கு இனித்த எனக்குள்ளும் தித்தித்தது‌. தாத்தா பாட்டி என்றாலே பிள்ளைகளுக்கு அலாதி பிரியம். எத்தனை பரிசும் பகட்டும் அவர்களை வசியப்படுத்தினாலும் அவர்களின் சுய விருப்பமும் கொண்டாட்ட களமும் தாத்தா பாட்டியைச் சுற்றியே திரியும். அவர்களின் சுயப்பிரியத்தில் தோன்றிய அபிலாஷைகளின் பூர்த்திமை என்பது பேரானந்தத்தின் வெளிப்பாடு என்பதை பேசுகிறது “பிறந்தநாள்” கதை.

அதிலும் தாத்தா பாட்டி உடனான அனைத்து நெருக்கங்களும் அவர்களைக் கூடுதலாகவே அசத்தும். கதைசொல்லிகளாகவும் தமது விருப்பத்திற்கு மறுத்தலிக்காது ஊக்கப்படுத்தும் அவர்களின் தூய அன்பு பெற்றோரை விட அதீத பிணைப்பும் இணக்கத்தையும் பிள்ளைகளின் மீது கவிந்துக் கிடக்கும் என்பதை பிள்ளைகளின் தரப்பிலிருந்துப் பேசுகிறது கதை. மழலைகளின் கதை ஒவ்வொன்றும் ஜீவித்தத் தருவாய் யாவிலும் ஆசிரியரின் செல்ல மகள் வெண்பாவின் ரேகைகள் வெகுவாக பதிந்துள்ளதைக் காண முடிகிறது. “கிளிகள்” கதையில் வரும் வெண்பா பாப்பா அசலில் நூலாசிரியரின் செல்ல மகளின் பிரதிபாத்திரம் போல என்றே நினைக்கிறேன். வெண்பா பாப்பாவுக்கும் பாபு செல்லத்திற்கும் அந்த இரட்டை கிளிகளோடுடனான நட்புறவைப் புதுப்பிக்க மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வாசகரை ஸ்தம்பிக்க வைக்கின்றன. பாட்டு பாடியும், நேராக நின்று “ஹாய்” சொல்வதும் பிள்ளைமை வேட்கையில் பிரத்யேகமாகப் பூத்தச் சேட்டைகள். வாசிக்க வாசிக்கப் பேரானந்தத் திளைப்பைக் களித்துய்க்கச் செய்கின்றன. வாசக மனத்தை “புது றெக்கை” கட்டிப் பறக்கச் செய்கிறது தொகுப்பு.

பிள்ளைகளின் வெகு நேர பிரிய பாடுகளுக்குப் பின்பு கிளிகள் உணவு உட்கொண்டும் நீர் அருந்தியும் தமது நீண்ட நெடிய விரதத்தைக் கைவிட்டதில் உண்டான பிராய குதூகலிப்பில் வெண்பாவுடனும் பாபுவுடனும் நானும் கொண்டாடினேன். அத்துனை மாதுர்யமான காட்சிப் பிம்பங்கள். அடடா… என்றாகி விட்டது. . பிள்ளைகள் வெறும் ஏட்டுக்கல்வியின் பிரதிநிதிகளாக மட்டுமே இருந்து வருகின்றனர். பிள்ளைகளின் அறிவு தீக்ஷையானது.ஆனால் இன்றைய கல்வித்திட்டத்தின் வறுமை அவர்களின் பொலிவான ஞானத்தைச் சுருக்கி வருவதை ஆசிரியர் தமது கதைகளுக்குள் பூட்டமாகச் சுட்டிக் காட்டியுள்ளார். பள்ளியைத் தாண்டிய பொது உலக அறிவு என்பது பிள்ளைகளுக்கேயுரித்தான பிரத்தியேகமான கல்விச் சுதந்திரம். அது நிச்சயம் அனைத்துப் பிள்ளைகளுக்கும் வார்த்திட வேண்டும். “ஐயோ நான் பள்ளிக்கூடத்திற்கு உள்ளேயே தேய்ந்து போனேனே”! தொகுப்பின் ஏழு கதைகளும் மாறுபட்ட பிள்ளை முகங்களை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன. நம் அனைவரின் வாழ்விலும் பிள்ளைகள் வாழ்கின்றனர். ஆனால் அவர்களைக் கதைக்காரர்களாகவும் கதாநாயகராகவும் உருத்தெழ வைப்பதில் இலக்கிய தாரிகளின் பங்கு அலாதி. அதிலும் தேர்ந்த எழுத்துக்காரர்கள் பிள்ளைகளுக்கான தமது விசேஷப் படைப்பின் வாயிலாக வசியப்படுத்தி விடுவர் என்பதற்கு ஆசிரியர் சக.முத்துக்கண்ணன் அவர்களின் இந்த தொகுப்பே சான்று. பிள்ளை மொழியில் மழலைப் பாத நடையில் வாசகரைத் துள்ளியாட வைத்துள்ளார். நிச்சயம் பிள்ளைகளுக்கு இந்தத் தொகுப்பு வாசிக்கப் பிடிக்கும். சிறார் இலக்கியத்தில் பல அற்புதப் படைப்புகளுடன் தோழர் அவர்களின் இந்த தொகுப்பும் தமக்கான தனித்த முத்திரையை பதிய வைக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. தொகுப்பின் கதைகளை வாசித்த கணநேரங்கள் ஒவ்வொன்றிலும் தன்னிலை மறந்தே மூழ்கிப் போனேன் பிள்ளைகளின் திரைக்காணலில்.

ஆசிரியர் முத்துக்கண்ணன் அவர்களின் மாறுபட்ட எழுத்து நடைகளின் பரிணாமம் தனித்துவத்தின் தன்னியல்பு. . அவரின் ஒவ்வொரு படைப்பிலும் அந்தந்த தளத்தின் சுவைக்கேற்றாற் போல புதிய எழுத்து வடிவத்தைக் காணலாம். “புது றெக்கை” ரோஜா இதழின் இதமான ஸ்பரிசத்தில் நமது இதயத்தைத் தடவி விட்டு செல்கிறது ‌. தொடர்ந்து பிள்ளைகளுக்கான தங்களது பணிமேலாண்மையுடன் எழுத்து அர்ப்பணிப்பிலும் செயல்படுத்தி வர வாழ்த்துகள்.

– து.பா.பரமேஸ்வரி