ஓங்கில் கூட்ட புத்தக வெளியீட்டு விழா சிறப்புரை-இரா.சண்முகசாமி
ஓங்கில் கூட்டத் திருவிழா!
அறிவியல் பூர்வமான சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள் ஆதிவள்ளியப்பன், பஞ்சுமிட்டாய் பிரபு, இ.பா.சிந்தன், உதயசங்கர், நாராயணி சுப்பிரமணியன், ஹேமபிரபா, நா.பெரியசாமி, ராஜேஷ் கனகராஜன், திவ்யா பிரபு ஆகியோரின் 10 புத்தகங்களை 04.04.2023 அன்று ஓங்கில் கூட்டம், பாரதி புத்தகாலயம், சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இணைந்து வெளியிட்டனர்.
தோழர் Udhaya Sankar அவர்கள் தலைமையேற்க, தோழர் Vishnupuram Saravanan அவர்கள் ஒருங்கிணைக்க, நூல்கள் பற்றி எழுத்தாளர்கள் நாராயணி சுப்பிரமணியன், சாந்த சீலா, ஜோசப் பிரபாகர், வெற்றிச்செழியன், விஷ்ணுபுரம் சரவணன் ஆகியோர் கருத்துரைகள் வழங்க தோழர் க.நாகராஜன் அவர்கள் நன்றி கூறினார்கள்.
யதார்த்தமாக தோழர் Chinthan Ep மற்றும் Prabhu Rajendran அவர்களின் முகநூல் பதிவை பார்க்க நேரிட்டது “சென்னை பாரதி புத்தகாலயம் அரும்பு நிலையத்தில் 10 புத்தகங்கள் வெளியீட்டு விழா” என்று.
ஏதோ பக்கத்து டீக்கடையில் டீ சாப்பிட்டு வரலாம் என்பது போல புதுவையிலிருந்து புறப்பட்டு மாலை சரியாக 6.15 மணிக்கு சென்னை சென்றேன். விழா சரியாக 6.30 மணிக்கு தொடங்கியது. ஆளுமைகளின் நூல்களை ஆளுமைகள் பலர் வெளியிட குழந்தைகள் அவர்களைக் குழந்தைகள் என்று சொல்லமுடியாது அவ்வளவு சிறப்பாகவும், பொறுமையாகவும் அமர்ந்து நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு நூல்களை பெற்று நிகழ்ச்சியில் பங்கெடுத்தனர். அவ்வப்போது திரும்பித் திரும்பி புன்னகைப் பூக்களை உதிர்த்துக்கொண்டே இருந்தனர்.
சரியாக இரவு 8.40 மணிக்கு நிகழ்ச்சி முடிவுற்றது. மறுபடியும் டீ குடித்து வீட்டுக்குத் திரும்புவது போல் அவசரமாக எழும்பூர் ரயில் நிலையத்தில் பாண்டியன் ரயிலைப் பிடித்து ஊர் வந்து சேர்ந்தேன் இரவு 2.30 மணிக்கு.
வாசிப்பு மனிதனை பல தளங்களுக்கு பரந்து விரிந்து அழைத்துச் செல்லும் என்பதை புத்தகங்கள் உணர்த்திக்கொண்டே இருக்கின்றன. வாசிப்பு உலகில் நுழைந்தவர்களுக்கு அது நன்குத் தெரியும். பறவை கூட்டுக்குத் திரும்பும் நேரம் போக மற்ற நேரங்களில் வானில் சிறகை விரித்து பறப்பது போல புத்தகங்களின் பக்கங்களை புரட்டுபவர்களுக்கு வானம் வசப்படுவது நன்குத் தெரியும். அந்த வாசிப்பு வான்வெளியை தமிழக மக்களுக்கு நன்கு திறந்து காண்பிக்கும் பணியை #பாரதிபுத்தகாலயம் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை மிகச்சிறப்பாக செய்து வருகிறது. அதில் ஒரு அடுத்தக்கட்ட நகர்வுதான் #ஓங்கில்கூட்டம் வழியாக சிறுவர், பதின்பருவ குழந்தைகளுக்கான நூல்களை வழங்கும் ஆகச்சிறந்த எழுத்தாளர்கள் கொண்ட வெளியீடு தான் மேற்கண்ட நிகழ்வின் பாத்திரம்.
04.04.2023 நிகழ்வு மிகச்சிறப்பு. அதற்காக பாடுபட்ட அத்தனை தோழர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளையும், நெஞ்சம் நிறைந்த நன்றியினையும் உரித்தாக்ககிறேன்.
வாசிப்போம்!
உலகை நேசிப்போம் தோழர்களே!!
வரலாற்றில் மறைக்கப்பட்ட புதுச்சேரியின் பெண் புரட்சியாளர் சரஸ்வதி சுப்பபையா – சிந்துஜா சுந்தர்ராஜ்
புதுச்சேரியில் பெண் உரிமைகள், சம ஊதியம், வாக்குரிமைக்காகவும் குரல் எழுப்பிய முதல் பெண்மணிகளில் சரஸ்வதி சுப்பையாவும் ஒருவர்.
1523 முதல் 1815 வரை, புதுச்சேரி பல்வேறு காலனித்துவவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது: போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் இறுதியாக பிரெஞ்சுக்காரர்களில் முடிவற்றது. சரஸ்வதி கம்யூனிஸ்ட் தலைவர் வி சுப்பையாவின் மனைவி ஆவார், அவர் யூனியன் பிரதேசமான புதுவையில் பிரெஞ்சு காலனித்துவவாதிகளுக்கு எதிராகவும், சுதந்திர போராட்டத்திற்கும் தலைமை தாங்கினார். சுப்பையா அரசியல் சுதந்திரத்திற்காக போராடினார் என்றால், சரஸ்வதி பெண்களுக்கான சமூக சுதந்திரத்திற்காக போராடினார்.
சடகோபன் மற்றும் சூடாமணி தம்பதிக்கு இரண்டாவது மகளாக அக்டோபர் 22, 1924 அன்று வேலூரில் உள்ள ஆர்ணியில் பிறந்தார். கல்வியில் படுச்சுட்டி. அவர் தனது இடைநிலையை முடித்தார், அதன் பின் இரண்டாம் உலகப் போர் நடைப்பெற்றதால் அவர் பள்ளி படிப்பை தொடர முடியாமல் போனது.
1943ல் சுப்பையாவை மணந்த பிறகு சரஸ்வதி புதுச்சேரிக்கு வந்தார். திருமணமான நான்கு மாதங்களிலே சுப்பையா நாடு கடத்தப்பட்டார். அதனால் வேலூருக்கேத் திரும்பிய சரஸ்வதி 1945ல் தான் யூனியன் பிரதேசத்திற்குத் திரும்பினார்.
சரஸ்வதி 1946 ல், ‘பிரெஞ்சு இந்தியப்
பெண்கள் சங்கம்’ என்ற ஓர் அமைப்பை உருவாக்கினார். பின் ஏப்ரல் 9 அன்று அனைத்துப் பெண்கள் மாநாட்டை ஏற்பாடு செய்தார். இந்த மாநாட்டில் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டதாக யூனியன் பிரதேசத்தின் வரலாற்றாசிரியர் ஏ லட்சுமிதாத்தாய் கூறியுள்ளார். புதுச்சேரி வரலாற்றில் முதல் பதிவு செய்யப்பட்ட அமைப்பு சங்கம் இது தான். சுதந்திரத்திற்கு பின் 1950ல், யூனியன் பிரதேச பெண்களுக்கு புதுவையில் வாக்குரிமை வழங்கியது.
எங்கள் கிராமமான சண்முகபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் குழுவை என் அம்மா தனலட்சுமி மாநாட்டிற்கு அழைத்துச் சென்றார். அனைவரும் சிவப்பு நிற புடவை அணிந்திருந்தனர். இந்த மாநாட்டில் தான் பெண்களுக்கான வாக்குரிமைக்கான கோரிக்கையை சரஸ்வதி எழுப்பினார், ”என்று புதுச்சேரியின் எழுத்தாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான சீனு தமிழ் மணி பெடரல் என்ற இணைய இதழுக்கு கொடுத்த போட்டியில் தெரிவித்திருந்தார். “யூனியன் பிரதேசத்திற்கு முழு சுதந்திரம் மற்றும் இரு பாலினருக்கும் சமமான ஊதியம் போன்ற தீர்மானங்கள் இங்குதான் நிறைவேற்றப்பட்டன,” என்று மேலும் கூறினார். சரஸ்வதி சுப்பையா National Federation of Indian Women என்ற அமைப்பில் தலைவராகவும் பணியாற்றினார் என்பது கூடுதல் செய்தி.
1959 ஆம் ஆண்டு, சரஸ்வதி காசுகடை தொகுதியில் போட்டியிட்டு புதுச்சேரி பிரதிநிதிகள் சபைக்கு முதன் முதலில் ஓரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டது அதுவே. அவர் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி. 1959ஆம் ஆண்டு முதல் 1964ம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினாராக பணியாற்றினார். 1968ம் ஆண்டு முதல் 1978ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அவர் முதல் பெண் துணை மேயராக பணியாற்றினார் என்பதும் சிறப்பான ஓன்று. சரஸ்வதி ஜூன் 4, 2005 அன்று இறந்தார்.
“உள்ளாட்சித் தேர்தலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சரஸ்வதி மிகுந்த ஆர்வம் காட்டினார். தனது வாழ் நாள் முதல் இறக்கும் வரை ஒரு வலுவான இடதுசாரி சித்தாந்தவாதியாக இருந்த சரஸ்வதி எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். அப்படிப்பட்ட தலைவர்களை இன்று அரசியலில் பார்ப்பது மிக கடினம்,” என்கிறார் தொழிற்சங்கவாதி முத்துக்கண்ணு.
சரஸ்வதி சுப்பையா அவர்களின் சமூக சேவையைப் பாராட்டி புதுச்சேரி அரசின் மகளிர் திலகம் விருது பெற்ற முதல் பெண்மணி ஆவார். ஆக புதுச்சேரி வரலாற்றில் சரஸ்வதி சுப்பையாவிற்கு என்று ஓர் தனியிடம் உண்டு என்பதை இந்த 75வது சுதந்திரத்தின கொண்டாட்டத்தில் பெண்களின் எழுச்சியை புதுச்சேரியில் வித்திட்ட அவருக்கு வீரவணக்கம் சொல்லி வரும் காலங்களிலும் பெண் உரிமைகளை மீட்டெடுப்போம் என்று சொல்லி பயணிப்போம் .
– சிந்துஜா சுந்தர்ராஜ்
மூடிய ரேசன் கடைகளைத் திற! மக்களைப் பட்டினி போடாதே! – ஜி.ராமகிருஷ்ணன், சிபிஎம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால், மாஹி மற்றும் ஏனாம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக ரேசன் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்களுக்கு இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்கப்பட்டு வந்த அரிசி மற்றும் இதர உணவுப் பொருட்கள் கிடைப்பதில்லை. ரேசன் பொருட்களை நம்பி இருக்கும் நிரந்தர வருமானம் இல்லாத ஏழை எளிய மக்களும், நடுத்தர வர்க்க மக்களும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 2015ஆம் ஆண்டில் மத்திய பாஜக ஆட்சி இருந்த காலத்தில் புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போது முதல்வராக இருந்த ரங்கசாமி புதுச்சேரியில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கு மாற்றாக அரிசிக்குப் பதிலாக நேரடி பணப் பட்டுவாடா செய்யும் திட்டத்தை அமல்படுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியது. அந்தத் திட்டம் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டது. மூன்றாண்டுகளுக்கு முன்பு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஆளுநராக இருந்த கிரண்பேடி, மாநில அரசின் எதிர்ப்பையும் மீறி, ரேசன் விநியோகத்திற்குப் பதில் பணம் வழங்கும் திட்டத்தை அறிவித்து, அமலாக்கினார். அரிசிக்குப் பதிலாக பணம் வழங்குவதை மக்கள் எதிர்த்தார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு எதிராக தொடர்ந்து பல இயக்கங் களை நடத்தியது. இருந்தபோதிலும் வலுக் கட்டாயமாக பணம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
15 மாதங்களாக பாதிப்பு
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், பாஜக என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, பணப்பட்டுவாடாவையும் நிறுத்தி விட்டதன் விளைவாக, கடந்த 15 மாதங்களாக சிவப்பு குடும்ப அட்டைகளுக்கு (வறுமைக் கோட்டுக்குக் கீழே) 20 கிலோ அரிசிக்கு பதிலாக வழங்கப்பட்ட ரூபாய் 600, மஞ்சள் குடும்ப அட்டைக்கு 10 கிலோ அரிசிக்கு பதிலாக வழங்கப்பட்ட ரூபாய் 300 வழங்கப்படவில்லை. இதனால் மக்களுக்கு 15 மாதங்களில் கிடைக்க வேண்டிய ரூபாய் 9000, மற்றும் ரூபாய் 4500 இதுவரை கிடைக்கவில்லை. புதுச்சேரியில் கடந்த 15 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வறுமை நிலைக்குச் சென்றுள்ளது. அன்றாடம் அத்தியாவசியப் பண்டங்களின் விலை ஏற்றத்தால் வறுமை நிலையில் உள்ள ஏழை, எளிய மக்களால் தங்களின் உணவுத் தேவையைக்கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. இவர்களின் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிரந்தர வருமானம் இல்லாத உடல் உழைப்பை நம்பி வாழ்கின்ற மக்கள் அனை வருமே வறுமை நிலையில் உள்ளனர். இவர்களுக்கு சிவப்பு குடும்ப அட்டை வழங்கப்படுவதில்லை. சமீபத்தில் செய்தித்தாள்களில் பழங்குடியின மக்களுக்குக்கூட சிவப்பு குடும்ப அட்டை வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. அதே நேரத்தில் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கு சிவப்பு அட்டை வழங்கப்படுகிறது. கொரோனாவுக்குப் பிறகு சிறுகுறு தொழில்கள் நெருக்கடியில் உள்ளன. முறைசாராத் தொழிலாளர் குடும்பங்களும், ஏழை எளிய குடும்பங்களும் வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்து, வருமானமின்றி விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய அவல நிலைமைக்குப் பிறகும் கூட, பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சர் ரங்கசாமி, அரிசிக்குப் பதிலான பணப்பட்டுவாடா செய்ய முடியாது என சமீபத்தில் அவரை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலத் தலைவர்களிடம் கூறியிருக்கிறார்.
இத்தகைய நிலைமைக்கு என்ன காரணம்
கடந்த 2017 ஜூலை மாதம் 31 ஆம் தேதி, பிரதமர் தனது உரையில் சண்டிகர் மற்றும் புதுச்சேரியில் பொருள் விநியோகத் திட்டத்தை முழுமையாக நிறுத்தி, குடும்ப அட்டைதாரர்களுக்கு மானியத் தொகையினை நேரடியாக வங்கிக்கணக்கில் போடப்படுகிறது எனக் கூறியிருந்தார். மேலும், இதே முறையினை நாடு முழுவதிலும் எல்லா மாநிலங்களிலும் அமலுக்குக் கொண்டுவரப் போவதாகவும் கூறியிருந்தார். மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதற்குப் பதிலாக, மானியத்தை வங்கிக்கணக்கில் நேரடியாக அரசு செலுத்தும் திட்டத்தை மோடி அரசு அமலாக்கியது. தற்போது சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானியம் முற்றாக நிறுத்தப்பட்டுவிட்டது. இத்தகைய முறையில்தான் அரிசிக்குப் பதிலாக பணப்பட்டுவாடா என்று முதலில் கூறி, காலப்போக்கில் பாண்டிச்சேரி மாநில அரசு, அந்தப் பணப்பட்டுவாடாவை யும் நிறுத்திவிட்டது.
ரேசன் அரிசி விநியோகத்தை நிறுத்தி விட்ட மோடி அரசு, வரலாற்றிலேயே இல்லாத வகையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குக் கூட ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது கொடுமையிலும் கொடுமை. விவசாயிகளிடம் குறைந்தபட்ச ஆதார விலையில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரேசன் கடைகள் மூலம் அரிசி விநியோகம் செய்யப்படுகிறது. ரேசன் கடைகளை மூடு வதன் மூலம் கொள்முதலும் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது. இதனால், விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள்.
மத்தியில் பாஜக மோடி அரசு- புதுவையில் பாஜக கூட்டணி அரசு
மத்தியிலும் புதுவை மாநிலத்திலும் அதிகாரத்தில் உள்ள பாஜக, முற்றாக உணவு மானியத்தை நிறுத்தும் தனது மக்கள் விரோதக்கொள்கையை அமலாக்கிட, புதுவை மாநிலத்தை முன்னோட்ட மாநிலமாக, பரிசோதனை எலியாக பயன்படுத்தி வருகிறது. புதுச்சேரி மாநிலத்தின் மக்கள் தொகை 15 லட்சம். அங்கு வழங்கப்பட்டுள்ள மொத்த ரேசன் கார்டுகள் 3,52,382. இவற்றில் 1,60,211 சிவப்பு அட்டைகள் (முன்னுரிமை குடும்பங்கள்-வறுமைக்கோட்டுக்கு கீழ்). 1,66,142 மஞ்சள் அட்டைகள் (வறுமைக் கோட்டுக்கு மேல்). புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 515 ரேசன் கடைகள் உள்ளன. கடந்த தேர்தலின்போது, ‘ரேசன் கடைகள் மீண்டும் திறக்கப்படும்’ என்ற அறிவிப்புடன் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ரங்கசாமி வெளியிட்டார். நடைமுறையில் ரேசன் திட்டத்தை நிறுத்திவிட்டு ‘நடமாடும் நியாயவிலைக் கடைகள் ஏற்படுத்தப்படும்’ என்ற வாக்குறுதியுடன் பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். பாஜக ஆட்சி அமைந்தால், ஒவ்வொரு குடும்பத்திற்கு வங்கிக்கணக்கில் 15 லட்சம் போடப்படும் என வாக்குறுதி அளித்து மோடி அரசு ஏமாற்றியதுபோலத்தான், புதுச்சேரியில் பாஜகவும், என்.ஆர்.காங்கிரசும் மக்களை ஏமாற்றிவிட்டன.
காற்றோடு கலந்த ஆளுநரின் வாக்குறுதி
தேசிய கூட்டுறவு அபிவிருத்திக் கழகத்திடம் நிதிஉதவி பெற்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள கூட்டுறவு நியாய விலைக் கடைகளை சூப்பர் மார்க்கெட்டுகளாக தரம் உயர்த்துவோம்! என புதுச்சேரியின் தற்போதைய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவித்தார். அவர் வாக்குறுதி அளித்து ஏழு மாதங்கள் ஓடிவிட்டன. அவர் அளித்த வாக்குறுதி காற்றோடு கலந்துவிட்டது. கடந்த ஆட்சியின்போது ஆளுநராக இருந்த கிரண்பேடி போட்டி அரசாங்கமே நடத்தி ஒன்றிய அரசின் ஏஜெண்டாகவே செயல்பட்டார். அவர் அரிசிக்கு பதிலாக பணப்பட்டுவாடா என்பதை வலுக்கட்டாயமாக அறிவித்தபோது, காங்கிரஸ் – திமுக கூட்டணியின் நாராயணசாமி அரசாங்கம் ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஆனால் ஒன்றிய பாஜக அரசு அரிசிக்குப் பதிலாக பணப் பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டு அமலாக்கியது.
உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களில், ஏழைகளிலே பரம ஏழைக் குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு வழக்கமாக கிடைக்கும் மாநில அரசின் உணவு வழங்கல் திட்டத்துடன், கூடுதலாக ஒன்றிய அரசின் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின்கீழ் உணவு தானியம் வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் 26,000 குடும்பங்கள் அந்தியோ தயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு, மாநில அரசு வழங்கி வந்த இலவச அரிசி மற்றும் மானிய விலையில் பருப்பு, பாமாயில், சக்கரையுடன், ஏஏஒய் (AAY) திட்டத்தின் கீழும் கூடுதல் தானி யத்தைப் பெற்று வந்தன. மேலும், கொரோனா காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வருமான வரி விளிம்புக்குள் வராத குடும்பங்களுக்கு மாதம் 7500 ரூபாய் வழங்க வேண்டும்; உணவு தானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துப் போராடியது. சர்வதேச அளவில் பேரிடர் காலத்தில் மக்களுக்கு உணவு தானியங்கள், நேரடி பணப்பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. இதனால் ஒன்றிய அரசு, கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் நபருக்கு தலா 5 கிலோ அரிசி விநியோகத்தைத் தொடங்கியது. புதுவையில் அரிசிக்குப் பதில் பணம் என்ற திட்டம் அமலுக்கு வந்த பிறகு, அந்தியோ தயா அன்னயோஜனா திட்டம், கரீப் கல்யாண் திட்டத்தைத் தவிர, மாநில அரசின் ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டம் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. சிவப்பு அட்டை தாரர்களுக்கு தற்போது கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் கிடைத்துவரும் ஒன்றிய அரசின் 5 கிலோ அரிசி, வரும் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே கிடைக்கும்.
உணவு பெறும் உரிமை மறுப்பு
தேர்தல் அறிக்கையில் ரேசன் பொருட்கள் வழங்குவோம் என வாக்குறுதி வழங்கும் பாஜக-என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி அரசு, நடைமுறையில் மக்கள் படும் துயரங்களைக் கண்டுகொள்ளாது, அவர்களுடைய உணவு பெறும் உரிமையைக் கூட மறுத்துவருகிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் கிரண்பேடி விதி முறைகளை மீறி, பாஜக கட்சியின் மூன்று நபர் களை நியமன உறுப்பினர்களாக்கி சட்ட சபையில் பாஜகவுக்கு பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்திக்கொடுத்தார். இந்த உறுப்பினர்களோடு விலைக்கு வாங்கிய உறுப்பி னர்களின் ஆதரவோடு, காங்கிரஸ் ஆட்சியை பாஜக கலைத்தது. காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தவரும், சபாநாயகராக இருந்தவரும், இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் விலைக்கு வாங்கப்பட்டு பாஜக வில் இணைந்தார்கள். அடுத்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக- என்.ஆர். காங்கிரஸ் 16 சட்டமன்ற இடங்களைப் பெற்ற தோடு, ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட மூன்று பாஜக நியமன உறுப்பினர்களோடு பாஜக கூட்டணி அமைச்சரவையை ஏற்படுத்தி ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாகி வருகிறது.
ஒரு புறம் கடந்த மூன்றாண்டுகளாக ரேசன் கடைகளை மூடிவைத்து, ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, நியாய விலையில் பாமாயில், பருப்பு, சர்க்கரை கிடைக்க விடாமல், பாஜக பட்டினி போட்டு வதைத்து வருகிறது. மறுபுறம் புதுவை முழுக்க பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. உணவின்றி மக்கள் தவிப்பதைக் கண்டுகொள்ளாமல் தனது கட்சியை வளர்ப்பதிலேயே பாஜக குறியாக இருக்கிறது.
முற்றாக நிறுத்த சதி
2018இல் இந்தியாவில் சில மாநிலங்களில் அரிசிக்குப் பதில் நேரடி பணப்பட்டு வாடா என்ற திட்டத்தை பரீட்சார்த்த முறையில் ஒன்றிய அரசாங்கம் செயல்படுத்தத் தொடங்கியபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இயக்கங்கள் போராட்டம் நடத்தியதால் சில மாநிலங்களில் விலக்கிக் கொள்ளப்பட்டது. இருப்பினும் சண்டிகர், புதுச்சேரி, தாதர் நாகர் ஹவேலியில் அமலில் உள்ளது. ரேசன் பொருட்களுக்குப் பதிலாக பணப்பட்டுவாடா எனச் சொல்வதன் நோக்கமே உணவு மானியத்தை காலப்போக்கில் முற்றாக நிறுத்துவதே என்பதை சிலிண்டர் விலை மானிய நிறுத்தம், மற்றும் புதுச்சேரி பணப்பட்டுவாடா திட்டம் நிறுத்தம் ஆகியவற்றில் இருந்து நம்மால் அறிய முடிகிறது. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த அதானி ஐந்தாவது இடத்திற்கு வந்து, தற்போது நான்காவது இடத்திற்கும் முன்னேறிவிட்டதாக ஒரு ஆய்வு கூறுகிறது. அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் கம்பனிகளுக்கு கோடிகோடியாக சலுகை அளிக்கும் பாஜக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மறுக்கிறது.
ரேசன் கடைகளை திறந்திடுக
1.புதுவையில் மூடப்பட்ட ரேசன் கடைகளை திறந்து, தரமான இலவச அரிசி மற்றும் மானிய விலையில் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்களை வழங்க வேண்டும். 2. முறைசாரா தொழிலாளர்கள், நிரந்தர வருமானம் அற்றவர்கள் உள்ளிட்ட தகுதி உள்ள அனைவருக்கும் சிவப்பு குடும்ப அட்டை வழங்கிட வேண்டும். சிவப்பு அட்டைக்கு மாதம் 20 கிலோ இலவச அரிசியும், மஞ்சள் அட்டைக்கு மாதம் 10 கிலோ இலவச அரிசியும் முன்பு போல வழங்கிட வேண்டும். 3. புதுச்சேரி அரசின் இலவச அரிசிக்கு பணம் வழங்கும் திட்டம் கடந்த 15 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு 9000 ரூபாயும், மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4500 ரூபாயும் வழங்கப்படாமல் உள்ளது. இந்தப் பணத்தை வழங்கிட வேண்டும் அல்லது அதற்குப் பதிலாக தரமான உணவு தானியங்கள் வழங்கப்பட வேண்டும். என்ற கோரிக்கைகளை முன்வைத்து, வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி புதுவையில் சட்டமன்ற வளாகத்திற்கு முன்பாக, என்.ஆர் காங்கிரஸ் -பாஜக கூட்டணி அரசை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காத்திருப்புப் போராட்டத்தை நடத்த இருக்கிறது.
நூல் அறிமுகம்: பி.என்.எஸ்.பாண்டியனின் ஊரடங்கு உத்தரவு புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு – ச. சுப்பாராவ்
புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு
வரலாற்றை எழுதுவது மிகவும் சிரமமான வேலை. மிகப் பழங்காலத்து வரலாறு என்றால் அது குறித்து போதிய தகவல்கள் கிடைக்காது. கிடைக்கும் தகவல்களை எந்த அளவு நம்புவது, நம்பாமல் இருப்பது என்பதும் மற்றொரு பிரச்சனை. சமீபத்திய வரலாற்றை எழுதுவதில் வேறுவிதமான பிரச்சனை வரும். ஏராளமான தரவுகள் கிடைக்கும். எதை எடுத்துக் கொள்வது, எதை தள்ளுவது என்பது பிரச்சனையாக இருக்கும். மற்றொன்று சமீபத்திய வரலாறு எனும் போது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களே சிலர் இன்னும் நம்மிடையே இருக்கக் கூடும்.
நேரில் பார்த்தவர்கள், அது குறித்து படித்து அறிந்தவர்கள், சொல்லக் கேட்டவர்கள் என்று ஏராளமான ஆட்களின் நினைவுகளில் அந்த வரலாற்று நிகழ்வு பசுமையாகப் படிந்திருக்கும். அதை ஆவணப்படும் போது மிக மிக அதிகமான கவனம் தேவைப்படும். அப்படி மிகக் கவனம் எடுத்து ஆவணப்படுத்தும் வரலாற்று நூல்களே இன்றைய தலைமுறைக்கும், எதிர்காலத் தலைமுறைக்கும் வரலாற்றை எடுத்துச் சொல்லும் வாயில்களாக நிற்கின்றன. அத்தகையதொரு நூலை சமீபத்தில் படிக்க நேர்ந்தது ஒரு இனிய அனுபவம். செய்தியாளர் பி.என்.எஸ்.பாண்டியன் அவர்கள் எழுதிய ஊரடங்கு உத்தரவு என்ற நூல்தான் அது.
புதுச்சேரி தமிழகத்தோடு ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டினருக்கு புதுச்சேரி என்றால் மிக மேலோட்டமாக பாரதியார், அரவிந்தர், மது, கேபரே என்று ஒரு சில விஷயங்கள் மட்டுமே நினைவிற்கு வரும். புதுச்சேரி பற்றி பெரிதாக அக்கறை காட்டாத தமிழர்களுக்கு இந்தப் புத்தகம் சொல்லும் வரலாற்றுச் செய்தி மிக வியப்பானதாகக் கூட இருக்கும்.
1979ல் பிரதமர் மொரார்ஜி தேசாய் புதுச்சேரியை தமிழகத்தோடு இணைக்க விரும்புவதாக சொல்லப் போக, புதுச்சேரி முழுவதும் அரசியல் வேறுபாடு கடந்து அதற்கு எதிராகப் போராட்டம் நடக்கிறது. ஊரடங்கு உத்தரவு, துப்பாக்கி சூடு என்று பெரிய அளவில் நடக்கும் போராட்டம் பத்து நாட்கள் கழித்து மொரார்ஜி தான் கூறியதைத் திரும்பப் பெற்றதோடு முடிகிறது. இந்தப் போராட்ட வரலாற்றின் பதிவே இந்த 256 பக்க நூல்.
வெறும் பத்து நாட்களின் கதையாக இல்லாமல் புதுச்சேரியின் சுதந்திரப் போராட்ட வரலாறு, அங்கு ஒவ்வொரு அரசியல் கட்சியும் வளர்ந்த விதம், புதுச்சேரிக்கும் பிரான்ஸிற்கும் உள்ள கலாச்சாரத் தொடர்பு, அதன் காரணமாக இன்றும் புதுச்சேரியில் நிலவும் ஒரு தனித் தன்மை கொண்ட கலாச்சாரம், அந்தக் கலாச்சாரம் குறித்து அந்த மக்களின் பெருமித உணர்வு, எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கிறார் பாண்டியன்.
இந்த நூலின் மிகப் பெரிய பலமே, எந்த சார்பு நிலையும் எடுக்காது உள்ளது உள்ளபடி அப்படியே வரலாற்றைப் பதிவு செய்திருப்பதுதான். போராட்டக் களத்தில் நின்று போராடிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கூற்றுகள் அப்படியே பதிவாகி உள்ளன. புதுச்சேரி இணைப்பு தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் நடந்த விவாதங்கள், உள்துறை அமைச்சரின் பதில்கள் எல்லாம் அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளன. பின்னிணைப்பாக உள்ள பிரெஞ்சிந்திய புதுச்சேரி – ஒரு பார்வை என்ற கட்டுரை மிக முக்கியமானது. பிரபஞ்சனின் முன்னுரையும், திருமாவேலனின் அணிந்துரையும் புத்தகத்திற்குள் நாம் நுழைய நம்மைத் தயார்படுத்துகின்றன.
நூலில் குறிப்பிடப்படும் இந்தப் போராட்டம் நடந்த காலத்தில் நூலாசிரியர் ஐந்து வயது சிறுவனாக இருந்திருக்கிறார். இந்தப் போராட்டம் குறித்து அவ்வப்போது கேள்விப்பட்டதை வைத்து மிக விரிவாக ஆய்வு செய்து இந்த நூலைப் படைத்துள்ளார்.
ஒற்றைத் தலைமை, ஒற்றைக் கலாச்சாரம், இந்திய சமூகத்தின் பன்முகத் தன்மைகளை ஏற்க மறுப்பது போன்ற பல்வேறு மோசமான அம்சங்கள் தலைதூக்கும் இக்காலகட்டத்தில் இந்தியாவின் மிகச் சிறிய ஒரு யூனியன் பிரதேசத்தின் மக்கள் தமது தனித்தன்மைக்கு ஆபத்து வந்த போது அத்தனை வேறுபாடுகளையும் மறந்து ஒன்றுபட்டு போராடி, ஒன்றிய அரசின் பிடிவாதப் போக்கை மாற்றி, அதைப் பணியச் செய்த வரலாற்றைச் சொல்லும் இந்த நூல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
எழுத்தாளர் பிரபஞ்சனின் இறுதிநாட்களில் அவர் கூடவே இருந்து கவனித்துக் கொண்டவரான சிறந்த இலக்கியவாதியான பி.என்.எஸ்.பாண்டியன் இந்த நூலின் வழியே ஒரு சிறந்த வரலாற்று ஆய்வாளராகவும் உருவெடுத்திருக்கிறார்.
அவருக்கு எனது வாழ்த்துகள்.
நூல்: ஊரடங்கு உத்தரவு புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு
ஆசிரியர்: பி.என்.எஸ்.பாண்டியன்
வெளியீடு: வெர்சா பேஜஸ் வெளியீடு.
விலை: ரூ200. 00
பக்கங்கள்: 256





