புதுக்கோட்டை புத்தகத் திருவிழா அழைப்பிதழ் – 2022
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா அழைப்பிதழ் – 2022
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா அழைப்பிதழ் – 2022
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 5 -ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி இன்று புதுக்கோட்டை மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் குறும்படப் போட்டிகள், கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்றது.
போட்டிகளை கவிஞர் தங்கம்மூர்த்தி தொடங்கி வைத்தார். கவிஞர் முத்துநிலவன், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவர் கே.சரவணன், அரசு மகளிர் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முத்தமிழ், எம்எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சிமைய விஞ்ஞானி முனைவர் ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்வில், அரசு வழக்கறிஞர் செந்தில்குமார், மகாத்மா பள்ளி தாளாளர் ரவிச்சந்திரன், ஆசிரியர் குமரேசன், சதாசிவம், பேராசிரியர் பிச்சைமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.
ஜெ.ஜெ.கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் முனைவர் கோவிந்தன், அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த எல் .பிரபாகரன், நேருயுவ கேந்திரா பொருளாளர் நமச்சிவாயம் ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டிகளை நடத்தினர். போட்டிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகளிலிருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் பேச்சுப் போட்டியில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி மாணவிகள், ரா.பபிதா முதல் இடத்தையும், வீ. ஜெயலெட்சுமி இரண்டாம் இடத்தையும் மெளன்ட் சியோன் கல்லூரியின் ர.அரவிந்த் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். பிற போட்டிகளுக்கான முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என நிர்வாகிகள் அறிவித்தனர்.
போட்டிகளை வாசகர் பேரவை செயலர் சா.விஸ்வநாதன், மகளிர் கல்லூரி பேராசிரியர்கள் முத்தமிழ், யோகாம்பாள் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். முன்னதாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலர் வீரமுத்து வரவேற்றார். போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
நன்றி: தமிழ்மணி நியூஸ்
புதுக்கோட்டையில் 5-வது புத்தகத் திருவிழா வருகின்ற ஜூலை 29 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்த ஆண்டும் புத்தகத் திருவிழாவை நடத்த திட்டமிட்டனர்.
நூல் விருதுகள் – இணையத் தமிழ் எழுத்தாளர்க்கு விருதுகள் – அறிவிப்பு
ஐந்தாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா-2022ஐ முன்னிட்டு சிறந்த நூல்களுக்கான விருதுகள் வழங்கும் அறிவிப்பு வந்துள்ளது
இதில் முக்கியமாக, உலக சமூக வலைதளக் காட்சிகளில் முதன்முறையாக(?) இணைய எழுத்தாளர்க்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வலைப் பக்க எழுத்தாளர்கள் வருக.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமிகு கவிதா ராமு இஆப அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 5ஆவது புதுக்கோட்டை புத்தகத்திருவிழா ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7, 2022 வரை பத்துநாட்கள் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறவுள்ளது.
இப்புத்தகத் திருவிழாவினையொட்டி மாணவர்க்கான கலை இலக்கியப் போட்டிகள், புத்தகப் பேரணிகள், புதுக்கோட்டை வாசிக்கிறது போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஐந்தாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் 2020, 2021ஆகிய இரண்டு ஆண்டுகளில் தமிழில் வெளியான சிறந்த நூல்கள் மற்றும்
இணையத்தில் வெளியான படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு புத்தகவிழா மேடையில் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
கீழ்க்கண்டவாறு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
கவிதை பிரிவில் மரபுக் கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை ஆகிய மூன்று விருதுகள்
கட்டுரை – அரசியல், சமூகம், வரலாறு, அறிவியல் மற்றும் கல்வி சார்ந்த கட்டுரை நூல் ஒன்றிற்கும், கலை இலக்கியம் சார்ந்த கட்டுரை நூல் ஒன்றிற்குமாக இரண்டு விருதுகள்
சிறுகதை நூல் விருது ஒன்று
நாவல் விருது ஒன்று
சிறார் இலக்கியம் விருது ஒன்று
இணையத்தில் மட்டுமே வெளியாகி நூலாக வெளிவராத, தமிழ்- புனைவு(கதை, கவிதை) படைப்பு ஒன்றிற்கும், அபுனைவுப் (கட்டுரை) படைப்பு ஒன்றிற்கும் என இரண்டு விருதுகள் என மொத்தம் 10 விருதுகள் வழங்கப்படவுள்ளன.
தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு விருதுக்கும் ரூ 5000 பரிசுத்தொகையும், பாராட்டுச்சான்றிதழுடன், விருதுப் பட்டயமும் 29-7-2022 – 07-8-2022 பத்துநாள் புதுக்கோட்டை புத்தகவிழாவில் விழா மேடையில் வழங்கப்படவுள்ளது.
மேற்படி விருதுகளுக்கான பரிசீலனைக்கு – பதிப்பகத்தார், படைப்பாளிகள் மற்றும் வாசகர்கள் தங்கள் நூல்களையும், தாங்கள் பரிந்துரைக்கும் நூல்களையும் அனுப்பி வைக்கலாம்.
நூல்களின் 3 பிரதிகளை அனுப்ப வேண்டிய முகவரி-
எழுத்தாளர் ராசி.பன்னீர் செல்வன்,
தலைவர் – விருதுக்குழு,
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா-2022,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில்,
புதுக்கோட்டை-622001
என்ற முகவரிக்கு 12-7-2022 க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
(அனுப்பிய நூல்கள் கிடைத்த விவரத்தைக் கேட்க –9486752525)
இணையப் படைப்புகளின் இணைப்பினை rasipanneerselvan@gmail.com என்ற
மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முக்கியமான குறிப்புகள்
படைப்புகள் வந்துசேர வேண்டிய கடைசித் தேதி 12.07.2022 படைப்புகள் மேற்குறிப்பிட்ட காலத்தில் முதல்பதிப்பாக வெளிவந்ததை உறுதிசெய்ய வேண்டும்.
தேர்வு பெற்றோர் விவரம் ஊடகவழியும், விருது பெற்றோர்க்கு செல்பேசி, மின்னஞ்சல் மூலமும் தெரிவிக்கப்படும். நூல்களை அனுப்பியபின், கிடைத்த விவரம் கேட்டுத் தெரிந்து கொள்வதன்றி, விருதுத் தேர்வு அறிவிப்புகள் வரை எந்தத் தொடர்பும் விரும்பத்தக்கதல்ல.
நன்றி: நா.முத்துநிலவன் வலைப்பக்கம்