முட்டாள் கண்ணாடி கவிதை – க. புனிதன்
எதுவெல்லாம் அழகு
************************
கஞ்சன் வீட்டுப்
பெரிய பூக்கள் அழகு
ஊதாரி வீட்டுச்
சின்னப் பூக்கள் அழகு
ஆட தெரியாதவளின் வீட்டு
ஒயிலான பூக்கள் அழகு
நர்த்தகி வீட்டு
மயில் மாணிக்கம் கொடிப் பூக்கள்
அழகு
கோழையை வீரனாக்கும்
பூக்கள் அழகு
மத்தியானத்தை
தியானம் ஆக்கும்
பூக்கள் அழகு
போர் செய்திகள்
*********************
விளையாடிவிட்டு
வரும் போது
சொற்களை அழுக்காகி
கொண்டு வருகிறாள் பாப்பா
போர் செய்திகள் கேட்டு
பயத்தில்
அதிகம் சாப்பிட்டு
குண்டாகிக் கொண்டே
போகிறாள்
மின்மினி போல்
துலக்கி வைத்ததாய்
இருந்தன அவள் சொற்கள்
கோழிக் கொண்டைப் பூக்களுக்கு
நிக்கா ஆயிருந்தன
இரு சிட்டுக்குருவிகள்
பேசுவதை
மௌனம் எனவும்
நெல் திணையை
அம்மா கையால்
தேய்க்கும் பொழுது
சொற்கள் பேசுவதையும்
அறிந்து வைத்திருந்தாள்
– க. புனிதன்
விபத்து
***********
எப்போதாவது
எதோ சொல்ல வந்தியே
என்னவென்று கேட்கிறாள்
எப்போதாவது
பலூன் வாங்கித் தரச் சொல்லும்
குழந்தையைப் போல்
அடம் பிடிக்கிறாள்
எப்போதாவது
ஜானி நாய்க்கு
என்னாச்சு என்பது போல்
அதிர்ச்சியாய் குறுக்கிடுகிறாள்
விபத்தில் இறந்த
அப்பாவின் நினைவில்
வாழும் அம்மா
நிறங்களின் உணர்ச்சி
******************************
பழைய சாதமும்
பச்சை மிளகாய் போலவும்
ஓவியம் கண்டதில்லை
குயிலின் ஓசையில்
மலர்கிறது
வண்ணப் பூக்கள்
ஒவ்வொரு கீரையும்
ஒவ்வொரு நிறம்
இருட்டின் ஞாபகம்
பகல்
வெளிச்சத்தின் மறதி
இரவு
என் இசையின் கவனம்
என்பது
மக்கிய சாணம் முளைத்த
புற்கள் வண்ணம்
தவளைகள்
மூடர் கூட்டத்தின் நிறமல்ல
முயல் இடும்
புழுக்கையின் நிறம்
கோடையில் பசுமையாகும்
கொக்கின் கண்கள்
வற்றிய குளத்தில்
சேத்து குரவை மீன்கள்
சிவந்த இளம்
கொடுக்காய் புலி காண்கையில்
துறவியின் உணர்ச்சி
ரொம்ப நாளைக்குப் பிறகு
ஒரு வண்ணத்தை
அரக்கு நிறமென
அறிமுகபடுத்தினார் குரு
உயிர் வாதையோடு
இறந்த மூட்டை பூச்சியின்
நசுக்கிய குருதி நிறமது
க. புனிதன்
நத்தை உணர்ச்சி
**********************
மாடு பிடித்து வருகையில்
எண்ணெய் தடவி
படிய வாரிய தலையில்
அழகு உணர்ச்சியும்
பட்டாம் பூச்சியின் கவனம் போல்
தோசை சட்டியை
கவனமாக கையாளும் போதும்
கேரட்டை முயல் கடிக்கும் சப்தத்தில்
ஸ்கூட்டர் ஓட்டும் பொழுதும்
பேசிக் கொண்டிருக்கையில்
காலின் பெரு விரலை
நாணத்தால் மடக்கும் பொழுது
உண்மையில்
ஆமைக்கும் நத்தைக்கும்தான்
போட்டியோ என
எண்ணத் தோன்றுவதும்
பெண்ணே
உன் அறிவு உணர்ச்சியை
வியக்கிறேன்
புத்தயாயணம்
******************
புத்தனே
உன் சொற்களில்
இசை இல்லை
நீரோடையின் ஓசை இருக்கிறது
லயம் இருக்கிறது
உன் சொற்களில்
எதுகை மோனை இல்லை
கவிதை இருக்கிறது
உன் சொற்களில்
ஓவியம் இல்லை
பூ பூத்த வண்ணம் இருக்கிறது
உன் சொற்களில்
வனம் இல்லை
இளைப்பாறுதல் இருக்கிறது
உன் சொற்களில்
பறவை இல்லை
வானம் இருக்கிறது
உன் சொற்களில்
காதல் இல்லை
தன் நேசம் இருக்கிறது
க. புனிதன்
கண் இமைகள் தாழ்த்தி
சோகத்தில் கண்ணுற்று
இருக்கும் துறவி போல்
மழைத்துளிகள் பெய்யும்
பொழுதில்
கடைசி இலை விழ
காத்திருக்கும்
இலை உதிர் மரம்
இலை உதிர் காலத்தை
நினைவுபடுத்தும்
மஞ்சள் நிறத்திலும்
வசந்த காலத்தை
நினைவு படுத்தும்
சிவந்த நிறத்திலும்
வர்ணம் பூசப்பட்டிருக்கும்
அம் மலைப் பகுதி பள்ளியில்
மழை மேகங்கள் எப்பொழுதும்
மன பாடம் இல்லாத பகுதியில்
இருக்கின்றன
இலை உதிர் காலம்
முழுவதையும்
கிடோ எனும் மொழியில்
தெரிந்து வைத்திருக்கிறது
சிட்டுக்குருவி
இந்த இலை உதிர் மரங்களா
மேகத்தை திரட்டி
மழையாய்ப் பெய்து
கடலாய் உருவாகின்றது
என நினைத்தால்
ஆச்சரியமாய் இருக்கின்றது
நான் பாலைவனத்தில்
விதை போல்
இசைக்கேற்ப
தலை அசைக்கிறான் திருடன்
தென்னை மரத்தில்
முற்றி விழுந்த
காமம்
யாமம் காமம்
இரண்டும் அறிந்த
நெல் பயிர் வண்டு
நத்தையின்
உடல் கவர்ச்சி
சிற்றிடை கொண்ட
சிற்றெறும்பு
பின் நயனம் தூக்கிய
கட்டெறும்பு
அன்பே ஆருயிரே
எனக் கொஞ்சும்
தென்னை மரக் கிளிகள்
ஈருடல்
ஓர் உயிராய் கிளைத்த
இரு தட்டான்கள்
சிற்றின்பத்தைப்
பேரின்பமாய்க்
காண்பது
ஜீவிதம்