Meendum Manjapai Poem By Sakthi மீண்டும் மஞ்சப்பை கவிதை - சக்தி

மீண்டும் மஞ்சப்பை கவிதை – சக்தி




கடைவீதி சென்று வர
தாத்தா…பேரன்
இருவரும் முடிவெடுத்து…
காலணி அணிந்து
காலனி தாண்டும் முன்னே
தாத்தா சொன்னார்…

பொருள் வாங்க பையேதும்
எடுக்கலையோ எனக்கேட்க…
“வாங்கும் பொருள் பையுடன்
கொடுக்கும் கடை பல இருக்கு
அங்கெல்லாம் சென்று வர…
நீங்கள் சொல்லும் பையெல்லாம்
தேவையில்லை என்றான் பேரன்…

பல கடைகள் அடங்கிய…
பெருங் கடைக்குள் நுழைந்து…
வேண்டிய பொருள் அத்தனையும்
விருப்பமாய் பேரன் வாங்கிக்கொள்ள
அனைத்தையும்
நெகிழிப் பைக்குள்ளே…
அடைத்து வைத்து…எடுத்து வர…

வரும் வழியில் நெகிழியின் கேடுகளை தாத்தா கொஞ்சம்…
பேரன் காதில் சொல்லி வைக்க…
பேரன் மனம் மாற…முடிவெடுக்க
எல்லா நேரமும் பை தேடி அலைய நேரமில்லை….அப்பப்போ
முயற்சி செய்வேன்…
சொல்லி வைத்தான் பேரன்.

வாங்கி வந்த பொருளையெல்லாம்
அம்மா சரிபார்த்து…முக்கியமான
பொருளொன்னு இல்லையே டா…
எனக் குரலெழுப்ப…

வந்த வேகத்தில்…
மீண்டும் சென்றான்
பொருள் வாங்க…
மறக்காமல் பேரன்
மஞ்சள் பையுடன்!…