எழுத்தாளர் எஸ். காமராஜ் எழுதிய “லாஞ்சனை” சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம்
கவிஞர் வ.ரா. தமிழ்நேசன் எழுதிய “கூடு” கவிதைகள் தொகுப்பு – நூல் அறிமுகம்
நூல் அறிமுகம் செய்வோம் – ரூ.10000 பரிசு வெல்வோம்: கவிஞர் பழநிபாரதி எழுதிய “நிலவு ஒரு கதைசொல்லி” கவிதை தொகுப்பு
கெளதமன் எழுதிய “ஜே கே சார்” – நூல் அறிமுகம்
“மரப்பசு” (Marapasu) அம்மணியும் தி.ஜாவும் – புதியமாதவி
என்ன செய்து தொலைத்தாய்? கவிதை – புதியமாதவி
எரித்தாயா புதைத்தாயா
என்ன செய்து என்னைத் தொலைத்தாய்?
எரிக்கும்போது
தீயின் நாக்குகளில்
பட்டுத்தெறித்த முத்தங்களை
என்ன செய்தாய்?
புதைத்த மண்ணில்
பூத்த பூக்களை விட்டுவிடு.
அந்த வாசனையில்
வாழட்டும்
தீண்டாமையின் காமம்.
என்ன செய்தாய் என்னை?
நீச்சல் பழகிய ஆற்றுவெள்ளத்தில்
மூச்சுத்திணறிய விடுதலை.
இறுகப்பற்றிய விரல்களின்
தீராத பசி.
பார்த்துக்கொண்டிருந்த
ஆற்றங்கரைப் படிக்கட்டுகளில்
இப்போதும்
ஒட்டிக்கொண்டிருக்கிறது
பச்சை மஞ்சளின் நிறம்.
ஹே சென்னிமல்லிகார்ஜூனா..
என்ன செய்தாய் ?
என்ன செய்து
என்னைத் தொலைத்தாய்!
– புதியமாதவி
ருது சம்ஹாரம் கவிதை – புதியமாதவி
நீலகண்ட பறவையைத் தேடிவந்த
காளிதாசன்
தாகத்துடன் அலைகிறான்.
சாதகப்பறவையை விரட்டி அடித்த
சாபமிது.
பட்சி சாஸ்திரம் பொய்த்துவிட்டதால்
புலஸ்தியன் நீராடிய பொய்கை
வற்றிவிட்டது.
காக்கையின் சிறகைத்தொட்டு
வண்ணம் பூசிக்கொண்ட பறவை
நிலவைத் தின்று பசியாறுகிறது.
விசும்பின் துளியாய்
மிச்சமிருக்கும் நினைவுகளில்
காக்கைப்பாடினி பாடுகிறாள்.
விருந்து வருமோ மருந்தாய் ? !
காளிதாசன் கிளையில் தொங்கிக்கொண்டு
அடிமரத்தை அறுக்கிறான்.
தேவியின் தாம்பூல எச்சில் முத்தம்
தாமதமாகிக் கொண்டே இருக்கும்
காத்திருப்புகள்..
தொடரமுடியாமல் “ருது சம்ஹாரம் “
– புதியமாதவி மும்பை
வெள்ளைப்பூக்கள் கவிதை – புதியமாதவி
பறந்து வரும் உன் வானத்தை
தரையில் இருக்கும் கூடுகள்
அச்சத்தோடு எட்டிப்பார்க்கின்றன.
சந்திப்புகளின் காயங்கள் ஆறவில்லை.
கைக் குலுக்க மறுத்த காரணங்கள்
தேச வரைபடங்களில்
கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கின்றன.
உறவின் அர்த்தங்களை அவமானத்தில்
புதைத்த அவன் தேசம்
சமவெளி எங்கும் எந்திர மனிதர்கள்
மத்தாப்பு கொளுத்தி நடனமாடுகிறார்கள்
காயப்பட்டு கண்மூடிக்கிடக்கும் அந்த இரவு
உயிர்ப்பறவையின் படபடப்பு
பிரபஞ்சத்தின் பால்வீதிகள் இருண்டுபோய்
நட்சத்திரங்கள் தடுமாறுகின்றன.
தோழி
அவனை எட்டிப்பார்த்து
காற்றில் முத்தமிட்டு
கரைந்துவிட முடியாமல்
அடங்கிப்போகிறது பரணி.
கண்மூடிய கனவுகளை
அவன் சுடுகாடுகள்
எரிக்குமோ புதைக்குமோ?
யுத்தகளத்தில் மூடாமல் விழித்திருக்கும்
பிணத்தின் கண்களிருந்து
அழுகி நாற்றமெடுக்கிறது
அவன் எப்போதோ கொடுத்த
வெள்ளைப்பூக்களின் வாசம்.








