முகக்கவசம் கவிதை – புதியமாதவி
அவள் பூமிக்கானவள் இல்லை.
இந்த மண்ணில் காலூன்ற முடியாமல்
அந்தரத்தில் அவள்
தொங்கிக்கொண்டிருப்பதற்கு
இதுவும் ஒரு காரணம்.
அவள் வேற்றுக்கிரஹவாசி.
பூமியை ரசிப்பதற்குப் புறப்பட்டு
வந்துவிட்ட பயணி அல்ல அவள் .
திருவிழாவில் தொலைந்துப்போன சிறுமியைப்போல
பால்வீதியில் தொலைந்துப்போனவள்.
இருத்தலுக்காக அவள்
உங்கள் மொழியில் எழுதினாலும்
அதில் இருப்பதெல்லாம்
பூமி அறியாத வாசனை.
அவளைப் புரிந்து கொள்வதில்
உங்கள் தடுமாற்றங்கள் நியாயமானவை.
அகதியான அவள்
குடியுரிமைப் பெறுவதற்காக
உங்களுடன் படுத்து பிரசவித்தப் புதல்வர்கள்
அவள் முலைப்பால் அருந்திய தேசம்
அவள் கருவறை வாசலுக்கு
கம்சர்களைக் காவலுக்கு வைக்கிறது.
மூப்பறியாதவளுக்கு மரணம் உண்டா ?
நட்சத்திரங்களின் கேள்விகளுக்கு
யாரிடமும் பதிலில்லை.
அவளை உயிருடன் எரிக்கவோ
புதைக்கவோ
பிரபஞ்சவிதிகள் திருத்தப்படுகின்றன.
எரி நட்சத்திரங்களின் கருகியவாசனை
மூச்சுத்திணறும் சூரியமண்டலம்
முகக்கவசத்துடன் நீங்கள்.