பெரும் புதிர் கவிதை – ஐ.தர்மசிங்
அந்தக் கூந்தலுக்கு
அழகான பூவைச் சூடும்
தகுதி இல்லையென
பூவைக் கிழித்து வீசுகிறபோதும்
அந்தக் கால்கள்
காலணிக்குள் நுழையும்
தகுதியற்றதென
செருப்புகளைக் கையில்
சுமக்க வைக்கிறபோதும்
அந்த வியர்வைகள்
குளத்தில் கலப்பதற்கு
தகுதி இல்லாதவையென
நீராடத் தடைவிதிக்கிற போதும்
அந்த உடல்
மிதிவண்டியில் பயணிக்கும்
தகுதியற்றதென
மிதிவண்டியைத் தள்ளவைக்கிற போதும்
கல்விக் கூடத்தில்
ஒரே வரிசையில் அமரும்
தகுதி இல்லையென
தரையில் அமர வைக்கிற போதும்
அந்த உதடுகளுக்குப்
பொதுக் குவளையில்
தாகம் தணிக்கும்
தகுதி இல்லையென
தனிக் குவளையில்
நீரூற்றுகிற போதும்
அந்தக் கரங்களுக்கு
சத்துணவை பள்ளியில்
சமைக்கும் தகுதி இல்லையென
ஆக்கிய உணவை
நிராகரிக்கிற போதும்
அரசுப் பேருந்தில்
அருகில் அமரும்
தகுதி இல்லையென
ஒதுங்கி நிற்கவே
அனுமதிக்கிற போதும்
கோயில் வாசலில்
கடவுளை வழிபடும்
தகுதி இல்லையென
வழிபாட்டைத் தடுத்து
நிறுத்துகிற போதும்
மரணித்த உடல்
அந்தப் பாதையில் போகும்
தகுதி இல்லையென
சவ ஊர்வலத்தை
திருப்பி அனுப்புகிற போதும்
அந்த நாவுகளுக்குக்
கேள்வி கேட்கும்
தகுதி இல்லையென
நீண்ட சுட்டு விரலைத்
துண்டாடுகிற போதும்
அந்த முகத்திற்குக்
காதலிப்பதற்கான
தகுதி இல்லையென
துண்டு துண்டாக
வெட்டி வீசுகிறபோதும்
உச்சத்தில் நிற்கும்
மனங்களின் ஒவ்வாமை
அந்த உடல்கள் மீது நிகழ்த்தும்
வன்புணர்வில் மட்டும்
கடுகளவும்
தீட்டின் கறைபடாமல்
மீண்டும் நிமிர்கிறதே
அந்த நேரம் மட்டும்
மலர்ந்து மடியும்
புனிதம் தான்
பெரும் புதிர்…