குறும்பட விமர்சனம்: இந்திரனின் ராணி – பாரதிசந்திரன்
தீராத பசியுடன் நிலைகொள்ள முடியாத வெறியுடன் ஓடித்தீரும் ஓட்டமிது. வசமான பாதையில், நீரோட்டங்கள் சுழன்று வெள்ளமெனப் புரண்டோடுகின்றன எல்லாவற்றையும் வாரிச் சுருட்டியபடி.
நெடிய வரலாற்றில், பதிவுகள் பதிவுகளாகவே இருந்து விடுவதில்லை, அவை திருப்பி வரலாற்றிற்கான பாதைகளை உருவாக்கி மலர்கின்றன.
அதைத்தான் இந்திரனின் ராணி குறும்படம் புராணப் பின்னணியுடன், நவீனகாலப் புனைவுகளை நிகராக்கி ஒரு புதுவிளையாட்டைப் பின்னிப் பிணைந்து விளையாட ஆரம்பத்திருக்கிறது.
மூன்று மணிநேரப் படத்திற்கான கதையை அரைமணி நேரத்திற்குள் அடைக்க முடிந்திருப்பது ஒரு பெரும் சாதனைதான். இரண்டு வெவ்வேறு தளங்களின் மையத்தைச் சுட்டும் ஒரு கோட்டின் நீள்பாதை அழகான திரைக்கதை மற்றும் காட்சிக் கோப்பு பிரமிக்க வைக்கிறது.
நெருடலற்ற புரிதலுக்கு உதவும் வசனங்கள். புராண வரலாற்றுப் பின்னணியையும், நிகழ்காலச் சித்திரிப்புக்களையும் கொஞ்சம் கூடச் சளிப்பில்லாமல் பார்ப்பவர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கின்றது.
குறும்படத்தின் வெளித்தோற்றம் ஒன்று, ஆனால், மறைத்துக் கூறப்பட்ட உள்தோற்றம் வேறொன்று. இதைப் பார்ப்பவர்களால் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது என்பது தான் இக்குறும்படத்தின் மாபெரும் வெற்றி.
வெளித்தோற்றக் கதை:- போதிமர் ரௌடிக் கும்பலின் தலைவன். ஆனால், தொழிலில் நீதி தவறாதவன். இவனின் மகள் இந்திராணி. போதிமரிடம் வேலை பார்ப்பவர்களில் முக்கியமானவர்கள் இந்திரனும். கிருஷ்ணனும் மற்றும் பாரியும், விநாயகமும் போதிமரின் கொள்கைகளுக்கு மாறாகக் கிருஷ்ணன் பல வேலைகளைச் செய்கின்றான். மேலும் போதிமரின் மகள், இந்திரனை விரும்புகிறாள் என்று தெரிந்தும், தனக்குத் திருமணம் ஆகிக் குழந்தை இருந்தும் பெண்போய்க் கேட்கிறான். போதிமரோ கிருஷ்ணன் தவறு மேல் தவறு செய்தாலும் அவனைக் கண்டித்து அனுப்பி விடுகிறார்.
இந்திரனுக்கும் இந்திராணிக்கும் தமிiழ் முறைப்படித் திருமணம் நடக்கிறது. கிருஷ்ணன் போதிமரைக் கொன்று ரௌடிக் கும்பலின் மாபெரும் தலைவனாகிப் பணக்காரனாகின்றான். இந்திரனின் நண்பர்களில் பிடித்து மறைத்து வைத்துத் தனக்கு அடிமையாகி வேலை செய்யும்படி நிர்பந்திக்கின்றான். ஆனால் இந்திரன் சாமார்த்தியமாய்க் கிருஷ்ணனை மாட்டி விடுகின்றான். எப்படி இதைச் செய்தான் என்பது தான் அழகான முடிவு.
உள்தோற்றக் கதை:- நமது சமூகப் பின்னணியில் மதங்கள், பூர்வீகக் குடிகளோடு பெருகிப் பெரும் வீச்சைக் கொண்டிருக்கும் சமயத்தில், வேறொரு இடத்திலிருந்து வந்தவொன்று பழைமைக்குள் ஊடுருவி பழைமைகளை அழிப்பதும், தானே முன்னிலை பெற்றதும் வரலாறு.
அதே போல் தான் பூர்வகுடிகளான இம்மண்ணின் மைந்தர்கள். அவர்கள் நிலையான கொள்கை, கோட்பாடுகளுடன் வாழ்ந்தனர். அவர்களிடம் நீதியும் நேர்மையும் இருந்தன. ஆனால், இவர்களிடையே புகுந்து இவர்களுக்காக வேலை செய்வதாக நடித்து, நம்ப வைத்துத் தலைமையைக் கொன்று குவிக்கவும் செய்தவர்கள் தன்னை மேல்தட்டு எனக் கூறிக் கொண்டனர்.
சூதும் வாதும் செய்து பெரும் செல்வாக்கைப் பிடித்தவர்கள். நாட்டின் மைய முதுகெலும்பை ஒடித்து எறிய நினைத்தார்கள். அவர்களின் சூழ்ச்சியால், அடிபணிய வேண்டிய சூழ்நிலையில் பூர்வீகக் குடிகள் இருந்தார்கள்.
மதம், சாதி, நாடு. வேற்றினம் எனும் குறியீடுகள் தொன்மக் கதையான இந்திரனின் கதையோடு ஒத்து ஒப்புமையாக்கப்பட்டுள்ளன. அயோத்திதாச பண்டிதரின் இந்திரனின் கதை குறித்த ஆராய்ச்சிகளும் வெளிப்படுத்துதலும் இக்கதைக்கான அடித்தளமான ஒன்றாகத் திகழ்கிறது.
இந்திரன் மாபெரும் கடவுளாக மதிக்கப்பட்ட தமிழக மண்ணில் இன்று அக்கடவுளுக்குக் கோயிலே இல்லை. அக்கடவுளை வணங்கிப் பல நாட்கள் திருவிழா நடத்திய இம்மண்ணில் இந்திரனின் சிலைகளோ கோயில்களில் இல்லை. இதற்குப் பின்புலத்தில் நடந்தவைகள் தான் என்ன?
ஏன் இந்திரனைக் காமக்கடவுளாக மாற்றினார்கள்? ஆயிரம் கண்களையுடைய அசிங்கமான தோற்றமுடையவன் என அருவருக்கச் செய்தவர்கள் யார்? இந்திரவிழா எடுத்த செய்தியைச் சிலப்பதிகாரம் பேசுகிறது. காமன் திருவிழா என்று நாட்டர் வழக்காற்றியல் பாடல்கள் பழமை பாராட்டுகின்றன. ஆனால்? இந்திரனை மறைத்த மாபாதகன் யார்?
இவைதான் இக்குறும்படம் நமக்குள் விதைத்திருக்கும் கேள்விகள்.
இதற்கான வரலாற்றைத் தேடினால், நம்மை ஏமாற்றி வேறுதிசைகளுக்கெல்லாம் சென்றலைய வைத்துக் கிறுக்கு நிலைக்கு மாற்றியிருக்கிறார்கள் என்ற சூழ்ச்சி நமக்குத் தெரிய வரும். அதை நோக்கிப் பயணிக்க இக்குறும்படம் உதவுகின்றது.
மேலைநாட்டுக் குறுப்படங்களைத் தொட்டுத்தமிழிலும் நிறையக் குறும்படங்கள் எடுக்க ஆரம்பித்து விட்டனர். அதில் இக்குறும்படமும் ஒன்று.
குறும்படச் சிறப்பு:
தமிழர் திருமணம் என்பதை ஆழமாக ஆய்வு செய்து 3000 ஆண்டுக்கு முந்தைய நமது பாரம்பரிய முறையிலான திருமண முறைகளைக் காட்டி இருப்பது மிக அருமையான காட்சியாகும். பெண் தனக்கு விருப்பமான ஆணிற்கு மாலையிட்டுத் தேர்வு செய்யும் முறை மற்றும் திருமண நிகழ்வுகள் அனைத்தும் தொன்மப் படிவ வெளிப்பாடுகளாகும்.
நான்கு வர்ணப் படை. வேத நூலைக் காட்டி மயக்குதல், சமூகநீதி, தொன்மை இவற்றை மறைத்து வைத்து வழிக்கு வர வைத்தல், ஒரே நாடு ஓரே தலைவன் என்பது, அடையாளக் குறிகளோடு வெளிப்படுவது, சின்னங்களைத் தரித்து மேம்பாட்டை உணர்த்துவது, கடல் எனும் நிற வெளிப்பாடு, தலைவனின் ஆடைக்குள் நிறக் குலக்குறி, நிலமற்ற உயரத்தில் விடுதலை வேள்விக்கான வட்ட இருப்பிடத்தில் ஆலோசனை, வெள்ளை யானை, போன்ற படிமக் குறியீடுகள் இயக்குநரின் ஆழமான வரலாற்று அறிவைப் பொதுவெளிச் சமூகத்துக்குக் காட்டுகின்றன.
ஒவ்வொரு காட்சியிலும் அடிமைத்துவத்தின் வடுக்களின் பிளிரல் சத்தங்கள் ஓவென்று கதறுகின்றன.
இசை மிக நுணுக்கமாகப் படத்தில் கையாளப்பட்டுள்ளது. பின்னணி இசையின் உழைப்பால் பிரமாண்டத்தைத் தொட்டிருக்கிறது இக்குறும்படம். வானிலிருந்து எடுக்கப்பட்ட கேமராக் காட்சிகள் கன கச்சிதமாகப் பேசுகின்றன. வேறு வேறு கோணங்களில் புதிய வடிவில் காட்சிகள் மிளிர்கின்றன.
காட்சிகளுக்குள் நிறைந்திருக்கும் நிறங்கள் கூட, கதையில் கதாபாத்திரங்களாகும் நுணுக்கம் கையாளப்பட்டுள்ளன.
கடற்கரையில் கடைசியாக இரு நூல்களில் ஒன்று அதாவது நான்கு வருணம் நீருக்கடியில் அமிழ்ந்து கிடக்கும். இன்னொரு நூலைக் கடல் நிலத்திற்குள் கொண்டுவந்து தள்ளும். இதுதான் இயக்குநர் இவ்வுலகிற்குத் தரும் செய்தியாகும்.
நிலைத்து நிற்கப் போவது பூர்வ குடிகளின் நீதியும் தொன்மைப் பழக்கமும் தான் எனும் அச்செய்தி உண்மையில் நடக்குமா? கிளர்ச்சி வெடிக்குமா? பொய்கள் மறையுமா? நேர்மையின் கையில் நாடு கிட்டுமா? இத்தனை கேள்விகளுடன் படம் பார்ப்பவர் ஒவ்வொருவருடனும் இக்குறும்படம் ஒன்றிப் போய் விட்கிறது.
சிறு குறும்படம் பெரும் வரலாற்றைத் தூக்கி அலைகிறது. ஊதினால் தள்ளிப் போகும் காற்றுத் தான், மலை போல் மேகத்தைத் தூக்கிச் செல்கிறது. வானமும் தன் நீலவெளிப்பாட்டால் உலகையே ஆள்கிறது.
இக்குறும்படத்தின் குழு:
இயக்குநர் : வினோத் மலைச்சாமி
இசை : விக்கி
எடிட்டிங் : ராம் குமார்
கேமரா : ஹரிஹரன்.
நடிகர்கள் :நரேன் பாலாஜி, முனியராஜ், ராகேஷ், சுகாசினி.
குறும்பட பெற்ற / பெறப்போகிற விருதுகள்:
- இக்குறும்படம், இதுவரையிலும் 58 விருதுகளைப் பெற்றிருக்கின்றது.
- பிரான்ஸ் இல் நடந்த கெய்ன்ஸ் உலக திரைப்பட திருவிழாவில் இப்படம் கலந்து கொண்டுள்ளது.
- ஜப்பான் நாட்டில் நடக்கும் நிப்பான் திரைப்படத் திருவிழாவில் இப்படம் கலந்து கொண்டுள்ளது.
- கொரியாவில் நடக்கும் திரைப்பட விழாவில் இப்படம் கலந்து கொண்டுள்ளது.
- தேசிய அளவில் நடக்கும் தாதாசாகெப் பால்கே திரைப்பட விழா
- Filmy sea international international film festival
- Kerala international film festival
- Bharath international film festival
இக்குறும்படம் எந்தக் குறும்பட விழாவிற்குச் சென்றாலும், பரிசினைப் பெறாமல் வந்ததில்லை என்கிறார் இயக்குநர் வினோத் மலைச்சாமி.
குறும்படம் இன்னும் ரீலீஸ் ஆகவேயில்லை. ஆனால் இப்போதே பெரும் பூடகங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. குறும்படத்தைக்குறித்து மேலதிகச் செய்திகளை கீழ்காணும் இந்தச் சொடுக்கியில், https://youtu.be/0YrLoWDtPrE சொடுக்கிக் கண்டு களிக்கவும்.