புனிதனின் கவிதைகள்
விபத்து
***********
எப்போதாவது
எதோ சொல்ல வந்தியே
என்னவென்று கேட்கிறாள்
எப்போதாவது
பலூன் வாங்கித் தரச் சொல்லும்
குழந்தையைப் போல்
அடம் பிடிக்கிறாள்
எப்போதாவது
ஜானி நாய்க்கு
என்னாச்சு என்பது போல்
அதிர்ச்சியாய் குறுக்கிடுகிறாள்
விபத்தில் இறந்த
அப்பாவின் நினைவில்
வாழும் அம்மா
நிறங்களின் உணர்ச்சி
******************************
பழைய சாதமும்
பச்சை மிளகாய் போலவும்
ஓவியம் கண்டதில்லை
குயிலின் ஓசையில்
மலர்கிறது
வண்ணப் பூக்கள்
ஒவ்வொரு கீரையும்
ஒவ்வொரு நிறம்
இருட்டின் ஞாபகம்
பகல்
வெளிச்சத்தின் மறதி
இரவு
என் இசையின் கவனம்
என்பது
மக்கிய சாணம் முளைத்த
புற்கள் வண்ணம்
தவளைகள்
மூடர் கூட்டத்தின் நிறமல்ல
முயல் இடும்
புழுக்கையின் நிறம்
கோடையில் பசுமையாகும்
கொக்கின் கண்கள்
வற்றிய குளத்தில்
சேத்து குரவை மீன்கள்
சிவந்த இளம்
கொடுக்காய் புலி காண்கையில்
துறவியின் உணர்ச்சி
ரொம்ப நாளைக்குப் பிறகு
ஒரு வண்ணத்தை
அரக்கு நிறமென
அறிமுகபடுத்தினார் குரு
உயிர் வாதையோடு
இறந்த மூட்டை பூச்சியின்
நசுக்கிய குருதி நிறமது
க. புனிதன்