நூல் அறிமுகம்: MEMOIRS OF A DALITH COMMUNIST ஆர்.பி.மோரேயின் ஒரு தலித் கம்யூனிஸ்டின் நினைவுகள் – கி.ரா.சு.
நூல் : MEMOIRS OF A DALITH COMMUNIST
ஆசிரியர் : ஆர்.பி.மோரே
விலை : ரூ. ₹450.00
வெளியீடு : Left Word
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]
MEMOIRS OF A DALITH COMMUNIST
ஒரு தலித் கம்யூனிஸ்டின் நினைவுகள் – ஆர்.பி.மோரேயின் உலகங்கள்
மக்களை தீவீர மதவாதமும், நவீன தாராளமயக் கொள்கைகளும் கூறு போட்டுத் தின்று கொண்டிருக்கும் இன்றைய சூழலில், அவர்களைக் காப்பாற்ற நீலமும், சிவப்பும், கருப்பும் இணைந்து போராட வேண்டும் என்ற ஆவல் பெரும்பாலோரிடம் வெளிப்படுகிறது. மார்க்சும், அம்பேத்காரும், பெரியாரும் சேர்ந்து அமர்ந்திருப்பது போன்ற படங்கள் சுற்றுக்கு வருகின்றன. இந்தச் சூழலில் அண்ணல் அம்பேத்காரைப் பற்றி ஆழமகத் தெரிந்து கொள்ளவும், அவரைப் புரிந்து கொள்ளவும் தோழர் ஆர்.பி.மோரேவின் வாழ்க்கையைப் படிப்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ‘ஒரு தலித் கம்யூனிஸ்டின் நினைவுகள்’ என்ற இந்தப் புத்தகம் தோழர் ஆர்.பி.மோரேவின் தன்னலமற்ற வாழ்வை, ஒரு உண்மையான கம்யூனிஸ்டின் வாழ்வை எடுத்துரைப்பது மட்டுமல்ல, அண்ணல் அம்பேத்காரின் வாழ்வில் நான் இதுவரை படிக்காத பல விவரங்களையும் எடுத்துரைக்கிறது.
தோழர் ஆர்.பி.மோரே – மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு ஏழ்மையான, தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து, தாம் இருந்த மகத் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உழைக்கத் தலைப்பட்டு, அந்தக் காரணத்தால் அண்ணல் அம்பேத்காருடன் இணைந்து பின்னர் அனைத்து மக்களின் விடுதலைக்கு கம்யூனிசமும் தேவை என்ற உணர்வால் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து பணியாற்றியவர். அவரது வாழ்க்கைச் சரிதத்தை அவர் ஒரு பகுதி எழுதியிருக்க, அவரது புதல்வர் சத்யேந்திர மோரே அதை மேம்படுத்தி முழுமையாக அளித்திருக்கிறார். ஒரு புத்தகத்தில் இரண்டு பெருமக்களின் வரலாற்றைப் படித்த உணர்வு. ஒன்று மோரே, இரண்டாவது அண்ணல் அம்பேத்கார்.
மும்பைக்கு அருகில் தாச்கான் என்ற கிராமத்தில் பிறந்த மோரே முதலில் அங்கிருந்த சிறு பள்ளியில் படித்தார். அங்கு குழந்தைகளின் குடும்பப் பெயர்களைக் குறிப்பிடாமல் தொழிலைக் குறிப்பிடுவார்கள் என்கிறார் மோரே. ஒரு பாரம்பரியமாகவே தீண்டாமையைக் கடைப்பிடித்திருக்கிறார்கள் மக்கள். எனினும் அங்கு தீண்டாமை திணிக்கப்படாமல் இருந்திருக்கிறது. எல்லாரும் சேர்ந்தே பழகியுள்ளனர்.
பின்னர் அலிபாக் மாவட்டத்தில் படிக்க உதவித்தொகை பெறும் தேர்வில் வெற்றி பெற்றாலும், அவரால் அங்கு செல்ல முடியவில்லை. இடையில் தந்தை இறந்து போனார். பின்னர் மகத் கிராமத்தில் அவர் கடும் சிரமத்துக்கிடையில், தீண்டாமைக் கொடுமைக்கு இடையில் படித்தார். அங்கு தனியே அமர வைக்கப்பட்டார். அங்கு தீண்டாதோர் கடும் தண்ணீர் பிரச்சனையை எதிர்கொண்டனர். உள்ளே அவர்களுக்கு எதுவும் கிடைக்காது. இந்தப் பிரச்சனையைத் தீர்க்க வழிகண்டார் மோரே. (அவரே மாணவர்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.) அந்தக் கூட்டத்தில் அவர் ஒரு தேநீர் கடையைத் திறக்க வேண்டும் என்று முன்மொழிய, அதன்படி திறக்கப்பட்ட கடையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவசமாகத் தண்ணீர் கொடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. பிரச்சனையைத் தீர்த்தார் மோரே.
அதே மகத்தில் இருந்த ஒரு குளத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டது. இதை எதிர்ப்பது என்று முடிவெடுத்து அதற்கான விடையைத் தேடும்போதுதான் அவருக்கு அண்ணல் அம்பேத்காரைப் பற்றித் தெரிய வந்தது. அம்பேத்கார் அத்தனை பிரச்சனைகளையும் கடந்து மேல்நாடு சென்று கற்றுத் திரும்பி தம்மைத் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு அர்ப்பணித்துக் கொண்டிருந்தார். அவர் மகத் வந்து அக்குளத்தில் சத்யாகிரகம் மேற்கொண்டால் அதற்கு தீர்வு கிடைக்கும் என்று நினைத்த மோரே அம்பேத்காரிடம் படையெடுக்கிறார். ஒரு இளைஞன் சொல்வதை எப்படி நம்புவது என்று சற்றுத் தயங்கினாலும் பின்னர் அவருடைய தோழர் ஒருவரை அனுப்பி அங்கு நிலைமையை ஆராயச் சொல்ல, அவரும் அம்பேத்கார் அங்கு வரவேண்டும் என்று பரிந்துரைக்கிறார். இங்கு அம்பேத்காருக்கு உடன் இருந்து பணியாற்றிய இருவர் அனந்தராவ் சித்ரேவும், சஹஸ்ரபுத்தேவும் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீண்டாமை என்கிற தீமையை அகற்ற முற்போக்குச் சிந்தனையுள்ள யாரையும் இணைத்துக் கொள்ள அம்பேத்கார் தயாராகவே இருந்தார். அவர்களில் சிலரும் அவருடன் இணைந்து போராடியது மட்டுமின்றி, அவர்களது சாதியால் சாதிவிலக்கம் செய்யப்பட்டுத் துன்பத்தையும் அனுபவித்துள்ளனர்.
மகத சத்யாகிரகத்தை அங்கிருந்த கிராமங்கள் அனைத்தையும் இணைத்து வெற்றிகரமாக நடத்தியதில் மொரேவின் பங்கு மிகச்சிறந்தது. அப்போது மோரே மராத்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதுவதில் திறன் பெற்றிருந்ததால் அம்பேத்கர் அவரைத் தம்முடன் பத்திரிகை நடத்த அழைத்துக் கொண்டார். தொடர்ந்து கட்டுரைகள் எழுதி, அப்பத்திரிகையில் முக்கியப் பங்கு வகித்தார் மோரே. அண்ணலும் கூட இரவும், பகலும் அவருடன் இருப்பாராம். இருவரும் சேர்ந்து காலை உணவை அருகிலிருந்த இரானி உணவகத்தில் உண்பார்களாம். அண்ணலின் மூத்த சகோதரர் இறந்த போது, அவர் அங்கு இல்லை. அப்போது முழுப் பொறுப்பையும் ஏற்று தகனம் வரை செய்தார் மோரே. அண்ணல் அவரைத் தமது குடும்பத்தில் ஒருவராகவே மதித்திருக்கிறார்.
இதை விட ஒரு பெரிய விவரம் இந்தப் புத்தகத்திலிருந்து தெரிய வந்தது. அது என்னவென்றால் அண்ணல் அம்பேத்காருக்கு பாபாசாகேப் என்றும் அவரது மனைவியை ஆயிசாகேப் என்றும் பெயரிட்டு அதை மக்களிடம் பிரபலப்படுத்தியவர்கள் தோழர் மோரேவும் அவரது தோழர்களும்தான் என்ற செய்தி.
பின்னர் தொழிலாளர் போராட்டங்கலில் ஈடுபடும்போது கம்யூனிசம் அவருக்கு அறிமுகமாகிறது. அங்கு அனைத்துக் கூட்டங்களுக்கும் செல்கிறார். மார்க்சியம் கற்கிறார். தலித்துக்களை தீண்டாமைக் கொடுமையிலிருந்து விடுவிப்பது ஒருபுறமும், ஒட்டுமொத்த மனிதகுலத்தை விடுவிக்க மார்க்சியம் தேவை என்பதை உணர்கிறார். எனவே மெதுவாக அவர் அம்பேத்கார் கட்சியிலிருந்து விலகி கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகிறார். அண்ணல் அம்பேத்கார் அவரை வாழ்த்தி விடை கொடுத்து அனுப்புகிறார். இறுதிவரை இருவரும் அணுக்கமாகவே இருந்திருக்கின்றனர். பின்னரும் கூட அம்பேத்கார் மும்பையில் எதாவது கூட்டத்தில் பேசினால் அங்கு மோரே பின்வரிசையில் நின்று பேச்சைக் கேட்பார். ஒருமுறை அம்பேத்கார் அவர்கள் மோரே பின்னால் நிற்பதைப் பார்த்து அவரை மேடைக்கு அழைக்க மறுக்கிறார் மோரே. அண்ணலோ அதை ஏற்காமல் தொண்டர்களை விட்டு மொரேவை மேடைக்கு அழைத்து வருகிறார். அதேபோல் மோரே பேசும்போது மும்பையில் அம்பேத்கார் இருந்தால் சற்றுத் தள்ளி காரில் அமர்ந்து அவரது பேச்சைக் கேட்பாராம் அவர். அடிக்கடி இருவரும் சந்தித்து தலித்துக்கள் விடுதலை, மானுட விடுதலை, கம்யூனிசம் குறித்தெல்லாம் விவாதித்திருக்கின்றனர். கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாட்டை மோரே அவரிடம் விளக்கியுள்ளார்.
மனதளவில் கம்யூனிஸ்டாகவே இருந்த மோரே அம்பேத்கார் கட்சியில் இருந்த பலரையும் மார்க்சியத்தை போதித்துக் கம்யூனிஸ்ட் ஆக்கியிருக்கிறார். நாமெல்லாம் உயர்த்திக் கொண்டாடும் ஷாம்ராவ் பருலேகரையும் அம்பேத்கார் கட்சியிலிருந்து கம்யூனிஸ்டாக மாற்றியிருக்கிறார் மோரே. அவரின் அரசியல் குருவான அனந்தராவ் சித்ரேவும் விதிவிலக்கல்ல. இத்தனைக்குப் பிறகும் அம்பேத்கார் மீதான அவரது மரியாதை குறையவில்லை. தாழ்த்தப்பட்டோர் விடுதலையைப் பொருத்தவரை அம்பேத்கார் நிலைபாட்டைப் பெரிதும் மதித்தார் மோரே.
கம்யூனிஸ்ட் கட்சியிலும், அவர் இதற்காகப் போராடினார். அங்கும் கட்சி அவர்கள்பால் எடுக்க வேண்டிய நிலைபாடு குறித்துப் பலமுறை நேரடியாகப் பொதுச்செயலாளருக்கு எழுதியிருக்கிறார். அம்பேத்கார் பற்றி கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த நிலைபாடு தவறு என்று விளக்கியிருக்கிறார். அவரது தலையீடும் கட்சிக்குப் பெருமளவு உதவியுள்ளது. கட்சி அவரது வழிகாட்டுதலின்படிப் பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
இந்த விஷயத்தில், நாம் பார்ப்பது என்னவென்றால் அண்ணல் அம்பேத்கார் சிலர் பரப்பிக் கொண்டிருப்பது போல் கம்யூனிஸத்தை வெறுக்கவில்லை. அவர் விலகி நின்றது வன்முறை என்ற ஒரு கோணத்தில்தான். அதனால்தான் அவர் பௌத்தத்தை உயர்த்திப் பிடித்தார். அதுவும் ஒரு வகையில் மூல பௌத்தத்தை உயர்த்திப் பிடித்தார். அது ஓரளவுக்குப் பகுத்தறிவு சார்ந்தது, ஓரளவு நாத்திகம். புத்தகம் முழுதும் இந்தப் பிரச்சனையைப் பேசுகிறது.
மேலும் மோரே மீது அம்பேத்கார் வைத்திருந்த மதிப்பு எந்த அளவுக்குப் போனதென்றால் ஒருமுறை சட்ட அமைச்சராக அம்பேத்கார் இருந்தபோது பாரீசில் நடந்த ஒரு தொழிலாளர் மாநாட்டுக்குப் பெயர்கள் பரிந்துரைக்கப் பட்டிருந்தன. அம்பேத்காரின் ஒப்புதல் பெற அந்தப் பட்டியல் சென்றபோது அதில் மோரேவின் பெயர் இடம் பெறாததைக் கண்ட அம்பேத்கார் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதில் மொரேவை இடம் பெறச் செய்தார்.
இப்போது மோரே ஒரு கம்யூனிஸ்டாக வாழ்ந்த வாழ்க்கையைப் பார்ப்போம். அவர் கட்சியை வளர்க்கவே பாடுபட்டிருக்கிறார். தன்னை வளர்த்துக் கொள்ள முயலவேயில்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது. தன் குடும்பத்தின் தினசரி வாழ்க்கையை நடத்தவே கடும் போராட்டம் செய்ய வேண்டியிருந்திருக்கிறது. ஒன்றுமே இல்லாமல் இருந்தபோதும் அவர் கட்சியைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. பணமின்றி பிள்ளை இறந்த போது தலைமறைவாக அவரால் பார்க்கக் கூட முடியவில்லை என்பதும் இருமுறை வீடில்லாமல் எல்பின்ஸ்டோன் பாலத்துக்குக் கீழ் பிச்சை எடுப்பவர்களுடன் குடும்பம் தங்க வேண்டியிருந்தது என்பதும் நம் நெஞ்சை உறைய வைக்கின்றன.
அவரது வறுமையைப் பற்றிக் கேள்விப்பட்ட பி.டி.ரணதிவேயும், விமலா ரணதிவேயும் அவரது வீட்டுக்குச் சென்று விசாரிக்கும்போது அவர்கள் இரண்டு நாட்களாக உண்ணவேயில்லை என்று தெரிந்து அதிர்ந்து போனார்கள். பக்கத்தில் உணவு ஏற்பாடு செய்தபோது குழந்தையாக இருந்த சத்யேந்திரா நான்கு உணவு வாங்கி வருகிறார். ஏன் என்று கேட்கும்போது உங்களுக்கு இரண்டு, எங்களுக்கு இரண்டு என்கிறார். நமக்குக் கண்ணீர் வழிகிறது.
சிபிஐயிலிருந்து சிபிஐ(எம்.) தோன்றும்போது அதில் இணைந்தார் மோரே. கடும் சிரமத்திலும் தமது சொந்த ஊரான தாஸ்கானுக்குச் சென்று கட்சியை வளர்க்கும் பணி செய்கிறார். மீண்டும் பம்பாய் திரும்பி கட்சியின் பத்திரிகையில் பணிபுரிகிறார். அவர்தான் மகாராஷ்டிராவின் கட்சிப் பத்திரிகையின் நிறுவனர். இன்றுவரை பத்திரிகை அவர் பெயரைத்தான் நிறுவனராகத் தாங்கி நிற்கிறது.
தமது கிராமத்தில் அரும்பாடுபட்டு முதலில் தொடக்கப் பள்ளியையும், பின்னர் உயர்நிலைப்பள்ளியையும் நிறுவியுள்ளார். அது இப்போதும் அவர் பெயரில் செயல்பட்டு வருகிறது.
மக்கள் விடுதலைக்காகப் போராடும் ஒவ்வொரு சிவப்புச் சிந்தனைக்காரரும், நீலச்சிந்தனைக்காரரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகமாக இந்தப் புத்தகத்தை நான் பரிந்துரைக்கிறேன். மராத்தியில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை வந்தனா சொனால்கர் ஆங்கிலத்தில் மிகச் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.
விரைவில், முடிந்தால் வரும் ஜனவரி 2023இல் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவில் பாரதி புத்தகாலயம் இந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
– கி.ரா.சு.