நூல் அறிமுகம்: ஒரு பண்பாட்டின் பயணம் – சிந்து முதல் வைகை வரை
சங்கச்சுரங்கம்–இரண்டாம் பத்து அணி நடை எருமை : நூல் அறிமுகம்
ஒரு பண்பாட்டு அரசியல் பயணம் (Oru Panpattu Arasiyal Payanam) – நூலறிமுகம்
சங்கச்சுரங்கம் இரண்டாம் பத்து – நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: அப்பணசாமியின் வரலாறு பண்பாடு அறிவியல் டி.டி. கோசம்பியின் வாழ்வும் ஆய்வுகளும் – ஆர். பாலகிருஷ்ணன்
வரலாற்றிலிருந்து நாம் தப்பிச்செல்ல முடியாது. கடந்த காலம் தான் நம்மை கடந்து செல்கிறது. எனவே வரலாறு என்ன வாழ்வாதாரமா என்று கேட்டுவிட்டுக் கடந்து செல்லமுடியாது. வரலாறு பற்றிய புரிதல் சரியான எதிர்காலத்தை நோக்கி நிகழ்காலத்தில் வழிநடத்தும்.
இந்திய வரலாற்றியலாளர்களில் மிக முக்கியமான ஓர் ஆளுமை டி.டி. கோசாம்பி.
ஆட்சியாளர்களின் பரம்பரைப் பட்டியலையும்; அரசர்கள் நிகழ்த்திய போர்ப் பயணங்களையும்; மேட்டுக் குடிகளின் ஆடம்பர வாழ்க்கையையும்; அரண்மனைகள், கோவில்கள் குறித்த வருணனைகளையும்; அந்தப்புர மனைவியரின் எண்ணிக்கையையும் வரலாறு என்ற பெயரில் படித்து வந்தோம். ஆனால் அடித்தட்டு மக்கள் வரலாறு இவற்றில் இடம் பெறுவதில்லை. இதில் மடைமாற்றம் செய்து இந்தியாவின் அடித்தட்டு மக்கள் வரலாறு எழுதுவதைத் தொடங்கி வைத்தவர் டி. டி. கோசம்பி என்று அறியப்படும் தாமோதரன் தர்மானந்தர் கோசம்பி ஆவார்.
ஆனால் அவரது எழுத்துகளும் சிந்தனைகளும் இன்றளவும்கூட தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்தப்படவில்லை. அத்தகைய சிக்கலான பணியினை மூ. அப்பணசாமி எழுதியுள்ள வரலாறு – பண்பாடு – அறிவியல் : டி. டி. கோசம்பியின் வாழ்க்கையும் ஆய்வுகளும் எனும் இந்த புத்தகம் மேற்கொள்கிறது.
வரலாறு என்பது கல்வெட்டுகள், சாசனங்களில் மட்டுமல்லாமல் தொலைதூரக் கிராமங்களில் காணப்படும் சிதைந்து போன வழிப்பாட்டு உருக்கள், மரக்குகைகள் மலைக்குகைள் ஆகியனவற்றில் மட்டுமல்லாமல் அருகில் வாழும் மக்கள் உணவுமுறை அவர்கள் மேற்கொள்ளும் சடங்குகள். சொல்லாடல்களில் மறைந்துள்ளதைக் கட்டவிழ்த்துள்ளதன் மூலம் கோசம்பி வெளிக்கொணர்ந்தார். மட்டுமல்லாமல் சமஸ்கிருத வேதங்கள், பிரமாணங்கள், ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்கள் போன்றவற்றையும் கட்டுடைத்து இந்திய தொல் குடிமக்கள் மீது நான்காயிரம் ஆண்டுகளாகத் தொடுக்கப்பட்டு வரும் பண்பாட்டுத் தாக்குதல்களை வெளிக்கொணர்ந்தார்.
இதன் மூலமாக இந்தியாவில் வர்க்கச் சுரண்டல் என்பது சாதிப் படிநிலை அமைப்பின் மூலமாக நிகழ்ந்ததையும் நிகழ்வதையும் இந்த சாதி அமைப்பு மதத்தால் கட்டுப்படுத்தப்படுவதையும் அம்பலப்படுத்தினார்…
இந்தக் கதையினை டி. டி. கோசம்பியின் பன்முக ஆளுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக தமது புத்தகத்தில் கூறுகிறார்
மூ. அப்பணசாமி….
இந்த நூல் வருகிற 30 ஆம் தேதி வெளிவரவுள்ளது.
இது ஒரு நல்ல முயற்சி.
வாழ்த்துகள் தோழர் அப்பணசாமி.
– ஆர். பாலகிருஷ்ணன்
முகநூல் பக்கத்திலிருந்து
நூல் : வரலாறு பண்பாடு அறிவியல் டி.டி. கோசம்பியின் வாழ்வும் ஆய்வுகளும்
ஆசிரியர் : மூ. அப்பணசாமி
விலை : ரூ.₹400
வெளியீடு : ஆறாம் திணை பதிப்பகம்
நூல் அறிமுகம்: ஆர். பாலகிருஷ்ணனின் JOURNEY of A CIVILISATION – இரா.இயேசுதாஸ்
JOURNEY OF A CIVILISATION
Indus to Vaigai…..
என்ற 503+பக்கங்கள்
கொண்ட ரூபாய் 2400/- விலையுள்ள
ஆங்கில நூலை “ரோஜா முத்தையா
ஆராய்ச்சி நூலகம்”பதிப்பிக்க..
பாரதி புத்தகாலயம் அதை மக்களிடம்
கொண்டு சேர்க்கும் பணியை மேற்
கொண்டு 2021ல் இரண்டாம் பதிப்பு
வெளிவந்துள்ளது.
கீழடி அகழாய்வு முடிவுகள் ..மற்றும் ஆதிச்சநல்லூரில் நூறாண்டுகள் கடந்து மீண்டும் அகழாய்வு….அங்கிருந்து தாழியிலிருந்து ஒரு முழு மனித எலும்புக்கூடு
பெங்களூருவுக்கு மதுரை உயர்நீதிமன்ற தலையீட்டிற்குப் பின் கொண்டு செல்லப்பட்டுஅங்கே எந்தவித பின்தொடர்வும் (followup) இன்றி இருக்கும் நிலையில் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள இந்த
ஆராய்ச்சி நூல் உயர்ந்த முக்கியத்துவம் பெறுகிறது.
நூலை பார்க்கும் போது படிக்க முடியுமா என் மலைப்பாகத்தோன்றிடினும்.. இன்றைய முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் இந்நூலை நமது குடியரசுத்தலைவர்..
பிரதமர்..துபாய்…அபுதாபி ஆட்சியாளர்களுக்கு சிறப்புப் பரிசாக வழங்குவதை பார்த்த பின்பு ஆறு மாதத்திற்கு முன்பு வாங்கிய நூலை எப்பாடு பட்டாவது படித்தே தீர்வது என முடிவுசெய்து ஒன்பது நாட்களில் படித்து பின் ஓரிரு நாட்கள் மீள்வாசிப்பும் குறிப்புகளும் எடுத்தேன்.
ஒரு நூலைப் படித்து தான் புதிய தகவல்கள் பெறுவது…அதனினும் அதை பிறருடன் பகிர்ந்துகொள்வது இன்பமானது.. ஏராளமான பிரமிப்பூட்டும்….திகைக்க
வைக்கும்…சிந்திக்கத்தூண்டும்….ஏன்… நம்மையே ஆராய்ச்சிக் களத்தில் இயல்பாகவே இறக்கிவிட்டு விடும் அற்புத சாகசத்தை இந்நூல் நிகழ்த்துகிறது. ஒரு ஆல்பத்தை புரட்டிப்பார்ப்பது போன்ற நிலை..பொன்னியின் செல்வன் ஐந்துபாகமும் ஒன்றாக உள்ள நூலை படிப்பதுபோல….வேள்பாரி இரு பாகத்தை ஒன்றாக்கி
படிப்பது போன்றது இந்த வாசிப்பு.. ஆசிரியர் தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்று….பின் தமிழ்வழி ஐ.ஏ.எஸ்.எழுதி முதல் முயற்சியிலேயே தமிழகத்தில்
முதலிடம் பெற்று..இந்திய குடிமைப்பணியில் ஒரிசா மாநிலத்தில் பழங்குடிகள் பெருமளவு வசிக்கும் மாவட்டத்தில் பணியமர்த்தப்படுகிறார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பில் இவர் திரு.ஐராவதம்மகாதேவன் அவர்கள் எடுத்த “சிந்துச்சமவெளி நாகரிகம்”பற்றி எடுத்த வகுப்பும்..பின் களப்பணிக்கு சென்றபோது இவர் கண்ணில்பட்ட”தமிழி”(TAMILI) என்ற மைல்கல்லும் பெரும் திருப்பமாக அமைந்தன. தமிழிலக்கிய மாணவரான இவர் சங்க இலக்கியத்திலும்..அதில் விவரிக்கப்படும் தமிழ்ப் பண்பாட்டு வாழ்க்கை முறையிலும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் இருந்தார். இந்தப்பண்பாட்டிற்கான ஆதாரங்களை பொருள் வடிவில் தேடிக்கொண்டிருந்த இவருக்கு ஐராவதம் அவர்களின் சிந்துநாகரிகம்-திராவிட நாகரிகத் தொடர்பு பற்றிய உரையும் நூல்களும் இயற்கையாகவே ஆர்வத்தை ஈர்த்தன. இதனால் காலப்போக்கில் ஐராவதம் அவர்களுக்குப் பின் இவர் சிந்து நாகரிக ஆராய்ச்சிப் பணியில் ரோஜா முத்தையா
நூலகத்தில் பொறுப்பேற்றார்.
2010 கோவை செம்மொழி மாநாட்டில் கட்டுரை சமர்ப்பித்து…அங்கே ரோஜா முத்தையா நூலகம் மூலம் கண்காட்சியும் ஏற்படுத்தி..சிந்து சமவெளி நாகரிகத்தின்
அடித்தளம் திராவிடம்…என்பதை ஏதோ மொழிவெறியோ…மாநிலப்பற்றோ..என்று இல்லாமல் நவீன அறிவியல் உலகின் எல்லா ஆராய்ச்சி வசதிகளையும் மிக நுணுக்கமாக…மிக மிக நேர்த்தியாக பயன்படுத்தி நிரூபணம் செய்கிறார்.. இதன் முழு வெளிப்பாடே இந்த அற்புதமான மகத்தான நூல்..
ஹரப்பாவிலும்….மொகஞ்சோதாராவிலும்… ஆதிச்சநல்லூரிலும்..கீழடியிலும்.. நாம் நேராகக்களத்தில் சென்று பார்த்தால் கூட இவ்வளவு தத்ரூபமாக புரிந்து கொள்ள முடியுமா என்பது சந்தேகமே! ஏனெனில் ஏரியல் வ்யூ எனும்பருந்துப் பார்வையில் க்ரேன் கேமரா மூலம் பல புகைப்படங்கள் உள்ளன. அட்டவணைகள்(Tables),வரைபடங்கள் (Maps),அகழ்வாய்வில் கிடைத்த பொக்கிஷங்களின் நேர்த்தியான புகைப்படங்கள்(Colour Photos) வரை ஓவியங்கள்
(Line drawings) என் அனைத்துமே நம் வாசிப்பை சுவாரசியம் மிக்கதாக மாற்றுகின்றன.
முப்பது ஆண்டுகள் தொடர் கடின உழைப்பு.. ஒரிசா முதல்வரின் சிறப்பு ஆலோசகர்.. தலைமைச்செயலர்….ஒரிசாவில் பேரிடர் மேலாண்மையில் முன்னுதாரணமான சாதனை..இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர்..என வித்யாசமாக பணி ஆற்றும் சூழலிலும் பணி நிமித்தம் மேற்கொள்ளும் பயணங்களையே தனது ஆராய்ச்சிக்கான களங்களாகவும் மாற்றிக்கொண்டது அதனினும் சிறப்பு.. முடியாத கட்டத்தில் ஓராண்டு ஓய்வு விடுப்பு எடுத்து ஆராயச்சியில் ஈடுபட்டதும்…பின் இந்நூலை எழுத முழுவதுமாக இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டதும்….சாதாரண டாக்டர் பட்டத்துக்கு என்ற ஆராய்ச்சிப்
படிப்பு(Project )என்ற நிலையை மறுத்து உண்மையான ஈடுபாட்டுடன்….மன உறுதியுடன் மிகச்சிறந்த யாராலும் மறுதலிக்க முடியாத அளவிற்கு சான்று மேல் சான்று….சாட்சிக்கு மேல் சாட்சி என எல்லா கல்வித்துறை ஆராய்ச்சி அறிவையும் இதிலே பயன்படுத்தியுள்ளதே இநாநூலின் தலையாய சிறப்பம்சம்!.
நான் இன்னும் ஒரு படி மேலே போய் சொல்வேன்….ஒவ்வொரு வாசிக்கத்தெரிந்த மனிதனும் ஒரு வாரம் படிப்புக்கென விடுப்பு எடுத்துக்கொண்டு வாசிக்க வேண்டிய நூல்…இது கொஞ்சம் ஓவராக உங்களுக்குத் தோன்றினாலும்..இதில் கொஞ்சமும் மிகையில்லை. அவ்வளவு உழைப்பு…காலம்…பொருள்….பொறுமை..
இந்நூலுக்குச்செலுத்தப்பட்டுள்ளது.
சங்க இலக்கியத்தில் காணப்படும் செய்திகளுக்குச் சான்றுகளாக சிந்து சமவெளி நாகரிக அகழ்விடத்தின் காட்சிகளும் பொருட்களும் இன்று மறைக்க முடியாத சாட்சிகளாக உள்ளதை இந்நூல் பட்டியலிடுகிறது. ஊரின் பெயர்கள்…இங்கும்…அங்கும்….இன்றும் அப்படியே ஒன்றாக இருப்பதை யாராலும் இனி மாற்றமுடியாது!
சேவற்கோழிச்சண்டை….. சிபு காளையும்….காங்கேயம் காளையும்…. வன்னிமர வழிபாடு….. குயவருக்கு முக்யத்துவம்.. விவசாய விளைச்சலுக்கு பலி கொடுத்தல்..
சிவப்பு…பின் கறுப்பு-சிவப்பு…நிறத்திற்கு முக்கியத்துவம்…தாமிரம் -செம்பு பயன்பாடு.. பானை…தாழி….மணி(Beads), சங்கு வளையல்கள்…சிலம்பு..பெண்தெய்வ வழிபாடு….சாதாரண மக்களையே நாயகர்களாக(Hero/Heroin)போற்றும் அக பாடல்கள்..வீரம்…காதல்…இறந்த பின்பும் ஒருவருக்கு புகழ் நீடிக்க விரும்புதல்… மதக்குறியீடின்மை.. உன்னதமான மேம்பட்ட நாகரிகம்(யாதும் ஊரே…யாதும் கேளீர்),விட்டுக்கொடுக்கும் காதலர்(குட்டையில் உள்ள சில சொட்டுநீரை குடிப்பது போல் பாவனை காட்டும் மான்ஜோடி) செங்கல் தயாரிப்பில் நிபுணத்துவம்… இன்றைய நவ நாகரிகத்தையும் மிஞ்சும் நகரமைப்பு(பொது நீச்சல் குளம்…பெரும் கோட்டைச் சுவர்,சாக்ககடை-கழிவுநீர் வசதி, ஆக்ரமிப்பு இல்லாத சீரிய நேர்க்கோட்டு சாலைகள்…மேற்கிலிருந்து கிழக்கு சரிவான நகர் வடிவமைப்பு(Slope).. ஏழு(seven) எண்ணிற்கு முக்கியத்துவம்.. அரசர்களை/தளபதிகளைவிட புலவர்களுக்கு மரியாதை(தமிழ்ச்சங்கங்கள்..கடை எழு வள்ளல்கள்)..பழைய வரலாறை நினைவு கூர்ந்து பதிவுசெய்தல்(செய்யுள்/கல்வெட்டுகள்/நடுகற்கள்), தாயக்கட்டை விளையாட்டு…சிறு குழந்தைகளுக்கு பொம்மைகள்…ஆடற்கலை.(dancing girl)
கண்ணகி மார்பை அறுத்துவீசி சாபமிட்டது போல பல பதிவுகள்…மலைகளில் முருகன்.. கடலோரமாகவே நாகரிகம் ஆற்றங்கரை நகர் அழிவுகளை தொடர்ந்து புலம்பெயர்தல்.. கடல்வணிக வழிகளை் வாஸ்கோடாகாமா வழிகாண்பதற்கு முன்பே திராவிட நாகரிகத்தவர் கண்டுபிடித்தது..அன்னிய நாணயங்கள்..மீன்..படகு… ஓவிய அச்சுக்க்கள் கண்டுபிடிப்பு….இவை சங்கப்பாடல்களிலும்
இடம் பெற்றுள்ளது..
கொற்கை-வஞ்சி-தொண்டி(Korkai-Vanchi-Thondi Complex)என்பதை விளக்கி ஆதாரத்தை நிறுவுவது குறிப்பிடத்தக்கது.கீழ்…மேல்……என்ற பொருள்(Concept)கவனம் பெறுகின்றது. கவரிமான் முடியில்லாமல் உயிர்வாழாது என நாம் பொதுவாக பேசிகாகொள்கிறோம்.. ஆனால் அது மான் அல்ல…கவரி என்ற இன்றும் இமயமலை உச்சியில் வாழும் ஒரு வகை மாடு என்பதையும்…. பாலைவனத்து ஒட்டகம் கடும் வறட்சியின் பசியில் எலும்பைத்தின்னும் என்பதும்.. குஜராத் கடற்கரையில் பொதிசுமந்து செல்லும் கோவேறுகழுதையின் கால்களை சுறாமீன் குட்டிகள் கடிக்கும்…..போன்ற பல வட நாட்டுச்செய்திகள் தமிழ்ச்சங்க பாடல்களில் இடம்பெற்றுள்ளது சிந்துச்சம வெளி நாகரிகத்தின் திராவிட அடித்தளத்தை ஐயமற நிறுவுகின்றன.
வைகைக்கும் சிந்துவுவிற்குமான தூரம் 1400கி.மீ…சிந்து நாகரிகம் முடிந்து திராவிட நாகரிகமாக தொடரும் கால இடைவெளி 1900ஆண்டுகள்.இந்த கால…..தூர… இடைவெளியை ஆதாரப் புள்ளிகள் மூலம் இணைக்கும் பணியை இந்நூல் செய்கிறது…வைகை….தாமிரபரணி ஆற்றங்கரை அகழாய்வுப்பணிகளின் கண்டுபிடிப்புகள் நடுநிலையோடு ஒன்றிய அரசால் நிறுவப்பட வேண்டும் என்ற பதைப்பும்…எதிர்பார்ப்பும் இந்நூலின் வாசகர் ஒவ்வொருவருக்கும் ஏற்படும்..
சுதந்திரத்திற்கு முன்பு அகழ்வாய்வில் ஈடுபட்ட ஆங்கிலேயனுக்கு இருந்த நேர்மை நம்மவர்(?)களுக்கு இல்லாமல் போனது போலிபண்பாட்டுப் பெருமை! இங்கே ஆரியர்-திராவிடர் என்ற பார்வை..
கேள்வி எழவில்லை…மஹாராஷ்ட்ராவிலும்.. குஜராத்திலும்….இன்றைய பாகிஸ்தான்.. பலுசிஸ்தான்..ஆப்கானிஸ்தான்…என நாகரிகத்தின் பயணப்பாதையின் மைல்கற்கள் இன்றும் சாட்சிகளாக உள்ளது.. வடக்கு..தெற்கு என்ற எல்லை விரிவடைந்து கொண்டே சென்று இன்றைய நவீன மனிதனின் ஆதிநிலமாக ஆப்பிரிக்க கண்டம் உள்ளது என்ற டோனி ஜோசப்பின் கருத்தும் இந்தநூலுக்கு வலு சேர்க்கிறது.
ஆழிப்பேரலைகள்…காட்டாற்று வெள்ளம்.. புயல் சூறாவளி பருவகால பேரிடர்கள். எரிமலை…மேம்பட்ட மிருகம்…வாகனம்.. ஆயுதங்களுடன் வரும் புது மனிதக்குழுவின் தாக்குதல்…கடல் ஆட்கொண்டது….என் பல காரணங்களால் மனிதனின் புலம் பெயர்வு தொடர்ந்து கொண்டே உள்ளது. அப்படிப் புலம்பெயரும் போது அவனோடு சேர்ந்து அவனது வளர்ப்பு மிருகம்..பறவை.. மரம்…விளையாட்டு..வழிபாடு..ஊர் பெயர்கள்..தானியம்..இலக்கியம்..பண்பாடு என் அனைத்தும் பயணிக்கின்றன.. இப்படித்தான் அழிவினிறுதியில் சிந்துசம வெளிநாகரிகம் குஜராத்…மஹாராஷ்ட்ரா.. என திராவிட நாகரிக அம்சங்களோடு தெற்கு முனையை அடைந்தது என இந்நூல் ஏராளமான ஆதாரங்களுடன் நிறுவுகிறது..
இன்று தமிழகத்தை DNA ஆராய்ச்சிக்கு உட்படுத்தினால் 65000ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட நவீன மனிதனின் கலப்பில்லாத வாரிசு என்று யாரும் இருக்க மாட்டார்கள் என இந்நூல் கூறுகிறது..
ஆமாம்…5 சதவீதத்திற்கும் குறைவான அளவிலே இன்றும் அந்தமான் நிக்கோபார் அடர்காடுகளிலும்..இந்தியாவின் சில மலைப்பகுதிகளிலும் ஆதிப் பழங்குடியினர் மரபணு கலப்பின்றி வாழ்கின்றனர்.(இவர்கள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது) சிந்துச்சமவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்து என்ன என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.. குமரிக்கோடு கடல் கொள்ளப்பட்ட பின் தமிழ்ச்சங்கம் மதுரை நோக்கி புலம்பெயர்ந்தது என்பதும்.. தொல்காப்பியத்தில் ஏராளமான பழைய நூல்கள் முன்பு இருந்தது குறிப்பிடப்படுவதும்.,.அப்போது என்ன மொழி இருந்தது என்பதற்கும் இனி மேல்தான் ஆதாரங்கள் கிடைத்தாக வேண்டும். ஹரப்பாவிில் துணியின் மீது எழுதப்படும்ம் முறை இருந்ததாக ஊகிக்கப்படுகிறது. அவை அழிந்திருக்க்கூடும். திராவிடப் பண்பாடு தான் நம்நாட்டின் அடிப்படை என்பதையே சிந்து-வைகை அகழ்வாராய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
இந்த ஆய்வுகள் அண்மைக்காலமாகத்தான் தீவிர கவனம் பெற்றுள்ளன. கீழடியிலும்…ஆதிச்சநல்லூரிலும் இரும்பையும்..குதிரையையும் தேடியவர்கள் அவை இல்லாத காரணத்தால் கிடப்பில் போட்டிருந்தனர்..ஆனால் இன்று நாமே எதிர்பாராதவை சாட்சியங்களாய் வெளிப்பட்டு சவால் விடுகின்றன. மரபியல் ஆய்வுமுறை(DNA Test..Carbondating) சென்ஸஸ்்…வாக்காளர் பட்டியல், விலங்கியல்..தாவரவியல்…இலக்கியம்… வரலாறு…மனிதகுல வரலாறு…புவியியல்.. ஜியோ ஆர்பிட்டரி சிஸ்டம்..நேரடி கள ஆய்வு..நாட்டார் கதைகள்..சொலவடைகள்.. வழிபாடாடுமுறைகள்…திசை அடிப்படையில் வீடு கட்டுதல்…சில எண்களுக்கான
முக்யத்துவம்..குல தெய்வம்..கோயிலுக்கென ஸ்தல மரங்கள்…அணிகலன் அணியும் முறை..சொந்த பந்த உறவு முறை.உணவுப் பழக்கம்..விவசாய முறை.. வைத்திய முறை.. எழுத்து முறை..ஆடை.. உலோகம்..கணித முறை.திருமணமுறை…என பல்வேறு அம்சங்களை ஒப்பிட்டு சிந்து வெளி நாகரிகத்தின்..வைகை/பொருநை நதிக்கரை நாகரிகத்தின் அடிப்படை எது என விருப்பு வெறுப்பின்றி நிறுவும் முயற்சியை இந்நூல்!!
ஆங்கிலத்தில் அடைப்புக்குறிக்குள இடம்பெற்றிருக்கும் சொற்கள் தமிழில் இடம் பெற்றிருந்தால் இன்னும் தமிழர் வாசிக்க எளிதாக இருந்திருக்கும். இரண்டு பாகங்களாக பிரித்து அச்சடித்திருந்தால் நூலை எளிதாக மலைப்பின்றி கையாள முடியும்.. விரைவில் தமிழ் வடிவத்தை எதிர்பார்க்கிறோம்!. இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வந்தால் இந்திய அளவில் புரிதல் ஏற்படும். அனைத்துத்தரப்பு மாணவர்களும் படித்து அறிவை விரிவு செய்து கொள்ள அற்புதமான வாய்ப்பை நூல் தருகிறது!.
இரா.இயேசுதாஸ்
அறிவொளி வாசிப்பு இயக்கம்(WhatsApp 7010303347)
மன்னார்குடி 8903105814
rajueasudoss@gmail.com
நூல் அறிமுகம்: ஆர்.பாலகிருஷ்ணனின் சங்கச் சுரங்கம் முதலாம் பத்து கடவுள் ஆயினும் ஆக – சு.பொ.அகத்தியலிங்கம்.
சங்க இலக்கியத்தின் வழி
தமிழர் பண்பாட்டு வேரைக்கொண்டாடி…..
“ சங்கச் சுரங்கம் – முதலாம் பத்து – கடவுள் ஆயினும் ஆக “ எனும் நூலை வாசிக்கத் துவங்கிய நொடியிலிருந்து ஏற்பட்ட வியப்பும் மகிழ்ச்சியும் அளவில்லை. ஆர் .பாலகிருஷ்ணனின் ஆழ்ந்த தேடலும் புலமையும் இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் புன்னகைக்கிறது.
எழுத்தாளர் சு. சமுத்திரத்தின் அலுவலகத்தில் ஓர் மாலையில் சமுத்திரம், சிகரம் செந்தில்நாதன், தயானந்தன் பிரான்ஸிஸ், நான், ஆர். பாலகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்த முதல் நாள் நினைவுக்கு வருகிறது; அப்போது சிந்துவெளி நாகரிகத்தில் திராவிட வேர் குறித்து ஊர் பெயர்களூடே அவர் விவரித்த காட்சி மனத்திரையில் ஆழப்பதிந்துள்ளது.
இந்நூல் வழக்கமான சங்க இலக்கிய விவரிப்போ, நயந்துரையோ அல்ல அதற்கும் மேல் மானுட பண்பாட்டில் தமிழரின் உயரிய பங்களிப்பை இன்றைய காலத் தேவையூடே நுணுகி அலசி காட்சிப் படுத்தியுள்ள களஞ்சியம். பத்து தொடர் உரையின் தொகுப்பு இந்நூல் .
“…… …… …… ….. …. ….. …. …. …. ….. …..
….. ……. …… …… ……. ….. ….. ….. ….. ….. ….
பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும்
இயற்கை அல்லன் செயற்கையில் தோன்றினும்
காவலர் பழிக்கும்இக் கண்கள் ஞாலம்
அதுநற்கு அறிந்தனை யாயின், நீயும்
நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது
பகடுபறம் தருநர் பாரம் ஓம்பிக்
குடிபுறம் தருகுவை யாயின்நின்
அடிபுறம் தாங்குவர் அடங்காதோரே”
இந்தப் பாடலை முதல் உரையில் சுரங்கத்திலிருந்து அரங்கத்திற்கு கொண்டு வரும் போது நூலாசிரியர் சொல்கிறார், “இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சாதாரணப் புலவர் மன்னனைப் பார்த்து ஓர் அறிவுரை சொல்லியிருக்கிறார். அதனை ஆவணப்படுத்தியுள்ளனர். இப்போதைய சூழலுக்கு கற்பனை செய்து பாருங்கள். ஓர் இலக்கியவாதியோ அல்லது ஊடகவியலாளரோ இடித்துச் சொல்வதற்கான வாய்ப்பு உள்ளதா ?”
முழுப்பாடலையும் சுட்டிவிட்டு பொருளைச் சொல்லுகிறார்,” …. …இவ்வாறு நீ வெற்றி பெறுவதற்கு நீ கொண்டு செல்லும் படை மட்டும் காரணமல்ல, உன் நாட்டில் உழுகின்ற விவசாயிகளின் நெல்லினால் விளைந்த பயனும்தான் காரணம். விவசாயிகளின் கலப்பை பயிரை மட்டுமல்ல, உனது வெற்றியையும் கொடுக்கிறது. இவ்வாண்டில் மழை வரவில்லை என்றாலும் வளம் குன்றினாலும் இயற்கை பிரச்சனைகள் அல்லாது செயற்கைப் பிரச்சனைகள் வந்தாலும் மக்கள் காவலரைத்தான் குறை சொல்லுவார்கள். அதாவது மன்னன் மீதுதான் பழிபோடுவார்கள். அதனால் நீ விவசாயிகள்தான் உனது அரசு, நாடு என்ற அடிப்படையைப் புரிந்துகொண்டு அவர்களைக் காத்து, அவர்களுக்கு ஆதரவாய் இருந்தாலே போதும் மற்றவை எல்லாம் இதில் அடங்கிவிடும்.”
முதல் உரையில் இடம் பெறும் இந்த சித்தரிப்பே நூலின் செல்திசையை நமக்கு சுட்டிவிடுகிறது. ஒவ்வொரு உரைக்கும் எடுத்தாண்டுள்ள தலைப்பை கூர்ந்து நோக்கினாலே நூலின் ஆழமும் அகலமும் விளங்கும்.
1.சங்கச் சுரங்கம் அறிமுகவுரை, 2.பசிப்பிணி மருத்துவன், 3. பிறர்கென முயலுநர், 4.பருத்திப் பெண்டிர், 5.கடவுள் ஆயினும் ஆக, 6.கல்லா இளைஞர், 7.முதுவோர்க்கு முகிழ்த்த கை, 8.இமிழ் பனிக்கடல், 9.சேண் நடும் புரிசை, 10 .இடுக ஒன்றோ ! சுடுக ஒன்றோ ! என்கிற பத்து உரையும் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்த விவசாயம், பொதுநலம், நெசவு, உழைக்கும் பெண்கள், தோளில் கை போடும் நம் சாமி, கல்வி, கல்வி அறிவின்மை, முதியோர் குறித்த பார்வை, சுற்றுச் சூழல், செங்கல், வீட, மரணம் என நிறையப் பேசுகின்றன.
ஒவ்வொன்றையும் படித்து முடித்த பின் தமிழ் சமூகம் குறித்த பெருமிதத்தோடு ஒவ்வொருவரும் தாம் தமிழனாகப் பிறந்த பேறை எண்ணி இறும்பூதெய்தாமல் இருக்க முடியுமா ?
ஒவ்வோர் உரை குறித்தும் தனித்தனியே நிறைய எழுதலாம். நூலறிமுகத்தின் எல்லை கருதி பத்து உரை குறித்து பத்து செய்திகளும் கேள்விகளுமாய் மட்டுமே எழுதப் போகிறேன்
1] “மண்ணில் விளைந்து வாய்வழி வளர்ந்த மரபுகளின் ஆவணம்,” சங்க இலக்கியம் எனக்கூறும் நூலாசிரியர் ; சங்க இலக்கியத்தில் “மீள் நினைவுகள் இருக்கின்றன,” என்கிறார். மிகச் சரிதான். நீண்ட இலக்கிய பரப்பினூடே நம் பண்பாட்டு அரசியலை நிறுவும் நுட்பமான முயற்சி பாராட்டுக் குரியது, தோராயமான கால எல்லையும், மருதத்தில் அரசுருவாக்கம் நிகழ்ந்த படிநிலையும் சேர்க்கப்பட்டிருக்கலாமோ ?
2] பசிப்பிணி குறித்த தமிழ்ச் சமூகத்தின் அழுத்தமான பார்வையும் கனவும் எண்ணும் தோறும் ஆச்சரியம் கூடுகிறது. அதனை வலுவாகவே உரையில் நூலாசிரியர் பதிவும் செய்திருக்கிறார். ‘இரந்தும் உயிர் வாழும்’ சூழலும் இருந்திருக்கிறது, ‘கைமாறு கருதா ஈதல்’ குணமும் இருந்திருக்கிறது என இருபுறத்தையும் காட்சிப் படுத்திய நூலாசிரியர் மத்திய அரசின் தானியக் கிடங்கின் பூட்டை உடைத்து அழிபசி போக்க தான் தன் அதிகாரத்தை பயன்படுத்தியது சங்க இலக்கியம் தந்த ஊக்கம் என்கிறார். இப்பகுதியில் மணிமேகலையின் அட்சயபாத்திரம் குறித்து வலுவாகச் சொல்லியிருக்கலாமோ ? பாரதிவரை பயணிக்கும்போது மணிமேகலையும் பேசலாம்தானே ? தமிழ் மண்ணிலும் கற்பனா சோஷலிச வேர் இருந்ததை போகிற போக்கில் சொல்லி இருக்கலாமோ ? [ 49 ம் பக்கம் பாரதியார் பாடல் வரியை வள்ளலார் வரியாகச் சுட்டிய பிழையை அடுத்த பதிப்பில் நேர் செய்க ]
3] அமிழ்தமே கிடைப்பினும் பகுத்துண்ணும் பண்பாட்டு பெருமை உரக்கப் பேசப்பட வேண்டிய செய்தியே. “தமக்கென முயலா நோன்தாள் பிறர்கென முயலுநர் உண்மையானே,” என்கிற மானுடம் போற்றும் வாழ்நெறிக்கு ஈடில்லை. இது நமக்கு வழித்துணை என நூலாசிரியர் முடிவுக்கு வருவது முற்றிலும் நியாயந்தான்.
4] நெசவு, துணி வணிகம், உழைக்கும் பெண்கள் என விரிந்த பரப்பில் ஆற்றிய குறுகிய உரையாயினும் ஆழந்த ஆய்வுக்கு களம் காட்டும் முன்னெடுப்பாகும். யாரேனும் செய்திருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது; தொடர்ந்து செய்வதும் தேவையே.
5] “பெருங்கோயில்களில் இத்தகைய சாமி ஆடுதல் நிகழ்வு ஏன் நடைபெறுவதில்லை என்ற கேள்வியினைக் கேட்டால், அதற்கு பதில், ஏனெனில் பெருங்கோயில்களில் உள்ள சாமியை உங்களுக்குத் தெரியாது; உங்களைச் சாமிக்கும் தெரியாது. அதன் ஸ்தல புராணங்களில் யார்யாரோ இருக்கிறார்கள். அதில் சாதாரண மக்கள் இல்லை.” எனக் கூறும் நூலாசிரியர், “நாட்டார் தெய்வங்களை மக்கள் தங்களில் ஒருவரைப்போல் விளித்து கேள்வி கேட்கும் நடை முறைக் காணப்படுகிறது” என்கிறார். முருகன் வழிபாடு வெறியாட்டு குறித்து வலுவாகச் சொல்கிறார். பரிபாடல் காலத்தில்தான் சுப்பிரமணியனும் தெய்வயானையும் முருகனோடு வலிந்து திணிக்கப்பட்டு நம் மூத்தகுடி வள்ளிக் குறத்தி சக்காளத்தி ஆக்கப்படும் கொடுமை நடக்கிறது. இந்த சமஸ்கிருதமயமாக்கல் அல்லது பார்ப்பணிய மயமாக்கல் குறித்து உரையில் சொல்லப்படிருப்பினும் நா.வானமாமலை சுட்டிக் காட்டியதுபோல் இன்னும் கூர்மையாகச் சொல்லப்பட்டிருக்கலாமோ ? குறிஞ்சி நிலம் போல் ஐவகை நிலத்திலும் நம் மண்ணோடும் மனதோடும் நிறைந்த சாமிகள் வேறு; அதுபோல் நம் தாய் தெய்வங்கள் வேறு. இது குறித்து தனிநூலே ஆசிரியர் எழுதலாமே ? செய்வீர்களா ?
6] “தொல்தமிழர் கல்விக் கொள்கை: அரசன் வெளியிட்ட அறிக்கை” என புறநானூற்றின் 183 வது பாடலை, “ உற்றுழி உதவியும்…. அவன் கண் படுமே,” எனும் பாடல் வரியைச் சுட்டுகிறார். கல்வி, கல்லாமை பற்றி நிறைய செய்திகளை இவ்வுரையில் அடுக்குகிறார். படித்தவனே போற்றப்படுவான் என வரைந்து காட்டுகிறார். கீழடியில் கிடைத்த எழுத்து பொறித்த பானையை சுட்டி கல்வியில் ஓங்கிய பழந்தமிழர் என பெருமிதம் கொள்கிறார். அதே நேரம் கல்லாமை இருந்ததையும் சொல்கிறார். இக்கட்டுரை தமிழரை சுயபெருமிதம் கொள்ளத் தூண்டும். அது தப்பில்லை. ஆயின், கல்வியிலிருந்து சமூகத்தின் பெரும் பகுதியினரை விலக்கி வைக்கும் அநீதி எப்படி அரங்கேறியது என்பதையும் இவ்வுரைப் பரப்புக்குள் கொண்டுவந்திருக்க வேண்டாமா ?
7] முதியோருக்கான கொள்கை அறிக்கை பற்றி இன்றைக்குப் பேசுகிறோம். அன்றைக்கே முதியோரை வணங்கி துணைநின்ற முதுவோர்க்கு முகிழ்த்த கை இருந்ததையும் முதியோர் குறித்த தமிழ் சமூகத்தின் நுண்ணிய பார்வையையும் விரிவாகச் சுட்டுகிறது. பயனில் மூப்பையும் சொல்லத் தவறவில்லை. இன்றைக்கு முதியோர் குறித்த பார்வையும் முதியோர் இல்லம் குறித்த ஒருங்கிணைந்த பார்வையும் தேவை அல்லவா ? விவாதிக்க களம் அமைக்கும் உரை.
8] “கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமம்” என்கிற சொற்றொடரை வைத்து மீன் தூங்குமா என கேள்வி எழுப்பி, தூங்கும் என விடையும் தந்துள்ளார் நூலாசிரியர். கடல் என்பது பெரிதும் நெய்தல் நிலத்தோடு தொடர்புடையதுதான் எனினும் பிற நில மக்களுக்கும் கடல் தொடர்புடையதாய் இருப்பதை, பரதவர் வாழ்வை, கடலும் சுற்றுச் சூழலும், கடலும் இயற்கைப் பேரிடரும் என கடலுக்குள் மூழ்கி பல செய்திகளை சங்க இலக்கியத் துணையோடு நூலாசிரியர் தருகிறார். நெய்தல் நிலம் சார்ந்த ‘இரங்கலும் இரங்கல் நிமித்தமும்,’ குறித்து பரக்கப் பேசுகிறது. புவிவெப்பமாதல் குறித்து பேசும் காலகட்டத்தில் இம்மீள் பார்வை மிகத் தேவையான ஒன்று.
9] “சிந்துவெளிச் செங்கல், சங்க இலக்கியச் சுடுமண், கீழடியின் செங்கல் சுவர் என்ற தொடர் நிகழவினைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் இவ்வுரையினுடைய முக்கிய விசயமாகும்.” என நூலாசிரியர் சொல்வது மட்டுமல்ல அத்திக்கில் நம்மையும் நகர்த்தியுள்ளார். நாம் உரக்கப் பேச வேண்டிய விசயமல்லவா இது ? அதற்கு விசைதருகிறது இவ்வுரை.
10] “ …. பொருள் நிலையாமை ,யாக்கை நிலையாமை, வாழ்க்கையினுடைய நிலையாமை இதெல்லாவற்றையும் பேசி அதனுடைய உள்ளீடாக இருக்கும் வாழ்க்கையினை வாழச் சொல்லி வற்புறுத்துவதுதான் சங்க இலக்கியத்தின் குறிக்கோள் “இவ்வாறு மரணம் குறித்த சங்க இலக்கிய பார்வையை விவரிக்கிறார் நூலாசிரியர். ‘செய்ப எல்லாம் செய்தனன்’ அதாவது ஒருவன் வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வதையே வாழ்க்கை எனக் கொண்டாடும் பண்பாட்டு சித்தாந்தம் தமிழருடையது. ஆம்.சாக்குருவி வேதாந்தம் அல்ல, அனுபவித்து வாழும் நெறியே தமிழர் பெருமை.
“அடிப்படையில் பாலா சார் எந்தத் தத்துவத்தையும் சார்ந்து பார்க்கிறவர் இல்லை. திறந்த மனதோடு எல்லாவற்றையும் பார்ப்பதுதான் அவருடைய தத்துவம். பன்மியம் என்பதுதான் அவருடைய தத்துவமாக உள்ளது. அதுதான் சங்க தத்துவம்கூட .” என தமிழ்ச்செல்வனின் வரையறை சரியானதுதான்.
இந்நூல் கொரானா கடுங்காலத்தில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும், களம் இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்திய இணையவழி பத்து தொடர் உரைகளின் தொகுப்பு. “முதல் பத்து” என்பது “ டாப் டென் “ என்கிற பொருளிலோ, இது முதல் பத்து உரை இன்னும் தொடரும் எனும் பொருளிலோ இருக்கலாம். எதுவாயினும் வேறல்ல. சரியே !
சிந்துவெளி நாகரிகம் தொட்டு இந்தியா முழுவதும் பரவியிருந்த திராவிட பண்பாட்டின் கூறாக சங்க இலக்கியத்தை பார்ப்பதும், தமிழர் பண்பாட்டை அதன் அரசியல் வெப்பத்தோடு இந்நூல் பேசுகிறது. இந்நூலை ஒரு முறைக்கு இருமுறை வாசித்து உள்வாங்குவது மிக அவசியம். இந்தியாவின் பன்மைத்துவத்தை மறுக்கும் பாசிசம் கவ்வும் வேளையில் இந்நூல் புதிய சாளரத்தைத் திறக்கிறது.
இந்த நூல் சுட்டும் நியாயமான பெருமிதத்தோடு; தமிழ்ச் சமூகம் வர்ணமாக கூறு போடப்பட்டதையும் வர்க்கமாக பிளவுண்டு நிற்பதையும் இணைத்து புரிந்து பண்பாட்டை மேலும் முன்னெடுக்க இந்நூலும் ஆயுதமாகட்டும் !
சங்கச் சுரங்கம் – முதலாம் பத்து – கடவுள் ஆயினும் ஆக ,
நூலாசிரியர் : ஆர்.பாலகிருஷ்ணன் ,
பக்கங்கள் : 264 , விலை : ரூ.270/
வெளியீடு :பாரதி புத்தகாலயம் ,
நூல் பெற : 044 24332424 / 24332924








