சென்னை புத்தகக் காட்சியின் எண்ண சிதறல்கள் | ‘நிழல்’ திருநாவுக்கரசுடன் நேர்காணல் – ஆர்.சி.ஜெயந்தன்
தமிழகத் திரைப் படைப்பாளிகள் பின்தங்கிவிடக் கூடாது
– நிழல் திருநாவுக்கரசு
திரையிடல், திரைப்படப் புத்தகங்கள், பயிற்சிப் பட்டறைகள். இந்தப் பயணம் எப்படி?
இம்மூன்றுமே ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்கின்றன. கிராமங்களுக்கு நல்ல படங்களைக் கொண்டுசெல்வது என முடிவெடுத்து தமிழ்நாடு முழுவதும் சுற்றித் திரிந்து பல கிராமங்களில் திரைப்படக் குழுக்களை உருவாக்கினேன். அவர்களை இணைப்பதற்காகத்தான் ‘நிழல்’ தொடங்கப்பட்டது. செயலுக்கான முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதற்காக ‘நிழல் – பதியம்’ இணைந்து ‘குறும்படப் பயிற்சிப்பட்டறை’களை தமிழ்நாடு முழுவதும் நடத்திவருகிறோம். இந்திய அளவில் 60 பட்டறைகள் என்பது ஆச்சரியமே! இதன் மூலம் இன்று 200 பேர் திரைத் துறையில் பணியாற்றிவருகின்றனர். 6,000 கிராமப்புற மாணவர்கள் பயனடைந்துள்ளனர். 10 வெற்றித் திரைப்படங்களை எடுத்திருக்கிறார்கள்.
திரைப்படக் கலையை அதற்குரிய கல்வி நிறுவனங்களில் முறையாகப் பயில முடியாதவர்களுக்கு திரைப்படத் தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்கள் மாற்றாக அமையும் என்று நம்புகிறீர்களா?
நிச்சயமாக… குறிப்பாக கலை, தொழில்நுட்பம் குறித்துத் தாய்மொழியில் பதிப்பிக்கப்படும் நூல்கள் விரைந்து கற்றுகொள்ள உதவுகின்றன. தமிழில் முதன்முறையாக எடிட்டிங்தொழில்நுட்பத்தை ‘படத்தொகுப்பு – கலையும் அழகியலும்’ என்ற நூலாகக் கொண்டுவந்தோம். இது போலவே நடிப்பு, திரைக்கதை, கேமரா பற்றியும் வெளியிட்டோம். தென்கொரிய இயக்குநர் கிம் கி டுக்கின் ‘சினிமாட்டிக் உடல்கள்’, குறும்படம் மற்றும் ஆவணப்படத் தொகுப்பான ‘சொல்லப்படாத சினிமா’, ‘ஈரானிய சினிமா’ போன்றவை பெரிய வரவேற்பைப்பெற்றன. தமிழ் சினிமாபேசத் தொடங்கியபின் 1931முதல் 60 வரை வெளிவந்த படங்கள் பற்றி பல்வேறு இதழ்களிலிருந்து வந்த விமர்சனங்களைத் தொகுத்து ‘தமிழ் சினிமா விமர்சனம்’ என்கிற நூலை ஊடகத் துறை பேராசிரியர் சொர்ணவேலும் நானும் கொண்டுவந்திருக்கிறோம். இப்படி இன்னும் பல.
இன்றைய தமிழ்க் குறும்பட உலகை எப்படி மதிப்பிடுவீர்கள்?
உலகப் புகழ்பெற்ற பல இயக்குநர்கள் குறும்படம் எடுத்துக் கற்றுக்கொண்ட பிறகுதான் பெரிய படங்கள் எடுத்திருக்கிறார்கள். குறும்படம் எடுப்பதன் மூலம், ‘இதை நம்மால் செய்ய முடியும்’ என்கிற நம்பிக்கை முதலில் வரும். இன்று தமிழ்நாட்டின் குறும்படப் படைப்பாளிகள் எடுக்கும் பலபடங்களுக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைத்துவருகிறது. தனா எடுத்த ‘மீனா’ என்கிற படத்துக்கு அமெரிக்காவில் பரிசு கிடைத்துள்ளது. வசந்த், முரளி திருஞானம், மருதன் பசுபதி, பாண்டியன் சூறாவளி, சரவணன் போன்றவர்கள் நம்பிக்கை தருகிறார்கள்.
திரைப்படங்களை, ஊடகங்களைப் புரிந்துகொள்வதற்கான ‘மீடியா அப்ரீசியேஷன்‘ பயிற்சி தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வெறும் கனவா?
அரசு கல்வித் துறைவழியாக முன்னெடுக்க வேண்டிய ஒன்றுதான். ஆனால், தமிழ்நாட்டிலுள்ள பல தனியார் கல்லூரிகளில் காட்சி ஊடகத் துறை மூலம் பயின்றுவரும் மாணவர்கள் அடிப்படையான ‘மீடியா திறனாய்வு’ பயிற்சி பெற்று வெளிவருவது ஆறுதல். நாங்கள் நடத்திவரும் குறும்படப் பயிற்சிப் பட்டறைகளில் படங்களைத் திரையிட்டுத் திறனாய்வுக் கலையை வளர்த்துவருகிறோம்.
‘திறன்பேசிகளைக் கொண்டு குறும்படமெடுக்கப் பயிற்சி’ என்கிற உங்கள் முன்னெடுப்பு எந்தக் கட்டத்தில் இருக்கிறது?
இந்திய அளவில் முதன்முறையாக ‘செல்போன் பிலிம் மேக்கிங்’ குறும்படப் பயிற்சியைத் திட்டமிட்டுள்ளோம். வரும் மார்ச் 7முதல் 10வரை சென்னை, பெருங்களத்தூரை அடுத்த நெடுங்குன்றம் பாலையா தோட்டத்தில் நடத்தவிருக்கிறோம். பிரெஞ்சு இயக்குநர் ழான்-லுக் கோதார் (Jean-Luc Godard), “எல்லோரும் பேனா வைத்துக்கொள்வதுபோல கேமரா வைத்துக்கொள்ள வேண்டும்’’ என்றார். அப்போதுதான் சினிமாவில் ஜனநாயகம் வரும் என்றார். திறன்பேசி கேமரா மூலம் அது இன்று சாத்தியப்பட்டுவருகிறது. பெரிய படங்கள்கூட இன்று திறன்பேசி கேமரா மூலம் எடுக்கப்பட்டு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பங்கேற்கின்றன. தமிழகப் படைப்பாளிகள் பின்தங்கிவிடக் கூடாது என்பதற்காகவே இந்த பட்டறை.
– ஆர்.சி.ஜெயந்தன், தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in
நன்றி: இந்து தமிழ்