கல்வி சிந்தனையாளர்- 10: ஆனி சலிவன். – இரா.கோமதி

கல்வி சிந்தனையாளர்- 10: ஆனி சலிவன். – இரா.கோமதி




1866 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் மாசிசூசிட்ஸ் மாகாணத்தில் பீடிங் மலைகளில் ஆனி சலிவன் பிறந்தார். ஜோஹானா மான்ஸ்பீல்டு சலிவன் தான் இவரது இயற்பெயர். பின் நாட்களில் இவர் ஆனி சலிவன் மேசி என்று அழைக்கப்பட்டார். பார்வையற்றோர்களுக்கான பிரெய்லி எழுத்துமுறையை கண்டுபிடித்த ஹெலன் கெல்லரின் ஆசிரியர் தான் இந்த ஆனி சலிவன் மேசி. ஹெலனை வெற்றி பெற்றவளாக உணர வைப்பதையே தனது வாழ்நாள் லட்சியமாக எண்ணி வாழ்ந்த அர்ப்பணிப்பு ஆசிரியர். ஓர் ஆசிரியரின் நம்பிக்கையும், விடாமுயற்சியும் தனது மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் இவ்வுலகற்கே வழிகாட்டும் என்பது சலிவனின் வாழ்க்கையில் இருந்து நாம் பெரும் பாடமாகும்.

அயர்லாந்திலிருந்து குடிபெயர்ந்த தாமஸ், ஆலின் சலிவன் தம்பதியருக்கு மூத்த மகளாக ஆனி சலிவன் பிறந்தார். இவர் ஐந்து வயதாகும் போது இவரது கண்களில் ‘ட்ரோகோமோ’ நோய் தொற்று ஏற்பட்டு அதனால் கிட்டத்தட்ட அவரது பார்வையை இழந்துவிட்டார். இவர் எட்டு வயதாக இருக்கும் போது இவரது தாயாரும் காசநோயால் இறந்து விட்டார்.

தாயின் மறைவிற்குப் பிறகு இவர்களது தந்தையும் இவர்கள் கைவிட்டு விட்ட நிலையில் சலிவனும் அவரது தம்பி ஜேம்ஸ் என்கின்ற ஜிம்மியும் ட்விக்ஸ்பர்க்கில் உள்ள ‘ஆம்ஸ் ஹவுஸ்’ என்ற காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். குழந்தைகளுக்கு காப்பகம் கொடுமையாகவே இருந்தது. பிற்காலங்களில் சலிவன் தனது காப்பக அனுபவங்களை பகிரும் போது, “காப்பகங்கள் குழந்தைகள் ஆனந்தமாகக் கொஞ்சி விளையாடும் இடங்கள் அல்ல. இடம் பற்றாக்குறையில் நாங்கள் சிக்கித் தவித்தோம். நானும் எனது தம்பியும் பசியால் வாடினோம். நோய்வாய்ப்பட்டு இறந்து போன என் வயது குழந்தைகளின் சடலங்களை அவர்களுக்கு அடக்கம் செய்ய குழி தோண்டும் வரை எங்கள் அறையிலேயே வைக்கப்படுவர். அந்த சடலங்களின் மேல் ஏறி ஓடி விளையாடும் எலிகளை துரத்திப் பிடித்து நானும் என் தம்பியும் விளையாடுவோம். அவ்வளவு கொடுமையான இடமாகவே குழந்தைகள் காப்பகங்கள் இருந்தன.” என்று அவர் குறிப்பிடுகிறார்.

இவ்வளவு கொடுமைகளிலும் கண்பார்வை பாதிக்கப்பட்ட சலிவனுக்கு ஆறுதலாக இருந்தது அவர் தம்பியின் அரவணைப்பு மட்டும் தான். தாலாட்டு பாடி தூங்க வைத்த தம்பியும் ஒருநாள் இல்லாமல் போய்விட்டான் என்பது சலிவன் வாழ்வின் மிகப்பெரிய ஏமாற்றமாகவே இருந்தது. தம்பியின் இறப்பிற்குப் பிறகு சலிவனுக்கு இரண்டு முறை கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அவை இரண்டுமே பயன் அளிக்கவில்லை. இதற்கிடையே இவர் தங்கி இருந்த ட்விக்சன்பேர்க் காப்பகத்தின் மீது சிறர் பாலியல் வன்கொடுமை, நரபலி இடுதல் போன்ற புகார்கள் எழவே அதை விசாரிக்க ஒரு குழு 1880களில் காப்பகத்திற்கு வந்தது. அக்குழுவின் முன் சென்று சலிவன் ‘தான் படிக்க வேண்டும்’ என்று தனது விருப்பத்தை கூறினார். பார்வை தெரியாத நிலையில் படிக்க வேண்டும் என்ற இந்த சலிவனின் உறுதியை கண்டு பிராங்கிளின் பெஞ்சமின் ஆனியை பார்வையற்றவர்களுக்கான பெர்கின்ஸ் பள்ளியில் சேர்த்தார்.

பெர்கின்ஸ் பள்ளியில் இவர் படிக்கும்போது லாரா என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இந்த லாரா என்பவர்தான் பள்ளியில் படித்த முதல் கண் பார்வையற்ற காது கேளாத பட்டம் பெற்ற மாணவி. லாராவிடம் இருந்துதான் ஆனி சலிவன் கைமுறை அகர வரிசை எழுத்துக்களை (Manual Alphabets, Finger Alphabets) கற்றுக் கொண்டார். தனது இருபதாம் வயதில் 1886- இல் பெர்கின்ஸனில் இருந்து பட்டதாரியாக வெளிவந்தார். இச்சமயங்களில் இவருக்கு அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சைகள் மற்றும் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் பலனாக கண்பார்வை பெற்றிருந்தார்.

இந்த நேரத்தில் தான் ஆர்தர் கெல்லரிடம் இருந்து பெர்கின்ஸ் இயக்குனருக்கு ஒரு கடிதம் வருகிறது. ஆர்தர் கெல்லரின் பார்வையற்ற, காது கேளாதே ஏழு வயது பெண் குழந்தைக்கு ஓர் ஆசிரியர் தேவைப்படுவதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது. அப்பணிக்கு பொருத்தமானவராக சலிவன் இருப்பார் என்றெண்ணி பிராங்கிளின் பெஞ்ச்மின் ஆனியை அனுப்பி வைக்கிறார். 1887 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூன்றாம் தேதி, முதல் முதலாக காது கேளாத பார்வையற்ற குழந்தையான ஹெலனை சந்திக்கிறார் ஆனி சலிவன். அந்த நாள் முதல் 1936 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் தனது 70 வது வயதில் உயிர் நீக்கும் வரை ஆசிரியராகவும், உற்ற வழிகாட்டியாக ஹெலனின் கைகளை பிடித்தபடி தன் வாழ்வை அர்ப்பணித்தார் ஆனி சலிவன்.

ஹெலனின் இல்லத்தில் ஆனி சலிவனின் ஆசிரியர் பணி மிகவும் சவாலானதாகவே இருந்தது. செல்வந்த குடும்பத்தில் செல்ல பிள்ளையாக இருந்த ஹெலனின் குறைபாடுகளை மனதில் கொண்டு அவரது பெற்றோர் அக்குழந்தையைக் கட்டுப்பாடுகள் இன்றி வளர்த்து வந்தனர். ஒரு கட்டத்தில் ஹெலனின் நடைமுறை கட்டுப்பாட்டை இழந்து போகும் வேலையில்தான் அவர்கள் தங்களின் தோல்வியை உணர்ந்து ஓர் ஆசிரியரை தேட ஆரம்பித்து ஆனி சலிவனை பெற்றனர். கட்டுப்பாடற்ற கோபம், பிறரை அடித்தல், பொருட்களை இரைத்தல், உடைத்தல், என பல சேட்டைகளை செய்து கொண்டிருந்தாள் ஹெலன். உணவு உண்ணும் வேலையில் மேசையில் அமர்ந்து சாப்பிட தெரியாது அவளுக்கு. அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அவரவர் தட்டுகளில் இருந்தும் எடுத்து,

தான் சாப்பிடுவாள். ஒழுங்கீனமற்ற இப்பழக்கத்தை முதலில் மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தார் சலிவன். அதற்கு முதல் தடையாக இருந்தது ஹெலனின் குடும்பத்தார் தான். ஆனால் சலிவன் கண்டிப்பாக ஹெலனிற்கு முதலில் கற்றுத்தர வேண்டியது ஒழுக்கம்தான் என்று உறுதியாக இருந்தார். சலிவனின் விடாப்பிடியான பிரிவாதத்தால் ஹெலன் முதன்முதலாக ஒர் இடத்தில் அமர்ந்து, தனது தட்டில் இருந்தே உணவை உண்டதே சலிவன் அவருக்கு கற்றுக் கொடுத்த முதல் பாடமாகும். ஆனால் இது ஹெலனுக்கு தலைவன் மேல் வெறுப்பும், கோபத்தையும் உண்டாக்கியது. அதன் காரணமாக தலைவன் கற்றுக் கொடுக்கும் மற்ற பாடங்களை ஹெலன் மனமுவந்து ஏற்க மறுத்தார். கற்பிக்க ஆசிரியர் தயார், ஆனால் எதையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்தால் ஹெலன். சலிவனும் விட்டுக் கொடுப்பதாக இல்லை.

ஹெலனின் தாய் தந்தையரிடம் பேசி , குழந்தை முற்றிலும் தன் கட்டுப்பாட்டில் இருக்குமாறு ஒரு தனிமையான இடத்தில் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சலிவன் கேட்டுக்கொண்டார். ஹெலனின் தந்தை இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. “உங்களால் முடியவில்லை என்றால் நீங்கள் சென்று விடுங்கள். என் மகளை அப்படி தங்களிடம் ஒப்படைக்க முடியாது என்று மறுத்துவிட்டார். ஆனால் ஹெலனின் தாயாருக்கு சலிவன் தான் தன் மகளுக்கு சரியான வழிகாட்டியாக இருப்பார் என்ற நம்பிக்கை இருந்ததால் ஆர்தர் கெல்லரிடம் பேசி இந்த கோரிக்கைக்கு ஒப்புக்கொள்ள வைத்தார்.

இப்போது சலிவனும் ஹெலனும் மட்டும் ஒரு தனி வீட்டில் இருந்தனர். தற்போது ஹெலன் தன்னுடைய எந்த ஒரு தேவைக்கும் சலிவனை மட்டுமே சார்ந்து இருக்க நேர்ந்தது. இதுதான் சலிவனின் திட்டமும் கூட. தற்போது ஹெலனின் பிடிவாதம், முரட்டுத்தனம் அனைத்தும் குறைந்தது. சொல்வதைக் கேட்க ஆரம்பித்தார்.

“என்னது சலிவன் சொன்னார்; ஹெலன் கேட்டாரா??” என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. ஹெலன் கேட்கும் விதத்தில் சலிவன் சொன்னார். இங்குதான் ஓர் ஆசிரியராக சலிவன் மிளிர்கிறார். நன்னூலில் கற்பித்தல் இலக்கண பாடலில் ஒரு வரி உண்டு,

“கொள்வான் கொள் வகை அறிந்து அவன் உள்ளம் கொள்ள

கோட்டம் இல் மனதில் நூல் கொடுத்தல் என்ப”

ஆசிரியர் தனக்கேற்ற கற்பித்தல் உத்தியை பயன்படுத்துவதை விட மாணவர்களுக்கு ஏற்றவாறான கற்பித்தல் முறையை பின்பற்றி கற்பிக்க வேண்டும். ஹெலன் பிற குழந்தைகளில் இருந்து மாறுபட்டவள். எனவே சலிவன் இவளுக்காக தேர்ந்தெடுத்த முறைதான் ‘கையேடு எழுத்துக்கள்'( Manual Alphabets) ஆகும். ஆங்கிலத்தில் ஒவ்வொரு எழுத்துக்கும் தன் விரல்களில் குறியீடு வைத்திருந்தார். உதாரணமாக அவர் ஹெலனுக்கு முதலில் கற்றுத் தந்த வார்த்தை ‘பொம்மை’ ‘DOLL’ என்பதுதான். D-O-L-L என ஒவ்வொரு எழுத்துக்களின் கையேடுக்குறியை ஹெலனின் கைகளில் உச்சரிப்பார். ஹெலன் கூர்மையான தொடு உணர்வு கொண்டிருந்ததால் அக்குறியீடுகளை உட் கிரகித்துக் கொண்டார். ஒரு பொருளின் பெயரை கைகளில் உச்சரித்த பின், ஹெலனிடம் அப்பொருளைக் கொடுப்பார். ஹெலனின் கைகளை தனது முகத்தில் வைத்து தலையை ஆமாம் என்பது போல் அசைப்பார். அவ்வாறு செய்தால் அப்பொருளின் பெயர் அது என்று ஹெலன் புரிந்து கொள்வார். இம்முறையை ஹெலன் வெளி உலகோடும் மனிதர்களோடும் தன்னை தொடர்பு படுத்திக் கொள்ள சலிவன் பயிற்றுவித்தார். ஹெலனும் சலிவனும் மட்டுமே இருந்த தனிமை ஹெலனை நிறைய வார்த்தைகளையும், ஒழுக்கங்களையும் கற்றுக் கொள்ள உதவியது. ஹெலனின் குடும்பத்தார் மட்டும் அவ்வப்போது வந்து என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டு செல்வர்.

ஹெலனின் தந்தை இரண்டு வாரங்கள் மட்டுமே கொடுத்திருந்தார். அந்த இரண்டு வாரங்கள் முடிவடைய போகிறது. சலிவன் பல வார்த்தைகளை ஹெலனுக்கு இந்த இரண்டு வாரங்களில் கற்றுக் கொடுத்திருந்தாலும், தனக்கு இன்னும் கொஞ்ச கால அவகாசம் தேவை என்று ஆர்தரை கேட்டுக் கொண்டார். ஆனால் ஆர்தர் கெல்லர் மறுத்துவிட்டார். எனவே மீண்டும் ஹெலனும், சலிவனும் ஹெலனின் வீட்டிற்கு வந்துவிட்டனர்.

ஏற்கனவே அரைகுறை மனத்திருப்தியோடு வந்திருந்த சலிவனுக்கு, தன் வீட்டிற்கு வந்த பிறகு ஹெலன் பழையபடி தான் கற்ற அனைத்தையும் உதறிவிட்டு ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்வது பெரும் ஏமாற்றத்தை தந்தது. தன்னுடைய கடின உழைப்பு அனைத்தும் வீணாகப் போனது என்ற வருத்தத்தை விட, இப்படியே போனால் ஹெலனின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வியே அவர் முன் நின்றது. எனவே இந்த அணுகுமுறையை அனுமதிக்க கூடாது என்று முடிவெடுத்தார்.

பல வார்த்தைகளை கையேடு உச்சரிப்பு முறையில் கற்ற ஹெலன் தண்ணீர் -WATER என்ற வார்த்தையை மற்றும் கற்றுக் கொள்ளவில்லை. இவ்வார்த்தையை பலமுறை வெவ்வேறு வடிவங்களில் ஹெலனுக்கு கற்றுத் தர முயற்சித்தும் சலிவனால் முடியாமல் தோல்வியைக் கண்டார். எனவே இதனை கற்றுத்தரும் வரை ஹெலன் கற்றுக் கொண்டது எதுவும் அர்த்தமற்றது என்று சலிவன் எண்ணினார். அதற்காக தான் ஹெலனின் தந்தையிடம் கால அவகாசமும் கேட்டிருந்தார். ஆனால் அதுவுன் கிடைக்கவில்லை. இப்போது வீடு திரும்பிய ஹெலன் தன் கற்றல் பாதையில் இருந்து விலகி நடப்பதைக் கண்ட சலிவன் பொறுமை இழந்து ஹெலனை அவ்வீட்டின் அடிக்குழாய்க்கு அழைத்துச் சென்றார். இல்லை இழுத்துச் சென்றார் என்றே கூற வேண்டும். ஹெலனும் பிடிவாதம் காட்டினார். தனது தாய் தந்தையர், தன் பக்கம் இருப்பர் என்று நினைத்தார். ஆனால், சலிவன் ஹெலனின் கற்றலில் காட்டிய பிடிவாதத்திற்கு முன்பு அவளின் பிடிவாதம் தோற்றுப் போனது. அடி குழாயை அடித்து கொட்டும் தண்ணீரில் ஹெலனின் கைகளை நீட்டி பின்னர் அவள் கைகளில் WATER என்ற வார்த்தையை கையேடு எழுத்துக்களால் W-A-T-E-R என உச்சரித்தார். இதுவரை தண்ணீரை டம்ளர், ஜக்கு, குடம், குளம் என பல வடிவங்களில் காண்பித்து உச்சரித்த போது புரிந்து கொள்ள முடியாத ஹெலன் இம்முறை இவ்வார்த்தையை ‘ஏற்கனவே தன் கைகளில் உச்சரிக்கப்பட்ட வார்த்தை; இதன் பொருள் தண்ணீர்’, என்பதை புரிந்து கொண்டாள். கற்றுக் கொண்ட வார்த்தையை தன் ஆசிரியர் கைகளில் உச்சரித்து காண்பித்தார். ஆசிரியர் ‘ஆமாம்’ என்ற தலையை அசைக்க கற்றலில் பெரு மகிழ்ச்சி கொள்கிறாள். மீண்டும் தன் கற்றல் பாதைக்கு திரும்புகிறார்கள்.உடனே தன் தாய் தந்தையிடம் சென்று அவர்கள் கைகளில் கையேடு எழுத்து முறையை பயன்படுத்தி ‘அம்மா’, அப்பா’ என்ற பெயர்களை உச்சரித்து காண்பிக்கிறாள். யாருக்கும் அடங்காத பிடிவாத முரட்டு குழந்தையாக இருந்த ஹெலன் இப்போது கற்றலில் திளைப்பதை பார்த்து பெற்றோர்களுக்கு நம்பிக்கை நிலைத்தது. பார்வையற்ற காது கேளாத நிலையிலும் இவ்வுலகில் பிறரை போல வாழ வழி பிறந்தது என்றும் மகிழ்ந்தனர். அம்மா அப்பா என்ற சொற்களை உச்சரித்த ஹெலன் நேரே ஓடிப்போய் சலிவனிடம் நின்றாள். சலிவனின் முகத்தில் கையை வைத்து தம் கைகளை நீட்டி “நீங்கள் யார் எனக்கு என்று அதை கையேடு முறையில், தன் கைகளில் உச்சரிக்க சொன்னாள்”. சலிவன் டீச்சர்- ‘TEACHER’ என்று உச்சரித்தார்.

‘டீச்சர்’ – ‘ஆசிரியர்’ இவ்வார்த்தைக்குள் எத்தனை அர்த்தங்கள் உள்ளன என்று ஹெலன் அன்று உணர்ந்தார். இன்று அவரை படித்த நாமும் உணர்வோம்.

– இரா. கோமதி

கல்வி சிந்தனையாளர்- 9: காய் யுவான் பீ – இரா. கோமதி

கல்வி சிந்தனையாளர்- 9: காய் யுவான் பீ – இரா. கோமதி



காய் யுவான் பீ (1868 -1940)


சீனாவின் கல்வி வரலாற்றை பின்னோக்கி சென்று பார்த்தோமாயின் மிக நீண்ட நெடிய காலமாக ‘ஏகாதிபத்திய தேர்வு முறை’ என்ற சொல்லாடல் நீக்கமற நிறைந்திருந்ததை நாம் காணலாம். சீன அரசு பிரபுத்துவத்திலிருந்து ஒரு தகுதிவாய்ந்த அரசாங்கத்திற்கு மாறுவதற்கான கருவியாக இத்தேர்வு முறை இருந்து வந்தது. கல்வியும் அதிகாரத்தின் அடையாளமாக காணப்பட்டது. ஏகாதிபத்திய தேர்வு முறையில் அர்த்தமற்ற மதிப்பெண்களை குவித்து, அதிகாரத்தின் ஒரு அங்கமாக திகழ்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்ட கல்விமுறையின் அட்டூழியத்தில் சிதைந்துபோன எத்தனையோ பிஞ்சுக் குழந்தைகளிலிருந்து வந்த ஒருவன் தனது 30 ஆவது அகவையில் ‘என்ன கல்வி முறை இது? எதற்காக நாம் இதை கற்றோம்! பள்ளிக்கூடங்கள் நமக்கு எதை கற்பித்தன! மதிப்பெண்கள் பெறுவதில் என் குழந்தைப் பருவத்தையும், கடுமையான விதிகளுக்கு உட்பட்டு நான் கற்றுத்தேர்ந்த மொழிப் புலமையை அறிஞர்கள் முன் எடுத்துரைத்து எனது புலமையை நிரூபிப்பதில் என் இளமைப் பருவத்தையும் தொலைத்ததை தவிர வேறொன்றும் இந்த கல்விமுறை எனக்கு தந்து விடவில்லை’ என்று தனது நியாயமான கோபத்தை உந்துசக்தியாக கொண்டு சீனாவின் கல்வி சீர்திருத்தத்தை முன்னெடுத்துச் சென்ற கல்வியாளர் காய் யுவான் பீ.

காய் யுவான் பீ அவர்கள் 11 ஜனவரி 1868 அன்று ஜெஜியாங் மாகாணத்தின் ஷாக்ஸிங்கில் பிறந்தார். அவரது தந்தை ஓர் உள்ளூர் வங்கியின் மேலாளர். வசதியான குடும்பத்தை சேர்ந்தவரான காய் 1890 ஆம் ஆண்டில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஏகாதிபத்திய தேர்வு முறையின் வரலாற்றில் வெற்றிகரமான இளைய வேட்பாளர்களில் ஒருவரானார். மேலும் தனது 22வது வயதில் முனைவர் பட்டமும் பெற்றார். அதன் பின்னர் ஹன்லின் அகாடமியில் உறுப்பினரானார். இது ஒரு அறிஞருக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த மரியாதையாகும். இந்த அகாடமியில் 1894-ம் ஆண்டு கம்பைலர் தரத்திற்கு உயர்த்தப்பட்டார்.

காய் அவர்கள் ஒரு சமூகமாற்ற புரட்சியாளராகவும் சீனாவின் இன்றுவரையில் மிக சிறந்த கல்வியாளராகவும் மதிக்கப்படுகிறார்.இவர் 1916- 1926 வரை பெய்ஜிங்கிலுள்ள முக்கிய ஆராய்ச்சி பல்கலைக்கழகமான பீக்கிங் பல்கலைகழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தார் . இவர் தலைவராக இருந்த காலகட்டத்தில் இப்பல்கலைகழகம் சீனாவில் தேசியவாதம் மற்றும் சமூக சீர்திருத்தத்தின் புதிய உணர்வை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தது.

காய் தனது கல்விச் சீர்திருத்த வேலைகளை பழமைவாத கல்வி முறையை சாடுவதிலிருந்து துவங்குகிறார். தன்னுடைய முதல் புத்தகமான பள்ளி கலைத்திட்டம் 1901 இல் வெளியிட்டார். இப்புத்தகத்தில் தனது இளமைப் பருவ அனுபவங்களையும் சமகால சிந்தனைகளையும் பகுப்பாய்வு செய்து பார்க்கிறார். இப்புத்தகத்தில் கல்வியின் அடிப்படைத் தத்துவத்தை மிகவும் வலுவாக தெளிவுபெற கூறியுள்ளார்.

சீனாவின் பாரம்பரிய கல்வி முறையில் உள்ள குறைபாடுகளின் காரணங்களை கண்டுபிடிப்பதில் முனைகிறார். தேர்வுமுறைகளை அடிப்படையாக கொண்ட பழைமையான கல்விமுறையின் வரம்புகளை பற்றி சாடுகிறார். அதன் விளைவாக பாரம்பரிய கல்வி முறையின் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கின்றார். இவ் விமர்சனங்களை சீன மொழியின் ஆறு சொற்சுட்டுக்குறிப்புகளாக விளக்குகிறார். அவை

· தாழ்வானது
· ஒழுங்கற்ற
· மேலீடான
· அச்சமூட்டும்
· சோர்வடைய செய்கின்ற
· மாயமான

என குறிப்பிடுகிறார். இவ்வாறு குறிப்பிடுவதற்கான காரணங்களை கீழ்வருமாறு விளக்குகிறார்.

1. கல்வியின் நோக்கம் தாழ்வானதாக இருக்கிறது. தேர்வில் தேர்ச்சி பெறுவதை மட்டுமே சொல்லிக்கொடுக்கின்ற சுயநலமிக்க கல்விமுறை இழிவானதாகும்.

2. குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்யாத, பழமைவாதம் கொண்ட மற்றும் மாற்றத்தை போதிக்காத பழமையான பாடப்பொருளை கொண்ட கல்வியை ஒழுங்கற்றது என்கின்றார்.

3. மொழியின் உள்ளீடுகளை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் அப்போதைய கற்றல் கற்பித்தல் முறையினை மேலோட்டமானது என்கிறார்.

4. மாணவர் ஆசிரியர் உறவு முறையை அச்சமூட்டும் என்று குறிப்பிடுகின்றார் ஏனெனில் ஆசிரியர் என்பவர் முழு அதிகாரம் பெற்றவராகவும் மாணவர்கள் ஆசிரியர்களை கேள்வி கேட்கும் உரிமை அற்றவர்களாக இருந்தனர்.

5. மனரீதியாக கற்றலுக்கு ஊக்கமளிக்காத மகிழ்ச்சியற்ற சிறைசாலைபோல் பள்ளிகள் இருந்தன. இதையே சோர்வடைய செய்கின்ற என்று குறிப்பிடுகிறார்.

6. பள்ளிக் கல்வி முறையின் நோக்கம் பயனற்றதாகவும், பொருத்தமற்றதாகவும் இருக்கும்போது சிவில் சர்வீஸ் தேர்வு முறையில் வெற்றி பெறுவது ஒரு மாய தோற்றம் ஆகும். இது ஏமாற்றத்தை தரகூடியது மற்றும் பயனற்ற முறையாக இருந்தது.

காய் அவர்களுடைய கல்வி பங்களிப்பு:

சீனாவில் புரட்சி ஏற்பட்டு மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, சீன குடியரசு உதயமான அச்சமயத்தில் தான் சீன குடியரசின் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றிருந்தார் காய் அவர்கள். புதியதாக உருவாக்கப்பட்ட குடியரசின் கல்வி அமைச்சராக அந்நாட்டின் கல்வி முறை பற்றி காய் பெறும் பொறுப்பையும் அதேசமயம் கவலையையும் சுமந்து கொண்டிருந்தார். தான் படித்த கல்வி முறையில் உள்ள பெரும் குறைகளை தொடரக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்தார். அதே சமயம் தான் படிக்கும் காலத்தில் இருந்தே மேற்கத்திய கல்விமுறையிலும், மேற்கத்திய நாடுகள் எவ்வாறு விரைவாக வளர்ச்சி காண்கின்றன என்பதின் மீதும் பெரும் வியப்பைக் கொண்டு இருந்தார். காய் அவர்கள் சீனாவில் வளர்ந்திருந்தாலும் அவ்வப்போது மேற்கத்திய நாடுகளுக்கு சென்று கல்வியும் கற்று இருந்தார். எனவே மேற்கத்திய கல்வி முறைக்கும் சீன கல்வி முறைக்கும் உள்ள வேறுபாடுகளை ஒப்பிட்டு பார்த்து சீனாவில் கல்வி முறையில் உள்ள குறைபாடுகளை எவ்வாறு கலைவது என்பதற்கான திட்டங்கள் காயின் மனதில் இருந்தன. அத்திட்டங்களை மனதில் வைத்துக் கொண்டு மேற்கத்திய கல்வி முறையின் முக்கிய கூறுகளை உட்படுத்தி தங்கள் நாட்டுக்கு ஏதுவான ஒரு புதிய கல்வி முறையை அவர் முன்மொழிந்தார்.

அவை

1) இராணுவகல்வி (military/citizenship)

2) பயன்பாட்டுக் கல்வி (utilitarian)

3) அறநெறி கல்வி (moral)

4) உலகலாவிய கல்வி (a worldview)

5) அழகியல் கல்வி (aesthetic education)

போன்றவையாகும்‌.

புரட்சிகளும் போர்களும் புகை சூழ காணப்பட்ட சீனாவின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது முக்கியமாக கருதப்பட்டது. சீனாவில் ஏற்பட்ட உள்நாட்டு புரட்சியை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நாட்டை சிதைத்து விடலாம் என்று பிற நாடுகள் கண் கொத்தி பாம்பாக உற்று நோக்கி கொண்டிருப்பதை உடந்த காய் அவர்கள் நாட்டின் மீது மக்களுக்கு பற்றை ஏற்படுத்த நல்ல குடிமக்களை உருவாக்கும் ராணுவ கல்வி தேவை என்று கருதினார். அக்கால கட்டத்தில் சீனா எதிர்கொண்டிருந்த அச்சுறுத்தல்களை கலைய நாட்டின் இளைஞர்களுக்கு தேசியத்தின் மீது பற்றை வளர்க்க வேண்டும், அதற்கு ராணுவ கல்வி உதவும் என்று அவர் நம்பினார். எனவே அதை செயல்படுத்தினார்.

மேற்கத்திய நாடுகளின் கல்வி முறை அந்நாட்டு மக்களின் நலனை புறம் தள்ளி, சுயநலமிக்க அரசியல் காரணங்களுக்காகவும், பொருளாதார வளர்ச்சியின் நகர்வுக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டதை அவர் வெறுத்தார். கல்வி என்பது அடிப்படையில் இருந்து மக்களின் நலனை, மக்களின் வாழ்க்கை தரத்தை, மக்களின் நல் எண்ணங்களை போற்றி வளர்க்கக்கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறான வளர்ச்சியே ஒரு நீடித்த நெடிய அறிவார்ந்த வளர்ச்சியாக இருக்கும் என காய் நம்பினார். மக்கள் நலனோடு கூடிய நாட்டின் வளர்ச்சியை தரக்கூடிய பயன்பாட்டு கல்வி முறையை அவர் முன்மொழிந்தார். ஜான் டூயி அவர்களின் நடைமுறை கோட்பாட்டில் இவர் உடன்பட்டு இருந்தார். எனவே நடைமுறை தேவைக்கு ஏற்றவாறு கல்வியை மாற்றி அமைக்க வேண்டும் என்று இவர் விரும்பினார்..

அறநெறிகள் சீனா கலாச்சாரத்தின் ஓர் அங்கமாகவே என்றும் பார்க்கப்பட்டது. ஆனால் அறநெறிகள் நம்மை அடிமைத்தனத்திற்கு அழைத்துச் செல்வதை அவர் விரும்பவில்லை பாரம்பரியம் என்ற பெயரில் இத்தனை ஆண்டுகளாக நிலவி வந்த மன்னர் ஆட்சி முறை சீனாவின் வளர்ச்சிக்கு தடையாக இருந்ததை உணர்ந்திருந்த காய் அவர்கள் நாட்டு மக்களின் வாழ்வியலுக்கு ஏற்றவாறு அற நெறிகளை மாற்றி அமைக்க மேற்கத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை கல்விமுறையில் இணைக்க வலியுறுத்தினார். ‘மன்னர் எது சொன்னாலும் கேள்வி கேட்காமல் அவர்களுக்கு விசுவாசமாக இருப்பது, மன்னர்களை கடவுளாக நினைப்பது, கன்பூசியஸை கடவுளாக வழிபடுவது போன்ற அறநெறிகள் குடியரசின் தன்மையை குறைப்பதாக அவர் சாடுகிறார். எனவே இம்மாதிரியான பிற்போக்குத்தனமான அறநெறிகளை பாடத்திட்டத்தில் இருந்து அறவே எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார். அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் ஆதாரமாகக் கொண்ட அறநெறிகளை பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

21 ஆம் நூற்றாண்டில் உலகமயமாதல் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். உலகமே ஒரு சிறிய கிராமம் என்ற வாதங்களும் இன்று இருக்கின்றன. தொலைநோக்கு பார்வை கொண்ட காய் அவர்கள் அப்போதே உலகளாவிய கல்வி முறை வேண்டும் என்று எண்ணினார். மனிதவள அறிவியல் வளர்ச்சியும், ஜனநாயகத் தன்மையும், பொருளாதார வளர்ச்சியும் அன்றைய சீனாவின் தேவையாக இருந்ததை இவர் உணர்ந்திருந்தார். எனவே கல்வியில் உலக நாடுகளில் பின்பற்றப்படும் சிறந்தவை அனைத்தையும் சீனாவின் கல்வி முறையில் உட்படுத்த வேண்டும். ஒரு குறுகிய வட்டத்திற்குள் அல்லாமல் கல்வியின் ‘உலகளாவிய பார்வை’ சீனாவை உலகளாவிய வகையில் வளர்ச்சி பெற செய்யும் என்று எண்ணினார். பழைய காலங்களில் இருந்தது போன்ற தேர்வு முறை ஓட்டப் பந்தயங்கள் ஒரு அடிமைத்தனத்தையே உருவாக்கும், மாறாக அறிவியலும் தொழில்நுட்பமும் உலகளாவிய பார்வையும் சீன கல்வி நிறுவனங்களை மேற்கத்திய தொழில்துளை வளர்ச்சி அடைந்த நாடுகள் போல் மேம்படுத்தும். எனவே உலகளாவிய பார்வை கொண்ட கல்வியை அவர் முன்மொழிந்தார்.

மனிதனின் வாழ்வில் அழகிகள் சார்ந்த தேவைகள் நீக்கமற கலந்திருக்கும் என்று உணர்ந்திருந்த காய் அவர்கள் சீன கலாச்சாரத்தின் அழகியல் தன்மைகளான ஓவியம், இசை, நடனம் போன்றவற்றை புதிய கல்வி முறையில் சேர்க்க வேண்டும் என்று விரும்பினார். இது மாணவர்களை மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும், இலகுவாகவும் வைத்திருக்கும் என்று நம்பினார். அதுவரை அந்நாட்டில் பெருகிக் கிடந்த மதபோதனைகள் இளைஞர்களை குறுகிய பாதையில் கொண்டு சென்று மழுங்கடித்ததை எண்ணிப் பார்த்த காய் அவர்கள், அவ்வாறான மத போதனைகளுக்கு மாற்றாக இந்த கலை அழகியல் சார்ந்த கல்வி அமையும் என்று நம்பினார். இந்த அழகியல் சார்ந்த கல்வி மாணவர்களை சுயநலத்தில் இருந்து அப்பால் கொண்டு சென்று பொதுநலம் மனிதத் தன்மை போன்றவற்றை உணரவும் அவற்றை வளர்க்கவும் பயன்படும் என்று நம்பினார்.

கல்வி சீர்திருத்தங்கள்:

சீன குடியரசின் புதிய கல்வி அவதாரத்தை தீர்மானித்தவர் காய். சீன குடியரசின் வளர்ச்சியின் அஸ்திவாரத்தை அறிவியல் சிந்தனையில் இருந்து கட்டமைக்க எண்ணினார். எனவே தான் தன் பொறுப்பில் இருந்த கல்வியை அறிவியல் தொழில்நுட்பத்தின் அடித்தளத்தில் நிறுவினார். நாட்டை நவீனப்படுத்த கல்வியை நவீனமாக்குவதே முதற்படி என்று எண்ணிய காய் கல்வி சீர்திருத்தங்களை முன்னெடுத்தார்.

கல்வியை நவீனப்படுத்துவதை பாரம்பரிய கல்வி முறையின் மீது கடும் தாக்குதலில் இருந்து துவங்கினார். புதிய நாட்டிற்கான சுயமரியாதையை கட்டமைக்க வேண்டுமாயின் கல்வியில் நவீனத்தை நோக்கி தனக்கென ஒரு பாதை அமைக்க வேண்டும் என்றார். எந்த ஒரு நாடாக இருப்பினும் அதற்கென்று பழம் பெருமைகளும் பாரம்பரியங்களும் இருப்பது இயல்பே. ஆனால் மாறிவரும் சூழலுக்கு ஏற்றவாறு பழமைவாதத்தில் பொருத்தம் உடையது பொருத்தம் அற்றது என்று பிரித்துப் பார்க்கும் நாடே முன்னேறும். மாறிவரும் சூழலுக்கு தகுந்தாற்போல் தனது கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் மாற்றங்களை கொண்டு வர தயாராக இருக்கும் நாடே ஒளிரும். ஆனால் அப்போது இருந்த சீன கல்வியாளர்களோ தங்கள் பண்டை நாகரிகத்தின் அம்சங்களை மாற்ற தங்களை தயார் படுத்தாமலேயே இருந்தனர். நம் பழம் பெருமைகளை பேசிக்கொண்டே இருப்பதினால் தொடர் தோல்விகளும் அவமதிப்புகளும் நிகழும்.

காய் அவர்கள் மேற்கத்திய அறிவியல் மீது தீராத தாகம் கொண்டிருந்தார் அந்நாடுகளைப் போல் நம் நாடும் சிறப்புற்று மக்கள் மகிழ்வாக வாழ்ந்திட மாட்டார்களா என்ற ஏக்கம் அவர் மனதில் சுடர் விட்டு எரிந்து கொண்டே இருந்தது. அதற்காக நம் பாரம்பரியத்தை முற்றிலும் மறந்துவிட்டு கண்மூடித்தனமாக மற்றவர்களின் கோட்பாடுகளை அப்படியே ஏற்றுக் கொள்வதை காட்டிலும், நமக்குத் தேவையானதை நாமே ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் எண்ணினார். எனவே சீனாவின் அப்போதைய சூழலுக்கு ஏற்ப வெவ்வேறு மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரத்தில் உள்ள சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து, அவற்றைத் தொகுத்து, நம் நாட்டின் சிறப்பு நிலைக்கு தகுந்த புதிய கோட்பாடுகளை செயல்படுத்தி பார்த்து உண்மையான சீர்திருத்தத்தை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.

அவ்வாறு உருவாக்கும் போது முதல் படி நிலையாக மேற்கத்திய நாடுகளின் அறிவியல் ஆர்வத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்று என்றார். அறிவியல் ஆர்வத்தை கல்வியின் மூலமாக விதைப்பதே அந்நாடுகளின் வெற்றியின் ரகசியமாக இருக்கிறது என்கிறார். அறிவியல் ஆர்வத்தை உண்டு பண்ணி, அறிவியல் மனப்பான்மையை அதிகரித்து, அதன் மூலமாக மனிதனின் சிந்தனையை விரிவடைய செய்ய வேண்டும். சீனாவின் பழைய கலாச்சாரங்களை முற்றிலுமாக ஒதுக்கிவிடாமல் தற்போதைய காலகட்டத்திற்கு பொருத்தமானதை தேர்ந்தெடுத்து, அத்தோடு மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை சீனாவிற்கு தகுந்தார் போல் வடிவமைத்து இவை அனைத்தையும் ஒன்றாக கலந்த ஒரு கல்வி முறையை பரிந்துரை செய்து கல்வியில் சீர்திருத்தத்தை ஏற்படுத்தினார்.

கல்வியில் சுதந்திரம்:

கல்வி என்பது மனித அறிவையும், தனிமனித பண்பையும் வளர்க்க வேண்டுமே தவிர, யாருடைய சுயநலத்திற்காகவும் மனங்களை தயார்படுத்தும் ஒரு கருவியாகிவிட கூடாது. இதன் அடிப்படையில் நல்ல கல்வி நிறுவனங்கள் முற்றிலும் எந்த ஒரு தலையீடும், ஆதிக்கம் இல்லாத சுதந்திர நிறுவனமாக (Independent Schooling) கல்வியாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றார்.

அப்போது சீனாவில் கல்வியில் அரசியல் மற்றும் மதங்களின் ஆதிக்கமும் குறுக்கீடும் இருந்து வந்தது. இதை எதிர்த்தார். கல்வி என்பது எந்த ஒரு குறுக்கீடும் இல்லாமல் கல்வியாளர்களிடையே தரப்பட வேண்டுமென கல்வியை காப்பாற்ற ஒரு புதிய நிர்வாக திட்டத்தை பரிந்துரைக்கிறார். அதுவே மாகாண பல்கலைக்கழக திட்டம்.(University Council)

ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு பல்கலைக்கழகம் அமைக்க பரிந்துரைத்தார். பல்கலைக்கழகங்கள் அந்த மாகாணத்தின் பள்ளி கட்டமைப்பை பார்த்துக்கொள்ளவேண்டும். பல்கலைக்கழக பேராசிரியர்களைக் கொண்டு ஒரு சிறப்பு கல்வி குழு அந்த மாகாணத்தில் உருவாக்கப்படும் இக் குழு உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு பல்கலைக்கழக அதிபரை தேர்ந்தெடுப்பர். கல்வியாளர்கள் அனைவரும் சேர்ந்து விவாதித்து கல்விக் கொள்கையை தீர்மானிப்பார்கள். அந்தந்த மாகாணத்தில் பெறப்படும் வரியிலிருந்து கல்விக்கான நிதி வழங்கப்படும். நிதி பற்றாக்குறை இருப்பின் மத்திய அரசிடமிருந்து நிதி பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு நாட்டின் வளர்ச்சிக்கு தேவை அரசியல் மற்றும் மத நம்பிக்கைகளின் தலையீடுகள் அற்ற ஒரு சுதந்திரமான கல்விமுறை என்பதை அவரால் முழுமையாக செயல்வடிவம் தரமுடியாமல் போயிற்று. 1922 சீனாவில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள் காரணமாக இது சாத்தியமற்றுப் போயிற்று.

கல்வி என்பது அரசியல் பிடியிலும் மதத்தின் பிடியிலும் இருக்கக் கூடாது என்பதே காயின் சிந்தனை. ஆனால் 1927 ஆம் ஆண்டு சீனாவில் நிறுவப்பட்ட குமிட்டான் தேசியவாத அரசுக்கு காயின் இந்த கல்விமுறை ஏற்புடையதாக இல்லை. பள்ளிகள் சுதந்திரமாக செயல்படுவதை எந்த ஆட்சியாளர்களும் விரும்பவில்லை என்ற கசப்பான உண்மையை காய் புரிந்து கொண்டார். ஆனாலும் தனது கொள்கையில் விடாப்பிடியாக வேலை செய்து கொண்டே இருந்தார்.

கல்வி நிர்வாகம் செயல்படும் விதத்தை மக்கள் முடிவு செய்யட்டும் என்ற வாதத்தை முன் வைத்தார். ஜனநாயகமான நிர்வாக முறையில் இரண்டு முக்கிய கூறுகள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டுகிறார்:

1) பெருவாரியான மக்கள் பரிந்துரை செய்கின்ற திட்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

2) காலத்திற்கு தகுந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

ஒரு சிறந்த நிர்வாகியாகவும் கல்வியாளராகவும் திகழ்ந்த காய் அவர்கள் கல்வியின் அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிந்து கிடப்பது ஆபத்தானது என்றார். எப்போதும் தனது பொறுப்புகளை அனைவருடன் பகிர்ந்து கொள்ளவே விரும்பினார். கல்வி என்பது நேரடியாக அனுபவம் வாய்ந்த கல்வியாளர்களிடமும், கல்வியோடு தொடர்புடையவர்களிடமும் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கூறுவார். பீஜிங் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பொறுப்பேற்று இருந்த காய் உயர்கல்வியில் பெரும் சீர்திருத்தங்களை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு நிர்வாகமும் ஜனநாயக முறையில் நிகழும் போதே நிகழ வேண்டும் என்று எண்ணிய காய் அவர்கள் கல்வி உதவி திட்டங்களை உருவாக்கி, சிறந்த ஆராய்ச்சிகளையும் ஊக்குவித்து கல்விப் புரட்சியை ஏற்படுத்திக் காண்பித்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான சென் டியுக்சியோ (Chen Duxiu), ஜான்டூயின் சிந்தனைகளை சீனாவிற்கு அறிமுகம் செய்து கல்வி புரட்சிகளை மேற்கொண்ட ஹூ ஷிஹு(Hu Shih) போன்ற இன்னும் பல தலைவர்களை பீஜிங் பல்கலைக்கழகம் தந்த பெருமை காயின் நிர்வாக முறையை பறைசாற்றும்.

சீனாவின் நவீன கல்வி முறையில் மிகப்பெரும் மாற்றங்களை கொண்டு வந்த முதல் மற்றும் மிகப்பெரிய கல்வியாளர் காய். பழமைவாத கல்வி முறையை சாடுவதில் இருந்து, ஐந்து வகையான கல்வி கோட்பாடுகளை பரிந்துரைத்து, அவற்றுக்கு ஜனநாயக முறையில் செயல்வடிவமும் கொடுத்து, கல்வி நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற முழக்கத்தையும் நிறுவிய காய் சீன கல்வி வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் ஆதிக்கமும் பெற்ற கல்வியாளராக போற்றப்படுகிறார்.

இரா. கோமதி

கல்வி சிந்தனையாளர்- 8 : ஆஸ்ட்ரிட் லின்ட்கிரன் – இரா. கோமதி

கல்வி சிந்தனையாளர்- 8 : ஆஸ்ட்ரிட் லின்ட்கிரன் – இரா. கோமதி



ஆஸ்ட்ரிட் லின்ட்கிரன்

Buy Astrid Lindgren: The Woman Behind Pippi Longstocking Book Online at Low Prices in India | Astrid Lindgren: The Woman Behind Pippi Longstocking Reviews & Ratings - Amazon.inBuy The Children of Noisy Village Book Online at Low Prices in India | The Children of Noisy Village Reviews & Ratings - Amazon.in

 

 

 

 

 

 

கல்வியாளர்கள் வரிசையில் சிறார் எழுத்தாளரான ஆஸ்ட்ரிட் லின்ட்கிரன்

சேர்க்காமல் செல்ல முடியவில்லை. ஸ்காண்டிநேவிய நாடுகள் என்று அழைக்கப்படுகின்ற நாடுகளில் ஒன்றான ஸ்வீடன் நாட்டைச் சார்ந்த ஆஸ்ட்ரிட் லின்ட்கிரன் இருபதாம் நூற்றாண்டில் உலகம் முழுதும் இருந்த குழந்தைகளை தான் படைத்த கதாபாத்திரங்களால் கட்டிப் போட்டவர். மாற்றம் என்பதை கல்வியின் மூலமாக விதைக்க முடியும் என்பதை நம்பினர் பிற கல்வியாளர்கள். ஆனால் இவர் மாற்றம் என்பதை கதைகள் மூலமாக குழந்தைகளிடையே விதைக்க முடியும் என்பதை தான் படைத்த கதாபாத்திரங்கள் மூலமாக நிரூபித்துக் காட்டியுள்ளார்.

ஸ்வீடனில் ஒரு சிறு நகரமான விமெர்பில் உள்ள நாஸ் என்ற ஒரு அழகிய பண்ணையில் 1907ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சாமுவேல் அகஸ்ட் எரிக்சன்ஹனா நீ ஜோன்சன் ஆகியோருக்கு இரண்டாவது குழந்தையாக பிறந்தார். 

ஒரு சிறு சிவப்பு நிற வீடு, ஆப்பிள் மரங்கள் சூழ்ந்து அழகிய பண்ணை; விவசாயத்தில் தொழில்நுட்பங்கள் புகுந்திடாத காலகட்டத்தில் குதிரைகளே விவசாயத்தின் தூண்களாக திகழ்ந்த சமயம் அது. பெற்றோர், குழந்தைகள், வேலையாட்கள் என அனைவரும் ஒன்றாக சேர்ந்து வேலை செய்வோம்; நானும் என் அண்ணன், இரு தங்கைகள், மேலும் சுற்றியுள்ள வீட்டுப் பிள்ளைகள் என நாங்கள் அனைவரும் எங்கள் பண்ணையை ஒட்டிய பகுதிகளில் சுற்றித் திரிவோம். சில சமயங்களில் எங்களது இந்த பயணம் ஆபத்தானதாக கூட இருந்திருக்கிறது. ஆனால் நாங்கள் அந்த ஆபத்துக்களை பொருட்படுத்தியது கிடையாது. பாதுகாப்பும், சுதந்திரமும் எங்கள் குழந்தை பருவத்தை மகிழ்வாக்கியது”, என்று தனது குழந்தை பருவத்தை விவரிக்கிறார்.

இந்த சுதந்திரமும் மகிழ்வு தான் இவரது ஒவ்வொரு படைப்பிலும் பிரதிபலிக்கின்றன. Noisy Village புத்தகத்தில் தான் வாழ்ந்த நாஸ் பண்ணை வாழ்வில் தன் உடன் பிறந்தோருடன், மற்ற குழந்தைகளோடு வாழ்ந்த சூழலை இவர் பிரதிபலிக்கிறார். மரங்களில் ஏறுதல், கிளைகளில் தாவுதல், கரடு முரடான பாதைகளில் ஓடுதல், நீரோடைகளில் ஆட்டம் போடுதல் என சாகசங்கள் நிறைந்ததாக இருந்தது இவரது குழந்தை பருவம். தொலைக்காட்சிகளும், ரேடியோக்கலும் இல்லாத அக்காலகட்டத்தில் வாய்மொழியாக கூறப்படும் கதைகளை இவர்கள் வாழ்வில் முக்கிய பொழுதுபோக்காக இருந்தன. குழந்தை பருவத்தில் தான் பெற்ற அனுபவங்களே தான் புனைவுகள் எழுத உந்துதலாக இருந்ததாக லின்ட்கிரன் கூறுகிறார்.

விளையாடுவது தவிர ஆஸ்ட்ரிட்க்கு வாசிக்கவும் எழுதவும் மிகவும் பிடிக்கும். நான்கு வயது இருக்கும்போது அவளது வீட்டின் மாடுகளை பராமரிக்கும் கிரிஸ்டின்- ஸ்வெனின் வீட்டில் விளையாடச் செல்வார். அப்போது அவர்களது குழந்தை எடிட் தான் வைத்திருந்த கதை புத்தகங்களில் இருந்து பெரிய ‘பாம்- பாம்’ கதையையும் ‘விரிபுந்தா’ என்ற கற்பனை கதைகளையும் வாசித்து காட்டினார். எடிட் அக்கதைகளை வாசிக்க, வாசிக்க எடிட்டின் வீட்டு சமையலறை ஆஸ்ட்ரிடின் கற்பனையில் ஒரு மாய உலகமாக மாறியது. ஆஸ்ட்ரிடின் எண்ணங்களுக்கு சிறகு முளைத்து கற்பனை உலகில் பயணிக்க துவங்கியது. அன்று துவங்கிய அவளது பயணம் என்றும் நிற்கவேயில்லை.

1914 ஆம் ஆண்டு முதல் உலகப்போர் துவங்கிய போது இவரது பள்ளிப் பருவம் துவங்கியது. தொடக்கக்கல்வி முடித்து மேல்நிலைப்பள்ளி பயிலும் போது ஆஸ்ட்ரிட் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். ‘எங்கள் பண்ணையில்’ என்று 13 வயதில் அவர் எழுதிய கட்டுரை விமெர்பி பத்திரிக்கையில் வெளிவந்தது. ஆனால் அதை வைத்து ஆசிரியர் எப்போதும் தன்னை ஓர் எழுத்தாளராக நினைத்துக் கொண்டது இல்லை.

Pippi Longstocking - Rotten Tomatoes1940 ஆம் ஆண்டு திருமணம் முடிந்து இரு குழந்தைகளுக்கு தாயாக இருந்தபோது அவரது மகள் கேரினுக்கு நிமோனியா காய்ச்சல் வந்தது. படுத்த படுக்கையாக இருந்த அவள், “அம்மா, எனக்கு பிப்பி லாங்ஸ்டாக்கிங் கதையை சொல்லுங்கள்” என்று கேட்டாள். அவ்வாறு தன் மகளுக்கு இவர் கூறிய கதைகளையே பிற்காலத்தில் பிப்பி லாங்ஸ்டாக்கிங் என்ற புத்தகமாக எழுதி பதிப்பித்தார்.

இப்புத்தகத்தை தயார் செய்து ஒரு பதிப்பகத்திற்கு அனுப்பி வைக்கிறார். தனது மகள் விரும்பி ரசித்து கொண்டாடிய பிப்பி கதைகளை வளர்ந்த பெரியவர்களின் உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை, நிராகரித்தது. ஆம் பதிப்பாளர்கள் ஆல்பர்ட் போனியர் கம்பெனியால் இவரது புத்தகம் திருப்பி அனுப்பப்பட்டது.

முதல் முயற்சி தோல்வியை தழுவியவுடன் துவண்டு போய் ஆஸ்ட்ரிட் வேறு வேலையை பார்க்க சென்றிருந்தால் என்னவாயிருக்கும் ? வெற்றி பெறுபவர்கள் எப்போதுமே முயற்சியை கைவிட மாட்டார்கள்; இதை இவ்வாறு மாற்றி சொல்லலாம்: தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவர்.

1945 ஆம் ஆண்டு இதன் முதல் பதிப்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. முதல் மூன்று பாகங்கள் 1945 முதல் 1948 வரை வெளிவந்தது. அடுத்த ஆறு தொடர்கள் 1969 முதல் 1975 வரை வெளிவந்துள்ளது. பிப்பி வரிசையில் இறுதி இரண்டு கதைகள் 1979 மற்றும் 2000 ஆண்டு வெளிவந்தனர். இப் புத்தகங்கள் 64 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பிப்பி என்ற இக்கதாபாத்திரம் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சாதாரண வாழ்வில் ஒரு குழந்தைக்கு கிடைக்காத அனைத்தும் பெற்ற ஒரு சிறுமி தான் பிப்பி.

அது என்ன குழந்தைகள் பெற்று விடாதவை?

* பிப்பி விசித்திர தோற்றம் கொண்டவள். இரண்டு சிவப்பு நிற ஜடைகள் கொண்டிருப்பாள்.

* அவளிடம் எடுக்க எடுக்க குறையாத ஒரு தங்க காசு கொண்ட பெட்டி இருக்கும்.

* இவள் மிக பலசாலி .தனது ஒரு கைகளால் ஒரு குதிரையை தூக்கும் சக்தி கொண்டவள்.

* தன்னை அடக்க நினைக்கும் பெரியவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பவள்.

* சராசரி வாழ்வு குழந்தைகளுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகள் எதுவும் இவளை ஒன்றும் செய்ய முடியாது.

* ஒவ்வொரு குழந்தையும் வேண்டும் என்று ஏங்கும் சுதந்திரமும் பலமும் பெற்றவள் தான் இந்த பிப்பி.

Do You Know Pippi Longstocking? eBook by Astrid Lindgren - EPUB | Rakuten Kobo IndiaIllustrations for Pippi Longstocking Children's Book on BehancePippi Longstocking - Rotten Tomatoes

சமுதாயத்தில் குழந்தைகள் மிகவும் பலவீனமானவர்களாகவும், பிறருக்கு கட்டுப்பட்டவர்களாகவும், சுதந்திரம் இல்லாமலும், குடும்பத்தில் பெரியவர்கள், பள்ளியில் ஆசிரியர்கள் என பல அடக்குமுறைகளுக்கு கீழ்ப்பட்டவர்களாகவும், பொருளாதார சுதந்திரம் அற்றவர்களாகவும் இருப்பது தான் இயல்பாக உள்ளது. இந்த அனைத்து இயல்புகளையும் உடைத்து நொறுக்கும் கதாபாத்திரமாகவே பிப்பி இருந்தாள். அதனால்தான் உலகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் பிப்பியை பெரும் மகிழ்வோடு ரசித்தனர். பிப்பியின் உருவத்தில் தங்கள் பிம்பத்தை பொருத்திப் பார்த்து அவளின் சுதந்திரத்தை ருசித்தனர்.

பிப்பி லாக் டாக்கிங் பெரும் வெற்றி பெற்ற பின் ஆசிரியர் தொடர்ந்து பல புத்தகங்களை எழுதினார். 1950-இல் இருந்து அறுபதுகள் வரை இவர் மிக பரபரப்பாக எழுதினார். ஆண்டிற்கு ஒன்று என்று தொடர்ந்து புத்தகங்களை பதிப்பித்து கொண்டே இருந்தார். உலகம் முழுக்க பயணித்தார் தனது புத்தகங்கள் குறித்த நிறைய நேர்கானல்கள் உரையாடல்களில் பங்கேற்றார். ஆயிரக்கணக்கான கடிதங்களை தன் வாசகர்களுக்கு எழுதினார்.

சிறார் எழுத்தாளர் என்பதை தாண்டி ஆஸ்ட்ரிட் லின்ட்கிரன் ஸ்வீடன் நாட்டில் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்தார். குழந்தைகளின் நலனில் அக்கறையுள்ளவர். இவர் தனது ஒவ்வொரு புத்தகங்களின் வாயிலாகவும் குழந்தைகள் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சிறார் எழுத்தாளர் என்ற வட்டத்திற்குள்ளேயே தன்னை வைத்துக் கொள்ளாமல் நாட்டின் கருத்து உருவாக்குபவராகவும் (Opinion Maker) உருவெடுத்தார். தன் வாழ்நாள் முழுதும் அநீதிக்கும் அடக்குமுறைக்கும் எதிராக எதிர்ப்புக் குரல் எழுப்பினார். அரசியலில் 1930-களில் இருந்து தன்னை ஒரு சமூக ஜனநாயக கட்சியினராகவே வெளிப்படுத்திக் கொண்டார்.

1976 ஆம் ஆண்டு ‘மேர்டி டூ த ரெஸ்கியு’ (Mardie to the rescue) என்ற நூலை வெளியிட்டார். மேர்டி என்பவள் அச்சமுகத்தில் நல்ல வளமான செல்வாக்கோடு வாழும் ஒரு சிறுமி. அவளது பார்வையில் அச்சமூகம் எப்படி ஏற்றத்தாழ்வோடும், பாரபட்சங்கள் நிறைந்ததாகவும், சமத்துவமும் நீதியும் இல்லாமல் சமூகம் சீர்கெட்டு இருப்பதை பேசி இருப்பார்.

தான் படைத்த பெரும்பாலான மையக் கதாபாத்திரங்கள் சிறுமிகளாகவே இருந்தன. பிப்பி லாங்ஸ்டாக்கிங் குழந்தைகளின் சுதந்திரம், உரிமைகள் பற்றி பேசுபவளாக இருந்தாள். மேர்டி சமுதாயத்தில் காணப்படும் அநீதிகளை, ஏற்றத்தாழ்வுகளை கேள்வி கேட்கும் ஒரு சிறுமையாக இருந்தாள். இவ்வாறு தனது கதைகளின் வழியாக தான் கூற வரும் கருத்தினை வெற்றிகரமாக குழந்தைகள் மனதில் செலுத்துவதில் இவருக்கு நிகர் இவரே. அதற்கு ஆதாரம் இவரது புத்தகங்கள் ஒன்றல்ல இரண்டல்ல 65 நாடுகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பெருமளவில் விற்பனையாகியுள்ளதே. ஸ்வீடன் நாட்டில் இவர் பெயரில் ஆஸ்ட்ரிட் லின்ட்கிரன் பூங்கா அமைக்கப்பட்டு இவருடைய புத்தகத்தின் கதாபாத்திரங்கள், கதைகள் கண் முன்னே அங்கு நடமாடிக் கொண்டு இருக்கின்றன. ஸ்வீடனுக்கு போகும் வாய்ப்பிருப்பின் கண்டிப்பாக ஆஸ்ட்ரிட் லின்ட்கிரன் பூங்காவை பார்வையிட்டு வாருங்கள்.

தன் வாழ்நாள் முழுதும் குழந்தைகள் உரிமை போராளியாக திகழ்ந்த ஆஸ்ட்ரிட் ஒவ்வொரு முறையும் குழந்தைகள் அன்போடும், பாதுகாப்பாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதை முன்மொழிந்தார்.

1978 ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டின் புக்ஸ் செல்லர் அமைதிக்கான பரிசை (German Booksellers’ Peace Prize) பெற்றபோது தனது ஏற்புறையில் ‘வன்முறையை வேரறுப்போம்’ என்று முழங்கினார். அப்போதய காலகட்டத்திலும் குழந்தைகள் மீது வன்முறையை பிரயோகிப்பது, உடல் ரீதியான தண்டனைகளை மற்றும் அடக்குமுறைகள் தொடர்வதை சுட்டிக்காட்டினார். ஏன், பல நாடுகளில் இப்போதும் இவை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறன என்பது வேதனை அளிக்கிறது. இவரது இந்த பேச்சு ஜெர்மனியில் கடும் எதிர்வினையை உண்டாக்கியது. ஆனால் இதற்கு அடுத்த ஆண்டு ஸ்வீடனில் குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனைகள் (Corporal Punishment) கொடுப்பதை தடை செய்து சட்டம் இயற்றப்பட்டது. “வன்முறையில் இருந்து நாம் நம்மை தள்ளி வைத்துக் கொள்ள வேண்டும். அமைதியை நாடுவோம், இதை எங்கிருந்து தொடங்குவது என்பதில் குழப்பம் இருக்குமாயின் வன்முறை எதிர்ப்பை நாம் குழந்தைகளிடமிருந்து தொடங்குவோம்” என்றார்.

ஆஸ்ட்ரிட் லின்ட்கிரன் 1976 ஆம் ஆண்டு நேரடி அரசியல் விவாதங்களிலும் ஈடுபட்டார். அதுவரை தன்னை ஒரு ஸ்வீடன் சமூக ஜனநாயகவாதியாகவே அடையாளப்படுத்திக் கொண்ட இவர் அக்காலகட்டத்தில் அவ்வரசு விதித்திருந்த வரிகளின் காரணமாக அக்கட்சியை கடுமையாக விமர்சித்தார். அவ்வாட்சியின் சீர்கேட்டை தொடர்ந்து ஒரு கதையாக ‘பாம்பெறிபோசா மோனிஸ் மேனியா’ என்ற பெயரில் எக்ஸ்பிரஷன் நாளேட்டில் வெளியிட்டார். இவ்வாறு அரசின் மக்களுக்கு எதிரான அதிகாரப் போக்கை ஆசிரியர் கடுமையாக சாடியதைத் தொடர்ந்து அடுத்து வந்த தேர்தலில் ஸ்வீடனின் சமூக ஜனநாயக கட்சி கடும் தோல்வியை சந்தித்தது.

1980களில் இவரது இவர் அடுத்த பெரிய அரசியல் பிரச்சனையை பற்றி பேசினார். அணுசக்தி உற்பத்தி குறித்து வாக்கெடுப்பில் ‘இது அறவே கூடாது! யுரேனியம் தோண்டும் சுரங்கப் பணிகளை உடனடியாக நிறுத்து! அணு உற்பத்தி நிலையங்களை மூட உத்தரவிடு!’ என்பதை பிரச்சாரம் செய்தார்.

1981 ஆம் ஆண்டு தனது மிகப் பெரிய கடைசி நாவலான ‘ரோன்ஜா, த ராபர்ஸ் டாட்டர்’ (Ronja, the Robber’s Daughter) வெளியிட்டார். இப்புத்தகம் மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையேயான உறவை பற்றி பேசியது. இதுவே இவரது கடைசி போர்க்களம். ஸ்வீடன் நாட்டின் வளர்ப்பு பிராணிகளுக்காகவும், நாட்டின் பசுமையை பாதுகாக்கவும் இப்புத்தகம் மூலம் பேசினார். இவரது இந்த போர் 80-களில் இருந்து 90-கள் வரை நீடித்தது. 1985 இல் விலங்குகள் பாதுகாப்பு பற்றி நாளேடுகளில் விரிவாக எழுதினார். அக்கட்டுரைகள் ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டது.

ஆஸ்ட்ரிட் லின்ட்கிரன் அவர்களின் எண்பதாவது வயதில் ஸ்வீடனின் அப்போதைய பிரதமர் புதிய விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தார். அதை லின்ட்கிரன் பெயரிலேயே வெளியிட்டார். ஆனால் நடைமுறையில் அச்சட்டம் நீர்த்து போனதை குறிப்பிட்டு ஆஸ்ட்ரிட் வருத்தம் தெரிவித்திருந்தார்.

சிறார் எழுத்தாளரான ஆஸ்ட்ரிட் லின்ட்கிரன் நாட்டின் இயற்றப்பட வேண்டிய சட்டங்கள் வரை தீர்மானிக்கும் மக்கள் அதிகாரம் பெற்றவர் ஆனது எவ்வாறு என்று யோசிப்போம்.

இவ்வுலகில் மிக முக்கியமானவர்கள் குழந்தைகள் ஒரு சமூக மாற்றம் தொடங்க வேண்டுமானின் அதை குழந்தைகளிடம் இருந்து விதையுங்கள் என்பதே சூத்திரம். அவர்களே மாற்றத்திற்கான வழி. அக்குழந்தைகளை கட்டுண்டு போக செய்யும் ஒரு எளிய வழி ‘கதைகள்’. உலகம் முழுதும் இருக்கும் குழந்தைகளை ஆட்கொண்டவர் ஆஸ்ட்ரிட் லின்ட்கிரன்.

அழகிய பட்டாம்பூச்சி போல் சுதந்திரமாக சுற்றித் திரிபவர்கள் குழந்தைகள். அன்பும், பாதுகாப்பும், சுதந்திரமுமே அவர்களின் வாழ்க்கை முறை. அவர்களின் உரிமைகளை பேசும் பொறுப்பை சிறார் எழுத்தாளராக வகுப்பறையை தாண்டி, நாட்டின் எல்லைகளையும் தாண்டி, உலக குழந்தைகள் அனைவரையும் தன் கதைகளின் வழியாக நல்வழியில் வளர்த்தெடுத்த ஆஸ்ட்ரிட் லின்ட்கிரன் அவர்களை ஓர் எழுத்தாளர் என்று அடையாளத்தை தாண்டி கல்வியாளர் வரிசையில் வைக்கவே நான் விரும்புகிறேன்.

இரா. கோமதி