Suthanthira Katru Poem By R. Sivakumar சுதந்திர காற்று கவிதை - ரா.சிவக்குமார்

சுதந்திர காற்று கவிதை – ரா. சிவக்குமார்

பெண்ணே நீ வலிகளால்
உருவாக்கப்பட்டவள் அல்லள்
வழிகளை உருவாக்கப் பிறந்தவள்.

சுவாசக் காற்றை
சிறைவைத்த சரித்திரம் உண்டா
உன் சுதந்திரமும், உன் உரிமையும்
உன் சுவாசக் காற்றென்பதை
உணர்ந்து கொள்.

வண்ணப்பூக்கள் மலர்வதற்கோ
வண்ணத்துபூச்சிகள் சிறகடிக்கவோ
யாரிடத்தேனும் அனுமதி கோருமா?

விழிநீரில் சரித்திரம் எழுதாதீர்கள்
விண்மீனாய் வெளிச்சமிடுங்கள்
நட்சத்திரப் பிழம்பாய் மனச்சிறகை விரி
சிறகின் தகதகப்பில் தடையெல்லாம்
தகர்ந்துபோகட்டும்.

உன் பாதம் படும் இடம் எல்லாம்
பாதைகள் தான்
முதல் அடியைப் பதித்துவிடு
உன் பாதை தேடி இலட்சம் பாதங்கள்.

தடைகளின் தோள் மீதேறி
தொடுவானம் பார் தோழி
எல்லாம் எட்டிவிடும் தூரம்தான்…

Sathanin Korikkai Poem By R. Sivakumar சாத்தானின் கோரிக்கை கவிதை - ரா.சிவக்குமார்

சாத்தானின் கோரிக்கை கவிதை – ரா.சிவக்குமார்




அவன் ஒரு சர்வாதிகாரி பேராசைக்காரன்.
அவன் கபளீகரம் செய்யாத இடங்களே இல்லை.
எல்லா நல்ல செயலுக்கும்
அவனே காரணகர்த்தாவாகத்
தன்னை முன்னிறுத்திக் கொள்கின்றான்.

கருமையை
எனக்கு அடையாளமாய்க் கொடுத்துவிட்டு
வெண்மையைத்
தனது அடையாளமாய்ப் பிரகடனப்படுத்திக் கொண்டான்.

எனக்கென்று
எந்த ஒரு நல்லதையும்
மிச்சம் வைக்கவில்லை
எல்லாம் அவனுக்கே சொந்தமாம்.
தூசியாய், துகளாய், அணுவாய்,
அண்டமாய், அனைத்துமாய்த்

தன்னை முன்னிறுத்திக் கொள்கின்றான்.
அன்பு, அனுபவம், நன்மை,
உதவி, கருணை, அமைதி என
அனைத்திற்கும் அவனே காரணம் என கோலாச்சுகின்றான்.

சர்வமும் அவன் என்றால்
எனது இருப்பு பற்றி
எனக்கே சந்தேகம் எழுகின்றது
என்னால் தான் அவன் முழு சுதந்திரமாக
மனங்களில் ஆளுமை நடத்துகின்றான்.

எல்லாவற்றிற்கும் உயிர் கொடுத்தவன் அவன் என்றால்
அவனுக்கே உயிர் கொடுத்தவன் நான்.
என்னில் இருந்தே அவனும் அவதரித்தான்
அவனின் மறுபாதியும் நான் தான்.

நான் இல்லை என்றால்
அவனும் ஒருபோதும் இருக்கப்போவதில்லை..
நான் உண்மையல்ல என்பதை உணரும் பொழுது
அவனும் முற்றிலும் மறைந்தும் கரைந்தும் போய் விடுகின்றான்.

ஆதலால் மனங்களே
அவனின் இருப்பிற்கு காரணமான என்னையும்
புனிதனாக்கி விடுங்கள்.
சாத்தான் என்று மட்டும் தூற்றாதீர்கள்.

Pavalai Vanangal Poem By R Sivakumar பாவ(லை) வனங்கள் கவிதை - ரா. சிவக்குமார்

பாவ(லை) வனங்கள் கவிதை – ரா. சிவக்குமார்




கத்தியோடு ரத்தமின்றி
யுத்தமொன்று நடக்குது
காட்டில் மரங்கள்

உன்னை விட உயர்ந்தவன் என்பதால்
என் மீதும் வன்முறையா?
வெட்டப்பட்ட மரங்கள்.

நிராயுதபாணியாய் நிற்கின்றோம்
இருந்தும் எங்கள் மீதும் போரா?

நீங்கள் அறுப்பது
என் அடியல்ல
உன் தலைமுறை

என் நிழலில் அமர்ந்து கொண்டே
என்னை வெட்டத் திட்டம் தீட்டுகிறாய்.

நீயும் புத்தனாகு
போதி மரமென்று தப்பித்து கொள்வேன்.

என் சந்ததியின் அழிவில்
மீண்டும் வனமாவோம்.
பாவ வனமாவோம்.

எங்களுக்கும் குருதி இருந்திருந்தால்
சமுத்திரமும் சிவப்பாகிப்
போயிருக்கும்.

என் காட்டில் உன் காலடி தடம்
என் மரணத்தின் நாள் குறிக்கும்
காலனின் தடம்.

இதுவும் கடந்து போகும்
உங்களுக்கு மட்டுமல்ல
எங்களுக்கும் தான்.