ரா.சிவக்குமாரின் ஹைக்கூ கவிதைகள்

ரா.சிவக்குமாரின் ஹைக்கூ கவிதைகள்




1. மூங்கில் காடே
புல்லாங்குழலாகியது
வண்டுகளின் ரீங்காரம்!

2. கொழுந்து விட்டெறிந்த
வயிற்றுத்தீயை அணைத்தது
கைப்பிடிச்சோறு!.

3. கொட்டிய மழையிலும்
அழியாத வண்ணங்கள்
வானவில்!.

4. பொதுத்தேர்வு முடிவுகள்
தூக்குமேடையாகின
மின்விசிறிகள்!.

5. விலை போகாத பூக்கள்
வாடியது
வயிறு!.

6. எவ்வளவு உடைத்தாலும்
உண்மையை மட்டுமே சொல்கிறது
கண்ணாடி!.

7. குளத்தில் தூண்டில் வீசியதும்
மாட்டியது
நெகிழி!.

8. விழிநீரின் சுமை தாங்காமல்
கனத்தது
இதயம்!.

9. ஒட்டாத பக்கங்களுக்கும்
ஒட்டிய வயிறும் காத்திருந்தன
உலைக்கு!.

10. நிலத்தை விற்றதும்
வாசலில்
கடன்காரன்!.

– ரா.சிவக்குமார்
சென்னை
9884824086

நூல் அறிமுகம்: ரமணாவின் ‘நீல தேவதை’ – வே.சங்கர்

நூல் அறிமுகம்: ரமணாவின் ‘நீல தேவதை’ – வே.சங்கர்




பத்து வரியில் ஒரு சிறுகதையை எழுதமுடியுமா? சிறுவர்களுக்கான சிறுகதையை? அதுவும் நூல் வடிவில்? முடியும் என்று சாத்தியப்படுத்தியிருப்பது வேறு யாருமல்ல, மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் ரமணா என்ற சிறுவன். இந்நூலின் ஆசிரியர்.

எழுதப்பட்ட பத்து வரிகளுக்குள்ளும் ஒரு ரயில் வண்டி, ஒரு ஈ, ஒரு தேவதை, வானவில் மற்றும் வானம் கதாபாத்திரங்களாக வந்து போகிறார்கள். கதைக்காக எழுதப்பட்ட வரிகளைவிட அதற்குத் தோதான ஓவியங்களே முழுக்கதையையும் சொல்லிவிடுகின்றன. அத்தனை நேர்த்தி, அத்தனை மெனக்கெடல் இந்த நூலில் கண்ட சிறப்பம்சம். அதுதானே இன்றைய தேவையாக இருக்கிறது?

ஆறுவயதில் ’சிம்பாவின் சுற்றுலா’ என்ற சிறார் நாவலை எழுதியிருக்கும் ரமணா, 2020ல் ’யாருக்குத் தைக்கத் தெரியும்?’ என்ற கதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். ’நீல தேவதை’ மூன்றாவது நூல் போலும். கற்பனை செய்து பார்க்கவே சற்று பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

குழந்தைகளின் கற்பனைக்குச் சிறகு முளைக்கும்போது அவை பறந்து செல்லும் தூரத்திற்கும் நேரத்திற்கும் எல்லையே இருக்க முடியாது என்பதற்கு உதாரணம் இந்த நீல தேவதை என்ற நூல்.

அண்டார்டிக்காவில் வாழும் ஒரு பென்குயின் குடும்பத்தைக் கொண்டு கதை சொல்ல முடிந்த ரமணாவால், காய்கறிகளையும் பழங்களையும் கதாபாத்திரங்களாக உருவகித்து வீணான போர் தேவையில்லை என்று சொல்லும் எதார்த்தம், ஒரு குழந்தையால்தான் சாத்தியம்.

குழந்தைகள் கதையில், காட்டில் வாழும் புலிக்குட்டிகள் கால் பந்து விளையாட முடியும் என்றால் அவை ராக்கெட் ஏறி வேற்று கிரகத்திற்கும் செல்லமுடியும்தானே! அதையும் ஒரு கதையில் சொல்லப்பட்டிருக்கிறது.

இன்னும் சொல்லவேண்டுமானால், தன்னைத் துன்புறுத்தும் மரவெட்டியின் தலையில் ஒரு தேங்காயைப் போட்டு ஒரு தென்னைமரமே மனிதனுக்குப் புத்தி சொல்லமுடியும் என்பது ஒரு குழந்தைமையின் வெகுளித்தனத்தைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்.

இந்நூலை எழுதிய குழந்தையின் பின்புலத்தை ஆராய்ந்து கொண்டிருப்பதைவிடச் சிறுவன் ரமணாவின் கதை சொல்லலில் மிளிரும் கற்பனைத் திறத்தைப் பாராட்டக் கிடைக்கப்பெற்ற மனம், ஒரு வரம். வளர வளர கற்பனையும் வளர்ந்து கொண்டே வரட்டும் என்று வாழ்த்துவோமாக.

-வே.சங்கர்

நூல் : நீல தேவதை
ஆசிரியர் :
ரமணா (வயது-8)
விலை : ரூ.₹30
பக்கங்கள் : 32
வகை : சிறார் இலக்கியச் சிறுகதை
வெளியீடு : வானம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924

சந்துருவின் கவிதை

சந்துருவின் கவிதை




இரவு வானத்தில்
நிறமற்ற தூரிகைகளால்
தங்களுக்கான வானவில்லை
அடர்ந்த கானகத்தில்
வரையத் தொடங்குகிறார்கள்
பழங்குடிகளின் குழந்தைகள்.

தார்ச்சாலையைப்போல்
தேகத்துக்கும் வாழ்வுக்குள்ளும்
பிணைந்திருக்கும்
ஒரே வண்ணத்தை
உடும்பின் தோலைப்போல்
உரிக்க முயல்கிறார்கள்

காயடிக்கப்பட்ட
மூதாதைகளின்
மூளையைப் பிளந்து
கானக அடங்கலில்
கல்வியின் குருத்து
முளைவிடத் தொடங்குகிறது.

நீலமும் வெயிலும்
நிறைத்த கூரையினடியில்
எதிர்கால விடியல்களை
உரத்து உச்சரிக்கிறார்கள்.

காட்டுக் கிழங்குகளின்
வேர்களின் ஆழத்தில் மரணித்த
கல்விக் கடவுளை உயிர்ப்பித்து
மண்சுவற்றின் மாடங்களில்
விளக்கென ஏற்றுகிறார்கள்
அரிதாய் சில ஆசிரியர்கள்.

இடிந்த பள்ளிக்கூடம் அகன்று
குட்டிச்சுவராக்கப்பட்ட
தலையெழுத்தை
மரத்தினடியிலிருந்து
மாற்றி எழுத முயல்கிறார்கள்.

பசி மேயும் வகுப்பறையில்
ஆசிரியரின் நிழலும்கூட
அவர்கள் இனி
கைப்பற்ற வேண்டிய
எதையோ  போதிக்கிறது.

ஆசீர்வதிக்கப்படாத
நிலத்திலிருந்து எழும்
மழலைகளின் பாடச் சத்தங்கள்
சாபங்களாய் உறங்கும் மூதாதைகளின்
கல்லறைகளை சாந்தப்படுத்துகிறது.

பாதியாய் உடைந்து நிற்கும்
கரும்பலகைகள்
துயரத்தின் ரேகைகளை
பெற்றோர் கைகளிலிருந்து
நிரந்தரமாய்த் துடைக்கும்
சுண்ணாம்பு வனமாய் விரிகின்றன.

திறந்த வெளிகளில்
எழுத்தாணிகளால்
காலத்தை உழுது
கல்வியின் விதைகளை
நினைவுகளில் ஊன்றுகிறார்கள்.

தமக்கான சுகங்களை
உடைந்த நாற்காலியின்
அடியில் ஒளித்து
புதர் மறைவில் சிக்கியிருக்கும்
பூர்வகுடி பூக்களுக்கு
அறிவு திருத்தி
ஆரம்ப வகுப்பெடுக்கிறாள்
ஆசிரியை ஒருத்தி.

சொற்ப நேர வகுப்பு முடியும் வரை
காத்திருக்கும் வறுமை
மீண்டும் அவர்களை
தின்னத்தொடங்கலாம்
எனினும்
பசியை எரித்து அவர்கள்
படித்தாக வேண்டும்.

சந்துரு_ஆர்சி