டார்வின் கோட்பாடு : மனிதப் பரிணாமமும் சமூகமும் கட்டுரை – பொ. இராஜமாணிக்கம்

டார்வின் கோட்பாடு : மனிதப் பரிணாமமும் சமூகமும் கட்டுரை – பொ. இராஜமாணிக்கம்



டார்வின் தினம் : பிப்ரவரி 12

மனிதன் குரங்கிலிருந்து வந்தானா…. வாழ்க்கைக்கான போராட்டமும் தக்கன பிழைத்தலும் டார்வின் சொன்னாரா…. தகுதி உள்ளன மட்டும் பிழைப்பது மனித சமூகத்திற்கும் உரியதா….

1. மனிதப் பரிணாம வளர்ச்சி 

60 லட்சம் வருடங்களுக்கு முன் ஒரு வாலில்லா குரங்கிலிருந்து மனித இனம் பிரிந்து வளர்ந்தது. 25 லட்சம் வருடங்களுக்கு முன் ஆஸ்ட்ரலோபித்திகஸ் என்ற நமது மூதாதையர் கிழக்கு ஆப்ரிக்காவான பிறந்த இடத்தை விட்டு நகர்ந்து ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா கண்டங்களுக்கு பயணித்தது. இதில் ஆசியாப் பக்கம் வந்தவைகள் ஹோமோ எரெக்டஸ் என்ற பெயரில் ஆதியில் பரிணாமம் அடைந்து பல வகை மனித முன்னோடிகளை உருவாக்கி இருக்கிறது. ஹோமோ எரெக்டஸ் 20 லட்சம் வருடங்கள் வாழ்ந்துதிருக்கிறது என்பது மிகப்பெரிய ஆச்சரியம். ஹோமோ எரெக்டஸில் இருந்து தான் நியான்டர்தால், ஜாவா மனிதன், பீகிங் மனிதன், புளோரஸ் என்ற லில்லிபுட் மனிதர்கள் ( 3அடி மனிதன், 25 கிலோ) சமீபத்திய டெனிசொவியன். இது போன்ற பல மனித முன்னோடிகள் தோன்றி அழிந்து உள்ளனர்.

மனிதனின் தொட்டில் ஆன கிழக்கு ஆப்ரிக்காவில் பரிணாமம் தொடரந்தது. ஹோமோ எர்காஸ்ட்டர், ஹோமோ சேப்பியன்ஸ் என நவீன மனிதன் பரிணமித்தான். இருபது லட்சம் வருடத்தில் இருந்து சமீபத்திய பத்தாயிரம் வருடத்திற்கு முன் வரைபல்வேறு மனித இனங்கள் வாழ்ந்திருக்கின்றன. எப்படி கரடிகளில் பல வகைகள் வாழ்வது போல் மனித இனம் வாழ்ந்திருக்கிறது. தற்போது வாழும் மனிதன் சுமார் 2 லட்சம் வருடத்தில் இருந்து வருகிறான்.

சுமார் எழுபதாயிரம் வருடங்களுக்கு முன்னர் மனித இனத்தின் கலாச்சாரப் பரிணாமம் கல் கருவிகளில் இருந்து துவங்கியது. 12000 வருடங்களுக்கு முன் விவசாயம் சுமார் 500 வருடங்களுக்கு முன் அறிவியல் தொழில் நுட்பப் புரட்சி என மனித சமூகம் வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த வளர்ச்சிகளோடு பல கோடி உயிரினங்களோடு வாழந்து கொண்டிருக்கிறான்.

2. டார்வின் பரிணாமக் கொள்கை

டார்வின்(டார்வின் 1809-1882) பரிணாமக் கொள்கை இயற்கைத் தேர்வு வழியாக உயிரினங்களின் தோற்றம் என்ற நூல் மூலம் 1859ல் உலகத்திற்குத் தெரிய வந்தது. உயிர் பரிணாம அறிவியலில் மரபணு மாற்றம் (mutation) நேர்கோட்டுப் பரிணாமம்(orthogenisis) உருவான குணங்ளைக் கடத்துதல் ( acquired characters inheritance) , இயற்கைத் தேர்வு (Natural Selection) என்ற நான்கில் டார்வினுடைய இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டே சிறந்து விளங்குகிறது. டார்வின் கூறியது குறித்து இந்தப் பயிற்சிப் பட்டறையில் நிறையவே தெரிந்து கொள்வீர்கள். இது வரையிலும் கூட பாடங்கள் மூலமும் பல வழிகள் மூலமும் அறிந்து இருக்கலாம். டார்வின் கூறியது பல வழிகளில் தவறாகவும புரிந்து கொள்ளப்பட்டுள்ளதையும் நம்மிடம் பார்க்கலாம்.

அவர் கூறியதில் வாழ்வதற்கான போராட்டம் என்ற பதமும் தக்கன பிழைத்தல் என்பதும் அவருடையது அல்ல. முன்னது மக்கள் தொகை குறித்து மால்தூஸ் கூறியது. மக்கள் தொகைப் பெருக்கம் என்பது இயற்கையால் நோய், பஞ்சம் பிற பேரிடர்கள் மூலம் ஏற்படும் போராட்டத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. மனித குல முயற்சியால் நோய் பஞ்சம் இயற்கைப் பேரிடர் ஆகியனவற்றில் இருந்து காப்பற்றப்பட்டு பிழைக்க வைக்கப்பட்டுள்ளது.. இதனால் மக்கள் தொகை வளர்ந்து கொண்டே இருக்கிறது. மக்கள்தொகைக் கட்டுப்பாடு என்பது வறுமை கல்லாமை சுகாதாரமின்மை போன்றவைகளுக்குக் காரணமாக இருக்கிறது என்று பல காலங்களுக்கு முன்னர் பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால் கடந்த சுதந்திர தன உரையில் இந்தியப் பிரதமர் சிறிய குடும்பம் கொண்டவர்கள் தான் உண்மையான தேச பக்தி உள்ளவர்கள் மரியாதைக்குரியவர்கள் எனறு அரசியல் ஆக்கியுள்ளார்.

தக்கன பிழைத்தல் என்பது ஹெர்பட் ஸ்பென்சர் கூறியது. டார்வின் தனது ஐந்தாவது பதிப்பில் தக்கன பிழைத்தல் என்பது பொருத்தமாக இருப்பதாக் கருதி அதைப் பயன்படுத்தினார். இதை மனிதப் பரிணாமத்திற்கு (Descent of Man 1871 ) கையாண்டுள்ளார்.

டாரவின் கூறியதில் மிக முக்கியமானது என்னவென்றால் உயிரினங்கள் நிரந்தரமானவையல்ல, நேர்கோட்டுப் பரிணாமம் கொண்டது அல்ல, அது கிளைகள் கொண்டது, தொடர் மாற்றம் கொண்டது, பெரிய அளவில் இடைவெளியற்றது, இயற்கை உயிரினங்களைத் தேர்வு செய்கிறது.

டார்வின் கொள்கை என்பது வரலாற்றுத் தன்மையை உள்ளடக்கியது. பல கோடி வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகள், வழிமுறைகளை விளக்கும் விதமாக அமைந்துள்ளது. உற்று நோக்குதல் ,ஒப்பிடுதல் , வகைப்படுத்துதல் என்ற அறிவியல் வழிமுறைகள் இதில் கையாளப்பட்டுள்ளது. அது நாள் வரை உயிரினங்கள் கடவுளின் சட்டங்களால் உயிரினங்களுக்கும் இயற்கைக்கும் பல தகவமைப்புகள் உருவானதெனக் கருதி வந்தனர். ஆனால் டார்வின் அபார சக்திகளினால் படைக்கப்படவில்லை எனக் கூறி கடவுளை அந்த இடத்தில் இருந்து அகற்றினார்.

உயிரினங்கள் ஒவ்வொரு வகையாக இறுக்கமாகப் படைக்கப்பட்டது என்ற கோட்பாட்டை மறுக்கிறார். அதாவது முக்கோணம் சதுரம் செவ்வகம் என அறுதி செய்யப்பட்டவை அல்ல. சிலர் கூறுவது போல மனித இனம் ஆப்ரிக்கன் ஆசியன் வெள்ளைக்காரன் என ஒவ்வொரு வகையானவன் இல்லை. தற்போதைய 700 கோடி மக்கள் ஒவ்வொருவரும் வேறுபட்டவர்களே. உயிரினங்கள் திட்டமிடப்பட்டு உருவானதில்லை ( predetermined) காலஓட்டத்தில் நுண்ணிய அளவில் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது. எடுத்துக்காட்டாக பல்வேறு உறுப்புமண்டலங்கள் ( Digestive system) காலஓட்டத்தில் மாற்றம் கொண்டுள்ளதைக் காணலாம். எந்தத் திட்டமில்லாமல் அரிய வாய்ப்புமிக்கதையே இயற்கை தேர்வு செய்து வருகிறது. உயிரியலின் பரிணாமத்திற்கென கெடுபிடியான கோட்பாடுகள் கிடையாது (பால்சிபிகேசன் கோட்பாடு செல்லாது)

டார்வின் மனித இனம் பிரைமேட்ஸ் வகையைச் சார்ந்தது என்றும் சிம்பானசி கொரில்லா போன்ற குரங்குகள் போல உடலமைப்புக் கொண்டதென்றும் இதன் மூலம் ஆப்ரிக்காவே மனித இனத்திற்கு முன்னோடிகள் வாழ்ந்த இடம் எனக் கருதினார். ஆப்ரிக்காவில் 60 லட்சம் வருடம் முதல் இன்று வரை பல்லாயிரக்கணக்கான மனித முன்னோடிகளின் தொல்படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. எனவே டார்வின் கூற்று உண்மையாகிறது.

மனிதப் பரிணாமம் என்பது தனிச் சிறப்பானதல்ல என்கிறார். பிற உயிரினங்கள் எவ்வாறு பரிணாமம் வழியில் வந்ததோ அதே போன்று தான் மனிதன் பரிணாமும். தத்துவஞானிகளும் மத குருமார்களும் மனிதன் எல்லா உயிரினங்களுக்கும் மேலானவன் எனக் கூறுவதை இவர் மறுத்தார். ஏனென்றால் வாலில்லா குரங்குக்கும் மனிதனுக்கும் ஒரே மூதாதையர் என்பதில் இருந்து விளங்கிக் கொள்ளலாம். இதை பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவரின் எளிய சிந்தனையில் பார்க்கலாம்.

மனித சமுதாயம் பெற்றுள்ள முன்னேற்றத்திற்கு பொதுநலப் பண்பும் ( Atruism) ஒத்திசைவான கூட்டுறவும் ( Harmonious cooperation) தான் காரணம். பரிணாமத்தில் இயற்கை தேர்வு என்பது தனி உயிரினத்தின் மீதல்ல. அந்த இனத்தின் குழுவாகும். எனவே மனித இனத்தின் வாழ்க்கை என்பது பொதுநலப் பண்பாலும் ஒத்திசைவான கூட்டுறவாலும் இயற்கையால் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டு தேர்வு செய்ததால் மனித குலம் முன்னேறி இருக்கிறது. இது தற்செயல் நிகழ்வல்ல ஒரு தீர்மானிக்கப்பட்ட இலக்கை நோக்கிச் செல்லும் இயற்கையின் செயல் என்ற கோட்பாட்டுக்கு எதிரானது. பரிணாமம் என்பது திட்டமிடாததும் அவ்வப்போதைய வாய்ப்புகளே பரிணாமத்தின் இலக்காகும்.

3. சமூக வளர்ச்சி

மனித சமுதாய வளர்ச்சி என்பது ஹெகேல் போன்ற அறிஞர்களின் பார்வையில் மாற்றம் மேலும் மாற்றம், முன்னேற்றம் என்பதாகும். இதனால் மார்க்ஸ் போன்றோர் அவரின் சீடர்களாக இருந்தனர். ஆனால் மாற்றத்திற்கான காரணத்தை அவரால் சரியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் அது அவனிடம் தோன்றும் தெய்வீக சிந்தனை, மதம் என முடித்துக் கொண்டார். ஆனால் மார்க்ஸ் மனிதன் தான் மதத்தை உருவாக்கினார். மனிதனே உலகம் மனிதனே அரசு மனிதனே சமூகம் என்று முன் வைத்தார். மாற்றமும் முன்னேற்றமும் தெய்வீகமாகவோ ஊகத்தினாலோ வருவதில்லை.மாற்றம் என்பது மனிதகுலம் பெறும் திறன்களினாலும் அத் திறன்களை உருவாக்கும் அவர்கள் வாழும் சமூகமே காரணம் என்றார்.

மனிதனுக்கான சிந்தனை மாறும் உலகத்தினோடேயே உருவாகிறது. மாற்றத்திற்கான பின்னணியும் சமுதாயத்தில் இருந்து வருகிறது. மாற்றம் என்பது அவன் வாழுகின்ற வாழ்க்கையிலிருந்தே வருகிறது. மானுட விடுதலை என்பது சமூக மேம்பாட்டில் இருந்து வருகிறது. மனித குல விடுதலை என்பது அன்பினால் வருவதில்லை உழைப்பாளர்களின் உற்பத்தி முறையில் உருவாக்காப்படும் பொருளாதார பரிமாற்றத்தில் வருகிறது. மனித இதயத்தின் மாற்றத்தால் அல்ல. இப்படித்தான் பண்டைய சமூகத்தில் இருந்து இன்றைய முதலாளித்துவ சமூகம் வரை சமுதாய வளர்ச்சி நடைபெற்று வருகிறது.

மனித சமுதாய வளர்ச்சியில் பல கோளாரான கொள்கைகளையும் பரப்பி வருகின்றனர். அதில் ஹெர்பர்ட் ஸ்பென்சர் என்பவர் 1864ல் சமூக டார்வினிசம் என்ற கோட்பாட்டைப் பரப்பினார். தக்கன தப்பிப் பிழைக்கும் என்ற கருத்தினை உருவாக்கியவர் இவரே. சூழலுக்கேற்ற தகவமைப்புக் கொண்ட உயிரினத்தை இயற்கை தொடர்ந்து இனப் பெருக்கம் செய்ய அனுமதிக்கிறது.இதை மனதில் வைத்துக் கொண்டு சொத்தை குமிக்கும் திறமையும் வழிமுறையும் பரம்பரையாகச் செல்கிறதென்கிறது இந்தக் கோட்பாடு. மேலும் இவர் ஒரு படி போய் தொழிலாளர்கள் ஏழைகளுக்கு உதவிடு்ம் அரசின் சட்டங்களை எதிர்க்கிறார். இந்தச் சட்டங்கள் தகுதியற்றவர்களை ஆதரித்து இந்த சமூகம் முன்னேறுவதை தடுப்பதகக் கூறுகிறார். இந்த தகுதியற்றவர்களை இயற்கையை மீறி நீண்ட நாளாக வாழ அனுமதிக்கிறது என்கிறார். வில்லியம் கிரஹாம் சம்மர் என்பவர் இன்னும் தடாலடியாக சொத்துக்கும் சமூக அந்தஸ்த்துக்கும் தனி நபர்களிடையே ஏற்படும் போட்டி திறனற்றவர்களையும் அறமற்றவர்களையும் வெளியேற்றும் என்கிறார். தனி நபர் சொத்துக்குவிப்பது என்பது அறமற்ற செயல் என இவர் அறியவில்லை.

மற்றொருவர் பிரான்சிஸ் ஹால்ட்டன் என்பார் மனித இனத்தை மேம்படுத்த அதனிடம் உள்ள விரும்பத்தகாத குணங்களை நீக்க வேண்டும் என்ற யூஜெனிக்ஸ் என்ற கோட்பாட்டை முன் வைக்கிறார். சமூக நல அமைப்புகள் மனவளர்ச்சி குன்றியோர்க்கான அமைப்புகள் தரம் குறைந்த மனித இனத்தை காப்பாற்றுகின்றன என குற்றம் சாட்டுகிறார். இதனையொட்டி 1930களில் 32 அமெரிக்க மாகாணங்கள் யூஜெனிக்ஸ் சட்டம் இயற்றி 60000க்கும் மேற்பட்டோரை அழித்திருக்கின்றனர்.

பிரிதொருவர் ஹிட்லரும் இதே வழியில் இனச் சுத்தம் என்ற பெயரில் ஆரியரல்லாத யூதர்கள் ரோமா என்ன ஜிப்சிகள் போலந்துக்காரர்கள் சோவியத்துகளை லட்சக் கணக்கில் கொன்று குவித்தான். குறிப்பாக ஜிப்சி இனத்தவர்கள் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிந்திருநதும் அதிலும் தூய தன்மையைக் கண்டறிய அவர்களுடைய பெற்றோர்கள் அவர்களின் மூதாதையர்களின் தகவலைத் திரட்டி தீர்த்துக் கட்டினான். தற்போதைய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பெற்றோர்களின் பிறப்பிடத்தையும் அவர்களது பிறந்த தேதியையும் தகவலாகத் திரட்டச் சொல்வது. இதனால் தான் எதிர்க்க வேண்டியதயிருக்கிறது.

4. தற்போது என்ன செய்ய வேண்டும்

தற்போதுள்ள வலதுசாரி சூழ்நிலை ( மதம் , பிற்போக்குத் தன்மை , தேசீயவாதம் ) உலகெங்கும் வளர்ந்து வருகிறது. இதன் பிரதிபலிப்பாக பல் வேறு நாடுகளில் வலதுசாரி அமைப்புகள் அரசினைப் பிடித்துள்ளன. இந்தியாவும் இதில் அடங்கும். ஏற்கனவே மத அடிப்படையிலான அரசுகள் பல நாடுகளில் இயங்கி வருகின்றன. பாகிஸ்தான், சவுதி அரேபியா, பிற..

வலதுசாரி அமைப்புகளின் எழுச்சிக்குக் காரணம் முதலாளித்துவத்தின் தற்போதைய நவீன தாராளமயமாக்கல். 90க்குப் பின் முதலாளித்துவம் மிகப் பெரிய தோல்வி அதிர்ச்சியில் இருப்பதால் அதன் விளைவாக உலகம் முழுவதும் மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். முதலாளித்துவ சொத்துக் குவியல் சிலரிடமும் சொத்தில்லாமல் வறுமையில் பெரும்பான்மையினரும் உள்ளனர். இதனைப் பயன்படுத்தி மக்களிடம் தேசீயவாதத்தையும் இனவாதத்தையும் பிரச்சாரமாக்கி வலதுசாரி அமைப்புகள் ஆட்சியைப் பிடித்துள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் ஆளும் அரசுகள் நவீன தாராளமயக் கொள்கைகள் மக்களை மேலும் துயரத்தில் வீழ்த்தியுள்ளது. இந்தத் துயரத்தில் இருந்து மீள்வதற்கு மக்கள் கடவுள் நம்பிக்கையில் வீழ்வதும் அதுவே நமது நாட்டில் மதவாத அரசியலுக்கும் வழிவகுத்துள்ளது. மேலும் போலி அறிவியல் மூலம் மக்களை மரபணு ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் வலதுசாரி போலி அறிவியலாளர்கள் செய்து வருகின்றனர். மத வெறியை ஒரு புறமும் தாராளமய பொருளாதாரத்தை மறுபுறமும் எதிர்த்தாக வேண்டும் இதுவே மக்களின் சிந்தனையை பிற்போக்கிற்கு இழுத்துச் செல்கிறது. இதனை சரி செய்ய டார்வின் கோட்பாட்டினை அறிந்து கொள்வதம் சரியாகப் புரிந்து கொள்வதும் அவசியமாகிறது.

கருத்துதவி….
செபியன்ஸ் நூல்

எர்னஸ் மேயரின் கருத்தடிப்படையில் வெளி வந்த கட்டுரை
டாக்டர் சபயா சாட்டர்ஜியின் எங்கல்ஸ் நூல்

பொ. இராஜமாணிக்கம், மேனாள் பொதுச் செயலர் , மக்கள் அறிவியல் கூட்டமைப்பு

ஆன்மீகத்திற்கான விளம்பர அறிவியல் கட்டுரை – பொ.இராஜமாணிக்கம்

ஆன்மீகத்திற்கான விளம்பர அறிவியல் கட்டுரை – பொ.இராஜமாணிக்கம்



ராமநவமி அன்று அயோத்தி ராமர் கோயில் சிலை மீது  சூரிய ஒளியை  விழ வைக்க அறிவியல் நிறுவனங்கள் மீது நிர்பந்தம்…

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் உட்புறம் வைக்கப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலையின் தலை மேல் 2024 வருட ராமநவமி அன்று சூரியக் கதிர்கள் விழும்படி செய்யக்கூடிய ஆடிகளின் தொகுப்பால் ஆன கருவி ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதன் வடிவமைப்புக்காக சி எஸ் ஐ ஆர் (CSIR) என்ற மத்திய ஆராய்ச்சி நிறுவனமும மத்திய கட்டிட ஆராய்ச்சி மையமும் (CBRI) இணைந்து செயல்பட ஆட்சியாளர்கள் நிற்பந்திதுள்ளனர். இதற்கான அறிவியல் தகவல்களை அளிப்பதற்காக ஐ ஐஏ (IIA) என்ற இந்திய வானியல் மையமும் ஐயுக்கா (IUCCA) என்ற வானியல் மையமும் ஈடுபட வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

இதன்படி ராமநவமி அன்று சூரியக் கதிர்கள் விழுவதற்கான கண்ணாடி கொண்ட அமைப்பு, கம்ப்யூட்டர் இணைப்பு என அமோகமாய் தயாரிப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாய்த் தெரிகிறது. இதை அறிவியலார்கள். வானியல் ஆய்வாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

சூரிய ஒளி விழும் கோவில்கள், சிலைகள்:

நமது நாட்டின் பல்வேறு கோவில்களில் கோவிலுக்குள்ளேயோ அல்லது கருவறைக்குள்ளேயோ சூரிய ஒளி விழும்படி கட்டிக்கலை நிபுணத்துவத்துடன் பண்டைய காலத்தில் கட்டப்பட்டுள்ளது உண்மையில் பாராட்டுக்குரியதாகும். இது பக்தர்களை மேலும் பக்தி பரவசத்தை ஊக்கப்படுத்த உதவுகிறது.

  1. திருச்சி சங்கரபாளயம் அருள்மிகு காசிவிசுவனாதர் கோவிலின் சிவலிஙகத்தில் ஆவணி 7,8,9 தேதிகளிலும் (ஆகஸ்ட்.-செப்) காலை 06-6.30 மணியளவில் சுமார் ரெண்டு அடி உயரமுள்ள  சிலையில் ஒளி விழுகிறது.
  2. வின்னம்பள்ளி கிராமத்தில் உள்ள அகஸ்தீஸ்வரர் கொவிலில் உள்ள மூன்றடி சிவலிங்கத்தில் பஙுனி மாதம் ஒரு வார காலம் தினமும் அரை மணி நேரம் ஒளி விழுகிறது
  3.  ஆந்திராவில் சிரிகாகுளம் அருகில் உள்ள அரசவள்ளி என்ற ஊரில் உள்ள சூரியநாராயண கோவிலில்  ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் கருவறையில் கடவுளின் காலில் சூரிய ஒளி விழுவதை பக்தர்கள் பார்த்து பரவசமடைகின்றனர்.
  4. கோல்காபுர் மஹாலக்‌ஷ்மி கோவிலில் மாலை 6 மணி அளவில் உள்ளே நுழையும் சூரிய ஒளி 6.13க்கு கருவறைக்குள் சென்று மூன்றடி உயரமுள்ள சாமி சிலையில் விழுகிறது. இதன் ஒளி அளவு 48 லக்ஸ் எனவும் அளவிட்டு உள்ளனர். மீண்டும் நவம்பர் மாதம் இதே போன்று நிகழ்கிறது. 
  5. ஹைதரபாத் அருகில் உள்ள கல்பாகுர் கிராமத்தில் உள்ள அனந்த பத்ம சாமி கோவிலில் தினசரி காலை ஒளி கோவிலுக்குள் விழுகிறது. இது காக்கதீய அரசர்களால் கி.பி 7 நூற்றாண்டில் கட்டப்பட்டது 
  6. கர்னாடாகவில்பசவங்குடி கஙதேஸ்வர் ஆலயத்தில் சங்கராந்தி சமயத்தில் 20மீட்டர் ஆழத்தில் உள்ள தெற்கு நோக்கிய ஆலயத்தில் நவம்பர் டிசம்பர் மாதங்களில் சூரிய ஒளி விழுகிறது.
  7. திருப்பதி அருகில் உள்ள நாகலாபுரம் வேதனாராயன்ண கோவிலில் மார்.25,26,27 தேதிகளில் மாலை 6 மணி முதல் 6.15 வரை சூரிய வெளிச்சம் விழுகிறது.
  8. உத்தர்காண்ட் மாநிலம் அல்மொர்ராவில் உள்ள இரண்டாவது சூரியக் கோவில் என்று கருதப்படும் கதர்மார் சூரியக் கோவிலில் சூரிய வெளிச்சம் கடவுள் சிலையில் அக்டோபர் 22 அன்றும் பிப்ரவரி 22 அன்றும் விழும் படி உள்ளது. அக்.22 உத்ராயணத்தில் இருந்து சூரியன் தக்க்ஷியணம் செல்லும் போதும் பிப்ரவரி 22 தக்‌ஷியாணத்தில் இருந்து உத்ரயணம் செல்லும் போதும் சூரிய ஒளி விழுவது போல் கட்டிக் கலையை அமைத்துள்ளனர் என்பது பாராட்டுக்குரியது.  
  9. சரியாக அக்டோபர் இரண்டு அன்று காந்தி சிலையில் சூரிய ஒளி படுமாறு குமரி முனை நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படியாக பல்வேறு கோவில்களில் சூரிய ஒளி விழும் நிகழ்வு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தகாலத்தில் இத்தகு அமைப்பு கட்டுமான சவால் ஆகும். எனவே இவை கட்டிடக்கலையின் வரலாற்றில் சிறப்பம்சம் ஆகும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் சூரிய ஒளி எந்தக் கோணத்தில் விழும் என்பதைக் கணக்கில் கொண்டு மேற்கூரையில் துளை செய்யவேண்டும். அப்படி செய்தால் அந்த நாளில் அந்த குறிப்பிட்ட நேரத்தில் சிலையின் மீது சூரிய ஒளி விழும். இதில் எந்தவிதமான அபூர்வ சக்தி இருப்பதாகக் கூற முடியாது. சில கோயில்களில் ஆண்டில் ஒருநாள் மட்டும் என்று இல்லாமல் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் ஒளி பாய்வதும் நடைபெறுகிறது. இது உத்தராயணம் தட்சிணம் என்ற சூரிய உதயத்தின் இயற்கை நிகழ்வோடு சம்பந்தப்பட்டதாகும்.

எனவே அயோத்தி ராமர் கோவிலில் வருடாந்திரம் பிற கோயில்களில் விழுவது போல் ராம நவமி நாளன்று இயல்பாக ஒளி விழாது. கட்டிடக் கலை மூலம் இந்த அமைப்பை உருவாக்க முடியாது.எனவே ராம நவமியன்று சிலையில் செயற்கையாக ஒளி விழும்படியாக பல்வேறு ஆடிகளை இணைத்து கணினி மூலம் இயக்கி அந்தந்த ஆண்டு ராம நவமி ஏற்படும் அன்று ஒளி விழும்படி கருவி அமைப்பை ஏற்பாடு செய்து வருகின்றனர்.

ஏன்  ஒளி பிரதிபலிப்புக் கருவி தேவை?

ராம நவமி என்பது ஒரு திதி ஆகும். திதி என்பது நிலாக் காலண்டர் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ராம நவமி என்பது சுக்ல பட்சம் என்ற தேதியில் வருகிறது. சுக்ல பட்சம் என்பது அமாவாசையில் துவங்கி பெளர்ணமியில் முடியும். 15 நாட்கள் நிலா வளர்ந்து பௌர்ணமி அன்று நிறைவு பெறுகிறது. இதில் ராம நவமி ஒவ்வொரு மாதமும் ஒன்பதாம் நாள் வருகிறது. அடுத்த 15 நாட்கள் கிருஷ்ணபட்சம் துவங்கி தேய்பிறை ஆகி அமாவாசை ஆகிறது. நிலா காலண்டர் 29.5 நாட்கள் என்பதால் சுக்கில பட்சம் அடுத்த ஆண்டு அதே தேதியில் வருவதில்லை. எடுத்துக்காட்டாக 2024 ஏப்ரல் 17 வரும் ராம நவமி 2025ல் ஏப்ரல் 6ல் வருகிறது.

ஜனவரி 14, அக்டோபர் 2 என்கிறது போன்ற சூரிய நாட்காட்டியில் குறிப்பிட்ட நாளில் துளை மூலம் நேரடியாக ஒளி விழச் செய்யமுடியும். ஆனால் பங்குனி உத்திரம், ராம நவமி போன்றவை நிலவின் ஓட்டத்தோடு தொடர்புடையவை. எனவே ஆண்டுதோறும் ஒரே நாளில் இந்த விழாக்கள் ஏற்படாது. எனவே குறிப்பிட்ட திசையில் மேற்கூரையில் துளை செய்து இந்த வியப்பு நிகழ்வை ஏற்படுத்த முடியாது.

ஒவ்வொரு ஆண்டும் மாறுபட்ட தேதிகளில் ராம நவமி வருவதால் இயற்கையாக கட்டிடக்கலையில் கொண்டு வருவது சிரமம். இதே தேதியில் 19 வருடத்திற்குப் பின்னர் தான் ராமநவமி வரும்.அதை வேண்டுமென்றால் கட்டிடக் கலையில் கொண்டு வரலாம்.ஏனென்றால் பூமி சூரியனைச் சுற்றி வருவதற்கு 3651/4 எடுத்துக் கொள்கிறது. நிலா பூமியை 29.5 நாட்களில் சுற்றி வருகிறது. இதைக் கணக்கிட்டால் சூரியன், பூமி,நிலா ஆகியன மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதற்கு 19 வருடங்கள் ஆகும். இதை மெடோனிக் சைக்கிள் (Metonic cycle) என்கின்றனர்.

எனவே ராமர் சிலையில் கட்டிடக் கலையின் மூலம் வெளிச்சத்தை விழ வைக்க வேண்டுமென்றால் 19 வருடத்திற்கு ஒருமுறை தான் வாய்ப்பு உள்ளது. எனவே தான் வருடந்தோறும் சூரிய ஒளியை ராமர் சிலை மேல் விழ வைக்க கணிணி, மின்னனு, எந்திரவியல், ஒளியியல் தொழில்நுட்பங்கள் மூலம் கருவியை உருவாக்க வேண்டியுள்ளது.

ஆன்மீகத்திற்கான விளம்பர அறிவியல்:

காந்தி நினைவிடத்தில் குறிப்பிட்ட நாள் அன்று ஒளி விழச் செய்வது என்பது பார்வையாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தும். ஆனால் கோவிலில் வலிந்து இவ்வாறு ஏற்பாடு செய்வது எழுத்தறிவு பரவலாக இல்லாத வட இந்தியாவில் பொதுமக்களை இந்த வியப்பைக் காட்டி மயக்கும் நோக்கமோ என சந்தேகம் கொள்ளச் செய்கிறது.

இங்கு ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ள ஒளி பிரதிபலிக்கும் கருவியை பள்ளி இறுதியாண்டு மாணவர்கள் அல்லது இளம்கலை வகுப்பு மாணவர்கள் வடிவமைக்க முடியும். வானவியல் கணக்கீடு, ஒளியியல் பிரதிபலிப்பு & ஒளி குவித்தல், எந்திரவியலில் கியர் சிஸ்டம், மின்னணுக் கணிணியியலில் ஆட்டொமேடிக் சிஸ்டம் இவைகளை ஒருங்கிணைத்து கல்லூரி மாணவர்களே செய்ய முடியும் என்கிறார் ஹோமி பாபா அறிவியல் கல்வி மையத்தின் வானியல் அறிஞர் முனைவர் அனிகெட் சுலே.

ஆனால் சிஎஸ் ஐ ஆர், மத்திய கட்டிடக்கலை ஆய்வு மையும், இந்திய வானியல் நிறுவனம், ஐயுக்கா போன்ற அறிவியல் சார் பெரும் நிறுவனங்களின் மனித வளத்தை இதற்கு பயன் படுத்த வேண்டியதில்லை என்றும் இதற்கென ஆராய்ச்சி நிதியை வீணடிக்க வேண்டாம் எனவும் இந்தியாவில் உள்ள அறிவியலார்கள் இடித்துரைக்கின்றனர் . இது ராமர் கோவிலைப் பிரபலப்படுத்துவதற்கும் ஆன்மீகத்திற்கான செய்யப்படும் மாபெரும் அறிவியல் விளம்பரம் என அறிஞர்களும் செயல்பாட்டாளர்களும் கருதுகின்றனர்.

– பொ.இராஜமாணிக்கம்