நூல் அறிமுகம்: ரா.ராணி குணசீலியின் ஊர் சுற்றலாம் சிறார் பாடல்கள் – ராம்கோபால்
நூல்: ஊர் சுற்றலாம் (சிறார் பாடல்கள்)
ஆசிரியர்: ரா.ராணி குணசீலி
விலை: ₹40.00
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
குழந்தைகள் உற்சாகமாகவும், ஆர்வத்தோடும் எதிர்நோக்குவது பாடல்களைத்தான். குழந்தைகள் முன் ஒரு ராகத்தை லேசாக எடுத்தால் போதும் மொத்த வகுப்பறையும் கப்சிப். அடுத்து கொண்டாட்டம்தான். கண்கள் ஒளிவீசும் என்பார்களே. அத்தகைய ஒளிவீச்சை பாடல்களால் குழந்தைகளிடையே வெளிப்படுவது இயல்பு. பாட்டுப்பாடும் முகங்களை குழந்தைகளால் மறக்கவே முடியாது. பாட்டையும்தான். டல்லு, ப்ரைட்டு என்ற எந்த குழந்தைகளையும் இதில் பிரித்து வைக்கவே முடியாது. துள்ளலையும் சந்தோசத்தையும் அள்ளித் தருகிற இப்படியான பாடல்கள் அதிகம் குழந்தைகளுக்கு தேவை. ஆனால் பாடப்புத்தகங்களில் சிலவற்றை தவிர்த்து பல பாடல்கள் கருத்து கந்தசாமியாகவே இருக்க வேண்டும் என்கிற நிலையிலேதான் தரப்பட்டுள்ளன. பாடுவதும் கடினமாகவே உள்ளது. விளைவு பாடல்களைக்கூட பாடம் நடத்துவது போன்றே விளக்கம் தந்துவிட்டு போகும் நிலைதான்.
பாடல் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை தரவேண்டுமல்லவா. அவர்கள் ராகத்தோடு ஆட வேண்டுமல்லவா. எளிமையான வரிகளில் அமைய வேண்டுமல்லவா. இதுநாள் வரை வெளிப்படாத முகங்களை அறிந்து கொள்ள உதவ வேண்டுமல்லவா. வகுப்பறையே குதூகலத்தில் கரைந்து நின்றால்தானே பாடல் பாடியதற்கான அர்த்தம். அப்படியான பாடல்கள் 4 வரியில் இருந்தால் என்ன? 26 வரிகளில் இருந்தால் என்ன? வரிகள் பிரச்சினை இல்லை. எளிய வார்த்தைகளும் குழந்தை உணர்வை புரிந்துகொண்டு உற்சாகப்படுத்தும் வரிகளுமே அவசியம். அப்படியான புரிதலோடு தோழர் Rani Gunaseeli அவர்கள் தனது முதல் புத்தகத்தை தந்துள்ளார். முகநூலில் பாடல் பாடி கேட்டிருக்கிறேன். சில சிறார் பாடல்களையும் பதிவிட்டு வருவதை கவனித்து மகிழ்ந்திருக்கிறேன். இன்றோ நமக்கு ஊர் சுற்றலாம் சிறார் பாடல் புத்தகத்தை தந்திருக்கிறார். சிறார் இலக்கியத்தில் கதை நூல்கள்கூட பெருமளவில் வருகிறது. சிறார் பாடல்கள் குறைவுதான். அந்த வகையில் தோழர் ராணி குணசீலி அவர்களது ஊர் சுற்றலாம் சிறார் பாடல் நூலை வரவேற்கிறோம்.
அறிவொளியின் வெற்றி
பாடல்களும் கதைகளும்தான் என்று சொல்வார்கள். அதில் பாட்டுக்கே முதலிடம். இரண்டு வரிகளிலே மனம் தொட்டு முனுமுனுக்க வைக்கும்படியான பாடல்களே பல முதியவர்களை அறிவொளி மையங்களுக்கு ஈர்த்துவந்துள்ளது.
வகுப்பறைகளில், குழந்தைகளுக்கான மற்ற இடங்களில் அவர்களது இருப்பை மகிழ்வாக்க இப்படியான நிறைய பாடல்கள் வரவேண்டும்.
பொதுவாக குழந்தைகளுக்கு பழக்கப்பட்ட எளிய வார்த்தைகளில் பாடல் வரிகள் இருப்பது, கதை வடிவில், கேள்வி கேட்கும் வகையில், புதிர் போன்ற, சில வரிகள் திரும்ப திரும்ப மாறாமல் தொடர்ந்து வரும்படியான பாடல்களையும் குழந்தைகள் விரும்புவர். அவை எளிய ராகத்தோடு பாடும் வகையில் இருந்தாலே போதும். குழந்தைகளுக்கு பிடிக்கும். இப்படியான பாடல்களை தோழர் ராணி குணசீலி இந்த புத்தகத்தில் தந்துள்ளார்.
புதுசட்டை, தம்பி என்ன சொன்னான்? அம்மா எங்கே? போன்ற பாடல்கள் திரும்ப திரும்ப பாடி மகிழும் வகையில் எனக்கு அமைந்தது. 16 பாடல்களுமே குழந்தைகளுக்கு விருந்தாய் வந்துள்ளது. பாரதி புத்தகாலயம் வெளியீடாய் புத்தக கண்காட்சிகளில் வெளியீடப்பட்டு ஊர் சுற்றலாம் பாடல்கள் அனைத்தும் பல குழந்தைகளை சென்றடையட்டும். வாழ்த்துகள்
தோழர் – ராம்கோபால்