ராம் பெரியசாமி கவிதைகள்
தீராச் சொற்கள்
——————–
ஒரு மெழுகுவர்த்தியைக்
கையிலேற்றி எழுதிக்
கொண்டிருக்கிறேன்
மழைக்காடுகளின் குறீயீட்டுப்
பறவையொன்றின்
உதிர்ந்தச் சிறகிலிருந்து
புறப்படுகிறது ஒரு புல்லாங்குழலின் நீண்ட ஓசை ..
எல்லாக் கூழாங்கற்களிலும்
வரையப்பட்டிருக்கும் வானத்தில்
உனதன்பின் கீற்றொளியை
நேசமாய் தடவிக்கொண்டிருக்கிறது
வெண்ணிற நதி …
மேகங்கள் வகிடெடுத்த பூமி
என் வெள்ளைத்தாள்களின்
வெற்றிட நிலங்களை
உன் சொற்கள் உழுதுக்கொண்டிருக்கின்றன
எனக்காக நின் விழிவலசை கவிதையாய் …
கடவுள் மனிதநாத்திகம்
பேசிக்கொண்டிருக்கையில்
உன் கன்னத்தில் முத்தமிடுகிறது
சோமாலியத்தின் கடைசிக் குழந்தை …
சரிபாதியாய் நீ கடித்து வைத்த
ஆப்பிளிலிருந்து பிரபஞ்சத்தின்
கோள வடிவத்தை செதுக்கிக்கொண்டிருக்கிறான்
அட்லஸ் …
யார் யாரோ எழுதிக்கொண்டிருக்கும்
செங்காட்டில் தீராச்சொற்களோடு
மனதின் குரலாய் எழுதிவைத்த
சொற்கள் யாவும் தானியங்களாய்
தீராப் பிரியங்களோடு
ஒரு தேசாந்திரியின் தோள்களில்
சாய்ந்துக் கொள்கின்றன
மூன்றாம் பிறையோடு முடிந்துவிடுவதல்ல
அத்தியாயம் …
ஆழிக்கரையில் இருகால்
தடங்களை ஐந்தாம் திணைகளாக வரைந்துவிட்டுச்செல்கிறது
வான்நீலம் பாடிய செங்காட்டுக்குருவி …
உறங்கிப்போயிருந்த கண்ணம்மாவை அவன் எழுப்புகிறான்
இரவில் ஒரு அதிகாலை
புலர்ந்து இசைக்கிறது
யானும் நீயும் எவ்வழியறிதும்
அன்புடையாய் மொழிகிறது
பேரன்பின் நம் தீராச் சொற்கள்
கவிதை – 2
பிடிவாதங்களில் தொலைந்து விடுகிறாய்
ஒரு பழைய கண்ணாடியில்
என் முகம் பார்த்துக் கொள்கிறேன்
ஒவ்வொரு நாளைக்குமான நாட்குறிப்புகள்
என் முகத்தில் ரேகைகளாய் ஆழமாய் பதிந்திருக்கிறது …
காலம் ஒரு எந்திரம்
பழுதடைகிற அன்புகளை
சுவற்றில் கிறுக்கியோ
எழுதித் தீர்த்தோ
ஆசுவாசம் கொள்கிறது என் எழுதுகோல்…
மரத்தின் மீது வாஞ்சையோடு ஊறும் ஓரிரை எறும்பால்
பாரங்களில்லை
பறவை தன் உலகை சுருக்கி கிளையில் அமர்வதைப் போல
உன் தோளில் சாய்கிறேன் …
ஒரு கைப்பிடிக்கனாக்களிடம்
உன்னை ஒப்படைத்துவிட்டேன்
மரணமென்பது உயிர் பிரிவதிலிருந்து மட்டும் தொடங்குவதில்லை
என்னிலிருந்து நீ
பிரிவதாலும் நிகழும் …
கவிதை – 3
மௌனத்திரி பற்ற
வைக்கப்பட்ட இருள்
எழுதப்படாத தாளொன்று
காற்றில் அசைந்தெழுந்து
இன்மையை கவ்வுகிறது
ஒரு மெழுகுவர்த்தியின் உயரம்
உன் கோபம்
மெல்லுருகி கரையும் வரை
நான் நிரயமாய் காத்து
தீர்த்திருத்தல் வேண்டும்
ஆகலின் நின் மொழிவல்
நின் நெஞ்சினில் ஈரமாய்
என் பெருங்காட்டுக்காதல்
ஓம்புமதிவாய் ஏந்தல் இனிதாகுக