சிறுகதைச் சுருக்கம் 99 : மேலாண்மை பொன்னுசாமியின் ’தள்ளி நில்லு’  சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

சிறுகதைச் சுருக்கம் 99 : மேலாண்மை பொன்னுசாமியின் ’தள்ளி நில்லு’ சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்



இந்த ஜனநாயக சமூகம் எப்படி தன் சாதிய ஒடுக்கு முறையை நிறுவனமாக்கி வருகிறது  என்பதற்கு  சாட்சி சொல்பவை இவரது படைப்புகள்

தள்ளி நில்லு
மேலாண்மை பொன்னுசாமி

அவக் தொவக்கென்று அவசர அவசரமாகக் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற மகன் முருகையாவையே கூர்ந்து பார்க்கிற சங்காண்டியின் கண்களிலேயே கண் வைத்திருக்கிற சின்னப்பாண்டியின் மனசெல்லாம் பெருமிதத் ததும்பல்

“அம்மே, தூக்கச் சட்டியிலே சோறு வைச்சுட்டீயா?”

“வைச்சுட்டேன்ப்பா..”

“அஞ்சு லிட்டர் கேன்ல தண்ணி புடிச்சுட்டீயா?”

“புடிச்சுட்டேன்டா, துரட்டியையும் ரெண்டு அரிவாள்களையும் பக்கத்துலே வைச்சுருக்கேன்ப்பா..”

“ஏம்ப்பா சைக்கிள்லே காத்து கீத்தெல்லாம் இருக்குதுல்லே? சரி பார்த்துட்டீயா?” என்று குறுக்குக் கேள்வி கேட்ட சின்னப் பாண்டியின் ரகசியப் பார்வை சங்காண்டி கண்ணில் உட்கார்ந்திருந்தது.

முருகையாவுக்குத் தன் மகளைக் கொடுக்கலாம் என்றொரு நினைவு ஓடிக் கொண்டிருக்கிறது. சங்காண்டி குடும்பத்தில் தண்ணி வெண்ணி கலக்கணும் என்று சின்னப் பாண்டிக்கு ரொம்ப ஆசை. விவசாயக் குடும்பம், நிலபுலம் ஜாஸ்தி.  வெள்ளாமை விளைச்சல் படு செழிப்பு. சங்காண்டியின் மகள் கறுப்பாக இருந்தாலும் களையான முக லட்சணம்.  முறுக்கிப் பிழிந்த ஈரக்கூந்தல் மாதிரி இறுகலான திரேகம்.  

“எம்பயலோட ஒம்ம பொண்ணை சேத்து வைச்சா சோடிப் பொருத்தம் கச்சிதமாயிருக்கும்.”

“ஏங்கிட்ட பொண்ணு கேக்கீரா?”

“கேட்டுக்கிட்டுதான் இருக்கேன்”

“நா ஒம்ம மகனைப் பாக்கணும். ஒம்ம ஊரைப் பாக்கணும். எம் பொண்ணு வந்து இருந்து வாழப்போற ஊரையும், ஊரோட சுத்து வட்டாரத்தையும் பாக்கணும்.”

“எப்ப வாரீரு?”

“ம் அம்மாசி முடியட்டும், வர்ற வளர்பிறையிலே வர்றேன்.”

சங்காண்டி வந்திருக்கிறார்,   முருகையாவையே கவனிக்கிறார்.  

“வெறகு வெட்டுறதுக்கு எங்க போறாக மருமகப்புள்ளை?”

“வலையபட்டிக் காட்டுக்கு.”

“சம்பளம்?”

“எரநூத்தைம்பது ரூவா.”

“வெறகு வெட்டு இல்லாட்டா?”

“ஆமர்நாட்டு சம்சாரிகளோட காடுகரைகளுக்குக் கூலி வேலைக்குக் போகணும்.”

“கடை கண்ணிகள்லே அரிசி பருப்பு வாங்கணும்னா..”

“ஆமர்நாடுதான் போகணும், அங்கதான் பெரிய பெரிய பலசரக்குக் கடைக இருக்கு. பெரிய ஊரு, நிறைய தலைக்கட்டுக. நாலா சாதிச் சனமும் கலந்துருக்குற ஊரு.”

“ம்.ம்.ம்.”

“நாடாக்கமாரு, தேவமாரு, நாயக்கமாரு, ஆசாரிமாரு, சக்கிலியச்சனம், சாம்பாக்கமாரு எல்லாரும் இருக்காக. சண்டை சத்தமில்லாம ஒத்துமையாயிருப்பாக.  நம்ம ஊர்ல?”

“நம்ம ஆளுக மட்டும்தான், நம்ம தனி ராஜ்ஜியம்.”

சங்காண்டிக்குள் நாலா திசைகளிலும் ஓடிப் பாய்கிற நினைவுகள்,  ஆயிரம் காலத்துப் பயிர். ஆற அமர யோசிக்க வேண்டும்.   யோசனைகளின் நீட்சியின் ஒரு நெருடல்.  ஆமர்நாட்டை நம்பிய பிழைப்பு.  நோய் நொடி என்றால் அங்குதான்.  கடை கண்ணிக்கும் அந்த ஊர்தான்.  பாடுசோலிகளுக்கும் அந்த ஊரையே நம்பின பாடு.  எல்லாவற்றுக்கும் அதுதான்.  ஊர் வழி போவதென்றாலும் அங்குதான் போய் பஸ் ஏற வேண்டிய நிலைமை.  சண்டை சத்தமில்லாம ஒத்துமையாயிருப்பாங்க இது ஒரு நல்ல அறிகுறி.

ராசம்மா சோறுவைத்து சாப்பிடச் சொன்னாள் “அண்ணே சாப்புட்டுக்கிறீகளா?”

சாப்பிட்டு முடித்தனர். சங்காண்டி ஒவ்வொன்றும் உரசிப் பார்த்தார். சந்தேகமான மனசோடு யோசித்தார்.  “சரி தங்கச்சி புஞ்சைக்குப் போய்ட்டு வரட்டும்.  நாம அப்படியே காலாற ஆமர்நாட்டுக்கு போய்ட்டு வந்துருவோம்”.

மாப்பிள்ளை பார்க்கிற மாதிரி, மாப்பிள்ளை வீடு, ஊர் பார்க்கிற மாதிரி அந்த ஊரையும் அளந்து பார்க்கவா? என்று யோசிக்கிற சின்னப் பாண்டி சங்காண்டியின் முன்யோசனையை நினைத்து வியந்தான்.

“ஆமநாடு தங்கமான ஊரு, தங்கமான மனுசங்க. நம்ம ஊரு ஆளுகளை தாயா புள்ளைகளா மதிச்சு பாசத்தோட பழகுவாக.  தள்ளி நில்லுன்னு ஒருத்தருகூட சொல்ல மாட்டாக”  சின்னப் பாண்டி சொல்லிக் கொண்டே வந்தார்.

டீக்கடைகளில் உட்காருகிற இடங்களில் வித்தியாசம் உண்டா டீக்கிளாஸ்களில் வேறுபாடு உண்டா என்றெல்லாம் கேட்டு விசாரிக்கிற ஆர்வத்தை அடக்கிக் கொண்ட சங்காண்டி அதான் போய் நேர்லேயே பார்க்கப்போறோம்லே?

ஊருக்குள் நுழைந்தவுடன் “வாயா சின்னப் பாண்டி, என்ன சௌக்யமா? கடைக்குப் போகவா பஸ்ஸுக்கா?”

“ஆமய்யா பஸ்ஸுக்கெல்லாம் போகல. சும்மா ஊருக்குள்ளேதான்.”

சாதி வித்தியாசம் வார்த்தைகளில் தோன்றவில்லை. அருஞ்சுனை பலசரக்குக் கடைக்குப் போனான். உற்சாகமாக வரவேற்கிற கடைக்காரர், அக்கறையான உபசரிப்புகள் இன்னின்ன சரக்குகள் வேணும் என்று சிட்டை சொல்லுகிறான்.

“போட்டு வையுங்க, நாங்க நடுத்தெரு போய்ட்டு வாரோம்.”

“சரி ஒரு கலரு குடிச்சுட்டுப் போகலாம்லே? ஓடைக்கட்டா?”

“வேண்டாம்யா..”

“விருந்தாளு கூட வந்துருக்கு. ஒடைக்கறேன்.”

ரெண்டு பேரும் கலர் குடித்து முடித்து ஏப்பம்  விட்டனர். எதிர்க்களித்த கலர் நுரைகள் நரம்பெல்லாம் சுறுசுறுத்து இனித்தன. சங்காண்டிக்குள் கலர் நுரைகளாக மொறு மொறுக்கிற நினைவுகளின் தித்திப்பு  டீக்கடையில் பெஞ்சில் உட்காரச் சொன்ன சமத்துவம், எல்லாருக்கும் போலவே கண்ணாடிக் கிளாஸில் டீ தந்த மரியாதை சங்காண்டிக்குள்  வியப்பாக இருந்தது.

“இங்க எல்லா சாதிக்கும் ஒரே மாதிரிதான்.”

“சாம்பாக்கமாரு, சக்கிலியருக..”

“அவுகளுக்கும் இப்படித்தான்.  பெஞ்சுலே உக்காந்து கண்ணாடிக் கிளாஸ்லே டீக்குடிச்சுட்டு சிகரெட்டை ஊதிட்டுப் போகலாம். சுடுகாடும் இடுகாடும் கூட இந்த ஊர்ல எல்லாருக்கும் ஒரே எடம்தான்.” 

“பரவாயில்லையே!  நம்ம பயக தண்ணியைப் போட்டுட்டு சலம்ப மாட்டாங்களா?”

“இப்பத்தான் டாஸ்மாக் வந்துருச்சு.  எல்லாச் சாதிகள்லேயும் குடிச்சிட்டு சலம்புறவுக சில பேரு இருக்காக.  அதனாலே அதெல்லாம் சகஜமாயிருச்சு.”

சங்காண்டிக்கு இந்த ஊர் ரொம்ப புதுமையாக இருந்தது. எளிய சாதியை தள்ளி நில்லு என்று சொல்லாத ஊர்.  முருகையாவுக்கு மகளைத் தரலாம்.  சின்னப்பாண்டியின் குடும்ப மருமகளாக மதிப்பு மரியாதையோடு வாழ்வாள்.  பஸ்ஸ்டாண்ட் பக்கம் போனார்கள். பால் பண்ணை வாசல்படியில் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். கதர் வேட்டி, கதர்ச்சட்டை, கதர்த்துண்டு, வலது கை விரலிடுக்கில் புகைகிற சிகரெட்.  முகத்தில் இனம்புரியாத சிடுசிடுப்பு.  

“அண்ணாச்சி ராசபாளையம் பஸ் எப்ப வரும்?”  அவரிடம் கேட்ட சங்காண்டி ஏற இறங்கப் பார்த்த பெரியவர்.  வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, கைகளில் மோதிரம், கடியாரம், காலில் செருப்பு, மதிப்பு மரியாதைக்குரிய கண்ணியமான தோற்றம்.

“சின்னப்பாண்டி கூட வந்த ஆளா? உறவுக்காரவுகளா?”

“ஆமா …ண்ணாச்சி.”

“அண்ணாச்சின்னு என்னைக் கூப்புடுதீயே எப்படி?  என்ன மொறையிலே? நீ எங்க அம்மா வவுத்லே பெறந்தீயா? இல்லாட்டா உங்காத்தா ஒன்னை எங்கப்பனுக்குப் பெத்தாளா?”

சுரீரிடுகிற தீ வார்த்தைகள். தடிப்பான வார்த்தைகளுடன் சீறத் தயாராகிவிட்ட சங்காண்டி. நாலெட்டு பிந்தி வந்த சின்னப்பாண்டி  நிலவரக் கலவரத்தைச் சட்டென உணர்ந்து கொண்டு சங்காண்டியின் வலதுகை மணிக்கட்டைப் பற்றி அழுத்திய அழுத்தத்தில் ஓர் அர்த்தம் தொனித்தது. வாயைத் திறக்காமல் பேசாமலிரு என்று உணர்த்துகிற கைப்பாஷை.

“அய்யா அவரு வெளியூரு தப்பா எடுத்துக்கிடாதீக” என்று மிருதுவான குரலில் கூறிவிட்டு சற்றுத் தள்ளி சங்காண்டியை அழைத்துச் சென்ற சின்னப்பாண்டி.

அங்கு நீடித்த மௌனம் மனசுகளைக் கிழித்து உரித்து மிளகாய்த் தூளை அப்பியது.

சங்காண்டி மகள் சின்னப் பாண்டி மகனுக்கு வாழ்க்கைப் சரிபட்டு வரவில்லை.

பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது

சிறுகதைச் சுருக்கம் 97 ரோஜாக்குமாரின் ‘ஸ்தானம்’ சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

சிறுகதைச் சுருக்கம் 97 ரோஜாக்குமாரின் ‘ஸ்தானம்’ சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

ஜோதி விநாயகம் நினைவு பரிசுத் திட்டத்தில் 1997ம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதையாக திரு பாலுமகேந்திரா அவர்களால் தெரிவு செய்யப்பட்ட கதை இது.

ஸ்தானம்
ரோஜாகுமார்

சந்தைக் கடந்து பள்ளிக்கூடம் போகும்போதெல்லாம் குதிரையையும், வண்டியையும் பார்ப்பான் ஜமால். பள்ளிக்கூடத்திலிருந்து வீடுவரை ஓடிவந்துவிட்டுப் போவான். எப்போதாவது அம்மா வீட்டில் இருப்பாள். இல்லை என்றால் அவள் வேலைக்குப் போய்விட்டதை உறுதிப்படுத்திக் கொள்வான்.

குதிரை வண்டிக்கார அமீர்பாய் அவித்தெடுத்த கானாப் பயிறை பெரியதான தகரத் தட்டில் ஆவிபறக்கக் கொட்டிவைத்தார். கானாப் பயிறு குதிரைக்கு நல்ல தீனி. தின்று கொண்டே நீண்டவால் முடியைப் படரவிட்டுச் சிலிர்த்து ஆட்டும். கானாப் பயிறிலிருந்து ஒருவித ருசித்தன்மை வெளிப்படும். ஜமாலுக்கும் ஆசை வந்தது. கொஞ்சம் கானாப் பயிறு தின்ன வேண்டும்என்று தான் ஆசைப்பட்டதை நிறைவு செய்ய என்ன செய்வது? வண்டியில் அமர்ந்திருந்த அமீர்பாய் கால்களைக் கீழே ஊன்றி சாட்டைக்குச்சியைச் சரிசெய்து கொண்டிருந்தார். நீளமாகக் கிழித்த தோல் நாரைப் பட்டு நூல்கொண்டு இறுக்கமாகக் கட்டியவரின் கவனம் பூராவும் அதிலிருந்தது. அவர் அந்தப் பக்கம் திரும்பியிருந்தார். மெல்ல மெல்லத் தகரத்தட்டை நெருங்கியவுடன் குதிரை கனைத்துவிடுமோ என்று பயந்தான். அது அவனைக் கண்டு கொள்ளாமல் புல்லை மேய்ந்து கொண்டிருந்தது.

விருட்டென்று குனிந்து கானாப் பயிறை அள்ளினான் ஜமால்.

“டேய்..”

அமீர்பாய் சாட்டைக் குச்சியுடன் வந்தார். அள்ளிய விரல்கள் விரிய கானாப் பயிறு தட்டில் சிதறியது. சாட்டையடி விழப்போவது திண்ணமாகிவிட்டது. ஜமால் அரண்டு போய் நின்றான்.

“என்னடா?”

“பயறு’ உள்ளும் புறமும் நடுங்கியபடி இரண்டடி பின்னகர்ந்தான். அகல விரிந்த விழிகள் அச்சத்தில் ஆழம் போயின.

“வாடா..”

ஆவிபறக்க அள்ளிய கானாப் பயிறை “இந்தா: என்று நீட்டினார். அமீர்பாயின் கை பெரியது. விரல்கள் நீளமானவை. ஜமாலுக்கு பசியாசை. பயிறை எப்படி வாங்குவது? மேல் சட்டையின் கீழ்ப் பொத்தானைக் கழற்றி ஒரு பகுதியை ஏந்தினான். அதில் பயிறைப் போட்ட அமீர்பாய் அவனின் நிலையைக் கண்டு சிரித்தார். ஜமாலின் அடிவயிறு சுட்டது. இருந்தபோதிலும் பொறுக்கும்படியான இதமான சூடாகவே இருந்தது.

“போ, தின்னு.”

அதன்பிறகு அமீர்பாயிடம் பரிச்சயம் ஏற்பட்டுவிட்டது. குதிரையைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் குறித்தும் அக்கறையாக விசாரிக்க ஆரம்பித்தான். அவனிடம் சொல்வதற்கென்ற சிறுசிறு வேலைகள் ஏதாவதொன்றிருக்கும் அவருக்கு. சாயா வாங்கி வருவான். அமீர்பாயிடம் போலவே குதிரையிடமும் ஜமால் நெருங்கினான்.

“குருத கடிக்குமா?”

“கடிக்காது, முட்டும்”.

“முட்டுமா?” ஆச்சரியத்துடன் குதிரைக்கு முன்னும் பின்னும் வந்து தேடலாய்ப் பார்த்தான். கொம்பைக் காணோம். அதை அவரிடம் கேட்டபோது அவர் சிரித்தார். தன்னைக் கேலி செய்வதாய் உணர்ந்து வெட்கப்பட்டான். ஜமாலுக்கு ஒரு சந்தேகம் வந்தது. கழுழை போட்டால் விட்டை, மாட்டுக்கு சாணி ஆட்டுக்குப் புழுக்கை, ஆணைக்குக் கூட லத்தி என்று தெரியும். குதிரைக்கு என்ன? அமீர்பாயைக் கேட்டால் கேலி செய்து சிரிப்பார் என்று விட்டுவிட்டான்.

பள்ளி விடுமுறை நாளின்போது அமீர்பாய் பெரியாஸ்பத்திரி வரை குதிரை வண்டியில் கூட்டிக்கொண்டு போனார். தன் பக்கத்திலேயே அமர்த்திக் கொண்டார். குதிரை ஓடும்போது மிதிபடும் தார்ச்சாலை பூப்பூவாய் சிதறுவது கண்டு புளகித்தான். பள்ளிக்கூடத்திற்கு போவதற்கு முன்பும் பின்புமாக வண்டிக்குவர ஆரம்பித்தான்.

ஒரு நாள் பெரியாஸ்பத்திரிக்கு குதிரை வண்டியைத் தேடிக் கொண்டு போனான். அவ்வழியில் போனபோது அவனின் அம்மா பாத்துமுத்து மரத்தடியில் சில பெண்களுடன் அமர்ந்திருப்பதைப் பார்ததான். அங்கே போய் நின்றான்.

மற்ற பெண்களிடம் ஏதோ சொல்லி அம்மா அழுதாள். பின்னால் நின்றபடியே ஜமால் கேட்டான்

“ஏம்மா அழுகறே?”

பாத்துமுத்து எழுந்து மகனை இழுத்துக் கொண்டு மேலும் அழுதாள். தூக்குப் போணியில் கஞ்சிக் குடித்துக் கொண்டிருந்த ஒருத்தி கேட்டாள் “ஒங்கொப்பா குடிச்சிட்டுக் கொடுமைப்படுத்தலாமா? ஒங்கொம்மா பாவமில்லையா?”

அப்பன் குடிப்பது அவனுக்குத் தெரியும். கொடுமைப்படுத்துவதுதான் தெரியவில்லை. கொடுமை என்றால் அடிப்பதா திட்டுவதா தெரியவில்லை. குதிரை கழிவு போடும் போதும் மூத்திரம் பெய்யும் அந்த வீச்சும் ஒருவகையானது. அதைவிடக் கூடுதலான வீச்சம் குடித்துவிட்டு வரும் அப்பனுடையது. இருந்தபோதிலும் குதிரை நல்லது. புல்லும் பயிறும் போட்டால் போதும் போகச் சொல்லும் இடத்துக்கெல்லாம் ஓடும்.

பஸ்ஸோ லாரியோ விபத்துக்குள்ளானால் அங்கே போய்ப்பார்ப்பான். அடிபட்டது அப்பனாக இல்லையே என்று வருத்தமிருக்கும். ஜமாலின் அப்பனுக்குச் சாயாக் கடைதான் முதலில். ஏதோ ஒரு வழியில் சூதாடப்போனான். அப்படியே குடிக்கவும் ஆரம்பித்துவிட்டான். ஒரு ஆட்டத்தில் கடையும் கடையிலுள்ள தளவாடச் சாமானகள் பிரிதொரு ஆட்டத்திலும் போய்விட்டது. அதோடு அம்மாவின் கருகமணியில் கிடந்த பூசாந்திரத்தையும் இழக்க வேண்டியதாகிவிட்டது.

இப்போதெல்லாம் அப்பன் வீட்டுக்கு வரும் நேரம் எதுவென்று தெரியவில்லை. அம்மா தலைக்குக் கையை வைத்துத் தூங்குவாள். அது சாந்துத் தட்டை தூக்கிப் போவது போலான பாவனையில் இருக்கும். அவளின் பாதங்களில் விரிவு விரிவாய்ப் பித்த வெடிப்பு. எப்படி அந்தச் சூட்டில் படியேறிச் சாந்துத் தட்டைத் தூக்குகிறாளோ? பாவம் ஜமாலுக்கு அழுகை வருவதில்லை. இறுகியே இருப்பான்.

ஆங்கிலப் புத்தகமும் அறிவியல் புத்தகமும் அமீர்பாய் வாங்கித் தந்தார். பள்ளிக்கூடம் விட்டு புத்தகங்கள் படிப்பதைக் குதிரை வண்டியிலேயே வைத்துக் கொண்டான். ஒரு மதிய வேளையில் சவாரி போய்விட்டுத் திரும்புகையில் போக்குவரத்துக்குறைவான சாலை என்பதால் அமீர்பாய் அவனை வண்டியோட்டச் சொன்னார். அவரைப் போலவே கடிவாளத்தைப் பிடித்தான். உலகையே செலுத்துவதானதோர் எண்ணம். ஜமாலின் அருகிலிருந்த அமீர்பாயின் பெருமிதமும் அளவிட முடியாததுதான்.

ஒரு சமயம் மூன்று பேர் கொண்ட ஒரு குடும்பத்தை இறக்கிவிட்டுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தான்.

“ஜமாலு, ஜமாலு” சாலையின் சரிவிலிருந்து கத்தியபடி மேலேறி வந்துகொண்டிருந்தான் அவனின் அப்பன். சவாரி போகும்போது ஒரு முறையாவது அம்மா பார்க்க வேண்டும் என்று ஆசையிருந்தது அவனுக்கு. அப்பன் இப்படிக் குறுக்கே வந்து மறிப்பதைக் கண்டு அசூசைப்பட்டான்.

கடிவாளத்தை இறுகப்பற்றி ஒரு பக்கமாய் குதிரையின் முகத்தைச் சுண்டி வைத்துக் கொண்டான்.

“காசு குடு.”

“எங்கிட்ட ஏது காசு?”

“ஒங்கொம்மாவும் நீயும் சம்பாரிக்கிறீயல்ல, குடுடா” நீண்டபடியிருந்த அவனது வலது கைவிரல்கள் பறிப்பதுபோல் பாவனை காட்டின.

ஜமால் இல்லை என்று மறுத்தான். கடிவாளத்தைப் பிடித்தபடி ஜமால் கீழே குதித்தபோது கைலி டர்டர்ரென்று கிழிபட்டது. எரிச்சலில் அப்பனின் மீது ஆத்திரப்பட்டுக் கத்தினான். “போ.”

சிவப்பேறிய கண்களில் கொடூரமிருந்தது. விடுவதாயில்லை. ஜமாலின் சட்டையைப் பிடித்து இழுத்தான். சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் வேடிக்கை பார்க்கக் கூடினர். ஒருவர் அவனிடமிருந்து அப்பனைப் பிரித்தார். அப்பன் அவரைத் திட்டினான். அந்தரங்க வார்த்தைகள் யாவும் அணி வகுத்து வந்தன.

“யோவ், சின்னப் பய கிட்ட வம்பு பண்றியே. ஒனக்கு அறிவிருக்கா? போய்யா.”

“யோவ், நான் யாரு தெரியுமா ஒனக்கு?”

அவர் அவனை அலட்சியப்படுத்தினார். ச்சை குடிகாரப்பயலே போடா என்றிருந்தது அவரின் நோக்கு.

மறுபடியும் ஓங்கிக் கத்தினான் “யோவ் நான் யாருன்னு தெரியுமா ஒனக்கு?”

அவர் அவனைச் சட்டை செய்யவில்லை. நெருங்கி அறைவது போல் முறைத்தார். ஜமாலை வண்டியில் ஏறச் சொன்னார் அப்பனைப் பற்றி அவனிடமே குடி கெடுத்த பயல் என்று சமாதானம் சொல்லிவிட்டுக் கேட்டார்.

“நீ அமீர்பாயோட மகன்தானே?”

அப்பன் அவனையும் அந்த மனிதரையும் வெறித்தான்
சற்றும் தயக்கம் காட்டாது ஜமால் “ஆமா” என்றான்
வண்டி போனது.

பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது, அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு ஒரு நுழைவாயிலாக அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.

சிறுகதைச் சுருக்கம் 95 : ’பொறி’ அரவிந்தனின் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

சிறுகதைச் சுருக்கம் 95 : ’பொறி’ அரவிந்தனின் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்




கொடுங்கனவுகளால் சூழப்பட்ட யதார்த்தத்தை எதிர்கொள்ளவியலாத திணறலாக வாசிப்பனுபவத்தை மாற்றும் நுட்பமே அரவிந்தனை தனித்துவம் மிக்க ஒரு சிறுகதைக் கலைஞராக முன்னிறுத்துகிறது.

‘பொறி’
அரவிந்தன்

மாற்றுச் சாவியை வைத்துக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தபோது, வீடு இருளில் மூழ்கியிருந்தது. படுக்கையறையில் மட்டுமே ஜீரோ வாட் பல்ப் எரிந்து கொண்டிருந்தது. படுக்கையறையிலிருந்து கசியும் மெல்லிய வெளிச்சத்தின் துணையோடு, சுதாகர் காலணிகளை கழற்றி அவற்றுக்குரிய இடத்தில் வைத்துவிட்டுப் படுக்கையறைக்குள் வந்தான். கையோடு கொண்டு வந்திருந்த லேப் டாப்பை படுக்கைமீது நந்தினிக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு – இவள் ஏன் புடவை கட்டிக் கொண்டு தூங்குகிறாள் – குளியலறைக்குச் சென்றான்.

கூட்டங்கள், விவாதங்கள், திட்டங்கள், திட்ட முன்வரைவுகள், கடந்த மூன்று மாத நிலவரம் குறித்த பரிசீலனைகள் . . . . நாள் முழுவதும் வாட்டி எடுத்த சுமைகளெல்லாம் குளிர்ந்த நீரில் கரைவதுபோல் இருந்தது. மனம் லேசானதுபோல் இருந்தது. நந்து ஏன் இவ்வளவு சீக்கிரம் தூங்கிவிட்டாள்? என்று தோன்றியது. பதினொன்றரை என்பது சீக்கிரம் அல்ல என்று நன்றாகத் தெரிந்த போதிலும் விட்டுக்குள் வரும்போது இருந்த இறுக்கம் குளியல் அறையைவிட்டு வரும்போது குறைந்திருந்தது.

உள்ளாடையையும் அரை நிஜாரையும் மாட்டிக் கொண்டு, குளிர்பதனப் பெட்டியைத் திறந்து தண்ணீர் எடுத்துக் குடித்துவிட்டு மறுபடியும் படுக்கையறைக்குள் நுழைந்தபோது “சாப்டாச்சா?” என்ற குரல் கேட்டது.

சுதாகர் விசில் அடித்தான். “நீ இன்னும் தூங்லயா?” என்று கேட்டான். பக்கத்தில் சென்று அவள் அருகில் சரிந்து உட்கார்ந்தபடி தோளைத் தொட்டு “இன்னிக்கு என்ன இவ்வளவு சீக்கிரம்
தூங்கிட்ட” என்றான். நந்தினி நகைச்சுவையை ரசிக்கும் மன நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. “எங்க சாப்டீங்க?” என்றாள்.

“மீட்டிங்லயே சாப்பாடு. சரவண பவன்ல ஆர்டர் பண்ணியிருந்தோம்.”

சுதாகரின் விரல்கள் அவள் தோள்மீது கோலமிட்டன. அவள் அந்த விரல்களைத் தட்டிவிட்டாள். சுதாகர் மேஜையில் கால் சுண்டுவிரல் இடித்துக் கொண்டது போன்ற வலியை உணர்ந்தான். சிறிது நேரம் பேசாமல் இருந்து தன்னை சுதாரித்துக் கொண்டான். பிறகு “ஒடம்பு சரியில்லையா?” என்று கேட்டான்.

நந்தினி பதில் பேசவில்லை. சுதாகரும் சிறிது நேரம் பேசவில்லை. அவளை எப்படி பேச வைப்பது? யோசித்துக் கொண்டிருக்கும்போது அந்தப்புடவை மறுபடியும் கண்ணை உறுத்தியது.

“ஏன் பொடவ கட்டிண்டு தூங்கற? அதுவும் புதுப் பொடவ.”

“பரவாயில்லயே. நா பொடவ கட்டிண்டு இருக்கறதும் உங்க கண்ணுக்கு தெரியுது. அது புதுசுன்றதும் தெரியுது. ரொம்ப இம்ப்ரூவ் ஆயிட்டீங்க.

சுதாகர் சற்று நிம்மதி அடைந்தான். மெதுவாக அவள் கையை வருடியபடி “இங்கே பார்” என்றான். நந்தினி வெடுக்கென்று கையை இழுத்துக் கொண்டாள். அவன் கை இப்போது அவள் இடுப்பின் மீது படிந்தது. அவள் அந்தக் கையைத் தள்ளிவிட்டு நகர்ந்து படுத்துக் கொண்டாள். அவனது உற்சாகம் முற்றிலுமாக வடிந்துவிட்டது.

“ஃபஸ்ட் க்வாட்டர் கணக்கு முடிக்கற நேரம் நந்து. அக்கவுண்ட்ஸ் உட்பட மூணு டிபார்ட்மெண்ட்ஸ கோ ஆடினேட் பண்ற பொறுப்புல நா இருக்கேன். இன்னும் ரெண்டு மூணு நாள்லே எல்லாம் முடிஞ்சிடும்”.

நந்தினி அவனைப் பார்த்துத் திரும்பினாள். “ரெண்டு வருஷமா இதே எழவெடுத்த பதிலத்தான் கேட்டுண்ட்ருக்கேன். எதுக்கு ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்றீங்க?” என்றாள். ஆழமான ஆதங்கமும் பொறுமையின்மையும் அவள் குரலில் வெளிப்பட்டன. அவள் கண்கள் சிவந்து வீங்கியிருப்பது அந்த மங்கலான வெளிச்சத்திலும் தெரிந்தது.

“என்ன நந்து இதுக்குப் போய் அழற..” என்றபடி அவள் முகத்தைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டான். அவன் குரலும் தழுதழுத்தது. சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். பிறகு “இன்னிக்கு என்ன தேதி தெரியுமா?” என்று மெதுவாகக் கேட்டாள்.

“இருபத்தி மூணு” என்றான். இது நன்றாக அவனுக்கு நினைவிருக்கிறது. இந்தத் தேதிக்குள் சமர்ப்பித்தாக வேண்டிய அறிக்கையின் அழுத்தம் கடந்த ஒரு மாதமாக அவன் மனத்தில் பெரும் சுமையாக உட்கார்ந்து கொண்டிருக்கிறது. சொன்னபடி முடிக்க முடியாமல் மேலும் மூன்று நாட்கள் அவகாசம் பெற வேண்டியிருந்தும் அந்த மூன்று நாட்களுக்குள் முடிக்காவிட்டால் நிலைமை மிகவும் சிக்கலாகிவிடும் என்பதும் நினைவுக்கு வந்தது, இவனால் இந்த அறிக்கையை இந்தத் தேதிக்குள் சமர்ப்பிக்க முடியாது என்று இவன் பதவிக்குக் குறி வைத்துக் கொண்டிருக்கும் தீபக் மேத்தா எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருப்பதும் நினைவுக்கு வந்தது. சவாலில் வெற்றி கிடைக்கவில்லை. எம்.டி.யிடம் கெஞ்சி இன்னும் மூன்று நாள் அவகாசம் பெற வேண்டியதாயிற்று. அந்த மூன்று நாளில் சனி ஞாயிறு அடக்கம். ஆக இந்த வாரமும் நந்தினியை எங்கும் கூட்டிக் கொண்டு போக முடியாது. அவன் மிகவும் ஆயாசமடைந்தான்.

“இருபத்து மூணு, என்ன விசேஷம் ஞாபகம் இருக்கா?” என்று கேட்டாள் நந்தினி.

எனக்கு ரிப்போர்ட் சப்மிட் பண்ண இதுதான் டெட்லைன் என்ற வார்த்தைகள் இயல்பாக எழுந்தன. அவற்றை கட்டுப்படுத்திக் கொண்டு “என்ன விசேஷம்?” என்று குழப்பத்துடன் கேட்டான்.

“இந்தப் பொடவ எப்ப வாங்கினதுன்ன ஞாபகம் இருக்கா?”

நேராக விஷயத்துக்கு வராமல் ஏன் சுற்றி வளைக்கிறாள் என்ற எரிச்சலுடன் “இல்லையே” என்றான்.

“இன்னிக்கு நமக்கு வெட்டிங்டே” என்று கேவல்களுக்கு மத்தியில் நந்தினி சொன்னாள். சுதாகரின் பிடி தளர்ந்தது.

கையால் நெற்றியில் அறைந்து கொண்டான். “மை காட்” என்ற வார்த்தைகள் அவன் அடி வயிற்றிலிருந்து புறப்பட்டு வந்தன. போனமாதம் இந்த 23ந்தேதி கெடு குறிக்கப்படுவதற்கு முன் ஒரு ஞாயிற்றுக் கிழமை கஷ்டப்பட்டு நேரம் ஒதுக்கி இருவரும் கடைக்குப் போய் தங்களது இரண்டாவது திருமண நாளுக்கான உடைகளை வாங்கிக் கொண்டு சினிமாவுக்குப் போய்விட்டு, பாலிமரில் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பியது நினைவுக்கு வந்தது, போனவாரம் கூட திருமண நாளைக் கொண்டாடுவது பற்றி அவள் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. ஆனால் இப்போதெல்லாம் காலையில் அவள் எழுந்திருப்பதற்குள் சுதாகர் கிளம்பிப் போய்விடுகிறான். தொலைபேசியிலும் பேசிக் கொள்ள அவகாசம் கிடைப்பதில்லை.

“நீ ஞாபகப்படுத்தியிருக்கலாமே நந்து!” என்று பரிதாபமாகக் கேட்டான்.

“வெட்டிங் டே கூட உங்களுக்கு மறந்துபோகும்னு நான் எப்படி எதிர்பார்க்க முடியும்” என்று அழுகைக்கு மத்தியில் சொன்னாள். இப்போது அவள் அழுமை விசும்பலாக மாறியிருந்தது. திடீரென்ற அவன் மடியில் சரிந்தாள். “ஆஃபீஸ்லேந்து லேட்டா வர்றதுகூட பரவாயில்லை சுதா, ஆனா இருபத்து நாலு மணி நேரமும் ஆஃபீஸ் நெனப்பா இருக்கணுமா? உங்களுக்குன்னு ஒரு லைஃப் இல்லையா?” இப்போது அவள் குரல் தெளிவாக இருந்தது.

“இப்பல்லாம் ஆஃபீஸ் வேலன்றது வெறும் உடம்ப மட்டும் பிழியற வேலை இல்ல நந்து. சொல்லப்போனா உடம்புக்கு அதிக சிரமமே இல்ல. எல்லாம் மனசுக்கும் மூளைக்கும்தான். ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும், இல்லன்னா கோட்டை விட்ருவோம். நாமை குனிஞ்சா நமக்குக் கீழே இருக்கறவன் முதுகுமேல கால வெச்சி ஏறி நம்மத் தாண்டிப் போயிடுவான்”.

“இவ்ளோ கஷ்டப்பட்டு என்னத்த சாதிக்கப் போறோம்?”

“தோ இந்த வீடு வாங்கியிருக்கேனே. முப்பது வயசுக்குள்ள நானா சம்பாதிச்சு வாங்கின வீடு இது. எங்கப்பாவாலயோ உங்கப்பாவாலயோ நெனச்சுப் பார்க்க முடியாத விஷயம். இது பெட் ரூம். நமக்கு ஏ.சி தேவைப்படுது. வீக் எண்ட்ல வெளியே போக கார் இன்னும் நகை நட்டு . இந்த ஆஃபீஸ்தானே எல்லாத்துக்கும் ஆதாரம்”.

“எல்லாமே ரொம்ப காஸ்ட்லின்னு படுது சுதா.”

“எல்லாத்துக்கும் ஒரு வெல இருக்கு நந்து.”

“சின்ன வயசுல நாங்க ரொம்ப கஷ்டப்பட்டிருக்கோம் சுதா. ஆனா தினமும் ராத்ரி வீட்ல எல்லாரும் சேந்து சாப்டுவோம், ஒரே கும்மாளமா இருக்கும், சிரிப்பு சத்தம் கேட்டுண்டே இருக்கும், இங்கே நாம் சேந்து சாப்ட்டு பலநாள் ஆச்சு. சேந்து சிரிச்சு பல நாள் ஆச்சு”.

“எல்லாம் கொஞ்சநாள்தான் நந்து. எனக்கு பிரமோஷன் கெடச்சிட்டா இதுல பாதி டென்ஷன் போயிடும்”.

நந்தினி விரக்தியாகச் சிரித்தாள். “ரெண்டு வருஷமா கேக்கற பல்லவிதான் இது” என்றாள் அவள் தொடர்ந்து பேசினாள். “நீங்க புக் ஷெல்ப் பக்கம் போய் எவ்வளவு நாளாச்சு ஞாபகமிருக்கா?” அதோடு விடவில்லை “அம்மாவைப் பார்க்கப் போய் எத்தனை மாசமாச்சு?” என்றாள்.

அவனால் பதில் பேசமுடியவில்லை, மெதுவாகக் கீழே குனிந்து அவள் உதட்டின் மேல் முத்தமிட்டான், நந்தினி சிரித்தாள். அவன் கழுத்தைப் பிடித்து இழுத்தாள். பேச்சு அவர்களை விட்டுப் பிரிந்தது. பேச்சின் சாரமும் மறந்தது. வெகு சீக்கிரமே அவர்கள் வெறும் உடல்களாக மாறினார்கள். உடல்கள் தங்களது பிரத்யேக மொழியில் பேசிக் கொண்டன.

உடலின் தன்னிச்சையான செயல்பாட்டில் நிகழ்ந்த வேகமான அசைவொன்றின் போது தன் கால் எதன் மீதோ பலமாகத் தட்டியதை உணர்ந்தான். அதை உணர்ந்த மாத்திரத்தில் மனமும் மூளையும் விழித்துக் கொண்டன. காலில் பட்டது லேப் டாப் கம்ப்யூட்டர் என்பது மூளைக்குள் உறைந்தது. வான்வெளியில் திடீரென்ற சிறகுகள் வேரோடு அறுக்கப்பட்ட பறவை போல சதாகர் வேகமாகத் தரையில் மோதி விழுந்தான்.

இரவு குளித்துவிட்டு லேப் டாப்பை தூக்கிக் கொண்டு உட்கார வேண்டும் என்ற திட்டத்தை மறந்து விட்டோமே என்ற எண்ணம் முதலில் தோன்றியது, இன்னும் மூன்றே நாட்களில் முடித்தாக வேண்டிய வேலையின் கணிசமான பகுதியை இன்று இரவு முடிக்க வேண்டும் என்று மேற்கொண்ட உறுதி அதன் தொடர்ச்சியாக நினைவுக்கு வந்தது. நாலை பகலில் வேறொரு கூட்டம் இருக்கிறது, இதில் உட்கார முடியாது. இன்று இரவு விட்டுவிட்டால் ஒரு நாள் போய்விடும், ஒரு நாள் போய்விட்டால் நிச்சயம் முடிக்க முடியாது, மறுபடியும் தோல்வி. பின் இந்தப் பொறுப்பு தீபக் மேத்தாவுக்குப் போகும், அவன் எனக்கு சமமாக வந்துவிடுவான் பிறகு தாண்டிச் செல்வது சாத்தியமாகிவிடும், அந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ளவே முடியாது.

திடீரென்று அவன் உடலும் அதன் இயக்கமும் தளர்வதைக் கண்டு நந்தினி குழப்படைந்தாள். தன் மேல் படுத்திருந்த அவனை இறுகக் கட்டிக் கொண்டாள். அவன் உடலை மறுபடியும் பேசவைக்க முயன்றாள். ஆனால் அவன் உடல்மொழி மாறிவிட்டிருந்ததை தெளிவாக உணர்ந்தாள். பரிதவிப்போடு சில முயற்சிகள் செய்து பார்த்தாள். அந்த முயற்சிகளின் வியர்த்தத்தை உணர்ந்தபோது மனத்தில் கசப்பும் வெறுப்பும் பொங்கி எழ ஆரம்பித்தன. அவள் கை சுதாகரைத் தன் மேலிருந்து சரித்தது.

தன் உடல் விடுபட்டதும் சுதாகர் லேப் டாப்பை பத்திரமாக எடுத்து வைக்க யத்தனித்தான். அவன் கை லேப் டாப்பை நாடுவதைக் கண்ட நந்தினியின் மனத்தில் புயல் மூண்டது. அவளது ஆவேசம் கால் வழியாக வெளிப்பட்டது. அவள் கால் வேகமாக லேப் டாப்பை நோக்கிச் சீறுவதைப் பார்த்த சுதாகர் தாவி எழுந்து லேப் டாப்பை வாரி எடுத்துக் கொண்டான். உதை அவன் இடுப்பில் விழுந்தது. உடலில் பொட்டுத் துணி இல்லாமல் லேப் டாப் கம்ப்யூட்டரை அணைத்தபடி தன் மனைவியின் ஆடையற்ற காலைப் பார்த்துக் கொண்டிருந்தான்

இந்தியா டுடே இலக்கிய மலர் , 2001

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள்
சுருக்கப்பட்டு தரப்படுகிறது, அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு ஒரு
நுழைவாயிலாக அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.

Magan Short Story by Baskar Sakthi Synopsis 94 Written by Ramachandra Vaidyanath. சிறுகதைச் சுருக்கம் 94: பாஸ்கர் சக்தியின் ’மகன்’ சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

சிறுகதைச் சுருக்கம் 94: பாஸ்கர் சக்தியின் ’மகன்’ சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்




இவருடைய கதைகள் மேலோட்டமாக வாசிப்பவர்களுக்கு ஒருவித ஹாஸ்ய உணர்வைத் தருகிறது.  வாசிப்பதோடு நின்று விடாதவர்களுக்கு மறைமுகமாய் ஒரு அனுபவத்தை வழிவிட்டுக் காட்டுகிறது.

மகன்
                                – பாஸ்கர் சக்தி

எல்லா வாக்கியங்களையும் என்னால் சுலபமாக நம்பிவிட முடியும்.  எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அதனை ஈஸியாக நம்பிவிடுகிறவன் நான்.  என்னால் ஒரே ஒரு வாக்கியத்தை மட்டும் எப்போதும் நம்ப முடிவதில்லை.  நானும் என் அப்பாவும் நண்பர்கள் மாதிரி என்று யாராவது சொன்னால் எனக்கு சிரிப்பும் அவநம்பிக்கையும் சேர்ந்தே வரும்.

உதாரணமாக இந்தியாவில் பெரும் பிரச்னையாக வேலையில்லாத் திண்டாட்டம் என்று நினைத்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தேன்.  அதிசயம் பாருங்கள், எனக்கு வேலை கிடைத்தவுடன் அந்தப் பிரச்னை தீர்ந்து விட்டது,  தற்போதைய பிரச்சனை எந்த வேலையாக இருந்தாலும் உழைத்து முன்னேற வேண்டும் என்கிற நெருப்பு இளைஞர்களிடத்தில் இல்லை.  இது மாதிரியே அனைத்தையும் பார்த்துப் பழகிய என்னால் தந்தை மகன் நல்லுறவை நிச்சயம் கற்பனை செய்யவோ ஏற்கவோ முடியாது.  காரணம் எனது தந்தை.   அவருக்கும் எனக்குமான உறவு.

என் அப்பா என்னைப் போல இல்லை.  ஆனால் பார்க்கிற எல்லோரிடமும் என் பையன் என்னை மாதிரி என்று சொல்லிச் சொல்லி என்னை எரிச்சல் படுத்துவார்.    ஆனால் நான் பிறக்கும்போதே புத்திசாலி.  என்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கியபிறகும் பிழைக்கத் தெரியாத ஒரு தவளை என் அப்பா.  அவருக்குத் தெரிந்தது கிணறளவு.  நானோ பறவை மாதிரி.  நசிந்ததொரு குடும்பத்தில் கடைசிப் பிள்ளைக்கு முந்தைய ஏழாவது பிள்ளையாகப் பிறந்த தவப்புதல்வன் என் அப்பா.  ஊரிலிருந்து ஒன்பது மைல் தூரம் நடந்து நடந்து படித்து ஊரின் ஒரே எஸ்.எஸ்.எல்.சி படிப்பாளி அவர்.   தான் படித்த பள்ளிக்கூட வாத்தியார் ஒருத்தரைக் கெஞ்சி அந்த சின்ன டவுனிலேயே ஒரு வேலையைத் தேடிக் கொண்டாராம்.  பருத்தி வியாபாரி ஒருவரின் கமிஷன் கடையில் கணக்கு எழுதுகிற வேலை.  

காலையில் சீக்கிரமே எழுந்துபோய் எட்டு மணிக்கெல்லாம் கடையைத் திறந்து, ஊதுவத்தி கொளுத்திவைத்து, கடையைப் பெருக்கி, வருகிறவர்கள் அமர பாயை தட்டி விரித்துப் போட்டு, மண் பானையில் தண்ணீர் பிடித்து வைத்துவிட்டு உட்கார்ந்தார் என்றால் ராத்திரி ஒன்பது மணி வரைக்கம் சிறிய கணக்குப் பிள்ளை மேஜையின் முன் கேள்விக் குறியாய் வளைந்து அமர்ந்து நாள் பூரா கணக்கு எழுதிக் கொண்டே இருப்பார்.  ‘கணக்குல நீ புலிய்யா’ என்று அப்பாவை முதலாளி பாராட்டுவாராம்.  அது ஓரளவு உண்மைதான்.  நானே பார்த்திருக்கிறேன்.  கடையில் அவர் பாட்டுக்கு குனிந்து கணக்கெழுதிக் கொண்டு இருப்பார்.  முதலாளி வந்திருக்கும் வியாபாரியிடம் அவர் அனுப்பிய பருத்தி மூட்டை எண்ணிக்கை விலை நிலவரம் எல்லாம் பேசிக் கொண்டே இருப்பார்.  திடுதிடுப்பென அப்பா பக்கம் திரும்பி ‘அப்படின்னா இவருக்கு நாம் எவ்வளய்யா தரணும் அழகரு’ என்று கேட்பார்.  அப்பா மறுவினாடியே ‘பன்னன்டாயிரத்து நானூத்தி இருவத்தேழு வருதுங்க.  போன மார்கழில ஒரு நாலாயிரத்துச் சொச்சம் வாங்கினாப்ல அதைக் கழிச்சிட்டுப் பாத்தா எட்டாயிரத்து நூத்தியம்பது’ தரணும் என்பார்.  முதலாளி பிரமிப்பார்.

ஆனால் நான் பிரமிக்க ஏதும் இல்லை.  ஏதோ கணக்கு நன்றாக வருகிறது என்பதற்காக மட்டும் அப்பாவைப் பிடித்துப் போகுமா என்ன?  நான் கேட்ட எதையும் அப்பா உடனே வாங்கித் தந்தது கிடையாது.  குடும்பக் கஷ்டம் என்று பஞ்சப்பாட்டு பாடுகிறவராகவே இருந்தார்.   என் படிப்பு பற்றி ஓயாமல் பேசி அறுப்பார்.  என் வாத்தியார்களிடம் வந்து நான் இருக்கும்போதே அவர்களிடம் என் படிப்பு குறித்து கேட்பார்.    எப்படியோ இழுத்துப் பிடித்து பஞ்சப்பாட்டுப் பாடி என் படிப்புக்கான செலவுகளை செய்தார்.  நானும் ஓரளவு படித்து ஆளாகி எனது திறமையில் ஒரு வேலை தேடி மெடிக்கல் ரெப்பாகச் சேர்ந்து ஏழெட்டு வருஷத்தில் நாலைந்து கம்பெனிகள் மாறி இப்போது ஏரியா சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ்.  என் திறமை முழுவதும் வாயிலும் நான் பேசுகிற இங்கிலீஷிலும் .. சற்றும் தயங்காமல் நான் சொல்கிற பொய்களிலும்தான் இருக்கிறது.  இது எனது இன்றைய வாழ்வின் நியாயம்.  நீங்கள்தான் இதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.  தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சரியாகக் கணக்குகளைச் சொல்வது எப்படி என் அப்பாவின் திறமையோ அது போலத்தான் இது. இல்லையா?

இப்படியெல்லாம் நினைப்பவன் பேசுகிறவன் நான்.  ஆனால் போனவாரம் என்ன நடந்தது தெரியுமா?

சென்னையிலிருந்து வேலை விஷயமாகத் திருச்சி வந்தேன்.  பஸ் பயணம்.  காலையில் இறங்கி கொட்டாவி மணக்க டீ குடித்து, சிகரெட் பற்றவைக்கும்போதுதான் கவனித்தேன் என் செல்போனைக் காணோம்.  சுருக்கென்றது,  பாதி டீயைக் கொட்டிவிட்டு பையெல்லாம் தேடினேன்.  ம்ஹும் பஸ்ஸோடு போய்விட்டிருக்க வேண்டும்.

பூத்துக்குப் போய் எனது செல்போன் நம்பரை டயல் செய்தேன்.  ‘நாட் ரீச்சபிள்’ என்று வந்தது.  மறுபடி பண்ணினேன்.  ‘நாட் இன் யூஸ்’ என்று வந்தது.  என்ன பண்ணுவதென்று தெரியவில்லை.  அடுத்த மூன்று நாட்களுக்கு எக்கச்சக்கமான வேலை இருக்கிறது.  எல்லாவற்றையும் பக்காவாக முடிக்க வேண்டும். 

யோசனையுடன் பக்கத்து பூத்தில்  நுழைந்து போனை எடுத்தேன்.  மனசு பகீரென்றது.  அனைத்து போன் நம்பர்களும் எனது செல்போனில்தான் ஸ்டோர் பண்ணி வைத்திருக்கிறேன்.  ஒரு நம்பர்கூட எனக்கு ஞாபகத்தில் இல்லை.  விஸிட்டிங் கார்டுகளைத் தேடிப் பையில் துழாவினேன்.  அதில் இருந்த இருபத்தேழு கார்டுகளும் என்னுடையவை.  என் வீட்டு எண்’ மொபைல் எண் மற்றும் ஆபீஸ் எண் மட்டுமே அதில் இருந்தன.

ஆபீசுக்குப் போன் அடித்தேன்.  ரிங்க் போய்க்கொண்டே இருந்தது.  பத்து மணிக்கு மேல்தான் ஆபீஸ் என்பது நினைவு வந்தது.

வீட்டுக்கு போன் செய்தேன்.

“ஏங்க எவ்வளவு நேரமா? உங்க மொபைலுக்கு ட்ரை பண்றது?  எங்க இருக்கீங்க?”

“ப்ச் மொபைல் தொலைஞ்சிருச்சுடி, என்ன விஷயம்?”

“அச்சச்சோ எங்க தொலைச்சீங்க?”

“இரு முதல்ல நீ எதுக்குத் தேடினே?”

“உங்கப்பா இறந்துட்டாராம்.  ஊர்ல இருந்து போன் வந்துச்சுங்க.  உடனே கிளம்பி ஊருக்குப் போங்க.  நான் நேரா அங்க வந்துர்றேன்”.

“என்ன பேச்சையே காணோம், வந்து சேருங்க. கடமையைக் கழிக்கணுமில்ல”  மனைவி போனை வைத்தாள்.

மனதில் ஒரு முள் தைத்தது.  அப்பாவைப் பற்றி என்றுமே அவளிடம் நான் நல்லவிதமாகப் பேசியதில்லை.  பின் அவளை எப்படிக் குறையாக நினைப்பது?

சட்டையைத் தொட்டுப் பார்த்தேன்.  நூற்றைம்பது ரூபாய்தான் பர்ஸில் இருந்தது.  ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டு ஆபீஸ் திறந்ததும் தகவல் சொல்லிவிட்டுக் கிளம்பலாம் எனத்தோன்றியது.  ஏடிஎம்ஐத் தேடி நுழைந்து என் கார்டை உள்ளே திணிக்கப் போகையில்தான் தோன்றியது இது புதிய அக்கவுண்ட். பின் நம்பர் இப்போதுதான் வந்தது.  அதனையும் மொபைலில்தான் வைத்திருந்தேன்,

நான்கு இலக்க நம்பர்.  இரண்டில் ஆரம்பிக்கும்.  மனதில் இருந்த எண்களைப் போட்டேன். தப்பாக வந்தது.  மறுபடியும் எண்களை மாற்றிப் போட்டேன்.  திரையில் ஸாரி என்று எழுத்துக்கள் கேலி செய்தன.

அப்பா நினைவுக்கு வந்தார்.

எனது எஸ்எஸ்எல்சி ப்ளஸ் டூ தேர்வு எண்கள், தான் வேலை பார்த்த கடையின் அத்தனை அக்கவுண்ட்டுகளின் எண்கள், நூற்றுக் கணக்கான போன் நம்பர்கள் என்று எல்லாவற்றையும் தன் மூளையில் பதிந்து வைத்திருந்த அப்பா என்னைப் பார்த்து புன்னகை செய்வது போலிருந்தது.

குபுக்கென எனக்கு அழுகை வந்தது.

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.

சிறுகதைச் சுருக்கம் 93: ஜி. காசிராஜனின் அண்ணனின் பனியன் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

சிறுகதைச் சுருக்கம் 93: ஜி. காசிராஜனின் அண்ணனின் பனியன் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்



தமிழ் இலக்கிய உலகில் சிறுவர்களுடைய உளவியலை பலரும் பலவிதத்தில் படம் பிடித்திருந்தாலும் கரிசல் கலைஞர் காசிராஜன் காட்டும் உலகம் என்பது வேறாகத்தான் இருக்கிறது.

அண்ணனின் பனியன்
ஜி. காசிராஜன்

“கூச்சப்படக்கூடாது சம்பத்… நம்ம வீட்டுக்குள்ளேயே கூச்சப்பட்டா வெளியே எப்படிப் பேசுவே… சாப்பாடு போடுங்கன்னு தைரியமாக் கேட்கணும்.. இங்க நீ வந்து ஒரு வருஷம் ஆச்சு.. சாப்பாடு போடவா..”

“போதும்கா..”

“ஆறாம் வகுப்புல வந்து சேர்ந்தே.. நம்ம வீட்ல வசதி இல்லேன்னுதானே இங்க வந்துப் படிக்கறோம்னு நினைக்காதே.  நான்தான் நமக்கு தம்பி இல்லையேன்னு அப்பாக்கிட்டச் சொல்லி கூட்டியாரச் சொன்னேன்.. ஏங்கூட வெளாடுறதுக்கு யாரு இருக்கா.. அக்கா ஓம்மேலே எவ்வளவு பிரயமா இருக்கேன் தெரியுமா?”

“வைச்சது வைச்ச இடத்துல இருக்காதே..” பொன்ராஜ் அண்ணன் மச்சு வீட்டுக்குள்ளிருந்து அலுத்துக் கொண்டான்.

“என்னடா?” என்று சலித்து திண்ணையிலிருந்து அம்மா கேட்டாள்.

“இங்கே பனியன் வைச்சேன்.  இந்தக் கொடியிலதான் போட்டேன்.  காணோம்.”

“யாரு எடுப்பா? அங்கதான் இருக்கும், எங்க போகும்? நல்லா தேடு.”

சம்பத்துக்கு பக்கென்றது.  சொல்லவா வேண்டாமா என்று யோசித்தான்.  சொல்ல வெட்கமாகவும் இருந்தது.  பயமாக இருந்தது.  முகமெல்லாம் வேர்வை.  சொன்னா எல்லாரும் சிரிப்பாங்களே!

“குழம்பு வேணும்னா ஊத்திக்க..” என்று சொல்லிவிட்டு அக்காவும் மச்சி வீட்டுக்குள்போய் தேடினாள்.  “இந்நேரம் பனியன் எதுக்குண்ணே?”

“வெள்ளன உழுகப் போகணும்னு இப்பவே தேடிட்டிருக்கேன்.  சம்பத் நீ பாத்தியாடா?”

“இல்லண்ணே, நான் பாக்கலை.”

பொன்ராஜ் ஏதோ சொன்னான்.

“ஏன் இப்படிக் கத்தறேண்ணே?  வண்ணாத்தி வர்ற நேரம்.  வெளுக்க போட்ருப்போம்.. கேப்போம்..”

சம்பத்துக்கு இடுப்பெல்லாம் கூசியது.  பனியனை நினைத்தவுடனே உடம்புக்கு பாரம் கூடியது.  புத்தகம் எடுத்து உட்கார்ந்தான்.  மனம் செல்லவில்லை.  அப்பாவும் அண்ணனும் மனசில் தோன்றி பனியன் போட்டதுக்காக அவனை அடித்தார்கள்.  பயம் கவ்வியது.

சம்பத்துக்கு ரொம்ப நாளாக பனியன் போட வேண்டும் என்று ஆசை.  ஆனால் பனியன் இல்லை.  இவனும் பனியன் வேண்டும் என்று கேட்கவில்லை.  வீட்டிலும் எடுத்துத்தரவில்லை.  அறிவியல் வாத்தியார் பாடம் நடத்தும் போதெல்லாம் அவருடைய சட்டையையும் நன்கு வெளியே தெரியும் பனியனையும்தான் பார்ப்பான்.  சட்டையில் ஒரு பித்தானைக் கழட்டிவிட்டு முக்கோணம் மாதிரி பனியன் தெரியப் போட்டிருப்பார்.  பின்னால் திரும்பினாலும் பனியன் அப்பட்டமாகத் தெரியும்.  சம்பத்துக்கு கவர்ச்சியாக தெரியும்.

கருத்த வாத்தியாருக்கே இவ்ளோ நல்லா இருந்த நமக்கு எப்படி இருக்கும் …  எண்ணிக் கொள்வான்.

அஞ்சாம் வகுப்பு படிக்கிறவரை பின்னால் கிழிந்த கால் சட்டையும் தொளதொள மேல் சட்டையும்தான்.  அதுகூட ரெண்டு ஜோடிதான்.  எல்லாப் பையன்களும் ‘டேய் தாத்தா வாராண்டா’ என்று கேலி பண்ணுவார்கள்.  மற்றவர்களின் கேலிப் பேச்சு  சம்பத்தை ஊமையாக்கியது.  மனசில் சதா ஏக்கம்.  யாராவது நல்ல சட்டைப் போட்டுப் பார்த்தவுடனே ஏமாற்றம் இயலாமை வருத்தம்.

இவனுடன் படிக்கும் வெங்கடேஸ்வரன் டாக்டருடைய பையன்.  சாயங்காலம் விளையாட பனியன் போட்டுத்தான் வருவான்.  அது சிங்கப்பூர் பனியனாம்.  சம்பத்துக்கு தொட்டுப் பார்க்க வேண்டும் போல இருக்கும்.

அய்யா கூலி வேலை செஞ்சு பனியனா வாங்கித் தரமுடியும்.  அய்யாவே ரொம்ப நாளா சட்டை போடலை.  ஏதோ பெரியம்மா பெரியப்பா இருக்கப்  போயி படிக்கப் போடறாங்க.  பெரியப்பா வீட்டில் மூன்று அண்ணன்களும் ஒரு அக்காவும்.  இரண்டு பேர் படித்து சாத்தூரிலும் மதுரையிலும் வேலையில் இருக்கிறார்கள்.  மூன்றாவது பொன்ராஜ் அண்ணன்.  நான்காவது அக்கா.  அக்காமேல் இவனுக்கு கொள்ளைப் பிரியம்.  பிரியத்தை வெளிக்காட்டாமல் மனசுக்குளேயே வைத்திருப்பான்.

“சம்பத் படிக்கிறியா?” அக்கா கேட்டாள்.

“ம்..”

“பரீட்சை எப்படா இன்னும் ஒரு மாசம் இருக்குமில்ல.  ஆமா நீ அண்ணன் பனியனைப் பாத்தியா?”

சம்பத் அக்காவை நிமிர்ந்து பார்த்தான்.  கொஞ்சம் யோசித்து  “இல்லேக்கா” என்றான்.  அக்கா பாத்திரம் தேய்த்துக் கொண்டே “எங்க போயிருக்கும் வண்ணாத்தி சுப்பு வரட்டும் கேட்போம். நீ படி.”

“ஒண்ணுக்குப் போயிட்டு வந்த்ருறேன்கா.”

சம்பத் வெளியே ஓடினான்.  சற்று தள்ளிப் போய் சட்டையைத் தூக்கி உடம்பைப் பார்த்தான்.  உடம்பு முழுவதும் தெரிந்தது.  இரண்டு கயிறு மட்டும் புஜத்திலிருந்து தொங்க, முழங்கால் வரை வந்த பனியனை மடக்கி டவுசருக்குள் திணித்து வைத்திருந்தான்.  சம்பத்துக்கு அழுகையாய் வந்தது.  என்ன செய்யலாம்?  இன்னிக்குப் பாத்தா அண்ணன் பனியனைத் தேடணும். ஒண்ணுக்குப் போய்விட்டு வீட்டுக்கு வந்தான்.  வண்ணாத்தி சுப்பு சாப்பாட்டுக்காகக் காத்திருந்தாள்.  அக்கா சாப்பாடு போட்டுவிட்டு “சுப்பு அண்ணனோட பனியனை வெள்ளாவி வைச்சுருக்கியா?” என்றாள்.

“பனியனா? ரெண்டு வேட்டி, அம்மா சேலை, துண்டு நாலுதான் போட்டீங்க. பனியன் இல்லை தாயே.”

“இல்ல இங்க காணோம். அதுதான் ஒங்கிட்டப் போட்டோமோ என்னமோன்னு.”

“பனியன் போடலம்மா.”

“எதுக்கும் வீட்ல பாரு சுப்பு.”

சம்பத் புத்தகத்துப் பக்கத்தில் உட்கார்ந்தான்.  காலைல சீக்கிரம் எந்திரிச்சு கழட்டிப் போட்டுட்டு மூட்டைக்குக் கீழே இருந்துச்சுன்ன சொல்லிரனும் என்று எண்ணினான்.

“இங்க போட்ட பனியன் எங்க போகும்.. அண்ணன் எங்கயாச்சும் குளிக்கிற இடத்துல போட்டுருக்கும்.  மறந்து போயி   நம்மளப் போயி தொந்தரவு பண்ணிட்டு” என்று சொல்லிக் கொண்டே திண்ணையைக் கூட்டி படுக்கையை விரித்தாள்.    அங்குதான் அம்மா அக்கா சம்பத் படுத்துக் கொள்வார்கள்.  அண்ணன் பொன்ராஜ் கொஞ்ச நேரம் கழிச்சு வந்து விரிப்பானை எடுத்துப் போய் தொழுவத்தில் படுத்துக் கொள்வான்.

“சம்பத் படிக்கப் போறியா? படுக்கப் போறியா?”

“படுக்கப் போறேன்கா..” மெதுவாகச் சொன்னான்.

“ஏண்டா ஒரு மாதிரியா இருக்கே? தலைகிலை வலிக்குதாடா.”

அக்கா வந்து கழுத்தில் கை வைத்துப் பார்த்தாள் “ஏண்டா இப்படி பயந்து நடுங்கற. நான் உன் அக்காடா..”

அப்பொழுது பொன்ராஜ் அண்ணன் வந்தான்.

“என்ன பனியன் கேட்டியா? சுப்பு என்ன சொன்னா?”

“வெளுக்கப் போடலியாம், எதுக்கும் பாத்து காலைல  சொல்றேன்னு சொன்னா.”

சம்பத் படுத்துக் கொண்டான்.  தன்னையே நொந்து கொண்டான்.  இவ்ள பெரிய பனியனை யாராச்சும் போடுவாங்களா பனியன் போட்டவர்கள் அறிவியல் வாத்தியார் உட்பட ஒவ்வொருவராக மனதில் வந்தார்கள்.  சம்பத் பலவிதமாக எண்ணிக் கொண்டு தூங்குவதுபோல் கண்ணை மூடிக் கொண்டான்.  அக்கா ஏதோ சொல்லியவாறே பக்கத்தில் படுத்துக் கொண்டாள்.  அவள் பக்கத்தில் படுத்தது காதுவழி மனசில் தெரியும்.  அக்கா தன்னையேப் பார்ப்பதாக எண்ணி கண்ணை அசையாமல் வைத்திருந்தான்.

அவளுக்கு ஒரே புழுக்கமாக இருந்தது.  சம்பத்தைப் பார்த்தாள்.  “இந்தப் புழுக்கத்துல எப்ட்றா சட்டை போட்டுத் தூங்றே..” அக்கா எழுந்து அவன் சட்டையை கழட்ட ஆரம்பித்தாள்.  அவன் தூங்குவது போல கைகளை இறுக்கிக் கொண்டான்.  கழட்டிப் பார்த்தால் அவளுக்கு ஒரே ஆச்சர்யம்.  பூணூல் மாதிரி இருண்டு தோள்களிலும் இரண்டு பனியன் கயிறு.  சுருட்டி வைத்திருந்த பனியனை வெளியே எடுத்தாள்.  அவனுக்கு முழங்கால் வரை வந்தது.

அக்காவுக்கு சிரிப்புத் தாங்க முடியவில்லை. சம்பத் எழுந்து கொண்டான்.  அக்கா விழுந்து விழுந்து சிரித்தாள்.  சம்பத்தை பனியனை பிடித்து இழுத்துக் கேலி பண்ணினாள்.

“அடே படவா, திருட்டுப் பயலே, கல்லுளி மங்கா..”

சம்பத் ஓவென்று அழ ஆரம்பித்து விட்டான். விக்கி விக்கி அழுதான்.

“டேய், டேய், அழுகாதே சத்தம் போடாதே டா.  அம்மா வந்துடுவா.  கழட்டு, கழட்டு. சீக்கிரம் கழட்டு. யாருக்கும் தெரியாம வைச்சிடுவோம்.”

சம்பத் விசும்பி விசும்பி அழுதுகொண்டே கழட்டிக் கொடுத்தான்.  போர்வையால் முகத்தை மூடி வெட்கப்பட்டு அழுது கொண்டிருந்தான்.  அக்காவுக்கு சிரிப்புத் தாங்க முடியவில்லை.  அவன் முகத்தை மூடிக் கொண்டிருந்த போர்வையைப் பிடித்து இழுத்தாள்.  அவன் பலமாகப் பிடித்துக்  கொண்டிருந்தான்.

“டேய் சம்பத் அழுகாதே.  நாளைக்கு அப்பாக்கிட்டச் சொல்லி ஒனக்கு ஒரு பனியனை வாங்கித் தரச்சொல்றேன் என்ன?” என்று மீண்டும் போர்வையை இழுத்துப் பார்த்தாள்.  முகத்தை மூடிக் கொண்டு சிரித்துக் கொண்டே அழுதான்.  அக்காவுக்கு சிரிப்பு அடங்கவே இல்லை.

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது. 

Thalir Short Story by Ramachandran Synopsis 92 Written by Ramachandra Vaidyanath. சிறுகதைச் சுருக்கம் 92: பா. ராமச்சந்திரனின் தளிர் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

சிறுகதைச் சுருக்கம் 92: பா. ராமச்சந்திரனின் தளிர் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்




இவர் சில கதைகளை எழுதுகிறார். சில கதைகளை வரைகிறார்.  எழுத்துக்களுக்கு  இடையே சித்திரங்கள் தோன்றி  சித்திரங்களுக்கிடையே எழுத்து அழிகிறதாக மாறி மாறி விரிவடைந்து கொண்டே போகிறது.

தளிர்
பா. ராமச்சந்திரன்

விடியற்காலைப் பொழுதுகளில் குகை ரோட்டில் பயணிப்பது வித்தியாசமான அனுபவம்.  வாகனத்தினுள் ஒழுங்கற்றுத் திணிக்கப்பட்டிருந்த சாமான்களில் சில இதோ இப்போ உருண்டு விடுகிறேன் பார் என்பது போல் பயமுறுத்திக் கொண்டிருந்தன.  அவற்றை விழுந்து விடாமல் பாதுகாத்தபடியிருந்தார்கள் அப்பாவும் ரேவதியும்.

குடியிருப்பு வீட்டில் குடியேற வருவது இது இரண்டாம் முறை.  கல்லூரிப் படிப்பில் நான் நுழைந்திருந்த ஆண்டில் அது நடந்தது.  நட்ட நடு ராத்திரியில் எங்கள் குடும்பம் இதே குகை ரோட்டில் பயணித்த போது அம்மாவும் அக்காவும் அவரவர்களின் சந்தேகங்களைக் கேட்டனர்.

“புது வீட்லே ஃபேன் இருக்குமாங்க?”

“படிக்க தனியறை இருக்குமாப்பா?”

எனக்கிருந்த சந்தேகமெல்லாம் டெஸ்ட் மாட்ச் பார்க்க பக்கத்து வீட்ல டிவி இருக்குமா என்பது மட்டுமே.

புது வீட்டிற்குள் நுழைந்ததும் அம்மா உடனடியாய் ஃபேனைச் சுழல விட்டதும், மூன்று அறைகள் கொண்ட குடியிருப்பு வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்த அக்கா அதிசயித்து நின்றதும், குரோட்டன்ஸ்களும் பூந்தோட்டங்களும் மரங்களுமாயிருந்த கீழ்த்தளத்து வீட்டை பால்கனியிலிருந்து பார்த்துக் குடும்பம் முழுவதும் பிரமித்து நின்றதும் என்றும் மனதில் வரும் நினைவுகள்.

நாங்கள் இருந்தது இரண்டாம் மாடியில்.  அங்கிருந்து எந்த மரத்தை வளர்க்க முடியும்! பின்பக்கம் படிக்குப் பக்கத்திலே இருக்கும் கொஞ்சூண்டு மண்ணுலே மல்லி ரோஜா செம்பருத்தி பப்பாளியைத்தான் வைக்க முடியும்.  அக்காவக்கு இந்த அளவுக்காவது இடம் கிடைச்சுதேங்கிற சந்தோஷம். 

ரங்கராஜன் சாரின் கீழ் வீட்டுக் காம்பவுண்டுக்குள்ளே எல்லா மரங்களும் இருந்தன.  ஆனாலும் அதிகமாக இருந்தவை என்னவோ முருங்கை மரங்கள்தான்.  வீட்டுக்குப் பின்புறமும் வேலிக்கட்டி அங்கேயும் வாழை முருங்கைனு எக்கச்சக்கமான மரங்கள்.  ரங்கராஜன் சார் கையிலே ஹோஸ் பைப்பைப் பிடிச்சுட்டார்னா காலைல மணி அஞ்சுனு கரெக்டா சொல்லிடலாம்.  தண்ணி ஊத்தின கையோட வாங்கிட்டு வந்த உரத்தை செடிகளுக்குப் போடுவார்.  அவரைத் தவிர வேற யாரும் அவங்க வீட்டுக் கார்டனுக்கு தண்ணி ஊத்திப் பாத்ததில்ல நாங்க.

அவரு வீட்ல பூக்குற ரோஜாவும், மல்லியும் பிளாக்ல எல்லா வீட்டுக்கும் போகும்.  அக்காவுக்கு அந்த மாதிரி ரோஜா வளர்க்கணும்னு ஆசை.  உடனே ரங்கராஜன் சார் வேரோட பிடுங்கிக் கொடுத்ததோட இல்லாம இரண்டு மூணு முறை  மேல வந்து செடிக்கு உரமெல்லாம் போட்டுட்டுப் போனார்.  

“செடி வைக்கிறது பெரிசில்லைம்மா உஷா.  அதை நாம் குழந்தைகளாட்டம் பார்த்துக்கணும்,  அப்பப்ப அதுங்களோட தேவையைப் பூர்த்தி பண்ணணும்.  அப்பத்தான் அதுங்களும் நம்மை  கவனிக்கறதுக்கு ஆளு இருக்குனு நம்பிக்கையாய் வளருங்க.  நா வரப்ப ஒண்ணுகூட  கிடையாது.  ஒவ்வொண்ணா வைச்சு இன்னிக்கு வரைக்கும் காப்பாதிட்டேன்.  எனக்குப் பின்னாடி அந்த வீட்டுக்கு வரவன் கையிலேதான் அதுங்களோட ஆயுசு.”

ரங்கராஜன் சார் சொன்னது சத்தியமான வார்த்தைகள்.  அன்னிக்கு அவர் ஏன் அப்படிப் பேசினார் என்பது அடுத்த ஆறாவது மாதத்தில் புரிந்தது.   ஒருநாள் விடியற்காலையில் ரங்கராஜன் சார் எங்கள் விட்டிற்கு வந்தார்.  எங்கள் வீட்டிற்கு வருவதற்கு முன் பிளாக்கில் உள்ள சில வீடுகளுக்கு போயிருந்தார்.  எல்லா வீடுகளிலும் அவர் சொன்னது ஒரே விசயத்தை “வர முப்பதாம் தேதியோட பணிக்காலம் முடியுது.  ஒரு மாசத்துக்கு முன்னாடியே காலி பண்ணாத்தான் செட்டில்மெண்ட் சீக்கிரமா கிடைக்குமாமே.. அதான்  காலைல கிளம்பறேன்.  நா போன பிறகு இந்த வீட்டுக்கு இன்னொருத்தரா வர இரண்டு  மூணு மாசமானாலும் ஆகலாம்.  அதுவரைக்கும் நீங்க கொஞ்சம் பத்திரமாக தண்ணி ஊத்தி பாத்துக்குங்க.  பக்கத்து வீட்லே ஹோஸ் பைப், உரமெல்லாம் வைச்சுட்டுத்தான் போறேன்.  டிசம்பரும், கனகாம்பரமும் போனவாரம் வைச்சது.  சரியா கவனிக்கலைன்னா பட்டுப் போயிடும்.  பத்திரமா பாத்துக்குங்க.”  

அவர் வீட்டைக் காலிபண்ணிட்டுப் போன மறுநாளிலிருந்து பிளாக்கிலிருந்த பதினொரு குடும்பங்களும் புதிதாய்  வைக்கப்பட்ட செடிகளுக்கும் குரோட்டன்ஸ்களுக்கும் தண்ணீரைப் போட்டி போட்டுக் கொண்டு ஊற்றினார்கள்.  

ரங்கராஜன் சார் வீட்டைக் காலி செய்த பதினைந்தாம் நாள் ஏகப்பட்ட முருங்கைப் பிஞ்சுகள் காய்ந்துக் குலுங்கின.  பிஞ்சுகள் முளைத்த அடுத்த இருபத்து நாலு மணி நேரத்தில் அந்த வீட்டில் குடிபுக பெருங் குடும்பமொன்று லாரியில் வந்திறங்கியது.

புதுக்குடித்தனக்காரர் வந்த சில தினங்களுக்குள்ளாகவே பிஞ்சுகளாய் இருந்த காய்கள் இரண்டடி காய்களாக மரமெங்கும் பரவிக் கிடந்தன.  அந்தக் காய்களை முதல் மாடியில் இருந்தபடியே பறிக்கலாம்,   முதல் மாடிக்கார குடித்தனவாசி இரண்டு காய்களைப் பறிக்கவும் செய்தார்.

முதல்மாடிக்காரர் முருங்கைக்காய் பறித்த செய்தியைக் கேள்விப்பட்டதும் புதுக்குடித்தனக்காரர் விண்ணுக்கும் மண்ணுக்குமாய்க் குதித்தார்.  

“எங்க வீட்டு மரத்துலேயிருந்து எவண்டா காயைப் பறிச்சது?”

“என்னய்யா பொம்பளை கிட்ட பேசறே? நான்தான் பறிச்சேன்.  இப்ப என்ன சொல்றே.  பதினோரு வீட்டுக்கும் மரம் சொந்தம்னுதான் ரங்கராஜன் சார் சொல்லிட்டுப் போனாரு.”

முதல் மாடிக்காரருடன் வேறு சிலரும் சேர்ந்து கொண்டனர்.  “என்னமோ நீங்க கஷ்டப்பட்டு வளர்த்த மாதிரில்ல பேசுறீங்க.  ரங்கராஜன் சார் இல்லன்னா என்னைக்கோ போயிருக்கும்”. ஆளாளுக்குக் கத்தியதில் புதுக் குடித்தனக்காரருக்குக் கோபம் தலைக்கேறியது.  உள்ளே ஓடினான்.  திரும்பி வந்தான் கையில் வெட்டரிவாளோடு.

வந்தவன் எதுவும் பேசவில்லை.  வெட்டரிவாளை வெறிக்கொண்டு வீசினான்.  கிளைகளை வெட்டி பூக்களை காயப்படுத்தி அந்த பிரம்மாண்டத்தை அரை மணி நேரத்துக்குள்ளாக வெட்டிச் சாய்த்தான்.

ரங்கராஜன் சார் மரத்துக்காக உழைத்ததைப் பற்றிக் கொஞ்ச நாளைக்குப் பேசினார்கள்.  அப்புறம் அதை எல்லோருமாய் மறந்தே போனார்கள். எனக்கு மட்டும் அதை மறக்க முடியவில்லை.  அந்த மரம் மீண்டும் அவனிடத்தில் வளர்ந்துடக்கூடாது என்கிற எண்ணம் எனக்குள் தீவிரமாய் வளர்ந்தது.

காலையில் எழுந்ததும் என் முதல் வேலை பால்கனியில் நின்ற அந்தக் கொலையுண்ட மரத்தைப் பற்றிய சேதியை விசாரிப்பதாக இருந்தது.  எனக்கு முன்னாலேயே அவன் எழுந்திருந்து அந்த மரத்திற்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருப்பான். எங்கேயோ போய்ச் சாணத்தை அள்ளி வந்து மரத்திற்கு போடுவான்.  ஆடு மாடுகளிடமிருந்து மரத்தைக் காப்பாற்ற சுற்றிலும் முள்செடியை பரப்புவான்,

நாங்கள் அங்கிருந்த வரைக்கும் அவனோட எல்லா முயற்சிகளும்  தோற்றுப் போயின. எந்தவிதமான அசைவையும் காட்டாமல் மரம் உறுதியாய் இருந்ததில் மனது சந்தோஷப்பட்டது.

அப்பாவின் பணி ஓய்வு காரணமாக அடுத்த இரண்டு வருடத்தில் வீட்டைக் காலி செய்தோம்.  மீண்டும் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு குடியிருப்பு வீட்டில் குடிபுக இப்போது என் குடும்பத்தோடு வந்து கொண்டிருக்கிறோம்.  எட்டுவருட ஃபேன் வாழ்க்கையை முடித்துக் கொண்டு அம்மா போய் விட்டார்கள்.  குடியிருப்பு வீட்டில் தனியறை தன்னறையாக இருந்த அக்காவுக்கும் திருமணம் முடிந்திருந்தது,  

லாரி நாங்கள் குடிபுக இருக்கும் வீட்டருகில் நின்றதும், அப்பாவிடம் புதுவீட்டின் சாவியைக் கொடுத்து விட்டு இறங்கி ஓடினேன்.  சிகரெட் பிடிக்கத்தான் போகிறார்னு ரேவதி நினைத்திருப்பாள்.  இரண்டு தெருவைக் கடந்த ஒரு வலப்பக்க வளைவில் திரும்பி மீண்டும் ஒரு இடப்பக்க வளைவில் திரும்பி முன் நாங்கள் குடியிருந்த பிளாக் அருகில் வந்தேன்.

நடுத்தர வயதுக்காரரொருவர் கைலி கட்டிக் கொண்டு செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.

“யாரு வேணும் சார் உங்களுக்கு?”

“இங்க செல்வராஜ் இருந்தாரே அவுரு இல்லீங்களா?”

“அவரு காலி பண்ணிட்டுப் போய் ஆறு மாசமாச்சு.  சொந்த வீடு கட்டிட்டு போயிட்டார்.  எல்லாம் அவரு வைச்சுட்டுப் போன மரங்கள்.”

ரங்கராஜன் சார் வைத்து விட்டுப் போயிருந்த தோட்டத்தில் மரங்கள் கூடியிருந்தன.  விதவிதமான குரோட்டன்ஸ் மல்லி கனகாம்பரம் செடிகள், வாழையில் குலைகுலையாய்க் காய்கள் தலை காட்டத் துவங்கியிருந்தன.  எல்லாவற்றுக்கும் மத்தியில் அந்த பிரும்மாண்டம் பச்சைப் பசேலென்று தன் உடலெங்கும் காய்களத் தொங்கவிட்டுக் கொண்டு கம்பீரமாய் நின்றிருந்தது.

மீண்டு ஹோஸ் பைப்பில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றத் தொடங்கிய கைலிக்காரர் கேட்டார் “உங்க நண்பரா சார், ரொம்ப நாளைக்கப்புறம் பார்க்க வரீங்க போலிருக்கு…”

ஒரு கணம்கூட யோசிக்காமல் சொன்னேன் “ஆமாங்க”

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  

Santhana Soppu Short Story by Perumal Murugan Synopsis 91 Written by Ramachandra Vaidyanath. சிறுகதைச் சுருக்கம் 91: பெருமாள் முருகனின் சந்தனச் சோப்பு சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

சிறுகதைச் சுருக்கம் 91: பெருமாள் முருகனின் சந்தனச் சோப்பு சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

உத்திகளின் பிரம்மாண்ட தேவையைப் புறக்கணித்து எழும் பெருமாள் முருகனின் எழுத்துக்கள் நலிந்த வாழ்வின்  இடுக்குகளில் தென்படும் அபூர்வம்.  யாரும் புகத் தயங்குகிற பிரதேசங்களைக் கலாபூர்வமாக சித்தரிக்கிறார்.  

சந்தனச் சோப்பு
பெருமாள் முருகன்

அந்தப் பையனை முதலில் அவனுக்கு அடையாளம் தெரியவில்லை.  உடல் நடுங்கக் கதறிக்கொண்டு “அண்ணா.. அண்ணா..” என்றான்.  ஈரம் நசநசத்த தரையும், வரிசையாய் இருந்த கழிப்பறைகளின் நாற்றமும், கால்களைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டிருந்த சிறுவனுமாய்ச் சேர்ந்து தனது அன்றைய அலுவலில் ஏதோ மாற்றத்தை ஏற்படுத்த சதி செய்வதாகத் தோன்றியது.  சட்டைப் பையில் கைவிட்டு எத்தனை ரூபாய் என்று தெரியாத ஒரு நோட்டை எடுத்து “இந்தா வெச்சுக்க” என்று திணிக்கப் பார்த்தான்.  

பையன் பரிதாபமாக நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தான்.  “அண்ணா.. நான் உங்க ஊரு அண்ணா..” என்றான்.   விசும்பல் அதிகமாகிக் கண்கள் கசிந்து கொண்டேயிருந்தன.  அவன் அதிர்ந்து போய்ப் பையனைப் பற்றித் தூக்கினான்.  “என்னடா சொன்ன?”

“நா சரசக்கா பையண்ணா என்னயத் தெரீலியா?” பையனின் முகத்தில் சரசக்காவின் ஜாடை இப்போது தெரிந்தது.  “வாடா” என்று பையனை இழுத்துக் கொண்டு வெளியே வந்தான்.  மேஜைக்கு அருகே உட்கார்ந்து காசு  வாங்கிக் கொண்டிருந்தவனை நோக்கி “அண்ணன் எங்கூரு” என்றான் பையன்.  அது தகவல் போலில்லாமல்  அனுமதி கேட்பதாயிருந்தது.  

எல்லா நகரங்களின்  பேருந்து நிலையக் கழிப்பறைகளும் அவனுக்கு அறிமுகமானவையே.  கதவுகளே இல்லாதவை, கதவுகளைப் போன்றவை, தட்டி வைத்து மறைக்கப்பட்டவை, கதவுகளின் அடிப்பகுதி அரிக்கப்பட்டு ஓட்டை விழுந்தவை என்றெல்லாம் பலமுகம் காட்டும்.   அவற்றின் தோற்றங்கள் அவனுக்குப் பழகிப்போனவை.  எவ்வளவு நீரூற்றினாலும் மூழ்கிப் போகாத மலக்குவியல் கொண்ட பேசினைக் குனிந்து பாராமலே தன்கடனை முடித்துக் கொண்டு வந்துவிடுவான்.  ஆனால் உள்ளே நுழைந்து ஓட்டைத் தாழை ஒருவழியாகச் செருகிக் கதவை மூடி உட்கார்ந்ததும் ‘சார், வாங்க சார் வாங்க’  என்று கூவித் தட்டும் குரல் தரும் எரிச்சல்தான் தீராது.  இந்த உள் உலகத்தில் இந்தப் பையன் எப்படி நுழைந்தான்?  அவனைப் பற்றியிருந்த கை சில்லிட்டு குளிர்ந்தது.  பேருந்து நிலையத்திற்குள் பாதிதூரம் வந்ததும் பையனைத் திரும்பிப் பார்த்தான்.  சோடியம் விளக்கொலியும் விடியலின் லேசான வெளிச்சமும் அவன் முகச் சோர்வைத் துலக்கிக் காட்டின.  

தேநீர் சொல்லிவிட்டுப் பையனை உட்காரவைக்க இடம் தேடினான்.  வட்டமான பிளாஸ்டிக் முட்டான்களைக் கடைக்காரன் வெளியே கொண்டு வந்து  போட்டான்.    பையனுக்கு இப்போது அழுகை நின்று ஆசுவாசம் கூடிவிட்டிருந்தது.  பெரியவர்கள் அணியும் அண்டர்வேர் ஒன்றை அணிந்திருந்தான்.  அதற்குப் பொருத்தமற்ற சட்டை மிகச் சிறியது.  பையனுடைய தலையை லேசாகத் தடவிவிட்டான்.  தன்னுடைய அன்பையும் ஆதரவையும் அப்படித்தான் தெரிவிக்க முடியும் என்று பட்டது.  “அண்ணா.. என்னயக் கூட்டிக்கிட்டுப் போயிருண்ணா..” பையன் குரலில் துயரத்தின்  வலி கூடியிருந்தது.  அவன் மூலமாக விடிவு கிடைத்துவிடும் என்று நம்புவதுபோலவும் இருந்தது.  பையனின் கோரிக்கை அவனுடைய பயணத் திட்டத்தைச் சீர்குலைத்துவிடும்.  கொஞ்சம் எச்சரிக்கையாகத்தான் பையனை அணுக வேண்டும்.

“எப்படீடா இங்க வந்த?” என்ற சிறு கேள்வியைப் போட்டதும் பையன் விஸ்தாரமாகத் தன் கதையைச் சொல்லத் தொடங்கினான்.  பையனுடைய கதையை நான்கே வரிகளில் சொல்லி முடித்து விடலாம்.  அவனுடைய அப்பன் சம்பாதிக்கும் பொருட்டு கேரளாவுக்குச் சென்றவன்.  ஆறு மாதங்களாகத் தகவல் எதுவும் தரவில்லை.  குழந்தைகளைப் பராமரிக்க சரசக்கா கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தபோது ஒரு இழவுக்காக காரில் வந்தார் பையனுடைய முதலாளி.  சரசக்கா அவருடைய கால்கைகளில் விழுந்து மொதலாளி ‘எம்பையனுக்கு ஏதாச்சும் வேல பார்த்துக் குடுத்து நீங்கதான் குடும்பத்தக் காப்பாத்தோணும்’ என்று மன்றாட அவரும் ரொம்ப யோசித்து ‘செரி என்னோட வரட்டும்’ என்று  பெரியமனது செய்தார்.  பெரிய ஹோட்டல், பேருந்து நிலைய சைக்கிள் ஸ்டாண்ட் கழிப்பறைக் குத்தகை எனப்பல தொழில்கள் செய்துவரும் முதலாளி இப்பத்திக்கு ‘இங்க இருடா அப்புறம் ஓட்டலுக்கு வந்தர்லாம்’ என்று சொல்லிக் கழிப்பறைக் கதவுகளைத் தட்ட அனுப்பிவிட்டார். 

மலம் நிறைந்த பேசின்களுக்கு இடைவிடாமல் சிறுவாளியில் நீரள்ளி ஊற்றுகையில் சுவாசிக்க வேண்டியிருக்கும்  நாற்றங்களின் கொடுமை, பார்வையில்படும் பல்வேறுவிதமான மலங்களின் தோற்றம், கழிப்பறைக்குள்ளிருந்து வருவோர் வீசியெறியும் சில்லரைகள் எனப் பலவற்றையும் விவரித்துவிட்டுச் சட்டென கால்கள் இரண்டையும் நீட்டிக் காட்டினான்.  ஈரத்திலேயே நின்று நின்று பாதங்கள் முழுக்க நொசநொசத்துக் கிடந்தன.  வெண்ணிறத்தோல் உப்பி வெடித்த புண்கள்.

“அண்ணா என்னைய எப்பிடியாச்சும் இங்கிருந்து வட்டிக்கிட்டுப் போயிரண்ணா… என்னோட ஒடம்பு முழுக்கப் பீ இருக்க மாதிரி இருக்குதண்ணா.  போட்டுக் குளிக்கச் சோப்புகூட இல்லை… சாப்பிடவே முடியல.  ஓங்கரிச்சிகிட்டு வாந்தியா வருது.  என்னயக் கூட்டிட்டுப் போயி எங்கம்மாகிட்ட உட்ரண்ணா..”  ஓரிரு நிமிடங்களில் இதுபோலப் பல விஷயங்களைச் சொல்லிக் கடைசியில் கூட்டிக்கிட்டு போயிரண்ணா என்று முடிவு கொடுத்தான். 

“மொதலாளிக்கிட்ட வந்து ஓட்டல் வேலக்கி அனுப்புங்கன்னு சொல்லட்டுமா?”

“என்னத்துக்குடா .. இதப் போயிக் கண்டவங்ககிட்டயெல்லாம் சொல்றன்னு அடிப்பாங்கண்ணா.”

“கோயமுத்தூரெல்லாம் போயிட்டு வரும்போது இந்த வழியாத்தான் வருவன்.  அப்பக்கூட்டிக்கிட்டுப் போயிர்றன்.  அதுக்கு முன்னாடி ஊர்க்காரங்க யாரையாச்சும் பாத்தன்னா உங்கொம்மாவுக்குச் சொல்லி உடறன் என்ன..”

“சரீண்ணா” என்றான்.  

“ரண்டு மூனு நாளுக்குப் பொறுத்துக்க, ஏற்பாடு பண்ணீர்றன்.”

“செரீண்ணா, எப்படியோ கூட்டிக்கிட்டுப் போயிரண்ணா.  நேரமாயிருச்சு.  காணம்னு திட்டுவாங்க.  கொஞ்ச நேரம் உட்டுட்டா தண்ணி ஊத்தாம நெறஞ்சு நொரச்சிக்கிட்டுக் கெடக்கும்.”

பையன் நகரத் தொடங்குகையில் நினைவு வந்தவனாய் அழைத்துப் பக்கத்துக் கடையில் சந்தனச் சோப்பு ஒன்றை வாங்கிக் கொடுத்தான்.  பையனுடைய பிரச்சினைக்கு எளிதான உடனடியான தீர்வாகச் சோப்பு அமையும் என்று தோன்றிற்று  அன்றைய அலைச்சலின்போது சில காட்சிகள் திரும்பத் திரும்ப மனதில் வந்து கொண்டிருந்தன. கறுத்த முகத்துடன் ஒளிகூடிய சரசக்கா அவளின் அளவான முலைகள்.  அக்காமுறை ஆவுது என்று சொல்லிச் சொல்லி அடங்கிய தன் மனம்.  வாளிவாளியாய்த் தண்ணீர் ஊற்றநுரைத்து நுரைத்து எழும் மலக்குவியல். பையன் கையில் மணக்கும் சந்தனச் சோப்பு.

மூன்று மாதங்களுக்கு மேலிருக்கும்.  திரும்பவும் அவன் அந்த நகரத்திற்கு வரவேண்டியிருந்தது.  பேருந்திலிருந்து இறங்கிக் கழிப்பறை நோக்கிச் செல்லும்போதுதான் பையனின் நினைவு வந்தது.  இதற்கு முன் அந்த நினைவே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது.  இடைப்பட்ட காலத்தில் ஓரிருமுறை பொறி தட்டியதுபோல பையனின் முகம் வந்திருக்கிறது.  ஊருக்குப் போகவே வாய்க்கவில்லை.

காசைக் கொடுத்தபின் பையை மேஜையடியில் வைத்துவிட்டுப் பார்த்தான்.  உட்கார்ந்திருந்த ஆள் முகத்தில் தூக்கச்சடைவு நீங்காமல் இருந்தது.  உள்ளேயிருந்து ‘சார், வாங்க சார் வாங்க’ என்ற குரல்.  அது பையனுடையதுபோலவும் இல்லை என்பதாகவும் தோன்றிற்று.  ஒவ்வொரு கழிப்பறை முன்னும் ஒன்றிரண்டு பேர்.  கதவு தட்டுகிறவன் லுங்கி கட்டியிருந்தான்.  பையன் ஓட்டல் வேலைக்குச் சென்றிருப்பான் என்று நினைக்க ஆசுவாசமாயிருந்தது.  ஒரு கதவின் முன் நின்று கொண்டான்.  அதன் முன் ஏற்கனவே ஒருவன் காத்துக் கொண்டிருந்தான்.  தகவு தட்டுகிறவன் ‘சார் வாங்க’ என்று இடைவிடாமல் கத்தினான்.  அவன் நின்றிருந்த கதவுக்கு அருகில் வந்து தட்டியபோது லுங்கிக்காரன் ஆள் இல்லை  பையன்தான் என்பது தெரிந்தது.  சாயம் போன சாதாரண லுஙகி ஒன்று ஆளையே மாற்றியிருந்தது.  பையனைக் கூப்பிடலாமா வேண்டாமா என்று ஒரு கணம் தயக்கம் கொண்டான்.  வந்த சுவடு தெரியாமலே போய்விடுவது நல்லது.

அவன் நின்றிருந்த கழிப்பறைக் கதவு இப்போதைக்குத் திறக்குமெனத் தோன்றவில்லை.  அவனுக்கு முன்னால் ஏற்கனவே ஒருவர் காத்திருந்தார்.   பையனின் சத்தம் உள்ளிருக்கும் எவரையும் அசைத்ததாகத் தெரியவில்லை.  ஏதோ ஒரு கதவு கிரீச்சிடும் சத்தம் காதைக் கிழித்தது.  நடுவறை ஒன்றிலிருந்து வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு ஒருவர் வெளிப்பட்டார்.   உடனே அந்த அறைக்கு அருகே பையன் ஓடினான்.  வாளி நீரை உள்ளே வீசினான்.  நீர் சுவரில் விழுந்த தரையில் விழுந்ததோ தெரியவில்லை.  அவனிருக்கும் பக்கமாகக் பையன் வந்தான்.  குரல் அனிச்சையாக ‘சார் வாங்க’ என்றும் கை கதவைத் தட்டிக்கொண்டும் வந்தன.

சற்றே எட்டிப் பையன் தோள்மேல் கை வைத்தான்.  “அவசரப்படாதீங்க சார், வந்திருவாங்க” என்று சத்தமாக கத்தியபடி அவனைப் பார்ததான்.  சட்டென அடையாளம் உணர்ந்தான் பையன்.  “அண்ணா நீங்களா? எப்ப வந்தீங்க?” பையனின் ஆச்சரியமும் வரவேற்பு வாசகங்களும் அவனுக்குச் சங்கடத்தை உண்டாக்கின.  முன்னால் நின்று கொண்டிருந்தவர் அவன் பக்கம் திரும்பி லேசாகச் சிரிப்பதாகப் பட்டது.  ஒரு கதவு மெல்லத் திறப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன.  அதனருகே ஓடி நின்று கொண்டு “அண்ணா வாங்க அண்ணா வாங்க” என்று கத்தினான்.

யாரோ ஒருவர் “இதுக்குக்கூட ஆள் புடிச்சு வெச்சிருக்கறாங்கப்பா” என்று முனகுவது நன்றாகக் கேட்டது.  

கதவு திறந்து வெளியே வந்தவுடன் பையன் வரவேற்க நின்றான். சிறுவாளியைத் தண்ணீர்த் தொட்டியின்மேல் வைத்துவிட்டு “வாங்கண்ணா” என்று கையைப் பிடித்துக் கொண்டான்.  சுருட்டிய பேன்டை இறக்கிவிடத் தோன்றாமலும் மற்றவர்களைப் பார்க்கக் கூசியும் பையனோடு வெளியே வந்தான்.  பையன் கல்லாவில் காசு வாங்கிப் போட்டுக் கொண்டிருந்தவனிடம் “எங்கூரு அண்ணன் வந்திருக்காரு.  அவரோட போயிட்டு வந்தர்றேன்” என்று சொன்னான்.  “கூட்டம் இருக்கறப்ப எங்கடா போற?” என்ற அதட்டலை வெகு உரிமையோடு எதிர்கொண்டு “வந்தர்றண்ணா” என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு வந்தான்.

பையனோடு என்ன பேசுவது என்றே அவனுக்குத் தோன்றவில்லை.  ஊருக்குப் போகாதது, பையனுடைய அம்மாவிடம் தகவல் சொல்லாதது, வாக்குக் கொடுத்தபடி வந்து கூட்டிப் போகாதது எல்லாம் மனதில் ஒடிக்கொண்டிருக்கக் குற்ற உணர்ச்சியோடு அவன் நடந்தான்.

“இவன் பெரிய புடுங்கி.  கூட்டத்தக் கண்டுட்டான்” என்று கல்லாக்காரனைத் திட்டிக் கொண்டே வந்தான்.  பையனை ஏதோ ஒரு கடைக்குக் கூட்டிப் போனான்.  தேநீர் சொன்னான்.

“இந்தூர்ல எத்தனை நாளக்கி இருப்பீங்கண்ணா?” என்று கேட்டான் பையன்.

“இன்னக்கி மட்டுந்தாண்டா, வேலை முடிஞ்சு கௌம்பீருவன்” என்றான்.

பையன் கேட்கும் முன்பே முந்திக் கொள்ள வேண்டும் என்னும் எண்ணத்தில் தயக்கமாக “ஊருக்குப் போவ முடியலடா” என்றான்.   பையன் சிரித்துக் கொண்டே “கஷ்டந்தான்” என்று சொன்னான்.  தேநீர் குடித்து முடித்த பின் “எப்ப வந்தாலும் வாங்கண்ணா, நா இங்கதான் இருப்பன்” என்றான் பையன்.  திடீரென நினைவு வந்தவனாய் லுங்கியைத் தூக்கி உள்ளிருந்த டிராயருக்குள் எங்கோ கைவிட்டுக் கொஞ்சம் கடும் முயற்சி செய்து உருவினான். 

“ஐநூறு ரூவா இருக்குது.  சம்பளமில்லாம நானா சேத்தது.  நீங்க போவீங்களோ அனுப்புவீங்களோ தெரியாது.  எங்கம்மாகிடப்ப போயரோனும்”.

அந்தப் பணத்தை மிகுந்த மரியாதையோடு பெற்றுக் கொண்டான் அவன்.

“ஊருக்கு வர இன்னம் ரண்டு மூனு மாசமாவும்.  அப்பச் சம்பளப் பணத்த வாங்கியாரன்னு சொல்லுங்க”.   அவன் தலையாட்டினான்.

“எங்கம்மாகிட்ட நா கக்கூஸ்லே வேல செய்றன்னு மட்டும் சொல்லீராதண்ணா” அதைச் சொல்லும்போது மட்டும் பையன் குரல் உள்ளொடுங்கி  முகம் வாடியதுபோலிருந்தது.  

“சரீண்ணா நேரமாச்சு போவோனும்,  இங்க வரும்போது கண்டிப்பா என்னயப் பாக்காம போயரக்கூடாது” என்று சொல்லிக் கொண்டே விளக்கு ஒளியில் நடந்தான்.

சற்று தூரம் போய் கொஞ்சம் சத்தமாக “நீங்க வாங்கிக் குடுத்தீங்களே அதே சந்தனச் சோப்பத்தான் போடறேன்.  நல்ல மணமா இருக்குது” என்றான்.  அப்போது பையன் லேசாகச் சிரித்தது போலிருந்தது.

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.

Vandharai Short Story by A. Kareem Synopsis 90 Written by Ramachandra Vaidyanath. சிறுகதைச் சுருக்கம் 90: அ.கரீமின் வந்தாரை சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

சிறுகதைச் சுருக்கம் 90: அ. கரீமின் வந்தாரை சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

மக்கள் கையறு நிலையில் அழுது நின்ற அந்தக் கணத்தில் உடன் நின்று தேறுதல் செய்யாமல் ஊர்களில், கவலைகளில், வாழ்க்கைக் கூடுகளில் எப்பவும்போல உழன்று கொண்டிருந்தோமோ என்ற குற்ற உணர்வில் மனம் துடிக்கச் செய்கிறது

வந்தாரை
 -அ.கரீம்

பேயடித்தமுகம் போல் ரத்தினபுரி வீதிகள் முகம் தொங்கிப் போய் வெறிச்சோடிக் கிடந்தன.  நடமாடும் ஒன்றிரண்டு பேரும் எதிரெதிரே வந்தாலும், நின்று பேசாமல் கடந்து போயினர்.  சலீம் கடையின் முன்பு பொருட்கள் சிதறிக் கிடந்தன.  கடைக்குள் வைத்து யாரோ சமையல் செய்ததுபோல் புகை படர்ந்து கருப்பப்பி இருந்தது.  சலீம் எங்கு ஓடிப்போனான் என்று யாருக்கும் தெரியவில்லை.  அநேகமாய் அவன் சொந்த ஊருக்கே “போய்க்கோலினடா மயிரு நீங்களும் நிங்களுட நாடும்” என்று அவன் மொழியில் சபித்தபடியே கேரளம் போயிருப்பான்.  இனிமேல் இடியே விழுந்தாலும் இந்தப்பக்கம் தலை வைத்துப் படுக்க மாட்டான்.

தினமும் சலீம் கடைவாசலைக் கூட்டிப் பெருக்கும் சொர்ணம்மாள் சலீம் வந்துவிட்டானா என்று எட்டிப்பார்க்க வந்தாள்.  கடையின் முன்பு அவன் தினமும் போடும் நொறுக்கித் தீனியைத் தின்று பழகிய தெருநாய் மட்டும் படுத்திருந்தது.

அவன் வரவில்லை என்பதற்கு அடையாளமாய்ச் சிதறிய பொருட்கள் ஐந்தாம் நாளும் அப்படியே கிடந்தன.  மனசு தாங்காமல் எடுத்து ஒதுங்க வைக்கலாம் என்று நேற்று எடுக்கப் போனவளை அவர்கள் வந்து ‘இது வேண்டாத வேல எடத்தக் காலி பண்ணு’ என்று மிரட்டினார்கள்.  அடி வாங்கிய பயம் இன்னும் அவளுக்கு இருந்தது.  

கலவரம் முடிந்து ஐந்து நாட்கள் ஆகியிருந்தன.  சலீம் கடை எதிரேயிருந்த சிக்கந்தர் வீட்டில் பெரிய பூட்டோடு தாழ் தொங்கியது.  துருதுருவென்று ஓடிக்கொண்டிருக்கும் அமீரின் சத்தமில்லாமல் அந்த வீடு.  சொர்ணம்மாவுக்கு என்னமோபோல் இருந்தது.

பாவமறியாத சலீமை நினைத்து நெஞ்சு மறுவியது.  ‘எப்படியாப்பட்ட புள்ள அது.  யாரோட வம்புதும்புக்கும் போகாத புள்ளைய இப்படி முக்கிட்டாங்களே, அவனுங்க புள்ளகுட்டி உருப்படுமா நாசமத்துப் போனவங்கே’ முணுமுணுத்தபடியே சலீம் கடை எதிரே இருந்த புங்கமரத்தடியில் உட்கார்ந்தாள்.

பால் பாக்கெட் போடும் முருகேஷ் அவனுக்கு வரவேண்டிய நூறு ரூபாய் கிடைக்காமல் போய்விடுமோ என்று இன்றும் வந்து எட்டிப் பார்த்தான்.  சலீம்கடைக்கு வரும் பால்பாக்கெட்டுகளைத் தினமும் காலையில் ஒவ்வொரு வீடாய்ப் போடும் முருகேசுக்குக் கமிசன் மாதிரி சலீம் மாதச் சம்பளம் கொடுப்பான்.  அப்படிச் சேர்த்து வைக்கும் பணம்தான் முருகேசுக்குப் படிப்புச் செலவு.  அரசுப்பள்ளியில் பத்தாவது படித்து வந்தான்.  மாதம் இருபது ரூபாய்  என்று கமிசன் வாங்கும் அவன் காசு வாங்கினால் செலவாகிடும் என்று கணக்கு மட்டும் வைத்துக் கொண்டுவந்தவன் ஐந்து மாதச் சம்பளம் போனதில், முகம் தொங்கிக் கடையையே சுற்றிச் சுற்றி வந்தான்.

அவ்வீதியில் இருந்த எல்லோருக்கும் ஒரு குற்றவுணர்வு இருந்தது.  நம்ம வீட்டுப் புள்ளமாறிப் பழக்கமா இருந்த புள்ளைய, அவனுங்க அடிக்கும்போது நாமே ஏன் தடுக்கலே?  தடுக்காமப் போனதற்கு என்ன காரணம்?  அவனா குண்டு வைச்சான்?  எவனோ வச்சதுக்கு இவன அடிச்சபோது ஏன் தடுக்க முடியல என்ற குற்றவுணர்வு அவர்களை வாட்டியது.  காலை கடை திறக்கும்முன்பே கடைவாசல் கூட்டித் தண்ணீர் தெளித்துப் பளிச்சென்று வைத்துவிடுவாள் சொர்ணம்மாள்.  எந்தக் கவலையும் இல்லாமல் காலத்தை ஓட்டிவிடலாம் என்று இருந்தவளுக்கு சலீமின் ஓட்டம் பெரும் இடியாய் இருந்தது. 

ஆஸ்பத்திரி முன்பு புது ஹோட்டல் வந்ததால் போலீஸ் இட்லிக்கடை வைக்கத் தொடர்ந்து தொல்லை செய்ததாலும், முன்பைப்போல் எல்லாவற்றையும் சுமந்து கொண்டு கடைவைக்கத் தெம்பு இல்லாததாலும், அடுத்து வாழ்க்கை ஓட்ட என்ன செய்யலாம் என இருந்தபோதுதான் சலீம் இரத்தினபுரியில் கடை வைத்தான்.  ‘தம்பி தினமும் வாசல் எல்லாம் கூட்டிப் பெருக்குகிறேன் ஏதாவது மாசமான கொடு சாமி’ என்று வம்படிக்குப் போய் வேலை வாங்கினாள்.  அவன் தலையாட்டினான்.   பழைய நினைவு அவளை வாட்டியது.

பத்து வருடத்திற்கு முன்பு கேரளாவிலிருந்து கோயமுத்தூர் போனால் கடைவைத்துப் பிழைக்கலாம் என்று டவுனுக்குள் மளிகைக்கடை வைத்திருந்த அவன் மாமா சொல்லி இங்கு வந்தவன், இந்தப் பத்து வருட வாழ்வில் ஒரு முறைகூட யாரிடமும் முகத்தைக் காட்டியதில்லை. ‘அங்க எங்கூட வந்து கொஞ்சநாள் கடையப் பாத்துக்கோ, வியாபாரம் பழகி அங்கேயே நல்ல இடமாப் பாத்து கடய வையி’ என்று சொல்லி அவன் மாமா அழைத்து வந்தார். 

சலீம் ஓடிப்போனதில் கடன் சொல்லி வாங்கிக் குவித்த மளிகைக்கு இனிப் பணம் கொடுக்க வேண்டியது இல்லை என்ற மகிழ்ச்சியும், அவசரத்துக்கு காசுஇல்லாட்டியும் கடன் கொடுக்கிற சேட்டன் இல்லையே என்ற வருத்தமும் ஒருசேரத் தெருவில் இருந்தது.  சலீம் ஒரு முஸ்லீம் என்ற அந்தத் தெருவாசிகள் எப்போதும் நினைத்தது கிடையாது.  அப்படியான எந்தச் சிந்தனையும் இல்லாத தெருவில் புதிய சிந்தனைக்கு விதையாய் சலீம்கடை எரிக்கப்பட்டது.

கலவரத்தைப் பற்றியே கேள்விப்படாத அந்நகரத்தில் அந்த அனுபவம் எல்லோருக்கும் புரியாத புதிராகயிருந்தது,  கொஞ்ச மாதங்களுக்கு முன்னதாகவே முக்கோண வடிவிலிருந்த கொடிகள் ரத்தினபுரி வீதிகளில் அடிக்கடி கண்ணில் பட்டன.  சில இளவட்டங்கள் நெற்றியில் இழுக்கப்பட்ட பொட்டுகளோடு, பால் மாரியம்மன் கோயில் மைதானத்தில் மாலைநேரத்தில் கூடி இரவுவரை வட்டமாய் உட்கார்ந்து பேசிக் கலைவதும், இடையிடையே உடற்பயிற்சி செய்வது ஆ ஊ என்று கத்திக்கொண்டு கராத்தே பயிற்சி செய்வதும் புதியதாக அவ்வீதியில் முளைத்திருந்தது.  இதற்காகவே மாஸ்டர் ஒருவர் வந்திருந்தார்.  தெருவில் இருந்த பள்ளிக்கூடப் பொடுசுகள் ப்ரீ கராத்தே கிளாஸ் என்று அதுகளும் ஆ ஊ என்று அந்த மைதானத்தில் கத்திக் கொண்டிருந்தனர்.

சலீம் கடைக்கு எதிரேயிருந்த சிக்கந்தர் பையன் அமீரும் கராத்தே கிளாஸ் போனான்,  ஐந்தாம் வருப்புப் படிக்கும் அமீர் உற்சாகமாய் போய்க் கொண்டிருந்த கொஞ்சநாளில் எந்தக் காரணமும் இல்லாமல் மாஸ்டர் வர வேண்டாம் என்று கூறி விட்டார்.   எப்படியும் மாஸ்டர் கூப்பிடுவார் என்று எதிர்பார்த்து ஏங்கிப் போனான்.  அமீரை அவன் அம்மா அந்தப் பக்கமே போகதேன்னு கண்டிப்பாகச் சொல்லிவிட்ட பின்புதான், அங்கு போவதையே நிறுத்திக் கொண்டான்.  

மாலைநேரப் பயிற்சி  வகுப்பில் புதிய  இளவட்டங்கள் கொஞ்சம் சேர்ந்திருந்தார்கள்.  சில இளவட்டங்களை மட்டும் தேர்வு செய்து எங்கோ அரசியல் பயிற்சி வகுப்பு நடக்கிறது என்று அழைத்துச் சென்றார் மாஸ்டர்.  தீவிரமாய் அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

விநாயகர் விழாவிற்கு நன்கொடை கேட்டு மைதான இளவட்டங்கள் மாஸ்டர் தலைமையில் சலீம் கடைக்கு வந்தபோது, பணத்துடன் பொங்கல் வைத்தால் கொடுங்கள் என்று பையில் கொஞ்சம் வெல்ல உருண்டைகளையும் போட்டுக் கொடுத்தான்.  கடைவீதியில் உள்ள மாமா கடையில் வேலை பார்ததபோது பக்கத்திலிருந்த மாரியம்மன் கோயில் பொங்கல் சாப்பிட்டு பழகிய நாக்கு இன்னும் கோயில் பொங்கலுக்கு அலைந்தது.  

எந்த நல்லது கெட்டதிற்கும் போகாமல் கடையையே கட்டிக் கொண்டு அழுதவனுக்கு ஆய்சா நல்ல ஜோடியாக இருந்தாள்.  கூடமாட ஒத்தாசி செய்து அவளும் சேர்ந்தே உழைத்தாள்.  ஒரு முறை கடைக்குள்ளேயே மயக்கமானவளைச் சொர்ணம்மாதான் தாங்கிப் பிடித்துக் கண்ணையும் நாடியையும் பார்த்துப் ‘புள்ளத்தாச்சியா இருக்கேன்’னு வாயில் சர்க்கரை போட்டாள்.  அப்போதிலிருந்து ஆய்சாவை எந்த வேலையும் செய்ய விடாமல் அனைத்தையும் அவனே செய்தான்.  கூட்டிப் பெருக்குற வேலையையும் தாண்டிக் கடையில் சின்னச் சின்ன வேலையைத்தானே சொர்ணம்மாள் எடுத்துக் கொண்டாள்.  

வயிறு பெருத்த ஆய்சா பொறுமையாகப் பிரசவம் பார்க்க ஊருக்குப் போகிறேன் என்றாள்.  ‘இது விளையாட்டுக் காரியமில்ல ரெண்டு உசுரு’ என்று சொர்ணம்மா திட்டி சலீமிடம் சொல்லிப் போனமாதம்தான் தன் மனைவியைப் பேத்துக்காக ஊரில் விட்டு வந்திருந்தான், 

கடையும் வீடும் ஒன்றாக இருந்ததால் அவன் எங்கும் போகவேண்டியது இல்லை.  ஆய்சா இல்லாததால் வாய்க்கு ருசியாக ஏதாவது செய்யும்போது சொர்ணம்மாள் மறக்காமல் சலீமுக்கும் கொண்டு வருவாள்.

முந்தைய கலவரத்தின் போது பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்ட போதும் சலீம்கடை தப்பிக்க காரணம் யாரிடமும் முகம் காட்டாத அவன் குணம்.   இம்முறை திட்டமிட்டுத் தாக்கப்பட்டது.  எவனோ நகரத்தில் குண்டு வைத்ததாகச் சொல்லி இவன் கடை சின்னாபின்னமானது.

அன்று மதியம்.  கடையில் சொர்ணம்மாவை உட்கார வைத்துவிட்டு உள்ளறையில் இரண்டு வாய் எடுத்துச் சாப்பிட்ட நேரம் பிஸ்கெட் அடுக்கி வைத்திருக்கும் பெரிய பாட்டில் படீர் என்று உடைந்து சிதறிய சத்தம் கேட்டு எச்சில் கையோடு ஓடி வந்தான்.  மைதானத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்த பக்கத்துத் தெரு இளவட்டங்கள் சலீம் கடையை நொறுக்கிக் கொண்டிருந்தனர்.  கடையை எதற்காக அடிக்கிறார்கள் என்று புரியாமல் சலீம் தடுத்தான்.  பத்தாண்டு உழைப்பை நொறுக்கித் தள்ளுவதை அவனால் தாங்கமுடியவில்லை.

ஒருவன் பெட்ரோலால் நிரப்பப்பட்ட பாட்டிலை திரி கிள்ளிப் பற்றவைத்துக் கடைக்குள் தூக்கி அடித்தான்.  அது நெருப்புமிழ்ந்து கடையைக் கருக்கியது.  விநாயகர் விழாவுக்குச் சலீம் கையில் காசுவாங்கிய கராத்தே மாஸ்டரின் கைவிரல்கள் சலீம் கன்னத்தில் கோடுகளாய்ப் பதிந்தன. மாஸ்டரின் காலைப் பிடித்து கதறினான்.  அவன் நெஞ்சின் மீது ஓங்கி உதைத்தபோது நிலை குலைந்து கீழே விழுந்தான்.  இன்னொருவன் கையில் வைத்திருந்த உருட்டுக் கட்டையால் அவன் காலில் ஓங்கி அடித்தான்.

‘அம்மே.. அம்மே’ வலியில் அலறினான்.  கடையைக் காப்பதா இல்லை மகனாய்ப் போன புள்ளையைக் காப்பதா என்று தெரியாமல் இங்கும் அங்கும் சொர்ணம்மாள் ஓடினாள்.  அவளையும் நெட்டித் தள்ளி ரெண்டு அடி விட்டார்கள்.  தடுமாறிக் கீழே விழுந்தாள்.

முகம் கை கால் முதுகு எனச் சகட்டு மேனிக்கு விழுந்த அடியில் நிலைகுலைந்துபோன சலீமின் சிவந்த உடலில் சிவந்த பாம்பாய் ரத்தம் ஊர்ந்தது.  பித்துப் பிடித்தவனைப் போல் அடித்து நொறுக்கப்படும் கடையைப் பார்த்துக் கொண்டேயிருந்தான்.  தினமும் காலையில்  வீசியெறியும் வருக்கியை லாகவமாய்ப் பிடித்து நொறுக்கும் தெருநாய் மட்டும் சலீமையும் கடையையும் மாறிமாறிப் பார்த்துக் குரைத்துக் கொண்டேயிருந்தது.

இவர்களைத் தடுக்க முடியாது.  உயிராவது மிஞ்சட்டும் என்று தடுமாறி எழுந்தவன் கிழிந்த சட்டையோடு கைலியைத் தூக்கிக் கட்டிப் பிச்சைக்காரனைப் போல் அடிபட்ட காலைத் தூக்கி வைக்க முடியாமல் இழுத்திழுத்து அழுது கொண்டே போனான்.

அவன் போன கோலம் இன்னம் சொர்ணம்மாவின் கண்ணில் அகலாமல் அப்படியே இருந்தது.  ஒரு வாய் நிம்மதியாக்கூடச் சாப்பிடாமல் ரத்தம் வழிந்த சோற்றின் எச்சில் கையோடு போன முகம் அவளை அழவைத்துக் கொண்டேயிருந்தது.  தலையுயர்த்திப் புகையடித்த கடையைப் பார்த்த அவளுக்கு தாங்க முடியாத மனவலி கன்னத்தில் நீர்க்கோடுகளாய் வழிந்தோடியது.

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது. 

Thiruttu Short Story by M. Rajendran Synopsis 89 Written by Ramachandra Vaidyanath. சிறுகதைச் சுருக்கம் 89: ம. ராஜேந்திரனின் திருட்டு சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

சிறுகதைச் சுருக்கம் 89: ம. ராஜேந்திரனின் திருட்டு சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

கிராமத்து நடப்புக்களை ஒரு விமர்சனத் தொனியில் நவீனமாக எழுதும் படைப்பாளி இவர்.

திருட்டு
ம. ராஜேந்திரன்

“யாரு புடிச்சிருந்தாலும் விட்ருங்க. ஆமா, நான் பொல்லாதவ.  என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.  ஆனா ஒண்ணு, எனக்குத் தெரியாமப் போயிடும்னு மட்டும் நெனக்காதீய… சொல்லிப்புட்டேன்” வீட்டு வாசலில் நின்று உச்ச குரலில் சிலம்பாயி ஊருக்கே அறைகூவல் விட்டாள்.

சிலம்பாயி இன்றைக்கு வயலிலிருந்து வர நேரமாகிவிட்டது.  விளக்கை எடுத்துக் கொண்டு மறுபடியும் தேடினாள்.  திண்ணையில் கிடந்த நெல்மூட்டைச் சந்துகளில் தாய்க் கோழி இறக்கைக்குள்ளிருந்து குஞ்சுகள் தலை காட்டின.  அந்த கருப்புப் பெட்டைக் கோழியைக் காணவில்லை.  வீட்டைச் சுற்றித் தேடினாள்.

இந்நேரம் அது வந்து அடைஞ்சிருக்கணும்.  யாரோ பிடிச்சிட்டாங்க.  இல்லேன்னா குக்குக் கொஞ்சலோடு அது நெல் மூட்டையில் ஏறிக் குதிக்கும்.  சிலம்பாயிக்குத் தாங்க முடியவில்லை.  எங்கிருந்தாவது வாசம் வருகிறதா என்று வரும் காற்றில் எல்லாம் தேடினாள்.  

“ஏக்கா சின்னமக்க, என் கருப்புக் கோளியைக் காணும்க்கா.”

சந்தேகப்படுவதைக் காட்டிக் கொள்ளாமல் தேடினாள்.  வீடு வீடாகச் சமையல் வாசம் பிடித்தாள்.

திருட்டுக் கோளி சமையல் நடுராத்திரியில்தான் நடக்கும், இன்னும் கோளி செத்திருக்காது. நினைத்துக் கொண்டே நடந்தவள் அடுத்த வீட்டில் நின்றாள்.

“ஏண்டி கண்ணம்மா, ஒங்கக் கோளியோட கோளியா வந்த அடைஞ்சிருக்கான்னு பாருடி!”

கண்ணம்மா வீட்டில்தான் சிலம்பாயிக்குச் சந்தேகம்.

“நீயே வந்த பாருக்கா,  அப்புறம் நான் பார்த்தாலும் ஒனக்கு நம்பிக்கை இருக்காது” சொல்லிக் கொண்டே விளக்கெடுத்து வந்து மூடிக்கிடக்கும் கோழிக்கூடைகளைத் திறந்து காட்டினாள்.

சிலம்பாயிக்குச் சந்தேகம் போகவில்லை.  ஆனாலும் காட்டிக் கொள்ளவில்லை, தனக்குத்தானே பேசிக்கொண்டு வீடு வந்தாள்.  அப்போதுதான் குருநாதன் வயலிலிருந்து வந்து  மண்வெட்டியை மாட்டுத் தொழுவத்தில் மாட்டிவிட்டு வியர்வையைத் துடைத்தவாறு வாசலில் நின்றான்.

சிலம்பாயிக்கு மெதுவாகப் பேசவராது.  சத்தத்தில் இரவு அதிர்ந்தது.

“சரி, சரி, விடு காலையில் பார்த்துக்கலாம்.”

“ஆமா நீ ஒரு மனுசன்.  ஒன்னைக் கட்டிக்கிட்டதுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்”. 

சிலம்பாயியின் ஏமாற்றம் குருநாதன் மீது வெடித்தது.  இதற்குக் குருநாதன் பேசாமல் இருக்க முடியாது.  

“ஏண்டி கோளி திருட்டு போனதுக்கும், என்னைக் கட்டிக் கிட்டதுக்கும் என்னாடி சம்பந்தம்?  சரி சரி காலையிலே பார்ப்போம் விடு.  ஊரே அசமடங்கிப் போச்சு” சொல்லிக் கொண்டே குருநாதன் குனிந்து வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தான்.

“காலையிலே என்னாத்தப் பார்ப்பே?  கோளி மசுரைக்கூட குப்பையிலே பொதச்சிடுவாளுவ.  அப்புறம் என்னாத்தப் பாக்குறது. இப்பவே எதுனாச்சும் பண்ணணும்” அவளுக்கு தொண்டை அடைத்தது.   முந்தானையால் கண்ணையும் மூக்கையும் துடைத்துக் கொண்டாள்.  முறை வைத்துக் கொண்டதுபோல் எப்போதும் குறைந்தது இரண்டு கோழிகளாவது வீட்டில் முட்டையிட்டுக் கொண்டிருக்கும்.  வீட்டுக் கைச் செலவு கவலையில்லாமல் போகும்

சிலம்பாயிக்கு அழுகை அழுகையாக வந்தது,  “பாவியளா நல்லா இருப்பியளா?   திருட்டுத்தமாகக் கோளியைப் புடிச்சிக் களுத்தைத் திருகுன ஒங்களுக்குப் புள்ளைக்குட்டி ஒட்டுமா?  கோளி புடிச்சி வச்சிருந்தா உட்ருங்க.  அப்புறம் சாமிக்கொறை சும்மா வுடாது.  நான் பட்டாணியன் கோயிலுக்குப் போயி சூடனைக் கொளுத்தி மண்ணை வாரி எறைக்கப் போறேன் சொல்லிட்டேன்”.

வானத்தில் நிலா எட்டிப் பார்த்தது.  தூரத்தில் ஆந்தை திக்கியது.  சிலம்பாயி முடிவுக்கு வந்தாள்.  “ஒன்னைத்தான் தூங்கிட்டியா?”

குருநாதன் எழுந்து  வேட்டியை உதறிக் கட்டிக் கொண்டு சிலம்பாயி பின்னே நடந்தான்.  சிலம்பாயி பேசிக் கொண்டே நடந்தாள்.  சின்னமக்கா வீடு வந்தது.  “எக்கா சின்னமக்கா, எங்கே போச்சின்னே தெரியலியே.  என்னாக்கா பண்ணலாம்.  எனக்கு ஒரு ரோசனையும் வராமப் புத்தியப் பேதலிக்க வச்சிட்டாளுவளே.”

சிலம்பாயி ஏதோ தீர்மானமாய் வந்திருந்தாள்.  அதைச் சின்னமக்கா வாயிலிலிருந்து வரவழைக்கப்  பார்க்கிறாள்.

“என்னா பண்றது சிலம்பாயி, பொளுது விடியட்டும்.  இப்போ என்னா பண்ண முடியும்?”

‘இல்லக்கா,  இப்போ விட்டுட்டா கோளியை அடிச்சிக் கொளம்பு வச்சிடுவாளுவ.  பொளுது விடிஞ்சா ஏப்பம் விட்டுடுவாளுவ.   இப்பவே எதுனாச்சும் பண்ணனுக்கா.”

“ஒம்புருசன் என்னா சொல்லுது?”

சின்னமக்கா குருநாதனைப் பார்த்துக் கேட்டாள்

“அது வீட்டு மொறத்தை எடுத்துப் பட்டாணியன் கோயில்லே போடுவோம்னு சொல்றதுக்கா நானும் சரின்னு சொல்லிட்டேன்க்கா” சிலம்பாயி சின்னமக்காவின் கருத்துக்கே விடவில்லை.

“அப்படியா?”

“ஆமாக்க,  இப்பவே மொறம் எடுத்துட்டா ஒரு  பயம்  வந்திடுமில்லே”.

சின்ன மக்கா வீட்டுக்குள் போய் முறத்தைக் கொண்டு வந்து கொடுத்தாள்.  சிலம்பாயி ஒவ்வொரு வீடாகத் தெரு முழுவதையும் எழுப்பினாள்.  சாணி மெழுகிய முறம் புது முறம் சிறியது பெரியது என்று முறங்களைச் சுமந்து கொண்டு குருநாதனும் சிலம்பாயியும் பட்டாணியன் கோயிலுக்கு நடந்தார்கள். 

“நான் இஞ்சய நிக்கறேன்.  நீ போயிப் போட்டுட்டு வா”

பட்டாணியன் காவல் தெய்வம்.  குதிரையும் யானைகளும் பொம்மைகளாய் நின்றன.  கையில் வீச்சரிவாளுடன் பார்ப்பவர்களை மிரட்டும் சாமி அது.  பெண்கள் அந்தப் பக்கம் போகமாட்டார்கள்.  குருநாதன் முறங்களைக் கொண்டுபோய்க் கோயிலுக்கு முன்னே போட்டான்.  பனை மட்டைகள் சலசலத்தன.  குருநாதனுக்கு பயம் வந்தது.  வேகமாக திரும்பி நடந்தான்.

“நாளைக்குத் தெரிஞ்சிடும்” பேசிக்கொண்டே சிலம்பாயி நடந்தாள்.

அந்த ஊரில் இப்படி ஒரு கட்டுப்பாடு.  காலம் காலமாய் சின்னத் திருட்டு என்றால் தெரிவிலுள்ள விட்டின் முறங்களை எடுப்பார்கள்.  பெரிய திருட்டு என்றால் ஊர் முறங்களே பட்டாணியன் கோயிலுக்கு வரும்.  முறத்தை எடுத்துப் போய்க் கோயிலில் போட்டுவிட்டால்  வீட்டிற்கு ஒருவர் போய்க் குளத்தில் குளித்துவிட்டு கோயில் முன் நின்று நாங்க திருடலை என்று சொல்லிவிட்டுத தன் வீட்டு முறத்தை எடுத்துக் கொண்டு வருவார்கள்.  பட்டாணியன் கோயில் முன் பொய் சொல்லும் துணிச்சல் யாருக்கும் கிடையாது.  ஆனாலும் இதுவரை யாரும் கோழித் திருட்டுக்கு முறம் எடுத்ததில்லை,  

நாளைக்குத் தெரிஞ்சிடும் சிலம்பாயிக்குத் தூக்கம் வரவேயிலை.  நேரம் நள்ளிரவை நெருங்கியது.   நிலா வெளிச்சத்தில் ஊரே தூங்கியது.  வாசலில் வந்து உட்கார்ந்தாள்.  சிறிது நேரத்தில்  கருமேகம் சூழ்ந்தது.  அரிக்கேன் விளக்கை எடுத்துக் கொண்டு மாடுகளைத் தொழுவத்தில் கட்ட குருநாதனை எழுப்பினாள்.  குருநாதனுக்கு அசதியாக இருந்தது.  எழுந்துபோய் மாடுகளை கட்டிவிட்டு வந்தான்,

மொறமெல்லாம் நனையப் போவுது குருநாதன் தனக்குத்தானே பேசிக் கொண்டான்.   சிலம்பாயிக்கு மனசு கஷ்டமாகியது.

ஒரு கோளிதானே போவுதுன்னு உட்ருக்கலாம்.  எல்லார் வீட்டு மொறமும் நனைஞ்சு போச்சுன்னா என்ன பண்ணுவாங்க? காளி மாரியாத்தா மளை பெய்யப்புடாது இந்த ஒரு தபா எனக்கு மாப்பு குடு தாயே!

சிலம்பாயியின் வேண்டுதல்களை எல்லாம் மீறி மழை தூறத் தொடங்கியது.  இப்போது முறங்களைப் பற்றி கவலை கொண்டாள்.  குருநாதன் வேட்டியைப் போத்திக் கொண்டு சிலம்பாயி பக்கத்தில் உட்கார்ந்தான்.  காற்றடித்தது.  கூடவே சடபட சத்தம்.  சிலம்பாயி மடியில் தொப்பென்று விழுந்தது.   பயந்து குதித்துப் புடவையை உதறினாள்.  அதற்கு முன்பே அது கீழே விழுந்திருந்தது.  காணாமல் போன கருப்புக் கோழி.  வீட்டு முன் நின்ற வேப்பமரத்திலிருந்து கோழி மழைத் தூறல் பட்டுக் கீழிறங்கியிருக்கிறது.

நாளைக்கு ஊருக்கே தெரிஞ்சிடும்.  முறம் எடுத்த வீட்டுக்கு எல்லாம் பதில் என்ன சொல்றது குருநாதன் குழம்பிக் கிடந்தான்.

சிலம்பாயி அவசரம் அவசரமாக அடுப்பை மூட்டி வெந்நீர் சுடவைத்து கருப்புக் கோழியைத் தலையழுத்தினாள்.  பிடுங்கிய இறக்கையை நாய் தோண்டிக் காட்டிக் கொடுத்துவிடாதபடி ஆழமாய்க் குழிவெட்டி குருநாதன் புதைத்தான்.  உரித்த கோழியில் மஞ்சள் தடவி மசாலா அரைத்து அவசரம் அவசரமாகக் குழம்பு கொதித்தது.  குருநாதனுக்குத் தூக்கம் வரவில்லை.  மழைத் தூறல் வலுக்கவும் இல்லை நிற்கவும் இல்லை.

திண்ணையில் கிடந்த கோணியை எடுத்துத் தலையில் கொங்காணி போட்டுக் கொண்டு பட்டாணியன் கோயில் நோக்கி விரைந்தான்.  பொழுது விடிந்து கொண்டிருந்தது.  தூறல் நிற்கவில்லை.

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.