நூல் அறிமுகம்: த.வி.வெங்கடேஸ்வரனின் கணித மேதை ராமானுஜன் – மோசஸ் பிரபு

நூல் அறிமுகம்: த.வி.வெங்கடேஸ்வரனின் கணித மேதை ராமானுஜன் – மோசஸ் பிரபு




எழுத்தாளர் ரகமி தினமணியில் எழுதிய தொடர் கட்டுரையை தொகுத்து தான்  கணித மேதை ராமானுஜன்  புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. இதில் உள்ள சில பிழைகளை அறிவியல் இயக்க முன்னோடி T.V. Venkateswaran அவர்கள் திருத்தியிருக்கிறார். ராமானுஜத்தை ஏதோ அதி அற்புதமான மனிதர் என்று கூறும் சில பில்டப் செய்திகளை மறுத்து ராமானுஜத்தின் பிழைகளையும் குறிப்பிட்டு அவரின் அபார கணித திறமையையும் உழைப்பையும் அங்கீகரித்து தொகுக்ககப்பட்டுள்ளது இப்புத்தகம்.

ராமானுஜத்தின் பிறந்தநாளில் அவரின் பெருமையை பேசும் நாம் இன்றும் நமது சமூகத்தில் ஏழைகளுக்கு ஒரு கல்வி பணம் படைத்தவருக்கு ஒரு கல்வி என கல்வி நிலையிலேயே வித்தியாசம் காட்டும் அவலத்தை நாம் நினைவு கூறுவோமா..? ராமானுஜம் போலவே கணித திறமை புதைந்து ஆனால் சமூக முதல் (Social Capital) இன்றி பிறந்த எவ்வளவு ராமானுசன்கள் வெளிவராமல் சேற்றிலே புதைந்து விட்டனர் என வருந்துவோமா..?

வறுமையில் இருந்து வளமை என்ற கதை கூறும் போது இது குறித்து சற்றே சிந்திப்போமா அனைவருக்கும் சமமான கல்வி இலவச கல்வி அனைவருக்கும் பொதுக் கல்வி என்பது அல்லவா ராமானுஜம் வாழ்வில் நாம் இன்று கற்க வேண்டிய பாடம் என்று த.வி. வெங்கடேஷ்வரன் குறிப்பிடுகிறார்.

ராமானுஜத்தின் கணிதக் கல்வி எதுவும் கோவில் அல்லது வேதத்திலிருந்து பெறப்படவில்லை நவீன கணிதத்தின் அறிமுகம் தான் அவரது கணித சிறப்பு

ராமானுசம் கடல் கடந்து போனால் தீட்டாகிவிடும் என தடுத்து நிறுத்த முயன்ற பிராமண பழமைவாதிகளின் தடையை வேறு வழியில்லாமல் மீறியதால் தான் ராமானுஜன் கணித மேதையாக மதிக்க காரணமானது.

மேற்கூறிய எழுத்துகள் வார்த்தைகள் அனைத்தும் இப்புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது தான்.

இது தவிர்த்து ராமானுஜன் கவனம் செலுத்திய பகுதி என பேராசிரியர் சிவராமன் அவர்கள் குறிப்பிட்டதை பட்டியலிடுகிறேன்

1) எலிமெண்டரி மேத்தமேடிக்ஸ் 2)Number Therory

3)Infinite Series

4)Asymptotic Expansion & approximation

5) continued fraction

6)Q- Series

7)Theta Functions Modular Equations and

8)Elliptic Functions to alternative bases 9) Class invariants.

10)Integrals

11)Hyper Geometric functions

நூல் : கணித மேதை ராமானுஜன்
ஆசிரியர் : த.வி.வெங்கடேஸ்வரன்
விலை : ரூ.₹ 180/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

நன்றி:
மோசஸ் பிரபு
முகநூல் பதிவிலிருந்து

புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்  கலைஞர்கள் சங்கமும் நானும்… – இயக்குநர் ஞான ராஜசேகரன்

புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் நானும்… – இயக்குநர் ஞான ராஜசேகரன்




நான் வேறொரு துறையிலிருந்து சினிமா துறைக்கு வந்தேன் என்பது எல்லோருக்கும் தெரியும். 1995 இல் ‘மோகமுள்’ திரைப்படத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்தபோது தமிழ்சினிமாவில் இருந்த பிரபுத்துவமும், புதிய முயற்சிகளை நிந்திக்கின்ற விதமும் மிகுந்த ஏமாற்றங்களையே எனக்குத் தந்தன.

அப்போதுதான் தமுஎகச என்கிற அமைப்புடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. சேலம் அருகில் தனம் என்கிற தலித் சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதியை அடிப்படையாக வைத்து நான் உருவாக்கிய ‘ ஒரு கண் ஒரு பார்வை’ என்கிற குறும்படத்தை தமுஎகச தன் தோள்களில் எடுத்துச்சென்று தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் நடந்த தமுஎகச விழாக்கள் அனைத்திலும் திரையிட்டு பிரபலப்படுத்தினார்கள். வர்த்தக ரீதியில் வெற்றிபெற்ற ஒரு திரைப்படத்தின் அந்தஸ்தை எனது குறும்படத்துக்கு தமுஎகச இயக்கம் பெற்றுத்தந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. அப்போதுதான் இளைஞர்கள் மிகுந்த தமுஎகச இயக்கத்தின் சக்தியை நான் புரிந்து கொண்டேன்.

அடுத்து நான் உருவாக்கிய திரைப்படங்களில் தமுஎகச உறுப்பினர்களை தவறாமல் நான் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தேன். ‘முகம்’, ‘பாரதி’ படங்களில் சென்னை, பாண்டிச்சேரி, திருநெல்வேலி முதலான இடங்களில் படப்பிடிப்புகள் நடந்த போது அங்கே உள்ள தமுஎகச கிளை உறுப்பினர்கள் பெருமளவில் பங்கெடுத்தார்கள்.

‘பாரதி’ திரைப்படம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்றாலும் சில பிற்போக்காளர்கள் எதிர் பிரச்சாரம் செய்ய முயன்றார்கள். அதை முதலிலேயே யூகித்து திரு சிகரம் ச.செந்தில்நாதன், திரு இரா.தெ. முத்து, திரு. அ.குமரேசன் ஆகியோர் தமுஎகச சார்பாக திருவல்லிக்கேணி பாரதி நினைவு இல்லத்தில் எதிர் பிரச்சாரத்தை முறியடிக்கும் விதத்தில் ‘பாரதி’ படத்திற்கு மிகப்பெரிய பாராட்டு விழா நடத்தியதை நான் என்றைக்குமே மறக்கமுடியாது. அதைப்போலவே திருப்பூர், ஈரோடு, பாண்டிச்சேரி, திருநெல்வேலி முதலான நகரங்களிலும் ‘பாரதி’ படத்தை மக்களிடம் தமுஎகச எடுத்துச்சென்றது. கோவை நகரில் அமரர் அய்யாசாமி அவர்கள் முன்னெடுத்து நடத்திய ‘பாரதி’ படத்துக்கான ஆதரவு இயக்கத்துக்கு தமுஎகச தோள்கொடுத்து உதவியது. கே.ஜி தியேட்டரில் பாரதி அரங்கு நிறைந்த காட்சிகளாக நூறு நாட்கள் ஓடியது.

தமிழ்சினிமாவில் நான் எப்படிப்பட்ட படங்களை எடுக்கவேண்டும் என்று தீர்மானிக்க தமுஎகச போன்ற இயக்கங்கள் எனக்கு மிகவும் ஆதாரமாக இருந்தன என்றே சொல்ல வேண்டும். ‘பெரியார்’ ‘ராமானுஜன்’ முதலான தமிழ்நாட்டின் மிக முக்கிய ஆளுமைகளை திரையில் கொண்டுவர நான் முடிவெடுத்ததன் பின்னணி அதுதான். பெண்ணியச் சிந்தனைகளை உளவியல் பார்வையோடு எழுதிய
ஆர். சூடாமணியின் ஐந்து கதைகளை அடிப்படையாக வைத்து நான் உருவாக்கிய “ஐந்து உணர்வுகள்” திரைப்படத்துக்கு திரு ஆதவன் தீட்சண்யா, திரு இரா.தெ.முத்து மற்றும் தமிழகம் முழுவதுமான தமுஎகச தோழர்கள் நல்கிய அன்பும் ஆதரவும் மறக்க இயலாதது.

சுமார் 25 வருடங்களாக தமுஎகச இயக்கத்தையும் அதன் செயல்பாடுகளையும் நன்றாக அறிந்தவன் என்கிற முறையில் அந்த இயக்கத்தைப் பற்றி சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள நான் ஆசைப்படுகிறேன்.

1. தமுஎகச இயக்கம் நல்ல முற்போக்கான சமூகச் சிந்தனையுடைய இளைஞர்களை ஈர்க்கும் ஒரு அமைப்பாக இருந்து வருகிறது என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை.

2. இலக்கியம், சினிமா, நடிப்பு, இசை முதலான பல்துறைகளில் திறமையுள்ளவர்களும் ஆர்வமுள்ளவர்களும் அதில் அதிகம் நிறைந்திருக்கிறார்கள் என்பதையும் யாரும் மறுக்க முடியாது.

3. தமுஎகச வில் இருந்தவர்களில் பலர் இன்று ஆளுமைகளாக திகழ்கிறார்கள் என்பதும் ஒரு உண்மை. பாரதி கிருஷ்ணகுமார், திண்டுக்கல் லியோனி போன்றவர்கள் தமுஎகசவினால் அடையாளம் காணப்பட்டவர்கள் என்பது மட்டுமல்லாமல் அவர்களுக்கு நல்ல Patronage தந்து தமுஎகச அவர்களை வளர்த்திருக்கிறது என்று நிச்சயமாக கூற முடியும். மேலும் எண்ணிறந்த இளைஞர்களை organisational skill உள்ளவர்களாக தமுஎகச வளர்த்திருக்கிறது என்பதும் உண்மை.

4. ஆனால் தமுஎகச போன்ற துடிப்புள்ள கலை இலக்கிய ஈடுபாடு மிகுந்த இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு இயக்கம், இன்னும் பல சாதனைகளை செய்திருக்கலாம் என்றே நான் கருதுகிறேன். கலை இலக்கியம் முதலான துறைகளில் ஆர்வம் உள்ளவர்களை வைத்து கலை இரவுகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதோடு நின்றுவிடாமல் அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளித்து அவர்களின் திறமைகளை செப்பனிட்டு தமுஎகசவின் BRAND AMBASSADORS களாக பலரை உருவாக்கி இருக்கலாம். கேரளாவில் இது போன்று பல இயக்கங்கள் ஆச்சரியப்படத்தக்க சாதனைகளைச் செய்திருக்கின்றன.

தமுஎகச பட்டறையிலிருந்து தரமான -ஆற்றல் மிக்க- கவிஞர்கள், எழுத்தாளர்கள், திரைக்கதையாளர்கள், இயக்குநர்கள் நடிகர்,நடிகையர் நாட்டுப்புறக் கலைஞர்கள்….இப்படி எல்லாத் துறைகளிலும் உன்னத ஆளுமைகள் உருவாகியிருக்கலாம்.

எனக்கு இத்தகைய ஆதங்கம் இருப்பதற்குக் காரணம், தமுஎகசவுக்கு எல்லா தகுதிகளும் இருப்பதால்தான். திறமையுள்ள இளைஞர்கள் தமுஎகசவை நோக்கி வருகிறார்கள். அவர்களின் ஆர்வத்தை மட்டும் பயன்படுத்திக் கொள்வதோடு நின்றுவிடாமல் தீவிரமான பயிற்சி வகுப்புகள், திறன் மேம்பாட்டு திட்டங்கள் ( Skill Development Programmes) முதலானவைகளை தமுஎகச நடத்தி அவர்களுக்குள் இருக்கும் திறமையை மென்மேலும் வளர்த்து அவர்களை ஆளுமைகளாக ஆக்கினால் வறட்சி மிகுந்த தமிழின் இலக்கியம், சினிமா மற்றும் பிற கலைத்துறைகளில் மிகப்பெரிய புரட்சியை தமுஎகச என்கிற இயக்கம் நடத்திக்காட்ட முடியும். இதுவே என் நம்பிக்கையும், வேண்டுகோளும்.

இயக்குநர் ஞான ராஜசேகரன்

Ramanujam Iyengar Short Story by Dr K Balasubramaniyan டாக்டர் பாலசுப்ரமணியனின் ராமானுஜம் ஐயங்கார் சிறுகதை

ராமானுஜம் ஐயங்கார் சிறுகதை – மரு. உடலியங்கியல் பாலா



“சித்திரம் மளிகைக்கடை” என்றால், 1970களில், மேல சித்திரை வீதியில், கனப்ரஸித்தம். நான்கு தலைமுறையாக அந்த கடை இயங்கி வருவதால் அனைவர்க்கும் பழக்கமான கடை. அதுமட்டுமன்றி அங்கு துடைப்பம் முதல் எலிபாஷாணம் வரை அனைத்தும் கிடைக்கும். இல்லாத பொருளே கிடையாது என்றால் பார்த்துக்கோங்களேன் !!

ராமானுஜம் ஐயங்கார்தான் தற்போதைய ஆல் இன் ஆல் நிர்வாகி. தங்கமான மனிதர், ஒரு வெளியூர்காரன் ‘கம்பி ஆணி’ வேண்டும் என்று கேட்டதால், பஜார் வரைக்கும் ஆள் அனுப்பி, வாங்கி கொடுத்து அனுப்பியவர்.!பரோபகாரி! அனைவரிடமும் அன்புடன் பேசி பழகுபவர். மணமாகி 25ஆண்டுகளாகியும் குழந்தைப்பேறு இல்லாதது ஒன்றுதான், அவருக்கு பெரிய வருத்தம்!

அவர் கடையில் பொட்டலம் கட்டும், எடுபிடி பையன்(18 வயசு வாலிபன்) “திரு.அண்டா” அவர்கள் தான் நம் கதாநாயகன். கருப்பா, பல்லெடுப்பா, ஒல்லியா, உயரமா நாகேஷ் கணக்கில் இருப்பான் என்று வைத்து கொள்ளுங்களேன்!! வெள்ளந்தியான பையன், கல்லாவில் இலட்சம் இருந்தாலும் தொடமாட்டான். கடும் உழைப்பாளி. என்ன, கொஞ்சம் மந்த புத்தி கொண்ட மண்டூக பேர்வழி.

நம்ம ஐயங்காருக்கு, அவன் மேல கொள்ளை பிரியம். சாப்பாட்டுக்கே வழியின்றி, காலனி வாசியான அவனை ஏழு வயது முதல் பரிதாபப்பட்டு ஏற்று கொண்ட ஐயங்கார், இன்று வரை அவனை தன் மகனைப்போல பாவித்தார். பெயருக்கேற்றார் போல் பரந்த மனம் கொண்ட ஐயங்கார், ஒரு நண்பனை போல், ஊர் விஷயமெல்லாம் அவனிடம் கேட்டுவாங்கி, ரசித்து சிரிப்பார். அவன் பெயர் என்னவென்று, இன்றுவரை யாருக்குமே தெரியாது., சிறுவயது முதலே ஓரு அண்டா நிறைய சோறு தின்பதால் “அண்டா” என்று, அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டான்.!

இரவில் கடைதான் அவன் பள்ளியறை. அய்யங்காரும், மாமியும், எவ்ளோ சொல்லியும், அவன் வீட்டில் உறங்குவதில்லை. அந்த அக்ரஹாரத்து, ஆச்சார்யர்கள் எவ்ளோ கண்டித்தும், அதை ஐயங்கார் சிறிதும் சட்டை பண்ணாமல், அலட்சியப்படுத்தி, அவனை தன் தோழனாகவே, பாசத்துடன் நடத்தினார்.

ஒருநாள் மதிய வேளையில், சற்று ஓய்வாக இருந்த நேரத்தில், ஐயங்கார் வழக்கம் போல் அவனிடம் ஊர் வம்பு பேசியபடி “அட இவனே (இப்படித்தான் செல்லமாக அண்டாவை கூப்பிடுவார்), நம்ம லட்சுமி அம்மாளோட ஒரே மகள் ஆண்டாள, நேத்துல இருந்து காணோமாமே!,… அதாண்டா சிவப்பா அழகா,, பாவாடசட்ட போட்டுண்டு, சாமான் வாங்க நம்ம கடைக்கு அடிக்கடி வந்து, உன்ன திட்டிண்டே இருப்பாளே அவதாண்டா ! பாவண்டா லஷ்மி அம்மா!,

‘புருஷன் இல்லாம, காசுப்பணமும் இல்லாம, எப்படிதான் எம்பொண்ண புக்காத்துக்கு அனுப்ப போறனோன்னு? ‘ என்கிட்டே கூட அடிக்கடி பொலம்பின்றிப்பா .!.. என்னடா நான் பாட்டுக்கு பேசிண்டே இருக்கேன் , நீ ஒரு பதிலும் சொல்ல மாட்டேங்கிறே? ” என்று அவனை பார்க்க… அவனோ எங்கோ பார்த்தபடி, “ஐயா(இப்படித்தான் அவரை, அன்பா கூப்பிடுவான்), சாப்பாட்டுக்கு நேரமாவுது இல்ல, வீட்டுக்கு கிளம்புங்க, அம்மா தேடுவாங்க உங்கள.. “என கூற, “ஆமாண்டா, நாழியானது தெரியாம நான் பாட்டுண்டு பேசின்றிக்கேன்!.. சரி சரி நான் போய் சாப்டுட்டு வந்துர்ரேன். அப்புறம் நீ போய் சாப்டு” என்றபடி வீட்டுக்கு கிளம்பினார்..

வெகு நேரம் ஆகியும் அவன் சாப்பிட வராததால், என்ன ஆச்சோ என்ற பதட்டத்துடன், கடைக்கு வந்து பார்த்த, அய்யங்காருக்கு, தூக்கி வாரி போட்டது.
அவனை கடையில் காணாததால் கலரவரப்பட்டார். கல்லா வேறு காலியாக இருந்தது., அவருக்கு மேலும் அதிர்ச்சியூட்டியது.

அவனை தேடி கண்டு பிடிக்க , போலீசில் புகார் கொடுக்கலாமா? என யோசித்த ஐயங்கார், பிறகு அவனை போலீஸ் துன்புறுத்துவார்களோ? என பரிதாபப்பட்டு, யாரிடமும் எதுவும் சொல்லாமல் அடங்கிப்போனார்.ஆனால் அண்டாவை, தன் நண்பர்கள் மூலம் தேடிகொண்டேதான் இருந்தார். அவன் பிரிவை அவரால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. சில நாள், அவனை நினைத்து தனிமையில் அழுவார். நாட்கள் ஓடின. பாவம் ஏழை லக்ஷ்மி அம்மாள், சில பல நாட்கள் மகளை தேடி, பிறகு ஓய்ந்து போனாள் . ஐயங்காரும், அவனை தேடித்தேடி, அவன் நினைவாகவே மிகவும் வருந்தி, கொண்டிருந்தார். கடவுளிடம் “அவன் எங்கிருந்தாலும் ஷேமமா இருக்கணும்னு”தினம் தினம் பிரார்த்தனை செய்வார்!

மூன்றாண்டுகளுக்கு பிறகு,
ஒரு நாள்…..
அவருக்கு, ஒரு மணி ஆடர் வந்தது.அதனுடன் ஒரு கடிதமும் வந்தது.
அந்த கடிதத்தில் , “ஐயா! என்னை மன்னிச்சிருங்க. நான்தான் ஆண்டாளோட ஓடிட்டேன். இப்ப மெட்ராஸ்ல மளிகை கடை போட்டு வசதியா இருக்கோம். ஓரு பொன் கொழந்த பொறந்து இருக்கு. நீங்க ஒரு நட எங்கள வந்து பார்த்து ஆசிர்வாதம் செய்யணும். இத்த்துடன், நான் கொண்டு சென்ற கல்லா காசு நானூத்தி ஐம்பதை, மணிஆடர் செய்துள்ளேன். பெற்று கொண்டு, என்னை மீண்டும் மன்னிக்குமாறு கேட்டு கொள்கிறேன்!” என, ஆண்டாளை எழுத சொல்லி(அவனுக்கு படிப்பு பூஜ்ஜியம்) கடிதம் போட்டிருந்தான்.

ஐயங்கார் மனம் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தது. கடிதத்தை பற்றி யாரிடமும் மூச்சு விடாமல், அடுத்த நாளே, மனைவியிடம், வியாபாரம் விஷயமா மெட்ராஸ் போவதாக கூறி, பத்தாயிரம் ரூபாய் பணக்கட்டுடன், தன் மகன், மருமகள், பேத்தியை காண ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் புறப்பட்டார்.