காந்தித் தோட்டம் சிறுகதை – ஜனநேசன்
“ அடியே வாங்கடி இங்க , அமாவாசை நெருங்குது. அந்தப்பெரிய மனுசரை உசுரோட நேர்ல பார்த்து நாலு நல்ல வார்தைகளைக் காதில வாங்கிக்குவம் “ என்றவாறு குழுக் குழுவாய் பெண்கள் சுத்துப்பட்டிகளில் இருந்து மலையடிப்பட்டிக்கு மேற்கே இருந்த தோட்டவீட்டை நோக்கி நடந்தனர். இவர்களில் பலர் மலையடிபட்டியில் பிறந்து அயலூருகளுக்கு வாக்கப்பட்டுப் போனவர்களும், அயலூர்களில் பிறந்து மலையடிப்பட்டிக்கு வாக்கப்பட்டும் வந்தவர்கள். காந்தி ராமசாமியைப் பற்றித் தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேட்டபடி நடந்தனர்.
*****
ஐம்பது வருசத்துக்கு முந்தி , ராமசாமியின் அப்பா கிராமத்து நாட்டாமை சுப்பையாவுக்கு உடம்பு சரியில்லை. வயசு அறுபதை நெருங்குது. அறுபதாம் கண்டத்தைத் தாண்டுவது உறுதியில்லை. மூணு பொம்பளைப் பிள்ளைகளுக்குப் பிறகு தாமதமா பிறந்த ஆசைமகனுக்கு கல்யாணம் பண்ணிப் பாக்காம, பேரப்பிள்ளையைத் தூக்கிக் கொஞ்சாம, கண்ணை மூடீருவோமுன்னு பயம் வந்துருச்சு. ராமசாமி அப்பத்தான் காலேஜுல பரீச்சை எழுதி இருக்காரு. பி.ஏ பாசானதும் கவர்மன்ட் பரீச்சை எழுதி வேலைக்குப் போன பின்னதான் கல்யாணம்னு வைராக்கியத்தில் இருந்தாரு.
ஊருக்குள்ள எவ்வளவுதான் பெரிய சம்சாரியா இருந்தாலும் , ஒரு அரசாங்க அதிகாரி ஊருக்குள்ள நுழைஞ்சதும் , அவருக்கு கிடைக்கிற மரியாதையும், அவுரு பேச்சுக்கு ஊரே கட்டுப்பட்டு நிற்கிறதும் பார்த்து , தான் ஒரு அரசு அதிகாரியா வரணுங்கிற ஆசை சிறுவயசிலிருந்தே ராமசாமி மனசிலே வேர்போட்டுருச்சு.! ராமசாமி வளர வளர தானும், தாசில்தாராகவோ, கலக்டராகவோ ஆகணும்னு ஆசையும் கிளைபரப்பி வளர்ந்தது. ஊருப் பெரியவங்க ராமசாமியிடம் சமாதானம் பேசினர். கல்யாணத்துக்கு பின்னால படிச்சு பரீச்சை எழுதி வேலைக்குப் போயிக்கலாம். பொண்டாட்டி யோகத்தில கூட சர்க்காரு வேலை கிடைக்கலாமுன்னு பல உதாரணங்களைச் சொல்லினர். இப்போதைக்கு அப்பாவின் ஆயுசை நீட்டிக்கறது முக்கியமு’ன்னாங்க. அப்பாவின் உடல்நோயைவிட அறுபதுவயசு கண்டமுங்கிற மனவியாதிக்கு மருந்தாகட்டுமுனு கல்யாணத்துக்கு ராமசாமி சம்மதிச்சாரு. அந்தக் கார்த்திகை மாசமே புதன்கிழமை சாயந்திர முகூர்த்தத்தில் ராமசாமிக்கும் , பக்கத்தூரு நிலக்கிழார் மகள் வேலுமயில்க்கும் கல்யாணம். அப்பவெல்லாம் விவசாய வேலைக கெடாம ராத்திரி எட்டுமணியிலிருந்து பத்துமணிக்குள்ளோ , விடியக்காலை நாலு மணியிலிருந்து ஆறுமணிக்குள்ளோ தான் கல்யாண முகூர்த்தம் ! வீட்டு முன்னாலேயே பந்தல்போட்டு மணமேடை அமைச்சுக் கல்யாணம் ! பல கிராமங்களில் இருந்தும் விருந்தாளுக வந்திருந்தாக. ஊர் முச்சூடும் விருந்து தின்னுச்சு. மூணாம் நாளே ராமசாமியின் அப்பாவுக்கு டிபியின் தாக்கம் அதிகமாகி இருமல் வதைத்தது. கார்த்திகை மாசத்தின் மழைவாடையும், கூதக் காத்தும் ஒரு முனையிலும் , வாழணுங்கிற ஆசை மறுமுனையில் இருந்தும் உயிர்ச்சரடை உள்ளே , வெளியேன்னு இழுத்து புறாக்கள் கத்துவது போல தொண்டைக்குள் கறமுறத்தன. கார்த்திகை தீபம் கனத்த நாளு; சீக்காளி நாட்டாமை உசுருக்கு உறுதியில்லைன்னு பேச்சு பரவலா சுத்தியுள்ள கிராமங்களில் சுத்தி வந்தது. வாழ்ந்து அனுபவித்த பெரியமனுசர் சாவு, கல்யாணச் சாவுன்னு , மகன் கல்யாணத்துக்கு போட்ட பந்தலும், தோரணங்களும் பிரிக்கப்படவில்லை.
சுத்தியுள்ள கிராமங்களிலிருந்து விவசாயவேலைக ஓய்ஞ்ச நேரங்களில் சனங்க சாதி பேதமில்லாம கூட்டங் கூட்டமா நலம் விசாரிக்க வந்தார்கள். வீட்டு வெளி முற்றத்தில் வடக்கு பார்த்து நூல்கட்டிலில் கிடத்தியிருந்த நாட்டாமையைப் பார்த்து அவரது அருமை பெருமைகளைப் பேசினர். சனங்க பேச்சைக் கேட்கக் கேட்க வாழுமாசையில் அந்திம ஜொலிப்பு கூடியது. ஆனால், அறுபது வயசுன்னு காலக்கெடு திணிக்கப்பட்ட உயிர்க்கடிகாரத் துடிப்பு குறைந்து கொண்டே இருந்தது. பார்க்க வந்தவர்களுக்கு குடிக்க சுக்குமல்லிக் காப்பி தீரத் தீரக் கொதித்துக் கொண்டிருந்தது. . மெல்லுவதற்கு இதமான ஜெயமங்கலம் வெத்திலையும், தேனி தெக்கம்பாக்கும் வாசல் திண்ணையில் ஒரு தட்டில் குறையக் குறைய அடுக்கி வைத்தார்கள். நாட்டாமையின் பெருமையை மகன் எப்படி காப்பாத்தப் போறானோன்னு வெற்றிலையோடு மென்றுகொண்டே ஊர் திரும்பினர்.
அன்று இரவு வீட்டுக்குள் அறையில் தனித்திருந்த புதுமணத் தம்பதிக்குள் சிக்கல் கனன்றது. கார்த்திகை மாசக் குளிருக்கு ராமசாமி கதகதப்பு தேடினான். அவளுக்கும் ஆசைதான். .” பெரியவருக்கு எந்த நிமிசம் உயிர்த்தீ அணையுமோன்னு பதைபதைப்பில் ஊரும் உறவும் வாசலில் உறங்காம கிடக்க, நாம மட்டும் புனையலில் கிடப்பது சரியில்லை “ என்றாள்.
“ இது நமக்கும் மட்டுமா ? இதே சூழ்நிலையில் காந்தியின் அப்பா மரணப்படுக்கையில் கிடந்தப்ப, காந்தி தன் பொண்டாட்டியோடு சுகம் அனுபவிச்சுக்கிட்டு இருந்தாராம். இதை அவரே எழுதியிருக்கிறார். “ என்று அவளை இழுத்து அணைத்தான்.
“நானும் படிச்சிருக்கேன் ; அவரு அந்த சூழ்நிலையில் அவ்வளவு சுயநலத்தோடு நடந்துகிட்டதுக்கு வருத்தம் தெரிவிச்சுதான் எழுதியிருக்கிறார் “ என்று எழுந்தவளை மீண்டும் இழுத்தணைத்து , “ அப்போ இன்னொன்னு செய்வோம் ; இப்படியே துணிமணி இல்லாம ஒருத்தரை ஒருத்தரைத் தொடாம கெடாம மனக்கட்டுபாடோட விடியிறவரைக் படுத்திருப்போம் “
“ காந்தி அறுபதுவயசில செஞ்ச சோதனையை , இந்த இருபதுவயசிலே நாம நினைக்கிறதே அவத்தம். மச்சான், நீ காந்தி கணக்கா நிசமா மனக்கட்டுப்பாடோட இருக்கனுமுன்னு நினைச்சா , இனி சாராயம் குடிக்கிறதில்லை. உன்னைச் சுத்தி இருக்கிறவங்களுக்கும் குடிக்க உதவுறதில்லைன்னு முடிவெடு ! நான் இப்ப வெளியே காத்திருக்கும் சனங்களோட போயிருக்கேன் “ என்று உடுத்தி சரி செய்துகிட்டு வெளியே இருக்கும் சொந்த பந்தங்களோடு உட்கார்ந்தாள். அங்கிருந்தவர்கள் அவளை பிரமித்து பார்த்தார்கள்.! அந்த நிமிடத்திலிருந்து அவள் அந்தக் கிராமத்துக்கு நாட்டாமைக்காரியாக வளரத் தொடங்கினாள்.
நிலவை மோக முந்தானை மூடிக்கொண்டது. தனிமையில் மோக வேக்காடு தாங்காமல் ராமசாமியும் வெளியே வந்து கனல்போட்டு குளிர் காய்ந்தவர்களோடு குந்திக்கொண்டான். இவனைப் பார்த்து நக்கலாக சிரித்தவர்கள், சோக நிலைமையை, அப்பாவின் மீது கொண்ட பிரியத்தை புரிந்து பெருமிதப் பட்டாரகள். ஆறுதலாக இருந்தது. எனினும் , உள்ளே அவள் மூட்டிய சவால் கனன்று கொண்டிருந்தது.!
தலைக்கோழி கூவ எழுந்து போனவன் நண்பர்களுக்கு வாங்கி வைத்திருந்த கேன் சாராயத்தை மந்தைக்காட்டில் குழிதோண்டி கொட்டினான் . மந்தைக் காடெங்கும் ஈரக்காற்றோடு மணந்த சாராயவாடை , ராமசாமியின் வைராக்கியத்தையும் மணக்கச் செய்தது. அப்பாவுக்குப் பின் வந்த நாட்டாமை பட்டம் காந்தியோடு சேர்ந்து ஒட்டிக் கொண்டது. அவன் காலத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்கவென்று , தனியார் கள்ளு, சாராயக்கடை திறக்க அரசு உத்தரவு போட்டபோதும், அரசே சாராயக் கடையை திறந்த போதும் மலையடிப்பட்டிக்குள் சாராய நாற்றம் ஊர்க்கட்டுபாட்டை மீறி, நுழைய முடியவில்லை. விரும்பியவர் கள் வெளியே போய்க் குடித்து வீச்சம் அடங்க ஊர் திரும்புவார்கள். வேலாம்பட்டை, வேப்பம்பட்டை உரிப்பது குறைந்தது. நரம்பு தளர்ந்தவர்களுக்கு தண்ணீர் பகையானது; மலையடிவாரத்திலிருந்து சிவக்கொழுந்து புகை உறவானது. தோப்பு துறவுகளில் புகைமூட்டத்தில் மிதந்தனர்.
அடுத்தடுத்த பஞ்சாயத்து தேர்தல்களில் , நாட்டாமை காந்திராமசாமி தலைமையிலான ஊர்நலக்குழு முன்மொழிந்தவர்களே தலைவராக, வார்டு உறுப்பினர்களாக தேர்வானார்கள். ஊர்க்காரர்களுக்கே வேலை
ஒப்பந்தம் ! அரசுத்திட்டம் முழுமையாக விரையமில்லாமல் நிறைவேற்றப்பட்டன. ஊருக்கு தெக்கே, கிழக்கே பச்சை பசேலுன்னு திரண்டு,விரிந்திருந்த வாசிமலையிலிருந்து மழைக் காலங்களில் பொங்கிவரும் காட்டாத்து வெள்ளம், விவசாயத்தை அழிக்காம , ஊரைச் சேதப்படுத்தாமத் தடுக்கும் நிரந்தரத் தீர்வாக அடிவாரத்தில் தடுப்பனைக் கட்ட அரசாங்கம் மூலம் காந்திராமசாமி ஏற்பாடு செய்தார். வெள்ளச்சேதமும் , நிலத்தடிநீர் குறைவதும் முடிவுக்கு வந்தது. சுத்தியுள்ள வறண்ட கரட்டுக் காடெல்லாம் பழத்தோட்டங்கள் ஆயின ! சுற்றியுள்ள ஊருகளுக்கும் நல்ல பேரு வரக் காரணம் காந்தி ராமசாமின்னு பரவலாப் பேசப்பட்டது.
காந்தி ராமசாமி –வேலுமயில் தம்பதிக்கு ஒரு ஆண், ஒருபெண் பிறந்தனர். மகன் மோகன்தாஸ் எம்.ஏ . படித்துவிட்டு அரசுத் தேர்வெழுதக் காத்திருந்தான். அப்பாமாதிரி படிச்சிட்டு , விவசாயத்தில முடங்கிறாம , அரசு வேலைக்குப் போகணுமுன்னு வெறி மோகன்தாஸ்க்கும் தனன்றது .. அரசுவேலைக்கான நம்பிக்கை , இலவமரம் காய்த்து பழுத்த மாதிரிதான். வயசு கூடிகிட்டே போனது. எப்படியாவது அரசு வேலையில் உக்காந்திறனுங்கிற வெறி ஆட்டியது. டாஸ்மாக் கடைக்கு சூபர்வைசர் வேலைக்கு ஆளெடுக்கிறாகன்னு தகவல் கிடைச்சது. மகன் அப்பாவிடம் அனுமதி கேட்டான். “ நான் மட்டுமல்ல இந்த ஊரே குடிக்கு எதிராக இருக்கும்போது சாராயக் கடைக்கு வேலைக்கு போறேன்னு சொல்லலாமா ? நீ கவர்மன்ட் வேலைக்கு போகவேணாம். வா இயற்கைமுறை விவசாயப்பண்ணை அமைப்போம். இனிமே இயற்கை விவசாயத்துக்குத் தான் எதிர்காலம் ! இதுனால மக்களுக்கும், நாட்டுக்கும் நல்லது “ன்னு அப்பா காந்திராமசாமி சொன்னதை மகன் மோகன்தாஸ் ஏற்கவில்லை.
‘வயசு இருக்கும்போதே அரசோட டாஸ்மாக் சர்வீசில் சேர்ந்துட்டோமுனா , அப்புறமா படிப்புக்கேத்த பதவிக்கு மாறிக்கலாம்’ என்று புரோக்கர் சொன்னதை நம்பி, குடும்பத்துக்குத் தெரியாம , கடனை வாங்கி கைமாத்திட்டு மதுரையில் டாஸ்மாக்கில் சூபர்வைசரா சேர்ந்திட்டான். இந்தத் தகவலைச் சொன்ன மகனின் நண்பனிடம் , “ அவன் , சாராயக்கடை வேலையை உதறிட்டு ஊருக்குள்ளே வரட்டும் !, இல்லாட்டி அவன் இந்த ஊருக்குள்ள நுழையக்கூடாது.! குடும்பத்துக்கும், ஊருக்கும் எதிரா நடந்துக்குற அவன் எங்க பிள்ளை இல்லை.! இனி அவன் எங்க மூஞ்சியில முழிக்கவும் கூடாது ! “ என்று ராமசாமி கறாரா சொல்லிவிட்டார்.
அப்பா மூலம் அறிந்த நெறிமுறைகளும் , இங்கே வாழ்க்கை நடைமுறைகளும் இருவேறு துருவங்களாக இருந்தன . விடுபட ஆசைதான்; ஆனாலும் மோகன்தாஸ்க்கு விவசாயத்தில் ஆர்வமில்லை. வேற கவருமன்ட் வேலைக்கு மாறவும் வாய்க்கலை.. டாஸ்மாக் வேலையை உதறவும் முடியலை. வேற பரீச்சை எழுதிப்போக படிக்க நேரமுமில்லை. தேனை நக்கப்போன தேனீயின் காலும், இறக்கையும் ஒட்டிக்கொண்டன. அப்புறம் அவன் ஊருக்குள்ளே வரலை அவனுக்கு பிடிச்ச பொண்ணைக் கட்டிகிட்டான். அவ்வப்போது பார்க்கும் ஊர்க்கார்கள் மூலம் குடும்பத்தாரை விசாரிப்பதோடு சரி.
ராமசாமி தம்பதிக்கு , ‘ தாம் விதைச்ச விதையிலே முள்ளுச்செடி முளைச்சிருச்சே, உயிர்க்காக்கும் மூலிகை பச்சை நாவியா மாறிருச்சே.. .ஊரையே திருத்திட்டோம் ; பெத்தபிள்ளையை மாத்த முடியலையே என்ற கவலை அரித்துக் கொண்டிருந்தது. மகனை வைத்துக் கண்ட கனவு பலிக்கவில்லை.
ஆசிரியர் பணிக்குப் படித்த மகளை ராமசாமி அக்காமகனுக்கு மணமுடித்து தம் குடும்பத்தோடு வைத்து , அவர்களை இயற்கை விவசாயப் பணிகளில் ஈடுபடுத்தினார். அவர்களுக்கு பிறந்த பேரக்குழந்தைகள் மூலம் மன ஆறுதலைத் தேட முயன்றார்.
காந்தி ராமசாமி மகன் மோகன்தாஸ் குடும்பத்திலிருந்து அந்நியப் படுத்தப்பட்டு மகள், மருமகன் குடும்பத்தை நாட்டாமையின் பூர்வீக வீட்டில் தங்கவைக்கப் பட்டனர். ராமசாமி தோட்டத்தில் ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டு அங்கிருந்து இயற்கைவிவசாயத்தில் ஈடுபடலானார். பாரம்பரிய நாட்டமை பட்டமும் மருமகன் கைக்குப் போய்விடுமோ என்று நாட்டாமையின் பங்காளிக்கு பயத்தை உண்டாக்கியது. கிராமத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் பங்காளிகள் நாட்டாமை காந்தி ராமசாமியின் கருத்துகளுக்கு எதிர்கருத்துகளை கிராம மக்களிடையே பரப்பினர்.
குடிகாரரர்கள் உறுத்தல் இல்லாமல் ஊருக்குள் உலாவினர். இந்த விவரம் ராமசாமியின் நண்பர்கள் மூலம் தெரியவந்தது. ராமசாமியின் மனநோயை அதிகப்படுத்தியது.
எதாவது பொதுக்காரியம் , பங்குனித் திருவிழா என்றால் மட்டுமே அவர் ஊருக்குள் வருவார். மற்ற நேரங்களில் இயற்கை விவசாயப் பண்ணையிலே இருந்தார். அரசுபணிகள் தொடர்பாகத் தேடிவரும் அதிகாரிகள் அவரை பண்ணையிலே போய் பார்ப்பார்கள். இது பங்காளிகள் வதந்தி பரப்ப ஏதுவாக அமைந்தது. ஆனாலும் வேலுமயில் எதாவது ஒரு வேலை சாக்கிட்டு கிராமத்துக்குள் வந்து அனைத்து தரப்பு பெண்களிடமும் உறவாடிப் போனார். இது மகளையும், மருமகனையும் முன்னிறுத்தும் தந்திரம் என்று எதிர்க்குழுவினர் அஞ்சினர். ‘ இனி பகையாடி கவிழ்க்க முடியாது ; உறவாடி கறக்க பார்ப்போம் ‘ என்று பங்காளிகள் களத்தில் இறங்கினர்.
இந்தப் புகைச்சலை முடிவுகட்ட வக்கீலைக் கொண்டு ஒரு உயில் எழுதி தான் இறந்த பிறகு ஊர்ப்பெரியவர்கள் முன்னிலையில் வாசித்து அதன்படி நடக்கவேண்டும் என்று ஏற்பாடு செய்துள்ளதை ஊர்ப்பெரியவர்கள் ஐந்துபேரிடம் சொல்லிவைத்தார். இந்த உயில்பூதம் ஊருக்குள் பல கதைகளை கிளப்பியது. இந்த சூழ்நிலையில் தான், எழுபதுவயதான ராமசாமி , நோய்மை மிகுந்து படுத்த படுக்கையாகக் கிடந்தார். இவரைப் பார்க்கத்தான் சுற்றிலுள்ள கிராமத்து மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
இதில் நோயுற்ற காந்திராமசாமியைப் பார்ப்பதை விடவும், ஊருலகமெல்லாம் இயற்கையான பழம், தானிய தவசுன்னு பேரு வாங்கி நூறுபேருக்கு மேல வேலை பார்க்கிற அவரது விவசாயப் பண்ணை எப்படி இருக்கிறது ? உயிலில் என்ன எழுதி இருக்கிறார்? அடுத்த நாட்டாமை யார் ?, விலகிப்போன மகன் டாஸ்மாக் வேலையை விட்டுட்டு குடும்பத்தோடு சேர்ந்திருவாரா , பங்காளிக என்ன பேசிக்கிறாக . என்று அறியும் ஆவல் , நாள்தோறும் கூட்டத்தை கூட்டிக்கொண்டிருந்தது. இதை அறிந்த பிரபல மின்னூடகம் ஒன்று காந்திராமசாமி தோட்ட வீட்டுக்கு படையெடுத்தது.
வாங்களேன் ஒரெட்டு பார்த்துட்டு வந்திறலாம் .
ஜனநேசன்.