அவர் சிறுகதை – பூ. கீதா சுந்தர்

அவர் சிறுகதை – பூ. கீதா சுந்தர்
டீக்கடையில் மூன்று டீ சொல்லி விட்டு வந்தான் சங்கர். அவன் முகம் சற்று குழப்பத்தில் இருந்தது.

” அண்ணே, நான் எப்டி அவர கூட்டிட்டு போறது ? எனக்கு அவர யாருன்னே தெரியாது. கொஞ்சமும் பழக்கம் இல்லை… அது கூட பரவாயில்ல, எங்க வீட்டுல ஒரு வாரம் தங்க வைக்கிறது கொஞ்சம் சிரமம் தாண்ணே… வீட்ல அம்மா ஏதாவது சொல்லுவாங்களோன்னு தோனுதுண்ணே… ”

” சங்கரு, நீ குழம்பற அளவுக்கு ஒன்னுமே இல்லப்பா .. சும்மா ஃபிரியா வுடுப்பா .. ” டீ யை சுவைத்தபடி சாவகாசமாக சொன்னார் ராமு.

‘ என்னங்கண்ணே இவரு இப்டி சொல்றாரு ? நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லுங்களேன்.. ‘ என்பது போல குமாரைப் பார்த்தான் சங்கர்.

‘ இரு, இரு பேசறேன் ‘ என்று ஜாடை காட்டினார் குமார்.

ஒரு வாரத்திற்கு முன்பு,

” அண்ணே.. வாங்க, வாங்கண்ணே.. உள்ள வாங்க… எப்படி இருக்கீங்க, பார்த்து ரெண்டு வருஷம் இருக்கும் இல்லண்ணே… வீட்டுல எல்லாரும் செளகரியமாண்ணே… ” ராமுவின் ஊருக்காரர் வந்து இருந்தார்.

” பத்மா.. இங்க வா. யார் வந்திருக்காங்கன்னு பாரு..” உள்ளே இருந்து தன் மனைவியை அழைத்தார்.

” வாங்க அண்ணே, நல்லா இருக்கீங்களா… ” நலம் விசாரித்து விட்டு உள்ளே சென்று ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள்.

” ராமு.. ஊர்ல வீடு கட்டி இருக்கேன் பா, நீ குடும்பத்தோட புதுமனை புகுவிழாவுக்கு வந்துடணும் பா.. ” என்று பத்திரிக்கையை கொடுத்தார்.

” கண்டிப்பா வந்துடுறோம்ணே.. ”

” நம்ம சங்கருக்கும் பத்திரிக்கை வச்சி இருக்கேன் பா… சேர்ந்தே வந்துடுங்க.. ” என்று கூறிவிட்டு கிளம்பி விட்டார்.

அந்த புதுமணை புகுவிழா நடைபெற இருக்கும் தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே சங்கர் ஊருக்கு போவதாக ராமுவிடம் கூறினான். அப்போது ராமு,

” சங்கரு.. அன்னிக்கி தே‌தி‌க்கு என்னால வர முடியுமான்னு தெரியல.. இத சொன்னா அண்ணன் ரொம்ப கோச்சிக்குவாரு.. நீ போகும் போது உங்கூட ஒருத்தர அனுப்பறேன்.. அவரு ரொம்ப முக்கியமானவரு பா… அவரை அண்ணனுக்கு நல்லாத் தெரியும்.. நீ ஒரு வாரத்துக்கு அவரை உங்க வீட்டுல வச்சி பாத்துக்கோ பா.. அப்புறம் விசேசத்துக்கு கூட்டின்னு போப்பா ” என்றார்.

அதைத் தான் இப்போது குமாரிடம் சொல்லி புலம்பினான் சங்கர்.

” ஏண்ணே… அவனுக்கு யானுன்னே தெரியாத ஆள எப்டிண்ணே கூட்டிட்டு போக முடியும்..? அது கூட பரவாயில்ல வீட்டுல எப்டி தங்க வைக்க முடியும் ? ”

” ஏம்பா அதெல்லாம் நான் யோசிக்க மாட்டனா.. அவரால ஒரு தொந்தரவும் வராது பா… அவரு வீட்டுக்கு போனா அவங்க அம்மாவே சந்தோசப்படுவாங்க பா.. நீ வேணா பாறேன்.. ”

” சரிண்ணே… நீங்க இவ்ளோ தூரம் சொல்றீங்க.. நீங்க சொல்றத பாத்தா அவரு ரொம்ப மரியாதையான ஆள் மாதிரி தான் தெரியுது.. சரி, அவரு சைவமா..? அசைவமா. ? ன்னு சொல்லுங்க . அதுக்கேத்த மாதிரி எங்க அம்மாகிட்ட சொல்லி சமைக்க சொல்றேன்… ”

” எப்பா… அவரு சைவம் தான்… ஆனா சாப்பாட்டு விஷயத்துல அவரு உங்களுக்கு எந்த சிரமமும் தர மாட்டாரு பா … ”

” சரிங்கண்ணே… நான் போய் ஊருக்கு போறதுக்கு ரெண்டு டிக்கெட் போடறேன்… ” என்றான் சங்கர்.

” அட ஏம்பா ரெண்டு டிக்கெட் ? . உனக்கு மட்டும் டிக்கெட் போடுப்பா.. ” குழப்பமாக பார்த்தான் சங்கர்.

” ஏண்ணே… அவருக்கு டிக்கெட் போடனும்ல.. ” இப்போது குமாரும் குழப்பாகி போனார்.

” வேணாம்பா… ”

” ஏண்ணே… ? ”

” அவரு எல்லா எடத்துக்கும், டிக்கெட் எடுக்காம போக கூடிய அளவுக்கு பெரிய ஆளுப்பா… அவரு அவ்ளோ ஃபேமஸ் பா.. அவருக்கு டிரெய்ன்ல டிக்கெட் எல்லாம் கேக்க மாட்டாங்க பா… ”

” ஓ.. அவரு அவ்ளோ பெரிய ஆளாண்ணே… ” என்று வியப்பாக கேட்டான் சங்கர். ” எங்க வீட்டுக்கு வேற கூட்டிட்டு போறேன் … எனக்கு பயமா இருக்குண்ணே.. எதுக்காகவும் கோச்சிக்க மாட்டாரு இல்லண்ணே… ” என்று கலக்கத்துடன் கேட்டான் சங்கர்.

” அதெல்லாம் ஒண்ணும் இல்லப்பா.. அவரு ரொம்ப சாந்தமானவரு .. ”

” அண்ணே.. நீங்க சொல்றத பார்த்தா அவரு நம்மள மாதிரி சாதாரண ஆளா தெரியலையே .. அவரு சாமியாரா… ? ”

” கரெக்டா சொல்லிட்டப்பா.. சாமியார் தான்… நம்ம பெரிய குருசாமிப்பா அவரு… ஆனா அவரு உனக்கு எந்த தொந்தரவும் பண்ண மாட்டாரு.. நீ ஒன்னும் பயப்படாத… ”

சங்கர் மனம் ஓரளவுக்கு சரியாகி விட்டது.. அவன் அவரை தன்னுடன் அழைத்து போக தன்னை தயார்படுத்திக் கொண்டான்.

” சரிங்கண்ணே… நான் நாளைக்கு காலையில நேரா ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துடறேன்.. நீங்க அவரை அங்க கூட்டிட்டு வந்துடுங்க.. நான் அவரை பத்திரமா கூட்டின்னு போறேன்.. ஒரு வாரம் எங்க வீட்டுலயே இருக்கட்டும்… அப்புறமா கிரகபிரவேசத்துக்கு கூட்டுன்னு போறேன்.. அண்ணே முடிஞ்சா விழாவுக்கு நீங்களும் வந்துடுங்கண்ணே… ” மீண்டும்,

” அண்ணே எதுக்கும் டிக்கெட் ஒன்னு போட்டுடறேண்ணே… ஒரு வேளை டிடிஆர் வந்து பிரச்சனை பண்ணா என்னாண்ணே பணறது..? ”

” ப்பா… அதெல்லாம் வேணாம்பா… அவர பாத்தா டிடிஆர் கூட டிக்கெட் கேக்க மாட்டாரு பா… அவரு அவர பாத்துக்குவாரு .. நீ வுடு பா… ”

” ஓகேண்ணே… ”

” சரிப்பா பாக்கலாம்… நீ கிளம்பு.. ”

மூவரும் கிளம்பி விட்டார்கள்.

காலை மணி பத்து இருக்கும். குமாருக்கு சங்கர் ஞாபகம் வந்தது.

‘ இந்நேரம் டிரெயின்ல போயிகிட்டு இருப்பான் இல்ல.. அவன் நேத்து எல்லாம் புலம்பிக்கிட்டே வேற இருந்தான்.. சரி, போன் பண்ணி பாக்கலாம் ‘ என்று சங்கருக்கு போன் செய்தார்.

” இன்னாப்பா.. சங்கரு, கிளம்பிட்டியா… அவரு கூட வராரா.. ? உனக்கு ஓ. கே தான ஒன்னும் பிரச்சனை இல்லையே..? ”

” அண்ணே… ” அவன் குரல் கம்மியது.

” இன்னாப்பா… இன்னாச்சி.. உன் குரலு ஏன் ஒரு மாதிரி இருக்குது … சொல்லுப்பா.. ” குமாரை சிறு பதற்றம் தொற்றியது..

” அட, அதை ஏண்ணே கேக்கறீங்க.. ராமு அண்ணன், அவர என் கையில குடுத்து வச்சிக்க சொன்னப்ப தான் நானே ஷாக்காயிட்டேன் ..”

” இன்னாது .. கையில குடுத்தாரா..? ” இப்போது குமாருக்கு குழப்பமாக இருந்தது.

” ஆமாண்ணே..ராமு அண்ணன், அவரு, அவருன்னு சொன்னது அதை தாண்ணே.. ”

” எதப்பா.. ”

” அது மூணடி விநாயகர் சிலைண்ணே .. வெள்ளி மூலாம் பூசினது… அதை தான் விசேஷ வீட்டுக்கு கிப்ட்டு குடுக்க சொல்லி, எங்கிட்ட குடுத்து விட்டு இருக்காரு… பாருண்ணே, ராமு அண்ணனுக்கு லொள்ள … ” என்றவன், ” அண்ணே… அண்ணே..” என்று அழைத்துக் கொண்டிருக்க.

குமார் கையில் ஃபோனோடு அப்படியே சேரில் அமர்ந்துக் கொண்டார். அவர் எதுவும் பேசவில்லை.

புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: மக்கள் கலைஞன் ராமு! – கருப்பு அன்பரசன்

புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: மக்கள் கலைஞன் ராமு! – கருப்பு அன்பரசன்
சைதை ராமு.. ஆட்டோ ராமு… பூ ராமு இப்படி எத்தனை பெயர் கொண்டு அழைத்தாலும் அவர் எனக்கு சித்தப்பா ராமு மட்டுமே என்றும். கருப்பு கருணாவின் அறிவுறுத்தலோடு தலைநகர் சென்னைக்கு 1987ஆம் ஆண்டின் இறுதியில் வந்து சேர்கிறேன். 1989ல் சென்னை கலைக்குழுவில் இணைகிறேன்.

1990 ஆம் ஆண்டில் சென்னை கலைக்குழு சத்யாகிரகம் மேடை நாடகத்தின் தயாரிப்பு பணியில் கலைஞர்களின் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தியது.. அந்த சந்திப்பின் போது தான் ராமுவின் அறிமுகம் எனக்கு. அன்று தொடங்கிய சந்திப்பு, கலைக்குழு.. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மார்க்சிஸ்ட் கட்சி.. குடும்பம்.. திரைப்படம் இப்படி பல தளங்களிலும்.. அவரின் மரணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக இயக்குனர் கௌதம் ராஜ் அவர்களின் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்தில் நடிப்பது வரையிலும் எங்களின் சந்திப்பு தொடர்ந்து வந்தது.

சென்னை நகரில் இந்திய மாணவர் சங்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இளம் தோழர்களை சரியானதொரு அரசியல் புரிதலோடு வளர்த்தெடுப்பதிலும் களமாட செய்வதிலும் திறன் மிகுந்த தோழர்.

அமெரிக்க தூதரகத்திற்கு எதிரில் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் செய்வதற்கு சென்னை ஸ்பென்சர் அருகில் பல ஆயிரக்கணக்கான தோழர்கள் அணி திரண்டு இருக்கிறார்கள். அமெரிக்காவின் நயவஞ்சகத்தை தோலுரிக்கும் வகையில் வேடமணிந்து ஊர்வலத்தின் முதலாவது
ஆளாக ராமு நிற்கிறார். அன்றைக்கு இருந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு அதன் காவல்துறை ஊர்வலத்தை நடத்த அனுமதி மறுக்கிறது. அனுமதியை மீறி ஊர்வலம் செல்ல முற்படும் பொழுது காவல்துறை கடுமையான தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்கச் செய்தது. கடுமையான தாக்குதலுக்கு உள்ளான ராமு அங்கே பெண் தோழர்களும் தாக்கப்படுவதை கண்முன்னே கண்டு வெகுண்டு சினம் கொள்கிறார்.. அவரின் கோபம் காவல்துறையினர் மீது பதில் தாக்குதலாக நடைபெறுகிறது. அதைக்கண்ட தோழர்கள் அவர்களும் பதில் தாக்குதலை நடத்துகிறார்கள் காவல்துறைக்கு எதிராக.. அந்த நேரத்தில் காவல்துறை பின்வாங்கியது. அதன் காரணமாகவே பல பெண்
ஊழியர்களை.. இளைஞர்களை நம்மால் காவல்துறையின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முடிந்தது. அதன் பிறகு பெரும்படையோடு காவல்துறை வந்து சேர்ந்தது என்பது வேறு விஷயம்.. அந்த நேரத்தில் நடைபெற்ற எதிர் தாக்குதல்தான் நம்முடைய ஊழியர்கள் பலரை காவல்துறையின் கடுமையான திட்டமிட்ட தாக்குதலில் இருந்து தப்பிக்க வைத்தது. எதிர் தாக்குதல் என்பதுதான் நம்முடைய ஊழியர்களை காவல்துறையிடம் இருந்து அந்த நேரத்தில் காப்பாற்ற முடியும் என்று யூகித்து அதைச் சரியாக செய்து முடித்தார். எந்த திமுக அரசு காவல்துறை கொண்டு நம்மை தாக்கியதோ.. அதே திமுக அரசை அன்றைக்கு மத்திய அரசு கலைத்த பொழுது அதை கண்டித்து முதல்
போராட்ட முழக்கமிட்டவர் தோழன் ராமு.. கைகளால் சுவரொட்டி எழுதி சைதாப்பேட்டை முழுவதும் தன்னுடைய ஆட்டோவில் எடுத்துக்கொண்டு ஒட்டி முடித்தவர் தோழன் ராமு. அந்த அளவிற்கு மிகச்சரியான அரசியல் புரிதலோடு களத்திலும் அறிவுத் தளத்திலும்
இயங்கக் கூடியவர்.

கலை இலக்கிய இரவு என்கிற வடிவம் திருவண்ணாமலையில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும் அதனை தமிழகம் முழுவதிலும் கொண்டு சென்றதில்.இப்படியான கலை இலக்கிய இரவுகளை நடத்திட நம்முடைய ஊழியர்கள் கவனம் செலுத்தி நடத்துவது அவசியம் என்கிற ஒரு
கருத்தினை மாநிலத் தலைமை உணர்ந்து பேச வைத்ததில், யோசிக்க வைத்ததில் சைதை கலை இரவு முக்கிய பங்காற்றியது. 1993 ஆம்
ஆண்டு டிசம்பர் 31ல் சென்னையில் நடைபெற்ற அந்த முதல் கலை இரவை மிகச் சிறப்பான முறையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
பார்வையாளர்களை; சென்னை நகரம் முழுவதும் இருந்து பொதுமக்களை ஊழியர்களை அணிதிரட்டியதில் கலை இரவு மேடையை வடிவமைத்ததில்; நகரம் முழுவதிலும் தன்னுடைய வித்தியாசமான மாற்றி யோசிக்கும் பிரச்சார உத்திகளை கொண்டு சென்றதில்.. சென்னை மாவட்டம் முழுவதும் இருக்கக்கூடிய கலை இலக்கியம் சார்ந்து இயங்கக் கூடிய பலதரப்பட்ட ஊழியர்களை அரவணைத்து கலை இரவை
நடத்திக் காட்டியதில் ராமுவின் பங்கு மகத்தான ஒன்றாகும்.

அறியாமையிலும் சரியானதொரு அரசியல் புரிதல் இல்லாமலும் இருக்கும் உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை அணி திரட்டுவதில் தமிழகத்தில் ஆகப் பெரிய பங்களிப்பு என்பது கலை இலக்கியத்திற்கு மட்டுமே உண்டு என்பதில் உறுதியாக நம்பினார் தோழன் ராமு. கலை இலக்கியங்கள் எல்லாமும் எளிய மனிதர்களின் மொழியிலேயே இருக்கவேண்டும் என்று விரும்பினார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டத்தில் பெண்களைக் கொண்ட “சக்தி கலைக்குழு’ உருவாக்கப்பட்ட பொழுது அந்த கலைக்குழுவின் கலைஞர்களுக்கு போதிய நாடகப் பயிற்சி அளித்து அவர்களை தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்திற்கு கொண்டு
செனன்றதில் இவரின் பங்கு மிகவும் பாராட்டுக்குரியது.

சென்னை ரிசர்வ் வங்கியில் 2006 ஆண்டு என நினைக்கிறேன் மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்தையயொட்டி அங்கே இருக்கக்கூடிய பெண் ஊழியர்களை இணைத்து “மனிதி” என்கிற நாடகத்தை வங்கி நிர்வாகம் பாராட்டக்கூடிய அளவில் சிறப்பான முறையில் நடத்திக் கொடுத்தார். ரிசர்வ் வங்கி நிர்வாகம் 2007 ஆம் ஆண்டில் நடத்திய இலக்கிய விழா ஒன்றில் அங்கே இருக்கக்கூடிய அருந்தக ஊழியர்களை வைத்து “மனிதம்”
என்கிற நாடகத்தை இயக்கிக் கொடுத்தார்.

தி ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆஃப் தமிழ்நாடு என்கிற குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பு குழந்தைகளை வைத்து அவர்களாகவே தானும் மாறி; அவர்கள் நடிக்கும் நாடகம் ஒன்றினை இயக்கி தயாரித்து அளித்தார்.

மனிதர்கள் இறப்பு நிகழ்வில் மட்டும் பாடக்கூடிய “மரண கானா விஜய்” என்கிற கானா பாடகரை அறிந்து, அவரை அணுகி அவர் குறித்தான வாழ்வியலை ஆவணப்படமாக எடுத்தளித்து மரண கானா விஜி என்கிற கானா பாடல் கலைஞனை தமிழகம் அறிந்த கலைஞனாக மாற்றியதில் ராமுவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.

இப்படி எல்லா நிலையில் இருக்கக்கூடிய மனிதர்களோடு தன்னை எப்பொழுதுமே இணைத்துக் கொண்டு அவர்களோடு ஒருவராகவே வாழ்ந்து வந்தார். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் குழந்தைகளை கொண்டாடுவதும் அவர்களை தூக்கி சுமப்பது என்பது அவருக்கு நிகர் அவரே தன்னுடைய மரணம் மட்டும் . அவரோடு நெருங்கிய அனைத்து தோழர்களின் குடும்பங்களிலும் அவர் ஒருவராக மாறி போவார்.. அந்த குடும்பத்து குழந்தைகளுக்கு மாமாவாக இருப்பார், பெரியப்பாவாக இருப்பார், தாத்தாவாக இருப்பார் குழந்தைகளின் தோழனாக இருப்பார் . .
குழந்தைகளோடு குழந்தையாக இருப்பார் ராமு. தான் வாழ்ந்து மறைந்த மண்ணில் சாக்கி (சாக்லேட்) தாத்தாவாக இருந்திருக்கிறார்.

இன்றைக்குத் தமிழ்நாடு முழுவதும் நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரம் குறித்து பேசப்படுகிறது என்றால் அதற்கு முழுமுதற் காரணமும் கலைஞன் ராமு. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஒருவராக இருந்த பொழுது தமுஎகச மாநிலக் குழுவின் வழிகாட்டுதலோடு அருகில் இருக்கக்கூடிய மற்ற மாவட்டங்களில் இருந்து மிகப் பெரிய அளவிற்கு நாட்டுப்புறக் கலைஞர்களை அணிதிரட்டி சென்னை அண்ணா சாலையில் மிகப்பெரிய ஊர்வலத்தை நிகழ்த்தி அவர்களின் வாழ்வாதாரம் குறித்து; அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை பல்வேறு தரவுகளை திரட்டி மறைந்த தோழர் நன்மாறன் அவர்களின் உதவியோடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உடனடியாக அன்றைக்கிருந்த கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு என்று தனி நலவாரியம் ஒன்றினை அமைத்தது.. நாட்டுப்புறக் கலைஞர்களின் உழைப்பினை சுரண்டி வாழும் பலர் அமைதியாக இருந்த பொழுது அக் கலைஞர்களின் வாழ்வாதாரம் குறித்து பேசிய மக்கள் கலைஞன் தோழன் ராமு.

இயக்குனர் சசி அவர்களின் “பூ” என்ற திரைப்படத்தில் “பேனாகாரர்” என்கிற கதாபாத்திரத்தின் வழியாக தமிழக திரைத்துறைக்கு குணச்சித்திர நடிகராக அறிமுகமாகிறார். சைதை ராமு, ஆட்டோ ராமு, என்பது மறைந்து தமிழகம் முழுவதிலும் “பூ” ராமு என்ற மாபெரும் மக்கள் கலைஞன் தமிழ்த் திரைத்துறைக்குள் ராஜபாட்டையை தொடங்குகிறார் பூ திரைப்படத்தின் வழியாக. திரைத்துறைக்குள் பல்வேறு திரை ஆளுமைகள் தனது தொடர்பில் இருந்தாலும் . . திரைத்துறையில் தவிர்க்கமுடியாத திரைக் கலைஞனாக முன்னேறி இருந்தாலும்
எப்பொழுதும் எளியவாழ்க்கையை மேற்கொண்டார்.. எளிய மக்களோடு தன்னுடைய அன்றாட பயணத்தை வைத்துக் கொண்டார்.. தான் பேசிடும் வார்த்தைகளுக்கு அரிதாரம் பூச தெரியாதவர். தான் ஏற்றுக் கொண்ட கருத்துக்களுக்கு எப்பொழுதுமே நியாயம் சேர்ப்பிக்க தன்னால் முடிந்த அனைத்து தளத்திலும் அறிவு மற்றும் உடல் உழைப்பினையும் தொடர்ந்து செலுத்தி வந்த மகா கலைஞன் ராமு.

செயல் என்ற சொல்லுக்கு உதாரணமாக தன்னுடைய வாழ்வினை கம்யூனிஸ்டாக வாழ்ந்து முடித்திருக்கிறார்.

– கருப்பு அன்பரசன்

பழனித்தாத்தா சொன்ன கதைகள் – ‘சூரிய ஒளியின் நன்மைகள்’ கட்டுரை – முனைவர் ம. அபிராமி

பழனித்தாத்தா சொன்ன கதைகள் – ‘சூரிய ஒளியின் நன்மைகள்’ கட்டுரை – முனைவர் ம. அபிராமி
காலைப் பொழுது அழகாகப் புலர்ந்தது. சுபி மெல்லக் கண் விழித்தான். உடல் முழுதும் அடித்துப் போட்டது போன்ற வலி. காய்ச்சல் மிகுதியாகக் காய்ந்தது. பழனித்தாத்தா அப்பாவிடம் பேச வந்தவர் சுபியை கவனித்தார். அம்மா கசாயம் காய்ச்சி கொண்டுவந்து குடிபாட்டினாள். தலைக்குத் தைலம் தேய்த்து விட்டாள் போர்வையை எடுத்துப் போர்த்திவிட்டாள். அப்பா 10 மணிக்கு மேல் ஆஸ்பி;ட்டால் அழைத்துச் செல்வதாகக் கூறினார்.

இரண்டு நாட்களுக்குப் பின் சுபி குணமானாள். தோழிகளுடன் விளையாடிவிட்டு போர் அடிக்கவே தாத்தாவிடம் கதை கேட்கலாம் என்று சென்றார்கள்.
தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார் ராமு, சோமு என இரு நண்பர்கள் இருந்தனர். ராமு செல்வந்தர் வீட்டுப்பையன். சோமு ஏழை விவசாயின் மகன். ராமு காலையில் 9 மணிக்கு எழுந்திரிப்பான். பெட் காபி சாப்பிடுவான் அவசரமாக பல்துலக்கி அவசரமாகக் குளித்துமுடித்து அம்மா கொடுக்கும் டிபனை சாப்பிட்டு முடித்து பள்ளிக்கு காரில் செல்வான். இதுவே இவனது வழக்கமாக இருந்தது. சோமு அப்படியல்ல காலை வெள்ளி முளைத்தவுடன் எழுந்துவிடுவான்.

அப்பாவுடன் வயல் வரப்பில் முளைத்த புற்களின் மேல் வெறுங்காலுடன் செல்வான். அப்பாவிற்குத் துணையாக வயலில் வேலை செய்வான். அதற்குள் சூரியன் உதித்து இளம் வெயிலைப் பரப்பும் அப்பா ஒடித்துக் கொடுத்த வேப்பிலைக் குச்சியால் பல் துலக்குவான். ஆற்றுநீரில் நீந்தி விளையாடுவான். பின் வீட்டிற்கு வந்து அம்மா கொடுக்கும் பழைய சோற்றையோ, கஞ்சி கூழையோ குடித்துவிட்டு பள்ளிக்குக் காலாற நடந்து செல்வான். இருவரும் வளர்ந்தனர் ராமு நோயாளியாக மாறிப் போனான் சோமு நல்ல திடமான ஆரோக்கியத்துடன் காணப்பட்டான். இன்று ஊரிலேயே பெரிய மருத்துவர் சோமுதான். இதற்கு, காரணம் என்ன என்று தாத்தா கேட்டார். ஒவ்வொருவரும் கூழ், கஞ்சி. பழைய சோறு புல்வெளியில் நடந்தது. ஆற்றுநீரில் நீந்தி விளையாடியது என கூறினர். தாத்தா நீங்கள் அத்துணை பேர் கூறியதும் உண்மை ஆனால். அதையும் தாண்டி ஒரு வி~யம் உள்ளது. அதுதான் காலை இளம் வெயலில் நிற்றல் சோமு செய்த அனைத்துச் செயல்களுமே நல்ல உடற்பயிற்சி தான். இவையனைத்தையும் அவன் இளம் வெயிலில் செய்தான். மாலை 4 மணிக்கு மேல் உள்ள வெயில்படும்படி விளையாடினான். அதுவே அவனுடைய ஆரோக்கியத்திற்குக் காரணமாக அமைந்தது என கதையைச் சொல்லி முடித்தார் தாத்தா.

சூரிய ஒளியின் விஞ்ஞான ரகசியம்:

காலை நேர சூரிய ஒளி நம் உடலில் படும்பொழுது விட்டமின் டி யை உறிஞ்சுகிறது. இது கால்சியத்தை உறிஞ்சி நம் உடலில் உள்ள நரம்புகளை வலுவடையச் செய்கிறது கிருமி நாசினி, உடல் கொழுப்பைக் குறைக்கும்.

விட்டமின் டி குறைபாட்டினால் குழந்தைகளுக்கு மெட்ட பாலிக் எலும்பு நோய்கள் ஏற்படும். மெலடோனின் என்ற திரவம் நம் தூக்கத்திற்கு உதவுகிறது. சூரிய ஒளியில் நிற்பதினால் நம் உடல் எடை குறையும்.

விட்டமின் டி நம் உடலில் குறைவாக இருந்தால் இதய நோய்கள், புற்றுநோய் ஏற்படுகிறது. குளிர்காலத்தில் குளிர் நீடிக்கும் பொழுது பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன. இதற்கான சிகிச்சை சூரிய ஒளி தான்.

தினமும் காலை 15 நிமிடங்கள் வெயிலில் நின்றால் முகப்பரு. அரிக்கும் தோலழற்சி, மஞ்சள் காமாலை தடிப்புத் தோல் அழற்சி மற்றும் பூஞ்சை தோல் தொற்று நோய்கள் போன்ற நோய்கள் ஏற்படுவதில்லை.

சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் விட்டமின் டி குறைபாட்டினால் இன்சுலின் பாதிப்பு குறைந்து டைப் 2 நீரழிவு நோயை உண்டாக்கும். சூரிய ஒளியின் மூலம் இயற்கையாக இவ்வளவு நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

முனைவர் ம. அபிராமி,
வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரி, ஆவடி.