சன்னி (கொரோனா பின்னணியில் ஒரு புதிய முயற்சி) – இரா. இரமணன்
செப்டம்பர் 2021 வெளிவந்த மலையாள திரைப்படம். மலையாளத் திரை உலகில் இயங்கும் ஜெயசூரியா நடிகர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் என பன்முக ஆளுமைகொண்டவர். இது அவரது நூறாவது படம். ஒரே ஒரு பாத்திரம் மட்டுமே நடிக்கும் படம் எடுக்க வேண்டும் என்கிற ஆவலில் தயாரித்துள்ளார். பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ நினைவுக்கு வருகிறது.
சன்னி ஒரு இசையமைப்பாளர். காதலி நிம்மியை திருமணம் செய்துகொண்டபின் பிறக்கும் குழந்தை இறந்து விடுகிறது. அந்த சோகத்தில் துபாய் சென்று அங்கு வியாபாரத்தில் பணத்தை இழந்துவிடுகிறார். அங்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படுகிறது. அந்த நேரம் எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் அவன் மனைவி விவாகரத்து கேட்கிறார். சன்னி தீவிரமான குடிப்பழக்கத்திற்கு ஆளாகிறார். இந்தியா திரும்பும் அவர் கொரோனா விதிகளின்படி ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்படுகிறார். குடிப்பதற்கு மது கிடைப்பதில்லை. கடன் கொடுத்தவன் மிரட்டுகிறான். ஆகவே தற்கொலை மனப்பான்மைக்கு ஆளாகிறான். காவல்துறை அவனுக்கு ஒரு மருத்துவரை ஆலோசனை கூற ஏற்பாடு செய்கிறது. அவர் அவனுடய பிரச்சினைகளை கேட்கிறார். தொட்டியில் வளரும் ஒரு செடியை பரிசாக அனுப்புகிறார். அவனுடைய இருமலுக்கு அதன் இலைகளையே மருந்தாக எடுத்துக் கொள்ள சொல்கிறார். அவன் தற்கொலை முயற்சி செய்யும்போது மேல் மாடியில் அவனைப்போலவே கொரோனாவிற்காக தனிமைப்படுத்தப்பட்ட ஒரு பெண் அவனை ஆறுதல் கூறி உற்சாகப்படுத்துகிறாள். அவனுடைய நண்பனும் தொலைபேசியில் அவனுக்கு அவ்வப்போது ஆறுதல் கூறுகிறான். அவனை பண விசயத்தில் ஏமாற்றிய இன்னொரு நண்பனிடமிருந்து பணத்தைப் பெற்று வட்டிக் கடனை அடைக்க அவந்தி வழக்குரைஞர் ஏற்பாடு செய்கிறார். இந்த நிலையில் அவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட இருக்கிறான். அதே சமயம் அவன் மனைவி ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுக்கிறாள். அவனுடன் மீண்டும் வாழ விரும்புவதாக மனைவி கூறுவதுடன் கதை முடிகிறது.
ஒருவனுக்கு இவ்வளவு பிரச்சினைகளும் ஒரே நேரத்தில் வருமா? பிறகு அத்தனையும் ஒரே நேரத்தில் தீருமா? இந்தக் கேள்விகளை ஒதுக்கிவிட்டு கதையை தொலைபேசி உரையாடல் மூலமே நகர்த்துவதை பாராட்டலாம். ஓரிரு கதாபாத்திரங்களே திரையில் காட்டப்படுகிறார்கள். மற்றவர்கள் அனைவரும் தொலைபேசி வழியே நாம் காண்கிறோம். ஐந்து நட்சத்திர விடுதியிலுள்ள பல சொகுசு வசதிகளைக் கொண்ட அறையிலேயே கதை நகர்வதால் அந்த ஓட்டல் விளம்பரம் போல தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. மேல்மாடியில் இருக்கும் பெண்ணின் பாத்திரம் சற்று வேறுபட்டதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அவள் ஏதோ ஒரு தகவல்தொழில் நுட்ப பணியில் இருப்பவள். ஒரு ஆணுடன் சேர்ந்து வாழ்ந்துவிட்டு அது சரிப்பட்டு வராததால் தனியாக இருக்கிறாள். புகை பிடிப்பவள். மாலை நேரத்தில் பிரியாணி உண்பவள். சன்னியின் இசைத் திறமையை பாராட்டுகிறாள். பிறகு விடுதியை விட்டு செல்லும்போது அவனிடம் சாதாரணமாக விடை பெறுகிறாள். வாழ்க்கையை இயல்பாக தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்பவள் என்று எடுத்துக் கொள்ளலாம்.
முதல் நாள் வரை விவாகரத்து வேண்டும் என்று கூறியவள் குழந்தை பிறந்தவுடன் அந்தக் குழந்தைக்காக கணவனுடன் சேர்ந்து வாழ விரும்புகிறாள். இது நம் சமுதாயத்தில் பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினை. சில இல்லற கோபங்கள் மறக்க வேண்டியதுதானே. மறப்பதும் மறக்காதிருப்பதும் அவரவர் சூழ்நிலையும் சொந்த முடிவும்தானே? அவனுக்கு கவுன்சலிங் கொடுத்த மருத்துவர் திடீரென மாரடைப்பால் இறந்து விடுகிறார். அவனை உற்சாகப்படுத்திய மேல்மாடிப் பெண்ணும் விடைபெறுகிறாள். இந்த இரண்டு நிகழ்வுகளும் சூழ்நிலையின் கனத்தைக் கூட்டுகின்றன. அதே சமயம் அவனது சிக்கல்கள் ஒவ்வொன்றாக தீர்ந்து நம்பிக்கை பெறுகிறான். அவனுடைய அறைக்கு வெளியே தெரியும் கடலில் சில படகுகள் மெதுவாகவும் சில வேகமாகவும் செல்கின்றன. சிலவற்றில் ஒற்றை ஆள், சிலவற்றில் இரண்டு பேர், சில ஒரே திசையில், சில வந்த திசையிலேயே திரும்ப செல்வது என ஒவ்வொரு நாளும் காட்சிகள் விரிகின்றன. இயக்குனர் அதன்மூலம் வாழ்க்கையின் போக்குகளை உணர்த்துகிறாரோ?
கொரோனா எளிய மக்களுக்கு வழ்க்கைபாட்டை மேலும் துன்பமயமாக்கியது. மேல்தட்டு மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை கொரோனா கால தனிமைப்படுத்துதல் மூலமாக இயக்குனர் சொல்லியிருக்கிறார். தனிமை, விரக்தி, தோல்வி ஆகிய சிக்கல்களில் நண்பர்கள், மருத்துவர்கள்,அக்கம்பக்கத்தார் ஆகியோரின் உதவி ஒருவனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் சொல்கிறார்.