ரசம்+ரசவாதம் = வேதியியல் – சு. பிரசன்ன வெங்கடேசன்
புத்தகம்: ரசம்+ரசவாதம் = வேதியியல்
ஆசிரியர்: ஆதி வள்ளியப்பன்
பதிப்பகம்: புக் ஃபார் சில்ரன்
(பாரதி புத்தகாலயம்)
மொத்த பக்கங்கள்: 63
விலை: ₹ 60/-
புத்தகம் வாங்க: http://thamizhbooks.com/
இந்தப் புத்தகம் செங்கையில் அறிவியல் இயக்கமும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்திய புத்தகத் திருவிழாவில் வாங்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் திரு ஆதி வள்ளியப்பன் பத்திரிகையாளர் ,சுற்றுச்சூழல், காட்டுயிர்கள், குழந்தைகள் சார்ந்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். உலகை அச்சுறுத்தி வரும் புவி வெப்பமடைதல் குறித்த ‘கொதிக்குதே கொதிக்குதே’, ‘: வாழ்வும் வீழ்ச்சியும்’, ‘எப்படி,எப்படி’, ,(அறிவியல் கேள்வி பதில்கள்) உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர்.
வேதியியல் துறையின் அஸ்திவாரம் சாதாரண மனிதர்களின் மாபெரும் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. உணவு உற்பத்தி, மூலிகை, மருத்துவம் போன்றவற்றின் மூலமாகத் தொடங்கிய வேதியியல், மற்ற துறைகளிலும் தாக்கம் செலுத்தி மனித வாழ்வை செழுமைப்படுத்தியது. இந்த நிலையில் காரியத்தைத் தங்கமாக மாற்ற முயற்சித்த இஸ்லாமிய ரசவாதிகளை, அறிவியலின் வரலாறு குறைத்து மதிப்பிடும் போக்கை பரவலாக காணமுடிகிறது.
ஆனால், வீட்டு அடுக்களையும் ரசவாதிகள் ஆய்வுகளும்தான் நவீன வேதியல் வளர்ச்சிக்கு வித்திட்ட முதல் ஆய்வுக்கூடங்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. நமது பண்பாட்டுக்கும் வேதியலுக்குமான தொடர்பு மிகப்பழமையானது.
கை மருத்துவம், சித்த மருத்துவம் பண்டை காலத்தில் இருந்து தொடரும் சுவையான, சத்தான சமையல் முறைகள் (நமது சமையல் 10 ஆயிரம் வருட பழமை கொண்டது என்கிறார்கள் நிபுணர்கள்) வேளாண் வழிமுறைகள் போன்ற அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது நமது சமூகத்துக்கும் வேதியியலுக்குமான தொடர்பு நீண்ட காலமாக இருந்து வந்து இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் இன்றைய சூழ்நிலையில் நமது சமூகத்தில் அறிவியல் மனப்பான்மைக்கும் சாதாரண மக்களுக்குமான இடைவெளி சற்று அதிகம் என்று என்ன தோன்றுகிறது.
பொருள்களைப் பற்றி புரிந்து கொள்ளுதல் அவற்றை பகுத்துப் பார்த்தால் இரண்டு பொருள்களை எந்த விதத்தில் சரியாக சேர்த்தால் புதிய பொருள் கிடைக்கும் என்ற புரிதல் போன்றவை தான் வேதியியலின் அடிப்படை. நமது மருத்துவ முறைகள் சமையல் முறைகளில் இதை தெளிவாக உணரலாம். நமது அம்மாக்கள் வைத்தியர்கள், விவசாயிகள் அனைவரும் நடைமுறையில் வேதியியலாளர்களாக இருந்திருக்கிறார்கள், இருந்து வருகிறார்கள் என்றால் அது மிகையல்ல!
பெரும்பாலான அடிப்படை அறிவியல் துறைகள் சாதாரண மக்களிடம் இருந்து தோன்றியவை தான். உலகம் முழுவதும் பகுத்தறிவு ரீதியில் சிந்திக்க ஆரம்பித்த சாதாரண மனிதர்கள் அறிவியலின் வளர்ச்சிக்கு தொடர்ச்சியாக பங்களித்து வந்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு மனிதனின் மனதிலும் உள்ள தேடல் உணர்வு, புதியன கண்டுபிடிக்கும் ஆவல், அறிவியல் சார்ந்த புரிதல் போன்றவை அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளன.
வேதியியலும் இப்படி பலரது பங்களிப்பால் வளர்ந்த ஒரு துறைதான். ஆனால் வேதியியலின் வளர்ச்சியைப் பற்றி பேசும் போது அதில் இஸ்லாமிய ரசவாதிகளின் பங்கை குறைத்துக் கூறும் போக்கை பரவலாக காணமுடிகிறது தமிழில் வேதியியல் பற்றி எழுதப்படும் எழுத்துக்கள் கூட ரசவாதிகளை திருடர்கள் போலத்தான் குறிப்பிடுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் காரியத்தை தங்கமாக மாற்ற அவர்கள் மேற்கொண்ட முயற்சி தான். அவர்களது நோக்கம் இன்றைக்கு தவறாக பார்க்கப்படுகிறது. ஆனால் காரியத்தை தங்கமாக மாற்றுவதற்காக புதிய புதிய பரிசோதனைகளை, பரிசோதனை முறைகளை அவர்கள் அனுபவபூர்வமாக கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் புதிய தனிமங்கள், பரிசோதனை முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இன்றைய நவீன வேதியல் ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் பரிசோதனை முறைகளுக்கு அவர்கள்தான் அச்சாரம் இட்டிருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மிகால் மேயரின் கட்டுரை இந்த விஷயத்தை மிகத் தெளிவாக கவனப்படுத்துகிறது. அன்றாட வாழ்வில் அறிவியலை கண்டுபிடிக்கும், பயன்படுத்தும் மக்களின் பங்களிப்பை அந்தக் கட்டுரை உரிய கவனம் கொடுத்துப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஏதோ எல்லா அறிவியல் துறைகளின் வளர்ச்சிக்கும் மேற்கத்திய,ஐரோப்பிய அறிஞர்களே காரணம் என்பது போன்ற ஒரு பிம்பம் வலுவாக ஏற்படுத்தப்பட்டு விட்டது. அத்துடன் பெரும்பாலான நவீன அறிவியல் வளர்ச்சிகள், கண்டுபிடிப்புகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாக அல்லாமல் பணத்தைக் குவிக்கும் இயந்திரமாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் நடைமுறை செயல்பாடுகளின் மூலம், அனுபவபூர்வமாக உருவான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான முக்கியத்துவம் குறைந்து போய், அறிவியலைப் புரிந்து கொள்வதிலும் அதை வளர்ப்பதிலும் மேல்தட்டு மக்களும் முதலாளிகளும் இறங்க, பெரும்பாலான அறிவியல் வளர்ச்சிகள் ஒரு சிலருக்கானதாக மட்டும் மாறி விட்டன என்பது மறுக்க முடியாத உண்மை.
அறிவியல் துறைகள் இப்படி சிலரது கட்டுப்பாட்டுக்குள் போக ஆரம்பித்த பிறகு உருவான கட்டுப்பாடற்ற, வரைமுறையற்ற வளர்ச்சி, இயற்கை வளச் சுரண்டலுக்கும் சுற்றுச்சூழல் சீரழிவுக்கும் வழிவகுத்து விட்டது. சுற்றுச்சூழல் சீரழிவிற்கு வேதியியல் ஒரு காரணமாக இருந்துள்ளது. ஆனால் வேதியியலை சரியாக புரிந்து கொள்வதன் மூலம், சரியாக பயன்படுத்துவதன் மூலம், நியாயமான, முழுமையான வளர்ச்சியை சாத்தியப்படுத்த முடியும் (இயற்கை வேளாண்மையும், சுற்றுச்சூழலும் செயல்பாட்டாளர்களும் வேதியியலை அப்படி பயன்படுத்த ஊக்கம் அளித்து வருகின்றனர்) இந்த நோக்கத்துடன் தான் 2011 ஆம் ஆண்டை சர்வதேச வேதியியல் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு அறிவித்திருந்தது.
ரஷ்யாவில் இருந்து வந்த குழந்தைகளுக்கான அறிவியல் புத்தகங்களும் அறிவியலை சாதாரண மனிதர்களுக்கு சொன்ன புத்தகங்களும், பலரது அறிவியல் ஆர்வத்திற்கு தீனி போட்டிருக்கின்றன. அறிவியல் ஒரு வேப்பங்காய் அல்ல என்றும் சுவாரசியமாக சொன்னால் எந்தத் துறையைப் பற்றியும் எளிமையாக புரிந்து கொள்ள முடியும் என்றும் உணர்த்தியவை அவை அந்தப் புத்தகங்கள்.
மேலும் அறிவியல், வரலாறு, சுவாரசியங்கள் சார்ந்த புத்தகங்களை நிறைய படித்து நம் அறிவுத் திறனை அனைவரும் மேம்படுத்திக் கொள்வோமாக.
தோழமையுடன்,
சு. பிரசன்ன வெங்கடேசன்