Posted inPoetry
இரவிக்கை அணியாதவளின் வீடு கவிதை – ஸ்ரீதர்பாரதி
அழகிய வீடொன்று வரைய நெடுநாள் அவா
நேற்றுதான் வாய்த்தது நேரம்
கைமுறுக்கு கோலமிட்ட வாசல்
கயிற்றுக் கட்டிலிடும் படியாக இரு திண்ணைகள்
அகல் விளக்கேற்றும் படியாக இரு மாடங்கள்
மஞ்சள் குங்குமம் பூசிய மரக்கதவு
மரக்கதவில் சில மணிகள்
கூடவே அன்னப்பட்சியின் புடைப்புச் சிற்பம்
யாவும் வரைந்தும் நிறைவில்லை கடைசியாய்
கதவில் ஊசலாடும் கால்சராய் சிறுவனையும்
ஸ்தனங்களுடன் காசுமாலை சரடு
ஊசலாட திருகை சுழற்றும்
இரவிக்கையணியாதவளையும் வரைந்து முடித்தேன்
எங்கே இப்போது சொல்லுங்கள்
எப்படி இருக்கிறது வீடு