நூல் அறிமுகம்: இந்திரஜித்தின் ரயில் – து.பா.பரமேஸ்வரி

நூல் அறிமுகம்: இந்திரஜித்தின் ரயில் – து.பா.பரமேஸ்வரிஆயிரமாயிரம் வரலாற்று சம்பவங்களும் அசம்பாவிதங்களும் கடந்து வந்த கருப்பு சரித்திரங்கள் ஏராளமானவை. பார் எங்கிலும் வாழ்ந்த இந்தியக் குடிகளின் கண்ணீர் காலங்கள் பல மறைக்கப்பட்ட பக்கங்களின் வரிகள். வேறு சில இருட்டடிப்பு செய்யப்பட்டு மக்கள் வெளிக்கு வராமல் மறைந்தன. இன்னும் பல காலத்தாலும் கண்டுபிடிக்க முடியாமல் பூமிக்குள் புதைக்கப்பட்டன. அநேகங்கள் தீயின் வேள்வியில் பொசுங்கி காற்றுவெளியில் கலந்துவிட்டன இன்றைய நம் வரலாற்று புத்தகங்களில் புனைவுகளில் வெறும் நினைவுச் சின்னங்களாய் வாசிக்கவும் உச்சுக் கொட்டி விட்டுக் கடந்துப் போவதற்கான அரிச்சுவடியாய் மாறிப் போயின.

அசலில் உலகில் ஒவ்வொரு மூலையிலும் இந்தியர்களுக்குக் குறிப்பாகத் தமிழர்க்கு இழைக்கப்படும் அவலங்கள் என்பது பொறிக்கப்பட்டு பாதியும் எரிக்கப்பட்ட மீதியும் என சொல்லி அழ துயரங்கள் கோடி. இலங்கையில் ஈழத் தமிழர் தொட்டு ஆசியாவில் பெரும்பாலான இடங்களில் வாழ்ந்தத் தமிழ்க் குடி மக்கள் எப்போதும் இன்னல்களோடும் அச்சங்களோடும் அடிமை வாழ்க்கையுடனும் வாழ்ந்து மடிந்துள்ள வரலாறுகள் நாம் அறிந்ததே.

ஆங்கில அடிமை சாசன காலங்களில் இந்திய தேசத்தில் குறிப்பாக தமிழகத்தில் மறைந்து மாண்ட தமிழர்கள் ஒருபுறம் இருக்க இன்றும் இலங்கையில் தமிழர்கட்கு விடிவு காலம் என்பது எப்போதும் கானல் நீராக இருந்து வருகிறது.  உலகப் போர்களின் வரிசையில் யுத்த காலங்களில் உலகிலுள்ள  மனிதர் அனைவருக்குமான அச்சங்கள் ஏற்படுத்தக்கூடிய மரண காலங்கள். நமக்கான திடுக்கிடும் நினைவுகளும் மரண ஓலங்களும் மங்கையர் அவயக்குரல்களும் அகில வரலாற்றின்பேரிரைச்சல். செந்நீர் சிதறிய போர்க்களங்ளும் சதைத் துண்டுகள் கிடக்கும் யுத்த பூமிகளின் கதறல்களும்  சொல்ல மாட்டாது அழுது புலம்பும். ஒவ்வொரு வெற்றிக்கும் தோல்விக்கும் பின்பான மனித உயிர்களின் நேரடியான உயிர் இழப்பும் மறைமுகமான அர்ப்பணிப்பும் சுதந்திரத்திற்கு முன்பாகவும் பின்பாகவும் உருவாக்கப்பட்ட பல்வேறு வசதிகளும் திருத்தங்களும் சீரமைப்புகளும் நவீன அறிவியல் மாற்றங்களும் இன்று நாம் அனுபவிக்கும் நவீனத்துவ சொகுசுகளுக்குப் பின்பான நிழல்களாக பல மனித உயிர்களின் வியர்வை நீரும் உயிர் தொலைத்த செந்நீரும் ஏராளம்.

பாறை உடைந்து தலையில் விழுந்து செத்தவர்கள், பன்றி அடித்து செத்தவர்கள், பாம்பு கடித்து செத்தவர்கள், அடிவாங்கி செத்தவர்கள், சாப்பிடாமல் செத்தவர்கள், சாப்பிட்டு செத்தவர்கள் கொசு கடித்து செத்தவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள் என இன்று நாம் கொண்டாடும் ஒவ்வொரு சுகமான நவீன உபகரணங்களும் சீரிய நடைபாதைகளுக்கும் செம்மையான பயண வசதிக்கும் என நம் சொகுசு வாழ்விற்கு பின்பான பல மனிதர்களின் குடும்பங்கள், உறவுகள், பெற்றோர்கள் பிள்ளைகளின்  கண்ணீர் கதைக்கும்.

உறவை இழந்துத் தவித்த அவலங்களும் மனித சடலங்களின் ஏக்கங்களும் வெறும் நெஞ்சாங்கூடு மட்டுமே உடலில் மிஞ்சி நாறும் தோலுமாய் சதைப்பற்றற்ற சத்தற்ற மனிதப் பிண்டங்கள் ஜீவனிழந்த ஆவிகளும் இன்றும் ஒவ்வொரு ரயில் தண்டவாளங்களில் உரசும் இரயிலின் ஓசையில் சக்கரங்களைப் பிடித்து இறந்த உயிரை உறவை உடமையை திருப்பிப் பெற மன்றாடும்.

அப்படியான 80,000 தமிழர்கள் மடிந்த சயாம் மரண ரயில்வே சரித்திரத்தின் பின்புலம் உயிர்களின் வதைகளையும் அடித்து நொறுக்கப்பட்ட பல மனிதர்களின் வலி ஒச்சைகளையும் உறவைத் தேடித் திரிந்துப் பித்துப் பிடித்த மக்களின் ஓலங்களையும் கொண்ட இருண்ட நினைவுகள். உலகத்தின் அனேகர் அறியப்படாத அது ஒரு கருப்பு சரித்திரம். சுதந்திரப் போராட்டத்தியாகிகளைக் காட்டிலும் உலகில் இவர்களைப் போன்ற பல தியாகிகளின் உயிர்துறப்புப் பரந்த  வெளிக்கு வராமல் மறைக்கப்பட்டது. இதுபோன்ற இருட்டடிப்பு அசம்பாவிதங்களை உலகறியச் செய்ய பல இலக்கிய எழுத்தாளர்கள் எண்ணில்லடங்கா மெனக்கிடல்களை உழைப்பை நேரங்களை சிரத்தையைப் பணயமாக வைத்து உலகறியா சம்பவங்களைத் தமது கூரிய மைக்கோல் எழுத்தின் வழியே வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து விரியப்படுத்தியுள்ளனர்.  எழுத்துதாரிகளின் மெனக்கெடல் இல்லையெனில் நமக்கு பல சரித்திரங்கள் சம்பவங்கள் மறைக்கப்பட்டிருக்கும். உலக வெளியில் மறந்தே போயிருக்கும். சாமானியர்களல் வெறும் சரித்திரத்தை ஆராயவும் குறித்து வைக்கவும் மட்டுமே முடியும். ஆனால் ஒரு ஆகச்சிறந்த இலக்கியவாதிகளால் மட்டுமே தமதுப் படைப்பின் வழியே புனைவின் ஊடே மக்கள் பார்வைக்கு இப்படியான மறைக்கப்பட்ட பக்கங்களைக் கொண்டு வந்துச் சேர்க்க முடியும்.  ஆச்சரியங்களோடும் சுவாரஸ்யங்களோடும்  காட்சிப்படுத்த முடியும். வித்தியாசமான பார்வை தான் ஒரு சாதாரண மனிதனையும் ஒரு சமூக சிந்தனை கொண்ட எழுத்தாளனையும் வேறுபடுத்தியும் வித்தியாசப்படுத்தியும் காட்டுகிறது.

சிங்கப்பூரிலிருந்தும் மலேசியாவிலிருந்தும் சயாமிலிருந்தும் ரயில் பாதை அமைக்க ஜப்பானியர்களால் அடிமைகளாய் அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களின் வதைகளை வலிகளை வெவ்வேறு உணர்வுகளைச் சுமந்து மடிந்துபோன அவர்களின் ஜீவனை எழுத்தாக்கி கவிதைகள் சிறுகதைகள் கட்டுரைகள் நாவல்கள் என்று தமது இலக்கியப் பயணத்தை அனைத்து தளங்களிலும் உலவச் செய்த நூலாசிரியர் தோழர் இந்திரஜித், தமிழர்களின் கண்ணீரைத் தமது ரயில் நாவல் வழியே கடத்துகிறார்.

புதினம் கற்பனையை நம் வசதிப்படி துணையாக்கிக் கொள்ளும் வாய்ப்பைத் தரவல்லது. ரயில் கற்பனையும் புனைவும் சுவாரஸ்யங்களும் காதலும் கலவரமும் என உணர்வுகளின் உணர்ச்சிப் பிரவாகமாக வளைந்து நெளிந்து பயணித்தாலும் அசலில் இதன் மையம் என்பது சயாம் மரண ரயில் பாதையின் ஆயிரக்கணக்கானோரின் கரங்களைச் சுமந்து செல்கிறது. இன்று மட்டுமல்ல உலகில் எந்த ரயில்வே பாதையின் இரும்புத் தண்டவாளத்தை நாம் கூர்ந்துற்றாலும் அவற்றைச் சீரமைக்க உருவாக்கிய உயிர்கள் பயணிகளாக நம்முடன் இன்றும் பயணித்து தான் வருகின்றனர்.

புதினத்தின் கதாநாயகன் நாயகி என்று குறிப்பிட்டு அடிக்கோலிட்டுச் சொல்ல ஜோடிகள் அனேகம் உள்ளன. தமது மண்ணிலிருந்து தரதரவென வலுக்கட்டாயமாக இழுத்து வந்து கொத்தடிமைகளாக வருடக்கணக்கில் பாடுபடுத்திய ஒவ்வொரு ஆடவனும் நாயகனே. தலைவனைப் பிரிந்து உயிரோடு இருக்கிறாரா  இல்லையா என்ற மனப் போராட்டத்திலும் உளச்சலிப்பிலும் பேரச்சத்திலும் குறுகி வாழ்வையும் வாழ்நாளையும் எண்ணிக்கொண்டிருந்த ஒவ்வொரு மனைவியும் காதலியும் நாயகிகளே.

ஆனால் புதினத்தில் வெகுவாக உலவி வரும் பாத்திரங்களைப் பற்றியும் அத்தனை ஆயிரம் அப்பாவிகளின் அவய குரல்களின் ஒட்டுமொத்த ஒலியாக வதைகளின் வலியாக அடிக்கோலிடப்பட்டு முன் வைத்துப் புனைந்திருக்கும், பேசும் பாத்திரங்களாகச் சிலவற்றை நாவலில் ஊடாடவிட்டும் வாழ்க்கையின் பாடுகளைக் காட்சி மயமாக்கியும் அப்படியான வதைகளைச் சுமந்த மாந்தர்களை வாசக மனதிற்குள் இன்றும் உலாவவிடும் ஒவ்வொரு துர்சம்பவங்களும் ஏற்பட்ட கீறல்களின் ரணங்களை ஆற்றவியலா வலிகளைப் புதினங்களின் பக்கங்கள் கண்ணீர் வடிக்கின்றன.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் வரலாற்றில் மறைக்கப்பட்ட பக்கங்களில் ஒன்றான சயாம் மரண ரயில் பாதையின் துயரச் சம்பவங்களை மனித அவயங்களின் அலறல்களைப் பிரதிபலிக்கிறது புதினம். ஜப்பானியர்களால் மலேசியாவிலிருந்தும் சிங்கப்பூரிலிருந்தும் நிர்ப்பந்தமாக இழுத்து வரப்பட்ட தமிழர்களுக்கும் வேறு சில அயல் நாட்டவருக்கும் நிகழ்த்தப்பட்ட அநீதியை கூவுகிறது ரயில். ஒருபுறம் உலகம் முழுவதிலும் தமது அதிகார ஆதிக்கத்தை செலுத்தி வந்த ஆங்கில அரசுக்கு எதிரான ஒரு போர் குரலின் நீட்சியாக இந்த ரயில் பாதையின் கட்டமைப்பு அவசியம் என்ற நியாயத்தை முன்வைத்தாலும் மனித உயிர்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வையும் உயிரையும் குடித்த ஜப்பானியர்களின் அடக்குமுறை ஆதிக்க ஆக்கிரமிப்பு என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று . இது ஒரு அடக்குமுறை அரசியல் என்றும் கூறலாம்.

சுபாஷ் சந்திரபோஸ் ஜப்பானியர்களுக்கு ஆதரவாக போரில் பங்கேற்றார் என்கிற வரலாற்றுத் தகவல்கள் பதிவிட பட்டிருந்தாலும் தமிழர்களுக்கு இப்படியான வன்மக் குரூரம் உலகின் ஒரு மூலையில் நடக்கும் பட்சத்தில் மக்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய தேசியத் தலைவர் அமைதி காத்தது என்பதோ அல்லது அவர் காதுகளுக்கு தமிழர்களின் கதறல்கள் எட்டவில்லை என்பதும் வரலாறு சுட்டிக்காட்டும் அரசியல். தேச தலைவர்கள் கூட தமது காரியத்தை முன் நிறுத்தும் பட்சத்தில் மக்களின் உயிரையும் உறவுகளையும் பறித்து அரசியலாக்குவது என்பது ஆதிகாலம் தொட்டு இன்றைய காலம் வரை இருந்து வருகிறது.

ஜப்பானியர்களால் வம்பாக ரயில் பாதை அமைக்க இழுத்து வரப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கும் வெள்ளையர்களுக்குமான கண்ணீரைச் சுமந்து இந்தக் காலங்களை எவ்வாறு கடக்க போகிறோம் என்ற மக்களின் கேள்விக்குறியுடன் துவங்குகிறது புதினத்தின் அத்தியாயம். தொடரும் அத்தியாயங்கள் ஒவ்வொரு தமிழனின் குடும்பக் கண்ணீரை தூக்கிக்கொண்டு ஒலிக்கிறது . பரவலாக புதினமெங்கும் ஊடாடும் பல இளம் ஜோடிகள் .ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் ஒவ்வொரு ஜோடியையும் நாவலின் தொடக்கத்தில் பிரிந்தவர் இறுதிவரை ஒரு ஜோடியையும் தம்மிணையுடனும் குடும்பத்துடனும் சேர்ந்ததாகப் பதிவிடவில்லை.

ஒவ்வொரு தம்பதியரும் காதல்ஜோடியும் பிரிந்த வாக்கிலேயே நாவல் முற்றுப்பெறுகிறது .ஒவ்வொரு பிரிவின் துயர ஆதியும் துக்க அந்தமுமாகவே முற்றுப்பெறுகிறது . துரை ரபேச்சா காதல் தம்பதியர் முதற்கொண்டு சாம்பா வசந்தா தொடர்ந்த புதினம் கிருஷ்ணன் விஜயா உடன் கிரோஷி யூக்கோ முடிய இத்தனை இணைகளைச் சுமக்கிறது நாவல். இதில் ஒன்று கூட இறுதிக்கட்டத்தில் சேரவில்லை என்பது சற்றே விசனம்.

ரபேச்சா  துரை திரும்ப மாட்டான் என்று நினைத்து  கணேசனை மறுமணம் செய்து கொள்கிறாள். பாதை கட்டுமானப் பணியில் கிராமத்து அழகிய சிட்டாக அபின்யா துரையைக் காதலிக்கிறாள். சலனத்தில் சற்றே உழன்றாலும் மனைவியின் மீதான  அதீத காதல் அபின்யாவை விட்டு விலகி விடுகிறான் துரை. இறுதிகட்ட முடிவில் அங்கிருந்துத் தப்பித்து அவாங் என்கிற மலாய் வாசியிடம் தஞ்சம் புகுகிறான். அவாங் துரையை காட்டில் வசிக்கும் தமது சீன மாமியாரிடம் அடைக்கலமாக ஒப்படைக்கிறான் . இயற்கைச் சூழலும் பாட்டியின் பேரன்பும் துரையை ஆட்கொள்ள வீட்டிற்கு போக மனமில்லாமல் அல்லாடுகிறான். ஆங்கிலேயர் ஜப்பானின் மீது குண்டு வீசியதை அவாங்  கூறி இனி ஆபத்தில்லை  சொந்த ஊர் திரும்பச் சொல்ல சற்றும் விருப்பமின்றி வலுக்கட்டாயமாக மனைவியையும் மகன் மணியையும் பார்க்க செல்கிறான்.

இறுதியில் ரபேச்சாவின் மறுமணத்தால் ஏமாற்றம் கொண்ட துரை சித்தம்  கலங்கி  பித்துப்பிடித்து ஓடுகிறான். அடுத்த நாயக அந்தஸ்து சாம்பா பெறுகிறான். பார்க்க ஆள் வாட்ட சாட்டமான கட்டுமஸ்தான உடற்கட்டு. ரயில் பாதை பணியில் வம்பாக இழுத்து வரப்பட்டவன். தன்னை விட வயதில் மூத்தவளான வசந்தாவைக் காதலிக்கிறான். கடும் முன் கோபி.  ஜப்பானியர்களை அடித்து துவம்சிக்கத் துடிப்பான். துரையின் அறிவுறுத்தலால் அமைதிக்காப்பான்.‌ சில காலங்களுக்குப் பிறகு ரயில் பாதை அமைப்பதில் சாம்பாவின் தீவிரம் கூடியது. கடின உழைப்பாளி. சயாமில் சாம்பாவும் துரையும் முத்துவும் நெருங்கிய நண்பர்கள்.

ஒருநாள் மரம் வெட்டிக் கொண்டிருக்கும் போது வசந்தாவின் நினைவில் லயித்திருந்த அவன் ஜப்பானிய சிப்பாய் கிரோஷி சாம்பாவைப் பிட்டத்தில் வேகமாக அடிக்க அதிர்ச்சியில் சற்றே கோடாரியை கவனிக்காமல் திருப்ப கிரோஷியின் அடிவயிற்றில் கோடாரி இறங்கி வெட்டுப்பட்டு குடல் சரிந்துக் குருதி கொட்ட வேகமாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டான் கிரோஷி. ஒரு சில நாட்களில் இறந்தும் போனான்.

இத்தனை வேதனையின் மத்தியிலும் வெறும் போர்த்திய தோலுடன் நெஞ்சாங்கூட்டு எலும்பின் துருக்கிய நிலையிலும் சாம்பாவிற்குக் காட்டில் கிடைத்த காதல் மலராய் கொரிய பெண் ஒருத்தி. சிப்பாய்களால் அவர்களின் தனிப்பட்ட வேட்கைக்காக கொள்பொருளாக அழைத்து வரப்பட்ட ஏராளமான கொரிய பெண்களில் ஒருவளாக  அவள்.சாம்பா மீது அதீத காதல். சாம்பாவின் மனம் சற்றே தடுமாறினாலும் வசந்தாவின் நினைப்பே அவனை அதிகமாக வாட்டியது.

போதுமான உணவில்லை அழுகிய காய்கறி புழுத்த அரிசி என நாளுக்கு நாள் பணியாளர்களின் உடல் ஆரோக்கியத்தின் சீர்கேடு தொடர ஆரம்பித்து. சத்தின்றி அநேகர் இறக்க குவியல்களாக எரித்தும் புதைத்தும் மனித அடிமைகளின் பிணங்கள். நோய் தொற்றுப் பரவ மேலும் பலரின் மரணங்கள் சாம்பாவையும் துரையையும் பிற பணியாளர்களையும் அலைக்கழித்தன.

முத்து பாத்திரம் புதினத்தில் வெகுவாக பிரவேசிக்கா விட்டாலும் ஆரம்பம் முதற்கொண்டு அங்கிருந்து தப்பித்து ஓடவே முயல்கிறான். பலமுறை தப்பித்து ஜப்பானிய சிப்பாய்களிடம் மாட்டிக்கொண்டு உதைகப்படுகிறான். காயங்களின் ரணம் ஆறும் முன்னர் மீண்டும் ஓட்டம். நாவலின் மையம் ஒன்றில் முத்து தப்பித்து மாட்டிக் கொண்டதாக காட்சிப்படுத்தும் நூலாசிரியர் முத்துவிற்கு அதன்பின் என்ன நேர்ந்தது என்பதை விளக்க மறந்தார்.

புதினத்தின் மற்றொரு கதை மாந்தராக கிருஷ்ணன். ஜப்பானியர்களால் குண்டுகட்டாகத் தூக்கி வரப்பட்டு அடித்து உதைத்து துன்புறுத்தப்படுகிறான்.  அம்மா சாந்தகுமாரிக்கு ஒரே பிள்ளை. விஜயாவை உயிருக்குயிராக காதலிக்கிறான். பணியில் அவ்வப்போது விஜயாவின் நினைவில் தன்னையே நொந்து கொள்வான். இவருடைய பாத்திரத்தையும் நூலாசிரியர் ஒரு சில அத்தியாயங்களில் சில பக்கங்களில் மட்டுமே காட்சிப்படுத்துகிறார். அவனது பாத்திரமும் முடிவற்றதாகவே தொலைந்துபோனது.

பக்கங்களில் தொடரும் கதைக்களத்தில் அப்பா சுப்பிரமணி மனைவி வத்சலா சில அத்தியாயங்களில் வந்து போகின்றனர். அன்றைய ஆங்கிலேய ஆட்சியில் சுப்பிரமணியம் அவர் தந்தை இராமசாமி போன்ற ஆங்கிலேயருக்குத் தாளம் போட்டு ஆங்கில பெருமையை பேசிக் கூழைக் கும்பிடுப் போட்டு சொத்துச் சேகரிப்பு செய்தவர்கள் ஏராளமானோர் இருந்து வந்ததை சுட்டிக் காட்டுகிறது நாவல்.

இராமசாமி கும்பனியில் பணிபுரிந்து வெள்ளையருக்கு ஊழியம் செய்தவர். கும்பனியில் பணி புரிபவதைப் பெருமையாகக் கருதுகிறார் மகன் சுப்பிரமணி. துரையை இறந்து விட்டாதக் கூறி ரப்பேச்சாயாவிற்கு தனது தகுதிக்கு தகுந்தாற்போல கணேசனை மறுமணம் செய்து வைப்பதும் அவரே. இது போக ரவீந்திரன் சார், புருஷோத்தமன், மன்டோர், அம்பலவானர், தளபதி யமாக்கா போன்ற பாத்திரங்களும் புதினத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தேவைக்கேற்ப உலவி வருகின்றன.

அதிகமான பாத்திரங்களின் நடமாட்டம் வெகுவாக வாசகனை குழப்பமடையச் செய்யும் வாசகத் தளத்திலிருந்து விலக்கி விடும் என்பதை நன்கு உணர்ந்த நூலாசிரியர் வாசகனின் கவன ஈர்ப்பை கருத்தில் கொண்டு மனதில் நிறுத்தி வைக்கும் அளவிற்குப் பாத்திரங்களைப் புகுத்தியுள்ளார். இது நாவலுக்குக் கூடுதல் சிறப்பு.

சொல்லாடல்கள் போன்ற ஆசிரியரின் மாறுபட்ட உவமை உருவக வாக்கியங்கள் நாவலுக்கு இன்னமும் மெருகு கூட்டுகிறது.

“முன்னங்கால் வலிமையை நம்பும் எருமை பின்னங்கால் வழுக்கி செல்வதை உணராது.”
“ஒருமுறை வந்தால் கடவுள் அவ்வப்போது வந்தால் மனிதன். தொடர்ந்து வந்தால் நாய்!!.”
“இருட்டும் தனிமையும் எப்போதும் சித்தபிரமைக்குப் பொருத்தமான சூழலை உருவாக்குகின்றன.”
மனித உளவியலையும் மனித மனோபாவங்களையும் அனேக இடங்கள் பேசுகின்றன.

“மனம் எப்போதுமே ஏக்கத்தில் சுகம்  காண்கிறது .ஏக்கம் கலைந்தப் பின் புதிய ஏக்கத்துக்குத் தயாராகிவிடுகிறது.”

கணவனின் ஆதிக்க உணர்வு மனைவி என்பவள் மீது எப்போதும் திணிக்கப்படுவதை கதைக்கிறது நாவல். பெண்ணின் உணர்வுகளையும் கருத்துக்களையும் பெருக்க விடாமல் அடங்கியிருக்க வேண்டும் என்பதை சுப்பிரமணியத்தின் வழியே ஒட்டுமொத்த கணவன்மார்களின் ஆதிக்க உளவியலை பேசுகிறது. துயர காலத்தில் மனைவியின் ஆறுதல் தேடுவதும் கணவனின் கண்ணீர் மனைவியை சற்றே மகிழ்ச்சிக்கு ஆட்படுத்துவதும் அடக்கி வைக்கப்பட்டும் மனதின் உளவியல் வெளிப்பாடு. இதுநாள் மட்டும் வாழ்ந்த பெரும்பாலான் மனைவிகளின் பெருக்கப்பட்ட மனநிலையை இயல்பாகவும்‌ அப்பட்டமாகவும் எடுத்துக்காட்டுகிறது. எதையும் அடக்க முற்படும் போது வெறுமையையே வெளிப்படுத்தும் என்பதை சுட்டுகிறது நாவல். மனித மனங்களின் அழுத்தங்களை உளவியல் சிக்கல்களை ஆங்காங்கே பதி விடுகிறது நாவல்.

“மனைவியை மதிப்பவன் கணவன் அல்ல கணவனை மதிக்காத மனைவி அல்ல.” என்கிற காலம்தொட்டு பின்பற்றப்படும் தமிழ்க்குடிப் பண்பாட்டின் அடிமை சாசனமான மனுநீதியை அப்பட்டமாகச் சாடுகிறது. நாவலை வாசிக்கும் கணங்கள் நம் தமிழகத்தின் மெட்ரோ ரயில் பாதை அமைப்பின் வடக்கத்தி மக்களின் வாழ்வியலை நினைவூட்டுகிறது. குடும்ப உறவுகளைப் பிரிந்து பல வருடங்களாக இங்கே பணிபுரியும் அவர்களின் அவஸ்தை நாவலின் பக்கங்களில் உணர்வுபூர்வமாக விரியப் படுத்தியுள்ளார் நூலாசிரியர.

“நிலத்தை விட்டு இன்னொரு நிலம் நோக்கி போகும் போது மனதில் ஏறி அமர்ந்து பூமி தனது பாதத்தால் பலம் கொண்ட மட்டும் அழுத்தும். அப்போது மூச்சு விடுவது சிரமமாக இருக்கும்.” இயற்கை எழிலை பல காவியங்களும் இலக்கியங்களும் வர்ணணைகளாக உருவகப்படுத்தி கொண்டாடியுள்ளனர். புதினத்தின் படைப்பாளி இந்திரஜித் அவர்கள் இயற்கையின் வடிவை முற்றிலும் மாறுபட்ட வகையில் கொண்டாடியுள்ளார். இயற்கை அன்னையின் எழில் திராபகக் கதவாய் திறக்கிறது புதினத்தில். இப்படியும் காட்சிப்படுத்த  முடியுமா என்கிற அளவிற்கு வியப்பைக் கூட்டுகிறது.

“நஞ்சுண்டு மாண்டது போல் வானம் நீல கைகளை அகல விரித்தபடி படுத்திருந்தது. நிழல்களை துரத்தியபடி அங்கங்கே வெளிச்சங்கள் ஓடிக்கொண்டிருந்தன. நிலவின் உள்ளங்கால் மட்டும் தெரிந்தது.” இயற்கையின் படைப்புகளை மனிதன் மெல்லமெல்ல அழிக்கும் துர்பாக்கிய நிலை இன்றைய இருபதாம் நூற்றாண்டு வரை தொடர்ந்து வருகிறது. சிட்டுக்குருவி போன்ற எண்ணற்ற புல்லினங்கள் முதல் தேனீக்கள், கடல் உயிரினங்கள் என அழிவின் வரிசைகள் நீண்டு வருகின்றன. இதில் ஆமை இனத்தின் அழிவு மனிதகுலத்தின் சாபம் .ஆமை முட்டைகள் மனித எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் என்கிற மருத்துவ கருத்தின் அடிப்படையில் ஆமை கடலோரத்தில் மண்வீடு கட்டி முட்டையிட்டு பாதுகாத்து வரும் முட்டைகளை மனிதர்கள் களவாண்டு எடுத்துச் செல்வதை வன்மையாகக் கண்டிக்கிறது நாவல். ஆமைகளின் வாழ்வியலை சில பக்கங்கள் இயற்கைவியலாய்ப் பேசுவது அழகு. மனித வாழ்வின் அடிப்படை தாத்பரியமே நம்பிக்கை.

நம்பிக்கை இழந்தவன் உடுக்கை இழந்தவன் கைபோல என்கிறது ஆன்றோர் வாக்கு.மனித நம்பிக்கையை பலப்படுத்தும் கைங்கரியம் உணர்ந்த இயற்கை, சிலந்தி போன்ற உயிரினங்களைப் படைத்து வாழ்வியல் பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறது. நாவலாசிரியரும் சிலந்தியால் பின்னப்படும் அன்பின் மகத்துவத்தைப் பிரயத்தனத்தை தொடர் முயற்சியின் வலிமை, நுட்ப அறிவின், தீவிர அவதானிப்பின் ஒருங்கிணைந்த இயற்கையின் வேலைப்பாடே சிலந்திவலை. இதன் உருவாக்கத்தின் ஒவ்வொரு படிநிலையும் மனிதனின் ஒவ்வொரு  கண்டுபிடிப்பின் அதிசயங்கள். ஒவ்வொரு செயலிலும் அதீத கவனநிலையை உயிரினங்கள் மேற்கொள்கின்றன என்கிற இயற்கை கோட்பாட்டை தத்துவ விதியை பறைசாற்றுகிறது நாவல். படைப்பிற்கு பின்பான யோகநிலை ஒருவித பூரணத்தை உண்டுபண்ணும் என்பதே சிலந்தியின் வலை பின்னும் செயல்பாட்டிற்கான போதனை. தியானத்தின் தத்துவத்தை உணர்த்துகிறது சிலந்தி.

“நூல் வீசிய களைப்பு அடங்க கண்மூடி தியானத்தில் ஈடுபட்டது. தியானத்தின் போது உலகத்தில் உள்ள எல்லா கடவுள்களும் சிலந்தியின் வயிற்றுக்குள் வந்து தஞ்சம் அடைகின்றனர்.” பத்தொன்பதாம் நூற்றாண்டின் வாழ்வியல் நடைமுறையைக் காட்சிப்படுத்துகிறது புதினம். மனித நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள், நாகரீகம், ஆங்கில மோகம், தீவிரக் காதல், பெருக்கப்பட்ட மன உணர்வுகளின் அதீத உணர்ச்சிப் பிரவாகம், கணவனுக்கு அடங்கும் மனைவி, பெற்றோர் சொல் தட்டாத பிள்ளை, தமிழ் இனத்திற்கே உரித்தான முரட்டுத்தனமும் அடங்கமறுத்தலும், தேசிய அரசியல் உலகளாவிய அரசியல் என புதினம் முழுதும் நம்மை நூற்றாண்டுகளைக் கடத்தி பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. அடிமை வாழ்க்கையையும் ஆதிக்க மனோபாவம் கொண்ட ஆட்சியையும் ஆங்கிலேயர் விட்டுச் சென்ற கலாச்சாரம் இன்றும் தாயகத்தை விட்டு அகலவில்லை. சொந்த மண்ணை விடுத்து அயல்நாட்டில்  அல்லல் படும் மக்களின் அவலத்தை பேசுகிறது. ஒன்றிய அரசின் மேற்கத்திய அரசியலை ஒப்புமைப்படுத்துவதாக விளங்குகிறது. எளிமையான மொழிக் கோர்வையில் பயணிக்கிறது ரயில்.

அத்தியாயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக எந்த வித குழப்பம் இன்றி நாவலின் புனைவையும் கதையின் நகர்தலையும் தெளிவாக்கிக் கொள்ளும் வகையில் எடுத்துச் செல்லப்படுகிறது. மறைந்துபோன வரலாற்று மறைக்கப்பட்ட சரித்திரத்திற்கு மீன்புனைவு அளித்து எழுத்தின் சாரம் வாசகனை கதைக்களத்தில் இருத்தி வைக்கிறது. காட்சிக்குள் புகுத்தும் படியான புனைவு வடிவமைப்பு சயாம் போய் திரும்பி வந்த நிறைவைத் தருகிறது ‌அங்கு வாழ்ந்த  தமிழர்களுடன் லயிக்கச் செய்தது.  அவர்களின் வாழ்வியல் களைப்பை உணரச் செய்கிறது. இனி ஒவ்வொரு ரயில் பாதையை கடக்கும் நிமிடங்கள் அதன் படைப்பாளிகளை நினைவுகூர்ந்து அவர்களுக்கான சில கண்ணீர் துளிகளை அஞ்சலியாக்கும் மனநிலையை உண்டுபண்ணியது. இப்படியான ஒரு சரித்திர சம்பவத்தை கைக்கொண்டு புனைவைக் கூட்டி புதினமாக்கிய எழுத்தாளர் இந்திரஜித் அவர்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துகள்.

– து.பா.பரமேஸ்வரி

நூல்: ரயில் 80,000 தமிழர்கள் மடிந்த சயாம் ரயில்வே
ஆசிரியர் : இந்திரஜித்
விலை: ரூ.150/-
பக்கம்: 152
பதிப்பகம் : தங்கமீன் பதிப்பக வெளியீடு
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924