Rayile Rayile Book By S. Harikrishnan and Dr. P. Sasikumar Bookreview By P. Ilangovan நூல் மதிப்புரை: சு. ஹரிகிருஷ்ணன் மற்றும் முனைவர் பெ. சசிக்குமாரின் ரயிலே ரயிலே – பா. இளங்கோவன்

நூல் மதிப்புரை: சு. ஹரிகிருஷ்ணன் மற்றும் முனைவர் பெ. சசிக்குமாரின் ரயிலே ரயிலே – பா. இளங்கோவன்

குழந்தையின் மொழியில் அவர்களுக்குப் புரியுமாறு ஒன்றை விளக்கிச் சொல்வதற்க்கு அசாத்தியத் திறமை வேண்டும். அந்தத் திறமை வாய்த்திருக்கிறது இந்த நூலாசிரியர்கள் திரு. சு. ஹரிகிருஷ்ணன் மற்றும் முனைவர். பெ. சசிக்குமார் இருவருக்கும். “ரயிலே ரயிலே” – என்ற தலைப்பில் தொடர்வண்டியின் வரலாறு, அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை இத்தனை எளிமையாக தமிழ் மொழியில் சொன்ன புத்தகத்தை நான் இதற்குமுன் வாசித்ததில்லை.

பழங்குடிக் கிராமத்து பத்தாம் வகுப்புச் சிறுவனின் பார்வையில் மொத்தப் பயணமும் அமைந்திருக்கிறது. கூடவே நாமும் பயணிக்கிறோம். கோவை ரயில் நிலையத்தில் தொடங்கும் பயணம் டெல்லி வரை சென்று முடிகிறது. அறியாமையே வரம் என்பதற்கு ஏற்ப முதன் முதலாக ரயில் பயணம் செய்யும் அந்தச் சிறுவனின் கோணத்தில் எழும் கேள்விகள் எல்லாம் ரயில் குறித்த ஒட்டுமொத்த எல்லோருக்குமான புரிதலுக்கு வாய்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது. கேள்வி பதில் வடிவில் மொத்தப் புத்தகமும் அமைக்கப்பட்டது கூடுதல் சிறப்பு. சுப்பு என்னும் சிறுவனும் கூடவே இரு சிறுவர்களும் கேள்விகள் கேட்க, ஆசிரியர் கணேசனும் ரயில்வே துறையில் பணிபுரியும் துறைசார்ந்த வல்லுநர்களும் அக்கேள்விகளுக்குப் பதில்கள் சொல்வதாக அமைந்திருக்கிறது.

சிறுவர்களுக்கான நூலாக இது அமைந்திருந்தாலும் பெரியவர்களும் அவசியம் படித்துத் தெரிந்து கொள்வதற்கான நிறைய சங்கதிகள் நூலில் உள்ளன. தாமதமாக வரும் ரயில் ஒரு ஸ்டேசனில் நிற்காமல் போய்விடுமா? லோகோ பைலட்டுக்கு வண்டியைத் திருப்பும் வேலை இருக்காதா? தண்டவாளத்தில் விளையாடும் சிறுவர்கள் வைக்கும் கற்களால் ரயில் தடம் புரளாதா? என்ற குழந்தைத் தனமான கேள்விகள் மட்டுமல்லாமல் பெரியவர்கள் தெரிந்து கொள்ளக்கூடிய தொழில் நுட்பச் சங்கதிகளும் நிறையஉண்டு. கூடவே இருதரப்பாரும் தெரிய வேண்டிய ரயில் தோன்றி வளர்ந்த வரலாறு – ரயில் டாய்லெட் தோன்றிய கதை உட்பட – உலக அளவில் இயங்கிவரும் பல்வேறு விதமான ரயில்கள் பற்றிய சுவாரஸ்யமான தொகுப்புகளும் அருமையாக விளக்கிக் கூறப்பட்டுள்ளன.

இந்திய மக்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்திருக்கும் ரயில் குறித்து எல்லாத் தரப்பினரும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய சங்கதிகளை தொகுத்துத் தந்திருக்கிறார்கள் ரயிலே ரயிலே ஆசிரியர்கள். இருவருக்கும் பாராட்டுகள். வாசிக்கப் போகும் பயனாளிகளுக்கும் கனிவான வாழ்த்துகள்.

நூல்: ரயிலே ரயிலே
ஆசிரியர்: சு. ஹரிகிருஷ்ணன் மற்றும் முனைவர் பெ. சசிக்குமார்
வெளியீடு: புக் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்)
விலை: 170/-
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com