புத்தக தூதுவர்களை உருவாக்குவது அவசியம் கட்டுரை – விழியன்

புத்தக தூதுவர்களை உருவாக்குவது அவசியம் கட்டுரை – விழியன்




நிறைய பதிப்பகங்கள் தற்சமயம் அரசுப்பள்ளிகளுக்குப் பள்ளிகளுக்கும் நூல்களைக் கொடையாக கொடுக்கும் பட்சத்தில் நிறையத் தள்ளுபடி கொடுத்து வாசிப்பினை ஊக்குவிக்கின்றனர். நல்ல நிலையில் இருக்கும் முன்னாள் மாணவர்கள் தங்கள் படித்த பள்ளிகளுக்குக் கொடையாக புத்தகங்களைக் கொடுக்க முன்வருகின்றனர். மிகவும் வரவேற்கத்தக்க முன்னெடுப்பு. ஆனால் அதே சமயம் புத்தகத் தூதுவர்களை எல்லா இடங்களிலும் உருவாக்க வேண்டியுள்ளது. புத்தகம் கொடுப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்குத் தூதுவர்களை உருவாக்குவதும் அவசியமாக உள்ளது.

யாரிந்த புத்தக தூதுவர்கள்?

புத்தகங்கள் இருக்கின்றன, குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் இடையே ஓர் இணைப்புப்பாலம் தேவைப்படுகின்றது. எல்லா குழந்தைகளும் உடனடியாக வாசிக்க துவங்குவதில்லை. புத்தகத்தைப் பிடித்தவுடன் (வாசிக்க தெரிந்தும்) படிப்பதில்லை. அவர்களை எவ்வளவு நெருக்கத்திற்கு அழைத்துச்செல்ல முடியுமோ அவ்வளவு நெருக்கத்திற்கு அழைத்துச்செல்லும் ஒரு ஏற்பாடு தேவையாக உள்ளது. குழந்தைகள் எல்லோரும் ஒன்றுபோல இல்லை அல்லவா. இந்த இணைப்புத்தான் புத்தகத் தூதுவர்கள். இவர்கள் ஆசிரியர்களாக இருக்கலாம், பெற்றோர்களாக இருக்கலாம், தன்னார்வலர்களாக இருக்கலாம். ஒரு வரியின் புத்தகத்துடன் இணைப்பினை ஏற்படுத்துபவர்கள்.

என்ன செய்யலாம் புத்தகத் தூதுவர்கள்?

புத்தகங்களை அறிமுகம் செய்ய வேண்டும். குழந்தைகளின் வயது, வாசிப்புத்திறன், சுவைக்கு ஏற்ப புத்தகங்களை கொடுத்துப் பரிசோதிக்கலாம். சில குழந்தைகளுக்குத் தனியாக வாசிக்க வராது, அப்போது கூட்டு வாசிப்பில் ஈடுபடுத்தலாம். ஒரு குழந்தை ஒரு பக்கமே ஒரு சில வரிகளோ படிக்க வைத்து அடுத்த குழந்தையை அடுத்த சில வரிகள் என தொடரலாம். தானும் வாசித்துக்காட்டலாம். பின்னர், வாசித்த புத்தகம்/கதையைப் பற்றி தங்கள் அனுபவங்களைக் கூறலாம். கட்டாயம் இல்லை. அதில் வரும் முக்கிய பாத்திரங்கள், வேறு எப்படிக் கதையைச் சொல்லி இருக்கலாம், பிடித்த அம்சம் என்ன எனப் பேச வைக்கலாம். தனியாகச் சென்று வாசித்தவர்களையும் அவர்களின் அனுபவத்தைச் கூற சொல்லலாம். அங்கிருந்து அவர்களே கதைகளை உருவாக்க ஊக்குவிக்கலாம்.

கதைகள் மட்டுமில்லாமல், கூட்டாக பாடல்களைப் பாடலாம். பாட்டிற்கேற்ற மெட்டினை குழந்தைகளை உருவாக்கச்சொல்லலாம். பயிற்சி பெற்ற பாடல்களைப் பள்ளி/உள்ளூர் நிகழ்ச்சிகளிலும் அரங்கேற்றலாம். கதைகளைச் சொல்லவும் உருவாக்கவும் செய்யலாம். புத்தகங்களோடு நிற்காமல் தினசரிகளை வாசித்தல், அறிவியல் குழந்தைகள் இதழ்களை வாசித்தல் போன்ற செயல்பாடுகளிலும் குழந்தைகளை ஈடுபடுத்த வைக்கலாம்.

புத்தகத்தூதுவரிடம் என்ன தேவை?

புத்தகங்களை கொண்டு செல்பவர்கள் நல்ல வாசகர்களாக இருப்பது முக்கியம். அப்படி வாசகர்களாக இருக்கும்பட்சத்தில் இன்னும் கூடுதல் நம்பிக்கையுடன் அவர்களால் செயலாற்ற முடியும். குழந்தைகள் மீது ஏராளமான ப்ரியம் இருந்தால் எதையும் செய்திடலாம். மிக முக்கியமாக இது ஒரு தொடர் செயல்பாடு. இன்று ஆரம்பித்து நாளையோ நாளை மறுநாளைப் பலன் கிடைத்துவிடாது. அது சில மாதங்கள் எடுக்கலாம், வருடங்கள் கழித்தும் பலன் தரலாம். பலன் என்பது குழந்தைகளுக்குள் நடக்கும் ஆரோக்யமான மாற்றங்கள். ஆக முயற்சிகளை எடுக்க தயங்கவே கூடாது, அதே சமயம் தோல்வியைக் கண்டு துவண்டும்விடக்கூடாது.

புத்தக்தூதுவர் தயார் புத்தகங்கள் எங்கே?

தூதுவர் தயார் என்றால் பாதிக் கிணறு தாண்டியாச்சு. கைவசம் இருக்கும் புத்தகங்கள்கொண்டு ஆரம்பிக்கலாம். குழந்தைகளுக்கான புத்தகம் தேவை என்றால் உள்ளூரிலேயே நிறைய உதவும் கரங்கள் கிடைக்கும். புத்தகங்களை தேர்வு செய்யும்போது அவை அறிவியர்பூர்வமான சிந்தனையை, நவீனச் சிந்தனைகளை, சமத்துவ எண்ணங்களை விதைக்குமா என்று மட்டும் ஒருமுறை பார்க்கவும்.

பாடம்தாண்டி வாசிப்பு குழந்தைகளின் பல திறன்களை வளர்த்தெடுக்கும். அது ஒரு இமாலயப் பணி, ஒவ்வொரு புத்தகத்தூதுவரும் மிக மிக முக்கியமானவர். நாமே தூதுவராக மாறுவோம் வாருங்கள்.

– விழியன்

நன்றி:
வெற்றிக்கொடி – 25 நவம்பர்

காணாமல் போனவை கவிதை – பாரதிசந்திரன்

காணாமல் போனவை கவிதை – பாரதிசந்திரன்




அவர் அவற்றைக் குறித்து எதுவும் சொன்னதும் இல்லை.

பெரிதாகவோ, சிறிதாகவோ பாராட்டியதாக ஏதுமில்லை.

உள் உணர்ந்து கொண்டாரா என்பதும் தெரியவில்லை.

அவருக்குப் பிடித்திருக்காதோ?

சொல்லியிருக்கலாமே.

பிடித்திருந்தால் ஏதாவது வந்திருக்கலாம்.

படித்தபோது என்னதான் நினைத்திருப்பார்?

ஒருவேளை பிறகு சொல்ல இருந்திருப்பாரோ?

படித்து முடிக்கும் பொழுது குமட்டல் எதுவும் வந்திருக்குமோ?

அவை அவரை மயக்கி விட்டனவா?

இனி வேண்டாம்.

அவற்றோடு நிறுத்தி விடலாம்.

உனக்குக் கூறவேண்டும் எனும் தேவையில்லையென ஆகியிருக்கலாம்.

படித்தால் எதுவும் கூறத்தான் வேண்டுமா?

சம்பிரதாயத்திற்காகவாவது நன்று என்று சொல்லியிருக்கலாமே.

சிறிதாய் ஒன்று புரிகிறது

அவையெல்லாம்

அவர் குறித்த எதுவுமாக இல்லை என்பதாக இருக்குமோ?

காணாமல் போனவை

அவையும்- அவரும்.

பாரதிசந்திரன்
chandrakavin@gmail.com
9283275782

அக அரசு கவிதைகள்

அக அரசு கவிதைகள்




1.
தம் பிள்ளைகளின்
வயிற்றுப் பசியையோ
தான் பட்ட பாட்டைப்
பிள்ளைகள் பட்டுவிடாமல்
படித்து மேல வந்துவிட
அடி வயிற்றில் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த
நீண்ட கால ஏப்பத்தை பெரு மகிழ்வுடன்
வெளியேற்றி விடுகிறாள் தாய்
வேப்பங்கொட்டை பொறுக்கியாவது…

2.
சாலையிலிருந்து லாவகமாக
வானத்தைத் தொடும் வித்தையறிந்த
அசுர மனித மனம் படைத்தோர்
அதி விரைவான வாகனத்தில் கடக்கும் போது உரசியதில்
சிதைந்த நாயை அடக்கம் செய்ய
எங்கிருந்தோ வர வேண்டியுள்ளது ஒரு மனிதப் புனிதம்,
கண்களை மூடிக் கொள்வோம்
கடந்து செல்வோரெல்லாம்…

3.
ஓசியில் வாங்கி
நெருக்கடி நெருக்கிக் கொண்டிருந்த
போதிலும்
எத்தனையோ முறை
அலைபேசியை வைத்து விடட்டுமானு கூறிக்கிட்டே நானும் எம்மகளும்
அன்பில் கண்ணைக் கழுவிக் கொண்டிருந்ததில்,
அணைந்துதான் போனது
அலைபேசி…
அலையலையாய்
தன் நினைவு உள்ள வரை
உயரும் உன் நினைவு!

4.
சேர்த்துப் பார்த்துக் கட்டியபோது
கிடைத்த கொஞ்சம் பரவசத்தையும் மிஞ்சும்
பந்தாவையும்
பக்கத்தில்
நின்று பல தோரணைகளில்
தீட்டியதும் உணர்ந்த உற்சாகத்தையும்
நானெனப் பிளந்த ஆணவத்தையும்
நறுக்கெனக் கிள்ளி
மகிழ்ச்சியில் உச்சிதனை முகர வைக்கும்
குழந்தைகளின்
சிறுகையால் அளாவி தூவிய
வண்ணச்சாயம்!

5.
மற்ற நாட்டின் வளர்ச்சிக்காக
எண்ணிலடங்கா
காந்தி தாள்களை
கொட்டிக் கொடுக்க வண்ண
விளக்கிலான
நவீன விமானத்தில்
செல்பவரைக் கண்டு
பளிச்சொளி முகத்துடன்
கை கொட்டி மத்தாப்பாய் சிரிக்கிறாள் சிறுமி
சீமண்ணெய் விளக்கு அணைந்தது கூட தெரியாமல்!

6.
சாலையில் பயணிப்பவர்கள்
மீதுள்ள எல்லையில்லா
அரவணைப்பினாலோ
அல்லது ஆர்வக்கோளாறிலோ
வேக வேகமாக
ஊஞ்சல் போல் சாலையையும் சேர்த்து
ஆட்டிவிடுகிறது
ஜுலைக்_காற்று…

–அக அரசு

களவு போன புத்தகம் கவிதை – அபர்ணா

களவு போன புத்தகம் கவிதை – அபர்ணா




களவு போன என் புத்தகத்தைத்
தேட எனக்கு மனமில்லை;
அது பழைய புத்தகக்கடைக்கு
விலை போன
விஷயம் தெரியாத வரை எனக்குக் கவலையும் இல்லை.
அங்காவது யாராவது படிக்க மாட்டார்களா என்ற என் ஆசைக்கும் குறைவில்லை.
கழுதையாகப் பிறந்தாலும் புத்தக மூட்டையைத் தவிர எதையும் தூக்க எனக்கு விருப்பமில்லை.
கரையானாகிப் போனாலும்,
வெற்றுத் தாளில்
எனக்கு வேலை இல்லை.

Books that fascinated me at 2021 Collections By Sa Subbarao 2021ல் என் மனம் கவர்ந்த புத்தகங்கள் - ச.சுப்பாராவ்

2021ல் என் மனம் கவர்ந்த புத்தகங்கள் – ச.சுப்பாராவ்




2021ல் 100 புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்று இலக்கு வைத்திருந்தாலும், எழுத்து வேலைகள், சொந்த வேலைகள் காரணமாக 90 தான் படிக்க முடிந்தது. அவற்றில் என் மனம் கவர்ந்த 20 புத்தகங்கள் பற்றிய குட்டிக் குட்டி அறிமுகம் இங்கே… இது தர வரிசையல்ல.. ஒன்றின் கீழ் ஒன்றாகத் தான் எழுத முடியும் என்பதால் வரிசை எண் தரப்பட்டுள்ளது. மற்றபடி எல்லாம் ஒவ்வொரு விதத்தில் சிறப்பானவை. 

1.ஞாயிறு கடை உண்டு – கீரனூர் ஜாகீர் ராஜா.
தஞ்சை என்றாலே பிராமணர்களும், கர்னாடக சங்கீதமும் என்பதாக ஒரு தோற்றம் எவ்வாறோ ஏற்பட்டுவிட்டது. தஞ்சையில் தவணைக்கு வீட்டு உபயோகப் பொருட்களைக் கொடுத்து, பணம் வசூலிக்கும் இஸ்லாமிய இளைஞர்கள், துணிக்கடைகளில் வேலை பார்க்கும் இஸ்லாமியப் பெண்கள் என தஞ்சையின் நாமறியாத ஒரு முகத்தைக் காட்டுகிறார் ஜாகீர்.

2.சினிமா எனும் பூதம் – R.P.ராஜநாயஹம்.
ஆசிரியர் பின்னட்டைக் குறிப்பில் சொல்லுவது போல, எந்தக் குறிப்புகளின் தேடலுமின்றி, முற்றிலும் அவரது ஞாபக அடுக்குகனை மட்டுமே கொண்டு, அறிந்த திரை ஆளுமைகள் பற்றிய அறியாத சுவாரசிய விஷயங்களை ஆவணப்படுத்தியிருக்கும் நூல். ராஜநாயஹம் தி.ஜானகிராமனின் பரமரசிகனாக, அசோகமித்திரனின் சீடனாக, ந.முத்துசாமியின் மாணாக்கனாக,  Shakespearean Scholar ஆக, இருப்பதால்,  அவரது நினைவுகளின் அடுக்குகளிலிருந்து தெறிக்கும் தகவல்கள் மிக அழகான நடையில், எந்த பாசாங்கும் மேற்பூச்சுமின்றி, ரசிக்கும்படியான தேர்ந்த சொற்களில் வந்திருக்கின்றன.

3.வெற்றிப் படிகள் – வானதி திருநாவுக்கரசு
தமிழில் எழுத்தாளர்களின் சுயசரிதையே அரிது என்ற நிலையில் ஒரு பதிப்பாளரின் சுயசரிதை என்பது நிச்சயமாக அரிதினும் அரிதுதான்.  தமிழ்ப் பதிப்பாளர் ஒருவரின் சுயசரிதை என்ற வகைமையில் இதுவே முதலாவதாகக் கூட இருக்கலாம்.  மிக நீண்ட காலமாக பதிப்புத் துறையில் ஏராளமான பெரிய பெரிய படைப்பாளிகளின் படைப்புகளை வெளியிட்டவர் என்ற வகையில் அவரது வாழ்க்கை வரலாறு ஒரு விதத்தில் தமிழ் பதிப்புலப் பெரியோர்களின் வரலாறாகவும், அக்காலத்திய ஆளுமைகள் பற்றிய சித்திரமாகவும் விரிகிறது.

4.யாத் வஷேம் – நேமி சந்த்ரா – தமிழில் கே.நல்லதம்பி
இரண்டாம் உலகப் போர், நாஜிக் கொடுமைகள் பற்றிய நாவல்கள் ஆங்கிலத்தில் ஏராளம், ஏராளம்.  குட்ரீட்ஸ் டாட் காமில் WW2  என்று தேடினால் .04 நொடியில் 797  நாவல்களைக் காட்டிவிடும்.  எங்கோ ஐரோப்பாவில் நடந்த விஷயம் என்பதால் இயல்பாகவே இந்திய மொழி எதிலும்  மேற்குறித்த வரலாற்றைச் சுற்றிய புனைவு இருக்காது.  அந்தக் குறையைத் தீர்க்கும் விதமாக நேமி சந்த்ரா கன்னடத்தில் எழுதியிருக்கும் யாத் வஷேம் கே.நல்லதம்பியின் அற்புதமான மொழிபெயர்ப்பில் தமிழில் வந்துள்ளது. ஆஹா…. என்ன ஒரு புனைவு…. என்ன ஒரு ஆய்வு.. என்ன ஒரு களப்பணி….  இந்த அளவோடு நாவல் நிற்கவில்லை. இன்றைய காலத்திற்கு மிகவும் தேவையான ஒரு முக்கிய செய்தியையும் முடிவாகச் சொல்கிறது நாவல்.

5.தீக்கொன்றை மலரும் பருவம் – அபுபக்கர் ஆடம் இப்ராஹிம் – தமிழில் லதா அருணாச்சலம்
நைஜீரிய நாவல்.  முன்னுரையில் மொழிபெயர்ப்பாளர் சொல்வதைப் போல பிறந்தது முதல் மனதளவில் தனிமையில் உழலும் இருபத்தைந்து வயது ஆணுக்கும், ஐம்பது வயதிற்கு மேற்பட்ட பெண்ணுக்கும் இடையே சமூகத்தின் அத்தனை தளைகளையும், நியதிகளையும், மதிப்பீடுகளையும் கடந்து மலரும் உறவைப் பற்றிப் பேசுகிறது இந்தப் புதினம். அந்த வகையில் நான் முதலில் சொன்னது போல இது நைஜீரிய மோகமுள்ளாக, நாமறிந்த கதையாக இருக்கிறது. அதே சமயம் முன்னுரையின் முடிவில் லதா சொல்வது போல் இது நைஜீரியாவின் வட மாகாணங்களில் வாழும் மக்கள், அந்த நிலப்பரப்பின் வரலாறு மற்றும் புவியியல் பயணமாக, உள்ளார்ந்த வாழ்வையும், உணர்வுகளையும், பிரச்சனைகளையும். வலிகளையும், ரகசியமாக ஒளிரும் கண்ணீரையும் பற்றியும் பேசுகிறது. அந்த வகையில் நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. அங்கிருப்பவர்களும் உங்கள் ஊர்க்காரர்கள் மாதிரிதான் என்பதையும் காட்டுகிறது.

6.ஒன்பது குன்று – பாவண்ணன்
தன் பணி நிமித்தம் கர்னாடக மாநிலமெங்கும் சுற்றியலைந்த காலத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை தனக்கேயுரித்தான பாணியில் எழுதியிருக்கிறார் பாவண்ணன். புத்தகத்தைப் படித்த இரண்டு நாட்களும் நானும் அவருடன் கூடவே கர்னாடக மாநிலத்தின் காடுகளிலும், மலைகளிலும் டெலிபோன் கேபிள் பதித்தவாறு சுற்றித் திரிந்தேன்.

7. நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட் யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள் –பாவெல் சக்தி
நீதியும், அறமும், வாழ்வதற்கான உரிமையும் மறுக்கப்பட்டவர்களும், வன்புணர்வின் இறுதியில் சாலையின் ஓரம் கழிவென வீசப்பட்டவர்களும், உயிரென இருந்தவாகளை கொலைகளுக்கு பலிகொடுத்துவிட்டு நியாயம் கேட்பவர்களும், இருக்கும் கொஞ்சநஞ்ச வாழ்வையும் கையில் பிடித்துக் கொண்டு, இழந்த சொத்துக்களை மீட்டெடுக்கப் போராடுபவர்களும், தோல்வியடைந்த திருமணங்களினால் கைவிடப்பட்டவர்களும், அவர்கள் தூக்கிச் சுமக்கும் குழந்தைகளும், கடைசிக்காலத்தில் கைவிட்டுப் போன பிள்ளைகளிடம் கையேந்தும் வயதானவர்களும்.. நீதிமன்றத்தைத் தான் கடவுளாக நம்பி வருகிறார்கள். அவர்களின் இறுதி நம்பிக்கையும், அரசினால், அதிகாரங்களினால், அலட்சியங்களினால், சட்டங்களின் துணுக்கங்களினால் நெரித்துக் கொல்லப்படுவதுதான் நடைமுறையாக இருக்கிறது. இந்த பரிதாபத்திற்குரிய ஜீவன்களின் மீது பரிவும், பாசமும், ஓரளவிற்கு மேல் அவர்களுக்கு உதவ முடியவில்லையே என்ற கரிசனமுமாக எழுதப்பட்ட கதைகள் இவை.  விசித்திரமான வழக்குகள், குற்றங்கள் என்பதோடு வாழ்வில் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு நீதிமன்றத்தின் வளாகத்திலேயே திரிந்து கொண்டிருக்கும் கோடானுகோடி பாவப்பட்ட மக்கள் பற்றிய விரிவான, அக்கறையான, உண்மையான பதிவுகளாக இக்கதைகள் உள்ளன.  

8.சென்று போன நாட்கள் – எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு தொகுத்தவர் இரா.ஆ.வேங்கடாசலபதி
நூறாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு பத்திரிகையாளரின் நூல். அக்காலத்திய எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களைப் பற்றிய அபூர்வமான பதிவு.  பாரதியோடு நேரடியாகப் பழகியவர் நாயுடு. பாரதியைப் பற்றி முதன்முதலில் எழுதியவரும் அவரே.  வியப்பூட்டும் தகவல்கள் உள்ள அரிய புத்தகம்.

9.அதிதி – வரத.இராஜமாணிக்கம்
வீடு தரும் பாதுகாப்பை மீறி அதை விட்டு வெளியேறுபவனின் கதை. பழநியின் குதிரை வண்டிகளைப் பதிவு செய்த முதல் நாவல் இதுவாகத்தான் இருக்கும். வெளியேறுபவனின் துயரத்தோடு, அவன் வீட்டாரின் துயரங்களையும் சேர்த்துச் சொல்லும் வித்தியாசமான நாவல். ஆசிரியரின் முதல் நாவல் என்பதை நம்ப முடியவில்லை.

10.நூல்கள், நூலகங்கள், நூலகர்கள் – சச்சிதானந்த சுகிர்தராஜா
கல்லூரி நாட்களில் கணையாழி அறிமுகமானதிலிருந்து நான் அவரது பத்தி எழுத்துகளின் ரசிகன்.  புத்தகக் காதலர்கள் பற்றி புத்தகம் பேசுது இதழில் புதிய தொடர் ஒன்றை எழுத என்னைத் தூண்டிய புத்தகம்.

11.நீலத் தங்கம் – இரா.முருகவேள்
புனைவு எழுத்தாளர் முருகவேளை விட கட்டுரையாளர் முருகவேள் என்னை மிகவும் கவர்கிறார். உலகமயச் சூழலில் தண்ணீர் விற்பனை குறித்து மிக ஆழமாக அதே சமயம் மிகச் சுருக்கமாக விளக்கும் நூல். புனைவுலகத்திலேயே சஞ்சரித்துக் கொண்டிருந்த என்னை நீ வாழும் உலகம் எப்படி இருக்கிறது என்ற பார் என்று கன்னத்தில் அறைந்து சொன்ன புத்தகம்.

12.பி.ஆர்.எஸ். கோபாலின் குண்டூசி சரித்திரமும், ஏடுகளும் – வாமனன்
சினிமா பத்திரிகைகள் குறித்து சற்றே ஏளனமான பார்வை கொண்டிருந்த எனக்கு சினிமா பத்திரிகை பற்றிய நல்ல பார்வையை, சினிமா பத்திரிகைக்காரர்களுக்கும் இருக்கும் தொழில் தர்மத்தைப் பற்றியெல்லாம் சொன்ன புத்தகம். மிக அரிதான தகவல்கள் உள்ள காலப் பெட்டகம்.

13.Greatest folk tales of Bihar
 பீஹார் பகுதிகளில் புழங்கும் மைதிலி மொழியில் சொல்லப்பட்ட, எழுதப்பட்ட சிறார் கதைகளின் தொகுப்பு. சில கதைகள் மௌரியர் காலத்தவை. சில பிரிட்டிஷ் ஆட்சி காலத்தவை. ஆனால் எல்லாக் காலத்து குழந்தைகளும் படிக்க வேண்டியவை. விரைவில் என் மொழிபெயர்ப்பில்….

14.உபசாரம் –சுகா
சுகாவின் அனுபவப் பகிர்வுகள் மிகவும் நகைச்சுவையான மொழியில். ஒரு கட்டுரையில் வண்ணதாசன் கதைகளை நம்மால் வாசிக்க முடியாது. கேட்கவும்  முடியாது. உணரத்தான் முடியும் என்பார் சுகா. உபசாரம் கூட அந்த மாதிரிதான்.

15.Rhino in my garden – Conita Walker
ஒரு காண்டாமிருகத்தையும், நீர்யானையையும் தன் வீட்டில் வளர்த்த ஒரு பெண்ணின் அனுபவங்கள். தென்னாப்பிரிக்காவின் காடுகள், நிறவெறி, கானுயிர் பாதுகாப்பு என்று எத்தனை எத்தனையோ விஷயங்களைச் சேர்த்துச் சொல்லிப் போகும் புத்தகம். ஏழை நாடு, அல்லது வளரும் நாட்டில் தான் அழிந்து படும் நிலையில் அரிய வனவிலங்குகள் அதிகம் உள்ளன. உணவின்றித் தவிக்கும் மக்களா, அல்லது அரிய வனவிலங்குகளை அழிவிலிருந்து பாதுகாப்பதா, எதற்கு முன்னுரிமை என்ற பெரும் கேள்வியில் அந்த நாடுகள் திண்டாட கோனிட்டா போன்றோர் தனிமனிதராக தம்மால் இயன்ற அளவு போராடுகிறார்கள். 

16.Ex libris –Confessions of a common reader – Anne Fadiman
நேருவோ, அப்துல் கலாமோ பெரிய நூலகத்தை வைத்துப் பராமரிப்பது பெரிய விஷயமல்ல. மாதச் சம்பள வேலை பார்த்துக் கொண்டு பெரிய நூலகத்தை வைத்துப் பராமரிப்பதுதான் பெரிய விஷயம். ஆனி என்ற புத்தகக் காதலியின் புத்தகக் காதல் பற்றிய நூல். புத்தகக் காதலர்கள், காதலிகள் உலகெங்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள் என்பதை அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது.

17.Weird things customers say in bookshops –  Jen Campbell

புத்தகக் கடைக்காரர்களும் உண்மையில் புத்தகக் காதலர்கள்தான். புத்தகக் காதலின் உச்சபட்சத்தில், கிறுக்கு அதிகமாகும் போது, புத்தகக்கடை வைத்து நஷ்டப் படுகிறார்கள். அங்கு வரும் வாடிக்கையாளர்களோ, இவர்களை விட கிறுக்கர்களாக இருப்பார்கள்.  அந்த அனுபவங்களின் தொகுப்பே இது.  தமிழில் இது போல் யாராவது எழுதினால் தமிழ்புத்தகக் கிறுக்கர்கள் பற்றி அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

18. இந்திய இலக்கியச் சிற்பிகள் – சுஜாதா – இரா.முருகன்
சமீபகாலமாக சுஜாதா பற்றி பெரிய சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த சர்ச்சைக்கு முன்பே, சுஜாதா ஒரு இலக்கியச் சிற்பிதான் என்று ஆதாரபூர்வமாக நிறுவி இருக்கிறார் இரா.முருகன்.  நான் சுஜாதாவைப் பற்றி எழுதினால் எதை எதை எல்லாம் எழுதுவேனோ, அவை அனைத்தையும் இரா.முருகன் எழுதியிருக்கிறார். என் மனதில் எப்படி அவர் புகுந்து பார்த்தார் என்று வியந்து கொண்டே இருக்கிறேன்.

19.என் குரு நாதர் பாரதியார் – ரா.கனகலிங்கம்
பாரதியைப் பற்றிய மிக அழகான, அரிதான பதிவுகள்.  பிரெஞ்சு தேசிய கீதத்தை பிரெஞ்சுக்காரர்களைப் போலவே பாடும் பாரதியார், பாரதியாரின் கச்சேரிக்கு வயலின் வாசிக்கும் பிரெஞ்சுக்காரர்,  தேச முத்துமாரி பாடல் உருவான கதை என்று புல்லரிக்க வைக்கும் புத்தகம்.

20.முற்றுகை – வேலூர் சுரா
‘அதீத இயந்திரமயம் வேலைகளைப் பறிக்கும். தேவைக்குக் குறைவான இயந்திரமயம் தொழிலையே பாதிக்கும்,‘ ( Too much autaomation kills employment and Too little automation kills organisation )  என்ற உலகமயப் போட்டிச் சூழலுக்கேற்ப பொதுத் துறை தொழிற்சங்கங்களின் அணுகுமுறை அமைய வேண்டியதன் அவசியத்தை மிக அழகாகப் புனைவாகக் கூறும் படைப்பு.

வரலாற்றைப் புனைவாக்குவது மிகவும் கடினம்.  மிகப் பழங்கால வரலாறு என்றால் தரவுகள் கிடைப்பது, கிடைத்த தரவுகளை சரிபார்ப்பது மிகவும் சிரமமாக இருக்கும்.  சமீபத்திய வரலாற்றைப் புனைவாக்குவதில் வேறு விதமான சிரமம்.  அந்த வரலாற்றில் பங்கேற்றவர்கள் பலர் உயிரோடு இருப்பார்கள். அவர்களது நினைவுகளில் அந்த நிகழ்வு பசுமையாக இருக்கும். அதில் சிறிதளவு தவறாக எழுதிவிட்டாலும் கடும் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும். இப்படிச் சிக்கலான வரலாற்றுப் புனைவை தன் முதல் நாவலாக எழுதியிருக்கிறார் வேலூர் சுரா. முற்றுகை என்ற அந்த வரலாற்றுப் புனைவில் மற்றொரு புதுமையும் உண்டு. ஒரு தொழிற்சங்கத்தின் மிக முக்கியமான போராட்ட வரலாற்றைப் புனைவாகக் கூறும் புதுமை. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்  1960களில் இயந்திரமயத்திற்கு எதிராக நடத்திய இலாக்கோ விஜில் என்ற மாபெரும் போராட்டம் பற்றிய சிறு நாவல் இது. 

இவை தவிரவும்,  வாசிப்பு அறிந்ததும், அடைந்ததும், மதுரை போற்றுதும், நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ், டால்ஸ்டாய் சிறார் கதைகள், உலகப் புகழ்பெற்ற சிறார் கதைகள் என்று என் மனம் கவர்ந்த ஐந்து புத்தகங்களையும் இந்த ஆண்டு படித்தேன். ஆனால் அவற்றை எழுதியது அடியேன் என்பதால் அவை பற்றி விரித்துக் கூறாது முடிக்கிறேன்.

வாசிப்புதான் தீராத இன்பம். அதை வாசித்தால் மட்டுமே உணர முடியும்.