மதுரை புத்தகக் கண்காட்சி அனுபவம் – இரா. சண்முகசாமி
புத்தக வாசிப்பு அனுபவம் மட்டுமல்ல புத்தகக் கண்காட்சியே ஒரு வாசிப்பு அனுபவமாக இருந்ததை தங்களோடு பகிர்கிறேன் தோழர்களே!
03.10.2022 மதுரை புத்தகக் கண்காட்சியின் இறுதி நாளில் புத்தகங்கள், தோழர் Amalarajan Arulraj அவர்களின் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்டது, அந்நிகழ்வில் குழந்தைகளுக்காக நான் பாடல் பாட தோழர் வாய்ப்பளித்தது, அவர் அளித்த அவரின் ஒரிகாமி நூல் பரிசு, சகலகலா வல்லவர் தோழர் #சதமிழ்ச்செல்வன் அவர்களின் வாசிப்புத் தேடல் கலை குறித்த உரை என முக்கனிச் சுவையாக நிறைந்திருந்தது.
முக்கியமான நிகழ்வை முதலில் சொல்லிவிடுகிறேன் அந்தக் குழந்தையின் பெயர் மாறவர்மன் செல்லைய்யா என நினைக்கிறேன். ஆஹா காகம்-நரி கதையை மூன்றாவது கட்டத்துக்குக் கொண்டு சென்றான். ஆம் நரியையும் உழைக்க வைத்து அதையும் பாட்டியிடம் வடை வாங்க வைத்து கதைக்கு புதிய உயிர் கொடுத்தான். நான், உழைப்புச் சுரண்டலை ஏமாற்றிய நரியை காகங்கள் அனைத்தும் கூடி காலி செய்ததை சொல்ல இருந்தேன். அப்போது “குழந்தைகள் யாராவது இந்தக் கதையை கூறுகிறீர்களா?” என்று நான் கேட்டபோது மைக்கை வாங்கி அழகியலை உருவாக்கினான் மாறவர்மன். சபாஷ் என்று அவனை உச்சிமுகர்ந்தேன்.
அடுத்து,
தமிழகத்தில் முதல் முறையாக புத்தகக் கண்காட்சி குளிரூட்டப்பட்ட மாபெரும் அரங்கில் நடந்தது எனில் அது மதுரை மண்ணில் தான் தோழர்களே. அது வாசகர்களுக்கும், குறிப்பாக புத்தக அரங்கில் தொடர்ச்சியாக பணிபுரிபவர்களுக்கும் மிகுந்த மனநிறைவாக இருந்தது. அதற்கு காரணம் மதுரை மண்ணின் செங்கொடியின் புதல்வன் தோழர். வெங்கடேசன் அவர்கள் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களின் பங்களிப்புமே காரணம் என்று தெரியவந்தபோது அவர்கள் இருவருக்கும் ஒரு ராயல் சல்யூட்.
இன்னும் நிறைய அனுபவங்களை பகிரலாம். இன்ப அதிர்ச்சியாக தோழர் Venpura Saravanan அவர்களும், அவர்களின் இணையரையும் சந்தித்தது; அவர்கள் அளித்த உபசரிப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
தூங்கா நகரின் புத்தகக் கண்காட்சியின் அரங்குகளில் இரண்டு நாட்கள் தூங்காமல் புத்தகங்களை வாங்கி குவித்த Visakan Purushothaman தோழரை இடையில் சந்தித்து இடையிலேயே விட்டுவிட்டு வந்தேன். அவர் இன்னும் அங்கே இருக்கிறாரா இல்லை புதுச்சேரி வந்துவிட்டாரா என்று தெரியவில்லை.
தோழர் Mohammed Sirajudeen அவர்கள் வேறெங்கேயும் புத்தகங்கள் வாங்காமல் பாரதி புத்தகாலயத்தில் மட்டுமே வாங்கவேண்டும் என்பது போல நிறைய புதிய புதிய தலைப்புகளில் புத்தகங்களை குவித்து வைத்திருந்ததால் அங்கே புத்தகங்களையும், கூடுதலாக முகநூல் தோழர் Mohan Kumara Mangalam அவர்களின் நூல் ‘வைகைவெளி தொல்லியல்’ நூலை ‘கருத்து-பட்டறை’யிலும் மட்டுமே வாங்கிவிட்டு மற்ற அரங்குகளை காட்சிப்பொருளாக மட்டுமே பார்க்க நேரிட்டது. வீட்டில் இணையரின் கட்டுப்பாடும் கையை கட்டிப்போட்டது.