இப்போது நிகழ்வனவற்றிலிருந்து!. கவிதை – பிச்சு மணி
அடுக்கடுக்காய்
கட்டங்கள் வரைந்து
அழுகிய பொய்களை
அக் கட்டங்களில் நிரப்பி
கொள்வாரை திரட்டி
கொடுஞ்செயலை கொண்டாடி
வதைக்கும் வஞ்சகமதியாளரை
வானுயர புகழ்ந்து
மலம் மணக்குமென்று
மலர் நாறுமென்று
ஒவ்வாத கருத்துகளை
ஊடக திரையில் உளரிடும்
மனுதாசர்கள்..
மனிதம் மறுக்கும்
துர் பிடித்த ஆயுதங்களை
கூர் தீட்டி அலைபாயும்
இளம் மனதில் நிலைநாட்ட
துடியாய் துடிக்கிறார்கள்.
மனித பிறப்பின்
உண்மையை அறிந்த..
மருத்துவம் படித்த அரசியல்வாதி
அக்னி சட்டியை
இனக் கருப்பை யென்று
காலண்டரை காட்டி
மனிதமென்னு குளத்தில்
கல்லெறிந்து பார்க்கிறார்.
எளிய மக்களின்
இறை நம்பிக்கையை
மதமென்னும் கோடாரியால் பிளந்து
விருந்தோம்பல் விரும்பும்
விளிம்பு நிலை மக்களிடையே
விரோத நிலை விதைத்து
மனிதத்தை புதைக்க
அலையாய் அலைகிறார்கள்.
துயருற்றவர்கள் வாழ்வு
துளியேனும் மாறாமல் இருக்க.
குடி பெருமை அகந்தை
யார் பசியை போக்கும்?
பட்ட காலிலேயே பட்டு
பரிதவிக்கும் பாட்டாளிக்கு
ஒரு காயம் ஆற
மறு காயம் தருகிறது
அரசதிகாரம்
வலுத்தவன் வாழ
உழைப்பவன் தாழ.. என்னும்
நிலைதான் தொடர
எல்லாம் இயங்குது
வெவ்வேறு பெயரோடு.