Posted inPoetry
மீரா பாண்டி கவிதைகள்
1
நவீன மருத்துவம்
***********************
உனது விரலை வெட்டி
சிறந்த வில்லாளனாகி
அர்ஜுனன்
கௌரவர்களைக் கொன்று குவித்த
கதையெல்லாம் இருக்கட்டும்…
நீ
வா
ஏகலைவா,
உனக்கான
மாற்று விரல் அறுவை சிகிச்சையை
இப்போது
நான் செய்கிறேன்…
உலகம் எவ்வளவோ நவீனமயமாகிவிட்டது…
2
இளைப்பாறுதல்
************************
பிதாவே!
நீயோ!
சிலுவையில்
சித்ரவதைக்குள்ளானாய்…
நானோ!
அப்பத்தையும்
ஒயினையும்
உண்டு
பருகிவிட்டு…
ராமனுக்காகவும்
தர்மனுக்காகவும்
பாவ மன்னிப்பு வேண்டி
நிற்கிறேன்…
மத போதகரோ
மண்டியிடச் சொல்கிறார்…
அவர் மனுவை
மறுபரிசீலனைக்கு ஏற்காது…
வழியும்
உன் குருதி துடைக்க
பஞ்சினை தேடி
நீளும்
என் விரல்களில்
கிடைக்கின்றன
ஆசிர்வதிக்கப்பட்ட எழுத்துக்கள்…
