நூல் அறிமுகம் : பேரா ச.மாடசாமியின் ’மனச்சாட்சியின் குரல்கள்’ – தேனி சுந்தர்

நூல் அறிமுகம் : பேரா ச.மாடசாமியின் ’மனச்சாட்சியின் குரல்கள்’ – தேனி சுந்தர்
நூல்: மனச்சாட்சியின் குரல்கள்
ஆசிரியர்: பேரா ச.மாடசாமி
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 150
தொடர்பு எண்; 044 24332924
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும் : thamizhbooks.com

பேரா ச.மாடசாமி அவர்கள் எழுதிய *மனச்சாட்சியின் குரல்கள் :
நெருப்பு வார்த்தைகளின் தோரணம்..!*

அன்புத் தோழர் பேரா.மாடசாமி அவர்களின் புதிய நூல்.. மனச்சாட்சியின் குரல்கள்..!

அவசரத்தில் மனதின் குரல் என்று வாசித்து விடக் கூடாது.. அவை பிரதமர் சொல்லும் மாதாந்திர பொய்கள் என முகப்பிலேயே பெயர்க் காரணம் சொல்லி நம்மை எச்சரிக்கிறார்..

அவ்வப்போது முகநூலில் வாசித்த பதிவுகள் தான் என்றாலும் தொகுத்து படிக்கையில் ஒரு சுவாரசியமாக, விறுவிறுப்பாக இருக்கிறது..

நூலில், குழந்தைகள் குறித்த பதிவுகள் தெவிட்டாத இன்பம் என்றால்.. அறிவொளி அத்தியாயம் சிலிர்ப்பூட்டும் தென்றல்.. இரண்டையும் கடந்தால் அனல்..! கத்தரி வெயில்..!

ஆம், பழமைவாதமும் போராட்டமும் என்கிற அத்தியாயம் முழுவதும் அனல்.. அதிகாரம், ஆணாதிக்கம், மதவாதம் குறித்த பதிவுகள் அனைத்திலும் நெருப்பு வார்த்தைகள்.. தெறிக்க விட்டிருக்கிறார்.. வாசிக்க வாசிக்க சுடுகிறது.. நமக்கு சொரணை இருக்கிறதா இல்லையா என்று ஒவ்வொரு பதிவும் சோதிக்கிறது.. கைகள் நடுங்க.. கண்கள் சிவக்க.. உடல் முழுவதும் உஷ்ணம் ஏற்றும் அத்தியாயம் அது..!

மதம் என்றால் எல்லாம் மதமாகி விடுமா.. இல்லை, ஆதிக்கவாதிகளின் மதம் வேறு.. அப்பாவி மக்களின் மதம் வேறு..!

போகிற போக்கில் இந்து அமைப்புகள் என்று சொல்கிறார்களே.. அது சரியா..? அப்படிச் சொல்லலாமா? இந்து அமைப்புகள் வேறு.. அடிப்படைவாத, இந்துத்வா அமைப்புகள் வேறு இல்லையா..?! தெளிவு படுத்துகிறார்..!

மதத்தில் அன்பு ஒரு பகுதி.. பழமைவாதமும் பிரிவினை, வன்முறை இன்னொரு பகுதி.. மக்கள் மனதில் இருப்பது அன்பு எனும் பகுதி.. இந்துத்வா கும்பல் முன்னிறுத்துவது..!?

மதங்களின் ஒரிஜினல் முகம் பழமைவாதம்.. அது போட்டிருக்கும் முகமூடி வேண்டுமானால் மாறிக் கொண்டே இருக்கலாம்.. அவர்களின் ஒரிஜினல் முகம் ஒன்றுதான்.. அது மாறாது..! அது தாலிபானாக இருந்தாலும் சரி.. இந்துத்வா கும்பலாக இருந்தாலும் சரி..!

மேற்கே நிறம்.. இந்தியாவில் “வர்ணம்”.. இரண்டும் ஒன்று தான்..!

பாரபட்சமான கடவுள், பாகுபடுத்தும் சாதி, பெண்ணைக் குற்றவாளி ஆக்கும் ஆணாதிக்கம்.. பெண்ணை இச்சைப் பொருளாக பார்த்த திருட்டு புத்தியின் தொடக்கம்.. அருவருப்பு.. பதுங்கி இருக்கும் ஆபத்து என மனுஸ்மிருதியை வெளுத்து வாங்குகிறார்..

ஏன் இந்த அத்தியாயம் இப்படி கொதிக்கிறது.. மீண்டும் முன்னுரையை வாசித்தேன்.. அவரே சொல்லி இருக்கிறார்.. “இந்துத்துவ வெறியையும் அரசியல் சர்வாதிகாரத்தையும் எதிர்ப்பதே இப்போதைய என் பதிவுகளின் இலக்கு..!”
இலக்கு தப்பவில்லை தோழர்..!

மூளையில் திணிப்பது எளிது. இதயங்களை திறப்பது தான் கடினம்.. ஆனால் அது தான் அவசியம்..!

மாணவர்கள் கும்பல் அல்ல.. வகுப்பறை – ஒரே முகம் அல்ல..!

வகுப்பறை எதைத் தான் மறுத்துப் பேசியது..? எதைத் தான் கேள்வி கேட்டது..?

குளிர்ந்து உறைந்த வகுப்பறைகள் எதற்கு..? பகிரும் வகுப்பறைகள் வேண்டும்.. தொழில்நுட்பமும் உத்திகளும் மட்டுமே புதுமை ஆகி விடுமா..? உள்ளடக்கம் பற்றி பேச வேண்டாமா..? என்று கொதிக்கிறார்.. பாடநூல், கல்விக் கொள்கை, வகுப்பறை, பாகுபலி திரைப்படம் என கல்வி குறித்த அத்தியாயம் விரிகிறது..

நிறைவாக ஆளுமைகள் எனும் அத்தியாயம்.. அதுவும் சிறப்பாக உள்ளது.. நிகழும் போதே எழுதப்பட்ட வரலாறு போல தான் இந்நூலும்..

சமூக, அரசியல் நிகழ்வுகளுக்கான எதிர்வினைகள்.. அதற்கு வந்த பின்னூட்டங்கள் என இது ஒரு புதிய முயற்சி..!

106 பதிவுகள்.. கிட்டத்தட்ட 250 பேரின் பின்னூட்டங்கள் உள்ளன. முரண்பட்டவர்களின் கருத்துகள் இடம் பெற்றுள்ளனவா என்று அறிய ஒரு ஆர்வம். தேடிப் பார்த்தேன்..

பிரதமர் மோடி குறித்த ஒரு பதிவில் “உங்கள் மீது எங்களுக்கு அன்பு உள்ளது. ஆனால் நீங்கள் எல்லாருக்குமான பொது மனிதராக மாற வேண்டும்” என்று எழுதி இருக்கிறார்.. அதற்கு ஒரு பின்னூட்டம் இப்படி வருகிறது.. “அன்பு காட்ட தகுதியில்லாத நபர் அவர் என்பதற்கு குஜராத் சம்பவங்களே சாட்சியம்..!”

தோழரின் வீட்டில் இருந்தே.. அவருக்கு அருகில் இருந்தே பதிவு செய்யப் பட்டிருக்கிறது அந்த பின்னூட்டம்.. ஆம், அது தோழரின் இணையர் லைலாதேவி அம்மா எழுதியது..!

இது போல வேறு சில நண்பர்களின் மாற்றுக் கருத்துகளையும் இடம்பெறச் செய்திருக்கிறார்.. என்னுடைய சில பின்னூட்டங்களும் இந்நூலில் இடம் பெற்றிருப்பது நான் பெற்ற பேறு..!

இந்நூல் ஒரு காலக் கண்ணாடி.. ஒவ்வொருவரின் கைகளிலும் அவசியம் இருக்க வேண்டிய நூல்..!

-தேனி சுந்தர்