சரவிபி ரோசிசந்திரா இசைப்பாடல்

சரவிபி ரோசிசந்திரா இசைப்பாடல்




நாள்தோறும் நான் வாழ
கண்ணா நீ‌ காரணம்
அன்போடு நின்றாடும்
உன் நினைவு தோரணம்

நான் வாழ நீயின்றி வேறேது
காரணம்
புதிய தாகம் இதுவோ
காதல் பானம் பருக வருமோ!
நமது காதல் விளைய
இது புதுமையான களமோ!

நாள்தோறும் நான் வாழ
கண்ணா நீ‌ காரணம்
அன்போடு நின்றாடும்
உன் நினைவு தோரணம்

காற்றுப் போலவே நெஞ்சம் சுழலுதே!
உன் கண்ணைக் கண்டதாலே..
பேதை என்னையே வாழ
வைத்ததே!
நேசம் கொள்ளைக் கொண்டதாலே…

உன்னைப் பார்க்கையில்
அன்னை பார்க்கிறேன்

உந்தன் ஜீவக்கண்ணில்
என்னைப் பார்க்கையில்
உன்னைப் பார்க்கிறேன்
உந்தன் மின்னல் கண்ணில்

அன்பைச் சொல்லியே என்னைச்
சேர்க்கிறேன்
இன்று உந்தன் வாழ்வில்
அன்பே! எண்ணம் கூடுமோ
இந்த மாய வாழ்வினில்….
அன்பே! நேசம் கூடுமோ
உந்தன் மோன வாழ்வினில்….

அன்னை நீ! தந்தை நீ!
விண்ணும் நீ! மண்ணும் நீ!
கீதை போலே உந்தன் பேரை
ஓதும் பேதை நான்….

நாள்தோறும் நான் வாழ
கண்ணா நீ‌ காரணம்
அன்போடு நின்றாடும்
உன் நினைவு தோரணம்

கல்வி செல்வமும் அன்பு செல்வமும்
வாரித் தந்தவன் நீயே!
நாளும் என்னையே
வாழவைத்திடும்
பேசும் தெய்வம் நீயே!

என்னை வணங்கிடும்
என்னை ஏந்திடும்
மோனவல்லியே
வெள்ளை மனத்தில்
அன்பை மேவியே என்னை ஆளும் கோதையே
என் மன மேடையில்
நீ தான் ராதையே
என் நினைவில் வாழ்ந்திடும்
என் சுவாச பாதையே

என்னுயிர் நீ அல்லவா
இன்னும் நான் சொல்லவா
நீதான் மனைவி நீதான் காதலி
நீதான் என் வசந்தம்

நாள்தோறும் நான் வாழ
கண்ணா நீ‌ காரணம்
அன்போடு நின்றாடும்
உன் நினைவு தோரணம்

– சரவிபி ரோசிசந்திரா

ஜீவலதாவின் கவிதைகள்

ஜீவலதாவின் கவிதைகள்




நினைவுகள்
***************
முற்றத்திலே
நீ பழகிய நடைவண்டி
அழுது அசந்து
நீ தூங்கிய தூளி!
சமைத்து கலைத்து
நீ விளையாடிய செப்புச் சாமான்
புது உடை அணிந்து
நீ ரசித்த நிலை கண்ணாடி
கற்பனை தாங்கி
நீ வரைந்த ஓவியத்தாள்
இவை யாவும்
என் தனிமையில்
உன் நினைவுகளாய்!
*************************

ஏதோ ஒரு உந்துதலில்
கவிதை எழுத எத்தனித்த பொழுது
நான் கற்றுக் கொண்ட
வார்த்தைகள் அனைத்தும்
சுழியமாய்   சூன்யமாய் ஆயின!
ஆனால்,
இதில் ஏதோ
கள்ளத் தனம் உள்ளதோ ?
இது எப்படி….
உன்னை நினைத்து
மை தொடுக்கும் போதே
முகில் தோன்றி
வார்த்தைத் தூறலாய்
தூறிக் கொண்டிருந்த
என் எழுத்துகள் அனைத்தும்
நடையெடுத்து
அணிவகுத்து
இலக்கணம் தொட்டு
கவிதையானதே !!!
செ. ஜீவலதா
இராஜபாளையம்
கவிதை வாத்தியார் – பாங்கைத் தமிழன்

கவிதை வாத்தியார் – பாங்கைத் தமிழன்




உம்மை
நினைவில் கொள்ளமாட்டோம்
என்றுதானே
இன்றைய நாளை
உங்கள் நினைவு நாளாக
கொடுத்து விட்டீர்?

வலிகளின் நிவாரணம்
உங்கள் வரிகள்;

பொய்களை
பிறருக்காக கவிதையில்
வைத்தீர்…

உண்மைகளை உடைத்து
இதயம் காட்டினீர்….

கவிதையை
எழுதியும், வாசித்தும்
காட்டிய கெட்டிக்கார
வாத்தியாரே…

இன்னும்
கற்றுக்கொள்ள
முயலாதோரெல்லாம்
கவிஞன் என்கின்றார்;

வாலி….
நீங்கள் கவிஞனாக
இல்லாமல் போயிருந்தால்
கவிதையின் வடிவமும் வீச்சும்
இந்நேரம் காணாமல் போயிருக்கும்!

சுவை நிறைந்த சொற்களை
சுவைத்துப் பார்த்து
கனியான கவிதைகளைக்
கொடுத்தக் கவிக்கிளி நீ!

பறந்துதானே போயிருக்கிறாய்?

திரும்ப வருவாய்தானே
தீஞ்சுவை கவிதைக் கனிகளோடு;
கவிஞர்களின் வடிவங்களில்? !

(காவியக் கவிமேதை வாலி விட்டுச்சென்ற வலிமிகுந்த நாள் நினைவாக )

– பாங்கைத் தமிழன்

பாவ கணக்கில்  கவிதை – கனிராஜ் சௌந்திரபாண்டியன்

பாவ கணக்கில் கவிதை – கனிராஜ் சௌந்திரபாண்டியன்




நினைவுச்சிறகுகளை விட்டுச்செல்லும்
புல்லினங்களின் வருகைக்காக காத்திருக்கும் கானகங்கள்

ஓலையேதும் எழுதுவதில்லை
உடன்படிக்கை  ஏதுமில்லை

பகலை எங்கோ தின்று
ஒரு பிரகாசமான இருளுக்காய் வரும்
அவைகளுக்கு அறிமுகமானான்
மனிதன் யாரென்று..!

கனிராஜ் சௌந்திரபாண்டியன்
இராம்நாடு