கவிதை: இறந்துபோன ஒரு சாலையை சாலையில் பார்த்தேன்-அஹ்லாம் பஸ்ஹாரத்
கொட்டும் மழை கவிதை – வளவ. துரையன்
இத்தனைநேரம் இறுமாப்புடன்
இதழோரம் புன்னகையுடன்
இளநடை போட்டவர்கள்
இப்போது ஒதுங்க இடம்
இதோ தேடுகிறார்கள்.
அவசர அவசரமாக
வீதிக் கடைக்காரர்கள்
நிர்வாணப் பொருள்களுக்கு
ஆடை உடுத்துகிறார்கள்.
படித்ததெலாம் மறந்துவிட்டால்
பாதையிலே எதை வைப்பதெனும்
பதைபதைப்பில் சில பேர்கள்.
முதலாளி பூதத்தின் வாயில்
மூழ்க வேண்டுமெனும்
முணுமுணுப்புடன் ஓட்டம்.
வீதியெலாம் சிறுசிறு
குட்டையாகி விடுமென
விதியை நொந்துகொண்டு
விழியில் கவனமாக
விரையும் உயிரினங்கள்.
ஆக
வரவேற்க யாருமின்றி
கொட்டிக்கொண்டிருக்கிறது மழை.
– வளவ. துரையன்
வெ.நரேஷ் கவிதைகள்
எட்டுவழிச் சாலை
விரைந்து செல்கிறது
வயலில் புகுந்து
வீட்டின் மேல்
********************
என் வீட்டு
அலார பொத்தானை
அழுத்தும் முன்
பல்லியின் சத்தம்
*********************
என் வருகை
உறுதியானதால்
கதவுகள் அடைக்கப்பட்டன
இப்படிக்கு மழைச்சாரல்
**********************
பேருந்தில் வாசகம்
திருடர்கள்
ஜாக்கிரதை
**********************
இவ்வுலகில்
எப்படியேனும் வாழ்ந்துவிடலாம்
என நினைத்தேன்
பூமி வரவேற்றது மரணத்தின்
வழியில்
**********************
நீ இருப்பதை விட
இறப்பது மேல் என்று
கோபத்தில் கசிந்து விழும் அம்மா
கொஞ்சம்கூட நினைத்துப் பார்க்கவில்லை
இறந்து போவேன் என்று
– வெ.நரேஷ்
குடிமைப் பணிகளால் குலைந்து போய் கிடக்கும் சென்னை – அ.பாக்கியம்
குடிமைப் பணிகளால் குலைந்து போய் கிடக்கும் சென்னை:
பாதுகாப்பான நகரம் என்றால் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடைபெறாத அச்சமற்ற வாழ்க்கை இருப்பதற்கு அர்த்தம் தான் பாதுகாப்பான நகரம் என்று நமது பொது புத்தியில் பதிவாகி இருக்கிறது.
இவையெல்லாம் சென்னையில் குறைவாக இருக்கிறது என்று சொல்ல முடியாது. மழை நீர் வடிகால்வாய் பள்ளத்திலும், மெட்ரோவாட்டர் பள்ளத்திலும், இரு சக்கர வாகனங்கள், கார்கள், மாடுகள், மனிதர்கள், விழுந்து செத்துக் கொண்டிருப்பது அன்றாட நிகழ்வுகளாக மாறிக்கொண்டிருக்கிறது.
இதுவும் பாதுகாப்பற்ற நகரம் என்பதற்கான அடையாளங்களே. இதன் முலம் நடைபெறும் விபத்துக்களும் அதிகமாகி உள்ளன.
தற்போது சென்னையில் குடிமை மராமத்து பணிகளை அரசு தீவிரமாக நடத்தி வருகிறது வரவேற்கக் கூடியது தான்.
ஆனால் மராமத்து பணிகள் சரியான திட்டமிடல் இல்லாததால் சென்னை சீர்குலைந்து கிடக்கிறது. அதே நேரத்தில், ஒப்பந்தகாரர்கள், அதிகாரிகள், உள்ளூர்கவுன்சிலர்கள் பணிகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்தாத நிலையில் இந்த விபத்துக்கள் தொடர்கிறது.
ஒரே நேரத்தில் ஆறுக்கும் மேற்பட்ட துறைகள் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள். மழைநீர்வடிகால்வாய் அமைப்பது, பாதாள சாக்கடை, நிலத்தடியில் மின்சார கேபிள்கள் பதிப்பு, சாலைகள் அமைப்பு, பாலம் கட்டுதல், மெட்ரோ ரயில் திட்டங்கள் என பணிகள் நடைபெறுகிறது.
சென்னை தாம்பரம் ஆவடி மாநகராட்சிகளில் 170 சாலைகள் துண்டிக்கப்பட்டு கிடக்கிறது, மழைநீர் வடிகால்வாய் அமைப்பதற்காக 644 இடங்களில் பள்ளங்கள் வெட்டப்பட்டு கிடக்கிறது. மெட்ரோ வாட்டர் 250 இடங்களில் குழிகளை வெட்டியுள்ளது. வடசென்னை தண்டையார்பேட்டை பகுதியில் 251 சாலைகளும், ஆலந்தூரில் 209 பெருங்குடியில் 186 சாலைகள் படுமோசமாக உள்ளன.
சென்னை மாநகராட்சியில் உள்ள பெரிய நீளமான சாலைகளில் 80 சதவீதம் வேலைகள் முடிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் 2000 க்கும் மேற்பட்ட உட்புற சாலைகள் சீரமைக்க வேண்டிய தேவை உள்ளது. இவற்றில் 1737 உட்புற சாலைகள் அதாவது 257.9 கிலோமீட்டர் தூரம் உள்ள சாலைகளை சீரமைக்க அரசு 400 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதில் 169.3 கோடி முதல் கட்டமாக பயன்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
இவையெல்லாம் விதிகளை கடைபிடிக்காமல், வெட்டப்படும் மண் கற்களைச் சாலையிலே போடுவதும் பள்ளங்களைச் சுற்றி தடுப்பரண்களை அமைக்காமல் இருப்பதும் அன்றாட நிகழ்வுகளாக இருக்கிறது.
விதிகளை கடைபிடிக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்தாலும் அது முழுமையாக அமலாவதில்லை.
அதிகாரிகள் மக்கள் உயிரைப் பற்றி கவலைப்படுவதில்லை.
உதாரணமாக, நெற்குன்றத்தில் தடுப்பரண்களை வைக்காத ஒப்பந்ததாரர்களிடம் தினசரி 500 ரூபாய் என்று நான்கு நாளைக்கு 2000 மட்டும் வசூலித்து அபராதத்தை முடித்துக் கொண்டார்கள். இவையெல்லாம் அதிகாரிகளின் சித்து விளையாட்டுக்கள்.
மின்வாரியம் மின்சார கேபிள்களை புதைப்பதில் எந்த விதிகளையும் கடைபிடிப்பது இல்லை. குறைந்த மின்னழுத்த கேபிள்களை ஒரு அடி ஆழத்துக்கு கீழ் பதிக்க வேண்டும் என்ற விதியை கடைப்பிடிக்காமல் அரை அடி கூட பள்ளம் தோண்டாமல் பதித்து விடுவதும், நடைபாதைகளில் மேலே போட்டு செல்வதும் அன்றாடம் காட்சிகள்.
இதைவிட ஆபத்தானது உயர் மின்னழுத்த கேபிள்களை ஒரு மீட்டர் ஆழத்தில் பதிக்க வேண்டும் என்று விதி இருந்தாலும் அவற்றை அரை அடி ஆழத்தில் கூட பதிக்காமல் தரையில் மேலேயே போட்டிருக்கக்கூடிய காட்சிகளை நாம் அனைவரும் பல இடங்களில் காணலாம்.
சாலைகளை வெட்டுவதற்கு முன்பாக அதை மீண்டும் சீரமைப்பதற்கு மாநகராட்சியிடம் முன் தொகை செலுத்திய பிறகு தான் வெட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. பிரதான சாலைகளில் வெட்டுவதற்கு சென்னை மாநகராட்சியும், உட்புற சாலைகளை வெட்டுவதற்கு மண்டல அலுவலகத்திலும் பணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும்.
மழை நீர் வடிகால்வாய் துறை, மெட்ரோ வாட்டர், மின்வாரியம் என யாரும் அனுமதி பெறுவதில்லை என்ற புகார்கள் தான் உள்ளது. சமீபத்தில் மாநகராட்சியின் பொறியாளர்கள் ஒரு புகாரை மேல் இடத்திற்கு தெரிவித்துள்ளார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் அனுமதியின்றி சாலைகளை வெட்டுவதற்கு உதவிசெய்கின்றனர் என்று புகார் தெரிவித்துள்ளனர்.
பணிகள் முடிந்த இடத்தில் இருக்கக்கூடிய கழிவுகளை அப்புறப்படுத்தாத நிலைமை உள்ளது. எங்கே பள்ளம் வெட்டப்பட்டது எங்கே மூடி இருக்கிறார்கள் என்ற அன்றாட விவரங்களை அறிந்து கொள்ள கூடிய அளவுக்கு மாநகராட்சியின் செயல்பாடுகள் இல்லை.
திட்டங்கள் அமலாவதற்கு முன்பாக துறைகளுக்கிடையிலான கூட்டங்களை நடத்தி அவற்றில் முறையான திட்டமிடலை உருவாக்காதது இந்த நிலைமைக்கு காரணம் என்று வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த ஒருங்கிணைப்பு குறைபாடுகளால் விபத்துக்கள் அதிகமாகியுள்ளது. 2021-ம் ஆண்டு மாதம் தோறும் 300 சாலை விபத்துக்கள் நடந்தது. இதில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு சிறிய காயங்கள் ஏற்படுத்தக்கூடிய விபத்துக்கள். 2022 ஆம் ஆண்டின் கடந்த ஆறு மாதங்களில் 2400 க்கு மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது.
சாலைகளில் அள்ளிப் போடப்பட்டுள்ள மராமத்து பணிகளின் கழிவுகளால் விபத்துக்கள் ஏற்படுகிறது. அத்தனை பணிகளும் ஏக காலத்தில் நடப்பதால் சென்ற ஆண்டைவிட குறைவான வாகனங்கள் சாலைகளில் சென்றாலும் சென்றடையும் நேரம் அதிகமாகி உள்ளது உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்க்கும் இந்த நிலைதான்.
அரசின் முடிவுகளை அமுலாக்குவதற்கான துறைகள் சீர் கெட்டுப்போய் கிடக்கிறது. இவற்றை சரிபடுத்தாமல் மக்கள் திட்டங்கள் முழுமையாக நிறைவேறாது. அத்தனை திட்டங்ளும் அறைகுறையாக நடந்து மக்களி பணம் கொள்ளயடிக்கப்படும்.
-அ.பாக்கியம்
கலா புவன் கவிதை
ஞாபக யுத்தங்கள்
என் எதிரே
மேசை மேல்
ஒரு கோப்பைத் தேநீர்
ஆவிபறக்க காத்திருக்கிறது
எதோ ஒரு ஞாபகத்தின்
பின் நான்
அதன் வாலைப்பிடித்துக்கு கொண்டு
நடந்து கொண்டிருக்கிறேன்
காலச்சுவடுகள் என் கண்முன்னே விரிய
துன்பங்களும் துயர்களும்
நட்பும் காதலும்
அன்பும் வெறுப்பும்
தொடர் பரிமாணங்களாய்
விசனங்களை வசனங்களாய்
மாற்றிப் போட்ட
நினைவுப் பாதையில்
நடக்க நடக்க
ஒளிமயமாய் கண்ணுக்கு முன்
பிரகாசக் கதிரவனாய்
தென்படத் தொடங்கிற்று ….
நினைவுக் குளியலில்
குளித்து முடித்து
தலை துவட்டிக் கொண்டு
நான் மீள வரும் போது
கோப்பைத் தேநீரில்
ஆடை கட்டியிருந்தது
எடுத்துப் போட்டு விட்டு குடித்தேன்
நினைவுச் சாலையோர
செடிகளின் பூக்கள்
மோகன வாசகங்களை
நுகர வைக்கின்றன
நுகர்ந்து கொண்டே நான்
பயணிக்கிறேன்
சமரசமே சமரின் விடியல்
————கலா புவன் ——–
குறுங்கவிதைகள் – வசந்ததீபன்
குறுங்கவிதைகள்
_________________________
ஆகாயத்தில் மேகங்களில்லை
நெருப்பு கொட்டியது
நிலமெல்லாம் ரத்தம்
விமானங்கள் மறையத் தொடங்கின.
🦀
நதியை வரைந்தேன்
மீன்கள் துள்ளின
பறவைகள் பறந்தன
மணல் வண்டிகள் வரத் தொடங்கின.
🦀
கோவணத்தையும் இழந்து
சாலைகளில்
உலகத்திற்கு உணவூட்டிய
கடவுள்கள்.
🦀
நட்சத்திரங்களைப்
பார்த்தபடி
ஏக்கத்துடன் கழிகிறது
கண்ணீரில் நனைந்த நிகழ்காலம்.
🦀
தேவதைகள் சிறகுகளுடன் வருவார்கள்
அற்புதங்களை நாளும் நிகழ்த்துவார்கள்
குழந்தைகளின் கனவுகள் விதைப்புக்காலம்.
🦀
ஓநாயின் நாக்கில் பசி ஊறிச் சொட்டுகிறது
மரங்கள் கூட அசையாமல் நிற்கின்றன
பிடரியிலுள்ள உண்ணியை தட்டிவிட
அது பெரு முயற்சியெடுக்கிறது.
🦀







