உலகப் புகழ் பெற்ற ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் களம் 2 – தமிழில்: தங்கேஸ்
உலகப் புகழ் பெற்ற
ஷேக்ஸ்பியரின்
Romeo and Juliet Act 2, Prologue
ரோமியோ ஜுலியட் களம் 2
( முன்னுரை )
பழைய இச்சை மரணப் படுக்கைக்கு சென்று விட்டது
இப்போது ஒரு புத்தம் புதிய அரும்பு
துளிர்விட்டிருக்கிறது. அவ்விடத்தில்
அன்று ரோசலினுக்காக அழுது அரற்றியவன் தான்
இந்த ரோமியோ
அவளில்லையென்றால் மரணத்தை அள்ளிக்கொள்வேன்
என்று சபதமெடுத்தவனும் அவன் தான்
இன்றோ ஜுலியட்டின் பேரெழிலில் மதிமயங்கி
திளைத்துக் கிடக்கிறான்
ஜுலியட்டின் அழகுக்கு முன்னால்
ரோசலின் ஒன்றுமேயில்லை
என்று தெரிந்து விட்டது இந்த நொடியில்
ரோமியோ ஜுலியட்டை நேசிக்கிறான்
ஜுலியட் ரோமியோவை நேசிக்கிறான்
நேசமென்னும் பெருவெளி
விண்ணென விரிந்து செல்கிறது.
என்னுயிர் காதலி
எதிரியின் மகளாகி விட்டாளே
என்பது மட்டுமே இப்போது
ரோமியோவுக்குள் இருக்கும் சிறுகலக்கம்
அங்கே ஜுலியட்டுக்குள்
காதலென்னும் நோய் புகுந்து
பசலை நோய் சேர்க்கிறது
பகலை இரவாக்குகிறது
இரவைப் பகலாக்குகிறது
ரோமியோவின் பெயரைச் சொன்னால்
மரணம் கூட அவளுக்கு தித்திக்கிறது
ஜுலியட் அழகிய தேவதை!
கொடிய முள்ளில் குத்தப்பட்டிருந்த காதலின் இரையை
தன் கண்களாலேயே கவர்ந்து சென்று விட்டவள். அவள்
ஆனால் அவளுக்கு தெரியாது
அய்யோ அவளே
அந்தக் காதலின்
இரையாகி விட்டாளென்று
அவளுக்கு காதல்
புத்தம் புதிய சிறகை தந்திருக்கிறது
ஆனால் அவளால் பறந்து சென்று
தன் காதலனை தரிசிக்க முடியவில்லை
ஏன் ?
அவனோ எதிரியின் மகன்
விழியோடு விழி நோக்கி கிடக்க
அவள் விரும்பினாலும்
காதலின் உளக்கிடக்கையை
கவிழ்த்து கொட்டிவிட நினைத்தாலும்
முடியவில்லையே
அவனை சந்திக்க இயலவில்லை
முத்தங்கள் பரிமாறிக்கொள்ள முடியவில்லை
காதல் பித்து அவர்களின் சொத்தாகிப் போனபின்
உளறல்களும் சூளுரைகளும் தானே
காதலர்களின் உற்சவங்கள்
ஆனால் அய்யோ !
இங்கே காதலர்களால் சந்தித்து கொள்ளவே
இயலவில்லையே..
துயரமலர் முள்ளைப் பூக்கிறது
காதல் என்னும் பேருணர்வு
அவர்களுக்கு இப்போது சக்தி தருகிறது.
காலம் அவர்களுக்குள்
ஒரு உன்னத சந்திப்பை உண்டாக்கி தருகிறது.
ஆனாலும் அந்த சந்திப்பினால் விளையப் போவது என்ன?
தளிர் போன்ற காதலினால் மரணம் என்ற சருகை
வரைவதற்கு பெயர் தானே சந்திப்பு
மூலம் ; ஷேக்ஸ்பியர்
மொழிபெயர்ப்பு ; தங்கேஸ்


