வில்லியம் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் (களம் 1 காட்சி 5) – தமிழில் – தங்கேஸ்
களம் 1 காட்சி 5
இடம் வெரானோ கேபுலட் அரண்மனை
பாத்திரங்கள் ரோமியோ ஜுலியட் ரோமியோ நண்பர்கள் முதிய கேபுலட் தம்பதியர் வீட்டு வேலைக்காரர்கள்
(ரோமியோவும் ஜுலியட்டும் முதன் முதலாக சந்தித்து இதயங்களை இடம் மாற்றிக் கொள்ளும் காட்சி இது . இதை ஒரு காவியமாகவே படைத்திருக்கிறார்க ஷேக்ஸ்பியர் என்னும் மகா கலைஞன். )
கதை சுருக்கம்
கேபுலட் தனது வீட்டில் ஒரு விருந்துக்கு அன்றைய இரவு ஏற்பாடு செய்திருக்கிறார். நகரின் முக்கிய பிரமுகர்கள் உறவினர்கள் அனைவரும் விருந்துக்கு வருகிறார்கள்.
விருந்து அமைதியாகவும் சிறப்பாகவும் நடக்க வேண்டும் என்பதும் தனது மகள் ஜுலியட் தனது உறவினரான பாரிஸ் உடன் நட்பாக பழகி திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும் என்பதும் முதிய கேபுலட்டின் விருப்பம் அதனால் தானே முன்னின்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிறார். விருந்தினர்களை உபசரிக்கிறார்.
இந்த விருந்தில் கலந்து கொண்டு நடனமாடுவதற்காக ரோமியோவின் நண்பர்களும் , தன்னை விரும்பாத தனது காதலி ரோசலினை காண வேண்டும் என்ற ஆவலில் ரோமியோவும் முகத்திற்கு கருப்பு முகமூடி அணிந்து அந்த விருந்துக்கு வருகிறார்கள்.
விருந்தில் ஜுலியட்டின் அழகில் திளைத்துப் போன ரோமியோ வாய் விட்டு அவளது அழகைப் போற்றுகிறான். கேபுலட்டின் உறவினன் டைபால்ட் ரோமியோவின் குரலை வைத்து அவனை ரோமியோ என்று அடையாளம் கண்டு கொள்கிறான்.. அவனை அங்கேயே கொன்று விட துடிக்கிறான். ஆனால் முதிய கேபுலட் விருந்தில் எந்த அசம்பாவிதமும் நிகழக்கூடாது என்றும் ரோமியோவை கொன்று விடக்கூடாது என்றும் டைபால்டிற்கு உத்தரவிடுகிறார்.
ரோமியோ ஜுலியட்டை முதன் முதலாக நேரில் சந்திக்கிறான். அவளின் கரங்களிலும் இதழ்களிலும் முத்தமிடுகிறான். தங்களின் எதிரி என்று தெரியாமலே இருவரின் இதயங்களும் இடம்மாறுகின்றன.
ஒரு தேர்ந்த திரைக்கதை ஆசிரியன் போல இந்த காட்சியை அற்புதமாக அமைத்திருக்கும் ஷேக்ஸ்பியர் தான் ஒரு மகா கலைஞன் என்பதை ஒவ்வொரு பாத்திரத்தின் உரையாடல் வாயிலாகவும் நிருபித்துக்கொண்டேசெல்கிறார்
இனி உரையாடல் மொழிபெயர்ப்பு
( கேபுலட்டின் அரண்மனையில் பீட்டரும் மற்ற வேலைக்காரர்களும் பரிமாறும் பாத்திரங்களையும் பரிமாறும் போது மேலே போர்த்திக் கொள்ளும் ஏப்ரான் துணிளையும் எடுத்துக் கொண்டு விருந்து கூடத்திற்கு வருகிறார்கள் . பீட்டர் தலைமை வேலைக்காரன் மிகவும் பரபரப்பாக மற்ற பணியாளர்களை விரட்டி வேலை வாங்கிக் கொண்டு இருக்கிறான் )
பீட்டர்” :
அந்த உதவாக்கரை சோம்பேறிப் பய பாட்பான் எங்கே போயிட்டான் ? ஒரு பயலும் இந்த சாப்பாட்டு மேசையை இன்னும் சுத்தம் பண்ணல
யாரும் ஒரு பாத்திரத்தை கூட எடுத்து ஓரமா வைக்கலை
முதல் பணியாள் : ( தன்னையே புகழ்ந்து )
என்ன செய்யறது இருக்குற கொஞ்சம் நஞ்சம் நல்ல பழக்க வழக்கமும் ஒருத்தன் ரெண்டு பேர் கைல தான் இருக்கு
அவங்களும் கூட எப்பவும் அழுக்காவே இருக்குறாங்க .
யாரை குறை சொல்றது ?
பீட்டர்” :
இந்த குட்டை நாற்காலிகளையெல்லாம் அப்புறப்படுத்துங்க.
பசி பசி தாங்க முடியலை எனக்கு
முதலில் என்னை காப்பாற்றுங்க
கொஞ்சம் இனிப்பு உணவை எடுத்து வா
முதல்ல நான் கொஞ்சம் கொட்டிக்கிறனும்
உணவை எடுத்து வருபவர்கள் எங்கே ?
சூசன் கிராண்ட் ஸ்டோன் , நெல் ஆண்டனி அந்த பாட் பான் எல்லாரையும் உடனே அழைத்து வா ஓடு ஓடு…
நான் ரெடி
முதல் பணியாள் :
நானும் ரெடி தான்
பீட்டர்” :
நல்லா கவனிங்க, விருந்து நடக்குற இடத்துல உங்களை
ஒரு பக்கம் தேடிகிட்டே இருப்பாங்க
இன்னொரு பக்கம் உங்களை கூப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க
முதல் பணியாள் :
நாங்க எப்படி ஒரே நேரத்துல இரண்டு இடத்துல இருக்க முடியும் ?
பீட்டர்” :
சரி சரி நண்பர்களே
ஒரு நொடியில தயராகுங்க பார்க்கலாம் .
தாமதமாக தயராகுறவனை சாபம் பிடிச்சு ஆட்டும்
அவன் எப்பவுமே பாத்திரங்களை சுரண்டிகிட்டே கிடப்பான் பார்த்துக்கோ
( பீட்டரும் மற்ற வேலைக்காரர்களும் உள்ளே வருவதும் வெளியே செல்வதுமாக இருக்கிறார்கள். மேசை நாற்காலிகளை ஒழுங்கு படுத்துகிறாகள். அந்த இடமே ஒரே களேபரமாக இருக்கிறது. )
( விருந்தினர்களைப் பார்த்து கேபுலட் வேடிக்கையாக பேசுகிறார்)
கேபுலட்:
சீமான்களே ! சீமாட்டிகள ! கவனிங்க !
எந்த எந்த இளம் பெண்களுக்கெல்லாம் பாதங்கள்ஆரோக்கியமா இருக்குதோ
அவங்க எல்லாமே உங்களோட இப்ப நடனமாடுவாங்க
சரி தானே அழகு பெண்களே !
இங்க கவனிங்க உங்கள்ள யாராவது இன்னிக்கு நடனமாட
மறுப்பீங்களா ?
அப்படி மறுத்தா உங்க குதிங்கால்கள்ள எல்லாம்
கொப்புளங்கள் இருக்குதுன்னு அர்த்தம்
சரியாச் சொன்னேனா ,
வாங்க சீமான்களே சீமாட்டிகளே !
நானும் ஒரு காலத்துல முகத்துல முகமூடியை மாட்டிக்கிட்டு
ஒரு அழகான இளம் பெண்ணோட காதுக்குள்ள போய்
இரகசியமா கதை சொன்னவன் தான்
( எங்கும் சிரிப்பலைகள் )
ம்ம் அந்தக்காலம் இனி திரும்பி வராது
இளைஞர்களே இளைஞிகளே !
வாங்க ஆரம்பிக்கலாம்
இசைக்க ஆரம்பியுங்கள் இசைக்கலைஞர்களே !
( இசை கேட்கிறது )
நடனம் ஆரம்பமாகட்டும் !
( நடனம் ஆரம்பிக்கிறது )
இந்தக் கூடத்தில் ஒவ்வொருவருக்கும் உரிய இடம் கொடுங்கள்
இளம் பெண்களே வாருங்கள்
( பணியாட்களைப் பார்த்து )
வெளிச்சம் இன்னும் தேவை
சரி சரி நடனத்திற்கு இடையூறாக இல்லாமல்
மேசை நாற்கலிகளை அப்புறப்படுத்து.
அப்படியே கணப்பு அடுப்பில் தீயை கொஞ்சம் குறைங்க
ரொம்ப சூடா இருக்குது
( தனது உறவினர் இளைய கேபுலட்டிடம் திரும்பி )
எதிர்பாராத விருந்தினர்களெல்லாம் வந்திருக்காங்கல்ல ?
வரவேற்பு நல்லா இருக்குதா ?
சொல்லு சகோதரா !
நாம இரண்டு பேரும் முகத்துல மூகமூடிய மாட்டிகிட்டு
நடனமாடி கடைசியா எத்தனை காலம் ஆயிருக்கும் ?
கேபுலட்டின் உறவினர் :
( வேடிக்கையாகப் பேசுகிறார் ).
கன்னிமேரி மீது ஆணையாக சொல்றேன்
முப்பது வருடங்கள் முடிஞ்சிருக்கும்
( அப்போது கேபுலட்டின் மிக முக்கிய உறவினர்கள் அனைவரும் உள்ளே நுழைகிறார்கள் அவர்களோடு சேர்ந்து டைபால்ட் கேபுலட்டின் மனைவி திருமதி கேபுலட் மகள் ஜுலியட்: ஆகியோரும் உள்ளே நுழைகிறார்கள்
கேபுலட் தனது உறவினரைப் பார்த்து மறுபடியும் உரையாடலைத் தொடர்கிறார் )
கேபுலட்
இதோ பாரு நண்பா !
முப்பது வருடமெல்லாம் கடந்திருக்காது
ஒரு இருபது வருடம் அல்லது இருபத்தைந்து வருடங்கள்
கடந்திருக்கலாம் அவ்வளவு தான்
சரியாச் சொன்னா கடைசியா நாம முகமூடி மாட்டுனது
லுசெண்டியா திருமணத்துக்குத்தானே ?
என்ன சொல்ற என்ன சொல்ற ?
லூசெண்டியா திருமணத்திற்கு தான ?
அடகாலம் எவ்வளவு வேகமா வேணாலும் பறக்கட்டுமே
அதெல்லாம் முப்பது வருசம் கடந்திருக்காது
என்ன ஒரு இருபத்தஞ்சு வருசம் ஆயிருக்கலாம்
கேபுலட்டின் உறவினர் :
அதெல்லாம் இல்லை ரொம்ப காலம் ஆயிடுச்சு
ரொம்ப காலம்
அதாவது லூசெண்டியாவோட பையனுக்கே
இப்ப முப்பது வயசு முடிஞ்சிருச்சு
கேபுலட்
அதென்ன அப்படி சொல்ற ,?
ரெண்டு வருசத்துக்கு முன்னால கூட அந்தப் பையன்
ரொம்ப சிறுவனாத்தான ( மைனராக ) இருந்தான்
ரோமியோ : ( ஜுலியட்டைப் பார்த்துவிட்டு மலைத்துப்போய் பரிமாறுபவனிடம் விசாரிக்கிறான் )
அதோ அங்க நிக்கிற தோள்மீது
சாய்ஞ்சுகிட்டிருக்குதே அந்த அழகுப் பொண்ணு
அது யாருன்னு தெரியுமா ?
பரிமாறுபவன்.
எனக்குத் தெரியாது சார்
ரோமியோ :
அவளை உனக்குத் தெரியாதா ?
ஓ அவளிடம் தான் எத்தனை வசீகரம் ?
விளக்குகளுக்கு வெளிச்சம் தருவது எப்படி என்று
அங்கே அவள் வகுப்பெடுத்துக்கொண்டிருக்கிறாள்.
இந்த இரவின் கருமைக்கன்னத்தில் ஓளிவீசும்
ஒரு உயர்ந்த ஆபரணமாக அவள் திகழந்து கொண்டிருக்கிறாள்.
அவளது அழகு ஆராதனைக்கும் அப்பாற்பட்டது
அழிவை எந்நாளும் எட்டாதது
இந்த உலகமே கூட அதற்கு ஈடாகாது தெரியுமா ?
கருங் காக்கை கூட்டத்திற்குள் நுழைந்த
பளிங்கு வெண்புறா அவள்
இப்பொழுதே எழுதி வைத்துக்கொள்
இந்த நடனம் முடியும் தருவாயில்
இந்த அழகி இங்கே இருக்கும் அத்தனை பெண்களையும்
இந்த அழகி தனது ஒப்பற்ற அழகினால் ஓரங்கட்டி விடுவாள்
அவள் அப்போது எங்கே நிற்பாளோ
அவ்விடம் நான் செல்வேன்
என் கரடு முரடான கைகளால்
அவளது மிருதுவான கரங்களை தொட்டு ரசிப்பேன்
அவைகள் உளனே ஆசீர்வதிக்ப்பட்டு விடும்
அவளின் ஒரே தீண்டலில் அவைகள் புனிதமாகி விடும்
அவ்வளவுதான்..
இதற்கு முன்பு மனதார நான் யாரையாவாது காதலித்தேனா ?
இல்லை இல்லை அப்படி இல்லவே இல்லை
அப்படி காதலித்திருந்தால்
இவளைப் பார்த்த நொடியே
அந்தக் காதல் துறவறம் பெற்றிருக்கும்
அவ்வளவு தான்
நான் சத்தியம் செய்கிறேன்
இரவின் இந்த நொடி வரை
அற்புத அழகின் ஒப்பற்ற சொரூத்தை
இதைப்போல நான் கண்களால் கண்டதேயில்லை !
டைபால்ட் ( கேபுலட்டின் உறவினன் இளைஞன், ரோமியோவின் குரலை வைத்து அவனை அடையாளம் கண்டு கொள்கிறான் )
இந்த குரலை வைத்தே இது யாருன்னு தெரியுது.
வந்திருக்கிறது ஒரு மாண்டேக்கு தான் .
அதுவும் நம்ம சென்ம விரோதி அந்த ரோமியோ
( தனது பணியாளிடம் திரும்பி கோபமாக )
உடனே என் உடைவாளை கொண்டு வா
அவன் தலையை இங்கேயே சீவி விடுகிறேன்.
( தனக்குள்ளாகவே)
என்ன தைரியம் இருந்தால் எதிரி நம் வீட்டிற்குள்ளேயே புகுந்திருப்பான். ?
அதுவும் முகத்தை மூடிக்கொண்டு மாறுவேடத்தில்.
இந்த விருந்தை எள்ளி நகையாடுவதற்கும்
ஏளனம் செய்வதற்கும் தான் அவன் இவ்விடம் வந்திருக்க வேண்டும்
என் குடும்ப கௌரவத்தை குலைக்க வந்தவனை
நான்கொல்வதால் எனக்கு ஒரு பாவமும் வந்து விடாது.
அவன் தலையை இப்போதே இங்கேயே கொய்து விடுகிறேன்.
கேபுலட் ( டைபால்டிடம் வந்து அமைதியாக )
என்ன மருமகனே
ஏன் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறாய். ?
டைபால்ட் :
மாமா அதோ சென்ம எதிரி மாண்டேக்
நம் விருந்துக்கு திருட்டுத்தனமாக வந்திருக்கிறான்.
என்ன தைரியம் இருந்தால் அவன் இங்கேயே நுழைந்திருப்பான். ?
நமது விருந்தை எள்ளி நகையாடவும் சீர்குலைக்கவும் தான்
அவன் இங்கே வந்திருக்க வேண்டும்..
கேபுலட் ( ஆச்சரியத்துடன் அந்த உருவத்தை சுட்டிக்காட்டி)
இளைய ரோமியோவா இது ?
டைபால்ட் :
அவனே தான் மாமா அவனே தான் அது
நமது எதிரி ரோமியோ
அவன் குரலை வைத்தே அவனை
அடையாளம் கண்டு கொண்டேன்.
கேபுலட் :
அமைதியாக இரு மருமகனே !
ஆத்திரப்பட வேண்டாம்.
இந்த ரோமியோ நமது விரோதியாகவே இருந்தாலும்
இப்போது வெறுக்கத் தக்கவன் அல்ல. .
இந்த வேரொனோவில் ரோமியோவுக்கு
மிக நன்னடத்தை கொண்ட இளைஞன் என்ற
ஒரு பெயர் இருக்கிறது.
இனிய இளைஞன் அவன் என ஒவ்வொருவரும்
புகழக் கேட்டிருக்கிறேன்.
அவனை என் கண்முன்னே இவ்வீட்டில்
நீ அவமதிப்பதை நான் அனுமதிக்க மாட்டேன்.
இப்படி நீ முறைக்க வேண்டாம்
அவனைப் பாராதது போலவே நடி
நீ இப்போது அவனைத்தாக்கினால்
இந்த விருந்தின் மாண்பு
சீர்குலைந்து விடும் என்று உனக்குத் தெரியாதா?
டைபால்ட் : ( கோபமாக )
இவனைப் போன்ற ஒரு பொறுக்கி
இங்கே உள்ளே நுழைந்தால்
நான் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டுமா ?
அது மட்டும் என்னால் முடியாது.
கேபுலட் :
பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் இளைஞனே !
பொறுமை இல்லையென்றால் நீ
இங்கேயிருந்து வெளியேறி விடு
( தனக்குள் ) கடவுள் என்னை மன்னிக்கட்டும்
வந்திருக்கும் விருந்தினர்களுக்கு மத்தியில்
நீ அவனோடு வம்பிழுத்தால்
இந்த கேபுலட்டின் மானம் போய் விடும்
மனிதர்கள் போல நாம் நடந்து கொள்ள வேண்டும்
விலங்குகளைப் போல அல்ல
புரிந்து கொள்
டைபால்ட் :
ஆனால் மாமா …. தன் வருகையினால்
அவன் நம்மை அவமதித்துக் கொண்டிருக்கிறான்
கேபுலட் :
இதோ பார் இளைஞனே !
நீ மிகவும் அவசரக்காரனாக இருக்கிறாய்,
அவசரத்தில் ஆத்திரப்படுவது முட்டாள் தனம்
ஆத்திரம் உன்னிடமே திரும்பி வந்து உனக்குத்
தீங்கு தான் விளைவிக்கும் .
என்ன என்னை எதிர்க்க வேண்டும் போல் இருக்கிறதா ?
உனக்கு நான் ஒன்று சொல்கிறேன் கேள்.
( விருந்தினர்களிடம் ) ஆட்டத்தை தொடருங்கள் நண்பர்களே
( டைபால்டிடம் ) போ போ போய் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இரு
நீ அமைதியாக இல்லாவிட்டால் நான் உன்னை
அமைதியாக்கி விடுவேன். தெரியுமா ?
( பணியாட்களிடம் திரும்பி ) வெளிச்சம் வேண்டும் வெளிச்சம்
( டைபால்டிடம் ) உன்னுடைய செயலுக்காக
நீ வெட்கப்பட வேண்டும்.
( விருந்தினர்களிடம் ) நடனத்தை தொடருங்கள் நண்பர்களே
இசை பரவட்டும்
நடனம் தொடரட்டும்
இசை பரவட்டும்
நடனம் தொடரட்டும்
டைபால்ட் : ( தனக்குள் )
அடக்கப்பட்ட ஆத்திரம் நெருப்பாக கொதிக்கிறது.
நெற்றிப்பொட்டு வெடிப்பது போல் சுடுகிறது.
கட்டுக்கடங்காத கோபத்தில்
என் உடலெல்லாம் நடுங்குகிறது.
இந்த அவமானத்தை
தாங்குவதை விட
உடனே நான் வெளியேறி விடுவது நல்லது தான்
ஆனால் அத்து மீறி இங்கே நுழைந்திருக்கும்
அந்த ரோமியோவுக்கு நான் யார் என்று காட்டி விட்டுப் போக வேண்டும்
அவனுக்கு இதெல்லாம் ஒரு வேடிக்கையாக இருக்கிறது
அய்யய்போ அதை நினைத்தாலே என் நெஞ்சு பற்றி எரிகிறது.
( ரோமியோ ஜுலியட்டின் அருகில் சென்று அவள் கரங்களை தன் கரங்களால் எடுத்துக்கொண்டு பேசுகிறான் )
ரோமியோ :
கோவிலைப்போன்ற புனிதமான
உங்களின் கரங்களை
கரடுமுரடான என் கரங்கள்
அசுத்தப்படுத்தியிருந்தால்
சொல்லி விடுங்கள்,
கடவுளை தரிசிக்க வந்த
இரண்டு பக்தர்களைப் போல பரவசத்திலிருக்கும்
என் இதழ்களால் அவைகளை மீண்டும்
புனிதமாக்கி விடுகிறேன்..
ஜுலியட் :
எப்படி ?
ரோமியோ :
முத்தங்களால் மென்மையான முத்தங்களால்
ஜுலியட் :
பரிவுள்ள பக்தனே !
உன் கரங்கள் அளவுக்கு அதிகமான
பக்தியை காட்டுகின்றன.
ஆனால் புனிதர்களைத் தேடி வரும் பக்தர்கள்
இப்படி இதழ்களால் பக்தியை காட்டுவதில்லை.
புனிதர்களின் கரங்களை தங்களின் கரங்களால் தொட்டுத்தான் தங்கள் பக்தியை தெரிவிப்பார்கள்
உள்ளங்கைகளை உள்ளங்கைகளோடு சேர்த்து
தான் உறவாட வைப்பார்களே தவிர
நீ சொல்வதைப்போல உதடுகளால் அல்ல.
ரோமியோ:
ஏன் அவர்களுக்கு புனிதர்களுக்கும் பக்தர்களுக்கும் உதடுகள் இல்லையா?
ஜுலியட் :
போலிப் பக்தனே அதை அவர்கள் பக்திக்கும்
மட்டும் தான் பயன்படுத்துவார்கள்
ரோமியோ:
புனிதரே !
அப்படி என்றால் உங்களிடம்
ஒரு வேண்டுங்கள்
எனக்கு பக்தி அதிகம்
என் கரங்கள் செய்கின்ற வேலையை
என் உதடுகள் செய்யட்டும்.
என் நம்பிக்கை பொய்த்துப்போனால்
நான் அவநம்பிக்கைக்கு ஆளாகி விடுவேன்
தெரியுமா ?
ஜுலியட் :
புனிதர்கள் இந்த போலி பக்திக்கெல்லாம் அசைவதில்லை
அவர்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதோடு சரி
ரோமியோ:
அப்படியென்றால் என் பிரார்த்னைகள் நிறைவேறும் வரை
நீங்கள் நகராதீர்கள் புனிதரே
( ரோமியோ ஜுலியட்டை முத்தமிடுகிறான். இருவருமே அசையவில்லை )
( ஜுலியட்டிடம் ) இப்போது
என்னுடிடய உதடுகளிலிருந்த பாவத்தை
உன்னுடைய உதடுகள் எடுத்துக் கொண்டன
அதனால் என்னுடைய உதடுகள் பாவத்திலிருந்து
மீட்சிமை பெற்று விட்டன.
இப்பொழுது உன்னுடைய உதடுகளில்
என்னுடைய பாவங்கள் எல்லாம்
ஒட்டிக்கொண்டிருக்கின்றன
பரிகாரம் தான் என்ன ?
ஜுலியட் : ( போலியாக )
அடப் பாவி அப்படியானால் என்னுடை உதடுகளில் ஒட்டியிருக்கும்
உன்னுடைய பாவங்களை உடனே நீ எடுத்து விடு
ரோமியோ:
என்னுடை உதடுகளிலிருந்து புறப்பட்டு
உன்னுதட்டில் ஒட்டிக்கொண்டனவா பாவங்கள்
அதை என்னுதட்டிற்கே மறுபடியும் எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால்
மறுபடியும் முத்தமிட்டே எடுக்க வேண்டும்
புனிதரே என்னை மீண்டும் மீண்டும்
இப்படிப்பட்ட பாவங்களையே செய்யத் தூண்டினால்
நான் சளைக்காமல் பாவங்களை செய்து கொண்டேயிருப்பேன்.
( என்று சொல்லி விட்டு ஆவல் தீராமல் முத்த மழை
பொழிகிறான் )
ஜுலியட் :
புனித புத்தகத்தில் சொல்லிய படி
மேன்மையாக முத்தமிடு
அத்து மீறாதே
( மறுபடியும் இருவரும் முத்தமிட்டுக்கொள்கிறார்கள் )
செவிலி ( ஜுலியட்டிடம் வந்து )
ஜுலியட் உன்னுடைய தாய் உடனே உன்னுடன் பேசவேண்டுமாம்
அழைத்து வரச்சொன்னார்கள்
( அகல மனதில்லாமல் ஜுலியட் அவ்விடத்தை விட்டு அகலுகிறாள் )
ரோமியோ: ( செவிலியிடம் )
யார் அவளுடைய தாய் ?
செவிலி :
இளைஞனே ! இவளுடைய தாய் தான்
இந்த வீட்டின் சீமாட்டி
நல்ல பண்புகளும் கருணையும் புத்திசாலித்தனமும்
ஒருங்கே கொண்டவள்.
நான் தான் அவளுடைய மக;s ஜுலியட்டை
வளர்த்து வருகிறேன்.
இதையும் கே;ட்டு விட்டு ஆச்சரியப்படு
அவளை மணக்கப்போகிறவன்
இந்த நகரின் மிகப் பெரிய செல்வச் சீமான்
என்பதை மறந்து விடாதே.
ரோமியோ ( தனக்குள்ளேயே அதிர்சியாக )
அவள் கேபுலட்டா !….
என்னுடைய வாழ்க்கை
என் எதிரியின் கரங்களிலா இனி ?
என் செய்வேன் நான் !….
பென்வாலியோ 🙁 ரோமியோவிடம் வந்து )
இது வரை எல்லாம் சிறப்பாக முடிந்து விட்டது
கிளம்பலாம் வா நண்பா ..
ரோமியோ:
நண்பா
இது வரை எல்லாம் சிறப்பாக முடிந்து விட்டது.
என்கிறாய்
இனி முடியவேண்டியது அப்படி இருக்காது .
கேபுலட் : ( அவர்களை தடுத்து )
இப்பொழுது கிளம்ப வேண்டாம் இளைஞர்களே. !
ஒரு சிறிய விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
அது எந்த நேரமும் வந்துவிடக்கூடும்
( அவர்கள் அவர் காதில் ஏதோ இரகசியமாக சொல்கிறார்கள் )
அப்படியா அப்படியென்றால் கிளம்புங்கள்
தங்கள் நல்வருகைக்கு மிக்க நன்றி
( பணியாளர்களைப் பார்த்து நிறைய டார்ச்சுகளை இங்கே கொண்டு வாருங்கள் . )
( குடும்பத்தினரைப்பார்த்து )
வாருங்கள் நாம் அனைவரும் தூங்கச் செல்லலாம்
(தனது உறவினரைப்பார்த்து )
கடவுள் அருளால் எல்லாம் சிறப்பாக முடிந்தது தம்பி
ஏற்கனவே தாமதாமாகிவிட்டது
நான் உறங்கச் செல்கிறேன்
ஜுலியட் : ( செவிலியிடம் )
இங்கே வா தாதியே
யார் அங்கே நின்று கொண்டிருப்பது ?
செவிலி:
அதுவா அது டைபீரியாவின் மகன்
அவருடைய வாரிசு
ஜுலியட் :
அவரில்லை இதோ இப்போது கதவை திறந்து
வெளியே சென்று கொண்டிருக்கிறாரே
அவரைப் பற்றித்தான் கேட்டேன்.
செவிலி:
அடடா அதுவா அது இளைஞன் பெட்ரூச்சியா தெரியாதா ?
ஜுலியட் :
ஓ நான் கேட்டது அவரில்லை. புரிகிறதா உனக்கு ?
இங்கே ஒரு இளைஞன் அப்படியும் இப்படியுமாக திரிந்து கொண்டிருந்தானே.
அவன் கூட கடைசிவரையிலும் நடனமாடவேயில்லையே
அவனைப் பற்றித்தான்
செவிலி:
அப்படி யாரையும் எனக்குத் தெரியாது பெண்ணே
ஜுலியட் :
போ போய் அவன் பெயரை உடனே கேட்டு வா
( செவிலி செல்கிறாள் )
( தனக்குள்ளேயே )
அவனுக்கு மட்டும் திருமணம் ஆகியிருந்தால்
கல்லறை தான் எனக்கு மணவறை )
செவிலி: ( திரும்பவும் வந்து )
அவனது பெயர் ரோமியோ,
அவன் உனக்கு உறவினன்அல்ல,
உங்களுடைய சென்ம எதிரியான மாண்டேக்கின் மகன்.
ஜுலியட் :
என்னது நான் விரும்பும் ஒருவன்
நான் வெறுக்கும் ஒருவரது மகனா ?
நான் அவனை முதலிலேயே அறிந்திருக்க வேண்டும்
அவனை நேசிக்க ஆரம்பிப்பதற்கு முன்பே
அவனைப் பற்றி விசாரித்திருக்க வேண்டும்
ஆனால் எல்லாம் கைமீறிப் போய் விட்டது இந்தக் காதலால்
காதலே எவ்வளவு கொடியவன் நீ !
என்னுடைய எதிரியின் மகனை என்னை நேசிக்க வைத்து
எள்ளி நனகையாடி விளையாடுகிறாய் நீ
செவிலி : ( பதட்டமாக )
என்ன ? என்ன ?
ஜுலியட் :
ஒன்றுமில்லை ஒன்றுமில்லை
என்னோடு நடனமாடியவரிடமிருந்து
இப்போது தான் ஒரு பாடலை கற்றுக்கொண்டேன்.
( யாரோ ஜுலியட்டை மேடைக்கு அந்தப்புறம் இருந்து அழைக்கிறார்கள். )
செவிலி :
இதோ வருகிறோம்
இதோ வருகிறோம்
வா ஜுலியட் கிளம்பலாம்
வந்தவர்கள் அனைவரும் சென்று விட்டார்கள்
(அனைவரும் மறைகிறார்கள்)
மூலம் : ஷேக்ஸ்பீயர்
மொழிபெயர்ப்பு : தங்கேஸ்