நானும் நூலகமும் கவிதை – சுதா

நானும் நூலகமும் கவிதை – சுதா




அந்த அறையில்
எந்தப் பொருளும் எனதல்ல…
அறைக் கதவின் கண்ணாடி
இத்தனை நாள் என்
முகத்தை மட்டுமே பிரதிபலித்தது
இத்தனை நாட்களாக…

அங்கிருந்த புத்தகங்களை
நான் வாசித்து இருக்கவில்லை…
ஆனால் புத்தகங்கள் நிச்சயம்
என்னை வாசித்து இருக்கும்…
என் இயலாமை, என் கோபம்,
என் ரகசிய பேச்சுக்கள்..
போலியில்லா முகம், என் மகிழ்வு
இப்படி அத்தனையையும் அறிந்தது
அந்த நான்கு சுவர்களும், புத்தகங்களும்…

எதேச்சையாய் ஒடிந்த பேனா
முட்களை நினைவு கூர்கிறது…
ஒல்லியான தேகம் கொண்ட
எழுத்துகள்…

முதன்முதலில் வாசித்த
புத்தகத்தின் வாசம் தேடி
பல புத்தகங்களைப் புரட்டுகிறேன்…

என் மேசையில்
கன்னம் பட்டுக்
கண்ணீர் வடித்த நாட்கள் பல…
தோழனின் தோள் தராத
கரிசனம் அந்த இரும்பு மேசைக்கு…

காலை உந்தி ஊஞ்சல்
ஆடுவதில் என் மனநிலையை
அறிந்து கொள்ளும் என் நாற்காலி…

உடைந்த பொருட்களிலும்
நாம் ஒதுக்கி வைத்த
பல நினைவலைகள்…நிறைந்திருக்கின்றன….

நானும் உன் வாசல் வரை
வந்து கடந்து செல்லப் போகிறேன்

இன்னும் சில நாட்களில்
நினைவுகளை மட்டும்
நெஞ்சோடு வைத்து…

-சுதா

Sutha's Poem சுதாவின் கவிதை

சுதாவின் கவிதை




அன்றொருநாள் என்
அறை முழுவதும் சூனியக்
கயிறுகள் அங்குமிங்கும்
தொங்கிக்கொண்டிருந்தது…

என் சிறுபிள்ளைத்
தனத்தையும் சிரிப்பையும்
பேச்சையும் அசட்டுத்ததையும்
ஒளிவு மறைவு இல்லாத
ஆனந்தத்தையும் காலம்
அன்று அறுவடை செய்திருந்தது…

இரண்டே வழி
சூனியக் கயிற்றில்
தொங்கிட வேண்டும்…
இல்லையேல் என் சுமைகளை
சுமந்து சூனிய கயிறின்
உதவியால் மேலேறி விடவேண்டும்…

என் பாதம் பட்ட
இடமெல்லாம்
விஷப்பூச்சியின்
வாழ்விடமானது…

இரண்டில் முதல் ஒன்றே
என் தேர்வு என நினைத்த
உறவுகளின் எண்ணங்கள்
பொய்த்துப் போனது…

என் சுமைகளோடு
சூனியக்கயிறின்
உதவி கொண்டு மேலேறி
மேடேறி விட்டேன்…

இன்றும் என் அறைக்
கதவுகள் தட்டப்பட்டது…
அன்று என் பாதம் பட்ட
இடமெல்லாம் விஷ பூச்சிகளாய்
உழன்று கொண்டிருந்த
உறவுகளெல்லாம் அன்பின்
பூங்கொத்தை நீட்டுகிறது…
பூக்களின் மணம் நுகர்ந்து
பார்த்தேன் பிணக்குவியலின்
வாடையை அதில் உணர்ந்தேன்…