நூல் அறிமுகம்: லஷ்மி சரவணகுமாரின் “ரெண்டாம் ஆட்டம்” – இரா யேசுதாஸ்

நூல் அறிமுகம்: லஷ்மி சரவணகுமாரின் “ரெண்டாம் ஆட்டம்” – இரா யேசுதாஸ்
விகடன் பிரசுர 2022 விற்பனையில் 4ம் இடம்…

மதுரையின் மறுபக்கத்தை விவரிக்கும் திரில்லர் நாவல் போன்ற ரவுடியிசத்தை மட்டுமே அலசும் நூல்.

இந்த நூலில் இடம் பெற்றுள்ள பல சம்பவங்கள்.. கதாபாத்திரங்கள் மதுரையில் நிகழ்ந்த… நிகழ்ந்து கொண்டிருக்கின்ற உண்மை அரசியல் ரவுடியிச நிகழ்வுகளை விவரிப்பதாக உள்ளது.

கள்ளச்சாராய பாக்கெட்டு விற்பனை, பார் ,கஞ்சா பாக்கெட் விற்பனை, கூலிக்காக கொலைகள், பெண் வியாபாரம், அரசியல் கட்சிகளுக்கு ஆள் சப்ளை, அரசியல் வன்முறைகள், பிக்பாக்கெட், ரவுடி கோஷ்டிகளுக்கு இடையே தொடர்ந்துகொண்டே இருக்கும் பழி தீர்க்கும் கொலை படலங்கள், இதில் காவல்துறையின் கைங்கரியம்.. வழக்கம் போல பெண்ணாடல்கள் ,பெண்ணாசை போர்வையில் நிகழ்த்தப்படும் அழித்தொழிப்புகள்… வன்மம் …ஆசை .. அதிகாரப்போட்டி.. கந்துவட்டிக்காக நடத்தப்படும் மேலாதிக்க நிலை.. மாமூல் வாங்க… எல்லை குறித்து செயல்படுவது.. ரவுடிகளுக்கு இடையே கடைபிடிக்கப்படும் தொழில் நேர்மை- சத்திய கட்டுப்பாடுகள்?!… புலி வாலை பிடித்த கதையாய் வாரிசுகளை காப்பாற்ற முடியாமல் திணறும் ரவுடிகளின் பெற்றோர்… வறட்டு கௌரவத்திற்காக உயிரை துச்சமாக மதித்து வெட்டப்பட்டும்.. குத்தப்பட்டும் எழும் மரண ஓலங்கள்( நல்லவேளை துப்பாக்கி கலாச்சாரம் நூலில் வரவில்லை) வாழ்வின் ஒவ்வொரு நொடியும் மரண பயத்துடன் வலம் வரும் தாதாக்கள்.. வெற்று உதார் விட்டு சாவதும்… மௌனமாகவே இருந்து சாணக்கியத்தனத்துடன் வஞ்சம் தீர்ப்பதும் ….என ஏராளமான கதாபாத்திரங்கள் … இறுதியில் செல்வமும் ஜெகதியும் மட்டுமே மிஞ்சுகிறார்கள்.

திரைப்படங்களை பார்த்துவிட்டு இவர்கள் செய்கிறார்களா …. இவர்களைப் பார்த்துவிட்டு திரைப்படங்கள் எடுக்கப்படுகிறதா .. என்ற அளவிற்கு விறுவிறுப்பான அதே மாதிரியான காட்சிகள் நூல் முழுக்க……

பலி…வலி… வேதனை… ரத்த வாடைக்கவிச்சி… தலையை வெட்டி சீவி எடுத்துக்கொண்டு சர்வ சாதாரணமாக செல்வது.. சிறை வாழ்க்கை… கறி விருந்து.. குடும்ப விழா.. கடவுள் வழிபாடு என்று தொடர்கின்ற கொலை.. கொலை .. கொலை என நீள்கிறது இரண்டாம் ஆட்டம் ( சினிமாவின் இரண்டாவது ஷோ முடிந்த பிறகு நடத்தப்படும் கொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன)

இந்நூலை படித்துவிட்டு யாரைப் பார்த்தாலும் அவருடைய பின்னணி பற்றி யோசிக்கத் தோன்றுகிறது.. அரசியல் ஆதரவின்றி இவை சாத்தியமில்லை.. அரசியல்வாதிகள்- ரவுடிகளுக்கு இடையேயான உறவும் பாசமும் நூல் முழுதும் விரவி கிடைக்கின்றது.

ரவுடிகள் வாழும் தனி உலகத்தை விலாவாரியாக விளக்குகிறது ரெண்டாம் ஆட்டம்….

நூல் : ரெண்டாம் ஆட்டம்
ஆசிரியர் : லஷ்மி சரவணகுமார்
விலை : ரூ.₹650
வெளியீடு : விகடன் பிரசுரம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]