Embark on a soul-stirring journey through the mesmerizing melodies of 'தொடரும் கனவுகள் இசைக்கட்டுமே'. இசை வாழ்க்கை 97 - எஸ். வி. வேணுகோபாலன் 

தொடரும் கனவுகள் இசைக்கட்டுமே

இசை வாழ்க்கை 97: தொடரும் கனவுகள் இசைக்கட்டுமே ! - எஸ். வி. வேணுகோபாலன் அண்மையில் ஆனந்த விகடன் வார இதழில் வந்திருந்த இருபது ரூபாய் கடன் சிறுகதைக்கு ஏராளமான பாராட்டும் வாழ்த்தும் கிடைத்தது. திருச்சி தனியார் கல்வி நிறுவன முதன்மைச்…
isai vazhkai 96 இசை வாழ்க்கை 96

இசை வாழ்க்கை 96: இசையாய் வா வா… – எஸ். வி. வேணுகோபாலன் 

உலகப் பெண்கள் தின வாழ்த்துகளில் தொடங்குகிறது இசை வாழ்க்கை. மகாகவி பாரதியிடத்தில் இளவயதில் கற்றுக் கொண்டது பாலின சமத்துவம் குறித்த முதற்பாடம். ‘அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர் கோயிலாய் ..... புன்மை தாதச் சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன்’ என்று அவர் கொண்டாடும் இடத்தில்…
இசை வாழ்க்கை 67 பன்னீர் சிந்தும் நினைவுகள் – எஸ். வி. வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 67 பன்னீர் சிந்தும் நினைவுகள் – எஸ். வி. வேணுகோபாலன் 




பன்னீர் சிந்தும் நினைவுகள் 
எஸ். வி. வேணுகோபாலன் 

 

 

றுபத்தாறாம் கட்டுரை பகிர்ந்து கொண்ட அடுத்த சில நிமிடங்களில் நண்பர் சரவணன் அவர்களிடமிருந்து வந்தது, தபலா இசைக்கலைஞர் பிரசாத் அவர்களது மறைவுச் செய்தி!

தமது ஏழாம் வயதில் வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்தின் முக்கியமான பாடலுக்கு வாசிக்கத் தொடங்கிய கைகள், ஓய்வெடுத்துக் கொண்டு விட்டன. நவுஷத் முதற்கொண்டு இங்கே எம். எஸ். வி. தொடங்கி ஏ. ஆர். ரெஹ்மான் வரையிலான எத்தனையோ இசை அமைப்பாளர்கள் கற்பனையை அப்படியே இசையாக வார்த்து வழங்கிய அந்த மனிதரின் குழந்தை முகமும், குமிழ் சிரிப்பும், பேசும் விரல்களும் காணொளிப் பதிவாக மனத்தில் குடியிருக்க, அவர் மறைவை ஏற்றுக் கொள்ளக் கடினமாகத் தான் இருந்தது.

தகவல் வந்த அன்று மாலை, கோடம்பாக்கம் என். டி. ராமாராவ் வீதியில் அவரது இல்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, அவருடைய மகன் ரமணாவிடம் வருத்தம் தெரிவிக்கையில், நேரடி அறிமுகம் இல்லையென்றாலும் இன்னார் என்று உணர்ந்து கொண்டு, தந்தையின் கடைசி நிமிடங்களை விவரித்தார், நிறை வாழ்க்கை வாழ்ந்தார் என்பதையும் பெருமையோடு குறிப்பிட்டார்.

வீட்டின் எதிர்ப்புறம் இளைஞர்களும் நடுத்தர வயதினருமாக  அமர்ந்திருந்தவர் பிரசாத் அவர்களது அன்பு கொண்டாடிகள்  என்று புரிந்து கொள்ள முடிந்தது.  அவர்கள் அருகே சென்று அறிமுகம் செய்து கொண்டு இரங்கலைத் தெரிவித்தபோது, அவரது சீடர்கள் என்று பரவசத்தோடு சொல்லிக் கொண்டனர். வெவ்வேறு இசைக்கருவிகள் வாசிப்பவர்கள் அவர்கள். அவர்களை வாசித்திருந்தார் பிரசாத்.Music Life Series Of Cinema Music (Panneer Sindh Memories) Webseries 67 by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 67 பன்னீர் சிந்தும் நினைவுகள் - எஸ். வி. வேணுகோபாலன் 

வருத்தம் என்னவெனில், முக்கிய நாளேடுகள் எதிலும் அவரது மறைவுச் செய்தி வந்ததாகத் தெரியவில்லை. அவர் இருக்கும்போதே அவரைக் கொண்டாடிய எம் எஸ் வி ரசிகர்களைக் கொண்டாட வேண்டும், 2014ம் ஆண்டில், எம். எஸ் விஸ்வநாதன் அவர்களைச் சிறப்பிக்கையில், அவரைக் கொண்டே தபலா பிரசாத், 7000 திரைப்பாடல்களுக்கு மேல் பதிவு செய்திருக்கும் சம்பத் போன்றோரைச் சிறப்பித்த மேடை அது.

தாளத்தில் இருந்து வேறு திசைக்கு நகர மறுக்கும் மனம், இளையராஜாவின் அபார இசையமைப்பில் விளைந்த இன்னொரு பாடலில் ஆழ்கிறது.  எண்ணற்ற ரசிகர்களை இன்றும் யூ டியூபில் ஈர்த்துக் கொண்டிருக்கிறது அந்தப் பாடல். எஸ் ஜானகியின் குரல் வளம், கற்பனை, இசை ஞானம், இனிமை இவற்றின் மொத்த முகவரியும் தட்டுப்படும் பாடல்களின் பட்டியலில் நிச்சயம் இடம் பெற வேண்டிய இந்தப் பாடலைக் கேட்டதும், யூ டியூபில் கருத்துகள் பதிவிட்டோரில் ஒருவர் சொல்கிறார், பாடலுக்கான  நடிப்பையும் ஜானகியே பெருமளவு வழங்கியபின் திரையில் தோன்றுபவர் என்ன செய்ய முடியும் என்று! ஆனால், வித்தியாசமான கதைக்களத்தின் நாயகியின் உணர்வுகளை லட்சுமி சிறப்பாக வெளிப்படுத்தவே செய்தார் என்பதை வேறு ஒரு ரசிகர் எழுதி இருந்தார்.

பாடலைக் கேட்கையில் மனத்தில் மழை பெய்யவைக்கும் என்று எழுத்தாளர் – இயக்குநர் சுகா சொல்வதை, மீரா சீனிவாசன் தி இந்து ஆங்கில நாளேட்டில் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இளம் வயதில் கைம்பெண் ஆகிவிட்ட பெண்ணொருத்தியின் தாபங்களை, விடுதலைக்கான குரலை இசைத்திருந்தார் ஜானகி. கட்டுகள் உடைத்தெறியும் பாடல் அல்ல, தடைகள் உணராத வலிமையின் கீதம் அது. வைரமுத்து அவர்களது அருமையான பாடல் அது.

காற்றை, மின்னலை மட்டுமல்ல, மழைப்பொழிவின் தொடக்கத் தூறலை, மண்ணின் மீது கொட்டும் மழை முத்துகளை, அது கிளர்த்தும் ஆனந்தத்தை எல்லாம் ராஜாவின் இசை ரசிகர்கள் நெஞ்சுக்குக் கடத்தும். இசைக்கருவிகள் மட்டுமல்ல, ஜானகியின் தொடக்க ஆலாபனையில் கருமேகங்கள் தயார் நிலைக்கு வருவதும், பல்லவியின் முதல் சொல்லில் மழை சோவென்று கொட்டத் தொடங்குவதிலும் ரசிகர்கள் நனைய முடியும். உச்ச ஸ்தாயியில் பெய்யத் தொடங்கி, மிதமான சாரலுக்கு இறங்கி, இடையே ஆலாபனைகளில் தபதப என்று பிடித்து, மீண்டும் சீரான வேகம் பிடித்து ஹோவென்று பெய்து தீர்த்து நிறைவடையும் மழைக்குரல் அது!

மழை மட்டுமா இசையாகப் பொழிகிறது, அதன் முன்னறிவிப்பும் தொடர்ச்சிக்கான அடைமொழியும் வேறிடப் பெயர்ச்சிக்கான தகவலும் வழங்கும் இடியோசையும்  இசையன்றி வேறென்ன…. இடியின் விதவிதமான முழக்கங்களை ஜானகியின் ஆலாபனை கவனித்துக் கொள்ள, மழைக்குரலுக்கான தாளக்கட்டாக,  தபலாவும், மிருதங்கமுமாக ஒன்றையொன்று அடுத்தடுத்துத் தொடரும் ஓர் இசைக்கோவையை ராஜா சிந்தித்தது மலைக்க வைக்கிறது.


பாடலுக்குள் போகாமலேயே ஏன் இத்தனை முன்னோட்டம் எனில், சரணத்தில் பாடகி முதலாவது அடியைப் பாடுகிறார், தபலா தாளக்கட்டு உடன் ஒலிக்க, அடுத்த அடியில் உடன் ஒலிப்பது மிருதங்கம், மூன்றாவது அடிக்கு மீண்டும் தபலா, நாலாவது அடியில் மிருதங்கம். இளவரசி சபையில் அபிநயம் பிடிக்கையில் அவளது ஒவ்வொரு முத்திரையின் போதும் அவளது உடையின் நிறம் சிவப்பாகவும் பச்சையாகவும் மாறி மாறி அமைவதாகக் கற்பனை செய்து பாருங்கள், அப்படியான வேகத்தில் தாளம் பிசகிவிடாது, இடைவெளி ஏற்பட்டு விடாது, எந்தக் குழப்பமும் நேராது தபலாவும் மிருதங்கமும்… ஆஹா…ஆஹா…

இன்று நீ நாளை நான் படத்திற்கான, ‘பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்…’ பாடல் தான் விவாதித்துக் கொண்டிருப்பது. அது பாடல் அல்ல, மழை பெய்யும் வானத்தை இசையால் குளிப்பாட்டிக் கொண்டாடும் ஓர் எளிய திருவிழா. மழைப்பொழிவு குறித்த ஓர் இசை நாடகம். தாள மாட்டாத தாபங்கள் சூல் கொண்டிருக்கும் மனத்தின் பொழிவு, வானம் பொழிவதைப் போல!

கதைக்கரு மேகங்கள் திரளவும், எஸ் ஜானகி ஆலாபனையால் அவற்றைச் சிலிர்ப்புற வைக்கவும், பொன்வானம் பன்னீர் தூவத் தொடங்குகிறது.

ஊர்ப் பெருந்தனக்காரரைத் தெருக்கூத்துக் கட்டியக்காரன் பெருங்குரலெடுத்து அறிமுகப்படுத்துவது போலவும் உச்சரிக்கிறார் ஜானகி, பொன் வானம் என்ற சொற்களை….பன்னீர் தூவுது சம தளத்தில் பரவுகிறது, இந்நேரம் என்ற சொல்லில் உறவுக்கான உள்ளக்கிடக்கையை, வேட்கையைக் குழைத்து இசைக்கிறார். ‘அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்’ என்கிற சொற்கள் போதையில் ஊறித் தெறிக்கின்றன இசையில். பின்னர் பல்லவியின் முதல் வரியில் பொன்வானம் பன்னீர் தூவத்தொடங்கி விடுகிறது…

முதல் சரணத்தை நோக்கிய நடையில், நாயனங்கள் ஒலிக்க ஓர் உற்சாகத் துள்ளாட்டம் போட்டுப் பல்லக்கில் சுமந்து செல்கிறது இசை, மழையை! பல்லக்கின் பாரத்தைத் தோள் மாற்றித் தான் ஏற்றுக் கொள்ளு ம் இடத்தில் ஓர் அழகான ஆலாபனையோடு மேலும் ஒய்யாரம் கூட்டுகிறார் ஜானகி, அந்த லல்லல்லல லா சேர்த்து! ‘மழைப் பூக்களே’ என்று தொடங்கும் சரணத்தில், தபலாவும் மிருதங்கமும் அடுத்தடுத்து வியக்கவைக்கும் துல்லியத்தோடு நடைபோட, ‘மழை பெய்யும் கோளாறு, கொதிக்குதே பாலாறு’ என்கிற வரிகளில் ரசவாதம் நிகழ்த்துகிறார் ஜானகி. பெருமழையில் இலைகள் அடர்த்தியாகக் கிளைத்த மெல்லிய மரக்கிளைகள் காற்றில் ஊஞ்சலாடிக் கொள்வது போல, ‘இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா’ என்ற கிறக்க உணர்வுகளின் பதங்களை எடுக்கும் ஜானகி, ‘இந்த ஜோடி வண்டுகள் கோடு தாண்டிடுமா’ என்ற முடிப்பில் அந்த மாவில் என்னமாக ஒரு சுவாரசியம் கூட்டுகிறார்.

இரண்டாம் சரணம் அந்தக் கதாபாத்திரத்தின் மனவெழுச்சியின் கூடுதல் தீப்பொறிகள் பற்றுமிடம் என்பதால், வயலின்களைத் தொடர்ந்து ஜானகி, லல்ல லலலா இசைக்கும் விதத்தில் சிதறவிடும் புன்னகை மத்தாப்பின் சுடரில் ஒளிரும் புல்லாங்குழல், ராக ஆலாபனையைத் தான் வாசித்து முடித்து, ‘தங்கத் தாமரை ….’ என்று சரணத்தைத் தொடங்க வைக்கிறது. மீண்டும் தபலா, மிருதங்கம் இரண்டு கருவிகளும் ஒன்று மாற்றி மற்றொன்று என அடுத்தடுத்த வரிகளில் தாளக்கட்டு எடுக்க, தாபத்தை மேலும் நுட்பமாக வெளிப்படுத்தும் குரலில் ஜானகி சரணத்தைப் பாடி நிறைவு செய்து, பொன் வானத்தை மீண்டும் பன்னீர் தூவ வைத்துவிடுகிறார். இரவுகளை இசையால் நனைக்கும் பாடலாக நிலைபெற்று விடுகிறது  பொன்வானம்.

ளையராஜா, எஸ் ஜானகி, லட்சுமி கூட்டணியில் உடனே மனத்தில் ஒலித்த பாடல், துயரப் பெருஞ்சுழியாக நுரைத்தோடும் சோக நதி. திரைக்கதையின் திருப்பத்தில் நாயகனைப் பற்றிய தவறான வதந்தியை நம்பித் துடிக்கும் நாயகியின் இதய வெடிப்பு அந்தப் பாடல். கண்ணதாசனின் அசாத்திய தேர்ச்சி பெற்ற சொற்கள்!

தியாகம் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘வசந்த காலக் கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்’  என்ற பல்லவிக்கே உருகும் எண்ணற்ற ரசிகர்களின் உள்ளத்துடிப்பை யூ டியூபில் கேட்கலாம். வானில் விழுந்த கோடுகள் என்ற வரியில், வானில் என்ற சொல்லின் உச்சரிப்பு, அத்தனை பளீர் மின்னல் வெட்டாகத் தெறிக்கிறது. அடுத்த வரி, ‘கலைந்திடும் கனவுகள்’. பிறகென்ன, ‘கண்ணீர் சிந்தும் நினைவுகள்’! நினைவுகள் என்னவோ ஒன்று தான், அவை ஏற்கெனவே நிகழ்ந்த தருணங்களின் தொகுப்பு தான், ஆனால், வேறு ஒரு தருணத்து  மனநிலையில் இன்பம் தருவதில்லை, கண்ணீர் சிந்தும் நினைவுகளாக அவை கனத்து விடுவதைப் பேசும் வரியில் எத்தனை அருமையான காட்சிப்படுத்தல்!

‘அலையிலாடும் காகிதம்’ என்று தொடங்கும் சரணத்தில், அந்தக் காகிதத்தின் பாடுகளை மனம் படுவதை ஜானகியின் சங்கதிகள் பாடிவிடுகின்றன. ‘அதிலுமென்ன காவியம்’ என்ற விரக்திக் கேள்வி எத்தனை தலையணைகளை நனைத்திருக்குமோ என்று நினைக்க வைக்கிறது. ‘நிலையில்லாத மனிதர்கள், அவர்க்குமென்ன உறவுகள்’ என்ற சலிப்பில் எத்தனை முகங்கள் மனக்கண் முன் வந்து போய்விடுகின்றன. ‘உள்ளம் என்றும் ஒன்று அதில் இரண்டும் உண்டல்லவா’ என்பதில் அந்த ‘வா’ வில் இழைக்கும் சோகம் நெஞ்சைப் பிழிந்துவிடுகிறது. ‘கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்’ என்ற வரிகள் பல்லவியிலிருந்து சரணங்களுக்கும் நீட்சி பெற்று விடுகின்றன.

‘தேரில் ஏறும் முன்னரே’ என்று தொடங்கும் இரண்டாம் சரணம், எல்லா ஏற்பாடுகளும் முடிந்த நிலையில் தடைபட்டுப் போகும் திருமணங்களை, அவை நடக்காது போனதிலும் விளைந்திருக்கும் நன்மைகளை அசைபோட வைத்துவிடுகிறது. ‘நல்ல வேளை திருவுளம் நடக்கவில்லை திருமணம்’ என்ற இரண்டு வரிகளில் ஒரு சிறுகதையை எழுதி விட்டிருக்கிறார் கண்ணதாசன். அந்த ‘நல்ல’ என்ற சொல்லில் எப்படி அபாரமாக ஒரு நிம்மதி பெருமூச்சை உணர வைத்து விடுகிறார் ஜானகி!  ‘நன்றி நன்றி தேவா’ என்ற இடத்திலும், ‘உன்னை மறக்க முடியுமா?’ என்பதிலும்  கேவல், விசும்பல், குமுறல்களின் வெளிப்பாடாக விம்மியெழுகிறது ஜானகியின் குரல்.

வயலின், புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகள் மட்டுமின்றி தாளக்கருவியும் உள்ளத்தின் அதிர்வுகளை அசலாகக் கடத்துகின்றது. பாடல் நிறைவு பெற்றாலும், மனம் சமாதானம் கொள்வதற்கு நேரம் எடுத்துக் கொள்கிறது. அதிலிருந்து விடுபடுவதற்கு இலகுவான வழி ஒன்று இருக்கிறது, பாடலிடமே மீண்டும் சென்றடைந்து விடுவது தான் அது.

இசையின் விளையாட்டு விவரிப்புக்கு அப்பாற்பட்டது. வம்புக்கு இழுக்கும் வகுப்புத் தோழர்கள், ‘நான் ஒன்றும் உன்னைக் கூப்பிடவில்லையே’ என்று மேலும் சீண்டிவிடுவது போல் ஆட்டத்தில் மேலும் உள்ளே ஈர்த்துக் கொண்டு போய்விடுகிறது இசை. அருவியில் எத்தனை மூச்சுத் திணற மேலிருந்து நீரின் அடி விழுந்து கொண்டிருந்தாலும் அதிலிருந்து மீண்டுவர விரும்பாத உள்ளம் போல் ஆழ வைத்து விடுகிறது இசை. ஒரு புகைப்படம் பிறிதொரு நாள் பார்க்கையில் அது எடுக்கப்பட்ட காலத்திற்கு அப்போது உடனிருந்த மனிதர்களது நினைவுகளுக்கு இழுத்துச் சென்றுவிடுவது போலவே, இசையும் அடுத்தடுத்துக் கேட்கையில் அவரவர்க்குரிய நினைவுகளையும் உள்ளடக்கியதாக சுழலத் தொடங்கி விடுகிறது. இசை மனிதர்களது ஆதியுணர்வுகளில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும் !

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected]

முந்தைய தொடர்களை வாசிக்க:

இசை வாழ்க்கை 62: உள்ளம் இசைத்தது மெல்ல – எஸ். வி. வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 63: இசை கேளாது நாம் இன்று நாம் இல்லையே – எஸ். வி. வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 64: சிந்தை மயக்கும் விந்தை இசை – எஸ். வி. வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 65: கொட்டட்டும் மேளம் தான் பாடல் தேரோட்டம் – எஸ். வி. வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 66: காதல் இசையைச் சொல்லாமல் சொன்னானடி ! – எஸ். வி. வேணுகோபாலன்