தற் சரித்திரம் கட்டுரை – சா.கந்தசாமி

தற் சரித்திரம் கட்டுரை – சா.கந்தசாமி




என்மனமும் என்உடம்பும் என்சுகமும் என்னறமும்

என்மனையும் என்மகவும் என்பொருளும் – என்மணமும்

குன்றிடினும் யான் குன்றேன் கூற்றுவனே வந்திடினும்

வென்றிடுவேன் காலால் மிதித்து.

வ.உ.சிதம்பரம் பிள்ளை

மனிதர்கள் தங்களின் சொந்த வாழ்க்கை என்பது வெளியில் சொல்லக்கூடியது இல்லை. ஏனெனில் அதில் நல்லது கெட்டது எல்லாம் இருக்கிறது. ஒருவர் வாழ்க்கைத்தான் சொல்லப்படுகிறது என்றாலும் அதில் பலரின் வாழ்க்கையும் பின்னிக் கொண்டிருக்கிறது என்று சொல்லாமலும், எழுதாமலும் விட்டுவிடுகிறார்கள். இன்னும் சிலரோ சுயசரித்திரம் எழுதுவது தன்னைப் பற்றி பெருமையாகச் சொல்லிக் கொள்வதுதான் என்று தன்னையே முன்னிறுத்தி எழுதிக் கொள்கிறார்கள். உண்மை என்பது சுயசரித்திரத்தில் உண்மையாகவே சொல்லப்படுகிறது என்பது நிலைத்திருக்கும் போதுதான் சுயசரித்திரம் படிக்கப்படுகிறது.

சுயசரித்திரம் இல்லாதுபோல போய்விட்ட ஒரு தனி மனிதனின் இருப்பை நிலைநாட்டுகிறது. அதற்கோர் எடுத்துக்காட்டு மகாத்மா காந்தியின் சுயசரித்திரம். அது சத்தியந்தனை. உண்மையை உண்மையாகவே எழுத முடியும் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கிறது. பொய், வன்முறை, அரசியல் சூழ்ச்சிகள் வழியாக அதிகாரம் என்பதை கைப்பற்றுவதைச் சொல்வதுதான் ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லர் சுயசரித்திரமான மெயின்கேம்- எனது போராட்டம் என்பது.

ஒன்று போல் இருக்கும் மனிதன் ஒன்று இல்லை. காலம், இடம், மொழி எல்லாம் மனிதனுக்குக் கிடையாது. அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான் என்பதை பல சுயசரித்திரங்கள் நிலைநாட்டி வருகின்றன.

சுயசரித்திரம் என்பது எல்லாரும் எழுதக்கூடியதுதான். ஏனெனில் எல்லார்க்கும் ஒரு சொந்த வாழ்க்கை இருக்கிறது. அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள், சான்றோர்கள், ராணுவ தளபதிகள், கலைஞர்கள்தான் சுயசரித்திரம் எழுத வேண்டும் என்பதில்லை. பல மொழிகளில் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், விபசாரிகள் என்று சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களும், சாதாரண மனிதர்கள் என்று சொல்லப்பட்டவர்களும் தனித்தன்மை மிளிர படிக்கத் தக்க சுயசரிதம் எழுதி இருக்கிறார்கள். தன் வாழ்க்கையை அறிவதும் அறிந்ததை அறிந்துகொண்ட விதமாக எழுதுவதும் சுயசரித்திரம் என்பதை எல்லார்க்குமான சரித்திரம் என்றாக்கி விடுகிறது.

தமிழில் எழுதப்பட்டிருக்கும் சுயசரித்திரங்களில் முக்கியமானது வள்ளியப்பன் பிள்ளை உலகநாதன் பிள்ளை சிதம்பரம் பிள்ளை என்னும் வ.உ.சிதம்பரம் பிள்ளை எழுதியிருக்கும் தற்சரித்திரம். அது அவர் இட்ட பெயரா என்பது தெரியவில்லை. ஆனால் அது அவர் சுயசரித்திரம் அவர் மறைவிற்குப் பிறகு வெளிவந்தது.

வ.உ.சிதம்பரம் பிள்ளை வக்கீல் சுதந்திர போராட்ட வீரர், தொழிற்சங்கத் தலைவர், இரட்டை ஆயுள் தண்டனை பெற்று கோவை சிறையிலும், கண்ணனூர் சிறையிலும் இருந்தவர் தமிழ் அறிந்தவர். 1910ஆம் ஆண்டில் சிறையில் இருந்த காலத்தில் அவரது நண்பர் பரலி சு.நெல்லையப்பர் கேட்டுக் கொண்டதன் படி சிறு சிறு துண்டுகளாகத் தன் வாழ்க்கை வரலாற்றை அகவல்பாவில் எழுதினார். வ.உ.சிதம்பரம் பிள்ளை உரைநடை எழுதக்கூடியவர்தான். ஜேம்ஸ் ஆலன் சுயமுன்னேற்றம், மனோ தத்துவ நூலை உரைநடையில் மொழி பெயர்த்து இருக்கிறார். ஆனால் தன் சுயசரித்திரத்தை ஸ்தல புராணம் மாதிரி அகவல்பாவில் எழுதி இருக்கிறார். நாட்டின் சிறப்பு, குடும்பத்தின் பரம்பரை வரலாறு, தாத்தா, பாட்டி, தாய், தந்தை, உடன் பிறந்தோர், சிறு வயதில் ஆடியது பாடியது என்று பலவற்றையும் சொல்லி உள்ளார்.

சிதம்பரம் பிள்ளை 1872ஆம் ஆண்டில் ஒட்டபிடாரம் என்னும் ஊரில் சைவ வேளாளர் மரபில் பிறந்தவர். எனவே படிக்கவும், விளையாடவும் அவருக்கு நல்ல வாய்ப்புகள் இருந்தன. சிறு வயதில் என்னென்ன விளையாட்டுகள் விளையாடினேன் என்று ஒரு பட்டியல் தருகின்றார். அதில் தாயம், சோழி, சதுரங்கம், சொக்காட்டான், காயுதச் சீட்டு எல்லாம் இருக்கின்றன. விளையாட்டில் தொடங்கி, அரசியல் ஈடுபட்டு, ஆங்கில அரசை எதிர்த்து வாணிகம் புரிய நாவாய் கூட்டுறவு சங்கம் ஏற்படுத்தியது. நாவாய் ஓட்டியது.. அது ஏகாதிபத்திய வாதிகளின் சூழ்ச்சியால் முடங்கிப் போனது. தூத்துக்குடியில் கோரல் ஆலை தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துக் கூட்டம் நடத்துவது, சுப்பிரமணிய சிவாவோடு கூட்டத்தில் பேசுவது, தூத்துக்குடியில் சுதந்திர முழக்கம் திருநெல்வேலியில் புரட்சித் தீ பரவுதல், ஆஷ் அட்டகாசம், என்று பல்வேறு செயற்பாடுகளைச் சொல்லும் முதல் பகுதி சிதம்பரம் பிள்ளை கைதாக்கி கோவை சிறைக்குக் கொண்டு செல்வதோடு முடிவடைகிறது. இப்பகுதிகளை அவர் சிறையில் இருந்தபோது தான் எழுதினார். அதாவது 108ஆம் ஆண்டிற்கும் 1912ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதினார். அவருக்கு நாற்பது வயது முடிந்துவிட்டது. வக்கீலாக அவர் நிறைய கற்று இருந்தார். சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்குத் தன் நண்பர்களான சுப்பிரமணிய பாரதியார் உட்பட பலரோடு சென்றார். திலகர் தீவிரவாதத்தை ஆதரித்தார். தென்னாட்டின் செயல் தலைவராக இருந்தார்.

சிதம்பரம் பிள்ளை தன்னுடைய சுயசரித்திரத்தின் இரண்டாம் பகுதியை 1930 ஆம் ஆண்டில் சொக்கலிங்கம் பிள்ளை கேட்டுக் கொண்டதற்காக எழுதினார். அது காந்தி பத்திரிகையில் வெளிவந்தது. அப்பொழுது அவருக்கு ஐம்பத்தெட்டு வயதாகி இருந்தது. காங்கிரசில் மகாத்மா காந்தி தனிப் பெரும் தலைவராகி இருந்தார். திலகர் மறைந்து போய் விட்டார். திலகரின் ஆதரவாளர்கள் அரசியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள். அவர்களில் இவர் ஒருவராகிவிட்டார். சிறையில் செக்கிழுத்த சிதம்பரம் பிள்ளையின் அரசியல் முடிந்துபோய் விட்டது. தொழில் இல்லை வருமானம் கிடையாது. குடும்பம் பெரியதாகி இருந்தது.

சென்னையில் மயிலாப்பூர், சிந்தாதிரிப்பேட்டை, பெரம்பூர் என்று வீடு மாற்றி வீடு மாற்றி வாடகைக்குக் குடியிருந்தார். அரிசி, நெய், மண்ணெண்ணெய் வாங்கி விற்றார். அவர் வக்கீல் தொழில் செய்ய அரசு கொடுத்திருந்த சன்னத்துப் பறிக்கப்பட்டு இருந்தது. அதனால் நீதிமன்றம் சென்று வழக்காட முடியவில்லை. ஒரு வெள்ளைக்காரன் அவர் வக்கீல் சன்னத்தை வாங்கிக் கொடுத்தான். ஆனாலும் சென்னையில் அவரால் வக்கீல் வேலை பார்க்க முடியவில்லை. தன் மகனுக்கு போலீசில் ஒரு வேலை வாங்கிக் கொடுக்கும்படி பெரியாருக்கு சிபாரிசு கேட்டு கடிதம் எழுதினார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. பெரியாருக்கு எழுதிய கடிதம் அவர் நினைவிடத்தில் காட்சி ஆவணமாக வைக்கப்பட்டிருக்கிறது.

சிதம்பரம் பிள்ளைக்கு இளம் பருவத்தில் இருந்தே தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள் மீது ஆர்வம் இருந்தது. திருக்குறள் உரைகளில் மணக்குடவர் உரை சரியானதென்று கருதினார். எனவே அதனைப் பதிப்பித்தார். தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் முழுவதையும் பதிப்பிக்க பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார். பேராசிரியர் ச.வையாபுரிப் பிள்ளையுடன் சேர்ந்து பதிப்பித்தார். ஆனால் வையாபுரிப் பிள்ளை தொல்காப்பியம் பதிப்பிக்க சிதம்பரம் பிள்ளையே முழு காரணம். நான் சிறிதளவே துணை செய்தேன். அவர் பெருந்தன்மையுடன் பதிப்பில் என் பெயரையும் சேர்த்துக் கொண்டார். அதுவே சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையில் தலைவர் பதவி பெற முக்கியமான காரணமாக இருந்தது என்று எழுதியிருக்கிறார்.

பெரும் அரசியல் தலைவராக, தொழிற்சங்கவாதியாக, தமிழ் அறிஞராக, எழுத்தாளராக, மொழி பெயர்ப்பாளராகப் பன்முகத் தன்மை கொண்ட வ.உ.சிதம்பரம் பிள்ளை தன் சுய சரித்திரத்தை மிக சுருக்கமாகச் சிறை சென்றதையும், சிறையில் பட்ட இன்னல்களையும் பிரதானமாக எழுதியிருக்கிறார். அவர் சிறந்த தமிழ் அறிஞர் என்றாலும் சிறை, அரசியல், வக்கீல், வாழ்க்கை பற்றி எழுத நேர்ந்ததால் நிறைய ஆங்கில, உருது, அரபு சொற்களைப் பயன்படுத்தி உள்ளார்.

வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை என்பது அவர் சொந்த வாழ்க்கைதான். அதில் இன்னொருவர் பங்கு என்பது கிடையாது. 1912ஆம் ஆண்டில் கண்ணனூர் சிறையில் இருந்து விடுதலை ஆவதோடு வாழ்க்கை வரலாற்றை முடித்துவிட்டார். அது இப்படி முடிகிறது.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பன்

னிரண்டாம் வருஷம் டிஸம்பர் மாதம்

ஒருநாள் மாலை என் உடம்பில் எண்ணெய்

சிறிதுதடவி முழுக நிற்கையில்

ஒருவன் வந்தெனை ஜெயிலர் விளிப்பதா

அழைத்தான். சிறையுடை அணிந்து சென்றேன்

‘விடுதலை ஆர்டர் அடுத்தது. நீவிர்

வீடுறலா’ மென விளம்பினான் ஜெயிலர்

மைத்துனன் அனுப்பிய பட்டுடை உடுத்தியான்

வீட்டைந்தேன் மாண்வீடடைந்தேன்

மக்களுக்காகத் தன்வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றியவர்களை மக்கள் அவர்களை வாழ்நாளிலேயே மறந்துவிடுவது உண்டு. அது காலம் காலமாக நடந்து வருகிறது. அதனை எல்லாம் அவர் தன் சரித்திரத்தில் எழுதவில்லை. வீரத்தோடும், விவேகத்தோடும் வாழ்ந்த தன் வாழ்க்கையை மட்டுமே எழுதியுள்ளார். அது 1946ஆம் ஆண்டில் வ.உ.சிதம்பரம் பிள்ளை தற்சரித்திரம் என்ற பெயரில் வெளிவந்தது. அவர் நிறைய எழுதியிருக்கிறார் என்றாலும் அவற்றில் சிறப்பானது அவர் சொந்த வாழ்க்கையை எல்லார்க்கும் சொல்லும் தற்சரித்திரந்தான்.

தற்சரித்திரத்தில் இருந்து – ஒரு பகுதி

திங்கட்கிழமை ஜெயிலர் என் கைத்தோல்

உரிந்ததைப் பார்த்தான். உடன் அவன் எண்ணெய்

ஆட்டும் செக்கினை மாட்டிற்குப் பதிலாக

பகலெல்லாம் வெயிலில் நடந்து தள்ளிட

அனுப்பினான், அவனுடைய அன்புதான் என்னே

செக்கினை என்னோடு சேர்த்து தள்ளியோர்

‘நாங்களே தள்ளுவோம் நமன்கள் போன்ற

சூப்பிரண்டெண்டு காட்ஸணும் ஜெயிலரும்

வருங்கால் எம்முடன் வந்திது தள்ளுமின்

போய் நிழல் இருந்து புசிமின் எள்ளும்

வெல்லமும்’ என்றே விளம்பினர் அன்பொடு

செய்தேன் யான் அவர் செப்பிய வண்ணம்

ஒரு நாள் டாக்டர் பால் சில கைதிகளுடன்

போய் வா என்றான். தீ நகர் ஜெயிலர்

“சிரிக்கிறாய் ஏன்? எனச் செப்பினான் டாக்டர்

“அழச் சொல்லுகிறாயா? அது செய்யேன் என்றேன்

சூப்பிரண்டெண்டுக்குச் சொல்லிய டாக்டர்

போப்பரில் எழுதிப் பிழையென அனுப்பினான்.

அவனெனை விளித்துத் “தவறு நீ செய்தது

இரு முழு வாரம் அபதாரம் என்றான்

திங்கள் ஒன்றில் சென்னை ஐகோர்ட்டில்

செய்த அப்பீலில் திருத்தமும் ஒழுக்கமும்

தேசாபிமானமும் சேர்ந்த நல் ஜட்ஜ்

சங்கர நாயர் தகுதியில் பின்னியின்

தீர்ப்பினை சஸ்பெண்டு செய்அறிவித்தார்

தொலைந்தது வேலை. சொந்த உணவும்

சொந்த உடையும், சொந்த படுக்கையும் வந்தன.

நன்றி:
நூல்: படித்து அறிவோம்
சா. கந்தசாமி
கவிதா பப்ளிகேஷன்