நிறுத்தமுடியா அழுகை(1998) சிறுகதை – செ.கார்த்திகைசெல்வன்
“சரி நா தொயிலுக்குப் போய்ட்டுவறேன்; சாமான்லாம் அனாமத்தா அங்கயே கெடக்குது; வானம் காலையிலயே இருட்டிக்கிட்டு நிக்குது; வெரசா போனாதான் நேரத்துல டவுனுக்குப் போயி பொழப்ப பாக்கமுடியும்; ஏரிக்குப் போனவன இன்னும் வரக்காணல; இராமசாமி வந்ததும் ஜாக்கிரதையா ஆட்டு மாட்டெல்லாம் சொத்தச்சி ஏரிக்கு ஓட்டிட்டுப் போகச்சொல்லு; இன்னைக்கு தெக்கே போகவேண்டான்னு சொல்லு” ஸ்ட்டேண்டை விலக்கி சைக்கிளைத் தள்ளத் தயாரானார் மூக்கப்பன்.
“இந்தாப்பாரு அங்க ஒழுங்கா தொயிலப் பாத்துட்டு நேரத்தோட திரும்பறதோட இருக்கணும்; அவன் கூப்ட்டான், இவன் கூப்ட்டான்னு எதையாவது பண்ணிக்கிட்டு இருக்காம பொழுதோட வந்துசேரு; ஏற்கெனவே பூவாயி புருசன் நம்ம மேல கோவத்துல இருக்கானாம்; பிரசவம் முடிஞ்சி ரெண்டு மாசத்துல போனவள்; பேரனுக்கும் வயசு ஒன்னு ஆகப் போகுது; இடையில ரெண்டுமாசத்துக்கு முன்னாடி ஒரு இட்டுப் போயி பாத்துட்டு வந்ததோட சரி; கட்டிக்கொடுத்த நாள்ல இருந்து அடிக்கடி பூவாயிய பாக்க சூழ்நெல அமையல; இதுல ரெண்டுமாசம் தல குளிக்காம இருக்காளாம்; ‘பேரப்புள்ளைக்கு’ன்னு என்ன பண்ணிட்டாங்க? ஏது பண்ணிட்டாங்க?’ ன்னு பூவாயி புருசன் அவள பாம்பா கொத்தி எடுக்குறானாம்; நேத்து வேலைக்குப் போன இடத்துல காட்டூர்ல இருந்து ஆளுங்க வந்தாங்க; அவங்க சொல்லாட்டி இதுகூட எனக்குத் தெரிஞ்சிருக்க வழியில்ல” சைக்கிள் நகர்வதற்குள் இத்தனையும் தன்கூந்தலில் ஈறுகொல்லியால் ஈறுகளை எடுத்துக்கொண்டே சொன்னாள் பூவரும்பு. ஈறுகள் நசுக்கப்படும் சத்தம் மூக்கப்பனின் செவிகளுக்கு எதையோ எச்சரித்தது.
சொல்லப்பட்ட வார்த்தைகளை மூளையில் ஒரு ஓரமாய் சுருட்டி வைத்துக்கொண்டு இப்போது தங்கத்தேர் மூக்கப்பனால் இயக்கப்பட்டது. டவுனுக்குப் போக ரெண்டுரூபாய், வர ரெண்டு ரூபாய் மொத்தம் நாலு ரூபாய் செலவாகிடுமென்று பேருந்தில்கூட செல்லாமல் மாட்டுவண்டிகளிலும் லாரிகளிலும் தொற்றிக்கொண்டும் பிறகு கால்நடையாயும் டவுனுக்குப் போய்வந்த மூக்கப்பன், சிறுகச் சிறுக சேர்த்துவைத்த செருவாட்டுக்காசில்தான் டவுனில் ஒருவரிடம் இரண்டாந்தரமாக வாங்கியிருந்தார் இந்தச் சைக்கிளை. வாங்குவதற்குமுன் வெறும் சைக்கிளாகவே அவரால் பார்க்கப்பட்ட அது இப்போது மூக்கப்பனின் பராமரிப்பில் தங்கத்தேராகவே மின்னியது. உடும்பாவூரில் சைக்கிள் வைத்திருந்த சொற்ப நபர்களில் மூக்கப்பனும் ஒருவர். ‘இவனுக்கெல்லாம் வந்த வாழ்வு அப்படி’ என்று சிலரின் பார்வையும்கூட மூக்கப்பன் சைக்கிளில் போகும்போது பாய்ச்சப்படும்.
டவுனை நோக்கி சைக்கிள் விரைந்தது. எதிரில் காளிமுத்துப்பண்ணையாரின் டீக்கடையருகில் இசக்கிமுத்தோடு தென்பட்டான் இராமசாமி. அவன் தன் தந்தை மூக்கப்பனைப் பார்க்கவில்லை. இசக்கிமுத்தோடு எதையோ தீவிரமாகப் பேசிக்கொண்டு வீடுநோக்கிச் சென்றுகொண்டிருந்தான்.ஏதோ இராமசாமியிடம் சொல்ல வந்த வார்த்தைகள் மௌனமாக உருவெடுத்துப் பின் அமைதியானது அவருக்கு. கொஞ்சதூரம் சென்று சைக்கிளை நிறுத்தித் தன் மகன் இராமசாமியை வாஞ்சையோடு திரும்பிச் சில நொடிகள் பார்த்துவிட்டு மறுபடியும் தேரில் புறப்பட்டார். வியர்வைப்பூக்கள் அவர்மேனியில் பூக்கத்தொடங்கியிருந்தன. சைக்கிள் கிளிநத்தையூரை அடையும்போது பள்ளிமணியோசை அவரை வரவேற்றது. பள்ளிப் பிள்ளைகளைக் கண்டவுடன் ஒரு ஆனந்தம்.
“டேய் மூக்கொழுகி மூக்கப்பன் வராண்டோய்; டேய் மூக்கப்பா நீ கொஞ்சம் தள்ளியே ஒக்காரு; எங்க ஐயாலாம் உன் பக்கத்தில நெருங்கிப் பழகக்கூடான்னு சொல்லியிருக்காரு; டேய் மூக்கொழுகி சொன்னா கேக்கமாட்டியாடா நீ தள்ளி ஒக்காருடா” தான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது இப்படிக் கேட்கப்பட்ட வார்த்தைகள் மீண்டும் அவரின் செவிகளில் ஒலித்தன. சிறுவனாயிருந்த மூக்கப்பனுக்கு அந்த வார்த்தைகள் செவியோடு திரும்பிவிடுமே தவிர அதை மூளைக்குள் செலுத்தி யோசித்துப்பார்க்க அந்த வயதில் பக்குவமில்லை . பிற்காலத்தில்தான் ஒவ்வொன்றாய்ப் புரிய ஆரம்பித்திருந்தது மூக்கப்பனுக்கு.
‘தான் கல்விகற்க சென்றோம்’ என்பதைவிடவும் ‘வயிற்றையாவது நிரப்பிக்கொண்டு வரட்டுமே’ என்றேதான் ‘பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டோம்’ என்பதும் அவருக்குப் புரியாமலில்லை. பள்ளிப்பருவத்தில் தான்செய்த குழந்தைத்தனமான சேட்டைகள்கூட தன்வீட்டிற்குக் குற்றங்களாகவே புகார்செய்யப்பட்டதையும் அவர் நினைத்து மனதிற்குள்ளாகவே சிரிக்கமுயன்று பின் எதையோ சிந்திக்கத் தொடங்கிவிட்டார். ஒருகட்டத்தில் அத்தோடு சரி. மூன்றாம் வகுப்புக்குமேல் செல்லவில்லை. மூக்கப்பனுக்கு விருப்பம்தான். மற்றவர்கள் முகஞ்சுளித்தார்களே! பிறகு ‘தனக்கு ஒத்தாசையாக இருக்கட்டுமே’ எனத் தன் தந்தை டவுனுக்குத் தொழிலுக்கு அழைத்துச் சென்றதையும் நினைத்துப்பாத்தார்.
இப்படித் தினமும் கிளிநத்தையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைக் கடக்கும்போதெல்லாம் அசரீரியாய்ச் சில நினைவுகள் மூக்கப்பனுக்கு வந்துபோவதுண்டு. தன் மகனையாவது படிக்கவைத்து தனது நிறைவுறாத ஆசைகளைத் தீர்த்துக்கொள்ளவேண்டுமென நினைத்திருந்தார் மூக்கப்பன். கேட்டானா அவன்? எவ்வளவோ மன்றாடியும் இராமசாமி கேட்கவில்லை. ஆறாம் வகுப்பில் தேர்ச்சிப்பெறாமல்போனதும் மீண்டும் அவன் பள்ளிக்குச் செல்ல விரும்பாததையும் நினைத்துக் கொஞ்சம் கவலையுற்றார். தங்கத்தேரானது மூக்கப்பனின் மனச்சுமைகளையும் சுமந்து அரியலூர் டவுனைநோக்கிச் சென்றது.
“காத்தால ஏரிக்குப் போனோமோ வந்தோமானு இல்லாம ஊரு கத உலகத்துக் கதைலாம் நமக்கு எதுக்கு?; நம்மல நாலுபேரு மரியாத கொறையாத அளவுக்கு மதிச்சாதான் நமக்கு நல்லது; ஊரு வாய்க்குத் தீனி போட்டுவுட்டுப் பேசவுட்டாக்க அது நாள்பூராவூம் நம்மளயே பேசும்; அதுவே நமக்குப் பெரிய வெனையா அமையும்; இருக்குற நெலமைய நெனச்சி ஒழுங்கா பொழப்பு பண்ணலனா இருக்குற மரியாதையும் புழுதியில பறந்திடும்” இராமசாமியின் செவிகளுக்கு எட்டும்படியாகவே எச்சரித்தாள் பூவரும்பு.
முகம் கழுவி வாய் கொப்பளித்துக்கொண்டிருந்த இராமசாமிக்குக் கோபம் மண்டைக்கேறியது. “யம்மோவ் நா அப்படி என்னப் பண்ணிட்டேன்னு இப்போ நீ பொலம்பிச்சாகுற” கத்த ஆரம்பித்தான் இராமசாமி. தன்னிடம் எந்தவொரு குற்றமும் இல்லாதவாறு காட்டிக்கொண்டான். அதே சமயம் அவள் எதை மனதுள்வைத்துத் தன்னை எச்சரிக்கிறாள் என்பது அவனுக்குப் புரியாமலில்லை.
“வேண்டாம்டா ராமசாமி; நம்ம பண்ற பொழப்பே நாலுபேருக்கு மொகம் சுழிக்கவைக்குது; ஏதோ நமக்குத் தெரிஞ்ச தொயில பண்ணிக்கிட்டு காடுகரைக்கு வேலைக்குப்போயிக் காலத்த ஓட்டிக்கிட்டு இருக்கோம்; தெக்காலக் காட்டுல நீ எப்போ சிக்குவ? உன்ன குத்தலாமா? வெட்டலாமான்னு ஒரு திட்டமே நடந்திட்டு இருக்கு; இனி நீ அங்க ஆட்டுமாட்ட ஓட்டிட்டுப் போகவேண்டாம்; ‘சொத்தச்சி’ ஏரிக்கு ஆட்டுமாட்ட ஓட்டு; வேணான்டா அந்த வூட்டுக்காரங்களுக்கும் நமக்குமே ஒத்துவராது; நம்ம ஊர்ல அது அதுங்க அது அதுங்க ஜனத்துக்குத்தான் ஒத்தாசையா இருக்கும்; ஊரு வழக்கத்துக்கு மாத்தி எதாச்சும் இங்க நடந்துப்போச்சினா நம்மள நிம்மதியா இருக்கவுமாட்டானுங்கடா” பூவரும்பினுடைய வார்த்தைகள் இராமசாமிக்கு மேலும் கோபத்தைக் கிளப்பியது.
தன்னுடைய விவகாரம் எந்தவகையிலும் இழுக்கானதல்ல, தவறானதல்ல என்பதை நிலைநிறுத்தும்படி தன் தாயிடம் ஒரே வார்த்தையில் சொன்னான் “என்னால எதையும் மாத்திக்க முடியாது”. அவன் முகத்தில் ஒரு உறுதியிருந்தது. தெளிவிருந்தது. எதற்கும் தான் சலித்தவனில்லை என்பதுபோல் காட்சியளித்தான்.
“இன்னா பூவரும்பு இன்னுந்தான் கெளம்பிக்கிட்டு இருக்கியா? நேரத்தில போயி காட்டுல குனிஞ்சி நிமிந்து புல்லு புடுங்குனாதான நேரத்தோட வீடுதிரும்பலாம்” கங்காணியான காசாம்பு குரல்கொடுத்ததில் கையில் சோத்துவாளியைத் தூக்கிக்கொண்டு வேலையாட்களுடன் சங்கமித்தாள் பூவரும்பு. அவள் முகம் களையிழந்திருந்தது. இராமசாமியை நினைத்து மிகவும் கவலையுறச் செய்திருந்தது. நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டும் வாலை ஆட்டிக்கொண்டும் பூவரும்பைப் பின்தொடர்ந்தது அவர்களின் ‘வெள்ளையன்’ நாய். பின்னர் பூவரும்பு விரட்டிவிட்டதில் இராமசாமியை நோக்கி ஓடினான் வெள்ளையன்.
சாப்பிட்டு முடித்துவிட்டு ஆடுமாடுகளை அவிழ்த்துவிட்டு கையில் தூக்குவாளியுடன் தெக்கால காட்டுக்கே போனான் இராமசாமி. பூவரும்பு எச்சரித்ததையெல்லாம் அவன் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ‘தன்னை யார் என்னசெய்துவிடமுடியும்?; இரண்டிலொன்று பார்த்துவிடவேண்டும்’ என்ற முனைப்போடே இருந்தான். ஆடுமாடுகள் ஆங்காங்கே மேய ஆரம்பித்தன. பின்னர் கொஞ்சநேரத்தில் நிறைய ஆடுமாடுகள் அங்கே சங்கமித்தன. அங்குமிங்கும் சுற்றித் சுற்றிப்பார்த்தான். அவன் கண்கள் இராஜவள்ளியைத் தேடின. அவள் வரவில்லை. அவளுக்கு மாற்றாக அவள் அம்மாதான் வந்திருந்தாள். ஒருவேளை தன் விவகாரம் அவள் வீட்டிக்குற்குத் தெரிந்துவிட்டதா? என யோசித்துப்பார்த்தான்.
ஆனால் அதற்கான அறிகுறிகள் இல்லாதவாறுதான் இராஜவள்ளியினுடைய அம்மா காணப்பட்டாள். இன்னும் நிறைய ஆடுமாடுகள் அங்கு சங்கமித்துக்கொண்டிருந்தன. கதிரவன் உச்சியைவிட்டு மேற்குநோக்கி நகர்ந்துகொண்டிருந்தான். அவரவர் மரநிழலைப்பார்த்து அமர்ந்து ஆகாரம் அருந்த ஆரம்பித்தனர். இராஜவள்ளியின் அண்ணன் கருப்புசாமி சைக்கிளில் தூக்குவாளியுடன் வந்து அவன் அம்மாவிடம் சிறிதுநேரம் பேசிச்சென்றதை இராமசாமி கவனித்துக்கொண்டிருந்தான். கருப்புசாமியின் பார்வைகள் இராமசாமியின்மேல் பாய்ச்சப்படவில்லை. ஆடுமாடுகள் ஒய்யாரமாய் மேய்ந்துகொண்டிருந்தன. இராமசாமியின் செவத்தக்காளை அங்கிருந்த கெடேரிகளைச் சுற்றிச் சுற்றி வந்தது. இராமசாமி ராஜவள்ளி வராததை நினைத்துக்கொண்டிருந்தான். கதிரவன் மேற்குநோக்கிப் போய்க்கொண்டேயிருந்தான்.
சூரியன் மேற்குவானில் மறைந்துகொண்டிருந்தபோது மூக்கப்பன் டவுனில் இருந்து வேலைகளை முடித்துவிட்டு களைப்புடன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்தார். காளிமுத்துப் பண்ணையாரின் டீக்கடையை கடந்துகொண்டிருக்கும்போது எல்லாம் நடந்தேறிவிட்டது.
தன்முகத்தைத் துணியால்மூடி யார் தன்னை மண்டையில் அடித்தார்கள் என மூக்கப்பனுக்குத் தெரியவில்லை. முகம் துணியால் மேலும் சுற்றப்பட்டது. இரண்டு மூன்று அடிகள் வலுவாக மண்டையில் விழுந்தன. மூக்கப்பனின் முகம் இறுகக் கட்டப்பட்டதில் வார்த்தைகள் தடைபட்டுப்போயின. தன்னை எங்கேயோ தூக்கிக்கொண்டு செல்கிறார்கள் என்பதுகூட அவருக்குத் தெரியவில்லை. அநேகமாய் மயக்கநிலைக்குச் சென்றிருக்க வேண்டும்.
பருவமழை தொடங்கியிருந்ததனால் ஒரே மழை. கால்வாய்கள் நிரம்பி தெருவெங்கும் வெள்ளம் பள்ளம்நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருக்க வானம் இடிமின்னலை இசைத்துக்கொண்டிருந்தது. எப்போது நிற்கும்? என்றறிய முடியாத வகையில் முடிவுரையின்றி மழையானது பெருத்த இரைச்சலுடன் முன்னுரை எழுதிக்கொண்டிருந்தது. இருந்த வெளிச்சமும் மெல்ல மெல்ல மங்கி அந்த மாலைப்பொழுதில் கருஞ்சட்டையைச் சூடிக்கொண்டிருந்தது வானம். வீட்டினுள்ளே ஆங்காங்கே மண்பானைகளை வைத்துவிட்டு கோணிப்பைகளை விரித்துப்போட்டு அந்த மேல்விட்டத்தைப் பார்த்தவாறு படுத்திருந்தான் இராமசாமி. கனத்த மழையால் நீர்த்துளிகளானது கரும்புத் தோகையால் வேயப்பட்டிருந்த கூரையினுள் புதிய பாதைகளைக் கண்டுபிடித்து ஊடுருவிச் செங்குத்தாக அவன் தலைமேல் ஒழுகத் தொடங்கின. அவன் முகத்தின்வழி வடிவது மழைநீரா? அல்லது வியர்வைநீரா? என வேறுபடுத்தவியலாத கோலத்தில் காட்சியளித்தான்.
அந்தக்குடிசைவீட்டு மூலையில் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்த பானைகளில் ஒன்று அவ்விடத்திலிருந்து நீரொழுகும் இடத்திற்கு அவனால் மாற்றப்பட்டது. இப்பொழுது வேறொரு இடத்தைப் படுப்பதற்குத் தேடிக்கொண்டிருந்தான். மழைத்துளிகள் பூமியைத்தொடும் ஒலி, வானத்தின் இடிமின்னலோசை, வெளியிலே ஆடுமாடுகள் கத்துகின்ற சத்தம் இவற்றோடு சேர்ந்து தன் செவிநோக்கி நெருங்குகின்ற புலம்பல் சத்தங்களையும் கேட்டுக்கொண்டிருந்தான் அவன்.
அந்தப் புலம்பலை அவன் இனங்கண்டறிந்துகொள்ளும் வகையில் “அடடடா….. இந்த வானம் இப்படியே பொழிஞ்சிக்கிட்டிருந்தா காத்தால எப்படி வேலக்கிப் போறது? இந்த மனுசனும் எப்படி நாளைக்கி தொயிலுக்குப்போவாரோ?; போன மனுசன இன்னேரத்துக்கும் வரக்காணலயே” என நீராடிய கோலத்தில் வீட்டினுள் நுழைந்தாள் பூவரும்பு. “ஏலே ராமசாமி… என்னாடா இப்படிப் படுத்துக்கிட்டிருக்க?; நெனப்புதான்டா பொழப்புல மேண்ணள்ளிப்போடும்; தொயிலுக்குப் போன ஒப்பன இன்னுங்காணல ஒரு இட்டு போய் அந்தக் காளிமுத்து டீக்கடையில பாத்துட்டுவாயேன், மனுசன் மழையில அங்க ஒதுங்குனாலும் ஒதுங்கியிருப்பாரு”. நிலைமையைப்புரிந்துகொண்டு அந்தக்கோணிப்பைகளிலே ஒன்றை உள்வாங்கியபடி மடித்து தலைமேலே போட்டுக்கொண்டு விரைந்தான் இராமசாமி.
“எப்பதான் நமக்கு விடிவுகாலம் வரப்போவுதோ? காத்தடிச்சா கூரை பிச்சிக்கிட்டுப் போவுது, மழைவந்தா கூரை பொத்துக்கிட்டு ஒழுவுது, இப்போ ரெண்டும் ஒன்னா வந்து நம்மல சோதிக்குதே” புலம்பலின் நீட்சியாக தலையைத் துவட்டிக்கொண்டே கீழே வைக்கப்பட்டிருந்த பானைகள் நீர்த்துளிகளை விழுங்கும் ஓசையை அந்த மங்கிய மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் கேட்டுக்கொண்டிருந்தாள் பூவரும்பு. அவள் செவிகளை காற்றுடன் பிணைந்தபடி மழைகொட்டும் இரைச்சல் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கத் திடீரெனப் ‘படபடபட’ என்று முழங்கிய இடியின் பேரொலிகள் வீடுதிரும்பாத கணவனை இன்னும் அவளை அதிகமாய் நினைக்கவைத்து நிலைகுலைய வைத்தன.
“எங்கப் போனாரு எங்க ஒதுங்கினாருன்னு தெரியலையே!; வானம் கருக்கலா இருந்தா இந்த மனுசன் சாமான்செட்ட ஒதுக்கி வைச்சிட்டுக் கெளம்பிடவேண்டிதானே; எங்கன்னு போய்த்தேடுவேன்?.. அன்னைக்கு அப்படித்தான் இதே போல பெருசா மழை வந்ததுக்கு சாயங்காலம் மனுசன் வீடு திரும்பல; ராத்திரியெல்லாம் எங்களைத் தேடவச்சிட்டு டவுன் பஸ்ட்டாண்ட்லயே படுத்திருந்திட்டு வேலையமுடிச்சிட்டு மறுநாள் இராத்திரிதான் வந்தாரு; அன்னைக்காவது பரவால்ல அவருக்கூட தொழிலுக்குப்போற பெருமாள்சித்தப்பா வூடுதேடி வந்து காத்தால இந்த மனுசன் டவுன்பஸ்ட்டாண்ட்லயே ஒதுங்கிட்டாருன்னு சொல்லிப்புட்டுப் போனாரு; ஒருவேளை எதுக்கும் பெருமாள்சித்தப்பா வூட்டுல பாத்துட்டுப் போகலாம்” ஊர்ப்புற காளிமுத்து ட்டீக்கடைக்குப் போவதற்கு முன்பாக தன் வீட்டிற்கு ஐந்துவீடு தள்ளியிருக்கிற பெருமாள்வீட்டிற்குப் போக இராமசாமியின் மனம் அவன் கால்களுக்குக் கட்டளையிட்டது. அவன் பாதத்தின் அழுத்தங்கள் ஏற்படுத்தும் ஒவ்வொரு அடிச்சுவட்டையும் கொட்டுகின்ற மழைத்துளிகள் அதை மறைத்துக்கொண்டிருந்தன.
“பெருமாள் சித்தப்பா…. பெருமாள் சித்தப்பா….” காற்றும் மழையும் பின்னிப்பிணைந்து அநேக இரைச்சலை எழுப்பிக்கொண்டிருந்ததால் அவன் கத்தியது அவனைத் தவிர வேறு யாருக்கும் கேட்டிருக்க வாய்ப்பில்லை. பெருமாள்வீட்டின் கதவோரம் நடுங்கியபடி ஒதுங்கி “சித்தப்பா…. ஓய் பெருமாள்சித்தப்போய்..” இந்தமுறை வேகமாய் அழைத்ததில் உள்ளிருந்து மெல்ல கதவோரம் வந்த பெருமாள், தன்னை பெயரோடு சேர்த்து அழைப்பது இராமசாமியாகத்தான் இருக்கமுடியுமென்பதை உள்ளூற நினைத்துக்கொண்டு, கதவை உட்புறமாகத் திறந்து “நெனச்சேன் நீயாதான் இருப்பன்னு;உள்ளவாடா; நெனையாத உள்ளவாடா” உரிமையோடு அழைத்தார் பெருமாள். “இருக்கட்டும் சித்தப்பா;அப்பா இன்னும் வீடுதிரும்பல; எதாச்சும் சொல்லி அனுப்பிச்சாரா? பாத்தீங்களா?”.
அவன் உள்ளத்தில் குமுறிக்கொண்டிருந்த உணர்வுகளை முகத்தின்வழியே மழைநீரோடு வழிந்தோடுவதைத் தனியே பிரித்துப்பார்த்தார் பெருமாள். “நா முன்னாடியே நாலரை மணி டவுன்பஸ்சுக்கெல்லாம் கெளம்பிட்டேனே.. 5 மணிக்கே ஏறி மிதிச்சிப் புறப்பட்டுருந்தாலும் இந்நேரத்துக்கெல்லாம் அவரோட சைக்கிள் ஊருவந்து சேந்திருக்கணுமே இராமசாமி!” பெருமாளின் பதிலானது எரிகிற தீயில் இன்னும்கூடுதலாய் அனலை மூட்டியது. அவனை இன்னும் நடுக்கங்கள் அதிகமாய் ஆக்கிரமித்திருந்தன. எங்கே போனார் இந்த மனுஷன்?
“இங்கேயும் அப்பனைப் பத்துன தகவல் கெடைக்குல; ஒதுங்கியிருந்தால் காளிமுத்துப் பண்ணையார் டீக்கடையிலதான் ஒதுங்கியிருக்கணும்; அப்படி அங்கேயும் இல்லேன்னா? ச்சே ச்சே.. அந்தமாதிரிலாம் ஒன்னும் நடந்திருக்காது; இந்தாளு அங்கதான் இருக்கணும்” மனக்கைகளால் தன்தலையில் ஓங்கி ஒரு கொட்டு கொட்டிக்கொண்டான். போனமுறை இலகுவாகியிருந்த இதே தேடல் இந்தமுறை இன்னும் பீதியடையச்செய்திருந்தது அவனை. போதாததற்கு கனமழைத்துளிகள் இராசாமியின் மனத்திடத்தில் கொஞ்சம் ஊடுருவத் தொடங்கின. நடையில் வேகங்கூடியது. அங்குள்ள மக்கள் அனைவரும் மழைக்கஞ்சியபடி வீட்டில் ஒதுங்கியிருக்க நீராடிக்கொண்டிருந்த தெருவின்மேனியில் கால்சுவடுகளை முதல் ஆளாய் பதியவைத்துக்கொண்டும் மழைத்துளிகளைக் கிழித்துக்கொண்டும் பண்ணையார் டீக்கடையை நோக்கி நடந்தான் இராமசாமி. எங்கேயோ பலமாக முழங்கிய தொடர்இடி இராமசாமியின் இதயத்தை அதிரச்செய்தது.
ஒரு கணம் குலைநடுங்க ஆடித்தான் போனான். மழையில் வியர்த்து விடவிடத்துப் போனதாய் உணர்ந்தான். கோணிப்பையை இன்னும் இறுக்கமாய்ப் போர்த்திக்கொண்டான். எவ்வளவுதான் இறுக்கிப் போர்த்தினாலும் மழைத்துளிகளின் திரவ ஈட்டிகள் இந்நேரம் கோணிப்பையை ஊடுருவாமலா இருந்திருக்கும்?.
இருப்பதோ ஒரேயொரு தெருவிளக்கு. அதுவும் அடிக்கடி பழுது ஆகக்கூடியது. ஒரே இருட்டு. இப்போது மின்சாரமுமில்லை. தொடர்ந்து நடந்தான். முட்களும் சின்னஞ்சிறு கற்களும் அவன் பாதங்களை முத்தமிட்டுக்கொண்டன.இப்போது தன் வீட்டிலிருந்து அரைகிலோமீட்டர் தொலைவைக் கடந்திருந்தான் இராமசாமி. பண்ணையார் டீக்கடையில் நடனமாடிக்கொண்டிருந்த மண்ணெண்ணெய் விளக்கின் இளஞ்சுடர், கடை இன்னும் மூடவில்லை என்பதை அவனுக்கு உறுதிப்படுத்தியது.
இன்னும் அருகில் நெருங்கினான். விளக்கொளியின் நடனத்தால் அங்கே நின்றுகொண்டிருந்தவர்களின் நிழல்களும் அதற்கேற்ப நடனமாடிக்கொண்டிருந்தன. நின்றுகொண்டிருந்தவர்கள் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். என்ன பேசுகிறார்கள்? எதைப்பற்றிப் பேசுகிறார்கள்? என்பதைத் தெளிவாகக் கேட்காதபடி கனமழையின் இரைச்சல் இராமசாமியின் செவிகளுக்குத் தடுப்புச்சுவர் எழுப்பியிருந்தது. அந்த நிழல்களின் நடனத்திலொன்று நிஜமாய்த் தன் தந்தையைக் காட்டும் என்றெண்ணி அங்கிருந்தவர்களை நோட்டமிட்டான். நிஜம் பொய்த்துப்போனது. போய் நின்றவனை யாரெனக் கண்டுகொள்ளக்கூட அவர்களுக்கு அவசியமாயில்லை. மழை எப்போது நிற்கும்? எப்போது வீடுபோய்ச் சேரலாம்? என அவரவர்கள் மழையிடம் நடுங்கியபடிக் கேள்விகேட்டுக்கொண்டிருந்தார்கள். பொறுமையிழந்தான் இராமசாமி.
“ஓ பண்ணையார் ஐயா…..” இது பெருமாள்சித்தப்பாவை அழைத்ததைவிடவும் அதிக ஒலியுடன்கூடிய அழைப்பு. மற்றவர்களுடன் தொடர்பிலிருந்த ‘காளிமுத்துப் பண்ணையார்’இன் உரையாடலைக் களைத்தது இந்த அழைப்பு. இராமசாமியின்பக்கமாகத் திரும்பினார் பண்ணையார்.
“யாரது?”
“நான்தான் பண்ணையாரே”
“நான்தான்னா யாருப்பா அது”
“இராமசாமி”
“என்ன வேணும்? கடைய மூடிட்டேன்; இனி நாளைக்குத்தான் டீத்தண்ணி போடுவோம்”
“டீத்தண்ணி இல்ல பண்ணையாரே; எங்க அப்பா இங்க ஒதுங்குனாரா?”
“உங்க அப்பன் இங்க ஏண்டா ஒதுங்கப்போறான்?; டீத்தண்ணி குடிக்கறதோட சரி; குடிச்சதுக்கு அப்புறம் ‘சடார்’னு போய்க்கிட்டே இருப்பான்; அவனுக்குத்தான் தலைக்குமேல வேலையிருக்குமே; பெரிய தொயிலதிபராச்சே” பண்ணையார் சொன்னதும் அங்கிருந்தவர்கள் வாய்விட்டுச் சிரித்தார்கள். பொறுத்துக்கொண்டான் இராமசாமி.
“அது இல்ல பண்ணையாரே; காத்தால வேலைக்குப் போனாரு; இந்நேரத்துக்கெல்லாம் மனுஷன் வீட்டுக்கு வந்திருக்கணும்; இன்னும் வரக்காணல” என்றான் இராமசாமி.
இந்தமுறை பண்ணையார் பதில்சொல்வதற்குமுன் அங்கிருந்த வேறொருவன் சொன்னான் “ஆமா இவனோட அப்பன் கப்பல்கட்டுற கம்பேனி நடத்துறான்; கார்லயே பொய்ட்டு அலுங்காக குலுங்காம கார்லயே வரானாக்கும் மழையில நனையாம இருக்க” இப்படி இராமசாமியைச் சூடேற்றிப்பார்த்தான் கருப்புசாமி.
“வேலைக்குப் போறதே காலணாவுக்குத் தேறாத அந்த கந்தல்சைக்கிள்ல; இதுல அந்தாளு கரடுமுரடுகளக் கண்டாலே சைக்கிளைத் தலைக்குமேல தூக்கிட்டுப்போயி அப்புறமாதான் ஏறிமிதிப்பான்” இப்படி சூரியமூர்த்தி சொன்னதில் கூட்டம் இன்னும் அதிகமாய்ச் சிரித்தது. ஏளனத்தால் எய்தப்பட்ட அம்புகள் இராமசாமியின் மனதில் குத்தி அவனை மௌனம் களைத்துப் பேசவைத்தது.
“இதோ பாரு சூரியமூர்த்தி நா உன்கிட்ட எதுவும் கேக்கல; நா பண்ணையாருக்கிட்டதான் கேட்டேன்; உனக்கும் என்வயசு’ன்றத மறந்துட்டு ‘அவன் இவன்’னு மரியாதையில்லாம பேசாத” குத்துப்படாத வேகத்தில் பதிலம்பெய்தினான் இராமசாமி.இந்த அம்பு கருப்புசாமியையும் எச்சரித்ததாய் இருந்தது.
“ஏய் இராமசாமி எதுக்கு அவனுங்ககிட்ட வார்த்தைய வளக்குற?; எதுக்கு தேவயில்லாத வம்பு?; உன் அப்பனைக் காணலன்னு சொல்லுற; அந்தச் சோலிய போய் பாருடா”
தன் பண்ணையில் வேலைசெய்வதால் சூரிய மூர்த்தியையும் கருப்புசாமியையும் விட்டுக்கொடுக்காமல் பேசினார் காளிமுத்து. அது இராமசாமிக்கும் தெள்ளத்தெளிவாகப் புரிந்தது. இப்போது எழுந்துநின்று மீசையை முறுக்கிவிட்டு இராமசாமியை முறைத்தான் கருப்புசாமி.
“அட நீ என்ன மச்சான், இதுக்குலாம்போய்க் கோவப்பட்டு மீசையை முறுக்கலாமா?” கருப்புசாமியின் மீசையை இப்படித் தன் வார்த்தைகளால் மேலும் முறுக்கிவிட்டான் சூரியமூர்த்தி.
இராமசாமி – கருப்புசாமி; பார்வையில் நேருக்குநேர் போரிட்டுக்கொண்டிருந்தனர். இரண்டுபேரின் கண்களிலும் வழிந்துகொண்டிருந்த கோபத்தை இடைமறித்துக் கட்டுப்படுத்தினார் பண்ணையார். சூரியமூர்த்தி கருப்புசாமியின் பக்கமாய்ச் சென்று நின்றுகொண்டான்.
“டேய் இராமசாமி” அழைத்தது இசக்கிமுத்துவின் குரல். யாரது இசக்கிமுத்து? இராமசாமியின் பக்கத்துவீட்டுக்காரன். பாலு மாமாவின் மகன்; நகரத்தில் முத்துப்பண்ணையாரிடத்தில் மூட்டைதூக்கும் வேலை; அழைத்த குரலுக்கு இசக்கிமுத்துவின் பக்கமாய்த் திரும்பினான் இராமசாமி. கொஞ்சம் கோபம் குறைந்திருந்தான். சட்டெனக்கேட்டான் இராமசாமி “பஸ்ட்டாண்ட்ல அப்பாவ பாத்தியா?” இசக்கிமுத்துவின் வாயைப் பார்த்தார்கள் அங்கிருந்தவர்கள். “இன்னைக்கு பஸ்டாண்ட் பக்கம் லாரிக்கு வேலையில்ல; வேற பக்கம் வேல; மாமாவ நா பாக்கலயே; பக்கத்து ஊரு வரைக்கும் லாரி வந்துச்சி அதுல தொத்திக்கிட்டு வந்தேன்” இசக்கிமுத்துவின் பதிலானது என்னென்னவோ நினைக்கவைத்துக்கொண்டிருந்தது இராமசாமியை.
“லாரி மறுபடியும் டவுனுக்கு போகுதா?”
“இல்லை; லாரி சகதியில மாட்டிக்கும்னு காலைலதான் போகும்னு சொன்னாங்க” இசக்கிமுத்து சொன்ன கணத்தில் டவுனைநோக்கிய பாய்ச்சலுக்குத் தயாரானான் இராமசாமி.
“மழை நிக்காம வருது; இந்த இருட்டுல எட்டு மையிலு தூரம் நீ நடந்தே போகப்போறியா டவுனுக்கு?; அதெல்லாம் வேண்டாம்; சொன்னா கேளு; மாமா பஸ்டாண்ட்லதான் ஒதுங்கியிருப்பாரு; காத்தால போய்க்கலாம்” பாய்ந்தவனைக் கையைப் பிடித்துக் கட்டியணைத்து நிறுத்தினான் இசக்கி. ஈரம் இரு உடல்களுக்கிடையில் பரிமாறப்பட்டது. இல்லை இல்லை. இரு இதயங்களுக்கிடையில் பரிமாறப்பட்டது. நனைந்திருந்த கோணிப்பை முறுக்கப்பட்டது. இப்போது இரண்டு தலைகளையும் கோணிப்பை போர்த்தியிருந்தது. அந்தக் கனமழையில் வீடுநோக்கிச் சென்ற இராமசாமியையும் இசக்கிமுத்துவையும் விளக்கொளி காட்டும்வரை பார்த்துக்கொண்டிருந்தார்கள் அங்கிருந்தவர்கள்.
முன்பைவிடக் கொஞ்சம் மழைக் குறைந்திருந்தது. தவளைகள் இசைத்துக் கொண்டிருந்தன. “ஏன் கருப்புசாமி தம்மீது இவ்வளவு கோபம் கொண்டிருக்கிறான்?ஒருவேளை நம் விவகாரம் கசிந்து அவன் செவிகளை எட்டியிருக்குமோ?; இல்லை இந்தக்கோபம் அப்படிப்பட்டதாக இல்லையே!; இச்சமுதாயம் பழக்கி வைத்திருக்கிற கோபத்திலிருந்து முரண்பட்டதாய்த் தெரியவில்லையே!; ஒருநாள் விடயம் அவன் குடும்பத்தார்க்கு எட்டும்போது இன்னும் அவன் வேறுபடலாம்; கருப்புமாசி கொலைகாரனாய் மாறலாம்; ஆனால் நான் அவ்வளவு பெரிய தவறா செய்துவிட்டேன்?; இந்தக்கேள்விக்கு இச்சமுதாயம் என்ன பதில் வைத்திருக்கிறதோ?” தனக்குத்தானே பேசிக்கொண்டான். வெளிப்புற சத்தங்களைவிடவும் அவன் மனதின் சத்தங்கள் இன்னும் அவனை அதிகமாய் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன.
பூவரும்புக்கும் இராமசாமிக்கும் தைரியம்கூறி தன் வீடு திரும்பினான் இசக்கி. ஒவ்வொரு இடிகளிலிருந்தும் பிரார்த்தனைகளால் தன்கணவன் மூக்கப்பனைக் காப்பாற்றிக்கொண்டிருந்தாள் பூவரும்பு.
காளிமுத்துப் பண்ணையாரின் டீக்கடை கொடுத்திருந்த அவமானத்துக் காரணமான இச்சமூகக் கட்டமைப்பை மாற்ற என்னதான் வழியிருக்கிறது? சிந்தித்தபடியே மேல்விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான் இராமசாமி. எல்லாம் விதியென அவனால் கடந்துபோக இயலவில்லை. தங்களின் நிலையை எண்ணி மேலும் வீடுதிரும்பாத அப்பனையே நினைத்துக்கொண்டிருந்தான். பூவரும்புக்கோ இராமசாமிக்கோ தூக்கம் துளியும் வரவில்லை. அவர்களின் கண்கள் மூக்கப்பனின் வரவை எதிர்பார்த்து வாசற்படியையே பார்த்துக்கொண்டிருந்தன.
‘தான் எங்கிருக்கின்றோம்’ என மூக்கப்பனுக்குத் தெரியவில்லை. ஆனால் உயிரோடுதான் இருக்கிறோம்’ என்பதுமட்டும் தெரிந்தது. அவரால் வலிபொறுக்க முடியவில்லை. தலையில் பெரும்விலிகள் ஊற்றெடுப்பதை அவர் உணர்ந்தார். தான் மயக்கமுற்ற நேரத்தில் பெருமழை பெய்துவிட்டதுகூட அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
காளிமுத்துப்பண்ணையாரின் டீக்கடை முகத்துவாரத்தில் ஒரு ‘அம்பாசட்டர்’ கார் டவுனின் திசையிலிருந்து வந்துநின்றது. அங்கிருந்தவர்கள் காரை உற்றுப்பார்த்தனர். காரின் கதவைத் திறந்து வெளியில்வந்தார் பச்சமுத்து.
“அடடே வாங்க சின்ன சம்மந்தி; என்ன இந்நேரத்தில இங்க?” புன்னகைபூத்துக் கேட்டார் காளிமுத்து.
“இவர்தான் கிளிநத்தையூர் ஹெட்மாஸ்ட்டர் பச்சமுத்து; என் சம்மந்தியோட தம்பி” எனப் பண்ணையார் தன் வேலையாட்களுக்கு பச்சமுத்துவை அறிமுகம் செய்துவைத்தார். அடுத்தகணமே பண்ணையாரின் வேலையாட்கள் பச்சமுத்துவை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டு வணங்கினார்கள்.
இரண்டு அழகிய மரவேலைபாடுகள்கொண்ட இருக்கைகளை ஆளுக்கொன்றாய் கருப்புசாமியும் சூரியமூர்த்தியும் கொண்டுவந்து ஷட்டருக்கு அருகில் போட்டுவிட்டுத் துடைத்துவிட்டுச் சென்றார்கள். காளிமுத்துவும் பச்சமுத்துவும் ஆளுக்கொரு இருக்கைகளில் அமர்ந்துகொண்டு கால்மேல் கால்போட்டுக்கொண்டு புன்னகைத் தளும்பப் பேச ஆரம்பித்தார்கள்.
காளிமுத்து ஏதேனும் கட்டளைப் பிறப்பித்தால் உடனே அதை நிறைவேற்றும் வகையில் வேலையாட்கள் டீக்கடையில் நின்றுகொண்டிருந்தார்கள். காளிமுத்துக் கட்டளைப் பிறப்பித்தவுடன் ட்டீ மாஸ்ட்டர் ட்டீ போட ஆரம்பித்தார்.
“ஒன்னுமில்ல பண்ணையாரே; அடுத்தமாசம் பையனுக்குக் கல்யாணம் வெச்சுருக்கேன்; அதான் பத்திரிகைவெச்சுட்டுப் போலாம்னு வந்தேன்; டவுன்ல நெறையபேருக்கு பத்திரிகை வெச்சதால கொஞ்சம் நேரமாய்டிச்சி; மழைவேற வெளுத்து வாங்கிடிச்சி” சிரித்தபடியே சொன்னார் பச்சமுத்து.
“அதுக்கென்ன சம்மந்தி? குடும்பத்தோட வந்து ஜமாய்ச்சிப்புடுறேன்” பண்ணையார் உரிமையுடன் மிடுக்காகப் பதிலுரைத்தார். ஷட்டருக்கு உள்புறமாக கட்டடத்தின் உள்ளே கிடத்தப்பட்டிருந்த மூக்கப்பனுக்கு நினைவு திரும்பிக்கொண்டிருந்தது.
பண்ணைவேலைகள் பற்றி இருவரும் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.
‘மூக்கப்பனுக்கு தான் எங்கிருக்கிறோம்?’ என்று நினைவு கொஞ்சம் கொஞ்சமாய்த் திரும்பிக்கொண்டிருந்தது. அவர்களின் உரையாடல் தெள்ளத் தெளிவாக மூக்கப்பனின் செவிகளில் விழுந்தது.
டீக்கடையிலிருந்து இரண்டு பிரத்யேக கண்ணாடிக் குவளைகளில் ஒரு பணியாள் ‘ட்டீ(தேநீர்) கொண்டுவந்து கொடுத்துவிட்டுச் சென்றான்.
“பண்ணையில முன்னைவிடவும் இப்போலாம் வேலை அதிகமா இருக்கு சம்மந்தி; வேலை செய்யத்தான் ஆளுங்க இல்ல” தன்னைப்பற்றிப் பெருமையாகப் பேசினார் பண்ணையார்.
“பண்ணையாரே! உங்க பண்ணைக்கு ஆளுங்க வேணும்னுதானே நீங்க சொல்ற பத்துபேரை வருசா வருசம் ஆறாம் வகுப்பு அஞ்சாம்வகுப்புன்னு ஃபெயில் போடுறோம்; அப்படி ஃபெயில் போட்ட பசங்கதான இன்னைக்கு உங்க பண்ணைக்கும் உங்க அண்ணன்வீட்டுப் பண்ணைக்கும் அடிமாடு கணக்கா வேலைசெய்றானுங்க; காலங்காலமா இதத்தானே செஞ்சிட்டு இருக்கோம்” சிகரெட்டைச் சுவைத்து இழுத்துக்கொண்டே சொன்னார் பச்சமுத்து.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த மூக்கப்பனுக்குப் பெரும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது.
“அட என்னங்க சம்மந்தி… ஃபெயில் போட்றதுலாம் வாஸ்த்தவம்தான்; இல்லேன்னு சொல்லல; ஃபெயில் ஆவுற அத்தனைப் பேரும் நம்ம பண்ணைக்கு வேலைக்கு வர்ரது இல்ல; நீங்க ஹெட்மாஸ்ட்டர் ஆவறதுக்கு முன்னாடி மூக்கப்பனோட பையன ஃபெயில் ஆக வெச்சேன்; ஆனா அந்த நாயி நம்ம பண்ணைக்கு வேலக்கி வராம ஆடுமாடு மேய்க்கப்போகுது” கோவமாகச் சொன்னார் பண்ணையார்.
“மூக்கப்பன்’னா யாரு?”
“அட காலையிலயே எங்க ஊர்ல இருந்து ஒரு நாயி டவுனுக்கு சைக்கிள்’ல செருப்பு தைக்கப் போகுதே! கிளிநத்தையூர்மேலதான் போகும்; அந்த நாயிதான்”
“ஓ… அவனா? ஏற்கெனவே சொல்லிருக்கீங்க சொல்லிருக்கீங்க; ‘ட்டீ குடிச்சா கண்ணாடி க்ளாஸ்லதான் குடிக்கும்’னு வாக்குவாதம் பண்ணுமே அந்த நாயிதானே”
“ஆமா ஆமா அவனேதான்”
“அவனால இப்போ மத்தநாயிங்களும் கண்ணாடி க்ளாஸ்லயே ட்டீ கேக்குதங்க”
“அந்தநாய்க்கு அவ்ளோ திமிராய்டுச்சா பண்ணையாரே?”
“அதோ நிக்குறானே கருப்புசாமி, அவனோட தங்கச்சிப்பின்னாடி ஏதோ மூக்கப்பனோட பையன் சுத்துறானாம்; அதனால அவனுங்களே சோலிய முடிச்சிடுவானுங்க; இவனுங்க நமக்குக் கீழ; மூக்கப்பன் நாயி இவனுங்களுக்கும் கீழ; எப்படி ஒத்துப்பானுங்க?”
“ஒருவகையில நமக்கும் அதுவும் நல்லதுதான் பண்ணையாரே”
மூக்கப்பனின் செவிகளுக்கு எட்டிய இவையெல்லாம் அவரை மிகவும் நோகடித்தன. சூழ்ச்சியைப் புரிந்துகொண்டார்.
“நீங்க ஒன்னு பண்ணுங்க சம்மந்தி; மூக்கப்பனோட தம்பி பெருமாள் இருக்கானே, அவனோட சின்னப்பையன் கிளிநத்தையூர்லதான் ஏழாவது படிக்கிறான்; அவன இந்த வருசம் சுழிச்சிவிட்ருங்க”
“அய்யய்யோ அதுமுடியாதுங்க மன்னிக்கணும்; சித்தார்த்’தான் அந்த வகுப்புல முதல் ரேங்க்; மேலதிகாரிகள்ட்டயே ஸ்க்கூல் இன்ஸ்பெக்சன்ல பாராட்டு வாங்குனவன்”
மூக்கப்பனுக்கு இதைக்கேட்டதும் புத்துணர்ச்சி அடைந்ததுபோல் எழமுயன்று ஷட்டரை இடித்துவிட்டார்.
சத்தம் கேட்டதில் உள்ளே சென்று மூக்கப்பனைப் பார்க்க வேலையாட்களைப் பணித்தார் காளிமுத்து. உள்ளே சென்று பார்த்தவர்கள் மயக்கநிலையில் உள்ளதாகச் சொன்னார்கள்.
“இந்தநாய பிடிச்சிவச்சி நமக்கென்ன இலாபம் வரப்போவுது பண்ணையாரே!; மயக்கத்திலதான் இருக்கான்போல; வெளியத் தூக்கிப்போட்டு தண்ணிய தெளிச்சிவிடுங்க அதுவா வூட்டுக்குப் போய்டும்” பச்சமுத்து சொன்னார்.
மூக்கப்பனை நினைத்துப் பூவரும்பு புலம்பி அழுததில் அக்கப்பக்கத்தினர் அங்குக் கூடிவிட்டனர். இசக்கிமுத்துக் குடும்பமும் பெருமாள் வீட்டினரும் பூவரும்பைத் தேற்றிக்கொண்டிருந்தனர். பூவரும்பு மார்பிலடித்துக் கதறிக் கதறி அழுததைப் பார்த்ததும் அங்குக் கூடியிருந்தவர்களின் கண்களே கண்ணீரை ஊற்றெடுத்துவிட்டன. இராமசாமியும்கூட அழுதுவிட்டிருந்தான்.
ஆளுக்கொரு ஆறுதல்கூறி பூவரும்பின் அழுகையை நிறுத்த முயற்சிசெய்துகொண்டிருந்தார்கள். ‘வெள்ளையன்’ தன் வாலை ஆட்டிக்கொண்டும் காதுகளை ஆட்டிக்கொண்டும் சுற்றிச்சுற்றி வந்து சட்டெனத் தெருவின் முற்றத்தை நோக்கிப் பாய்ந்தோடினான். வெள்ளையன் பாய்ந்தோடிய திசையை அனைவரும் நோக்கினர். இருட்டைக் கிழித்துக்கொண்டு சைக்கிளைத் தள்ளியபடி மூக்கப்பன் மெல்ல நடந்துவந்துகொண்டிருந்தார். வெள்ளையன் பின்னாலேயே சித்தார்த் பின்தொடர்ந்து ஓடினான்.
“பெரியப்பா….” எனக் கத்தினான். அனைவரும் மூக்கப்பனை நோக்கி ஓடினார்கள். அவர்கள் நெருங்குவதற்குமுன் மூக்கப்பன் கீழே சரிந்தார். சித்தார்த்தின் ஆட்காட்டிவிரலைத் தன் உள்ளங்கையால் இறுகப் பிடித்துக்கொண்டிருந்தது மூக்கப்பனின் வலது கை.பின்னர் பூவரும்பின் அழுகையை அங்கிருந்தவர்களால் நிறுத்தவே இயலவில்லை.
