போர்களின் தலைமுறை கவிதை – செ.கார்த்திகைசெல்வன்
யுத்தமும் இரத்தமும்
பின்னிப் பிணையும்போது
முத்தமும் சத்தமும்
அந்தப்புரத்தில்
விலகியிருப்பதில்லை
முத்தமும் சத்தமும்
பின்னிப் பிணையும்போது
யுத்தமும் இரத்தமும்
போர்க்களத்தில்
விலகியிருப்பதில்லை
அந்தப்புரத்தின் வெற்றி
அடுத்த தலைமுறையை
ஈன்றெடுக்கலாம்;
போர்க்களத்தின் தோல்வி
தலைமுறையே இல்லாமல்
போகச்செய்யலாம்
ஊழலும் கையூட்டும்
பின்னிப் பிணையும்போது
திருடனும் கொள்ளையும்
தேர்தல்களத்தில்
விலகியிருப்பதில்லை
திருடனும் கொள்ளையும்
பின்னிப் பிணையும்போது
ஊழலும் கையூட்டும்
ஜனநாயகத்தில்
விலகியிருப்பதில்லை
அறிக்கைகளின் வெற்றி
இந்தத் தலைமுறையை
முட்டாளாக்கலாம்;
ஜனநாயகத்தின் தோல்வி
அடுத்த தலைமுறையையும்
முட்டாளாக்கலாம்
முடியாட்சியில் மன்னனின்
படைபலம் வெற்றியைத்
தீர்மானித்தால் யுத்தக்களம்
இரத்தக்கறையாகும்!
குடியாட்சியில் கட்சியின்
பணபலம் வெற்றியைத்
தீர்மானித்தால் மக்கள்களம்
மாக்களுக்கு இரையாகும்!

