நூல் விமர்சனம்: சொ. நே. அறிவுமதியின் ஆழினி நாவல் – முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி
மக்களுக்குப் பல்லாற்றானும் நலம் பயப்பது நகைச்சுவை உணர்வு. இதனை வெளிப்படுத்தும் செல்நெறிக்கு வளமும் சிறப்பும் கொண்ட தமிழ் இலக்கியமரபு உண்டு. நாட்டுப்புறக் கலைவடிவங்களாக, மக்களிடையே அன்றாட வாழ்வில் ஊடாடிப் பல்வேறு வழிகளில் வெளிப்பட்டுவந்த நகைச்சுவையுணர்வு ஏட்டில் எழுதா இலக்கியமாக வளர்ந்துவந்திருப்பதை யாரும் மறுக்க இயலாது. தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே இச்செல்நெறி வழக்கில் இருந்திருக்கவேண்டும். எனவே உலகவழக்கு, புலனெறிவழக்கு என இருவகையாலும் இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பும் தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் எண்சுவைகளையும் அவை பிறக்கும் களங்களையும் வகைப்படுத்தி உள்ளார். நகைச்சுவை உணர்வின் களங்களாக,
“எள்ளல் இளமை பேதைமை மடனென
உள்ளப்பட்ட நகை நான்கென்ப” எனக் குறிப்பிடுகிறார்.
படைப்பில் முழுமையும் நகைச்சுவை உணர்வினை வெளிப்படுத்துவது, ஊடும் பாவுமாகப் பிணைந்து இடையிடையே வெளிப்படுத்துவது, ஆங்காங்கே நகைச்சுவை உணர்வினைத் தெளித்துச்செல்வது போன்ற வழிகளில் இலக்கியங்களில் நகைச்சுவை இடம்பெற்று வந்துள்ளது. தமிழ்க்கவிதை மரபில் இதற்கு எண்ணற்ற சான்றுகளைக் கூறமுடியும். காலத்திற்கேற்பச் செழித்து வளரும் உரைநடை இலக்கியத்திலும், நாடக இலக்கியத்திலும் செல்வாக்குப் பெற்ற நகைச்சுவை இன்று பல்லூடகம் வாயிலாகவும் பரவியுள்ளது.
சிந்திக்கத் தெரிந்த மனித இனத்துக்கே மட்டுமே சொந்தமானது நகைச்சுவை. இதனை வெளிப்படுத்தும் ஆற்றல் எல்லோரிடமும் எளிதில் அமைந்துவிடாது. வெகுசிலரே இத்திறன் கைவரப்பெற்றவராய் இருப்பர். நகைச்சுவையை வெளிப்படுத்தும் உத்தி முறைகள் பற்பல. காட்சி ஊடகங்களில் உடல்மொழியால் மட்டுமின்றிப் பேச்சுமொழியாலும் செய்கைகளாலும் நகைச்சுவையை வெளிப்படுத்திவிட முடியும். ஆனால் எழுத்துவழியான படைப்புகளில் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்த மிகுந்ததிறமையும் கற்பனைஉணர்வும் தேவைப்படுகின்றன. முதலில் அந்த எழுத்தாளன் நகைச்சுவை உணர்வு உள்ளவனாக இருக்கவேண்டும். கழைக்கூத்தாடி போன்று கவனமாகச் செயல்படவும் வேண்டும். நகைச்சுவைப் படைப்புகள் மற்றப்படைப்புகள்போல அதிக எண்ணிக்கையில் வெளிவராததற்கு இந்த அருமைப்பாடும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
ஆனந்தவிகடன் தேவன் (ஆர். மகாதேவன்), பாக்கியம் ராமசாமி (ஜலகண்டாபுரம் ராமசாமி சுந்தரேசன்) போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளுக்குப் பிறகு நீண்டநாள் கழித்து நான் வாசிக்கும் முழு நகைச்சுவை நாவல் ‘ஆழினி’ என்பதில் அளவற்ற மகிழ்ச்சி. வீட்டில் தனியே இருந்து படித்தபோது என்னை வாய்விட்டுச் சிரிக்கவைத்த நாவல் என்பதோடு நகைச்சுவையின் ஆற்றலை எனக்குள் பாய்ச்சிய நாவல் இது என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி.
நவீன தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, அதன் விளைவான பரபரப்பான வாழ்க்கை முறை ஆகியவை காரணமாக நகைச்சுவையை மறந்துவரும் இன்றைய இளம்தலைமுறையிலிருந்து நகைச்சுவையையே அடிப்படையாய்க் கொண்ட ‘ஆழினி’ என்னும் புதினத்தை எழுதியுள்ளார் செல்வி சொ.நே.அறிவுமதி. முனைவர்பட்ட ஆய்வுக்காகச் “சங்க இலக்கியத்தில் உணர்ச்சி மேலாண்மை” என்பதை ஆய்வுப்பொருளாகத் தெரிவுசெய்துள்ள இவருடைய கன்னி முயற்சி இந்த நாவல்.
தமிழ்மொழி பிறந்து செழித்து வளர்ந்த தமிழ்நாட்டில் இன்று தமிழைப் பேசவும் படிக்கவும் எழுதவும் தயங்கும் இளம்தலைமுறையினரை எள்ளி நகையாடுவது இந்த நாவலின் நோக்கமாகவும் தொனிப்பொருளாகவும் இருக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. கடற்கன்னி (மெர்மெயிட் என்னும் மீன்பெண்) செந்தமிழில் – சங்கத்தமிழில் பேச புவனன், பரதன், நந்தினி ஆகிய இளைஞர்களும், நந்தினி, பரதன் ஆகியோரின் தந்தை மாதவன் போன்ற மூத்த தலைமுறையினரும் அதனைப் புரிந்துகொள்ளாததால் இந்த முடிவுக்கு வரவேண்டி உள்ளது. காலமாற்றத்தில் தமிழர்களின் அக்கறையின்மையால் எத்தனை சொற்கள் வழக்கிழந்துபோய்விட்டன என்பதை எண்ணும்போது ஆழ்ந்த வருத்தமே மேலிடுகிறது. இத்தகு வருத்தம் செல்வி அறிவுமதிக்கும் தோன்றியிருக்கவேண்டும்.ஆகவேதான் கடற்கன்னி செந்தமிழ் பேசுவதாக அவரால் கற்பனை செய்யமுடிகிறது.
கடற்கன்னியின் செந்தமிழ் கேட்கையில், நாஞ்சில்நாடன் அவர்கள் தமிழ் இலக்கியத்தில் பயின்றுவரும் அரிய சொற்களைக்குறித்து ஆய்வுநோக்குடன் தொடர்கட்டுரைகளாக வடித்துவருவதும் அவற்றைப் புலனத்தின்வழி என்னுடன் பகிர்ந்துகொள்வதுமே என் நினைவுக்கு வந்தன. அக்கட்டுரைகள் வாசகர்களாகிய நாம் பழம்பெருமை பேசுவதில் மகிமை ஒன்றுமில்லை; பழந்தமிழ்ச்சொற்களைப் புழக்கத்தில் கொண்டுவரவேண்டும் என்னும் சிந்தனையை நமக்குள் விதைப்பன. இச்சிந்தனையின் நீட்சியாகவும் எதிரொலியாகவும் ஆழினி என்னும் நகைச்சுவைப் புதினத்தை நான் காண்கிறேன்.
கடற்கன்னியின் செந்தமிழைப் புரிந்துகொள்ள இவர் பேச்சுத்தமிழில் எளிமைப்படுத்தி அடைப்புக்குறிக்குள் கொடுக்கிறார். கதையில் வரும் பாத்திரங்களான புவனனைத் தொடக்கத்தில் மொழிபெயர்க்க வைக்கிறார் நாவலாசிரியர். பின்னர் அவனே செந்தமிழிலும் பேசுகிறான். பரதன் பிற்பகுதியில் செந்தமிழைப்பேசவும் மொழிபெயர்க்கவும் செய்கிறான். இதன் மூலம் நாவலாசிரியர் “சித்திரமும் கைப்பழக்கம் ;செந்தமிழும் நாப்பழக்கம்” என்று இளையர்களுக்குக் கூறுவதாகத் தோன்றுகிறது. தமிழில் பேசுவதையே தமிழனுக்கு மொழிபெயர்த்துச் சொன்னால்தான் புரியும் என்றால் இந்த நிலை எவ்வளவு கொடுமையானது என எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது. எங்கே போகிறது நம் சமூகம்? அதேவேளையில் மணிமேகலை கூறும் சாதுவன் என்னும் வணிகனின் மொழிப்புலமை அவனை எவ்வாறு நாகர்களிடமிருந்து காத்தது என்பதையும் எண்ணிப்பார்க்கவைக்கிறது ஆழினி நாவல்.
ஆழினி, ஆழியன் என்னும் தமிழ்ப்பெயர்கள் இனிமைகொண்ட காரணப்பெயர்களாக அமையுமாறு படைத்திருப்பது பாத்திரப்பண்புக்கு மட்டுமின்றி அறிவுமதியின் தமிழ் உணர்வுக்கும் சான்றாகின்றன. மனிதப்பிறவி அல்லாத கடற்கன்னியும் அவள் காதலனும் அழகிய செந்தமிழ்ப்பெயர்களைக் கொண்டிருப்பதும் அவர்கள் செந்தமிழ் பேசுவதுமாகப் படைத்திருப்பது நாவலாசிரியரின் மொழியுணர்வை- மொழிப்பற்றைமட்டும் காட்டுவதாக எனக்குத் தோன்றவில்லை. தாய்மொழி அறியாதவனை மனிதனாக எப்படி மதிக்க முடியும்? என்று அவர் கேட்பதாகவே தோன்றுகிறது. நம் தமிழர்கள் இக்காலத்தில் எவ்வாறு பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டுகிறார்கள் என்பதையும் சிந்திக்க வைக்கிறது இந்த நாவல்.
பரதனும் புவனனும் நண்பர்கள். புவனன் பரதனின் உடன்பிறப்பான நந்தினியின் காதலன். பரதன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கப் புவனன் மீன் வாங்கிவந்து அதனைக் குழம்புவைக்கத் தொடங்குவதில் கதை தொடங்குகிறது. மீனை வெட்டும்போது ஒரு மீன் கடற்கன்னியாக இருப்பதை அறிகிறான்.அவள் பெயர் ஆழினி. தன்னைப் புவனன் வெட்டவிடாமல் தன் வால் மூலம் அவனிடம் வலிமையைக் காட்டுகிறாள் ஆழினி. புவனனின் வலிமை அவளிடம் தோற்றுவிடுகிறது. அவள் செந்தமிழில் பேசுகிறாள். அதனை அவன் யவனத்தமிழ் என்று கூறிப் புரிந்துகொள்ளச் சிரமப்படுகிறான். ஆழினி மாயவித்தைகள் செய்வதிலும் வல்லவளாக இருக்கிறாள். ஆழினி தன் காதலன் ஆழியனைப் பிரிந்துவந்ததைக் கூறிப் புவனனைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அவன் மூலம் ஆழியனைத் தேடுகிறாள்.
பரதன், நந்தினி, மாதவன் என ஒவ்வொருவராக ஆழியனைத் தேடும் முயற்சியில் கோர்த்துவிடப்படுகிறார்கள். ஆழினியின் கட்டுப்பாட்டினாலும் அவள் இயக்குவதாலும் புவனனும் பரதனும் பல சாகசங்கள் செய்கிறார்கள். மனிதர்கள் எப்படி இந்த நிலத்தில் வாழ்கிறார்கள் என்பதைத் தன் தேடலின் மூலம் அறிகிறாள் ஆழினி. பல போராட்டங்களுக்குப் பிறகு இறுதியில் ஆழினியும் ஆழியனும் இணைவதாகக் கதை முடிகிறது. நகைச்சுவை தருவது மகிழ்ச்சி தானே. ஆகவே இந்த நாவலின் சுபமான முடிவை நம்மால் சுகமாகவே ஏற்றுக்கொள்ள முடிகிறது.
ஆழினி நாவல் கற்பனையும் நகைச்சுவையும் கலவாமல் எழுதப்பட்டிருருந்தால் மொழியைப் பற்றிய பிரச்சாரமாகவே அமைந்துவிடும் வாய்ப்பும் உள்ளது. ஆழினி நாவல் கற்பனையும் சாகசமும் மாயாஜாலமும் நகைச்சுவையும் கேலிச்சித்திர பாணியும் யதார்த்தமும் கலந்த கலவை என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. நகைச்சுவையைப் பல அணுகுமுறைகளின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் நாவலாசிரியர். ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்ப்பதுபோலப் பல நிகழ்ச்சிகள் இருப்பினும் சான்றுக்கு ஒன்றிரண்டை எடுத்துக்காட்ட முடியும்.
பரதன், நந்தினி, புவனன் ஆகியோர் ஒருவரை ஒருவர் கேலி செய்தவதையும் பரதனும் புவனனும் மாதவனைக் கேலிசெய்வதையும் எள்ளலின் மூலம் வெளிப்படும் நகைச்சுவைக்கு உதாரணமாகக் கூறலாம். இப்பாத்திரங்கள் ஆழினியையும் ஆழியனையும் அவ்வப்போது கேலிசெய்கின்றன. அறியாமை காரணமாகப் பிறக்கும் நகைச்சுவைக்கு ஒருவர் பேசும் மொழி புரியாததால் மற்றவர் வேறுவிதமாக அர்த்தப்படுத்திக்கொள்வது,காவலர்கள் தவறாக இட்லிச்சட்டியை (மிஷின்) அறிவியல் கருவி என மயங்குவது போன்றவற்றைக் கூறலாம். அறிந்தும் அறியாததுபோல் தோன்றும் மடமையின் மூலம் நகைச்சுவையை வரவழைப்பது பரதனின் பாத்திரம். மேலும் இப்பாத்திரம் தானே வலியப்போய்ச் சிக்கலில் மாட்டிக்கொள்வதும் நமக்குச் சிரிப்பை வரவைக்கிறது. இப்பாத்திரம் கடல்பிசாசு, கடல்பூதம் என முறையே ஆழினி,ஆழியனுக்குப் பெயர் சூட்டுகிறது. பரதனின் பாத்திரம் விகடம் நிறைந்த பாத்திரமாக இருப்பது சிறப்பு.
தமிழ், ஆங்கிலம், மலையாளம் எனக் கலந்து பேசும் கலவை மொழியும் கருவியாகி நகைச்சுவை பிறக்கச்செய்கிறது. கூகிள் மொழிபெயர்ப்பும் நகைப்பிற்கு இடமாகிறது. மனிதரை விலங்கு எனக் கருதிக் குரங்கு, பக்கி எனத் திட்டுவது, பாத்திரங்கள் இடம் பொருள் ஏவல் அறியாமல் பேசுவது, கேட்கப்படும் கேள்விகளுக்கு இடக்காகப் பதில் சொல்வது, ஒலி ஒப்புமை உடைய சொற்களைப் பயன்படுத்தி நகைப்பை ஏற்படுத்துவது, இட்லிச்சட்டி,வடைச்சட்டி என்பனவற்றை மாயாஜாலக்கருவிகளாக்குவது, உவமைகளின் மூலம் சிரிப்பை ஏற்படுத்துவது, சிறுவர் பாத்திரங்களை அறிமுகம் செய்து அவர்களின் மூலம் நகைப்பை உண்டாக்குவது, ஒருவர் மற்றவரை முட்டாளாக்குவது, வீணான சந்தேகத்தின் மூலம் நகைப்பை ஏற்படுத்துவது, நம்பமுடியாத நிகழ்ச்சிகளைப் படைத்துக்காட்டுவது, கதையில் சிக்கல்கள் தோன்றும்போது அவற்றை விடுவிக்கத் தண்ணீர் தெளிப்பது, கடற்கன்னியும் திறம்பெறுவதற்காகச் சுற்றுவது போன்ற கற்பனை நிகழ்வுகள் போன்று பற்பல வழிகளில் நகைச்சுவையைத் திறம்படக் கையாள்கிறார். வஞ்சப்புகழ்ச்சி, மிகைப்படுத்துதல், இரட்டுறமொழிதல் என்னும் சிலேடைப்பேச்சு, அனுபவ நகைச்சுவை , கோமாளித்தனம், நையாண்டி என இன்னோரன்ன வழிகளிலும் நகைச்சுவையை இந்த நாவலாசிரியர் வெளிப்படுத்துகிறார்.
முன்னர்க்குறிப்பிட்டதுபோன்று எள்ளி நகையாடுவது அறிவுமதியின் நோக்கமாக இருப்பதால் போகிறபோக்கில் சமூக நிகழ்வுகளை அங்கதச்சுவையுடன் வருணித்துச் செல்கிறார். “பஞ்ச் டயலாக்” பாணியில் உள்ளத்தில் தைப்பது போல ‘நச்’ என்று சில அங்கதங்கள் நம்மைத் திகைக்க வைக்கின்றன. “புறங்காட்டு வழக்கமெல்லாம் மானிடரிடம்தான் “ என ஆழினி உரைப்பது; காக்கை பிடித்தல் என்னும் பழக்கத்தை புவனன் மூலம் அங்கதமாக்குவது; இளையர்களிடம் மிதமிஞ்சிக் காணப்படும் மொழிக்கலப்பை மாதவன் மூலம் இடித்துரைப்பது, மாறிமாறிப் பேசுவது மனிதப்பண்பன்று என மாதவன் மூலம் கூறுவது , உங்கள் பற்பசையில் உப்பு இருக்கிறதா என்னும் உவமை மூலம் விளம்பரங்களைக் கேலிப்பொருளாக்குவது எனச் சமூகஅங்கதமாக இந்த நாவல் படைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
சங்க இலக்கிய மாண்பையும் பல அரிய சங்கத்தமிழ்ச் சொற்களின் பயன்பாட்டையும் இந்த நாவல் மூலம் இளைய உள்ளங்களில் விதைக்க முயன்றுள்ளார் அறிவுமதி. பெருந்தொற்றினால் உலகமே பெரும் அவதிக்குள்ளான 2020 ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கிய செல்வி அறிவுமதி இந்த நாவலின் மூலம் மன உளைச்சலைப்போக்கும் அற்புத மருந்தை அளித்துள்ளார். துன்பம் வரும் வேளையில் மனவுறுதியுடன் அதனை எதிர்கொள்ள நகைச்சுவை கைகொடுக்கும் என்பதை இந்த நாவல் மூலம் நாம் அறிகிறோம். மொத்தத்தில் முதல் முயற்சியிலேயே அபாரமான திறமையோடு ஆழினியைப் படைத்துள்ள செல்வி அறிவுமதி இனிவரும் காலங்களிலும் நிறையவும், மனம்நிறையவும் எழுதவேண்டும் என்று எதிர்பார்ப்போம்.தமிழ் வாசகர் உலகம் இளையர் முயற்சிக்கு என்றென்றும் ஆதரவு நல்கவேண்டும். வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்று முன்னோர்கள் சொன்னதை மெய்ப்பிக்க நம்முடன் துணை வருகிறாள் ஆழினி.
முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி
மேனாள் விரிவுரையாளர் ( பணி நிறைவு )
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் .
நூலின் பெயர் :ஆழினி
ஆசிரியர்: சொ. நே. அறிவுமதி
பக்கங்கள்: 390
விலை : ரூபாய் 400 /-