kannukku ettatha ulagam poetry written by -s.p.agathiyalingam கவிதை: கண்ணுக்கு எட்டாத உலகம் - சு.பொ.அகத்தியலிங்கம்

கவிதை: கண்ணுக்கு எட்டாத உலகம் – சு.பொ.அகத்தியலிங்கம்

புது புத்தகத்தின் வாசம் எப்போதும் கிறங்க வைக்கிறது . வாசித்து அடுக்கிய புத்தகங்கள் பார்க்கும் நொடியில் புன்னகைக்கின்றன . வீட்டில் இடமில்லாமல் பராமரிக்க முடியாமல் இடம் பெயர்ந்து விட்ட , இரவலாகப் போய்விட்ட அன்பளிப்பாய்க் கைமாறிவிட்ட , தோழமையோடு ‘சுட்டு’ச் சென்றுவிட்ட…
nool arimugam: tamilnattu varalaru : paadaikalum paarvaikalum - s.p.agathiyalingam நூல் அறிமுகம்: தமிழ்நாட்டு வரலாறு : பாதைகளும் பார்வைகளும் - சு.பொ.அகத்தியலிங்கம்

நூல் அறிமுகம்: தமிழ்நாட்டு வரலாறு : பாதைகளும் பார்வைகளும் – சு.பொ.அகத்தியலிங்கம்

வாசிப்பீர் .வாசல்கள் திறக்கும். தமிழ்நாட்டு வரலாறு என்றதும் சேரன் ,சோழன் ,பாண்டியன் ,பல்லவன் என நம் பொது புத்தியில் ஏற்றப்பட்டுள்ள செய்தியோடு இந்நூலைப் புரட்டுவோர்கள் ஏமாந்து போவார்கள் . இந்நூலில் ஏழு பகுதிகளில் அடங்கியுள்ள 25 கட்டுரைகளும் வரலாறு என்பது என்ன…
nool arimugam: R.S.S.ai arinthu kolvom - s.p.agathiyalingam நூல் அறிமுகம் : ஆர் எஸ் எஸ் – ஐ அறிந்து கொள்வோம் - சு.பொ.அகத்தியலிங்கம்

நூல் அறிமுகம் : ஆர் எஸ் எஸ் – ஐ அறிந்து கொள்வோம் – சு.பொ.அகத்தியலிங்கம்

ஆர் எஸ் எஸ் குறித்து 11 நறுக் கேள்விகள் பதில்கள் இந்தியா வெல்ல – இந்தியா நிலைக்க – இந்தியா வளர தேர்தல் களத்தில் மோடியைத் தோற்கடிப்பது மிக முக்கியம் . அதனினும் மிக முக்கியம் தத்துவக் களத்தில் ஆர் எஸ்…
நூல் அறிமுகம்: இலா வின்சென்ட் ‘அக்கானி’ நாவல் – சு.பொ.அகத்தியலிங்கம்

நூல் அறிமுகம்: இலா வின்சென்ட் ‘அக்கானி’ நாவல் – சு.பொ.அகத்தியலிங்கம்




நூல் : அக்கானி 
ஆசிரியர் : இலா வின்சென்ட்
விலை : ரூ.₹340/-
பக்கங்கள்: 329
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

பனையேறிகளின் வாழ்க்கைப் பாடுகளூடே …

“ இன்னும் பாடு பேசி முடியலையா ?” என குமரி மாவட்டத்தில் சர்வசாதாரணமாக கேட்பார்கள். பாடு பேசுதல் என்பது கதை பேசுதல், வம்பளத்தல், கஷ்ட நஷ்டங்களைப் பேசுதல் என பல தொனியில் பயன்படுத்தப்படலாம். மொத்தத்தில் வாழ்க்கைப் பாட்டைப் பேசுவதுதான். இல.வின்சென்டின் “ அக்கானி” நாவல் நம்மோடு பனையேறிகளின் பாடு பேசுகிறது .

குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் ,தோவாளை ,கல்குளம், விளவங்கோடு, குளச்சல் என ஒவ்வொரு வட்டாரத்திலும் தமிழ் ஒவ்வொரு வகையாய் இருக்கும் அதிலும் மேற்கில் பனையேறும் மனிதர்களின் வாழ்க்கைப் பாடும் மொழியும் மிகவும் வித்தியாசமாகவே இருக்கும், குளச்சல் கடல்புறம் போனால் அத்தமிழ் இன்னொரு விதமாக இருக்கும் . குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என தமிழ்கூறும் நல்லுலகின் நான்கு திணைகளும் உள்ள மாவட்டம் அது. இந்நாவல் அதன் ஒரு பகுதியைக் காட்டுகிறது. விளவங்கோடு மண்ணின் மொழியழகோடு பேசுகிறது.

“ அக்கானி என்பது பனையின் சுண்ணாம்பு தடவிய கலயங்களில் வடியும் கள். தெளிந்த அக்கானியில் மாங்காய் பிஞ்சைத் தல்லிப் போட்டு குடித்தால் ருசி ஆளைத் தூக்கும். “

“ ‘ அக்கானி’ மேற்கு குமரி மாவட்டப் பனைத்தொழிலாளர்களின் வாழ்வையும் போராட்டங்களையும் வளர்ச்சியையும் சித்தரிக்கும் அருமையான நாவல்.” என பொன்னீலன் அணிந்துரையில் சுண்டக் காய்ச்சி சொல்லிவிட்டார் .

“கடலுக்கு மீனு பிடிக்கப் போனவனும், பனையில அக்காணி எடுக்கப் போனவனும் திரும்பி வந்தாத்தாங் உண்டுன்னு சிம்மாவா செல்லிவச்சனம்.” என்கிற வாழ்க்கைப் பாட்டை ஞான முத்து, தங்கையன் இருவர் சாவு மூலமும் இந்நாவல் காட்சிப் படுத்துகிறது.

ஆயின் ஒரே வேறுபாடு ஞானமுத்து சாவுக்கு எந்த அரசு உதவியும் கிடைக்கவில்லை. தங்கையன் சாவுக்குப் பின் அரசு உதவி ரூ.5000 கிடைத்தது. விளவங்கோடு பூட்டேற்றி கிராமத்தில் நடக்கும் கதை இது. இடையில் அங்கு தொழிற் சங்கம் உருவானதும், கம்யூனிஸ்ட் கட்சி வேர் பிடித்ததும், கிறுத்துவ இறையியல் அரும்பியதும் நாவலாக பரிணமித்திருக்கிறது .

பனையேறுவது மட்டுமின்றி, நெசவு, மரச்சீனி நடவு, புளி, கொல்லம் பழம் பருப்பு [ முந்திரி], மா என பூட்டேற்றியிலும் சுற்றுப்புற கிராமங்களிலும் வேர்விட்ட இதர தொழில்களையும் வாழ்வின் பாடுகளையும் இந்நாவல் பேசுகிறது.

மாத்தூர் தொட்டிப் பாலம் வருவதற்கு முன் நாயர் சாதியினர் மட்டுமே தண்ணீர் பெற்று விவசாயம் செய்து வலுவாக இருந்ததையும், சாதிய ஒடுக்கு முறையையும், தொட்டிப் பாலத்துக்குப் பின் ஏற்பட்ட மாற்றத்தில் எல்லா சாதியினரும் விவசாயம் செய்ய முடிந்தததையும் இந்நாவல் பேசுகிறது. தொட்டிப் பாலம் எனச் சொல்லிய போதும் தொங்கு வாய்க்காலாய் 115 அடிஉயரத்தில் 28 தூண்கள் தாங்கி நிற்கும் ஒரு கி மீ கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டு செல்லும் ஏற்பாடு. காமராஜர் காலத்தில் உருவாக்கப்பட்டது. இன்று குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மையம்.

“ வண்டி பள்ளிக்கு போவாதில… காலுதான் பள்ளிக்கு போவும் ,நொண்டாத நட..” என தம்பி மைக்கேலை நடக்க வைத்தாள் ராபேக்கா. பல மைல் நடந்து கல்வி கற்றதால் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டதன் சாட்சியாய் பூட்டேற்றி .

“ அம்மிங்கிரெ … தூக்கினது தோஷமெங்கி … கெடந்த இடத்திலேயே யாமானக் கொண்டு போடியம் .. பெறவு நீங்க போய் தூக்கிண்டு வாரும் … துக்குல யாமானெ..” இது போன்ற சாதியத்துக்கு எதிரான ஆவேசம் நாவலில் பல உண்டு பூட்டேற்றியில் சாதியின் கோரமுகமும் அதன் செவிட்டில் அறையும் புதிய எழுச்சியும் கதைப் போக்கில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலும் கிறுத்துவ கதா பாத்திரங்கள் மூலமே நகரும் நாவலில் ஓரிடத்தில் இடம் பெறும் நாடகத்தில் ஓர் வசனம்,

“ சாதிக்கொரு பங்காப் பிரிச்சி பூசெ வச்சா .. அங்கெல்லாம் கடவுளு இருக்க மாட்டாரு பண்ணயார … கல்லும் மண்ணும்தான் இருக்கம். யூதன்மாரு அண்ணு இயேசுவெ சிலுவையில் அறஞ்சி கொன்னுனம் … நீங்க சாதியில அறஞ்சி கொல்லுதிய ..”

கிறுத்துவத்திலும் ஊடுருவியுள்ள சாதியை நன்கு தோலுரிக்கிறது நாவல் .

சிவலிங்கம் மூலம் அய்யா வழிபாடும் வைகுண்டர் எழுச்சியும் தோள் சீலைப் போராட்டமும் நாவலில் விவரிக்கப்படுகிறது. மேலும் அம்மண்ணில் மெல்ல ஆர் எஸ் எஸ் தலை தூக்குவதையும் காட்சிப்படுத்தியுள்ளார் . மதக்கலவரத்தை தூண்டிவிட ஆர் எஸ் எஸ் செய்யும் சதிவேலைகளை இந்நாவல் தொட்டுக்காட்டியுள்ளது .

அரிசி பஞ்ச காலத்தில் கேரளாவுக்கு ரேஷன் அரிசியைக் கடத்தி ஜீவனம் நடத்தும் ஏழைப் பெண்கள் குறித்த சித்தரிப்பு நாட்டு நடப்பின் யதார்த்தம் பேசும்.

கிளாரா, ராபேக்கா, தெரசம்மாள், சசிகலா, கமலம், அமலா, ரெஜினா, எலிசபெத் போன்ற ஒவ்வொரு பெண் கதாபாத்திரத்தையும் மிக நுட்பமாகச் செதுக்கி உள்ளார் இல.வின்சென்ட் அதிலும் கிளாரா, ராகேக்கா, சசிகலா மிக நுட்பமான பாத்திரப் படைப்புகள். இந்நாவலுக்கே கிளாரா என பெயர் சூட்டியிருக்கலாமோ என நான் எண்ணுகிறேன்.

கிளாராவும் ராபேக்காவும் எப்போதும் துணிச்சல்காரியாகவும் எங்கும் அநீதி பாரபட்சம் இவற்றுக்கு எதிராக கேள்வி கேட்பவளாகவும் படைக்கப் பட்டுள்ளனர். கிளாரா வாழ்வில் ஏற்பட்ட ஓர் பாலியல் வன்மத்தை அவள் எதிர்கொண்ட விதம் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது .

” இது என்னெக் கேவலப் படுத்துன்னு நீ நெனச்சிய … அந்த ஆணாப் பொறந்தவனெக் கேவலப்படுத்துன்னு நாங் நெனச்சியன். கருவில கலஞ்சுபோன சிசுக்களும், அப்பன் அம்மா பேரு தெரியாத அனாத பிள்ளைகளும் மனித சமூகத்துக்கு ஆண்கள் செய்த துரோகத்தின் அடையாளங்க … இப்ப இது யென் பிள்ளெ .. கலச்சி ரத்தக் கட்டியா பூத்தமாட்டேன் .”

“ நீங்க எனக்க வாழ்க்கெயப் பத்திக் கவலெப்படுதிய சாமி … நானோ .. எனக்கு வவுத்ல இருக்கிய கொழந்தெ வாழ்க்கெயப் பத்திக் கவலெப்படியன்..”

“ கிளாரா நீ மனுஷி .. நீதான் மனுஷி …நீதான் உயர்ந்த மனுஷி..”

இந்த கிளாரா உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் ஆதிக்கத்தை எதிர்த்து வெல்வதும் சிறப்பு .

மைக்கேல், சார்ல்ஸ், வில்சன், சேவியர் என இளைஞர்கள் முற்போக்காக, இடதுசாரியாக, கம்யூனிஸ்டாக பரிணமிப்பது இயல்பாக நடக்கிறது. ஆசிரியர் ஜோசப் ஓர் அரிய பாத்திரப் படைப்பு. மைக்கேல் தன்னை முழுநேர அரசியல் பணிக்கு அர்ப்பணிப்பதுடனும் மைக்கேல் சசிகலா காதல் நிறைவேறுமா கேள்விக் குறியோடும் நாவலில் இருந்து விடை பெறுகிறோம்.

இந்நாவலில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் குறை நிறைகளோடு உலவவிட்டிருப்பது நேர்த்தியான செயல். காதல், கல்யாணம், பருவதாகம், பாலியல் வன்மம், ஆணாதிக்கம் எல்லாம் கலந்த வாழ்வின் பாடுகளை இல.வின்செண்ட் நீரோட்டமாய் சொல்லிச் செல்கிறார் .

“பூட்டேற்றியில் 1958 முதல் 1974 வரை வாழ்ந்த மக்களின் பண்பாட்டுக் கூறுகளை பதிவு செய்துள்ளேன். உண்மைகள் மட்டுமல்ல, புனைவுகளும் கலந்த புதினம் இது. இடைச்செருகலாக 1978 காலத்தை ஒட்டிய நிகழ்வுகளும் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக விடுதலை இறையியல் சிந்தனைப் போக்கு, அருள் தந்தை எம். எக்ஸ். ராஜாமணி, தோழர் ஜி. எஸ். மணி, தோழர் டி.கொச்சுமணி ஆகியவர்களோடு நடந்த சந்திப்பு, பூட்டேற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றம், பனையேறிகளின் போராட்டம், இக்கால வழுக்கள் கதையோட்டத்தையும், பாத்திரப் படைப்புகளையும் வலுவாக்கின. இவற்றுக்கு வாசகர் உலகம் வழுவமைதி காணும் என நம்புகிறேன்.” என ஆசிரியர் இல.வின்செண்ட் கொடுத்துள்ள வாக்குமூலம் மிக முக்கியம்.

நாவலின் பின் பகுதியில் உள்ள அரசியல் சார்ந்த பகுதிகள் ஒரு பகுதி இலக்கியவாதிகளுக்கு பிடிக்காமல் போகலாம். அவை நாவலின் வீரியத்தை குறைத்து விட்டதாக குறை சொல்லலாம். எனக்கோ அப்பகுதி சுருக்கப்பட்டாதாகக் கருதுகிறேன். இன்னும் கொஞ்சம் விரிவாக்கி இருக்கலாமோ ?

“ஏழைகளின் மீதும், பாட்டாளிகள் மீதும் அன்பும் அக்கறையும் வச்சிருக்கிய ஒருத்தரு … மார்க்சியத்தையும் லெனினியத்தையும் படிச்சா தீப்பிளம்பாயிருவாரு … அதெக் கூடப் பிறப்புகளின் கரைச்சலோ, காதலியின் கண்ணீரோ தணிக்க முடியாது… ஒரு புரட்சியில் முங்கி எழும்பினாத்தான் அது தணியும் பாத்துக்களுங்க …” என 1970 களின் மனோ நிலையோடு நிறையும் நாவல் நம் நெஞ்சக்கூட்டில் அதன் அக்னி முட்டையை அடைகாக்க வைக்கிறதோ ?

கல்வியில் முன்னேறிய குமரிமாவட்டத்தில் சாதியும் மதமும் இன்னும் ஆட்டம் போடுவதை எண்ணி என் மனங்குமைகிறது; இந்நாவல் அந்த வெப்பிராளத்தை உசுப்பிவிட்டுவிட்டது .

நாம் கடந்து வந்த வாழ்வின் ஓர் தடத்தை வாசித்துப் பாருங்கள் !

சு.பொ.அகத்தியலிங்கம்

நூல் அறிமுகம்: ஜனநேசனின் ‘எலோ..லம்’ நாவல் – சு.பொ. அகத்தியலிங்கம்

நூல் அறிமுகம்: ஜனநேசனின் ‘எலோ..லம்’ நாவல் – சு.பொ. அகத்தியலிங்கம்




நூல் : ஏலோ…லம்
ஆசிரியர் : ஜனநேசன்
விலை : ரூ.₹360/-
பக்கங்கள் – 384
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

ஏலக்காட்டின் வாழ்க்கை ஸ்கேன்: நேற்றும் இன்றும்.

“என்னய்யா, உங்காளுக முதலாளிமாருக வர்றாகன்னு மட்டுமரியாதை வேணாம்? பள்ளு , பறைக, மாதாரி , கீதாரி குடியானதுகன்னு ஒரு ஈக்குஞ்சுகூட எந்திரிக்கல, விலகி நிக்கல! குமிச்சு வச்ச சாணி கணக்கா கிடக்குதுக! சரி! முதலாளி மேல கோவம்னுகூட வச்சுக்க! லட்சுமி ஆத்தாளுக்கு மணி அடிச்சு சாமி கும்பிடறோம்ல …அப்பவாது எழுந்திரிச்சு நிக்கலாமுல்ல? சாமிக்கு உடைச்ச சிதறு தேங்காய்ச் சில்லுகளைக்கூட நண்டு சிண்டுகளாகத் திரிகிற பிள்ளைகள் எடுக்கலைன்னா அதுகளுக்கு எவ்வளவு திண்ணம் பாரு !……..

ஏலக்காய் டீ யின் மணம் மூக்கைத் துளைக்கும். ருசி நாக்கை ஈர்க்கும் பாயாசம், பிரியாணி என பல்வேறு சமையல்களில் ஏலக்காயைப் பயன்படுத்தி மகிழ்வோம்! ஆயின் அந்த ஏலக்காயின் பின்னிருக்கும் வலியை அறிவோமா?

மலைக் காடுகளில் காபி, தேயிலை, ஏலக்காய் தோட்டங்களில் செடியின் மரத்தின் தூரில் உறைந்திருக்கும் இரத்தத்தை, கண்ணீரை பேசும் புதினங்கள் சிலவேனும் வாசித்திருக்கிறீர்களா?.

என் நினைவுக்கு எட்டிய சிலவற்றின் பெயர்களை கீழே நினைவூட்டுகிறேன். வாசித்தவர்கள் அசைபோடுவீர்! வாசிக்காதவர்கள் தேடி வாசிப்பீர்!

டி.செல்வராஜின் ‘தேநீர்’ , இரா. முருகவேள் மொழியாக்கத்தில் பி.எச்.டேனியலின் ‘எரியும் பனிக்காடு’, கொ மா கோதண்டம் எழுதிய ‘ஏலச்சிகரம்’, ‘குறிஞ்சாம் பூ’, ‘ஜன்ம பூமிகள்’, கு.சின்னப்பபாரதியின் ‘சங்கம்’ , ஜானகி ராமச்சந்திரன் மொழிபெயர்ப்பில் கோதாவரி பாருலேகர் எழுதிய ‘மனிதர்கள் விழித்துக்கொள்ளும் போது’ , இரா சடகோபனின் மொழிபெயர்ப்பில் கிறொஸ்டின் வில்சன் எழுதிய ‘கசந்த கோப்பி’ [ bitter berry] , அமல்ராஜின் ‘தேரிக்காடு’ உள்ளிட்ட புதினங்கள் மலைக்காடுகளில் பஞ்சம் பிழைக்க வந்தோர்கள் படும்பாட்டை, வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சூழல்களில் விவரித்திருக்கும்; ஆயின் அடிநாதமாய் சுரண்டலும் ஒடுக்குமுறையும் பேசப்பட்டிருக்கும், அவரவர் அரசியல் சமூகப் புரிதலுக்கு ஏற்ப. [ நான் சொல்ல மறந்த நூல்களையும் இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்க ]

அந்த வரிசையில் இடம் பிடிக்க வந்திருக்கிறது “ஏலோ… லம்”. ஆசிரியர் ஜனநேசன். ஏலத்தோட்டங்களின் வாழ்க்கைப் பாட்டை மையம் கொண்டு எழுதப் பட்டிருப்பதுதான் இப்புதினத்தின் சிறப்பு .

“இப்புதினத்தின் நிகழ்வுகள் எண்பது விழுக்காடு உண்மையானவை. இவர்களை ஒருங்கிணைக்கவே இருபது விழுக்காடு புனைவைக் கொண்டு நெய்தேன்.” என வாக்கு மூலம் தருகிறார் ஜனநேசன். ஏற்கனவே சிறுகதைகள், குறுநாவல்கள் தந்துள்ளார். இரா.வீரராகவன் என்பது இயற்பெயர். ஓய்வுபெற்ற அரசு கல்லூரி நூலகர்.

இந்நாவலில் சுமார் அறுபது அறுப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய ஏலக்காட்டு வாழ்க்கையையும், 2019 -20 பணமதிப்பீட்டு கால வாழ்க்கையையும் இரண்டு பாகங்களாய் இரண்டு ஸ்கேன் ரிப்போர்ட்டுகளாய் 384 பக்கங்களில் தந்துள்ளார் .

பொதுவாய் தேயிலை, காப்பி, ஏலக்காய் என எதைத் தொட்டு எழுதினாலும் அட்டைக்கடியையும், சீட்டுகட்டுக் கணக்கான டப்பா போன்ற வீடுகளையும் சொல்லாமல் கதை நகராது; பெரும்பாலும் பஞ்சம் பிழைக்க வந்தவர்களே இங்கே வயிற்றுப்பாட்டுக்காய் அட்டைக்கடியுடனும் கடினமான பணிச்சூழலிலும் மல்லுக்கட்டி கிடப்பார்கள். ஆம், வாழ்ந்தார்கள் எனச் சொல்லவே முடியாது. ஆயினும் அச்சூழலிலும் காதலும் காமமும் சாதியும் மதமும் அறிவும் அறியாமையும் என வாழ்வின் எல்லா கூறுகளும் அங்கே விரவியே கிடக்கும். இப்புதினமும் அந்த வரையறைக்கு விதிவிலக்கல்ல.

கேரள மாநில இடுக்கி மாவட்டத்தில் உள்ள வட்டப்பாறை ஏலத்தோட்டத்துக்கு பஞ்சம் பிழைக்க தந்தையை இழந்த தன் மகன் ரவியை ஒண்பதாம் வகுப்பு முடிக்கும் முன்பே பொன்னுத்தாய் அழைத்துச் செல்லும் காட்சியில் நாவல் தொடங்குகிறது. ரவி வழியே புதினம் விரிகிறது.

அந்த தோட்டம் கிருஷ்ணராஜா என்பவருக்குச் சொந்தம்; அவர் எப்போதாவது வந்து போகிறவர். மேனஜர் வைரம் செட்டியார் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே வருபவர், கணக்குப் பிள்ளை துரைசாமி கிட்டத்தட்ட ஆல் இன் அழகுராஜாவாய் ஆட்டம் காட்டுபவர். அவரின் உதவிக்கு குப்பய்யா .

இங்கே கங்காணிகள் பழனிச்சாமி கவுண்டர், சீனி மாதாரி, பரமன், சின்னாத்தேவர், இராமர், குரங்கு விரட்டி ரெங்கசாமி ஆகியோரின் கீழ் பொன்னுத்தாய், சிவனம்மா, மாரியம்மா உள்ளிட்ட பெண்கள், கோட்டி நாய்க்கர், மாரிமுத்து, முனுசாமி என ஒரு பட்டாளம் ஏலத்தோட்டத்தின் வேரில் தம் செந்நீரைப் பொழிந்து கொண்டிருந்தனர் .

“இல்லம்மா! என் கணுக்கால்ல அட்டைகள் ரத்தம் குடிச்சப்போ, சக்கிலிய வீட்டுப் பழனிதான் அட்டையைப் புடுங்கிப் போட்டான்; அண்ணாந்து காபி பழம் பறிக்கையில் நான் கீழே விழ இருந்தப்போ பள்ளவீட்டு செத்த குழலு இருளன்தான் காப்பாற்றினான்.! ஏம்மா, சக்கிலி பறையன்னா என்னம்மா?” என சிறுவன் ரவியின் வெள்ளந்தியான கேள்வி, நிலவிய யதார்த்தத்தைச் சொல்லும். ரவி மாடு மேய்க்கப் போன இடத்தில் அறிமுகமாகும் சித்திரன் எனும் ஓர் முதியவர் மூலம் மேலும் பல செய்திகளையும் பொது விஷயங்களையும் ரவி அறிந்தான். .

கள்ளர், தேவர், சக்கிலியர், பள்ளர், பறையர், நாய்க்கர், செட்டி இன்னும் பல சாதியாகத்தான் ஏலத்தோட்டத்துக்கு பஞ்சம் பிழைக்க வந்தார்கள். சாதி அவ்வளவு சீக்கிரம் தலைமுழுகுகிற சமாச்சாரமா? இல்லையே! ஆனால் வாழ்க்கைப் போராட்டமும் வர்க்கப் போராட்டமும் சாதியை மீறி அவர்களை ஒன்றுபட வைத்ததை இப்புதினம் வலுவாகவே பதிவு செய்கிறது.

“கங்காணிகள் செய்கிற அட்டூழியத்தை சிவனம்மா சாமியாடுகிற மாதிரி முதலாளி காதில் போட்டிருச்சு! முதலாளி என்ன நடவடிக்கை எடுப்பார்னு பார்ப்போம்!” என்று பெண்கள் பேசிக்கொண்டனர் .

லட்சுமி அம்மன் ஒரு கடவுளாய் வழிபடும் கோயிலாய் மட்டுமில்லை. அவர்களின் ஆற்றாமையை, கோபத்தை, எரிச்சலை, அன்பை, வெறுப்பை கொட்டும் இடமாகவும் இருந்தது. “ இதயமற்றவர்களின் இதயமாக, ஏக்கப் பெருமூச்சாக” என மார்க்ஸ் சொன்னது போல் இருந்தது.

தோட்டத்தில் பிரச்சனை முற்றிய ஓர் நாளில், கணக்குப் பிள்ளை துரைசாமி சாதிக்கலவரத்தைத் தூண்ட பயன்படுவார் என கணக்குப் போட்டு தன் சக ஊழியராய் ஏற்கெனவே சேர்த்துக் கொண்ட குப்பய்யாவிடம், லட்சுமி அம்மன் பூஜை முடிந்ததும் கடுகடுப்புடன் வார்த்தைகளைக் கொட்டினார்..

“என்னய்யா, உங்காளுக முதலாளிமாருக வர்றாகன்னு மட்டுமரியாதை வேணாம்? பள்ளு, பறைக, மாதாரி, கீதாரி குடியானதுகன்னு ஒரு ஈக்குஞ்சுகூட எந்திரிக்கல, விலகி நிக்கல! குமிச்சு வச்ச சாணி கணக்கா கிடக்குதுக! சரி! முதலாளி மேல கோவம்னுகூட வச்சுக்க! லட்சுமி ஆத்தாளுக்கு மணி அடிச்சு சாமி கும்பிடறோம்ல… அப்பவாது எழுந்திரிச்சு நிக்கலாமுல்ல? சாமிக்கு உடைச்ச சிதறு தேங்காய்ச் சில்லுகளைக்கூட நண்டு சிண்டுகளாகத் திரிகிற பிள்ளைகள் எடுக்கலைன்னா அதுகளுக்கு எவ்வளவு திண்ணம் பாரு! எம் முப்பது வருஷ அனுபவத்தில் இம்புட்டு திமிர் பிடிச்ச ஆளுகளைப் பார்த்ததில்லை! இதுக்கெல்லாம் காரணம் நீங்கதான்… … மக்கா மக்கான்னு அவங்களோடு ராத்திரி பகலா இணையுறீங்களே… அவங்கள வைக்கிற இடத்தில் வைக்கணும்..” என்று பேசி கிழட்டு மாடு போல் புஸ் புஸ்ஸுன்னு மூச்சுவிட்டார் துரைச்சாமி .

வில்லனாக காட்டப்பட்டிருக்கும் இதே துரைச்சாமி செத்த பிறகு எடுக்கப்பட்ட அவரின் கடிதம் அவருக்குள்ளும் ஈரம் இருந்ததை காட்டுகிறது. நூலாசிரியரின் இப்பதிவு நுட்பமானது .

யானை மிதித்து செத்த கோட்டி நாய்க்கர், பாம்பு கடித்து செத்த மாரியக்கா மரணங்கள் பல கேள்விகளை எழுப்பின; முளைவிட்டிருந்த சங்கத்தை போராடுகிற சங்கமாக மாற்றியது; வீரமிக்க போராட்டம் மூன்று உயிர்களைப் பலி வாங்கியது. போராட்டம் வென்றது. அடியாள், வஞ்சகம், சதி எல்லாம் காட்சியாகிறது. ஆனால் முதலாளியின் போக்காலும் அரசின் பொருளாதாரக் கொள்கைகளாலும் எல்லாம் பறிபோனது. தலைகீழானது .

51 அத்தியாயங்களைக் கொண்ட முதல் பாகத்தில் சுமார் அறுப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய ஏலத்தோட்டத்தின் சமூக, அரசியல்,
பொருளாதார சித்திரம் கதையாக்கப்பட்டிருக்கிறது. இதைத்தான் என்னுரையில் நூலாசிரியரும் ஒப்புக் கொண்டிருக்கிறார். கதா பாத்திரங்கள் பெரும்பாலும் நிஜத்தை சார்ந்து இருப்பதால் நாவலுக்கு உயிர்துடிப்பு தானே வந்துவிடுகிறது.

ஆயினும், எனக்கு சில ஐயங்கள் இங்கே வருவதை தவிர்க்கவே முடியவில்லை. ஒன்று மலைக்காடுகளில் நான் இதுவரை வாசித்தது போல் கேட்டறிந்தது போல் கங்காணிகள் கொடூரமானார்களாய் பொதுவாய்ச் சித்தரிப்பு இல்லையே விதிவிலக்குகள் தவிர! இது என் புரிதல் கோளாறா? இடதுசாரி போராட்டங்கள் விளைவாக ஏற்பட்ட சூழல் மாற்றமெனில் அதுகுறித்த தகவல்கூட போகிற போக்கில்கூட சொல்லப்படவில்லையே! ஏன்? அல்லது எழுத்தாளர் கண்டறிந்த உண்மை எனில் கேள்வி வாபஸ் !

இரண்டு, போலீசும், அரசு நிர்வாகமும் யார் ஆட்சியிலும் ஒடுக்குமுறைக் கருவிதானே! இடதுசாரி அரசு இருந்ததால் கொஞ்சம் வித்தியாசமாக பிரச்சனையைக் கையாண்டு இருக்கலாம். ஆயின் இப்புதினத்தில் விவரிப்பதுபோல் நேர்மையும் கண்ணியமும் உள்ளவர்களாக இருப்பார்களா?

மூன்று, ஐஎன்டியுசியிலிருந்து சிஐடியுக்கு கைமாற்றிவிட்டது போல் இப்புதினத்தில் சொல்லப்பட்டிருப்பது யதார்த்ததுக்கு நெருக்கமானதா?

11 அத்தியாயம் கொண்ட இரண்டாவது பாகம் கிட்டத்தட்ட ஓர் அரசியல் சமூக அறிக்கையே. தோட்டங்களின் குவிமையம் உடைந்து சிறு உடைமையாளர்கள் தோற்றம், வட இந்திய தொழிலாளர் வருகை, அவர்கள் படும்பாடு அவர்களின் பலம், பலவீனம், அரசு கொள்கையால் ஏற்பட்ட சரிவு, பண்வீக்கம் தொடுத்த தாக்குதல் என எல்லாம் பாத்திரங்கள் வழி சொல்லப்பட்டிருக்கிறது .

“காலையில ரொட்டி சுட்டு சாப்பிட்டுக்கிறாங்க. உப்பை தொட்டு பச்சை மிளகாய் வெங்காயத்தை கடிச்சுகிட்டு திங்கிறாங்க.. அதில் என்ன ருசியோ என்ன சத்தோ தெரியலை! கருமாயப்பட்ட பொழப்பு….. சாயந்திரத்தில குடிக்கிற பெண்ணுகளும் இருக்காங்க…” இப்படி அவர்களின் வாழ்க்கைப் பாட்டையும் அரசியல் சமூக விழிப்புணர்வற்ற அவர்களின் அறியாமையையும் ஆங்காங்கு நூலாசிரியர் சொல்லிச் செல்கிறார் .

புலம் பெயரும் தொழிலாளர்களுக்காய் அரசு என்ன பாதுகாப்பு வைத்திருக்கிறது. ஒன்றுமில்லை. மாறாக கூலியைக் குறைக்க நேரம் காலமின்றி சுரண்ட சட்டத்தை காலில் போட்டு மிதிக்க முதலாளிக்கு சர்வசுதந்திரத்தை தந்துள்ளது. அது இப்புதினத்தில் சாத்தியமான அளவு சொல்லப்பட்டிருக்கு .

பணவீக்க நடவடிக்கையின் போது நோட்டை மாற்ற கமிஷன் பெற்ற பாஜகவினர் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. அது பெரும் உண்மை.

சிறுகதை எழுதுவதில் கொடிகட்டியவர் ஜனநேசன், நெடுங்கதை எழுத 2004ல் தொடங்கி அப்போது ஓர் கள ஆய்வு, 2019 ல் ஓர் கள ஆய்வு என இரண்டு கள ஆய்வுகள் செய்து இந்நாவலை 15 ஆண்டுகாலமாக நெய்துள்ளார். கதைக் களத்திற்கு ஏற்ப தேவையான மலையாளம் கலந்த தமிழ் நடையும், புரிகிற மாதிரியான உரையாடலுமாய் கதையை நகர்த்துவதில் ஜனநேசன் வெற்றி பெற்றுள்ளார்.

கள ஆய்வு செய்து புதினம் எழுதுவது மேற்கத்திய உலகில் அதிகம். தமிழில் மிகக்குறைவு. ராஜம் கிருஷ்ணன் இதில் கிட்டத்தட்ட முன்னத்தி ஏராய் தடம் பதித்தார். அவ்வழியில் ஜனநேசனும் பயணப்பட்டிருப்பது மிக நன்று. பாராட்டுக்கள். தொடரட்டும் இப்பணி!

சு.பொ.அகத்தியலிங்கம்.
20/8/2022.

Sangasurangam book written by R Balakrishnan book review by Su Po Agathiyalingam ஆர்.பாலகிருஷ்ணனின் சங்கச் சுரங்கம் முதலாம் பத்து கடவுள் ஆயினும் ஆக - சு.பொ.அகத்தியலிங்கம்.

நூல் அறிமுகம்: ஆர்.பாலகிருஷ்ணனின் சங்கச் சுரங்கம் முதலாம் பத்து கடவுள் ஆயினும் ஆக – சு.பொ.அகத்தியலிங்கம்.




சங்க இலக்கியத்தின் வழி
தமிழர் பண்பாட்டு வேரைக்கொண்டாடி…..

“ சங்கச் சுரங்கம் – முதலாம் பத்து – கடவுள் ஆயினும் ஆக “ எனும் நூலை வாசிக்கத் துவங்கிய நொடியிலிருந்து ஏற்பட்ட வியப்பும் மகிழ்ச்சியும் அளவில்லை. ஆர் .பாலகிருஷ்ணனின் ஆழ்ந்த தேடலும் புலமையும் இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் புன்னகைக்கிறது.

எழுத்தாளர் சு. சமுத்திரத்தின் அலுவலகத்தில் ஓர் மாலையில் சமுத்திரம், சிகரம் செந்தில்நாதன், தயானந்தன் பிரான்ஸிஸ், நான், ஆர். பாலகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்த முதல் நாள் நினைவுக்கு வருகிறது; அப்போது சிந்துவெளி நாகரிகத்தில் திராவிட வேர் குறித்து ஊர் பெயர்களூடே அவர் விவரித்த காட்சி மனத்திரையில் ஆழப்பதிந்துள்ளது.

இந்நூல் வழக்கமான சங்க இலக்கிய விவரிப்போ, நயந்துரையோ அல்ல அதற்கும் மேல் மானுட பண்பாட்டில் தமிழரின் உயரிய பங்களிப்பை இன்றைய காலத் தேவையூடே நுணுகி அலசி காட்சிப் படுத்தியுள்ள களஞ்சியம். பத்து தொடர் உரையின் தொகுப்பு இந்நூல் .

“…… …… …… ….. …. ….. …. …. …. ….. …..
….. ……. …… …… ……. ….. ….. ….. ….. ….. ….
பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும்
இயற்கை அல்லன் செயற்கையில் தோன்றினும்
காவலர் பழிக்கும்இக் கண்கள் ஞாலம்
அதுநற்கு அறிந்தனை யாயின், நீயும்
நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது
பகடுபறம் தருநர் பாரம் ஓம்பிக்
குடிபுறம் தருகுவை யாயின்நின்
அடிபுறம் தாங்குவர் அடங்காதோரே”

இந்தப் பாடலை முதல் உரையில் சுரங்கத்திலிருந்து அரங்கத்திற்கு கொண்டு வரும் போது நூலாசிரியர் சொல்கிறார், “இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சாதாரணப் புலவர் மன்னனைப் பார்த்து ஓர் அறிவுரை சொல்லியிருக்கிறார். அதனை ஆவணப்படுத்தியுள்ளனர். இப்போதைய சூழலுக்கு கற்பனை செய்து பாருங்கள். ஓர் இலக்கியவாதியோ அல்லது ஊடகவியலாளரோ இடித்துச் சொல்வதற்கான வாய்ப்பு உள்ளதா ?”

முழுப்பாடலையும் சுட்டிவிட்டு பொருளைச் சொல்லுகிறார்,” …. …இவ்வாறு நீ வெற்றி பெறுவதற்கு நீ கொண்டு செல்லும் படை மட்டும் காரணமல்ல, உன் நாட்டில் உழுகின்ற விவசாயிகளின் நெல்லினால் விளைந்த பயனும்தான் காரணம். விவசாயிகளின் கலப்பை பயிரை மட்டுமல்ல, உனது வெற்றியையும் கொடுக்கிறது. இவ்வாண்டில் மழை வரவில்லை என்றாலும் வளம் குன்றினாலும் இயற்கை பிரச்சனைகள் அல்லாது செயற்கைப் பிரச்சனைகள் வந்தாலும் மக்கள் காவலரைத்தான் குறை சொல்லுவார்கள். அதாவது மன்னன் மீதுதான் பழிபோடுவார்கள். அதனால் நீ விவசாயிகள்தான் உனது அரசு, நாடு என்ற அடிப்படையைப் புரிந்துகொண்டு அவர்களைக் காத்து, அவர்களுக்கு ஆதரவாய் இருந்தாலே போதும் மற்றவை எல்லாம் இதில் அடங்கிவிடும்.”

முதல் உரையில் இடம் பெறும் இந்த சித்தரிப்பே நூலின் செல்திசையை நமக்கு சுட்டிவிடுகிறது. ஒவ்வொரு உரைக்கும் எடுத்தாண்டுள்ள தலைப்பை கூர்ந்து நோக்கினாலே நூலின் ஆழமும் அகலமும் விளங்கும்.

1.சங்கச் சுரங்கம் அறிமுகவுரை, 2.பசிப்பிணி மருத்துவன், 3. பிறர்கென முயலுநர், 4.பருத்திப் பெண்டிர், 5.கடவுள் ஆயினும் ஆக, 6.கல்லா இளைஞர், 7.முதுவோர்க்கு முகிழ்த்த கை, 8.இமிழ் பனிக்கடல், 9.சேண் நடும் புரிசை, 10 .இடுக ஒன்றோ ! சுடுக ஒன்றோ ! என்கிற பத்து உரையும் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்த விவசாயம், பொதுநலம், நெசவு, உழைக்கும் பெண்கள், தோளில் கை போடும் நம் சாமி, கல்வி, கல்வி அறிவின்மை, முதியோர் குறித்த பார்வை, சுற்றுச் சூழல், செங்கல், வீட, மரணம் என நிறையப் பேசுகின்றன.

ஒவ்வொன்றையும் படித்து முடித்த பின் தமிழ் சமூகம் குறித்த பெருமிதத்தோடு ஒவ்வொருவரும் தாம் தமிழனாகப் பிறந்த பேறை எண்ணி இறும்பூதெய்தாமல் இருக்க முடியுமா ?

ஒவ்வோர் உரை குறித்தும் தனித்தனியே நிறைய எழுதலாம். நூலறிமுகத்தின் எல்லை கருதி பத்து உரை குறித்து பத்து செய்திகளும் கேள்விகளுமாய் மட்டுமே எழுதப் போகிறேன்

1] “மண்ணில் விளைந்து வாய்வழி வளர்ந்த மரபுகளின் ஆவணம்,” சங்க இலக்கியம் எனக்கூறும் நூலாசிரியர் ; சங்க இலக்கியத்தில் “மீள் நினைவுகள் இருக்கின்றன,” என்கிறார். மிகச் சரிதான். நீண்ட இலக்கிய பரப்பினூடே நம் பண்பாட்டு அரசியலை நிறுவும் நுட்பமான முயற்சி பாராட்டுக் குரியது, தோராயமான கால எல்லையும், மருதத்தில் அரசுருவாக்கம் நிகழ்ந்த படிநிலையும் சேர்க்கப்பட்டிருக்கலாமோ ?

2] பசிப்பிணி குறித்த தமிழ்ச் சமூகத்தின் அழுத்தமான பார்வையும் கனவும் எண்ணும் தோறும் ஆச்சரியம் கூடுகிறது. அதனை வலுவாகவே உரையில் நூலாசிரியர் பதிவும் செய்திருக்கிறார். ‘இரந்தும் உயிர் வாழும்’ சூழலும் இருந்திருக்கிறது, ‘கைமாறு கருதா ஈதல்’ குணமும் இருந்திருக்கிறது என இருபுறத்தையும் காட்சிப் படுத்திய நூலாசிரியர் மத்திய அரசின் தானியக் கிடங்கின் பூட்டை உடைத்து அழிபசி போக்க தான் தன் அதிகாரத்தை பயன்படுத்தியது சங்க இலக்கியம் தந்த ஊக்கம் என்கிறார். இப்பகுதியில் மணிமேகலையின் அட்சயபாத்திரம் குறித்து வலுவாகச் சொல்லியிருக்கலாமோ ? பாரதிவரை பயணிக்கும்போது மணிமேகலையும் பேசலாம்தானே ? தமிழ் மண்ணிலும் கற்பனா சோஷலிச வேர் இருந்ததை போகிற போக்கில் சொல்லி இருக்கலாமோ ? [ 49 ம் பக்கம் பாரதியார் பாடல் வரியை வள்ளலார் வரியாகச் சுட்டிய பிழையை அடுத்த பதிப்பில் நேர் செய்க ]

3] அமிழ்தமே கிடைப்பினும் பகுத்துண்ணும் பண்பாட்டு பெருமை உரக்கப் பேசப்பட வேண்டிய செய்தியே. “தமக்கென முயலா நோன்தாள் பிறர்கென முயலுநர் உண்மையானே,” என்கிற மானுடம் போற்றும் வாழ்நெறிக்கு ஈடில்லை. இது நமக்கு வழித்துணை என நூலாசிரியர் முடிவுக்கு வருவது முற்றிலும் நியாயந்தான்.

4] நெசவு, துணி வணிகம், உழைக்கும் பெண்கள் என விரிந்த பரப்பில் ஆற்றிய குறுகிய உரையாயினும் ஆழந்த ஆய்வுக்கு களம் காட்டும் முன்னெடுப்பாகும். யாரேனும் செய்திருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது; தொடர்ந்து செய்வதும் தேவையே.

5] “பெருங்கோயில்களில் இத்தகைய சாமி ஆடுதல் நிகழ்வு ஏன் நடைபெறுவதில்லை என்ற கேள்வியினைக் கேட்டால், அதற்கு பதில், ஏனெனில் பெருங்கோயில்களில் உள்ள சாமியை உங்களுக்குத் தெரியாது; உங்களைச் சாமிக்கும் தெரியாது. அதன் ஸ்தல புராணங்களில் யார்யாரோ இருக்கிறார்கள். அதில் சாதாரண மக்கள் இல்லை.” எனக் கூறும் நூலாசிரியர், “நாட்டார் தெய்வங்களை மக்கள் தங்களில் ஒருவரைப்போல் விளித்து கேள்வி கேட்கும் நடை முறைக் காணப்படுகிறது” என்கிறார். முருகன் வழிபாடு வெறியாட்டு குறித்து வலுவாகச் சொல்கிறார். பரிபாடல் காலத்தில்தான் சுப்பிரமணியனும் தெய்வயானையும் முருகனோடு வலிந்து திணிக்கப்பட்டு நம் மூத்தகுடி வள்ளிக் குறத்தி சக்காளத்தி ஆக்கப்படும் கொடுமை நடக்கிறது. இந்த சமஸ்கிருதமயமாக்கல் அல்லது பார்ப்பணிய மயமாக்கல் குறித்து உரையில் சொல்லப்படிருப்பினும் நா.வானமாமலை சுட்டிக் காட்டியதுபோல் இன்னும் கூர்மையாகச் சொல்லப்பட்டிருக்கலாமோ ? குறிஞ்சி நிலம் போல் ஐவகை நிலத்திலும் நம் மண்ணோடும் மனதோடும் நிறைந்த சாமிகள் வேறு; அதுபோல் நம் தாய் தெய்வங்கள் வேறு. இது குறித்து தனிநூலே ஆசிரியர் எழுதலாமே ? செய்வீர்களா ?

6] “தொல்தமிழர் கல்விக் கொள்கை: அரசன் வெளியிட்ட அறிக்கை” என புறநானூற்றின் 183 வது பாடலை, “ உற்றுழி உதவியும்…. அவன் கண் படுமே,” எனும் பாடல் வரியைச் சுட்டுகிறார். கல்வி, கல்லாமை பற்றி நிறைய செய்திகளை இவ்வுரையில் அடுக்குகிறார். படித்தவனே போற்றப்படுவான் என வரைந்து காட்டுகிறார். கீழடியில் கிடைத்த எழுத்து பொறித்த பானையை சுட்டி கல்வியில் ஓங்கிய பழந்தமிழர் என பெருமிதம் கொள்கிறார். அதே நேரம் கல்லாமை இருந்ததையும் சொல்கிறார். இக்கட்டுரை தமிழரை சுயபெருமிதம் கொள்ளத் தூண்டும். அது தப்பில்லை. ஆயின், கல்வியிலிருந்து சமூகத்தின் பெரும் பகுதியினரை விலக்கி வைக்கும் அநீதி எப்படி அரங்கேறியது என்பதையும் இவ்வுரைப் பரப்புக்குள் கொண்டுவந்திருக்க வேண்டாமா ?

7] முதியோருக்கான கொள்கை அறிக்கை பற்றி இன்றைக்குப் பேசுகிறோம். அன்றைக்கே முதியோரை வணங்கி துணைநின்ற முதுவோர்க்கு முகிழ்த்த கை இருந்ததையும் முதியோர் குறித்த தமிழ் சமூகத்தின் நுண்ணிய பார்வையையும் விரிவாகச் சுட்டுகிறது. பயனில் மூப்பையும் சொல்லத் தவறவில்லை. இன்றைக்கு முதியோர் குறித்த பார்வையும் முதியோர் இல்லம் குறித்த ஒருங்கிணைந்த பார்வையும் தேவை அல்லவா ? விவாதிக்க களம் அமைக்கும் உரை.

8] “கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமம்” என்கிற சொற்றொடரை வைத்து மீன் தூங்குமா என கேள்வி எழுப்பி, தூங்கும் என விடையும் தந்துள்ளார் நூலாசிரியர். கடல் என்பது பெரிதும் நெய்தல் நிலத்தோடு தொடர்புடையதுதான் எனினும் பிற நில மக்களுக்கும் கடல் தொடர்புடையதாய் இருப்பதை, பரதவர் வாழ்வை, கடலும் சுற்றுச் சூழலும், கடலும் இயற்கைப் பேரிடரும் என கடலுக்குள் மூழ்கி பல செய்திகளை சங்க இலக்கியத் துணையோடு நூலாசிரியர் தருகிறார். நெய்தல் நிலம் சார்ந்த ‘இரங்கலும் இரங்கல் நிமித்தமும்,’ குறித்து பரக்கப் பேசுகிறது. புவிவெப்பமாதல் குறித்து பேசும் காலகட்டத்தில் இம்மீள் பார்வை மிகத் தேவையான ஒன்று.

9] “சிந்துவெளிச் செங்கல், சங்க இலக்கியச் சுடுமண், கீழடியின் செங்கல் சுவர் என்ற தொடர் நிகழவினைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் இவ்வுரையினுடைய முக்கிய விசயமாகும்.” என நூலாசிரியர் சொல்வது மட்டுமல்ல அத்திக்கில் நம்மையும் நகர்த்தியுள்ளார். நாம் உரக்கப் பேச வேண்டிய விசயமல்லவா இது ? அதற்கு விசைதருகிறது இவ்வுரை.

10] “ …. பொருள் நிலையாமை ,யாக்கை நிலையாமை, வாழ்க்கையினுடைய நிலையாமை இதெல்லாவற்றையும் பேசி அதனுடைய உள்ளீடாக இருக்கும் வாழ்க்கையினை வாழச் சொல்லி வற்புறுத்துவதுதான் சங்க இலக்கியத்தின் குறிக்கோள் “இவ்வாறு மரணம் குறித்த சங்க இலக்கிய பார்வையை விவரிக்கிறார் நூலாசிரியர். ‘செய்ப எல்லாம் செய்தனன்’ அதாவது ஒருவன் வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வதையே வாழ்க்கை எனக் கொண்டாடும் பண்பாட்டு சித்தாந்தம் தமிழருடையது. ஆம்.சாக்குருவி வேதாந்தம் அல்ல, அனுபவித்து வாழும் நெறியே தமிழர் பெருமை.

“அடிப்படையில் பாலா சார் எந்தத் தத்துவத்தையும் சார்ந்து பார்க்கிறவர் இல்லை. திறந்த மனதோடு எல்லாவற்றையும் பார்ப்பதுதான் அவருடைய தத்துவம். பன்மியம் என்பதுதான் அவருடைய தத்துவமாக உள்ளது. அதுதான் சங்க தத்துவம்கூட .” என தமிழ்ச்செல்வனின் வரையறை சரியானதுதான்.

இந்நூல் கொரானா கடுங்காலத்தில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும், களம் இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்திய இணையவழி பத்து தொடர் உரைகளின் தொகுப்பு. “முதல் பத்து” என்பது “ டாப் டென் “ என்கிற பொருளிலோ, இது முதல் பத்து உரை இன்னும் தொடரும் எனும் பொருளிலோ இருக்கலாம். எதுவாயினும் வேறல்ல. சரியே !

சிந்துவெளி நாகரிகம் தொட்டு இந்தியா முழுவதும் பரவியிருந்த திராவிட பண்பாட்டின் கூறாக சங்க இலக்கியத்தை பார்ப்பதும், தமிழர் பண்பாட்டை அதன் அரசியல் வெப்பத்தோடு இந்நூல் பேசுகிறது. இந்நூலை ஒரு முறைக்கு இருமுறை வாசித்து உள்வாங்குவது மிக அவசியம். இந்தியாவின் பன்மைத்துவத்தை மறுக்கும் பாசிசம் கவ்வும் வேளையில் இந்நூல் புதிய சாளரத்தைத் திறக்கிறது.

இந்த நூல் சுட்டும் நியாயமான பெருமிதத்தோடு; தமிழ்ச் சமூகம் வர்ணமாக கூறு போடப்பட்டதையும் வர்க்கமாக பிளவுண்டு நிற்பதையும் இணைத்து புரிந்து பண்பாட்டை மேலும் முன்னெடுக்க இந்நூலும் ஆயுதமாகட்டும் !

சங்கச் சுரங்கம் – முதலாம் பத்து – கடவுள் ஆயினும் ஆக ,
நூலாசிரியர் : ஆர்.பாலகிருஷ்ணன் ,
பக்கங்கள் : 264 , விலை : ரூ.270/
வெளியீடு :பாரதி புத்தகாலயம் ,
நூல் பெற : 044 24332424 / 24332924